வெண்முரசும் தனித்தமிழும்

1

ஜெயமோகன் அவர்களுக்கு

நான் இன்றைய புத்திலக்கியங்களை அதிகமாக வாசிப்பவன் அல்ல. இளமைக்காலத்தில் நா.பார்த்தசாரதியையும் ஜெயகாந்தனையும் விரும்பி வாசித்தேன். பள்ளிநாட்களில் மு.வ மனம்கவர்ந்த ஆசிரியராக இருந்தார். என் வாசிப்பு என்னை பண்படுத்தியது. என் தமிழ்ப்பற்று வாழ்க்கைக்கும் ஒரு பற்றுகோலாக இருந்தது.

நீண்டநாட்களுக்குப்பின் நான் கதைபடிக்க ஆரம்பித்தது என் மகள் எனக்கு அளித்த யானைடாக்டர் என்னும் நூலில் இருந்துதான். அது எனக்கு ஒருபெரிய திறப்பாக இருந்தது. அதன் தமிழ்தான் என்னை மிகவும் கவர்ந்தது. தமிழை இப்படியெல்லாம் ஆளமுடியுமா என்ற நினைப்பு எழுந்தது. தமிழை இவ்வளவுநுட்பமாக உளவியல்நிகழ்வுகளைச் சொல்ல பயன்படுத்தமுடியுமா என்று எண்ணி வியந்தேன்

அதன்பின் உங்கள் தளத்திற்குவந்து கட்டுரைகளை வாசித்தேன். கட்டுரைகளில் தூயதமிழ்க்கலைச்சொற்கள் நிறையவே இருந்தன. தமிழார்வம் உடையவன் என்றாலும் அவை எனக்குப் படிக்கக் கடினமானவையாகவே இருந்தன. ஆனால் என் மகள் எனக்கு அனுப்பிய முதற்கனல் என் வாசிப்பனுபவத்தையே மாற்றிவிட்டது.

தனித்தமிழியக்கம் உருவாகி அது பங்களிப்பை ஆற்றி முடிந்துவிட்டது என்றே எண்ணியிருந்தேன். தனித்தமிழுக்கு இனிமேல் இடமே இல்லை என்று அனைவரும் சொல்லும்போது இருக்கலாமென்றே நானும் எண்ணியிருந்தேன். இத்தனை ஆண்டுகளுக்குப்பின் ஒரு தனித்தமிழ்க் காவியம் இங்கே நிகழ்கிறதென்பதே பெருமகிழ்வுக்கு ஆளாக்கியது

ஏராளமான தமிழ்ச்சொற்கள். நான் ஒவ்வொரு பகுதியையும் அகராதியைப்புரட்டித்தான் வாசித்தேன். ஒவ்வொன்றுக்கும் இவ்வளவு நுட்பமான தமிழ்ச்சொற்கள் இருக்கின்றன என்பதே வியப்புக்குரியது. ராஜதந்திரம் என்பதை அரசுசூழ்தல் என்று வாசித்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சி என்பது அரிதானது. அப்படி எத்தனை சொற்கள். பல்லாயிரம் புதிய சொற்கள்.

மகாபாரதம் படிக்க எனக்கு ஒரு மனத்தடை இருந்தது. அது வடமொழிக்காப்பியம் என்பதுதான் அதற்குப் பின்னணி. ஆனால் அதை தூயதமிழில் எழுதமுடியும் என்று எண்ணிப்பார்க்கவே இல்லை. இப்போது இந்திரநீலம் வரை வந்துள்ளேன். வளரவளர ஓரிரு வடசொற்கள் இருந்தவைகூட இல்லாமலாகி முழுமையாகவே தனித்தமிழில் எழுதப்பட்டு வருகிறது வெண்முரசு

இவ்வரிசையில் நீலம் எனக்கு ஒரு பேரனுபவம். அதை பலமுறை வாசித்தேன். அதன் செந்தமிழ்ச் சொல்லாட்சிகளுக்காக. அரிய சந்தத்துக்காக. எத்தனைமுறை வாசித்தாலும் அதிலுள்ள தமிழாளுமையை சுவைத்து முடிக்கமுடியவில்லை

நடுவே கொற்றவையையும் வாசித்தேன். அதுவும் நான் கடந்துசெல்லமுடியாத படைப்பு. அதிலேயே ஒருமாதம் ஓடியது. இளங்கோவடிகளின் காவியத்தில் அவர் கையாண்ட வடமொழிச்சொற்களைக்கூட தமிழாக்கம் செய்து ஒரு காப்பியம் இன்றைய காலகட்டத்தில் வரமுடியும் என்பதை எண்ணிபார்க்கவே இல்லை. அதை இளையதலைமுறையினர் சொல்லி நாம் வாசிக்கநேர்வதென்பது நினைக்க நினைக்க இன்பம் அளிக்கிறது

புத்திலக்கியம் படைக்க தமிழ் உதவியானது அல்ல என்று நினைப்பவர்களுக்கான நூல்கள் இவை. இவற்றில் இல்லாத உளவியலோ புறஓவியமோ எதிலும் இல்லை. அனைத்தையுமே நல்ல தமிழ்ச்சொற்களில் சொல்லமுடிகிறது. அத்துடன் நாம் அன்றாடம்புழங்கிவரும் அனைத்து வடமொழிச்சொற்களுக்கும் மேலான தமிழ்ச்சொற்கள் இருக்கின்றன என்பதைக் காணமுடிகிறது

வெண்முரசு கொற்றவை ஆகியவை ஒரு தனித்தமிழியக்கம்.
உங்களுக்கு என் வாழ்த்துக்கள்

ஆர். மாணிக்கவாசகம்

 

முந்தைய கட்டுரைமகாபாரதம் திரையில்…
அடுத்த கட்டுரைவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 39