மகாபாரதம் திரையில்…

1

மகாபாரதம் எந்த இந்திய சினிமா இயக்குநருக்கும் ஒரு கனவாகவே இருக்கும். நானறிந்து அத்தகைய பெருங்கனவு மணிரத்னத்திற்கும் கமல்ஹாசனுக்கும் உண்டு.

அதன்மீதான தயக்கம் இருகாரணங்களால்தான். ஒன்று அதன் பிரம்மாண்டம், அதன் எப்பகுதியை எடுத்துக்கொண்டாலும் ஒரு சினிமாவாக சுருக்குவது பெரிய அறைகூவல். எப்படி சுருக்கினாலும் விடுபட்டவற்றைப்பற்றிப் பேசவே ஆளிருக்கும். இன்னொன்று அதன் செலவு. சரியாக எடுப்பதென்றால் அது கோடிகளின் ஆடல்.

என் கனவும் ஒரு மகாபாரதப்படத்தில் பணியாற்றவேண்டுமென்பதே. மணிரத்னத்திடம் அதைப்பற்றி பேசியிருக்கிறேன். கமலிடமும் சொல்லியிருக்கிறேன். இப்போது அதற்கான வாய்ப்பு அமைந்துள்ளது. சென்ற சிலநாட்களில் என்னை உவகையிலாழ்த்திய செய்திகளில் அது ஒன்று.

2

என் நண்பர் ஆர்.எஸ்.விமல் மலையாளத்தில் இயக்கிய எந்நு நின்டெ மொய்தீன் மலையாள சினிமா வரலாற்றிலேயே மிகபெரும் வெற்றியை அடைந்த படம். அதை தமிழில்கொண்டுவர முயன்றோம். தமிழின் தனித்துவம் கொண்ட சூழலால் அதற்கான வாய்ப்பு அமையவில்லை. அப்படத்துடன் நான் சம்பந்தப்பட்டிருந்தேன்.

ஆர்.எஸ்.விமல் இயக்கத்தில் கர்ணனை நாயக கதாபாத்திரமாக்கி பிருத்விராஜ் நடிக்க ஒரு மகாபாரதப்படம் வரவிருக்கிறது. அதற்கான எழுத்துப்பணிகள் தொடங்கவிருக்கின்றன. என் பங்களிப்பும் உண்டு. பாகுபலிக்கு மலையாளத்திலிருந்து ஒரு பதில் என்றே சொல்லலாம் – முதலீட்டைப் பொறுத்தவரை. திரைக்கதையின் தரம் மலையாளத்தில் எப்போதும் ஒருபடி மேலாகவே இருக்குமென அனைவருக்கும் தெரியும்.

இந்தப்படம் தனிப்பட்ட முறையில் ஒரு கொண்டாட்டமாகவே எனக்கு அமையுமென நினைக்கிறேன்.

***

முந்தைய கட்டுரைசுரேஷ்குமார இந்திரஜித்தின் ‘நடனமங்கை’
அடுத்த கட்டுரைவெண்முரசும் தனித்தமிழும்