பரப்பியம் மீண்டும்

அன்புள்ள ஜெயமோகன்,

விரிவான பதிலுக்கு நன்றி. உங்கள் உழைப்பும், மொழியின் மீதான அக்கறையும் நம் தலைமுறைக்கு முன்னுதாரணமாக இருக்கத்தக்கது. உங்கள் நேரத்தை எடுத்துக் கொள்வது பற்றிய குற்றவுணர்விருந்தாலும், மேலும் சில வார்த்தைகளைச் சொல்ல அனுமதியுங்கள்.

தமிழில் கலைச்சொற்கள் சிறுபத்திரிகைக்களம், கல்வித்துறை மற்றும் சோவியத் மொழியாக்க நூல்கள் ஆகியவற்றில் நடைபெறுவதை சுட்டியிருந்தீர்கள். நான் சிறுபத்திரிகைக் களத்தை மட்டுமே இதுவரை அறிந்திருக்கிறேன். ஒரு சில காரணங்களால் எனக்கு அதன் மீதே அதிக நம்பிக்கையும்கூட இருக்கிறது. அது தவறாக இருக்கலாம். உதாரணமாக நீங்கள் நேரேஷன் narration என்ற வார்த்தையை விவாதித்துள்ளீர்கள். எனக்கு சிறுபத்திரிகை வழக்கான “கதையாடல்” என்ற பிரயோகமே ஏற்புடையதாகவிருக்கிறது. மொழிபு என்றால் discursive construct என்றே தோன்றுகிறது. Narratology என்பதை கதையாடல் தர்க்கவியல் என்று எழுதலாம். என்னுடைய அக்கறை வாசகனின் மனதில் சொற்கள் எவ்விதமான கருத்தாக்க பிம்பங்களை தோற்றுவிக்கின்றன என்பது குறித்துத்தான். மேற்கின் சமகால சிந்தனைகளுடன் நாம் உரையாடலை மேற்கொள்ள வேண்டுமென்றால் அங்குள்ள கலைச்சொற்களின் தத்துவ உட்தளங்களை கருத்தில் கொண்டு மொழியாக்கம் செய்யாமல் அது சாத்தியமில்லை. இடுகுறித்தன்மை என்பது இருக்கத்தான் செய்யும்; அதற்காக தர்க்கரீதியான மொழிக் கட்டுமானத்தை பின்பற்றாவிட்டால் சிந்தனை வளர்வது கடினமல்லவா?

உதாரணமாக capitalism என்பதை முதலாளித்துவம் என்று மொழிபெயர்த்ததால் அது “முதலாளி” என்ற நபர்கள் சார்ந்த பிரச்சினையாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கலாம் என்று நான் சுட்டியிருக்கிறேன். அதற்கு மாற்றாக முதலீட்டியம் என்ற சொல்லை பரிந்துரைத்து பயன்படுத்தியும் வருகிறேன். “முதலீட்டியமும் மானுட அழிவும்” என்ற சிறு நூலொன்று இந்த ஆண்டு வெளியாகியுள்ளது. சந்தர்ப்பம் கிடைத்தால் பாருங்கள்.

தமிழில் “பொதுக்களத்தில்” கலைச்சொல்லாக்கங்கள் நிலைபெறாத சூழலில் நாம் நமது விவாதத்தினூடாகவே வகைப்பாடுகளின் பிரச்சினைகளையும், கலைச்சொல்லாக்கத்தின் நுட்பங்களையும் பரவலான கவனத்திற்குக் கொண்டுசெல்லமுடியும். இலக்கியம் சார்ந்த, சிறு பத்திரிகை சார்ந்த சிந்தனையாளர்களுக்கு இதில் பெறும் பொறுப்பிருக்கிறது என்றே நினைக்கிறேன். நான் அவர்களில் ஒருவன், அவர்களைத்தான் என் இயக்கத்திற்கு நம்பியிருக்கிறேன். அதனடிப்படையிலேயே உங்களுக்கு எழுதுகிறேன்.

பாப் pop, பாபுலர் popular என்பது people மக்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டது. பரப்பு என்பது area (பெயர்ச்சொல்) அல்லது to spread (வினைச்சொல்) என்ற அர்த்தம் தருவது. நான் முன்னமே சுட்டியபடி, நீங்களே உங்கள் எழுத்தில் கூறியுள்ளபடி பாபுலர் என்பது பல வேர்களைக் கொண்டது, பல முனைகளிலிருந்து திரள்வது. இதற்கு பிரச்சாரம் propaganda என்ற கருத்தாக்கத்திற்கு நிகரான பரப்புதல் என்பதைச் சுட்டக்கூடிய சொல்லை சோவியத் நூற்கள் பயன்படுத்தியது அவர்களது அரசியல் புரிதலின் தோல்வியை சுட்டுவதாகவே நாம் கருத முடியும்.

Populism என்பதை பரப்பு+இயம் என்று புரிந்துகொள்வதிலும் இதே பிரச்சினைதான். நான் ஊடகவியலின் எல்லைகளுக்குள்ளிருந்து மட்டும் பேசவில்லை. அறிவுத்துறைகளின் எல்லைக்கோடுகள் மேற்கில் கலைக்கப்பட்டு வருகின்றன (இங்கு உருவாகவேயில்லையென்பதும் உண்மைதான்). பரப்பியம் என்ற அரசியல் தத்துவம் சார்ந்த கலைச்சொல் எப்படிப்பட்ட மனப்பிம்பத்தை வாசகனுக்குத் தரும்? நாம் அதை “வெகுஜனமனோவியம்” என்றோ “மக்களுள்ளியம்” (மக்கள்+உள்+இயம்) என்றோ மொழியாக்கம் செய்தால்தான் நான் கடிதத்தில் சுட்டிய Laclau-வின் நூலை விவாதிப்பது சாத்தியம்.

மேலும் நீங்கள் தி.மு.க ஓரு “பரப்பிய இயக்கம்” (populist movement) என்று சொல்லும்போது “பரப்பிய” இறந்தகாலப் பெயரெச்சமாகத் தொனித்து அது சில கருத்துக்களைப் பரப்பிய இயக்கம் என்ற பொருளைத் தருகிறது. ஆனால் அரசியல் தத்துவத்தில் அதை பாபுலர் என்று குறிப்பிடுவதன் பொருள் பல்வேறு மக்கள் குழுமங்களின் அரசியல் விழைவுகளுக்கு அது பொதுவான களம் அமைத்தது என்பதுதான். இதை மனதில் கொண்டால் “பரப்பிய இயக்கம்” என்பதைவிட “வெகுஜன இயக்கம்” எவ்வளவோ பரவாயில்லை அல்லவா? ஆங்கிலத்தில் பல திரிபுகளை ஏற்கக் கூடிய சொல்லைப்போல ஒன்றை தமிழில் தேடாமல், அந்தந்த இடத்திற்கேற்ப சொற்களை உருவாக்கவும் நேரலாம் என்றே நினைக்கிறேன். அப்படி கலைச்சொல்லாக்கத்திற்கு அவகாசம் இல்லையென்றால் ஆங்கிலச்சொல்லையே பயன்படுத்துதல் அல்லது அடைப்புக்குறிக்குள் ஆங்கிலச் சொல்லைத் தருதல் ஆகிய நடைமுறைகளே இருமொழிச்சூழலுக்கு நியாயம் சேர்க்கும் என நினைக்கிறேன்.

நன்றி

அன்புடன்
ராஜன் குறை

அன்புள்ள் ராஜன் குறை

நானும் நெடுநாள் கல்வித்துறை சார்ந்த, சோவியத் சார்ந்த கலைச்சொற்களை பயன்படுத்தவில்லை. சிற்றிதழ் சொற்களை மட்டுமே நம்பினேன். பின்னாளில் ஒருமுறை மொழியியல் சார்ந்த ஒரு நூலை வாசிக்க நேர்ந்தபோது ஏராளமான கலைச்சொற்கள் வேறு தளங்களில் கையாளப்பட்டிருப்பது கவனத்துக்கு வந்தது. அதன்பின் அவற்றையும் பயன்படுத்த ஆரம்பித்தேன். அதற்கு மறைந்த தமிழியக்கவாதியும் மார்க்சியருமான சோதிப்பிரகாசம் ஒரு காரணம். மேலும் ஏராளமான கலைச்சொற்கள் வெறும் அகராதியாகவே நின்றுவிட்டிருப்பதையும் கண்டேன்.

நீங்கள் சொல்லும் பொருட்குழப்பங்கள் சரிதான். குறிப்பாக பரப்பிய என்பதில் பரப்பப்பட்ட என்ற பொருள் தொனிப்பது சிக்கலையே அளிக்கிறது. பார்ப்போம்

ஒரு கலைச்சொல்லை முதல் பயன்படுத்தும்போது அடைப்புக்குள் ஆங்கிலம் கொடுத்தே நான் சொல்கிறேன். மீண்டும் மீண்டும் பயன்படுத்தும்போது சொல்வதில்லை

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்,

பரப்பிசையைப் பற்றி நீங்கள் எழுதிய கட்டுரை மிக நன்றாக இருந்தது. ஆனால் அதைப் படித்ததும் பரப்பிலக்கியம் vs செவ்விலக்கியம், வணிக எழுத்து vs சீரிய எழுத்து குழப்பங்கள் மீண்டும் எழுந்தன. கேள்விகளை எனக்கு நானே articulate செய்வதற்குள் நீங்கள் சரவணனுக்கு தந்த பதில் படித்தேன்.
குழப்பம் பெரும் அளவில் தீர்ந்தந்து, ஆனால் இன்னும் கொஞ்சம் கேள்விகள் எஞ்சி இருக்கின்றன.

நீங்கள் பரப்பிலக்கியத்துக்கு உரிய இடம் தர வேண்டும், ஆனால் அது சிறந்த இலக்கியம் இல்லை, அதன் ஆயுள் கம்மி, நீண்ட நாள் வாழாது (ஸ்ரீனிவாச ராமனுஜன் vs நல்ல கணக்கு வாத்தியார் உதாரணம்) என்று சொல்கிறீர்கள். அதே நேரத்தில் பரப்பிசையை சிறந்த இசையாகவே கருதுகிறீர்கள். கர்நாடக இசை மட்டுமே நிலைத்து வாழும், திரை இசை அழிந்துவிடும் என்று நீங்கள் நினைக்கவில்லை. (நானும் அப்படி நினைக்கவில்லை) இந்த முரண்பாட்டை விளக்க முடியுமா?

நீங்கள் இசை ரசிகர், ஆனால் கறாரான இலக்கிய விமரிசகர், அதனால் இப்படி என்று எடுத்துக் கொள்ளலாமா? இல்லை இசையையும் இலக்கியத்தையும் இப்படி ஒப்பிட முடியாது என்று எடுத்துக் கொள்ளலாமா? எதற்கு நானே குழப்பிக் கொள்ள வேண்டும், உங்களையும் கொஞ்சம் குழப்புவோமே என்றுதான் இந்த மெயிலை
அனுப்புகிறேன்…

அன்புடன்,
ஆர்வி

ஆர்வி,

நான் பரப்பிலக்கியம் தேவையில்லை என்பதில்லை, அது வேறு என்கிறேன். அந்த வகைமைக்குள் கிளாசிக்குகள் இருக்கலாம் – பொன்னியின் செல்வன் போல. இசையிலும் அப்படியே.

செவ்வியலை நோக்கி நகரும் இசையே செவ்வியல் இசை. இலக்கியம் என பொதுவாகச் சுட்டப்படுவதும் அவ்வகை இலக்கியமே. அது மகிழ்விப்பதற்கான கலை அல்ல. நான் செவ்வியலிசையை விட பரப்பிசை மேலானது என்று சொல்லவில்லை

செவ்வியல் கலைகளும், தீவிர இலக்கியமும் தான் ஒரு சமூகத்தின் மைய ஓட்டமாக இருக்க முடியும், இருக்க வேண்டும். அது வணிகப்பொருள் அல்ல. தற்காலிகமானது அல்ல. எதிர்வினைகள் மூலம் உருவாவது அல்ல. அது ஒரு சமூகத்தின் சாராம்சமான அறவுணர்ச்சியின் அழகுணர்ச்சியின் வெளிப்பாடூ. ஆகவேதான் நாம் அமெரிக்க இலக்கியம் என்னும்போது ஐசக் பாஷவிச் சிங்க பெயரை சொல்கிறோம் லியான் உரிஸ் பெயரை சொல்வதில்லை. இதுவே நான் சொல்லும் வேறுபாடு. மிக அப்பட்டமான வேறுபாடு இது

மேலும் இசையை விட இலக்கியம் இன்னமும் விரிவானது. இசைக்காவது மகிழ்வூட்டும் நோக்கம், கேளிக்கை நோக்கம் கொஞ்சமாவது இருக்கும். இலக்கியம் அப்படி அல்ல. அது கற்றலும் கற்பித்தலும் நிகழும் தளம். ஞானத்தின் களம். ஒரு சமூகம் தன்னைத்தானே பேசிப்புரிந்துகொள்ளும் முறை அது

ஜெ

முந்தைய கட்டுரைபரப்பியம்
அடுத்த கட்டுரைபேராசிரியர்கள் குறித்த விவாதம்