கரைகாணாக்கடல்

r

 

 

1971இல் எனக்கு ஒன்பது வயது.முழுக்கோடு அரசு ஆரம்பப்பள்ளியில். நான்காம் வகுப்பு மாணவன். அதுவரை நான் மொத்தம் ஆறு சினிமாக்கள்தான் பார்த்திருந்தேன்.நான்கு குழித்துறை வாவுபலி பொருட்காட்சிக்குச் சென்றபோது பார்த்தது. அருமனை டெண்டுக்கொட்டகையில் இரண்டுபடம்.

சிறிய இடைவெளிக்குப்பின் அருமனையில் மீண்டும் கொட்டகையில் படம்போடத்தொடங்கினர். இரண்டாவதாகப்போட்டபடம் சத்யன் நடித்த கரைகாணாக்கடல். அவர் நடித்துவெளிவந்த கடைசிப்படம் அது. அதேவருடம் அவர் தகழி சிவசங்கரப்பிள்ளையின் நாவலான அனுபவங்கள் பாளிச்சகளில் தோழர் செல்லப்பனாக மறக்கமுடியாத நடிப்பை வழங்கியிருந்தார். கரைகாணாக்கடல் அவர் இறந்தபின்னரே வெளிவந்தது. அதற்காக அவர் மீண்டும் சிறந்த நடிகருக்கான கேரள அரசு விருதைப்பெற்றார்

முட்டத்து வர்க்கி எழுதிய அதேபேரிலான நாவலின் திரைவடிவம். கே.எஸ்.சேதுமாதவன் இயக்கியது. இசை தேவராஜன். மதுவும் ஜெயபாரதியும் நடித்திருந்தனர். சத்யனின் இறப்பு உருவாக்கிய அலையால் அந்த சினிமா திரையரங்குகளில் ஒருவருடம் ஓடியது. ராமு காரியட்டின் செம்மீனுக்குப்பின் அதற்கிணையான பெருவெற்றி அடைந்த படம் அது.

பக்திப்படங்களுக்குமட்டுமே அன்றெல்லாம் நாயர் ஸ்த்ரீகள் செல்லும் வழக்கம். அம்மா இந்தப்படத்தை பார்த்தேயாகவேண்டுமென அடம்பிடித்து அப்பாவை ஒப்புக்கொள்ளவைத்தாள். வழக்கமாக எங்களை சினிமாவுக்குக் கொண்டுசெல்வதை ஒரு திருவிழாவாக நடத்துவார் அப்பா. அவருக்கு தன்பிள்ளை பிறபிள்ளை என்னும்பேதம் கடைசிவரை இருக்கவில்லை. பள்ளிப்புத்தகங்கள் ,நோட்டுகள் ,சட்டை, தின்பண்டம் எல்லாமே எல்லாருக்கும்தான் வாங்கிவருவார்.

சினிமா அறிவிக்கப்பட்டதும் சுற்றுவட்டத்தைச் சேர்ந்த பத்துப்பதினைந்து பிள்ளைகள் தாங்களாகவே சினிமாவுக்குக் கிளம்புவார்கள். எத்தனைபேர் என்பதை டிக்கெட் எடுக்கும்போதுதான் அப்பா தலைகளைத் தொட்டு எண்ணுவார். சமைந்த பெண்கள் தவிர எல்லா பிள்ளைகளும் வந்திருக்கும். ஞாயிற்றுக்கிழமைதான் சினிமா. காலையிலேயே கிளம்ப ஆரம்பித்துவிடுவோம். சொல்லப்போனால் முந்தையநாள் இரவே கிளம்பல் தொடங்கிவிடும்.

புளியங்கொட்டையை வறுத்து லேசாக உரைத்து எடுத்துக்கொள்வோம். அதுதான் அங்கே தின்பதற்கு. உலகம் பளிச் என்று இருக்கும். ஒன்பதுமணிக்கே சட்டைகளை எடுத்துவைத்துவிடுவோம். அரைமணிநேரத்துக்கு ஒருமுறை எங்கள்வீட்டில் கடிகாரம்பார்க்க வந்துவிடுவார்கள். அம்மா அன்றெல்லாம் பாடிக்கொண்டே இருப்பாள். அவள் பாட்டைக்கேட்கவே தோழிகள் சமையலறையில் அமர்ந்திருப்பார்கள்.

மாலை நான்குமணிவாக்கில் கிளம்புவோம். கொஞ்சம் வளர்ந்த பையன்கள் ஒரு குழு. அதற்கடுத்த வயதில் இன்னொரு குழு. கடைசியாக அம்மாவும் பக்கத்துவீட்டுத் தோழிகளும். அப்பா மிகத்தள்ளி இதற்கெல்லாம் எனக்குச் சம்பந்தமில்லை, நானாவது சினிமாவாவது, சேச்சே என்பதுபோல குடையை ஊன்றி எங்கோ பார்த்தபடி நடந்து வருவார். நான்கு கிலோமீட்டர் நடந்தால் அருமனை. அங்கேதான் அப்பா சார்பதிவகத்தில் வேலைபார்த்தார்

கொட்டகையில் ஒருமணிநேரம் சினிமாப்பாட்டு போடுவார்கள். அதைமட்டும் கேட்கவே நூறுபேர் வரை வந்து நின்றிருப்பார்கள். கப்பலண்டி எனப்படும் வேர்க்கடலை விற்கப்படும். சுக்குக்காப்பி தூக்கு உண்டு. மலையாளப் பாட்டுக்களை போட்டுக் கேட்பதற்காக வரும் பெரியமனிதர்களுக்காக பெஞ்சுகளும் போடப்பட்டிருக்கும்

கரைகாணாக்கடல் பக்திப்படம் அல்ல. ஆனாலும் அத்தனைபேரையும் கூட்டியாகவேண்டும். வேறுவழியில்லை. “இந்தக் காக்காக்கூட்டத்துக்கு படம் பிடிக்காது. இதிலே ஆனையும் அடிபிடியும் ஒண்ணும் இல்லை. அங்க வந்து சத்தம்போட்டா செவுளு பிஞ்சிரும் பாத்துக்க” என்றார் அப்பா. அம்மாவுக்கே அந்த சந்தேகமிருந்தது, ஒன்றும் சொல்லாமல் “ம்ம்” என்றாள்.

நாற்காலிச்சீட்டு அன்று முப்பதுபைசா. தரைடிக்கெட் ஐந்துபைசா. பத்துபைசாவுக்கு பெஞ்சு. அம்மாவும் தோழிகளும் பெஞ்சு. நாங்களெல்லாம் தரை. அப்பாவுக்கு மட்டும் நாற்காலி. அவர் அரைமணிநேரத்துக்குமேல் எந்தப்படத்தையும் பார்த்ததில்லை. கதகளி ரசிகருக்கு பறக்கும் நிழல்பிம்பங்கள் கேவலமாகத் தெரிந்திருக்கும். வெற்றிலைபோட எழுந்துபோய் அப்படியே அரங்கமுதலாளியிடம் பேசிக்கொண்டிருப்பார்.இரண்டுபேருக்குமே என்ன காரணத்துக்காக இதையெல்லாம் மக்கள் பார்க்கிறார்கள் என்னும் வியப்பு

டிக்கெட் எடுத்து அரங்கில் அமர்ந்தோம். பாட்டு முடிந்து திரையில் ’அட்டை’ காட்டிமுடிந்ததும் நாங்கள் ஆனந்தக்கூச்சலிட்டோம். ’கலர்ப்படம்!’ நான் பார்த்த முதல் வண்ணப்படம் அதுதான். என்னால் அது ஒரு சினிமா என்றே நம்பமுடியவில்லை. வாழ்க்கையில் பிறகெப்போதும் தொழில்நுட்பம் என்னை அதற்குமேலாக மயக்கியதில்லை. காற்றுவந்நூ கள்ளனைப்போலே என்று ஜெயபாரதி பாடியபடி வந்தபோது என் அருகே அவரை உணர்ந்தேன். நான் படம் பார்க்கவில்லை. அதனுள்சென்றேன்

முட்டத்துவர்க்கி கேரளத்தின் அன்றைய பைங்கிளி எழுத்தாளர். கரகாணாக்கடல் தோமா என்னும் தொழிலாளியின் வாழ்க்கையின் சித்தரிப்பு. உழைத்து கௌரவமாக வாழவேண்டுமென கனவுகண்டு வேற்றூருக்கு வரும் தோமாவின் வாழ்க்கை அவர் மகளால் அழிகிறது. மகளை முதலாளியின் மகன் கெடுத்துக் கைவிடுகிறான். அவள் இறக்கிறாள். அவர் ஊரைவிட்டுச்செல்கிறார். முடிச்சுகளில்லாத எளிய கதை அது.

முன்பு ஒருமுறை கப்போலா ஓரு பேட்டியில் சொல்லியிருந்தார். மிகச்சிறந்த திரைப்படத்துக்கு இலக்கியங்களைவிட வணிகஎழுத்தே உகந்தது என. உதாரணம் கான் வித் த விண்ட் தான். இலக்கியங்களின் கட்டமைப்பில் உள்ள குறைத்துச்சொல்லல் முறையும் உளவியல்சித்தரிப்பும் நிகழ்ச்சிகளின் உட்சிக்கலும் சினிமாவுக்கான வலுவான கருவை அளிக்க மறுக்கக்கூடும். சினிமாவுக்கு உகந்தது வாழ்க்கையின் மணமுள்ள வலுவான கதைக்கட்டமைப்புதான். அதை வணிக எழுத்து அளிக்கமுடியும். கரைகாணாக்கடல் அப்படிப்பட்ட ஒரு படம்.

பி.பாஸ்கரன், ராமு காரியட், ஏ.வின்செண்ட், கே.எஸ்.சேதுமாதவன், ஆகிய நால்வரும்தான் மலையாள சினிமாவின் அடிப்படைத் தரத்தை தீர்மானித்த முன்னோடி இயக்குநர்கள். அவர்களுடன் இணைந்த நடிகர் சத்யன் இன்னொரு முக்கியமான சக்தி. சேதுமாதவன்,சத்யன் இருவருமே மலையாளிகளல்ல, தமிழர்கள் என்பது ஓர் ஆச்சரியம்.

மலையாளத்தின் கலைப்பட இயக்கம் எழுபதுகளில் தொடங்கியது. அதற்கு இருபதாண்டுகளுக்கு முன்னரே பொதுரசனைக்கான படங்கள் அங்கே வரத்தொடங்கின. அந்த தொடக்ககாலத்திலேயே இந்தியாவின் வேறெந்தமொழியிலும் இல்லாதபடி கலைத்தரமான பொதுரசனைப்படங்கள் மலையாளத்தில்தான் வந்தன. அவை தேசிய விருதுகளையும் பெற்றன. ஆரம்பத்திலேயே அவை வந்ததனால் மலையாள திரைரசனையே அடிப்படைத்தரம் கொண்டதாக ஆகியது

சினிமாவை இலக்கியத்துடன் இணைக்கவும், வாழ்க்கைக்கு மிக அணுக்கமான சினிமாக்களை அளிக்கவும் முன்னோடிகளால் முடிந்தது. தகழி, கேசவதேவ்,பஷீர் போன்றவர்களின் இலக்கியங்களை இவர்கள் சினிமாக்களாக்கினர். அன்றைய ஸ்டுடியோக் கட்டமைப்புக்குள் நின்றபடி மிகையற்ற இயற்கைநடிப்பும் நம்பகமான கதைச்சூழலும் உண்மையான சித்தரிப்பும் கொண்ட படங்களை அளித்தனர். இன்றும் வாழும் முப்பது படங்கள் அவர்களின் பங்களிப்பாக உள்ளன. கரைகாணாக்கடல் அதில் ஒன்று.

பார்த்துக்கொண்டிருந்தது மெல்லி இரானியின் அற்புதமான ஒளிப்பதிவை என நான் அன்று அறிந்திருக்கவில்லை. புதிய புரஜக்டரும் புதியதிரைச்சீலையும் இணைந்து என் முன் ஓர் வண்ண உலகை அளித்தன. இயல்பான ஆனால் அழகான காமிராக்கோணங்கள். இத்தனை ஆண்டுகளுக்குப்பின்னரும் நாலாம்வகுப்பு மாணவனாக நான் பார்த்த அந்த காட்சிகள் என் கண்ணில் உள்ளன.

அன்று நாங்கள் எவரும் அரங்கில் சத்தம்போடவில்லை. நாங்கள் அறிந்த எங்கள் வாழ்க்கை. நாட்டுவழிகள்,. தென்னைமரங்கள்., குடிசைவீடுகள்., மீன்விற்கும் பெண்கள்,. கிராமத்துச் சடங்குகள்,. ஊரெங்கும் ஓடியலையும் அக்காக்கள்,. உள்ளூர்ப்பணக்க்காரர்கள்,. நொச்சு பேசிக்கொண்டே இருக்கும் கிழவிகள்… சினிமா என்பது வாழ்க்கை. அதற்குள் கண்வழியாக சென்று வாழமுடியும்.

படம் முடிந்தபோது அத்தனைபேரும் அழுதுகொண்டிருந்தோம். மௌனமாக ஒருவரை ஒருவர் கைபற்றியபடி ஒரு சொல்லும்பேசாமல் நடந்து வீடுவந்தோம். தோமாவின் துயரத்தை மட்டுமே உணர்ந்திருந்தோம். சினிமா என்றால் வாழ்க்கை என்று அது எங்களுக்குக் காட்டியது. இத்தனைக்கும் பக்திப்படம் பார்க்கும் எங்கள் கும்பலுக்கு அது சற்று மிகையான படம். காமமும் வன்மமும் ஊடாடும் ஒரு சினிமா

அடுத்த மாதம் நாங்கள் பார்த்த குமரிக்கோட்டம் என்றபடத்தில் இடைவேளையிலேயே “கிளம்பலாம் அம்மா” என்று நான் சொன்னேன். மற்றவர்களும் “இனிமே இந்தமாதிரி படம் வேண்டாம்” என்றனர் மற்றவர்கள். அண்ணா மட்டும் “நல்ல படம். படம் பாத்தா ஜாலியா இருக்கணும்” என்றார்.

பின்னர் பார்த்த தமிழ்ப்படங்கள் என்னை கூசவைத்தன.. அன்று புகழ்பெற்றிருந்த படங்கள் அவை. கண்கூச அள்ளித்தெளித்த வண்ணக்கொப்பளிப்புகள். நடிகர்களின் பலவண்ண ஆடைகள். அதீதமான அசைவுகள் கொண்ட காமிராக்கோணங்கள். அவற்றுடன் இணைந்த ரத்தம்கக்கும் மிகைநடிப்புகளும் செயற்கையான நாடகத்தனமும்.

அவையனைத்திலிருந்தும் என்னை முழுமையாக விலக்கியது கரைகாணாக்கடல். என் வகுப்பு மாணவர்கள் எம்ஜியார் சிவாஜி என்று கொப்பளித்துக்கொண்டிருக்கையில் நான் மிதமான மலையாளப் படங்களையே நாடிச்சென்றேன், இன்றும் என் நினைவில் பூத்துநிற்கும் அற்புதமான பலபடங்களை நண்பர்களுடன் அலைந்து திரிந்து பார்த்தேன் காமம் என்பது கலையின் ஒரு பகுதி , விசிலடிப்பதற்கானது அல்ல என அந்த முதல் சினிமா அனுபவமே எனக்கு காட்டியது.

பின்னர் எது சினிமா என எனக்கு சந்தேகமே இருந்ததில்லை. ஒருநாளும் தரமற்ற சினிமாவுக்கு மயங்கியதில்லை. நான் திரையரங்கில் பார்த்த சிவாஜி படம் ஒன்றே ஒன்று. வசந்தமாளிகை , எம்ஜியார் படம் இரண்டு..ஜெமினிகணேசன், முத்துராமன் போன்றவர்களின் ஒருபடம்கூட பார்த்ததில்லை.பிற்காலத்தைய பலநடிகர்களை சினிமாவில் பார்த்ததே இல்லை.

மீண்டும் தமிழ் சினிமாவுக்குள் நான் வந்தது இளையராஜாவின் இசைத்தலைமையில் பாரதிராஜா, தேவராஜ்மோகன்,மகேந்திரன் போன்றவர்கள் உருவாக்கிய மறுமலர்ச்சியின்போதுதான். அது மிகக்குறுகிய காலம்..அப்போதுதான்  பரதன்,பத்மராஜன்,மோகன், கே.ஜி.ஜார்ஜ், ஐ.வி.சசி ஹரிஹரன் உருவாக்கிய புதிய அலை மலையாளத்தில் எழுந்தது. அது வலுவாக தொண்ணூறுகள் வரை நீடித்தது. சிபி மலையில், சத்யன் அந்திக்காடு, சீனிவாசன் என அதற்கடுத்த அலையாக மாறியது.

சமீபத்தில் யூடியூபில் கரைகாணாக்கடல் முழுப்படத்தையும் பார்த்தேன். இன்று அது ஒரு பழைய படம்தான். எளிமையான திரைக்கதை.  எஸ்.எ.புரம் சதானந்தன் எழுதிய திரைக்கதையில் முதல்காட்சியே படத்தின் பிரச்சினையை நுணுக்கமாக உணர்த்திவிடுகிறது. குடும்பமானம் எனக்கொந்தளிக்கும் தோமா, அதை உணராது பருவத்தின் திளைப்பில் இருக்கும் மகள். அத்தனை கதாபாத்திரங்களின் இயல்புகளும் வெளிப்பட்டுவிடுகின்றன.

ஆனாலும் இன்றும் என்னை கவர்ந்தது கரைகாணாக்கடல். அன்றைய சமகாலப்படங்களுடன் ஒப்பிடுகையில் அந்த ஒளிப்பதிவு பிரமிப்பூட்டுகிறது. இன்றும்கூட கரைகாணாக்கடலின் வாழ்க்கைச்சித்தரிப்பு துயரமளிக்கிறது.. மென்மையான சத்யனின் நடிப்பு மீண்டும் அந்த வாழ்க்கைக்குள், அதன் தவிர்க்கமுடியாத துயரத்திற்குள் என்னை கொண்டுசென்றது.

கரைகாணாக்கடல்

காற்றுவந்நூ கள்ளைனைப்போலே

முந்தைய கட்டுரைசாயாவனம்
அடுத்த கட்டுரைபத்மஸ்ரீ