சிலுவையின் பெயரால்: ஒரு கடிதம்

Most Rev A.M.Chinnappa
Archbishop of Madras

Archbishops House
41,Santhome House
Chennai 600004

17-09-2010

திருமிகு ஐயா,

தங்களது ‘சிலுவையின்பெயரால்’ என்ற நூலை வாசித்து வியப்படைந்ததோடு மகிழ்ந்தேன். தங்களை மனமார வாழ்த்திப்பாராட்டுகிறேன்.பல்வேறு தலைப்புகளில் ஆய்வுக்கண்ணோட்டத்தோடு உங்களது சிந்தனையை

அள்ளித்தந்துள்ளீர். தங்களது இந்நூல் பலராலும் படிக்கத்தக்கது. கிறிஸ்து இயேசுவை ஆழ்ந்த ஆன்மீகத்தின் கண்ணோட்டத்தில் காண்கிறீர்கள். மற்ற வெளிப்புற அணுகுமுறைகளை வெறுக்கிறீர்கள். மிகச்சரியான பார்வை.

2008 ஆகஸ்டு 14-17 தேதிகளில் நாங்கள் நடத்திய ஆய்வரங்கம் ஒரு கருத்து ஆய்வு. ஆன்மீகப்பார்வைகளில் மட்டுமே நாம் கவனம்செலுத்தவேண்டும். முனைவர் தெய்வநாயகம் , முனைவர் தேவகலா உள்ளிட்ட பலரது கட்டுரைகளில் கருத்துக்களில் நூற்றுக்குநூறு உண்மைதான் என்று எவரும் வாதாடக்கூடாது. அவற்றுள் பல உண்மைகள் உள்ளன. சிலவற்றுள் சிலருக்கு ஏற்பு இல்லை. எதையும் திணித்துவிடும் முயற்சி அறவே கூடாது என்றுதான் நான் தொடக்கமுதலே கூறிவந்துள்ளேன். இந்த ஆய்வரங்கத்தில் சமய நல்லிணக்கத்துக்கான வழிகாட்டுதல்கள் , பொதுமையான கண்ணோட்டங்கள் கட்டாயம் உருவாகவேண்டுமென்றும் வலியுறுத்தினோம். சில முடிவுகளை போப்பாண்டவரின் அலுவலகத்துக்கும் அனுப்பியுள்ளோம். எந்த மதத்தையும் சாடுவதையோ கரடுமுரடாக வாதிப்பதையோ நான் கடைசிவரை எதிர்த்தேன்.

ஆன்மீக கருவூலங்கள் காட்டும் வழிகள் அளப்பரியன. மதங்கள் என்று வைத்துக் கொண்டால் பல நிலைகளில் நாம் அறிந்து கொள்ள வேண்டியவைகளும் ஏற்கவோ மறுக்கவோ சில அம்சங்களும் கட்டாயம் இருக்கத்தான் செயும். இவ்வாறாக தாங்கள் கிறிஸ்துவின் முகத்தை பல்வேறு கோணங்களில் பார்ப்பது எனக்கு பெருமகிழ்ச்சியை தருகிறது. தோமையரைப் பற்றியும் பலசெய்திகளைக் கூறியிருக்கிறீர்கள். படம் எடுக்க முயல்கிறோம். ஆனால் 100 கோடி என்பது கற்பனை பல்லக்குதான். இன்னும் சிறுதொகைகூட எங்களால் திரட்ட முடியவில்லை. தங்களை மனமார பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன். சென்னைக்குவந்தால் தாங்கள் எங்கள் விருந்தினராக இருக்க வேண்டி அழைக்கிறேன்

அன்புள்ள

மேதகு டாக்டர் ஏ.எம்.சின்னப்பா ச.ச
சென்னை-மயிலை உயர்மறைமாவட்ட பேராயர்.

**

வணக்கத்திற்குரிய பேராயர் அவர்களுக்கு,

தங்கள் கடிதம் ஒரு குருவருள் என்றே கருதுகிறேன். இந்த தருணத்தில் அத்தகைய ஒன்றுக்கு நான் பாத்திரமானது குறித்து பெருமிதமடைகிறேன். தங்கள் முன் பணிவுடன் வணங்கி என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நெடுங்காலமாகவே மதங்கள் குறித்தும் ஆன்மீகம் குறித்தும் ஆழ்ந்த தேடல் எனக்குண்டு. அது என் துயரம் நிறைந்த வாழ்க்கைச் சந்தர்ப்பங்கள் வழியாக நான் செல்ல நேர்ந்த பாதை. நான் வளர்ந்த சூழல் காரணமாக இருக்கலாம் என்னுடன் எப்போதுமே கிருஷ்ணனும் கிறிஸ்துவும் இருக்கிறார்கள். ஞானம் பெருங்கருணையுடன் இணைகையிலேயே முழுமை கொள்கிறது என நினைக்கிறேன். கிறிஸ்துவை அந்த கருணையின் வடிவமாகவே கண்டு கொண்டிருக்கிறேன். மிக ஆழத்தில், மிக அண்மையில். கிறிஸ்துவைப் பற்றி நான் எழுதுவதெல்லாம் அந்த தரிசனத்தில் நின்று கொண்டே.

மதங்கள் காட்டும் கிருஷ்ணனையும் கிறிஸ்துவையும் இன்னும் அண்மையாகச் சென்று இன்னும் நேரடியாக அறிய முடியுமா என்று முயல்கிறேன். மதங்கள் நம்பிக்கைகளை நோக்கி இட்டுச்செல்கின்றன. ஆன்மீகம் என்பது நம்பிக்கை மற்றும் அடையாளம் சார்ந்த ஒன்றல்ல என்பது என் எண்ணம். அதற்கு எல்லைகள் இல்லை. எல்லைசார்ந்த மனவிலகல்களும் கசப்புகளுக்கும் அங்கே இடமில்லை.

மதநம்பிக்கை மதத்தை வரலாற்று நோக்கில் அணுகுவதற்கு பெரும் தடையாக இருக்கிறது. இதற்கு எந்த மதமும் விதிவிலக்கல்ல. நம்பிக்கை அடிப்படையில் செய்யப் படும் வரலாற்றாய்வுகள் பலசமயம் மூர்க்கமான வரலாற்றுத் திரிபுகளாக ஆகிவிடுகின்றன. வரலாற்று உண்மைகள் எப்போதுமே புறவயமான ஆதாரங்களின் அடிப்படையில் நிகழ்த்தப்படும் நடுநிலையான விவாதங்கள் மூலமே முன்வைக்கப்பட வேண்டும். மாறாக மதநம்பிக்கை சார்ந்த முன்முடிவுகளுடன் அவை பிறர்மேல் திணிக்கப் படுமென்றால் அவை கசப்புகளை உருவாக்கி காலப்போக்கில் சமூக மோதல்களுக்கே வழிவகுக்கும்.

கருத்துக்களை எவரும் முன்வைக்கலாம், ஆனால் வரலாறு சார்ந்த கருத்துவிவாதங்களுக்கு அவற்றுக்கேயான பொதுவிதிகளும் பொதுவரைமுறைகளும் உண்டு என்றே நினைக்கிறேன். முனைவர் தெய்வநாயகம் அவர்களின் கருத்துக்களில் அந்த புரிதலும் தெளிவும் இல்லை என்பதே என் எண்ணம்.

உலகுதழுவிய பார்வையும் பெரும் அமைப்பும் கொண்டுள்ள திருச்சபை இத்தகைய ஆய்வுகளில் உகந்த நிதானத்தையே கடைப்பிடிக்கும் என உங்கள் சொற்கள் நம்பிக்கை தருகின்றன. இந்தியாவின் தொன்மையும் மகத்துவமும் கொண்ட ஞானத்தேடலின் மரபில் நிகரற்ற தியாகத்தினாலான ஒளிமிக்க ஓர் ஏடாகவே திருச்சபையும் அமையும் என்று நான் எண்ணுகிறேன். கிறிஸ்துவின் பேரருளுக்கு என்றென்னும் இந்நாடும் பாத்திரமாகட்டும்.

தங்கள் அழைப்பை எனக்கு அளிக்கப்பட்ட உயர்ந்த கௌரவங்களில் ஒன்றாகவே கருதுகிறேன். விரைவில் ஒரு தருணத்தில் தங்களைச் சந்தித்து தங்கள் ஆசிகளை எனக்கும் என் குடும்பத்திற்கும் பெற்றுக்கொள்ள ஆவலுடன் இருக்கிறேன்

பணிவுடன்

ஜெயமோகன்

http://www.jeyamohan.in/?p=5492 சிலுவையின் பெயரால்
http://www.jeyamohan.in/?p=6250 இரண்டு காதலியர்
http://www.jeyamohan.in/?p=4502 கிறித்துவம், இந்து மரபு
http://www.jeyamohan.in/?p=810 தோமாகிறித்தவம் தமிழியம் :ஞானியின்கடிதமும் பதிலும்
http://www.jeyamohan.in/?p=665 தாமஸ் குமரிமைந்தன் கடிதம்
http://www.jeyamohan.in/?p=615 தாமஸ்:ஓர் இணையதளம்
http://www.jeyamohan.in/?p=600தமிழர்களுக்கு சிந்திக்கச் சொல்லி தந்த புனித தாமஸ்

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைவல்லினத்தில்…