பகுதி ஆறு : விழிநீரனல் – 1
அரசப்பெரும்படகின் அகல்முற்றத்தில் இடையில் கையூன்றி நின்றபடி அதைத் தொடர்ந்து விழிதொடும் தொலைவுவரை அலைகளில் எழுந்தமர்ந்து வந்துகொண்டிருந்த அஸ்தினபுரியின் படகுநிரையை கர்ணன் நோக்கினான். அவன் ஆடை எழுந்து சிறகடித்தது. தலைமயிர்க் கற்றைகள் பறந்தன. வீசும் காற்று தன்னிலிருந்து எண்ணங்களை சிதறடித்துக்கொண்டு செல்வதாகவும் அவ்விரைவிலேயே எண்ணங்கள் ஊறிக்கொண்டிருப்பதாகவும் உணர்ந்தான்.
எடைமிக்க காலடிகளுடன் நெருங்கி வந்த துச்சாதனன் “மூத்தவரே” என்று வெடிக்குரலில் அழைத்தான். கர்ணன் திரும்பி புருவத்தை தூக்க, உரக்க நகைத்தபடி அவன் படகிலிருந்து சுட்டிக்காட்டி “வாத்துக் கூட்டம் போல் இருக்கிறது… ஆயிரம் வாத்துக்கள்!” என்றான். கர்ணன் புன்னகைத்தான். தன் கலைந்த குழலை அள்ளிக் கட்டிக்கொண்டான்.
துச்சாதனன் பாய்வடத்தைப் பற்றியபடி நின்று தொடர்ந்துவந்த படகுகளை நோக்கி கைசுட்டி “இருநூற்றி அறுபது படகுகளில் வரிசைச்செல்வம் ஏற்றப்பட்டுள்ளது. காவல்படகுகளும் அகம்படியர் படகுகளும் அணிப்பரத்தையர் படகுகளும் என மேலும் ஆயிரம் படகுகள் வருகின்றன. இத்தனை பெரிய அணியூர்வலம் இன்றுவரை பாரதவர்ஷத்தில் நடந்ததில்லை என்று சற்றுமுன் சூதர் சுபகர் பாடிக் கொண்டிருந்தார். நான் அவருக்கு ஒரு முத்துமாலையை அளிக்க விரும்பினேன். ஆனால் கழுத்தில் நான் முத்துமாலை அணிந்திருக்கவில்லை. ஆகவே ஒரு குடுவை யவனமதுவை அளித்தேன்” என்றான்.
கர்ணன் புன்னகைத்தபடி “நன்று” என்றான். “கேட்டுவிட்டேன் மூத்தவரே, துவாரகையிலிருந்து நூற்றுநாற்பது படகுகள் இந்திரப்பிரஸ்தத்திற்கு சென்றன. பாஞ்சாலத்திலிருந்து எண்பது படகுகள் மட்டுமே. நாம் பத்து மடங்கு படகுகளுடன் செல்கிறோம்.” கர்ணன் புன்னகைத்தான். துச்சாதனன் “அஸ்தினபுரியின் கருவூலம் இத்தனை ஆழம்மிக்கது என்று சிலநாட்களுக்கு முன்புதான் எனக்கே தெரியும். பல அடுக்குகளாக அது இறங்கிச் சென்றுகொண்டே இருக்கிறது. மேலே இருக்கும் நம் அரண்மனைக்கு நிகரான ஒரு புதையுண்ட அரண்மனைவளாகம் அது” என்றான்.
கர்ணன் “அஸ்தினபுரியின் குலமுறை போல” என்றான். “ஆம், அதையேதான் நானும் எண்ணினேன். இங்கிருந்து மாமன்னர் குரு வரை ஓர் அடுக்கு குருவிலிருந்து ஹஸ்தி வரை இன்னொரு அடுக்கு ஹஸ்தியிலிருந்து யயாதி வரை இன்னொரு அடுக்கு” என்றான் துச்சாதனன். “அங்கிருந்து புதனுக்கும் பின்னர் சந்திரனுக்கும் இறுதியில் விண்ணளந்த பெருமாளுக்கும் செல்ல முடியும்” என்றான் கர்ணன் சிரித்தபடி.
அதை வேடிக்கை என்று எடுத்துக்கொள்ளாத துச்சாதனன் “ஆம், மூத்தவரே. அஸ்தினபுரியின் கருவூலம் விண்ணவர் மட்டுமே அறிந்தது. இந்திரப்பிரஸ்தம் நம்மிடம் அதில் பாதியை வாங்கிச் சென்றபோது திகழ்கருவூலத்தில் மட்டுமே பங்கு அளிக்கப்பட்டது என்று விதுரர் சொன்னார். ஏனெனில் பெருஞ்செல்வத்துடன் அவர்கள் சென்றால் அவற்றை பாதுகாக்க போதிய படைவல்லமை இல்லாதிருக்கக் கூடும் என்று அவர் ஐயுற்றிருந்தார்” என்றான்.
கர்ணன் அப்போது அவனை தவிர்க்க எண்ணினான். ஆனால் அவன் கிளர்ச்சிகொண்டிருந்தான். “அத்துடன் தொன்மையான மூதாதையர் செல்வம் விற்கப்பட முடியாதது. கையில் உள்ளது என்று அது அளிக்கும் பெருமிதம் மட்டுமே அதன் பயன். அவர்கள் இடருற்றால் அதை விற்க முனையக்கூடும். எதிரிகள் அதை கைப்பற்றக்கூடும். ஆகவே அவர்கள் கோட்டை சமைத்தபின் அளிக்கலாம் என்று கருதியிருந்தார்.”
“அள்ளி அள்ளி வெளியே வைத்தபோது குபேரனின் கருவூலம் போன்றிருந்தது மூத்தவரே. ஆனால் மூத்தவர் ஒருகணம்கூட எண்ணாமல் அவற்றில் பாதி யுதிஷ்டிரருக்கு உரியது என்று சொல்லிவிட்டார். விதுரரே சற்று திகைத்துவிட்டார். அரசரிடம் அவரே எண்ணிச் சொல்லுங்கள் அரசே, இப்பாரதவர்ஷம் கண்டதில் மிகப்பெரும் செல்வம் தாங்கள் அளிக்கவிருப்பது என்றார். அவர்களுக்குரியது அவர்களுக்கே என்று சொல்லி அரசர் கையசைத்தார். விதுரர் கைகூப்பினார்” என்றான் துச்சாதனன்.
கதைசொல்லும் குழந்தைகள் போல அவன் விழிகள் விரிந்திருந்தன. “ஆனால் அச்செல்வத்தை எடுத்து பெருமுற்றத்தில் நிறுத்தத் தொடங்கியபோது தம்பி துச்சலன் நினைவிழந்து விழுந்துவிட்டான்” என அவன் அகஎழுச்சியுடன் சொன்னான். “வைரக்கற்கள் அடங்கிய ஆமாடப்பெட்டிகளே ஆயிரத்திற்கும் மேல். பொற்குவியல், பவழங்கள், முத்துக்கள் என பெட்டிபெட்டியாக. அரிய வைரங்கள் பதிக்கப்பட்ட உடைவாள் பிடிகளே பல்லாயிரம். படுத்திருக்கும் விண்ணவனின் ஒரு பெருஞ்சிலை. அதில் பதிக்கப்பட்டுள்ள வைரங்கள் அஸ்தினபுரியின் மதிப்பைவிட மிகை என்றார் மணிநோக்கர்.” துச்சாதனன் குரலைத்தாழ்த்தி “செல்வம் விழிகளை நிறைக்கும்போது ஏன் அவ்வளவு அச்சம் எழுகிறது மூத்தவரே?” என்றான்.
கர்ணன் “செல்வம் நம்மை பாதுகாக்கும். பெருஞ்செல்வத்தை நாம் பாதுகாக்க வேண்டும். அதனால்தான்” என்றான். “உண்மை உண்மை” என்று தொடையில் தட்டி துச்சாதனன் கூவினான். “அத்தனை செல்வத்தை பார்க்கையில் அவை நம் அரண்மனைக்கு கீழா இருந்தன, இவற்றின் மேலா இத்தனை நாள் நிம்மதியாக விழி துயின்றோம் என்று எண்ணி உளம் பதைத்தேன். உண்மையில் என்ன நினைத்தேன் தெரியுமா? நல்லவேளை இவற்றில் பாதியை அங்கு கொடுக்கிறோம், அஸ்தினபுரியைவிட பெரியகோட்டையும் கருவூலங்களும் அங்கு உள்ளன என்றுதான்.”
“பொருட்சான்று என்பதனால் கௌரவர் நூற்றுவரும் அங்கு இருந்தோம். தங்களுக்கு அழைப்பு வந்ததை தாங்கள் தவிர்த்துவிட்டீர்கள்.” கர்ணன் “ஆம், அங்கு நீங்கள் நூற்றுவர் மட்டுமே இருக்கவேண்டும் என்று நான் எண்ணினேன்” என்றான். “ஏன்?” என்றான் துச்சாதனன். “அது அவ்வாறுதான்” என்றான் கர்ணன். மேலே அதை எண்ணாமல் அவன் “ஆனால் எங்களில் நான்கு பேர் மட்டுமே அதை செல்வமென பார்த்தோம். மற்ற அனைவருக்கும் அவை விளையாட்டுப் பொருட்களாகவே தெரிந்தன” என்றான்.
அவனே மகிழ்ந்து சிரித்து “வாளற்ற உடைவாட்பிடிகளை எடுத்து ஒருவரோடொருவர் போர் புரிந்தார்கள். வைரங்கள் பதிக்கப்பட்ட கிண்ணங்களை மணிமுடிகளென தலையில் சூடிக்கொண்டார்கள். அருமணிகள் மின்னும் பொற்கவசங்களை எடுத்து தங்கள் பின்பக்கங்களில் அணிந்து கொண்டு தெருக்கூத்தர்களின் இளிவித்தை காட்டி நகைத்தனர். அவற்றின் மதிப்பு அவர்களுக்கு தெரியவே இல்லை” என்றான். கர்ணன் “அல்லது அவற்றின் மதிப்பு அவர்களுக்கு தெரிந்திருக்கிறது” என்றான்.
துச்சாதனன் அவன் எந்தப்பொருளில் அதை சொன்னான் என்பதை கண்களை சுருக்கி நோக்கிவிட்டு எண்ணி ஏதும் பிடிகிடைக்காமல் தலையை அசைத்து “அத்தனை பெருஞ்செல்வம் இதோ இந்தப்படகுகளில்தான் ஏற்றப்பட்டது. தேர்ந்தெடுத்த அமைச்சர்களும் ஏவலர்களும் மட்டுமே அன்று அம்முற்றத்தில் இருந்தனர். அத்தனை கண்களிலும் பாதாள தெய்வங்களை கண்டேன். அவர்கள் ஒவ்வொருவரும் அதன்பொருட்டு பெற்ற தாயை கொலை செய்வார்கள் என்று தோன்றியது. ஆம் மூத்தவரே, அவர்களில் எவரும் அதன்பின் பலநாட்கள் துயின்றிருக்க மாட்டார்கள்” என்றான்.
உடனே முகம் மாறி “ஏனெனில் நான் துயிலவில்லை” என்று துச்சாதனன் சிரித்தான். “மூத்தவர் என்னிடம் எனக்கு என்ன தேவையோ எடுத்துக்கொள்ளச் சொன்னார். எனக்கு எதற்கு அதெல்லாம்? நான் மூத்தவரின் அருகே நின்றிருப்பவன் அவ்வளவுதான்” என்றான். அவன் முகம் மீண்டும் கூர்மைகொண்டது. “அரண்மனைக்குச் சென்று கண்மூடினாலே அச்செல்வம்தான் எழுந்து வரும். ஆனால் உயிருள்ளவையாக, நண்டுகள், அட்டைகள், வண்டுகள், புழுக்கள், பூச்சிகள் போல… அருவருத்தும் அஞ்சியும் எழுந்து அமர்வேன். செல்வம் நம் கனவில் ஏன் இத்தனை அருவருப்புக்குரியதாக வருகிறது மூத்தவரே?”
கர்ணன் “ஏனெனில் விழித்திருக்கும்போது நாம் அவற்றை அவ்வளவு விரும்புகிறோம்” என்றான். “அதனாலா? நான் நெடுநேரம் ஏன் என்று எண்ணினேன்” என்றான் துச்சாதனன் அதை புரிந்துகொள்ளாமல். அறைக்குள் இருந்து “மூத்தவரே” என்று உரக்க அழைத்தபடி துச்சலன் அவர்களை நோக்கி வந்தான். “நாம் எப்படி இந்திரப்பிரஸ்தத்திற்கு செல்கிறோம்? கங்கையிலிருந்து யமுனைக்குள் சென்றுதானே?” “ஆம்” என்றான் கர்ணன். “அதைவிட்டால் வேறு வழி ஏதுமில்லை என்று நினைக்கிறேன்.”
அதிலிருந்த நகையாடலை உணராமல் “ஆம், நானும் அவ்வாறு நினைக்கிறேன். ஏனெனில் படகுகள் போவது நீர்வழியில் மட்டுமே” என்று துச்சலன் சொன்னான். கர்ணன் துச்சாதனனிடம் “என்ன ஒரு கூரிய பார்வை, அல்லவா?” என்றான். துச்சாதனன் பெருமிதத்துடன் “ஆம், அவன் எப்போதும் எண்ணி சொல் சூழக்கூடியவன்” என்றான். கர்ணன் வாய்விட்டு சிரித்துவிட்டான்.
துச்சலனுக்குப் பின்னால் வந்த துர்மதன் “நான் சொன்னேன், எதற்காக நாம் இத்தனை சுற்றி போக வேண்டும் என்று. நமது புரவிப்படைகளை வழியிலேயே சுப்ரவனம் அல்லது பீதசிருங்கம் போன்ற துறைநகர்களில் இறக்கி குறுக்காக கடந்தால் மிக எளிதாக இந்திரப்பிரஸ்தத்திற்கு சென்றுவிட முடியுமே!” என்றான். கர்ணன் “முடியும். ஆனால் ஏன் அதை செய்யவேண்டும்? படகுகள் வசதியாக செல்கின்றன அல்லவா?” என்றான். “ஆம், ஆனால் புரவிகள் படகுக்குள் நிலையழிந்திருக்கும். அவை மண்ணில் ஓட விரும்பும்” என்றான் துர்மதன்.
“இந்திரப்பிரஸ்தத்தில் அவற்றை ஓட விடுவோம்” என்று கர்ணன் சொன்னான். “அந்நகரே எப்படி இருக்கும் என்று நமக்குத் தெரியாது. மேலும் அங்கு யாதவத்திரள் கெழுமி இருக்கும். புரவிகள் எப்படி ஓட முடியும்?” என்றான். கர்ணன் பதிலுரைக்காமல் உரக்க நகைத்தான். துர்மதன் “நான் தங்களிடம் கேட்க விரும்புவது ஒன்றே. மூத்தவரே, நாம் இப்போது மகதத்தின் எல்லைக்குள் சென்று போகிறோம். இப்பெருஞ்செல்வத்தை மகதம் கொள்ளையடிக்கும் என்றால் என்ன ஆகும்?” என்று கேட்டான்.
“கொள்ளை அடிக்கும் என்றால் நன்று” என்றான் கர்ணன். “ஏன்?” என்று துச்சாதனன் கேட்டான். “மகதத்துடன் இருக்கும் அத்தனை அரசர்களையும் இது ஒன்றைச் சொல்லியே நம்முடன் சேர்த்துக் கொள்ள முடியும். பத்து நாளில் மகதத்தை தோற்கடித்து ஜராசந்தனை அஸ்தினபுரியின் தொழுவத்தில் கட்ட முடியும். இப்பெருஞ்செல்வத்தை துளிகூட அழியாது மீட்கவும் முடியும்” என்றான்.
அவர்கள் ஒருவரையொருவர் நோக்கிக்கொண்டனர். “மாமன்னர் யயாதியின் காலத்தில் அரசர்கள் பிறநிலங்கள் வழியாக பயணம் செய்யவும் சீர்செல்வங்கள் கொண்டு செல்வதற்குமான ஒப்பந்தம் சௌனக, தைத்திரிய குருகுலங்களைச்சேர்ந்த நூற்றெட்டு முனிவர்களின் முன்னிலையில் நடந்தது. அஸ்தினபுரி உட்பட ஐம்பத்தாறு நாட்டு மன்னர்களும் கோல்தாழ்த்தி அதை ஏற்றிருக்கிறார்கள். ஐம்பத்தாறு நாடுகளிலும் அரியணைக்குக் கீழ் உள்ள கற்பலகைகளில் அந்த ஒப்பந்தத்தின் அனைத்து வரிகளும் பொறிக்கப்பட்டிருக்கின்றன.”
“அதை எவரும் மீறமுடியாது மீறுபவர்களை பிற மன்னர்கள் படைகொண்டு தாக்கி வெல்லவேண்டுமென்பது நெறி. அந்நெறி அமைந்தபின்னரே இங்கே பெருவணிகம் தொடங்கியது” என்றான் கர்ணன். “இளையோனே, இந்த பாரதவர்ஷத்தில் எந்த தனிநாடும் வல்லமை கொண்டதல்ல. நட்புக்கூட்டுகள் வழியாகவே ஒவ்வொன்றும் வல்லமை கொள்கின்றன. வலுவான அறநிலைபாடின்றி நட்புக்கூட்டுகளை முன்கொண்டு செல்ல முடியாது”.
அவர்கள் ஒருவரையொருவர் நோக்கிக்கொண்டு “ஆம்” என்றனர். கர்ணன் துச்சாதனன் தோளைத்தட்டி “ஒன்று மட்டும் புரிந்துகொள்ளுங்கள். அறவோன் என்று இருப்பவனின் வல்லமை என்பது அவனுடன் இணைந்து நிற்கும் தோழர்கள்தான்” என்றான். “அப்படியென்றால் செல்வம்?” என்றான் துச்சலன். “செல்வமும் வல்லாண்மைவிருப்பும் கூட்டுகளை உருவாக்கும். அந்தக் கூட்டுகள் ஒவ்வொன்றுக்கும் உள்ளே தனிக்கணக்குகள் இருக்கும். செல்வத்தை பகிர்ந்துகொள்வதில் பூசல்கள் நிகழும். அந்தக் கூட்டு நீடிக்காது” என்று கர்ணன் சொன்னான். “இன்று அஸ்தினபுரியின் அரசர் இப்பெரும் செல்வத்தை இந்திரப்பிரஸ்தத்திற்கு அளிப்பதை நான் ஒப்புக்கொள்வதும் அந்த அறத்தின் பொருட்டே. இது சூதர் பாடலாகட்டும். நாடெங்கும் பாடப்படட்டும். ஒவ்வொரு அரசரும் இதை அறிவார்.”
“இளையோரே, இன்று நிகழும் போட்டி இதுவே. அறத்தின் துலாத்தட்டில் எவர்தட்டு தாழ்கிறது என்பது. இன்றுவரை யுதிஷ்டிரர் பேரறத்தான் என்று சூதர்களால் பாடி நிறுத்தப்பட்டார். இப்போது நமது தட்டுதாழ்ந்துள்ளது. முறையான அழைப்பின்றியே உறவுமுறைக் கொடிகளுடன் அரசர் கிளம்பியிருக்கிறார். நிகரற்ற பெருஞ்செல்வத்தை உடன்பிறந்தார் கொடையாக கொண்டுசென்று இந்திரப்பிரஸ்தத்திற்கு அளிக்கவும் உள்ளார். ஆட்டத்தில் இப்போது நாம் வென்றிருக்கிறோம்.”
துச்சாதனன் இழுபட்டுநின்ற பாய்வடத்தில் பின்பக்கம் சாய்ந்து அமர்ந்து “இக்கொடைக்குப்பின் இப்படி ஓர் நுண்கணிப்பு உள்ளதை நான் அறியவில்லை” என்றான். “அதை நானும் விதுரரும் அறிவோம். எங்கள் இருவரையும்விட நன்றாக கணிகரும் மாதுலர் சகுனியும் அறிவார்கள். இல்லையேல் அவர்கள் இக்கொடைக்கு ஒருபோதும் ஒப்புக் கொண்டிருக்கமாட்டார்கள்” என்றான் கர்ணன். “அறியாதவர் ஒருவர் உண்டென்றால் அது அஸ்தினபுரியின் அரசராகிய உங்கள் தமையன் மட்டுமே. அவர் மேலும் மேலும் தந்தையைப்போல் விழியற்றவராக ஆகிக்கொண்டிருக்கிறார்” என்றான்.
துர்மதன் உரக்க நகைத்து “ஆம், இதை நானே உணர்ந்தேன். அவரது உடலசைவுகள் தந்தையைப்போல் ஆகின்றன. முன்பெல்லாம் எங்களை பார்க்கையில் கண்களில் மட்டுமே கனிவு தெரியும். இப்போது எப்போது பார்த்தாலும் இளையவர்களை அள்ளி அணைத்துக்கொள்கிறார். தந்தையைப் போல தோள்களையும் புயங்களையும் தலையையும் தடவிப்பார்க்கிறார்” என்றான். துச்சலன் சற்று கவலையுடன் “அவருக்கு உண்மையிலேயே பார்வை குறைகிறதா மூத்தவரே?” என்றான். கர்ணன் உரக்க நகைத்து “சுவடிகளை அவையில்தானே படிக்கிறார்?” என்றான். “இல்லையே, சுவடிகளை பிறர்தானே படித்துக் காட்டுகிறார்கள்?” “அது அரசச்சுவடிகளை. மந்தண ஓலைச்சுருளை அவர்தானே படிக்கிறார்?” துர்மதன் “அவற்றை சுபாகுவோ சுஜாதனோதான் படிக்கிறார்கள்” என்றான்.
கர்ணன் செல்லச்சலிப்புடன் “அவர் எதைத்தான் படிக்கிறார்?” என்றான். “அவர் யவன மதுப்புட்டிகளின் மரமூடியின் தலையில் பித்தளை வில்லையில் எழுதிப் பொறித்திருக்கும் சிறிய எழுத்துக்களை மட்டும்தானே படிக்கிறார்? அதை நான் பார்த்தேன்” என்றான் துர்மதன். சிரித்தபடி “அவற்றைப் படிக்கும் மொழியறிவு அவருக்குண்டா?” என்றான் கர்ணன்.
“இல்லை. ஆனால் அவற்றில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்களை தெரிந்த எறும்புகளை அடையாளம் காண்பதுபோல் அவரால் காண முடியும். அவருக்குத் தெரிந்த எழுத்துக்கள் இருக்கிறதா என்று உறுதி செய்தபின்னரே அவர் அதை அருந்துவார்” என்றான் துர்மதன். “எழுத்துக்கள் இல்லையேல் அருந்தமாட்டார் என்றில்லை” என்றான் துச்சாதனன். “அவ்வெழுத்துக்கள் முறையாக இல்லாத புட்டிகளை இறுதியாக அருந்துவார்.”
கர்ணன் சிரித்தபடி “நன்று” என்றான். அறைக்குள் இருந்து சுஜாதன் வெளிவந்து “மூத்தவர்களே, இங்கு நின்று பேசிக் கொண்டிருக்கிறீர்களா?” என்றபடி அருகே வந்தான். “உள்ளே மூத்தவர் தங்களை தேடினார்”. “என்னையா?” என்றபடி கர்ணன் எழுந்தான். “ஆம், கிளர்ச்சியடைந்திருந்தார்… தாங்கள் தனியாக வரவேண்டுமென விழைகிறார்.” கர்ணன் துச்சாதனனின் தோளை தட்டிவிட்டு மேலாடையை சீரமைத்துக்கொண்டு நடந்தான்.
மரப்படிகளில் இறங்கி உள்ளறைக்கு சென்றான் கர்ணன். அறைக்குள் பீடத்தில் அமர்ந்திருந்த துரியோதனனின் கையில் பொற்செதுக்குகள் பதிக்கப்பட்ட கொம்புறை கொண்ட குறுவாள் ஒன்று இருந்தது. “கதவை மூடுக மூத்தவரே!” என்றான். கர்ணன் கதவை மூடிவிட்டு அமர்ந்தான். துரியோதனன் குழந்தைகளுக்குரிய பரபரப்புடன் இருப்பதைப்போல் தோன்றியது. அந்தக்குறுவாளை நீட்டி “இதை பார்த்திருக்கிறீர்களா?” என்றான்.
கர்ணன் அதைவாங்கி நோக்கினான். அதிலிருந்த காகமுத்திரையை நோக்கியபின் துரியோதனனிடம் “காகம் எவருடைய இலச்சினை?” என்றான். “சுக்ராச்சாரியரின் இலச்சினை” என்றான் துரியோதனன். கர்ணன் மெல்லிய மெய்ப்புகொண்டான். அதை தூக்கி கண்ணருகே பிடித்து “முதலரசியின் குறுவாள்” என்றான். “ஆம், நம் கருவூலத்திலிருந்து இதை எடுத்தேன்…” கர்ணன் தன்னுள் எழுந்த சிறு ஐயத்துடன் “எதற்காக?” என்றான்.
துரியோதனன் கிளர்ச்சியுடன் சென்று அருகே இருந்த ஆமாடப்பெட்டியை திறந்தான். “நீங்கள் இதை பார்த்திருக்க வாய்ப்பில்லை…” என்றபடி விலகினான். அவன் திறக்கும்போதே கர்ணனின் உள்ளம் மின்னியிருந்தது. உள்ளே இருந்த மணிமுடியை நோக்கியபடி அவன் அசையாமல் நின்றான். “தேவயானியின் மணிமுடி” என்றான் துரியோதனன். “பாரதவர்ஷத்தின் முதல் சக்ரவர்த்தினி அணிந்து அரியணையமர்ந்தது…“
எட்டு திருமகள்கள் பொறிக்கப்பட்ட எட்டு இதழ்கள் கொண்ட தாமரைமலர் வடிவில் இருந்தது அந்த முடி. அவ்விதழ்களில் வைரங்கள் செறிந்திருந்தன. முதல்திரு, மகவுத்திரு, கல்வித்திரு, பொருள்திரு, கூலத்திரு, கரித்திரு, மறத்திரு, வெற்றித்திரு. எட்டென எழுந்தவள். எண்ணும் சொல்லில் எழுந்தவள். மலர்ச்செண்டா, வெட்டி எடுத்து தாலத்தில் வைத்த குருதி துடிக்கும் நெஞ்சக்குலையா?
“மன்வந்தரங்களின் தலைவரன பிரியவிரதரின் புதல்வி ஊர்ஜஸ்வதியின் கருவில் அசுரகுரு சுக்ரருக்குப் பிறந்த தேவயானி எங்கள் முதற்றாதை யயாதியின் அரசியாக வந்து அரசமர்ந்தபோது அசுரசிற்பி மயன் அனலில் எழுந்து அமைத்தளித்தது இம்மணிமுடி என்கிறார்கள். மார்கழி முழுநிலவில் மகம்நாளில் முதல்பேரரசி இதைச்சூடி கோலேந்தி குடைநிழல் அமர்ந்தாள். இன்றும் அந்நாளை அஸ்தினபுரியின் தென்மேற்குமூலையை ஆளும் கலையமர்கன்னி ஆலயத்தில் பெருங்கொடைநாளென கொண்டாடுகிறோம்” என்றான் துரியோதனன்.
கர்ணன் விழியேயென அதில் நட்டு நின்றான். ஒரு சொல்கூட இல்லாமல் சித்தம் ஒழிந்துகிடந்தது. “அமைச்சர்கள் கலவறைப் பகுப்பின்போது இதை எடுத்து மேலே வைத்தனர். இதை பார்த்தகணம் என் உடல் மெய்ப்புகொண்டது. இதை அவள் தலையில் பார்த்துவிட்டேன்” என்றான் துரியோதனன். “அவளுக்காகவே அமைந்தது போலிருந்தது. மூத்தவரே, வேறெவரும் இப்புவியில் இதை இன்று சூடத்தகுதிகொண்டவரல்ல.”
“ஆனால்…” எனச் சொல்லி உலர்ந்த உதடுகளை ஈரப்படுத்திக்கொண்டான் கர்ணன். “விதுரரிடமோ பிறஎவரிடமோ நான் சொல்லவில்லை. நானே சென்று கருவூலத்தைத் திறந்து இதை எடுத்து பெட்டிக்குள் வைக்கும்படி ஆணையிட்டேன். கிளம்பும்போது என்னுடன் இதை எடுத்துக்கொண்டேன். தேவயானியின் மணிமுடியை இனி அவள் அணியட்டும். மண்ணில் முதன்மைநகரின் அரியணையில் அமர்ந்து ஆளட்டும்.”
முகம் மலர்ந்திருக்க துரியோதனன் அம்மணிமுடியை சுட்டிக்காட்டினான். “அதன் மணிகளை பாருங்கள்! முதலில் அவைநிறமற்ற தளிர்களாகத் தெரிந்தன. இச்செவ்வொளிபட்டதும் அரளிமலர்மொக்குகள் போல செந்நிறத்துளிகளாயின. . பின்னர் குருதித்துளிகளாக ஒளிவிடத்தொடங்கின. சற்றுநேரத்தில் அனலென சுடர்வதை பார்க்கலாம். தொட்டால் சுடுமென்றும் வைத்தபீடம் பற்றி எரியுமென்றும் தோன்றும்.”
“ஆம்” என்றான் கர்ணன். பேழையை மூடிவிட்டு துரியோதனன் வந்து அமர்ந்தான். “அஸ்தினபுரி அவளுக்கு அளிக்கவிருக்கும் பரிசு இதுதான். இளைய யாதவனோ பாஞ்சாலனோ அளிக்கவிருக்கும் எப்பரிசும் இதற்கு நிகரல்ல.” கர்ணன் பெருமூச்சுவிட்டான். துரியோதனன் கிளர்ச்சியால் உடைந்த குரலில் “மூத்தவராக நீங்கள் அவைஎழுந்து நின்று அறிவியுங்கள். இதோ அஸ்தினபுரியின் கொடை என. இதை நான் எடுத்து உங்கள் கைகளில் அளிக்கிறேன். அவள் அணிந்து ஆளும் முடி உங்கள் கைகளால் அமையட்டும்” என்றான்.
“என்ன சொல்கிறாய் மூடா?” என்றான் கர்ணன் மிகவும் தாழ்ந்த குரலில். “மூடா! மூடா!” அவன் தலைதாழ்த்தி மண்ணை நோக்கி “நான் உங்களை அறிவேன் மூத்தவரே…” என்றான். “மூடா! மூடா!” என்றான் கர்ணன். “ஆம், மூடனே நான்…” அவன் தொண்டை இடற கைகளை அசைத்தான். “ஆனால் நான் அறிவேன்.” கர்ணன் “இல்லை… இதை அணிபவள் பாரதவர்ஷத்திற்கே அரசியாகவேண்டும். இளையோனே, உன் கனவுகளை நான் அறிவேன்” என்றான்.
“எந்தக்கனவும் தேவையில்லை” என்றான் துரியோதனன். “வென்று செல்லுங்கள் மூத்தவரே. அந்த வீண்சிறுக்கி முன் நிமிர்ந்து நில்லுங்கள். இது அன்னை பிருதை அணிந்த முடி. இதை உங்கள் கொடையாக…” அவன் இருகைகளையும் விரித்து உடனே எழுந்து நின்றான். ”என்னால் சொல்லமுடியவில்லை… நான் எளியவன். தெய்வங்களே, மூதாதையரே, நான் என்ன சொல்வேன்!”
“அங்கே உன் மாதுலர் ஒருவர் அமர்ந்திருக்கிறார் இளையோனே. அவரது கனவுக்கு உன் வயதளவே மூப்பு. கணம்கணமென பகடையுருட்டி ஊழ்நோக்கி அமர்ந்திருக்கிறார்.” துரியோதனன் உடைந்து கண்கள் நிறைய விரல்களால் அழுத்திக்கொண்டான். “ஆம்” என்றான். “அவருக்கு நான் மறுபிறவியில் கடன் தீர்க்கிறேன். அவர் மைந்தனாகப்பிறந்து நீரளிக்கிறேன். இப்பிறவியில் ஒருகடன் மட்டுமே.”
கர்ணன் மேலும் ஏதோ சொல்ல எண்ணி வாயெடுத்தான். சொல்லின்றி தத்தளித்து தன்னுள் விழுந்தான். அந்தக்கணம் அவர்களை சூழ்ந்துகொண்டது. வெளியே கங்கை படகை அறைந்தது. தொலைதூரத்தில் காற்று மரங்களை சீவி பெருகியோடியது. மிக அருகே ஒரு படகு சூதர்பாடலொன்றுடன் கடந்து சென்றது. கர்ணன் எழுந்து ஒன்றும் சொல்லாமல் நடந்து படிகளில் ஏறி மேலே சென்றான்.