தமிழின் முக்கியமான சிறிய நாவல்களில் ஒன்று சாயாவனம். சா.கந்தசாமியால் நாற்பதாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இந்நநாவலை ஒரு குறுநாவல் என்றே சொல்லலாம். சூழியல் கொள்கைகள் பிரபலமாகாதிருந்த காலத்தில் ஒரு காட்டின் அழிவை மட்டும் சுருக்கமான நேரடியான மொழியில் சொன்ன நாவல் இது. அந்த அடர்த்தியினாலேயே குறியீட்டுப்பொருள் கொண்டு பலவகையான அழிவுகளையும் இழப்புகளையும் காட்டுவதாக ஆகியது.
தமிழின் நவீனத்துவ இலக்கியத்தின் உச்சப்படைப்புகளில் ஒன்றாகச் சொல்லப்படவேண்டியது. உணர்ச்சிகரம் அற்றமொழிநடை. புறவயமான சித்தரிப்பு. செறிவான கதைநகர்வு. குறியீட்டுத்தளத்தில் மட்டுமே அனைத்து அர்த்தவிரிவையும் வைத்திருக்கும் அமைதி
நாற்பதாண்டுகளுக்கு முன் ‘கதையில் இருந்து கதையை வெளியேற்றுவதே தன் சவால்’ என்று அறிவித்தபடி தமிழிலக்கியத்திற்குள் புகுந்தவர் சா.கந்தசாமி. நவீனத்துவத்தின் உச்சகட்ட அறைகூவல் அது.
வெறும் நிகழ்வுகளே இலக்கியத்திற்குப் போதுமானது, கட்டுக்கோப்பான கதை என்பது ஒரு அறிவுசார்ந்த உருவாக்கம், அதில் வாழ்கைக்கு அர்த்தத்தையும் மையத்தையும் கண்டுபிடிக்கும் முயற்சி உள்ளது. வாழ்க்கைக்கு அப்படி ஓர் அர்த்தமும் மையமும் இல்லை என்று கந்தசாமி சொன்னார்
அவரது புனைவுலகம் அந்த தரிசனத்தின் வெளிப்பாடாகவே உள்ளது. மிக எளிய நேரடியான மொழியில் எழுதப்பட்ட அவரது கதைகள் பெருவாரியான வாசகர்களுக்குரியவை அல்ல. அவை பெரும்பாலும் மேல்தளத்தில் மிகத்தட்டையானவை. வாசகன் வாழ்க்கையைப்போலவே அந்நிகழ்வுத்தொகுதியையும் தன் சொந்த கற்பனையால் அர்த்தப்படுத்திக்கொள்ளவேண்டும் என எதிர்பார்ப்பவை
மோனிக்கா மாறன் எழுதிய விமர்சனக்குறிப்பு ஆம்னிபஸ் இணையதளத்தில்