வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 43

பகுதி ஐந்து : பன்னிரண்டாவது பகடை – 3

சகுனியின் அறைவாயிலில் நின்ற காவலன் கர்ணனை பார்த்ததும் தலைவணங்கி “அறிவிக்கிறேன்” என்றான். கர்ணன் “கணிகர் உள்ளே இருக்கிறாரா?” என்றான். புற்றிலிருந்து எறும்பு ஒன்று எட்டி நோக்கி உள்ளே செல்வதுபோல ஒரு மிகச்சிறிய அசைவு நிகழ்ந்த கண்களுடன் அவன் “ஆம்” என்றான். அவன் உள்ளே செல்ல கர்ணன் தன் உடைகளை சீரமைத்து உடலை நிமிர்த்து காத்து நின்றான்.

காவலன் கதவைத்திறந்து “வருக அரசே!” என்றான். உள்ளே சகுனி தன் வழக்கமான சாய்வுப்பீடத்தில் அமர்ந்து அருகே மென்பீடத்தில் புண்பட்ட காலை நீட்டியிருந்தார். அவருக்கு முன்பு வட்டமான குறும்பீடத்தில் பகடைக்களம் விரிந்திருக்க அதில் அவர் இறுதியாக நகர்த்திய காய்களுடன் ஊழின் அடுத்த கணம் காத்திருந்தது. அவர் முன்னால் சிறியபீடத்தில் அமர்ந்திருந்த கணிகரின் தலை மட்டுமே களத்தின் மேல் தெரிந்தது, காய்களில் ஒன்றைப்போல. அது விழிசரித்து ஆட்டத்தின் அமைவில் மூழ்கி பிறிதிலாதிருந்தது.

கையிலிருந்த பகடைக்காய்களை மெல்ல உருட்டியபடி சகுனி புன்னகையுடன் “வருக அங்க நாட்டரசே” என்றார். கர்ணன் தலைவணங்கி கணிகரைப்பார்த்து புன்னகைத்தபடி வந்து சகுனி காட்டிய பீடத்தில் அமர்ந்தான். “இந்தப் பீடம் தங்களுக்காகவே போடப்பட்டது. தாங்கள் மட்டும்தான் இதில் இயல்பாக அமரமுடியும்” என்றபின் நகைத்து “பிற பீடங்களைவிட இருமடங்கு உயரமாக அமைக்கச் சொன்னேன்” என்றார். கர்ணன் புன்னகைத்தான். சகுனி பகடைகளை உருட்ட அவை கணத்தில் மெல்ல புரண்டு தயங்கி பின் அமைந்து எண்காட்டி நின்றன. சகுனி அவற்றை புருவம் சுளித்து கூர்ந்து நோக்கிவிட்டு கணிகரிடம் விழியசைத்தார்.

கணிகர் அமைவதற்குள்ளாகவே எண்களை பார்த்துவிட்டிருந்தார். உதடுகளை இறுக்கியபடி சுட்டுவிரலால் காய்களை தொட்டுத்தொட்டுச் சென்று புரவி ஒன்றைத் தூக்கி ஒரு வேல்வீரனைத்தட்டிவிட்டு அங்கே வைத்தார். சகுனி புன்னகைத்தபடி “ஆம்” என்றார். கணிகர் “தன்னந்தனியவன்” என்றார். சகுனி “மொத்தப்படையின் விசையும் தனியொருவனின்மீது குவியும் கணம்” என்றார். “ஊழின் திருகுகுடுமி… அவன் இன்னமும் அதை அறியவில்லை.” கணிகர் நகைத்து “அவர்கள் எப்போதுமே அறிவதில்லை” என்றார்.

43

பகடையை எடுத்து உருட்டும்படி கணிகரிடம் விழிகளால் சகுனி சொன்னார். கணிகர் பகடையை ஒவ்வொன்றாக எடுத்து தன் கைகளில் அழுத்தி அவற்றை புரட்டினார். அவர் கைகள் அசைவற்றிருக்க அவை உயிருள்ளவை போல அங்கே புரண்டன. பின்பு அவர் கண்களை மூடி வேள்வியில் அவியிடும் படையலன் என ஊழ்கநிலைகொண்டு அதை உருட்டினார். மெல்லிய நகைப்பொலியுடன் விழுந்த பகடைகள் அசைவற்றபோது சகுனி ஒருகணம் அவற்றை பார்த்தபின் யானை ஒன்றை முன்னகர்த்தி இரு புரவிகளை அகற்றினார்.

கணிகர் “நன்று நன்று” என்றார். “ஏன்?” என்றார் சகுனி. “இன்னும் பெரிய அறைகூவல் ஒன்றை நோக்கி சென்றிருக்கிறோம்” என்றார் கணிகர். “தொடர்வோம்” என்றபின் “பார்த்துக் கொள்ளுங்கள்” என்று சகுனி சொல்லி ஏவலனை நோக்கி களப்பலகையை எடுத்துச்செல்லும்படி கைகாட்டினார். ஏவலன் வந்து பகடைக்காய்களை அள்ளி ஆமையோட்டுப் பெட்டி ஒன்றுக்குள் போட்டு பகடைக்களத்தை தூக்கி அகற்றினான்.

கர்ணன் “முடித்துவிட்டீர்களா?” என்றான். “இல்லை. இந்த ஆடல் சென்ற பன்னிரண்டு நாட்களாக தொடர்கிறது” என்றார் சகுனி. “களம் கலைத்துவிட்டீர்களே?” என்றான் கர்ணன். “கலைக்கவில்லை. அதன் கடைக்கணத்தை இருவரும் நெஞ்சில் ஆழ நிறுத்திக்கொண்டோம். அடுத்த கணத்தை எப்போது வேண்டுமானாலும் இப்புள்ளியிலிருந்து தொடங்கி முன்னெடுக்க முடியும்.” கர்ணன் புன்னகைத்து “அரிய நினைவுத்திறன்” என்றான். சகுனி “இது நினைவுத்திறன் அல்ல இளையோனே. சித்திரத்திறன்” என்றார்.

கணிகர் மெல்ல முனகியபடி உடலை நீட்டினார். சகுனி “மாமன்னர் பிரதீபர் தன் படைகளை களத்தில் நிறுத்தியபின் மூங்கிலில் ஏறி ஒரு கணம் நோக்கிவிட்டு இறங்கிவிடுவார். பின்னர் மொத்தப்படையும் எங்கு எவ்வண்ணம் அமைந்திருந்தது என்பதை அப்போர் முடியும்வரை நினைவிலிருந்தே அவரால் சொல்ல முடியும் என்பார்கள். படைசூழ்வதில் அது ஓர் உச்சம். அரசுசூழ்வதிலும் அவ்வண்ணம் உண்டு. ஓர் அரசன் தன் நாட்டின் நிலமனைத்தையும், அனைத்து ஊர்களையும், கிளைவிரிவுப்பின்னல்களுடன் நதிகளையும், அத்தனை முடிகளுடன் மலைகளையும் முழுமையாக எக்கணமும் நினைவிலிருந்து விரித்தெடுக்கக் கூடியவனாக இருக்கவேண்டும். ஒரு பெயர் சொல்லப்பட்டதுமே தன் உள்ளத்தால் அங்கு சென்று நின்றுவிடக்கூடியவன் சிறந்த ஆட்சியாளன். நமக்கு அவ்வண்ணமொரு ஆட்சியாளன் தேவை” என்றார்.

“பிதாமகர் பீஷ்மர்?” என்றான் கர்ணன். “அவருக்கு எந்த நிலமும் நினைவில் இல்லை” என்று கணிகர் சொன்னார். “ஏனென்றால் அவர் நிலங்களை ஆளவில்லை. தன்னுள் இருக்கும் நெறிகளையே ஆள்கிறார்.” சகுனி “ஆம், அவர் காட்டை மரங்களாக ,மலைகளை பாறைகளாக, மக்களை மானுடராக பார்ப்பவர். அவர்கள் குலமூத்தோராக முடியும். முடிகொண்டு நாடாளமுடியாது” என்றார். கணிகர் நகைத்தார். அவர் கனைத்தாரென அதன்பின்னர் தோன்றியது. அவன் கணிகரை ஒருகணம் நோக்கியபின் சகுனிமேல் விழிகளை நட்டுக்கொண்டான்.

அவரது விழிகளை பார்ப்பது எப்போதுமே அவனுக்கு அச்சத்தை ஊட்டியது. அவற்றில் ஒரு நகைப்பு இருந்து கொண்டிருப்பதுபோல. நச்சரவின் கண்களில் பொருளற்ற விழிப்பு. யானையின் கண்களில் நான் பிறிதொன்று என்னும் அறைகூவல். புலியின் விழிகளில் விழியின்மை எனும் ஒளி. பூனையின் விழிகளில் அறியாத ஒன்றுக்குள் நுழைவதற்கான நீள்வாயில். இவையோ வௌவாலின் விழிகள். அணுக்கத்தில் பதைப்பவை. இரவை அறிந்ததன் ஆணவம் கொண்டவை. இரவில் தெரியும் வௌவாலின் கண்கள் பகலையும் அறிந்த நகைப்பு நிறைந்தவை.

கணிகர் மெல்லிய குரலில் “அஸ்தினபுரிக்கு இன்றிருக்கும் குறைபாடே அதுதான்” என்றார். “இந்த நாட்டை ஒருகணம் விழிமூடி முழுமையாக நோக்கும் ஆட்சியாளன் மாமன்னர் பிரதீபருக்குப்பின் அமையவில்லை. ஆனால் மகதத்தின் பேரரசர் ஜராசந்தர் ஒருபோதும் வரைபடத்தை விரிப்பதில்லை என்கிறார்கள்.” கர்ணன் “பீஷ்மர் இடைவிடாது இந்நாட்டில் அலைந்து கொண்டிருப்பவர்” என்றான். சகுனி “அவர் அலைவது இந்த நாடு மேல் உள்ள விழைவினால் அல்ல. அவர் இந்த நாட்டு எல்லைக்குள்ளும் இருப்பதில்லை. அவருக்குத் தேவை அவரது தனிமையைச் சூழ்ந்திருக்கும் ஓர் அறியாநிலம். எங்கிருக்கிறார்? அடர்காட்டில் அல்லது அவரை எவரென்றே அறியாத மானுடரின் நடுவே” என்றார்.

மெல்ல உடலை அசைத்து முகம்சுளித்து இதழ்கள் வளைய முனகியபின் கணிகர் சொன்னார் “சிறந்த அரசர்கள் எப்போதும் அகத்தில் தனியர்கள். ஆனால் எந்நிலையிலும் மானுடரை விரும்புபவர்கள். சுற்றம்சூழ அவைவீற்றிருக்கையில் உளம் மகிழ்பவர்கள்.” மேலுமொரு முனகலுடன் “ஒருநாளும் அவையில் மகிழ்ந்திருக்கும் பீஷ்மரை நாம் கண்டதில்லை. அவைகளில் ஊழ்கத்திலென விழிமூடி மெலிந்த நீளுடல் நீட்டி அமர்ந்திருக்கிறார். காடுகளுக்குமேல் எழுந்த மலைமுடிபோல. அவர் அவையை வெறுக்கிறார்” என்றார்.

“ஆம், மானுடரை விரும்புபவர்களையே மானுடரும் விரும்புவர். வேடமாகவியின் முதற்பெருங்காவியத்தில் ராகவராமனைப் பார்த்ததும் மக்களின் உள்ளங்கள் கதிர்கண்ட மலர்கள்போல் விரிந்தன என்று ஒருவரி வருகிறது. எவரொருவரை நினைத்தாலே மக்களின் உள்ளம் விரிகிறதோ அவரே ஆட்சியாளர்.” கர்ணனின் உள்ளே மெல்லிய புன்னகை ஒன்று வந்தது. அவர்கள் இருவரிடமும் இருந்த அந்த ஒருமையை உடைக்கவேண்டும் என்று ஓர் உந்துதல் எழுந்தது. “ஆம், அப்படிப்பார்த்தால் இன்று அனைவரும் அதற்கெனச் சுட்டுவது துவாரகையின் தலைவரைத்தான்” என்றான்.

சகுனியின் விழிகளில் ஓநாய் வந்து சென்றது. கணிகர் மெல்ல உடல் குலுங்க நகைத்து “உண்மை. ஆனால் துவாரகை அவரைத் தனது தலைவராக எண்ணுகிறது. அவர் துவாரகையை தன் நிலமாக எண்ணவில்லை. அவரது பகடைக்களம் இப்பாரதவர்ஷமேதான். நீங்களெவருமறியாத ஒன்றை நானறிவேன், அவர் இப்புவியின் தலைவர்” என்றார். கர்ணன் அவர் விழிகளை கூர்ந்து நோக்கினான். முதல் முறையாக அதில் ஒரு கனிவு தென்படுவதாக தோன்றியது. நேரடியாகவே அவரை நோக்கி “துவாரகையின் தலைவரைக் குறித்து இத்தனை பெருமிதம் தங்களுக்கு இருக்கக்கூடும் என்று நான் எண்ணவே இல்லை கணிகரே” என்றான்.

“எவர் முன்னிலையிலாவது நான் கனியக்கூடுமென்றால் அது அவர்தான்” என்றார் கணிகர். “ஏனெனில் இங்கு நான் இருக்கும் பகடைக்களத்தின் மறுஎல்லையில் இருப்பவர் அவர் மட்டுமே.” அவர் சொல்வதை புரிந்துகொள்ளாதவனாக கர்ணன் வெற்றுநோக்குடன் அமர்ந்திருந்தான். அது போகட்டும் என்பது போல அவர் கைவீசி “அஸ்தினபுரியின் மன்னர்களைப்பற்றி சொல்லிக் கொண்டிருந்தேன். சலிப்பை வெளிக்காட்டாத உடலுடன் அரியணையமர்ந்த ஒருவரை நான் பார்த்ததில்லை” என்றார்.

கர்ணன் “இந்திரப்பிரஸ்தம் சென்று யுதிஷ்டிரரை பார்க்கலாமே” என்றான். கணிகர் “இங்கு அவையமர்ந்திருக்கையில் அவரை நான் கூர்ந்து நோக்கியுள்ளேன். தான் ஒரு வேள்விக்களத்தின் அருகே அவியிட அமர்ந்திருப்பதுபோல் தோற்றமளிப்பார்” என்றார். இதழ்கள் வளைய “பகடைக்களத்தின் அருகிருப்பதுபோல் தோற்றமளிக்க வேண்டுமா?” என்றான் கர்ணன். “இல்லை. தன் குழந்தைகளை ஆடவிட்டு நோக்கியிருக்கும் அன்னைபோல் அமர்ந்திருக்க வேண்டும்” என்றார் கணிகர். “அவருக்கு இந்திரப்பிரஸ்தம் உள்ளத்தில் திகழும் என்றால் அவ்வண்ணம் அரண்மனைக்குள் ஒடுங்கி வாழமாட்டார். அவையிலெழும் சொல் கேட்டு மட்டும் ஆளமாட்டார், நெறிகளுக்காக ஒருபோதும் நூல்களை நாடவும் மாட்டார்.”

“நெறிநூல்களின்படி ஆளவேண்டும் என்பதுதான் முன்னோர் மரபு” என்றான் கர்ணன். “ஆம், நெறிநூல்களை இளமையிலேயே கற்று நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும். ஆனால் அவற்றின் அனைத்து விளக்கங்களையும் வாழ்வில் இருந்தே பெறவேண்டும். நெறிநூல்களை வைத்து வாழ்க்கையை விளக்கத்தொடங்குபவன் காற்றுவெளியை நாழியால் அளக்கத்தொடங்குகிறான்” என்றபின் உரக்க நகைத்து “அதன்பின் இருப்பது இத்தகையதோர் பகடைக்களம்தான். பல்லாயிரம் காய்களும் பலகோடி தகவுகளும் கொண்ட ஒன்று! பருப்பொருளில் எழுந்த முடிவிலி!” என்றார்.

சகுனி உடலை அசைத்து “தாங்களும் நல்ல ஆட்சியாளர் அல்ல அங்கரே” என்றார். “ஆம், அதை நான் உணர்ந்தேன். என்னால் ஆட்சி செய்ய இயலவில்லை” என்றான் கர்ணன். “பொதுவாக வீரர்கள் ஆட்சியாளர்களல்ல” என்று சகுனி சொன்னார். “நல்ல ஆட்சியாளர்களுக்கு பொறுப்பையும் உரிமையையும் அளித்து காக்கமுடியுமென்றால் அவர்கள் நல்லாட்சியை அளிக்கிறார்கள்.” கர்ணன் தலையசைத்தான். “அங்கரே, ஆட்சி என்பது ஒவ்வொருநாளும் கடலலையை எண்ணுவது போல. எங்கோ ஒரு கணத்தில் சலிப்பு வந்துவிட்டால் நாம் விலகிவிடுகிறோம்.”

“அதைத்தான் நானும் சொன்னேன்” என்று கணிகர் உடல் குலுக்கி நகைத்தார். “ஒவ்வொரு நாளும் மைந்தரை துயிலெழுப்பி உணவூட்டி நீராட்டி அணியணிவித்து துயிலவைக்கும் அன்னை வாழ்நாளெல்லாம் அதை செய்வாள். அவளுக்கு சலிப்பில்லை.” சகுனி அப்பேச்சை மாற்றும்படி கையசைத்துவிட்டு “தங்களை இங்கு வரச்சொன்னது ஒன்றை உணர்த்தும் பொருட்டே. இந்திரப்பிரஸ்தத்திலிருந்து அஸ்தினபுரிக்கு அழைப்பு வந்துள்ளது மகிழ்வுக்குரியது. உண்மையில் முறையான அழைப்பு வருமென்ற எண்ணமே எனக்கிருக்கவில்லை” என்றார்.

“அதெப்படி?” என்றான் கர்ணன். சகுனி “ஏனெனில் அவளுடைய வஞ்சம் அத்தகையது. இங்கிருந்து பாதிநாட்டை பெற்றுக்கொண்டு அவர்கள் சென்றது அவ்வெல்லைக்குள் அடங்குவதற்காக அல்ல. அவள் தென்னெரி. உண்ண உண்ண பெருகும் பசிகொண்டவள். பெருகப் பெருக மேலும் ஆற்றல் கொள்பவள். குருதிவிடாய்கொண்ட தெய்வங்களால் பேணப்படுபவள். எனவே தன்னை தானேயன்றி பிறிதொன்றால் அணைக்க முடியாதவள்” என்றார். கர்ணன் “ஆம், அவள் பெருவிழைவை நானும் அறிவேன்” என்றான்.

“இவ்விழவுக்கு நமக்கு அழைப்பு அனுப்பாது இருக்கவே அவள் எண்ணுவாள் என்று நான் கருதியிருந்தேன். ஆனால் கணிகர் மட்டும் அவ்வாறல்ல, அவள் அழைப்பு அனுப்புவாள் என்றே சொல்லிக்கொண்டிருந்தார்” என்றார் சகுனி. கர்ணன் “அழைப்பு அனுப்பாமலிருக்க யுதிஷ்டிரனால் இயலாது. உண்மையில் அவனே இங்கு வந்து பேரரசரின் தாள்பணிந்து விழவுக்கு அழைப்பான் என்று எண்ணினேன்” என்றான். “ஆம், அவன் அவ்வாறானவன். ஆனால் இன்று அங்கு யுதிஷ்டிரன் சொல் மீதுறு நிலையில் இல்லை” என்றார் சகுனி. “அழைப்பு அனுப்பாமலிருக்க இயலாது என்று பின்னர் நானும் தெளிந்தேன். ஏனெனில் அது பாரதவர்ஷமெங்கும் பேசப்படும் ஒன்றாக ஆகும். இந்நிலையில் அவள் அதை விரும்பமாட்டாள்.”

“சௌனகர் அனுப்பப்படுவார். அச்சிறுமையை எண்ணி நாம் சினந்து விழவை புறக்கணிப்போம். விதுரரை மட்டும் பரிசில்களுடன் அனுப்புவோம். பேரமைச்சரையே அனுப்பி அழைத்ததாகவும் நாம் நம் சிறுமையால் அவர்களை புறக்கணித்துவிட்டதாகவும் சூதர்களைக்கொண்டு பாடச்செய்வாள். என் கணிப்பு அதுவே. ஆனால் இளவரசன் பீமனே இங்கு வந்தது வியப்பூட்டியது. ஆனால் இன்று அமர்ந்து ஏன் அவன் வந்தான் என்று எண்ணும்போது ஒவ்வொரு வாயிலாக ஓசையின்றி திறக்கின்றது” சகுனி சொன்னார்.

கர்ணன் அவர் சொல்லப்போவதை எதிர்நோக்கி அமர்ந்திருந்தான். ஆனால் சகுனி கணிகர் பேசவேண்டுமென எதிர்பார்த்தார். மெல்ல கனைத்தபின் உடலை வலியுடன் அசைத்து அமர்ந்து “நேற்று அவையில் அரசர் சொன்னதை எண்ணிக்கொண்டிருந்தேன்” என்றார் கணிகர். கர்ணன் அகம் மலர்ந்து “ஆம், பேரரசரின் மைந்தரென அமர்ந்து அச்சொற்களை சொன்னார்” என்றான். “அவ்வுளவிரிவை நானும் போற்றுகிறேன். ஆனால் எந்த விரிவுக்குள்ளும் ஓர் உட்சுருங்கலை காணும் விதமாக நான் படைக்கப்பட்டுள்ளேன்” என்றார் கணிகர்.

“ஒரு சிறு பூமுள்ளை அவரது அகவிரலொன்று நெருடிக்கொண்டிருப்பதாக எனக்கு தோன்றியது. என் உளமயக்காக இருக்கலாம். ஆனால் அதை நான் நம்புகிறேன்.” கர்ணன் புருவங்கள் சுருங்க “என்ன?” என்றான். தன் எண்ணங்களை தானே ஒதுக்குவதுபோல கையசைத்த கணிகர் “துரியோதனர் என்ன செய்வார் என்று சொல்கிறேன். நிகரற்ற பெருஞ்செல்வத்துடன் இந்திரப்பிரஸ்தத்தின் ஒவ்வொரு விழியும் மலைத்து சொல்லிழக்கும் விதமாக நகர்நுழைவார். துவாரகைத் தலைவரும் பாஞ்சாலரும் பின்னுக்குத் தள்ளப்படும்படி இந்திரப்பிரஸ்தத்திற்கு பரிசில் அளிப்பார். ஐவரையும் நெஞ்சோடு தழுவி நிற்பார். அந்நகரின் தூண்டாமணி விளக்கருகே வாள்கொண்டு நின்று அதன் முதல் புரவலராக இருப்பதாக வஞ்சினமும் உரைப்பார்” என்றார்.

“ஆம்” என்றான் கர்ணன். மெல்லியகுரலில் “அதனூடாக பேருருக் கொண்டு அவள் முன் நிற்பார்” என்றார் கணிகர். அவர் சொல்ல வருவதென்ன என்று அக்கணத்தில் முழுமையாக புரிந்துகொண்ட கர்ணனின் உடல் மெய்ப்பு கொண்டது. அடுத்த கணமே அது அவ்வுண்மையால் அல்ல அத்தனை தொலைவுக்கு சென்று தொடும் அவர் உள்ளத்தின் தீமையை கண்டடைந்த அச்சத்தால் என்றுணர்ந்தான். மெல்லிய குரல் கொள்ளும் பெருவல்லமையை மறுகணம் எண்ணிக்கொண்டான்.

கணிகர் புன்னகைத்தபடி “அரசப்பெருநாகம் வால்வளைவை மட்டும் ஊன்றி ஐந்தடி உயரத்திற்கு படம் தூக்கும் என்பார்கள். அவ்வண்ணம் எழவேண்டுமென்றால் அதனுள் பெருவிசையுடன் சினமெழவேண்டும். அப்போது அது கடிக்கும் புண்ணில் தன்முழுநச்சையும் செலுத்தும். காடிளக்கி வரும் மதகளிற்றையே அது வீழ்த்திவிடும் என்கிறார்கள்” என்றார். “கடித்தபின் விசைகுறைய அது வாழைவெட்டுண்டு சரியும் ஒலியுடன் மண்ணை அறைந்து விழும்.”

கர்ணன் எரிச்சலுடன் “இதை எதற்கு சொல்கிறீர்கள்?” என்றான். “எதற்காகவும் அல்ல, தாங்கள் அவர் உடன் இருக்கவேண்டும்” என்றார். “நானா? எனக்கு அழைப்பே இல்லையே?” என்றான் கர்ணன். “எங்களுக்கும் தனியழைப்பில்லை” என்றார் சகுனி. “எந்தைக்கும் தமையன்களுக்கும் காந்தாரத்திற்கு அழைப்பு சென்றுள்ளது. அவ்வழைப்பை ஏற்று நானும் செல்வதாக இருக்கிறேன். அங்கநாட்டுக்கும் முறைமையழைப்பு சென்றிருக்கும். அதை ஏற்று தாங்கள் சென்றாகவேண்டும். அங்க நாட்டுக்கு அரசராக அல்ல, அஸ்தினபுரியின் அரசரின் அணுக்கராக.”

“ஏனென்றால் நான் மருகனுடன் முழுநேரமும் இருக்கமுடியாது. அவர் என்னிடம் நெஞ்சுபகிர்வதுமில்லை” என்றார் சகுனி. கர்ணன் “நான் சொல்வதை அரசர் முழுக்க ஏற்றுக் கொண்டாகவேண்டும் என்றில்லை” என்றான். “மெல்லுணர்ச்சிகளால் உளஎழுச்சி கொண்டிருக்கையில் பிறர் சொல்லை கேட்கும் வழக்கம் அவருக்கில்லை.” கணிகர் “அதற்காக அல்ல” என்றார். கர்ணன் அவரை நோக்க இதழ்விரிந்த புன்னகையுடன் “இன்னொரு பெருநாகம் அருகிருந்தாலே போதும்” என்றார்.

மீண்டும் அவர் சொல்வதென்ன என்பதை பல்லாயிரம்காதம் ஒருகணத்தில் பறந்து சென்று அறிந்த கர்ணன் மெய்ப்பு கொண்டான். அக்கணம் உடைவாளை உருவி அவர் தலையை வெட்டி எறிவதையே தன் உள்ளம் விரும்பும் என்பதை உணர்ந்தான். மறுகணமே அவர் விழிகளில் அவ்வெண்ணமும் அவருக்குத் தெரியும் என்று தெரிந்து தன்னை விலக்கிக் கொண்டான். சகுனி புன்னகையுடன் “ஆகவேதான் சொல்கிறேன் அங்கரே, தாங்களும் உடன் சென்றாக வேண்டும். தங்கள் சொல் அருகே இருந்தால் மட்டுமே அவர் நிலையழியாதிருப்பார். இல்லையேல் மாபெரும் அவைச்சிறுமை அவருக்கு காத்திருக்கிறது” என்றார்.

கர்ணன் “ஆனால்… நான் எப்படி?” என்றான். சகுனி “இனி தங்கள் முடிவு அது. தங்கள் தன்மதிப்புதான் முதன்மையானது என்றால் இதை தவிர்க்கலாம். தங்கள் உயிர்த்துணைவர் அவர். அங்கு அவர் புண்பட்டு மீளலாகாது என்று தோன்றினால் துணை செல்லுங்கள்” என்றார். கணிகர் சற்று முன்னால் வந்து “நான் என் நுண்ணுணர்வால் அறிகிறேன். இது குருகுலத்தின் வாழ்வையும் வீழ்வையும் வரையறுக்கும் பெருந்தருணம். விண்வாழும் அனைத்து தெய்வங்களும் காத்திருக்கும் கணம்” என்றார்.

கர்ணன் உளம் நடுங்க “எது?” என்றான். “நானறியேன். அங்கு நிகழ்வதை மானுடர் எவரும் முடிவெடுக்கப் போவதில்லை. ஒருவேளை துவாரகையின் தலைவர் அதை சற்று முன்னரோ பின்னரோ நகர்த்திவைக்க முடியும். அவரும்கூட அதை தவிர்க்கவோ கடக்கவோ முடியாது.” சகுனியை நோக்கிவிட்டு கணிகரிடம் “என்ன சொல்கிறீர்கள்?” என்றான் கர்ணன் எரிச்சலுடன். “இதற்கு மேல் சொல்ல என்னிடம் ஏதுமில்லை. அத்தருணம் தங்கள் துணை அஸ்தினபுரியின் அரசருக்கு அமையவேண்டும் என்பதற்கு அப்பால் எனக்கு சொல்லில்லை” என்றார் கணிகர்.

சகுனி “எண்ணிப்பாருங்கள் அங்கரே” என்றார். கர்ணன் நீள்மூச்சுடன் எழுந்து “ஆம், உங்கள் சொற்களை தலைகொள்கிறேன். என் தன்மதிப்பென்பது பெரிதல்ல. அங்கு துரியோதனர் தனித்து விடப்படக்கூடாது. உலகறியா இளையோனின் நம்பிக்கையும் கனிவும் கொண்ட உள்ளத்துடன் இங்கிருந்து அவர் செல்கிறார். நன்னோக்கத்துடன் எழுந்த நெஞ்சம்போல புண்படுவதற்கு எளிதானது பிறிதொன்று இல்லை என்று நானறிவேன். ஒன்றும் நிகழ்ந்துவிடக்கூடாது. நான் அவருடன் இருக்கிறேன்” என்றான்.

“நன்று” என்றார் சகுனி. கணிகரை நோக்கி தலைவணங்கிவிட்டு “நான் எழுகிறேன் காந்தாரரே” என கர்ணன் சகுனியை வணங்கினான். “நன்று சூழ்க!” என்றார் சகுனி. அவன் எழுந்து ஆடைதிருத்தி திரும்ப வாயில்நோக்கி நடக்கையில் தன்மேல் அவர்களின் நோக்குகள் பதிந்திருப்பதை உணர்ந்தான்.

அவன் இடைநாழிக்கு வந்ததும் சிவதர் தலைவணங்கி உடன்வந்தார். படியிறங்கி முற்றத்தை அடைந்து தேரில் ஏறிக்கொள்வதுவரை அவன் ஒன்றும் சொல்லவில்லை. அவன் அருகே தேரில் ஏறி அமர்ந்த சிவதர் அவன் பேசுவதற்காக காத்திருந்தார். அவன் ஒன்றும் சொல்லவில்லை என்று கண்டு “நன்றென ஒன்றும் நிகழாது என்று அறிவேன்” என்றார். கர்ணன் திரும்பி நோக்கி “ஆம்” என்றான். பின்பு “ஆனால் அவர் சொன்னது முழுக்க உண்மை” என்றான். சிவதர் “உண்மையை தீமைக்கான பெரும்படைக்கலமாக பயன்படுத்தலாம் என்று அறிந்தவர் கணிகர்” என்றார்.

கர்ணன் தொடையைத் தட்டி நகைத்து “ஆம், சரியாகச் சொன்னீர்கள்” என்றான். “என்ன சொன்னார்?” என்றார் சிவதர். “துரியோதனர் இந்திரப்பிரஸ்தத்திற்கு தன்னை விரித்து படம் காட்டியபடி செல்வார் என்று அவர் எதிர்பார்க்கிறார்.” “அது எவரும் அறிந்ததுதானே?” என்றார் சிவதர். “அதற்கான சரியான ஏது என்ன என்று சொன்னார்” என்றான் கர்ணன். சிவதரின் கண்கள் சற்று மாறுபட்டன. கர்ணன் “அது உண்மை. அங்கு அஸ்தினபுரியின் செல்வத்தையோ திருதராஷ்டிர மாமன்னரின் கனிவையோ குருகுலத்தின் குருதியுறவின் ஆழத்தையோ அல்ல தன் உட்கரந்த முள்ளொன்றின் நஞ்சையே அவர் விரித்தெடுக்கப்போகிறார். நச்சை ஏழுலகத்தைவிட பெரிதாக விரித்தெடுக்க முடியும்” என்றான்.

மீண்டும் தொடையைத் தட்டி உரக்க நகைத்து “அதை நானும் அறிவேன்” என்றான். சிவதர் அவனது கசந்த சிரிப்பை சற்று திகைப்பு கலந்த விழிகளுடன் நோக்கினார். இதழ்ச்சிரிப்பு அவன் விழிகளில் இல்லை என்று கண்டு “கணிகர் தாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்?” என்று கேட்டார். “உடன் சென்று அவரை கட்டுப்படுத்தும் விசையாக இருக்க வேண்டும் என்றார்” என்றான் கர்ணன். “தங்களுக்கு அழைப்பில்லை” என்றார் சிவதர். “ஆம், அழைப்பில்லை” என்று கர்ணன் சொன்னான். “என் தன்மதிப்பா துரியோதனரின் வாழ்வா எது முதன்மையானது என்று கேட்டார்.”

“வாழ்வு என்றால்…” என்றார் சிவதர். கர்ணன் “வாழ்வென்றால்…” என்றபின் திரும்பி “துரியோதனர் வாழ்வை முற்றிலும் மாற்றி அமைக்கும் ஒரு தருணம் அங்கு காத்துள்ளது என்று கணிகர் சொல்கிறார்” என்றான். சிவதர் ஒருகணம் நடுங்கியது போலிருந்தது. “அவ்வண்ணம் அவர் சொல்லியிருந்தால் அது உண்மையாகவே இருக்கும்” என்றார். “ஏன்?” என்றான் கர்ணன். சிவதர் “இப்புவியில் இன்றிருப்பவர்களில் காலத்தைக் கடந்து காணும் கண்கள் கொண்டவர் இருவர் மட்டிலுமே. இவர் இரண்டாமவர்” என்றார்.

“அவர் அதைச் சொன்னபோது எந்தச் சான்றுமில்லாமலே அதை உண்மையென்று உணர்ந்தேன். பேருண்மைகளுக்கு மட்டுமே தங்கள் இருப்பையே முதன்மைச் சான்றாக முன்வைக்கும் வல்லமையுண்டு. அத்தருணத்தில் நான் என் இளையோனுடன் இருக்கவேண்டும். அது என் கடமை. அதற்காக என் தன்மதிப்பை நான் இழந்தால் அது பிழையல்ல.” சிவதர் கூரியகுரலில் “ஆனால் அது அங்கநாட்டு மக்களின் தன்மதிப்பும்கூட” என்றார். கர்ணன் “அங்க நாட்டவராக பேசுகிறீர்களா?” என்றான்.

சிவதர் மேலும் சினந்து முகம்சிவந்து “ஆம், அங்க நாட்டவனாகவே பேசுகிறேன். என் அரசரை ஒருவன் அழையா விருந்தாளியாக நடத்துவதை என்னால் ஏற்க முடியாது” என்றார். “ஆனால்…” என்று கர்ணன் ஆரம்பிக்க “தங்களை அழைக்கவில்லை என்றால் தாங்கள் செல்லலாகாது. இது என் சொல்” என்றார் சிவதர். “இது என் கடமை” என்றான் கர்ணன். “இது என் சொல். இதை விலக்கி தாங்கள் செல்லலாம். நான் அணுக்கன். அதற்கப்பால் ஒன்றுமில்லை.”

கர்ணன் உரக்க “அதற்கப்பால் நீங்கள் யாரென்று நம்மிருவருக்கும் தெரியும்” என்றான். “அப்படியென்றால் என் சொல்லை ஒதுக்கி நீங்கள் எப்படி செல்ல முடியும்?” என்றார் சிவதர். கர்ணன் தன் தொடையில் அடித்து உரத்த குரலில் “செல்லவில்லை… நான் செல்லவில்லை. போதுமா?” என்றான். “சரி” என்றார் சிவதர். “செல்லவில்லை” என்று அவன் மீண்டும் மூச்சிரைக்க சொன்னான். “சரி” என்று அவர் மீண்டும் சொன்னார். தேர் செல்லும் ஒலி மட்டும் கேட்டுக்கொண்டிருக்க இருவரும் அமைதியாக அமர்ந்திருந்தனர்.

கர்ணன் பெருமூச்சுடன் தன் உடலைத் தளர்த்தி “நான் செய்ய வேண்டியதென்ன?” என்றான். “தாங்கள் செல்ல வேண்டியதில்லை. ஜயத்ரதர் செல்லட்டும்” என்றார். கர்ணன் திரும்பிநோக்க சிவதர் “அவருக்கு முறைப்படி அழைப்பு அங்கு அனுப்பப்பட்டுள்ளது. இங்கும் நேற்றிரவு பீமசேனரே அவரது அரண்மனைக்குச் சென்று தனி அழைப்பை அளித்திருக்கிறார். சிந்துநாட்டரசர் அவர்களுக்கு இன்னமும் நட்புக்குரியவரே. மேலும் சிந்துநாடு இன்றிருக்கும் படைநகர்வுப் பெருங்களத்தில் தவிர்க்க முடியாத ஆற்றல். எனவே துரியோதனருக்கு இணையாகவே அவர் அங்கு வரவேற்கப்படுவார்” என்றார்.

கர்ணன் “ஆம்” என்றான். சிவதர் “அவர் உடன் செல்லட்டும். தாங்கள் ஆற்றவேண்டிய அனைத்தையும் அவரிடம் சொல்லி அனுப்புவோம்” என்றார். கர்ணன் “அவர்…” என்றான். “தங்கள் அளவுக்கு அவர் அணுக்கமானவர் அல்ல. ஆனால் தாங்கள் சொல்வதற்கு என்ன உண்டோ அனைத்தையும் தன் சொற்களாக அவர் சொல்ல முடியும்” என்றார். மேலும் அவர் சொல்ல ஏதோ எஞ்சியிருந்தது. அந்த முள்முனையில் சற்று உருண்டபின் “அவரும் பாஞ்சாலத்தில் திரௌபதியின் தன்னேற்புக்கு வந்தவரே” என்றார்.

“இன்னொரு அரசநாகம்” என்றான் கர்ணன் சிரித்தபடி. “என்ன?” என்றார் சிவதர். “கணிகரின் ஒப்புமை… அதை பிறகு சொல்கிறேன்” என்றான். சிவதர் “அது ஒன்றே இப்போது இயல்வது” என்றார். கர்ணன் கைகளை மார்பில் கட்டி தலைகுனிந்து அமர்ந்திருந்தான். நெடுநேரம் அவன் அமர்ந்திருந்தபின் நிமிர்ந்து “ஆம் சிவதரே, அதுவே உகந்த வழி” என்றான். முன்னால் இருந்த திரைச்சீலையை விலக்கி பாகனிடம் “சிந்து நாட்டரசரின் மாளிகைக்கு” என்றான்.

முந்தைய கட்டுரையாதெனின் யாதெனின்…
அடுத்த கட்டுரைபுதியவர்களின் கடிதங்கள் 14