பகுதி ஐந்து : பன்னிரண்டாவது பகடை – 2
நிமித்திகர் வரவறிவிக்க, அவைக்கேள்வீரர் வாழ்த்து கூற சிவதர் தொடர அஸ்தினபுரியின் பேரவைக்குள் நெறிநடைகொண்டு நுழைந்த கர்ணன் கைகூப்பி தலைதாழ்த்தி துரோணரையும் கிருபரையும் வணங்கியபின் துரியோதனனை நோக்கி வணங்கிவிட்டு அங்கநாட்டின் யானைச்சங்கிலிக்குறி பொறிக்கப்பட்டிருந்த தன் பீடத்தை நோக்கி சென்றான். தன்மேல் பதிந்திருந்த துரியோதனனின் நோக்கை அவன் முதுகால், கழுத்தால், கன்னங்களால் கண்டான். பீடத்தில் அமர்ந்து கால்களை நீட்டியதும் சிவதர் அவன் மேலாடையை மடிப்புசேர்த்து ஒருக்கிவைத்தார்.
கர்ணன் தன் அருகிருந்த சகுனியிடம் மெல்ல “வணங்குகிறேன் காந்தாரரே” என்றான். சகுனி தன் பீடத்தில் உடல் சாய்த்து புண்பட்ட காலை பிறிதொரு பஞ்சுப்பீடத்தில் நீட்டி அமர்ந்திருந்தார். அவனிடம் பெருமூச்சுவிடும் ஒலியில் “நன்று சூழ்க!” என்றார். கர்ணன் திரும்பி அவருக்குப் பின்னால் மேலிருந்து விழுந்த மரவுரியாடைபோல அமர்ந்திருந்த கணிகரை நோக்கினான். அவர் தலைவணங்கினார். “வணங்குகிறேன் கணிகரே” என்றபின் நீள்மூச்சுடன் உடலை தளர்த்திக்கொண்டான்.
கணிகர் அங்கிருப்பார் என அவன் எதிர்பார்க்கவில்லை. அவருக்கு அவைவிலக்கு அளிக்கப்பட்டபின் மூன்றாண்டுகாலம் அவர் சகுனியுடன் வந்து அவைக்கு வெளியே சிற்றவையில் இருந்து சகுனியுடன் திரும்பும் வழக்கம் கொண்டிருந்தார். மெல்லமெல்ல அவரில்லாமல் அரசுமேலாண்மை முறையாக நடக்காதென்று துரியோதனன் எண்ணச்செய்தார். அவ்வெண்ணத்தை விதுரரும் ஏற்கச்செய்தார். ஒவ்வொருமுறை சென்று வழிமுட்டி நிற்கும்போதும் எவரும் எண்ணாத ஒருவாயிலை திறந்தார். தீமை கொள்ளும் அறிவுக்கூர்மைக்கு எல்லையே இல்லை என்று கர்ணன் எண்ணிக்கொண்டான்.
அதைவிட அவனை வியப்புறச்செய்தது அதுகொள்ளும் உச்சகட்ட உருமாற்றம்தான். கணிகர் கருணையும் பெருந்தன்மையும் கனிவும் கொண்டவராகத் தெரியலானார். தன் உடற்தோற்றத்தால் புரிந்துகொள்ளப்படாது வெறுக்கப்படுபவராக அவரை அனைவருமே எண்ணலாயினர். ஒருநாள் அவரை துரியோதனனே அழைத்துச்சென்று திருதராஷ்டிரர் முன் நிறுத்தி ஆணைமாற்று வாங்கி அவையமரச்செய்தான் என அவன் அறிந்திருந்தான்.
அவனுக்கே அவர் சகுனியின் நலம்நாடுபவர், எந்நிலையிலும் கௌரவர்களின் பெரு மதிவல்லமைகளில் ஒன்று என்னும் எண்ணமிருந்தது. தொலைவிலிருந்து அவரை எண்ணும்போது அவ்வெண்ணம் மேலும் கனிந்து அவர்மேல் அன்பும் கொண்டிருந்தான். அவர் அவைமீட்சி அளிக்கப்பட்டபோது உகந்தது என்றே எண்ணினான். ஆனால் அவர் உடல் தன் உடலருகே இருந்தபோது உள்ளத்தையோ எண்ணத்தையோ அடையாது உடல்வழியாகவே ஆன்மா உணரும் அச்சமும் விலக்கமும் ஏற்பட்டது.
அவன் நெஞ்சை கூர்ந்து துரியோதனனின் கண்களை சந்தித்தான். துரியோதனன் திகைத்திருப்பதுபோல் தெரிந்தது. உதடுகள் ஏதோ சொல்லை உச்சரிக்க என விரிந்து மீண்டும் அடங்கின. விதுரர் ஓலை ஒன்றை தொடர்ந்து வாசித்தார். எல்லைப்பகுதி ஒன்றின் இரு ஊர்களுக்கு நடுவே கங்கையின் கால்நீரை பகிர்ந்துகொள்வதைக் குறித்த பூசலுக்கு அரசு ஆணையாக விடுக்கப்பட்ட முடிவை அவர் அறிவித்ததும் அவை மெல்லிய கலைவொலியில் “ஆம், ஏற்கத்தக்கதே” என்று கூவி அமைந்தது. விதுரர் தலைவணங்கி திரும்பி அருகே நின்ற கனகரிடம் கொடுக்க கனகர் அதை வாங்கி அதன் எண்ணை நோக்கி தன் கையில் இருந்த ஓலையில் பொறித்தபின் தன்னருகே நின்ற பிரமோதரிடம் அளித்தார். அவர் அதை ஒரு பெட்டியில் இருந்த சரடொன்றில் கோர்த்தார்.
பிறிதொரு ஓலையை எடுத்த விதுரர் இது “சம்பூநதம் என்னும் சிற்றூரின் ஆலயத்தைக் குறித்த செய்தி. காட்டுயானைகளால் இடிக்கப்பட்டது அந்த ஆலயம். அதைப் புதுக்கி அமைப்பதற்காக நமது கருவூலத்திலிருந்து அறப்பொருள் கோரியிருக்கிறார்கள்” என்றார். துரியோதனன் உடலை அசைத்து அலுப்பு கலந்த குரலில் “வழக்கம்போல் செலவில் பாதியை கருவூலத்திலிருந்து அளிக்கவேண்டியதுதான்” என்றான். விதுரர் “சென்ற வருடம்தான் இந்த ஆலயம் கட்டப்பட்டது. அப்போது பாதி அறப்பொருள் கருவூலத்திலிருந்து அளிக்கப்பட்டது. ஆலயத்தை பாதுகாப்பது ஊரார் பொறுப்பென்பதனால் இடிந்த ஆலயத்தை அவர்களே மறுகட்டுமானம் செய்யவேண்டுமென்பதே நாட்டுமுறைமை” என்றார்.
துரியோதனன் மேலும் சலிப்புடன் “அவ்வாறென்றால் அதன்படி ஆணையிடுவோம். அவர்களே உழைப்புக்கொடை முறைப்படி ஆலயத்தை சீரமைக்கட்டும்” என்றான். விதுரர் “ஆம், அதுவே நாம் செய்யக்கூடுவது. ஆனால் இந்த ஊர் மிகச்சிறியது. இங்கு முந்நூறு சிறுவேளாண்குடியினரே உள்ளனர். அவர்களால் மீண்டும் ஓர் ஆலயத்தை இப்போது கட்டமுடியாது” என்றார். துரியோதனன் எரிச்சல் கொள்வது அவன் உடல் அசைவிலேயே தெரிந்தது. கர்ணன் திரும்பி நோக்க சகுனி அவன் கண்களை சந்தித்து புன்னகை செய்தார். பின்பக்கம் கணிகர் மெல்ல இருமினார்.
“என்ன செய்வது அமைச்சரே?” என்றான் துரியோதனன். “இது இருபுறமும் தொட்டு ஆடும் ஒரு வினா. இந்த ஆலயத்திற்கு நாம் நிதியளிப்போமென்றால் இனி ஊராரால் கைவிடப்பட்ட அனைத்து ஆலயங்களுக்கும் அறப்பொருள் அளிக்கவேண்டிய பொறுப்பு நமக்கு ஏற்படும். ஆகவே அரசமுறைமையை நாம் மீறலாகாது. ஆனால் இவர்களுக்கு உதவாமல் இருந்தால் ஆலயம் இல்லாத ஊரில் இவர்கள் வாழநேரிடும். இல்லங்களில் குழந்தைகளுக்கும், வயல்களில் பயிருக்கும், மங்கையர் கற்புக்கும் காவலென தெய்வங்கள் குடிநிற்க வேண்டியிருக்கின்றன. ஊரெங்கும் ஆலயமும், ஊருணியும், அறநிலையும், காவல்நிலையும் அமைக்கவேண்டிய பொறுப்பு அரசனுக்கு உண்டு என்று நூல்கள் சொல்லுகின்றன” என்றார் விதுரர்.
“ஆம்” என்று உடலை நெளித்து அமர்ந்த துரியோதனன் திரும்பி தனக்கு வலப்பக்கம் போடப்பட்ட இருக்கையில் அமர்ந்திருந்த தம்பியரை பார்த்தான். துச்சலனும் துர்முகனும் துச்சகனும் சகனும் ஒரே போன்ற அமைதியற்ற உடல்கோணலுடன் அமர்ந்திருந்தனர். அரியணைக்கு சற்று பின்னால் நின்ற துச்சாதனன் குனிந்து துரியோதனனிடம் ஏதோ சொல்ல அவன் பிறகு என்பது போல் கையசைத்தான். கர்ணன் திரும்பி அவையை நோக்க அவர்கள் ஒருவர்கூட அதை உளம்தொடரவில்லை என தெரிந்தது. அத்தனைபேரும் வேறெதற்காகவோ காத்திருந்தனர் என உடல்களே காட்டின.
விதுரர் “ஆகவே ஒரு சிறு சூழ்ச்சியை செய்யலாம் என்று எண்ணினேன்” என்றார். துரியோதனன் ஆர்வமின்றி தலையசைத்தான். விதுரர் “அச்சிற்றூரில் சுப்ரதன் என்றொரு இளைஞர் இருக்கிறார். நூல்கற்றவர். மாமன்னர் சந்தனுவின் கதையை குறுங்காவியமாக எழுதியிருக்கிறார். அந்தக் காவியத்தை இங்கு அரங்கேற்றி அதற்குக் கொடையாக ஆயிரம் பொற்காசுகளை அளிக்கலாம் என்று எண்ணுகிறேன். அவற்றில் நூறு பொற்காசுகளை அவர் எடுத்துக்கொண்டு எஞ்சியதை ஆலயத்தை புதுக்கும் பணிக்கு அளிக்கவேண்டும்” என்றார்.
சகுனி தாடியை நீவியபடி நகைத்து “ஆம், நல்ல எண்ணம் அது. பிறிதெவரேனும் அதேவகையில் அறப்பொருள் கோரினால் அவர்களின் காவியம் தரமற்றது என்று சொல்லிவிடலாம் அல்லவா?” என்றார். முன்னிலையில் அமர்ந்திருந்த ஷத்ரியர் நகைத்தனர். அவர் நகைத்த ஒலிகேட்டு பின் நிரையில் இருந்தவர்களும் நகைக்க, விதுரர் அந்நகைப்பொலியை விரும்பாதவராக “இக்காவியம் அனைத்து வகையிலும் நன்றே” என்றார். உடலை மெல்ல அசைத்து காலை நகர்த்திவைத்தபடி “சந்தனுவின் துணைவியார் இக்காவியத்தில் உள்ளாரா?” என்றார் சகுனி. துரோணர் “காவியத்தை நாம் எதற்கு இங்கு விவாதிக்க வேண்டும்? இங்கு அவை நிகழ்வுகள் தொடரட்டும்” என்றார்.
மீசையை நீவி முறுக்கி மேலேற்றியபடி சற்றே விழிதாழ்த்தி உடல்நீட்டி கர்ணன் அமர்ந்திருந்தான். விதுரரின் விழிகள் மாறுபடுவதைக் கண்டதும் அவன் செவிகள் எச்சரிக்கைகொண்டன. நெடுந்தொலைவில் வாழ்த்தொலிகள் கேட்டன. அவை வாயிலில் காவலர்களின் இரும்புக்குறடுகள் ஒலித்தன. அவை முழுக்க துடிப்பான உடல் அசைவு பரவியது. பீடங்கள் கிரீச்சிட்டன. அவையோரின் அணிகள் குலுங்கின. குறடுகள் தரைமிதித்து நிமிரும் ஒலி சூழ்ந்தது. திரும்பி நோக்காமல் ஒலியினூடாகவே என்ன நிகழ்கிறது என்பதை காட்சியாக்கிக் கொண்டு கர்ணன் அமர்ந்திருந்தான்.
“இந்திரப்பிரஸ்தத்தின் தூதர், மாமன்னர் பாண்டுவின் மைந்தரும் அரசர் யுதிஷ்டிரரின் இளையவருமாகிய பீமசேனர்!” என்று நிமித்திகன் உள்ளே வந்து உரத்த குரலில் அறிவித்தான். துரியோதனன் “அவை திகழ ஆணையிடுகிறேன்” என்றான். “அவ்வாறே” என்று அவன் தலைவணங்கி வெளியே சென்றதுமே துரியோதனனின் விழிகள் தன் மேல் வந்து பதிந்திருப்பதை கர்ணன் உணர்ந்தான். அவன் அவற்றை சந்தித்து தவிர்த்துவிட்டு சால்வையை இழுத்துப்போட்டுக்கொண்டான்.
பீமனின் காலடி ஓசை மரப்பலகைத் தரையில் அதிர்ந்து அவனை வந்தடைந்தது. விழிதூக்கக் கூடாது என்று கர்ணன் தனக்கே ஆணையிட்டுக் கொண்டான். உரத்த குரலில் பீமன் “அஸ்தினபுரியின் அரசரை தலைவணங்கி வாழ்த்துகிறேன். இந்திரப்பிரஸ்தமாளும் மாமன்னர் யுதிஷ்டிரரின் தூதனாக வந்த இளையோன் பீமசேனன் நான். அவையமர்ந்திருக்கும் எனது ஆசிரியர் துரோணரையும் கிருபரையும் வணங்குகிறேன். அஸ்தினபுரியின் தொல்குடிகளை தலைவணங்கி இங்கு அவை திகழ ஒப்புதல் அளித்தமைக்கு நன்றி சொல்கிறேன்” என்றான். அந்த முறைமைச்சொல் ஒவ்வொன்றிலும் மெல்லிய கேலி இருப்பதைப்போல் தோன்றியது.
அவ்வெண்ணம் வந்ததுமே எழுந்த மெல்லிய சினத்தால் அறியாது விழிதூக்கி அவன் முகத்தைப் பார்த்த கர்ணன் அது எவ்வுணர்ச்சியுமின்றி இருப்பதை கண்டான். பீமனைத் தொடர்ந்து அவைக்கு வந்த சுஜாதனும் பிற கௌரவர்களும் மெல்லிய உடலோசையுடன் சென்று கௌரவர்களின் நிரைக்குப் பின்னால் அமர்ந்தனர். அவர்கள் பீமனுடன் அவைக்கு வந்ததை திரும்பி நோக்கிய துரியோதனன் உடலெங்கும் அயலவரை உணர்ந்த காட்டுயானைபோல மெல்லிய ததும்பல் அசைவு ஒன்று எழ “நன்று, இவ்வவையும் அரசும் தங்களை வரவேற்கிறது. பீடம் கொண்டு எங்களை வாழ்த்துக!” என்றான்.
தலைவணங்கியபின் தனக்கென இடப்பட்ட பீடத்தில் பீமன் சென்று அமர்ந்தான். இரு கைகளையும் மார்பில் கட்டியபடி நீண்ட குழல்கற்றைகள் பெருகிப்பரவிய பொன்னிறத் தோளில் விழுந்திருக்க, நரம்புகள் புடைத்த கழுத்தை நாட்டி முகவாய் தூக்கி சிறிய யானைவிழிகளால் அவையை நோக்கியபடி இருந்தான். புலித்தோலாடையும் மார்பில் ஒரு மணியாரமும் மட்டுமே அவன் அரசணிக்கோலமென கொண்டிருந்தான் என்பதை கர்ணன் கண்டான். கர்ணனின் விழிகளை ஒரு கணம் தொட்டு எச்சொல்லும் உரைக்காது திரும்பிக் கொண்டன பீமனின் விழிகள்.
துரியோதனன் “புலரியிலேயே தாங்கள் நகர் புகுந்த செய்தியை அறிந்தேன். மாளிகை அளித்து ஆவன செய்யும்படி ஆணையிட்டேன். உணவருந்தி ஓய்வு கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்” என்றான். பீமன் “இல்லை. நான் நேராகவே மேற்குக்கோட்டைக்கு அப்பாலிருக்கும் மைந்தர்மாளிகைக்குச் சென்றேன். அங்கு இளம் தார்த்தராஷ்டிரர்களிடம் இதுவரை களியாடிக்கொண்டிருந்தேன். என் இளையோரும் உடனிருந்தனர். அவை கூடிவிட்ட செய்தியை சுஜாதன் வந்து சொன்னபிறகே இங்கு நான் எதற்காக வந்தேன் என்பதை உணர்ந்தேன். நீராடி உடைமாற்றி இங்கு வருவதற்கு சற்று பிந்திவிட்டது. அவை என்மேல் பொறுத்தருள வேண்டும்” என்றான்.
“அது முறையானதே” என்றார் விதுரர். “தங்கள் இளையோரையும் இளமைந்தரையும் சந்தித்தபின்பு இங்கு அவை புகுவதே விண்புகுந்த முன்னோரும் மண்திகழும் பேரரசரும் விரும்பும் செயலாக இருக்கும்.” பீமன் உரக்க நகைத்து “ஆம், ஆயிரம் மைந்தர்களையும் ஒவ்வொருவரையாக தோளிலேற்றி முத்தம் கொடுத்து மீள்வதற்கே ஒரு நாள் ஆகிவிடும் என உணர்ந்தேன். இன்று அவை எனக்கென கூட்டப்பட்டிருக்கவில்லை என்றால் இதை தவிர்த்திருப்பேன்” என்றான்.
துரியோதனன் முகம் மலர்ந்து “உண்மை இளையோனே. அஸ்தினபுரியின் செல்வக்களஞ்சியமே அதுதான்” என்றான். சிரித்தபடி பீமன் “மைந்தர் மாளிகை கதிர்பெருகி நிறைந்த வயல் போலுள்ளது அரசே” என்றான். “நோக்க நோக்க களியாட்டு. குருகுலத்தில் பிறந்த பயனை அறிந்தேன். தெய்வங்கள் உடனிருக்கையில்கூட அத்தகைய பேரின்பத்தை நான் அறிந்திருக்க மாட்டேன்.” அச்சொற்களால் அவை முழுக்க உள இறுக்கம் தளர்ந்து எளிதானது. முன்னிருக்கையில் ஷத்ரியர்கள் புன்னகைத்தனர். சூத்திரர் அவையில் “பாண்டவர் வாழ்க! அஸ்தினபுரியின் இளையோன் வாழ்க!” என வாழ்த்தொலி எழுந்தது.
விதுரர் கைகாட்ட நிமித்திகன் எழுந்து அவைமேடைக்குச் சென்று கொம்பை மும்முறை ஊதினான். “இந்திரப்பிரஸ்தத்தின் இளையஅரசர் பீமசேனர் தன் தூதுச்செய்தியை இங்கு அறிவிப்பார்” என்றான். பீமன் எழுந்து திரும்பி அவையை வணங்கி “ஆன்றோரே, அவைமூத்தோரே, ஆசிரியர்களே, அவை அமர்ந்த அரசே, இந்திரப்பிரஸ்தம் ஆளும் யுதிஷ்டிரர் சார்பாகவும் அவர் இடமிருந்து அருளும் அரசி திரௌபதியின் ஆணைப்படியும் இங்கொரு மங்கலச் செய்தியை அறிவிக்க வந்துளேன். மாமன்னர் யுதிஷ்டிரரின் கோல்திகழவெனச் சமைத்த இந்திரப்பிரஸ்தப் பெருநகரம் இம்மண்ணில் இன்றுள்ள நகர்களில் தலையாயது என்றறிவீர்கள். அது பணிக்குறை தீர்ந்து முழுமை கொண்டெழுந்துள்ளது” என்றான்.
“வாழ்க! வாழ்க!” என்றது அவை. “இந்திரப்பிரஸ்தத்தின் பொன்றாப்பெருஞ்சுடர் ஏற்றும் பெருவிழா வரும் சித்திரை மாதம் முழுநிலவு நாளில் முதற்கதிர் எழும் வேளையில் நிகழ உள்ளது. அன்றுமுழுக்க நகரெங்கும் விழவுக்களியாட்டும் செண்டுவெளியாட்டும் மங்கலஅவையாட்டும் மாலையில் உண்டாட்டும் நிகழும். அவ்விழவில் இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் யுதிஷ்டிரரின் குருதித்தம்பியும், குருகுலத்து மூத்தவரும் அஸ்தினபுரியின் அரசருமான துரியோதனர் தன் முழுஅகம்படியினருடன் வந்து சிறப்பிக்க வேண்டுமென்று இந்திரப்பிரஸ்தம் விழைகிறது. அரசரின் தாள்பணிந்து இவ்வழைப்பை முன்வைக்கிறேன்” என்றான்.
மங்கல இசை எழுந்து அமைய “வாழ்க! நன்று சூழ்க! வளம் பொலிக! இந்திரப்பிரஸ்தம் எழுசுடரென ஒளிர்க!” என்று அவை வாழ்த்தியது. பீமன் “இங்கு அவையமர்ந்திருக்கும் விதுரரையும் அமைச்சர்களையும் அரசரின் சொல்லாலும் அரசியின் பணிவாலும் என் அன்னையின் விழைவாலும் வந்து இந்திரப்பிரஸ்தத்தை வாழ்த்தும்படி அழைக்கிறேன். என் ஆசிரியர்களான துரோணரையும் கிருபரையும் நாளை புலரியில் அவர்களின் குருகுலத்திற்குச் சென்று தாள்பணிந்து பரிசில் அளித்து அவ்விழவிற்கென அழைக்கலாம் என்று இருக்கிறேன்” என்றான்.
அவன் மேலும் சொல்லப்போகும் சொற்களுக்காக அவை மெல்ல அமைதி கொண்டு விழியொளி திரண்டு காத்திருக்க பீமன் “இந்த அவையில் என் அரசின் மங்கல அழைப்பை அளிக்கும் வாய்ப்பு அமைந்ததற்காக இறையருளை உன்னி மூத்தோர்தாள்களை சென்னியில் சூடுகிறேன்” என்று சொல்லி தலைவணங்கி சென்று தன் பீடத்தில் அமர்ந்தான். அவன் செல்லும் ஓசையும் அமர்கையில் பீடம் சற்று பின்னகர்ந்த ஓசையும் அவையிலெழுந்தது. விதுரர் அறியாமல் தலையை அசைத்துவிட்டார். சகுனி அசையும் ஒலி கேட்டது. கணிகர் மெல்ல இருமினார். ஆனால் அப்போதும் துரியோதனன் எதையும் உணரவில்லை.
மேலும் சற்றுநேரம் அவை அமைதியாக இருந்தது. விதுரர் எழுந்து இரு கைகளையும் தலைக்கு மேல் கூப்பி “அஸ்தினபுரியின் ஒளிமிக்க மறுபுறமென்று இந்திரப்பிரஸ்தத்தை முன்னோர்கள் அறியட்டும். இது பேரரசர் திருதராஷ்டிரரின் நகரென்றால் அவர் தன் நெஞ்சில் சுடரென ஏற்றியிருக்கும் பாண்டுவின் நகரம் இந்திரப்பிரஸ்தம். அஸ்தினபுரி ஈன்ற மணிமுத்து அது. இந்நகரின் அனைத்து நற்சொற்களாலும் அப்புதுநகரை வாழ்த்துவோம்” என்றார்.
அவை “வாழ்க! வாழ்க!” என வாழ்த்தியது. விதுரர் “அஸ்தினபுரியின் வாழ்த்தே இந்திரப்பிரஸ்தம் அடையும் பரிசில்களில் முதன்மையாக இருக்கவேண்டும். எனவே நமது கருவூலம் திறந்து நிகரற்ற செல்வம் இந்திரப்பிரஸ்தத்தை சென்றடையட்டும். மாமன்னர் துரியோதனர் தனது ஒளிவீசும் கொடியுடன், விண்ணவன் படையென எழும் அகம்படியினருடன் சென்று இந்திரப்பிரஸ்தத்தை சிறப்பிக்கட்டும்” என்றார்.
அத்தருணத்தை அவரது சொற்கள் வழியாகவே கடந்த அவை எளிதாகி “ஆம், அவ்வாறே ஆகுக! இந்திரப்பிரஸ்தம் வெல்க! யுதிஷ்டிரர் சிறப்புறுக! வெற்றி சூழ்க! வளம் பெருகுக!” என்று வாழ்த்தியது. துரோணரும் கிருபரும் “நன்று சூழ்க!” என்று வாழ்த்தினர். சகுனி அங்கிலாதவரென அமர்ந்திருந்தார். ஆனால் அங்கிருந்த ஒவ்வொருவரும் அவர் இருப்பையே உணர்ந்து கொண்டிருந்தனர் என்பதை கர்ணன் அறிந்தான். மிக மெல்ல கணிகர் அசைந்தபோது அவையினர் அனைவரும் அவ்வசைவினை உணர்ந்தமையிலிருந்தே அவர்கள் அவரை ஓரவிழியால் நோக்கிக் கொண்டிருந்தனர் என்று உணர்ந்துகொள்ள முடிந்தது.
கணிகர் “இந்திரப்பிரஸ்தம் அஸ்தினபுரி எனும் சிப்பியிலிருந்து எழுந்த முத்து என்று சற்றுமுன் அமைச்சர் சொன்னார். முத்து ஒளிவிடுக! ஆனால் சிப்பி அதைவிட ஒளிவிட வேண்டும் என்பதே எளியவனின் விழைவு” என்றார். சகுனி புன்னகையுடன் தன் தாடியை நீவினார். கணிகர் “இந்திரப்பிரஸ்தம் அணையாச் சுடரேற்றி தெய்வங்களுக்கு முன் படைக்கப்படும்போது முறைப்படி அச்சுடரை காப்போம் என வஞ்சினம் எடுத்து அருகே நிற்பவர் எவரெவர் என நான் அறியலாமா?” என்றார். கர்ணன் ஒருகணத்தில் அவர் உள்ளம் செல்லும் தொலைவை உணர்ந்து புன்னகையுடன் துரியோதனனை பார்த்தான். ஆனால் துரியோதனன் அதை உணர்ந்ததுபோல் தெரியவில்லை.
பீமன் அவர் சொற்களை முழுதுணராதவனாக எழுந்து கைகூப்பி “இந்திரப்பிரஸ்தத்தின் அரண்மனையில் மூதாதையர் குடியிருக்கும் தென்மேற்கு அறையில் ஐம்பொன்னால்ஆன ஏழுதிரி நிலைவிளக்கு அந்நாளில் ஏற்றப்படுகிறது. இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் உடைவாளுடன் நின்று முதல்திரியை ஏற்றுவார். அவர் உடன் பிறந்தோராகிய நாங்கள் நால்வரும் பிறதிரிகளை ஏற்றுவோம். அன்று துவாரகையின் தலைவர் இந்திரப்பிரஸ்தத்தை வாழ்த்தும்பொருட்டு வந்திருப்பார். அவரும் ஒரு திரியை ஏற்றுவார். பிறிதொரு திரியை பாஞ்சாலத்தின் இளவரசரும் அரசியின் இளையோனுமாகிய திருஷ்டத்யும்னன் ஏற்றுவார்” என்றான்.
கணிகர் “அவ்வண்ணமெனில் இவ்வழைப்பு அஸ்தினபுரியின் அரசருக்கே ஒழிய யுதிஷ்டிரரின் இளையோருக்கு அல்ல. நான் பிழையாக புரிந்துகொண்டிருந்தால் பொறுத்தருளுங்கள்” என்றார். பீமன் “எனது சொற்கள் அமைச்சர் சௌனகரால் எனக்கு அளிக்கப்பட்டவை. அவற்றில் ஒவ்வொரு சொல்லும் நன்கு உளம்சூழ்ந்ததே ஆகும்” என்றான். “தெளிந்தேன். நன்று சூழ்க!” என்று தலைக்கு மேல் கைகூப்பி கணிகர் உடல் மீண்டும் சுருட்டி தன் குறுகிய பீடத்தில் பதிந்தார்.
அஸ்தினபுரியின் அவை சொல்லவிந்ததுபோல் அமர்ந்திருக்க விதுரர் சிறிய தவிப்பு தெரியும் உடலசைவுடன் எழுந்து “எவ்வண்ணம் ஆயினும் இவ்வழைப்பு அஸ்தினபுரிக்கு உவகை அளிப்பதே. இதை நாம் சிறப்பிப்பதே மங்கலமாகும்” என்றார். சகுனி கையைத்தூக்கி “பொறுங்கள் அமைச்சரே. கணிகர்சொல்லில் உள்ள உண்மையை இப்போதே நான் உணர்ந்தேன். இவ்வழைப்பு முதலில் இங்கு வந்திருக்க வேண்டும். இந்திரப்பிரஸ்தம் இந்நகரில் இருந்து எழுந்த முளை என்று தாங்கள் சொன்னீர்கள். ஆனால் துவாரகைக்கும் பாஞ்சாலத்திற்கும் அழைப்பு சென்றபிறகே இங்கு தூது வந்துள்ளது என்று இங்கு இளையோன் முன்வைத்த சொற்களில் இருந்து நாங்கள் அறிந்து கொண்டோம்” என்றார்.
விதுரர் தத்தளித்து “ஆம். அதை நாம் ஆணையிட முடியாது. மேலும் இந்திரப்பிரஸ்தத்தை கட்டுவதற்கான முதற்பொருளின் பெரும்பகுதி பாஞ்சாலத்திலிருந்தும் துவாரகையிலிருந்தும் சென்றிருக்கிறது. ஆகவே அவர்களுக்கு முறையழைப்பு அளிப்பதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கலாம்” என்றார். “அவ்வண்ணமெனில் இந்திரப்பிரஸ்தம் அமைந்திருக்கும் அந்நிலமே அஸ்தினபுரியால் அளிக்கப்பட்டது. நமது கருவூலத்தில் பாதிப்பங்கும் அவர்களுக்கு அளிக்கப்பட்டது. அந்நிலமும் அச்செல்வமும் இல்லையேல் அந்நகர் எழுந்திருக்காது” என்றார் சகுனி.
பீமன் சினத்துடன் எழுந்து உரக்க “அது கொடை அல்ல காந்தாரரே, எங்கள் உரிமை” என்றான். அவை முழுக்க நடுக்கம் படர்ந்தது. சகுனி “கொடையேதான். பேரரசர் திருதராஷ்டிரர் அவரது நிகரற்ற உளவிரிவால் உங்களுக்கு அளித்த அளிக்கொடை அது. அளிக்கவியலாது என்று ஒரு சொல் சொல்லியிருந்தால் ஐவரும் அன்னையும் துணைவியருமாக இப்போது காட்டில் அலைந்துகொண்டிருப்பீர்கள். அதை அறியாத எவரும் இந்த அவையில் இல்லை” என்றார். கர்ணன் தன் கால்கள் நடுங்குவதை உணர்ந்தான்.
பீமன் “இன்று இச்சொற்களை இவ்வவையில் சொல்ல தாங்கள் துணிந்தது ஏன் என்று எனக்குத் தெரியும்” என்றான். அவையில் எழுந்த மூச்சொலி அது ஒரு பெருவிலங்கு என எண்ணச்செய்தது. சகுனி புன்னகைக்க பீமன் “அவ்வாணவத்துடன் உரையாட இங்கு நான் வரவில்லை. என் தோள்வலியாலும் என் இளையோன் வில்வலியாலும் நாங்கள் ஈட்டியது எங்கள் உரிமை. அதை அளிக்காமல் இந்த அரியணையில் இவர் அமர்ந்திருக்க முடியாது. இவ்வவை அறிக! இந்த அரியணையும் இந்த அஸ்தினபுரி நகரும் என் தமையன் அளித்த கொடை” என்றான். சகுனி “இதற்கு மறுமொழி ஆற்றவேண்டியவர் அரசர். யுதிஷ்டிரரின் மிச்சிலை உண்டு இவர் இங்கு அரியணை அமர்ந்திருக்கிறார் என்றால் அவ்வண்ணமே ஆகுக!” என்றார்.
அவை காத்திருந்தது. கர்ணன் நெஞ்சுநிறைத்து எழுந்த மூச்சை சிற்றலகுகளாக மாற்றி வெளிவிட்டான். கணிகர் மூக்குறிஞ்சும் ஒலிகேட்டது. அவருக்கு எப்போது அவரது ஒலி அனைவருக்கும் கேட்கும் என்று தெரியும் என கர்ணன் நினைத்தான். விதுரர் எழப்போகும் அசைவை காட்டியபின் பின்னுக்குச் சரிந்து அமர்ந்தார்.
துரியோதனன் எழுந்து “இளையோனே, இவ்வரியணை எந்தை எனக்களித்தது. இதற்கு அப்பால் இத்தருணத்தில் எதையும் நான் சொல்லவிரும்பவில்லை. நீ என் இளையோன். ஆனால் இங்கு என்னை மூத்தவர் என்று நீ அழைக்கவில்லை என்றாலும் அவ்வண்ணமே உணரக் கடமைப்பட்டவன் நான். நீ அழைக்கவில்லை என்பதன் பிழையும் என்னுடையதே என நாம் அறிவோம்” என்றான். பீமன் ஏதோ சொல்ல வாயெடுக்க துரியோதனன் கைகாட்டி “எவ்வண்ணமாயினும் அஸ்தினபுரியின் அரசனுக்கு அளிக்கப்பட்ட இவ்வழைப்பை பாண்டவர் ஐவரின் உடன்பிறந்தவனாக நின்று ஏற்கிறேன். நானும் என் தம்பியரும் யுதிஷ்டிரரின் இளையோராகச் சென்று இந்திரப்பிரஸ்தத்தின் ஒளிகோள் விழவை சிறப்பிப்போம்” என்றான்.
பீமன் உடல் தளர்ந்து தலைவணங்கி தன் பீடத்தில் அமர்ந்தான். மொத்த அவையும் நுரை அடங்குவது போல் மெல்ல அமைவதை கர்ணன் உணர்ந்தான். கணிகர் இருமுபவர் போல மெல்ல ஒலி எழுப்ப சகுனி தாடியை நீவியபடி முனகினார். விதுரர் சகுனியை நோக்கி புன்னகையா என்று ஐயமெழுப்பும் மெல்லிய ஒளியொன்று முகத்தில் தவழ எழுந்து அவைநோக்கி கைகூப்பி “அஸ்தினபுரியின் பேரறத்தார் அமர்ந்திருந்த அரியணை இது. அவ்வரியணையில் அமர்ந்திருக்கும் ஒருவர் எதை சொல்ல வேண்டுமோ அதையே அரசர் இங்கு சொல்லியிருக்கிறார். இவ்வழைப்பு எவ்வண்ணமாயினும் எங்கள் அரசருக்கு அளிக்கப்படும் அழைப்பு. அது எவ்வரிசையில் அமைந்திருப்பினும் யுதிஷ்டிரரின் தம்பியென துரியோதனர் அங்கு செல்வார். இளையோர் அவ்விழவிற்கு விருந்தினராக அல்ல, அவ்விழவை நடத்தும் இளவரசர்களாக அங்கு செல்வார்கள்” என்றார்.
கணிகர் உரத்த குரலில் மீண்டும் இருமினார். விதுரர் நிமித்திகரை நோக்கி கைகாட்ட நிமித்திகர் மேடையேறி “அவையீரே, அரசரின் இந்த ஆணை அரசுமுறைப்படி ஓலையில் எழுதி தூதரிடம் அளிக்கப்படும்” என்றான். கணிகர் கைதூக்கி உடலை வலியுடன் மேலிழுத்து “ஒன்று மட்டும் கேட்க விழைகிறேன்” என்றார். விதுரர் “அவை பேசவேண்டியதை பேசி முடித்துவிட்டது. அரசாணைக்கு அப்பால் பேச எவருக்கும் உரிமையில்லை” என்றார். துரோணர் “இல்லை விதுரரே, இது எளிய தருணமல்ல. இத்தருணத்தின் அனைத்து சொற்களையும் இங்கேயே பேசி முடிப்பதே நல்லது. அவர் சொல்லட்டும்” என்றார். கிருபர் “ஆம், அவர் சொல்வதென்ன என்று கேட்போமே” என்றார்.
“நான் கேட்பதெல்லாம் ஒன்றுதான். வாளேந்தி இந்திரப்பிரஸ்தத்தின் அணையா விளக்கருகே நின்று அதை காப்பதற்கான உறுதிமொழியை அஸ்தினபுரியின் அரசர் எடுக்கப்போகிறாரா இல்லையா?” என்றார் கணிகர். துரியோதனன் எழுந்து கைகளை விரித்து “ஆம், எடுக்கவிருக்கிறேன். அது என் உரிமை. ஏனெனில் என் மூத்தவரின் அரசு அது” என்றான். “அப்படியென்றால் அச்சுடரை ஏற்ற அவர் தங்களை அழைத்திருக்க வேண்டும்” என்றார் கணிகர். “அது முடிந்த பேச்சு. அவர் என்னை அழைக்காவிட்டாலும் அது என் கடமை” என்றான் துரியோதனன்.
“அரசே, அவ்வுறுதிமொழி இருபக்கம் சார்ந்தது. அவர் அழைத்து அதை நீங்கள் எடுத்தால் உங்கள் கொடியைக் காக்க அவரும் உறுதிகொண்டவராவார். அவ்வண்ணமில்லையேல்…” என்று கணிகர் சொல்ல துரியோதனன் கைகாட்டி நிறுத்தி “அவர் என்மேல் படைகொண்டு வருவார் எனில் என்ன செய்வேன் என்கிறீர்களா? என் மூதாதையர் மண்ணைக் காக்க என் இருநூற்றிநான்கு கைகளுக்கும் ஆற்றலுள்ளது. நான் அவர் கொடிகாக்க எழுவது எந்தையின் குருதி எனக்களிக்கும் கடமை” என்றான்.
கணிகர் “அவ்வாறெனில் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. அழைக்காமலேயே சென்று ஒரு நகரின் பாதுகாவலனாக பொறுப்பேற்பதென்பது நிகரற்ற பெருந்தன்மை” என்றார். சகுனி “ஆம்” என்றார். கணிகர் இருமுறை இருமி “ஆனால் சூதர்கள் எப்போதும் அதை அவ்வண்ணமே புரிந்து கொள்வதில்லை. அது இந்திரப்பிரஸ்தத்தின் பேருருவைக் கண்டு அஞ்சி அஸ்தினபுரி எடுத்த முடிவென்று அவர்களில் சிலர் சொல்லத் தொடங்கினால் எதிர்காலத்தில் ஓர் இழிசொல்லாகவே அது மாறிவிடக்கூடும்…” என்றார்.
துரியோதனன் நிறுத்தும்படி கைகாட்டி “இதற்குமேல் தாங்கள் ஏதும் சொல்வதற்கிருக்கிறதா கணிகரே?” என்றான். கணிகர் “நான் எந்த வழிகாட்டுதலையும் இங்கு சொல்லவில்லை. நலம்நாடும் அந்தணன் என்றவகையில் என் எளிய ஐயங்களை மட்டுமே இங்கு வைத்தேன்” என்றார்.
துரியோதனன் “அத்தனை ஐயங்களுக்கும் முடிவாக என் சொல் இதுவே. இன்று இவ்வாறு என் இளையவனே இங்கு வந்து என்னை அழைக்காவிட்டாலும்கூட, ஓர் எளிய அமைச்சர் வந்து என்னை அழைத்திருந்தாலும்கூட என் குருதியர் எழுப்பிய அப்பெருநகரம் எனக்கு பெருமிதம் அளிப்பதே. அங்கு சென்று அவர்களின் வெற்றியைப் பார்ப்பது எனக்கு விம்மிதமளிக்கும் தருணமே. பாரதவர்ஷத்தின் முகப்பிலேற்றிய சுடரென அந்நகர் என்றும் இருக்க வேண்டும். அதற்கென வாளேந்தி உறுதி கொள்வதில் எனக்கு எவ்வித தாழ்வுமில்லை” என்றான்.
விதுரர் கைவிரித்து “அவ்வண்ணமே அரசே. இச்சொற்களுக்காக தங்கள் தந்தை தங்களை நெஞ்சோடு ஆரத்தழுவிக்கொள்வார்” என்றார். திரும்பி பீமனிடம் “சௌனகரிடம் சொல்லுங்கள், அஸ்தினபுரியின் அரசர் தன் மூத்தவர் யுதிஷ்டிரரின் இளையோனாக வரிசை கொண்டு இந்திரப்பிரஸ்தம் நுழைவார் என்று” என்றார். எந்த முகமாறுதலும் இல்லாமல் பீமன் தலைவணங்கினான்.