புதியவாசகர்களின் கடிதங்கள் 10

1

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்

ஈரோடு சந்திப்புக்கு பதிவு செய்துகொண்ட சந்தோஷத்தில் இருக்கிறேன்..உங்கள் இணையதளத்தில் பழைய பதிவுகளில் எதையோ தேடப்போன போது..பி.கே பாலகிருஷ்ணனை நீங்கள் முதன் முதலில் சந்தித்ததை பற்றி எழுதியிருக்கிறீர்கள்..(பதிவு.டிச.2010)..அதை படித்த உத்வேகத்தில் இக்கடிதத்தை  எழுதுகிறேன். இலக்கியத்தின் மீது உக்கிரமான வேட்கையில் நீங்கள் அலைந்து திரிந்து ஒவ்வொரு எழுத்தாளரையும் சந்தித்திருக்கிறீர்கள்

எங்களுக்கு இப்பொது ” புதியவர்கள் சந்திப்பு” அமைந்திருப்பதை மிக அற்புதமான தருணமாக நினைக்கிறோம்.. அதற்காக நேரம் ஒதுக்கியிருக்கிறீர்கள். வெண்முரசு மற்றும் மற்ற படைப்புகளை எவ்வளவு முன்னெடுத்து முடித்துகொண்டிருப்பீர்கள் என அறிகிறேன்…

உங்களை படிக்கின்ற வாசகர்களிலிருந்து ஒரு புதிய படைப்பாளி உருவாகிறான் என்பதில் நான் திடமாக நம்பிக்கை கொண்டிருக்கிறேன்.. ஆனால் அன்று நீங்கள் இருந்த மனநிலையில் இன்றைய புதிய படைப்பாளிகள் இருக்கிறார்களா என்பது சந்தேகமே..  ஒரு படைப்புக்குள் வாசகனுக்கும் எழுத்தாளனுக்கும். ஒரு அந்தரங்கமான உரையாடலை தரும்..அது உங்களின் எல்லா படைப்புவழியே நான் கண்டிருக்கிறேன்…நதி கதை முதல் கணத்திற்கு அப்பால் வரை.

நதி கதையில் ஒரு கதை கொடுக்கின்ற தரிசனத்தை தாண்டி உங்களுக்கும் எனக்கும் அரூபமான தீண்டல் உண்டானது. அதை சொற்களின் வழியே சொல்ல முடியவில்லை..ஒரு ஓவியத்தை பார்த்துக்கொண்டேயிருப்பது போல,ஒரு இசை ஏற்படுத்தும் எழுச்சி போல. சில நேரம் மனம் என்னவென்றே அறியாது அப்படியே நிற்கும்.அது அந்த படைப்பினால் மட்டுமல்லாமல், படைப்பாளிக்கும் வாசகனுக்கும் இருக்கின்ற ஒரு வெற்றிடத்தை வாசகன் சென்றடைந்துவிட்டதால். சார் நான் சரியாக சொல்கிறேனா? மனதின் அந்த தீண்டலை நான் உங்கள் நாவலில் தேடி அலைந்து அடைந்தேன்.

சில எழுத்தாளர்கள் படைப்பில் தருகின்ற. ஒரு அதிர்ச்சியால் அதை செய்து பார்த்திருக்கிறார்கள்.. என் நண்பர் சச்சினிடம்(சிவா. ஈரோடு சந்திப்புக்கு வருகிறார் ) அறம் தொகுப்பை கொடுத்திருந்தேன். அவர் சொன்னார் ‘ஒவ்வொரு கதையாக படித்து முடிக்க பின் அட்டையின் ஜெயமோகன் படத்தை பார்த்துக்கொண்டேன்.’ இந்த மனுசன்தான் இப்பிடி கதை எழுதினாரா?”. நண்பர்களிடம் உங்கள் படைப்புகளை பேசும்போது மனது எதற்காகவோ தொற்றி நிற்கும்.என் படைப்பை பற்றி பேசுவது போல. பின் தனிமையில் யோசிப்பேன். எதற்கு இப்படி நடந்தேன என. என் மனவெழுச்சியின் காரணம் இதுதான் , நான் அடைந்த தீண்டலை அறிந்துகொள்ள துடித்திருக்கிறேன். சில கதைகளை எழுதும்போது அப்படியான அந்தரங்க உரையாடலை நிகழ்த்த முயற்சித்து,தோற்று துவண்டிருக்கிறேன்…
உங்களுடன் பேசுவது போல எழுதும் கடிதங்களின் வழியே சோர்வினை மீட்டுக்கொள்கிறேன் சார். .

பி.கே பாலகிருஷ்ணனை சந்தித்ததை படித்தது மனதை நிறைவடையச் செய்தது..அலுவலகங்களிலும்,சுற்றிலும் ஏற்படுகின்ற அவமானத்திலும்,எரிச்சலிலும் இலக்கிய வாசிப்புகள் மட்டுமே தியான நிலையை தருகிறது இல்லையா சார்?.

அன்புடன்

மு.தூயன்
புதுக்கோட்டை

 

அன்புள்ள தூயன்,

நீங்கள் எழுத்தாளர்களைச் சந்திக்கவும் உரையாட விழைவதும் நிறைவளிக்கிறது.  ஆளுமை உருவாகும் வயதில் முன்னோடி எழுத்தாளர்களைச் சந்திப்பது மிக அவசியமானது. அவர்களின் பாதிப்பு நம்முடன் என்றுமிருக்கும். நம் இலட்சியமனிதர்களாக அவர்கள் ஆகலாம். அதைவிட இலக்கியம் என்பது ஓர் அழியாத்தொடர்ச்சி என நாம் உணரவும் முடியும்

எண்பதுகளில் கலாப்ரியா நடத்திய குற்றாலம் பதிவுகள் நிகழ்ச்சி பெரியதோர் அனுபவமாக இருந்தது. ஆரம்பகட்டத்தில் அதில் மூத்த எழுத்தாளர்கள் கலந்துகொண்டனர். ஆனால் குடிக்கொண்டாட்டமாக அதை சிலர் மாற்றத்தொடங்கியதும் அது பொலிவிழந்து நின்றது. ஆரம்பத்தில் அச்சந்திப்பில்தான் தமிழின் மிகப்பெரும்பாலான எழுத்தாளர்களை நான் சந்தித்தேன்

ஆனால் பொதுவாக இவ்வரங்குகளில் வரும் இளம்வாசகர்களுக்கு நான் சொல்ல விழையும் ஒன்றுண்டு. எழுத்தாளர்களில் எவர் உண்மையிலேயே ஆழமானவர்களோ அவர்கள் இயல்பானவர்களாகவே இருப்பார்கள், அது நாஞ்சில்நாடனாக இருந்தாலும் சரி யுவன் சந்திரசேகராக இருந்தாலும் சரி. அவ்வியல்புத்தன்மை காரணமாக நாம் அவர்களை அணுகுவதும் நட்புகொள்வதும் மிக எளிது.

ஆனால் அதை நாம் எளியநட்பாக ஆக்கிக்கொள்ளக்கூடாது. எனக்கு தமிழிலும் மலையாளத்திலும் உள்ள சரித்திரநாயகர்கள் பலரிடம் நேர்ப்பழக்கம் இருந்தது. என்னை கெட்டவார்த்தை சொல்லி அழைக்கும் அளவுக்கு நெருக்கமான மேதைகள் இருந்தனர். ஆனால் நான் அவர்களை என் விளையாட்டுத்தோழர்கள் என நினைக்கவில்லை.

ஏனென்றால் அந்த இயல்பான எளிமைக்கு அப்பால் அவர்களை எழுத்தாளர்களாக ஆக்கும் அந்தத் தீவிரம் ஒளிந்துள்ளது. நாம் நம்முடைய அன்றாட வாழ்க்கையின் நட்புச்சூழலில் கொண்டாடிக்கொண்டிருக்கும் அர்த்தமில்லாத கிண்டல்கேலிகளை எழுத்தாளர்களுடனான நட்பில் கொண்டுசெல்லக்கூடாது. சட்டென்று அவர்களுக்குள் இருக்கும் தீவிரம் நம்மை சலிப்புடன் நோக்க ஆரம்பித்துவிடும்.

நாம் அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளவேண்டியது அந்தத் தீவிரத்தை மட்டுமே. இது ஒரு நெருப்பு இன்னொன்றில் பற்றிக்கொள்வதைப் போலத்தான். இலக்கியம் என்பது மிகச்சிறிய ஒரு வட்டத்தினுள் செயல்படும் விசித்திரமான ஒரு தீவிரம் மட்டுமே. அந்தத்தீவிரத்தை இழக்காமலிருக்க நாம் எப்போதும் கவனம் கொள்ளவேண்டும்

முன்பு ஓர் அரங்கில் ஒரு வாசகர் ஜெயகாந்தனிடம் ‘என்னசார் எங்க ஊருக்கு மழையக்கொண்டாந்துட்டீங்க” என்று விளையாட்டாகக் கேட்டபோது ’டேய், ஏண்டா என்னை என்ன உன் அத்திம்பேருன்னு நெனைச்சியா?” என்று அவர் சீறியதாகச் சொல்வார்கள். ஜெயகாந்தனின் எல்லைக்கு எவரும் செல்வதில்லை. ஆனால் நாம் எழுத்தாளர்களை அணுகுவது இலக்கியத்துக்காக, நம்மை பற்றவைத்துக்கொள்வதற்காக என்று எப்போதும் கவனமாக இருக்கவேண்டும்

ஜெ

 

ஜெ சார்

நான் நெடுநாட்களாகச் சந்திக்கவிரும்பிய ஆளுமை நீங்கள். விஷ்ணுபுரம் விருதுவிழாவுக்கு வந்தால் சந்திக்கமுடியாது என்று நினைத்தேன். ஆகவேதான் வரவில்லை. மூன்றுமுறை ஊட்டி கூட்டத்திற்கு வர நினைத்து முயன்றேன். இடமில்லை என்றார்கள். இந்தமுறை வந்தபோதுதான் ஊட்டிக்கூட்டம் அளவுக்கே இங்கேயும் இத்தனை தீவிரமான விவாதங்கள் நடப்பதைக் கண்டேன். எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை

நான் எல்லா விவாதங்களையும் புரிந்துகொண்டேன் என்று பொய் சொல்லமாட்டேன். ஆனால் ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு முக்கியமானதாகத் தோன்றியது. வரலாறு என்பது ஒன்று இல்லை என்று சொல்லப்பட்டபோது எனக்கு உடம்பே நடுங்குவதுபோல இருந்தது. கருத்துக்களை தெரிந்துகொள்வதே இத்தனை அற்புதமான அனுபவம் என்பது ஆச்சரியமாக இருந்தது

நாஞ்சில்நாடன் ஜோ டி குரூஸ் யுவன் சந்திரசேகர் ஆகியவர்களிடம் பேசினேன். தேவதச்சனிடம் பேசினேன். மிகமிக உற்சாகமாகவும் எளிமையாகவும் பேசினார்கள். அவர்களுடன் இத்தனை எளிமையாக பேசிச்சிரிக்கமுடியும் என்று நினைக்கவே இல்லை. பலவிஷயங்களைப் பேசமுடிந்தது பரவசமாக இருந்தது. அனைத்துக்கும் நன்றி

இப்போது நீங்கள் நடத்தும் இரு சந்திப்புகளுக்கும் வர விரும்பினேன். தேர்வுகள் நெருங்குவதால் வரமுடியவில்லை. இன்னொரு சந்திப்பில் கண்டிப்பாகக் கலந்துகொள்ள விரும்புகிறேன்

வாழ்த்துக்கள்

செந்தில்குமார்

முந்தைய கட்டுரைவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 39
அடுத்த கட்டுரைமாணவர்களும் தலித் அரசியலும்