அன்புள்ள ஜெயமோகன்,
எனக்கு இருபது வயதாகிறது. இந்த வயதில் “சாவு” பற்றி ஓயாமல் சிந்தித்துக் கொண்டே இருக்கிறேன். என் நெருங்கிய நண்பன் ஒருவனின் தந்தை சென்ற வாரம் திடீரென்று இறந்துபோனார். அது என்னை என்னவோ செய்து விட்டது. சென்ற ஆண்டு என் வயதொத்த நண்பன் ஒருவன் அகால மரணமடைந்தான். உறவினர் ஒருவர் புற்றுநோயால் உருக்குலைந்து போய் இறந்தார். என் கண் முன்னால் உயிர் பிரிந்த என் பாட்டியின் மரணமே நான் முதலில் உணர்ந்தது.
இது போன்ற சம்பவங்கள் என்னை தொடர்ச்சியாக மரணம் பற்றி யோசிக்கவைக்கின்றன. இந்த வயதில் இது தேவை தானா என்றும் தோன்றுகிறது. ஒரு கட்டத்தில் அலுப்பு மேலிடுகிறது. இயல்பாகவே இருக்கிறேன் என்றாலும் மனதின் ஓரத்தில் இது பற்றிய சிந்தனை இருந்து கொண்டே இருக்கிறது.
இப்படி இருக்க சம்பத்தின் ”இடைவெளி” (இடைவெளி பற்றி நீங்கள் எழுதியிருக்கிறீர்களா?) வாசித்தேன். முன்னுரையில் சம்பத் கூறியிருப்பதைப் போல “கடைசி பட்சத்தில் எல்லாம் போய் விடுகிறது! எல்லாமேதானே! இதற்கு என்ன செய்வது!” என்கிற எண்ணமே என் மனதில் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டிருக்கிறது.
சு. அருண் பிரசாத்
திண்டுக்கல்
அன்புள்ள அருண்
இந்த விசித்திரமான முரண்பாட்டைப்பற்றி நான் நினைத்திருக்கிறேன். 90 வயதை நெருங்கும் ஒரு தமிழ் எழுத்தாளர் என்னிடம் சொன்னார், காலை எழுந்ததுமே அந்த நாள் ஒரு பெரிய கொடை என்னும் எண்ணம் வந்து மனம் உற்சாகம் கொள்கிறது, என்று. அவர் குதூகலமான மனிதர்
ஆனால் இளையவர்கள் பலர் வாழ்க்கையே பெரும்சுமை, செய்வதென்ன என்று அறியாமலிருக்கிறோம், இறப்பச்சம் துரத்துகிறது என சொல்கிறார்கள். உங்கள் கடிதமும் அதையே காட்டுகிறது.இளமையின் ஒரு காலகட்டத்தின் குழப்பம் மட்டும்தான் இது. எனக்கும் இருந்துள்ளது. 1986ல் நான் மரணபயம் பற்றிய கதைகளை எல்லாம் எழுதியிருக்கிறேன். காரணம் என் தோழன் ராதாகிருஷ்ணனின் தற்கொலை.. என் பெற்றோரின் தன்னிறப்பு.
இந்தவாழ்க்கையில் செய்வதற்கு என்ன உள்ளது என்னும் தெளிவுதான் இதற்கான பதில். அதைச் செய்வதற்கான அர்ப்பணிப்புடன் கூடிய செயல் அமையும் என்றால் வாழ்க்கை ஒளிமிக்கதாக ஆகிவிடுகிறது. அதை நான் ஒரு கட்டத்தில் எனக்காக வரித்துக்கொண்டேன். அதையே பற்றி வெளியே வந்தேன்.
கீதையின் ஒற்றைவரியில் உள்ளது அச்செய்தி. உங்கள் தன்னறம் எதுவோ அதை இயற்றுங்கள். அதன் பயன் என்ன, இப்பிரபஞ்சப் பேரியக்கத்தில் அது எவ்வகையில் ஒரு பொருட்டு என்பதை எல்லாம் கோனாரே பார்த்துக்கொள்வார். செயலாற்றும்போது நாம் மகிழ்ச்சியாக வாழ்கிறோம். நம் உள்ளம் தெளிவடைகிறது. நம் நாட்கள் பொருள்கொண்டதாக ஆகின்றன.
இன்னொன்று நம்மைச்சூழ்ந்துள்ள இந்த பிரபஞ்சம், இந்த நிலம் மிகமிக இனியது. இதை நோக்கித்தீர ஒரு வாழ்க்கை போதாது. என் ஐம்பதுவயது எனக்கு பெரும்தவிப்பையே அளிக்கிறது. வீட்டில் இருக்கமுடியவில்லை. ஒவ்வொருநாளும் பார்க்கும் வேளிமலையையே பார்த்துத்தீரவில்லை. பார்க்கப்பார்க்கக் களியாட்டமான இது நம்மைச்சூழ்ந்திருக்கையில் வாழ்க்கைக்கு என்னபொருள் என்றெல்லாம் கேட்பதே ஒருவகை அசட்டுத்தனம்.
எது உங்களை நிறைவுறசெய்கிறதோ அதில் மூழ்குங்கள். சூழ்ந்திருக்கும் இவ்வியற்கையை கொண்டாடக் கற்றுக்கொள்ளுங்கள் [கற்றுக்கொள்ளவேண்டும். தானாக அந்த மனநிலை அமையாது] உங்களுக்கு வாழ்க்கை பெரும் அர்த்தம் கொண்டதாக ஆகும்
மற்றபடி இறப்பு, அதன் பொருள் , அதற்கப்பாலான வாழ்க்கை எல்லாம் இப்படிச் சிந்திப்பதற்கான விஷயங்கள் அல்ல. மனம் நிலைகொண்டிருக்கையில் அவற்றைப்பற்றி சிந்திக்கலாம். இப்போது சிந்திப்பதென்பது நாம் அடைந்துள்ள சோர்வை நாமே பெருக்கிக்கொள்ள செய்யும் உத்தி மட்டுமே.
இந்த இருட்டறையிலிருந்து எழுந்து வாசலை திறப்பது ஒரு கணநேரம் நாம் கொள்ளும் உந்துதலால்தான் சாத்தியம்
ஜெ
அன்புள்ள ஜெ சார்
நான் உங்கள் புதிய வாசகன். உங்களுக்குக் கடிதமெழுத நினைப்பேன். ஆனால் தயக்கம். இப்போது நிறையபேர் அப்படி எழுதுவதனால் எழுதுகிறேன். ஈரோட்டுக்கு வர நினைத்தேன். பொருளாதாரம் அமையவில்லை. வாய்ப்பு கிடைக்கும்போது சந்திக்கிறேன்
நான் உங்களுடைய பொன்னிறப்பாதை நூலைத்தான் முதலில் வாசித்தேன். கல்யாணவீட்டில் கிடைத்தது என்று ஒரு நண்பர் சொல்லிக்கொடுத்தார். அதிலிருந்து வாசிக்க ஆரம்பித்து நிறைய வாசித்துக்கொண்டிருக்கிறேன். இன்னும் பெரிய நாவல்களை வாசிக்க ஆரம்பிக்கவில்லை. வாசிப்பேன்
இந்த வாசிப்பு எனக்கு கொடுத்தது என்ன? அதற்கு முன்னால் நான் வாசித்தவை எல்லாமே ஒன்று நேரம்போக்கு நாவல்கள். அதில் எதுமே நினைவில் இல்லை. அல்லது நவீன நாவல்கள். எல்லாமே காமம் மரணம் கொடுமை பற்றியவை. டிப்ரஸிவ் ஆக எழுதினால்தான் நவீன இலக்கியம் என்னும் நம்பிக்கை அவற்றில் இருந்தது. சிற்றிதழ் என்றாலே வாசித்தால் சலிப்பும் சோர்வும்தான்
இந்த இயற்கை அழகானது. வாழ்க்கைக்கு இதுவே போதும் என்ற எண்ணமே உங்கள் எழுத்துக்கள் எனக்கு அளித்தன. பயணக்கட்டுரைகளும் சரி கதைகளிலே வரும் இயற்கை வர்ணனையும் சரி
அதன்பின் ஊக்கத்துடன் செயல்வேகத்துடன் வாழ்வதே வாழ்க்கைக்கு ஒரே பொருள் என்ற எண்ணம். பிடித்ததைச் செய்யும்போதே அந்த வெறி வரும் என்பது
நான் அதனால் மிகவும் மாறினேன். நான் சில இடதுசாரி தீவிர இயக்கங்களில் இருந்து அங்கே உள்ள அசட்டுத்தனம் போலித்தனம் கண்டு மனம் சோர்ந்து வெளியே வந்து இருந்த நாட்களில் உங்களை வாசித்தேன். மிகப்ப்ரிய விடுதலையை அடைந்தேன். இன்றைக்கு என் மனமே விடுதலை அடைந்துள்ளது. வாழ்க்கைக்கு அர்த்தம் உள்லது. சுயமாக ஒரு தொழிலையும் நல்லபடியாகச் செய்து வருகிறேன்.
பைக்கிலே நீண்ட பயணங்கள் செய்வது என் வழக்கமாக உள்ளது. ஒருவாரம் முன்னால் பெலவாடி ஹலபீடு எல்லாம் போய்விட்டுவந்தேன்.
நன்றி
கிருஷ்ணகுமார்