வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 39

பகுதி நான்கு : கூற்றெனும் கேள் – 16

திருதராஷ்டிரரின் அறையைவிட்டு வெளியே செல்லும்போது கர்ணன் விப்ரரின் கண்களை நோக்கினான். அவற்றிலிருந்த விழியின்மை அவன் நெஞ்சை அதிரச்செய்தது. விப்ரர் மெல்ல நடந்துசென்று திருதராஷ்டிரரின் கைகளை பற்றிக்கொண்டார். இருவரும் கட்டெறும்பு பிறிதொன்றின்மேல் தொற்றிச் செல்வதுபோல மெல்ல சென்றனர். கர்ணன் அதை நோக்கியபின் “முன்பெலாம் விப்ரரின் தோள்கள் ஆற்றல் கொண்டிருந்தன. அவர் அரசரை தாங்கிச்செல்ல முடிந்தது. இப்போது அவராலேயே நடக்க முடியவில்லை” என்றான்.

துரியோதனன் “ஆம். ஆனால் பிறிதொருவரை அமர்த்த தந்தை ஒப்புக்கொள்ளவில்லை. இப்போது விப்ரரை அவர்தான் சுமந்து அழைத்துச் செல்கிறார்” என்றான். அவர்களுக்குப்பின் வாயில் மூடும் முன் கர்ணன் திரும்பி இசைக்கூடத்தை ஒருமுறை பார்த்தான். அவனைத் தொடர்ந்து வந்த ஜயத்ரதனும் இசைக்கூடத்தை ஒருமுறை பார்த்தபின் நீள்மூச்சுவிட்டான். கர்ணன் மீசையை முறுக்கியபடி இடைநாழியின் நீண்ட தூண்நிரையை நிமிர்ந்து நோக்கியபின் தலைகுனிந்து நடந்தான்.

துரியோதனன் “சைந்தவரே, தந்தை தங்களிடம் சொன்னதையே நானும் சொல்லவேண்டும். கதாயுதம் எடுத்துச் சுழற்ற கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் தோள்கள் வலுப்பெறும்” என்றான். “ஆம், தந்தை சொன்னதுமே எண்ணினேன்” என்றான் ஜயத்ரதன். “கதாயுதமென்பது மதயானையின் மத்தகம் போன்று வல்லமையை மட்டுமே கொண்டது என்பார் தந்தை. அதற்கு நுண்முறைகள் இல்லை. உருண்டு குவிந்த ஆற்றல் மட்டும்தான் அது. ஆகவேதான் படைக்கலங்களில் முதன்மையானது என்று அதை சொல்கிறார்கள். விண்ணளந்த பெருமான் கையில் ஏந்தியுள்ளது. இப்புவியில் மானுடன் உருவாக்கிய முதல் படைக்கலமும் அதுதான்” என்றான் துரியோதனன்.

அவர்கள் படிகளில் இறங்கியதும் துரியோதனன் “நான் அவையிலிருப்பேன் மூத்தவரே” என்று கர்ணனிடம் சொல்லிவிட்டு ஜயத்ரதனின் தோளைத் தொட்டு புன்னகைத்து விடைகொண்டு சென்றான். விதுரரும் புன்னகையுடன் விடைபெற்று அவனை தொடர்ந்தார். துச்சாதனன் கர்ணனிடம் “வருகிறேன் மூத்தவரே” என தலைவணங்கி அகன்றான். கர்ணன் நீள்மூச்சுடன் வெளியே சென்று தன் தேரை நோக்கி நடக்க பின்னால் துச்சளையும் ஜயத்ரதனும் வந்தனர். துச்சளை வேறெங்கோ நிலைத்த உள்ளத்துடன் கனவிலென வந்தாள். தேர்முறை அறிவிப்பாளன் “சிந்துநாட்டரசர் ஜயத்ரதர்” என கூவியறிவிக்க கரடிக்கொடிகொண்ட பொற்தேர் வந்து நின்றது.

ஜயத்ரதன் “தார்த்தராஷ்ட்ரி, நீ அதில் ஏறி அரண்மனைக்குச் செல்” என்றான். அவள் நிமிர்ந்து நோக்க “நான் வருகிறேன்” என்றான். அவள் தலையசைத்து கர்ணன் தோளைத்தொட்டு “வருகிறேன் மூத்தவரே” என்றபின் தேர்த்தட்டில் காலைத்தூக்கி வைத்து எடைமிக்க உடலை உந்தி மேலேறினாள். தேர் உலைந்து சகடம் ஒலிக்க கிளம்பியபோதுதான் அதில் ஜயத்ரதன் செல்லவில்லை என்பதை கர்ணன் உணர்ந்தான். அவன் நோக்க ஜயத்ரதன் “நான் தங்களுடன் வருகிறேன் மூத்தவரே” என்றான். கர்ணன் புரியாத பார்வையுடன் தலையசைத்தான்.

“அங்கநாட்டரசர் வசுஷேணர்!” என்று அறிவிப்பு ஒலிக்க கர்ணனின் தேர் வந்து நின்றது. கர்ணன் ஜயத்ரதனிடம் ஏறிக்கொள்ளும்படி கைகாட்டினான். அவன் ஏறியதும் தானும் ஏறி அமர்ந்தான். அவன் அமர்ந்தபின்னர் அமர்ந்த ஜயத்ரதன் தேரின் தூணைப்பற்றிகொண்டு பார்வையைத் தாழ்த்தி “தங்களை நான் நேற்று கோட்டைவாயிலில் புறக்கணித்தேன். அக்கீழ்மைக்காக பொறுத்தருளக் கோருகிறேன் மூத்தவரே” என்றான். முதல் சிலகணங்கள் அச்சொற்கள் கர்ணனின் சித்தத்தை சென்றடையவில்லை. பின்பு அவன் திகைத்தவன்போல உதடுகளை அசைத்தான். சிறிய பதற்றத்துடன் ஜயத்ரதன் கைகளை பற்றிக்கொண்டான்.

“நான் தங்களிடம் அங்கே தந்தைமுன் நின்று சொல்லவேண்டிய சொற்கள் இவை சைந்தவரே. ஆயினும் இப்போது இதை சொல்கிறேன். பொறுத்தருளக் கோரவேண்டியவன் நான். கலிங்கத்தின் அவைக்கூடத்தில் தங்களை நான் சிறுமை செய்ய நேரிட்டது. அதற்காக நான் துயருறாத நாளில்லை. அதன்பொருட்டு தாங்கள் கூறும் எப்பிழைநிகரும் செய்ய சித்தமாக இருக்கிறேன்” என்றான். ஜயத்ரதன் அவன் கைகளை தூக்கி தன் நெற்றியில் வைத்து “மூத்தவரே, இனி ஒருமுறை இச்சொற்கள் தங்கள் நாவில் எழக்கூடாது. என்னை தங்கள் இளையவர்களில் ஒருவர் என்று சற்று முன் அஸ்தினபுரியின் பேரரசர் ஆணையிட்டார். இனி தெய்வங்கள் எண்ணினாலும் அந்தப் பீடத்திலிருந்து நான் இறங்கப்போவதில்லை” என்றான்.

கர்ணன் அவன் தோளை வளைத்து தன்னுடன் இறுக்கிக்கொண்டான். அவன் “இத்தருணம் என் குலதெய்வங்களால் அளிக்கப்பட்டது மூத்தவரே” என்றான். அவனால் சொல்லெடுக்கமுடியவில்லை. தொண்டை அடைக்க மூச்சு நெஞ்சை முட்ட இருமுறை கமறினான். அரண்மனையை திரும்பி நோக்கி “இது நான் உயிருள்ள தெய்வம் ஒன்றைக்கண்ட ஆலயம். உளம்விரிந்து கனிந்த மூதாதை ஒருவர் இருக்குமிடம்” என்றான். கர்ணன் “ஆம், சைந்தவரே” என்றான். ஜயத்ரதன் அவன் கைகளைப்பற்றி “இளையோனே என்றழையுங்கள்… அச்சொல் அன்றி பிறிதெதையும் கேட்க நான் விரும்பவில்லை” என்றான். “ஆம், இளையோனே” என்றான் கர்ணன் புன்னகைத்தபடி.

சிரித்து “ஆமடா இளையோனே என்று தாங்கள் சொல்வீர்கள் என்றால் அதை என் வாழ்வின் பெரும்பேறென்று கருதுவேன்” என்றான் ஜயத்ரதன். சிரித்தபடி “ஆம்” என்று சொன்ன கர்ணன் உரக்க நகைத்து “ஆமடா மூடா” என்றான். “ஆ! அச்சொல் கௌரவர்குலத்தின் சொத்து அல்லவா? அங்கே கருவறை நிறைத்திருக்கும் பேருருவத் தெய்வத்தின் அருள்மொழி!” என்று ஜயத்ரதன் சிரித்தான். “மூத்தவரே, உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் உங்களைப் பார்த்த அக்கணமே நான் உங்கள் அடிகளில் விழுந்துவிட்டேன். உங்களைச் சூழ்ந்து வாழ்த்தொலித்துக் கொந்தளித்தவர்களில் ஒருவனாக நானும் கூத்திட்டுக்கொண்டிருந்தேன்.”

கர்ணன் அவன் தொடையை மெல்லத்தட்டி “நீ உளம்மெலிந்தவன் என்று எனக்கும் அப்போது தோன்றியது” என்றான். “ஆகவே நான் மேலும் துயர்கொண்டேன்.”  குரல் தழைய “ஆம் மூத்தவரே, நான் கற்கோட்டையின் இடிபாடுகளுக்குள் முளைத்துநிற்கும் வெளிறிய செடிபோன்றவன்” என்றான் ஜயத்ரதன். பின்பு சற்றுநேரம் சாலையில் ஓடிய மாளிகைகளை நோக்கிக்கொண்டிருந்தான். பெருமூச்சுடன் திரும்பி “மூத்தவரே, என் தந்தையைப்பற்றி தாங்கள் அறிந்திருப்பீர்கள்” என்றான்.

“சிந்துநாட்டரசர் பிருஹத்காயர். சூதர்களின் பாடல் பெற்றவர் அல்லவா?” என்றான் கர்ணன். ஜயத்ரதன் “ஆம், ஆனால் நற்பாடல்களில் அல்ல” என்றான். அவன் நிமிர்ந்து நோக்கினான். “சிந்துவின் அரசராக அவர் ஆனது உரிய வழிமுறைகளில் அல்ல. அதை தாங்கள் அறிந்திருப்பீர்கள்.” கர்ணன் “இல்லை” என்றான். ஜயத்ரதன் “இருக்கலாம். ஆனால் உலகே அதை அறிந்திருக்கிறது என்னும் உளமயக்கிலிருந்து என்னால் விடுபட முடிந்ததே இல்லை” என்றான். அவனே பேசட்டுமென கர்ணன் காத்திருந்தான்.

“எங்கள் குலவரிசையை பிரம்மனிலிருந்து தொடங்கி முதற்றாதை பிரகதிஷு வரை கொண்டுவருவார்கள் சூதர்கள். சந்திரகுலத்தில் அஜமீடரிலிருந்து உருவானவை சௌவீர, பால்ஹிக, மாத்ர, சிபி நாட்டு அரசகுலங்கள். அதிலிருந்து பிரிந்து வந்து மூதாதை பிரகதிஷு உருவாக்கியது எங்கள் குலம்.

இமவானின் ஏழு அளிமிகு அங்கைகளால் தழுவப்பட்ட மண் என்று சிந்துநாட்டை சொல்கிறார்கள் கவிஞர். அன்னம் ஒரு போதும் குறையாத கலம். தெய்வங்கள் பலிபீடம் காயாது உண்ணும் நிலம். பாரதவர்ஷத்தின் தொன்மையான ஜனபதங்களில் ஒன்று அது. இங்குள்ள அத்தனை தெய்வங்களும் அம்மண்ணில்தான் முளைத்தன என்பார்கள். அத்தெய்வங்கள் கால்தொட்டுச் சென்ற இடங்கள் நெல்லும் கோதுமையும் கரும்பும் மஞ்சளும் தோன்றின. மைந்தரும் சொற்களும் அறங்களும் அங்குதான் எழுந்தன. அந்நிலம் நிரம்பி வழிந்தோடி பிறமண்ணில் சென்று பெருகியவைதான் இங்குள்ளவை அனைத்தும் என்று ஒரு மூத்தோர் சொல்லுண்டு.

மூத்தவரே, மூதாதை பிரகதிஷுவின் மைந்தர் பிரகத்ரதர். அவருக்குப் பிறந்தவர் உபபிரகதிஷு. அவர் புதல்வர் பிரகத்தனு. அவருக்கு இருமைந்தர்கள். மூத்தவர் பிருகத்பாகு. இளையவர் எந்தை பிருஹத்காயர். எங்கள் பெரியதந்தையார் பிருகத்பாகுவின் காலத்திற்கு முன் சிந்துநாடு பாரதவர்ஷத்தின் பிற பழைய நாடுகளைப்போலவே அளவில் சுருக்கமும் செல்வத்தில் ஒடுக்கமும் கொண்டதாகவே இருந்தது. பிருகத்பாகு சிந்துநாட்டின் ஏழு நதிகளையும் நூற்றெட்டு கால்வாய்களால் இணைத்தார். ஆகவே சூதர்களால் நீர்ச்சிலந்தி என்று அவர் அழைக்கப்படுகிறார். இன்றும் எங்கள் நாட்டின் சிற்றூர்களில் குலதெய்வங்களின் நிரையில் அவரும் வந்திருந்து அருள் புரிகிறார்.

பெரியதந்தையார் சிந்துவின் நதிக்கரைகளில் படித்துறைகளை அமைத்தார். வணிகப்பாதைகள் இங்கு அமையாது போவதற்கு என்ன பின்னணி என்று ஆராய்ந்தார். சிந்துநாட்டின் மண் ஒரு மழையிலேயே இளகிச் சேறாகும் மென்மணல். பொதிவண்டிகள் கோடைகாலம் அன்றி பிறிது எப்போதும் வழியிலிறங்க முடியாது. கோடையிலும் எடைமிக்க வண்டிகள் சக்கரம் புதைந்து சிக்கிக்கொண்டன. எருமைகள் இழுக்கும் சிறிய வண்டிகள் அன்றி பிறிதெவையும் இருக்கவில்லை. பிருகத்பாகுவின் ஆட்சிக்காலத்தில்தான் நாடெங்கிலும் மரத்தளம் போடப்பட்ட வண்டிப்பாதைகள் அமைந்தன.

அப்பாதைகள் எங்கள் நாட்டின் பொருளியலை சில ஆண்டுகளிலேயே பலமடங்கு பெருக வைத்தன. கருவூலம் நிறைந்தது. எங்கள் கலங்கள் தேவபாலபுரம் வரை சென்றன. அங்கிருந்து யவனப்படைக்கலங்களை கொண்டுவந்து சேர்த்தன. மேற்குக்கரையில் காந்தாரத்திற்கும் கூர்ஜரத்திற்கும் நிகரான வல்லமையாக சிந்துநாடு எழுந்து வந்தது என் பெரியதந்தை பிருகத்பாகுவின் ஆட்சியில்தான்.

அவருக்கு அடங்கிய இளையோனாகவே எந்தை பிருஹத்காயர் இருந்தார். குழந்தையாக அவர் வெளிவருகையிலேயே அன்னையை பிளந்து எழுந்தார். ஆகவே பேருடல் கொண்ட அவருக்கு பிருஹத்காயர் என்று பெயரிட்டனர். இளமையிலேயே வேட்டையாடுவதிலும் தொலைதூரப் பயணங்களிலும் நாட்டம் கொண்டவராக இருந்தார். படையெடுத்துச் சென்று சிந்துநாட்டுக்காக சிறுநாடுகள் பலவற்றையும் வென்றவர் அவரே. திறை கொண்டுவந்து சேர்த்து சிந்துவின் தலைநகர் விருஷதர்புரத்தை பெருநகராக்கி கோட்டைசூழ மாளிகைசெறிய அமைத்தவரும் எந்தையே.

வெற்றியால் எந்தை ஆணவம் கொண்டவரானார். ஆணவம் சினத்தை வளர்த்தது. சினம் சொற்களை சிதறச்செய்தது. அவரது ஆணவச்சொற்கள் மூத்தவர் காதுகளையும் எட்டிக்கொண்டிருந்தன. சிந்துவின் படைகள் இளையவரையே தங்கள் தலைவராக எண்ணுகின்றன என்பதை மூத்தவரிடம் அமைச்சர்கள் சொல்லியிருந்தனர். நாளுமொரு விதையென வஞ்சம் மூத்தவர் நெஞ்சை சென்றடைந்தபடியிருந்தது.

மூத்தவருக்கு மைந்தனில்லை என்பதை சிந்துவைச் சூழ்ந்திருந்த சௌவீரர்களும் மாத்ரர்களும் பால்ஹிகர்களும் சைப்யர்களும் உற்று நோக்கிக்கொண்டிருந்தனர். பட்டத்தரசி சுமதி சௌவீர கொடிவழியில் வந்தவர். என் முதலன்னை பிரகதி பால்ஹிகக் குருதிகொண்டவர். இளையவருக்கு மைந்தர் பிறந்தால் மூத்தவரின் முடியுரிமை இளையவர்குடிக்குச் செல்லும் என்றும் ஒருவயிற்றோர் நடுவே பூசல்முளைக்குமென்றும் அவர்கள் எதிர்நோக்கினர். அவர்களின் ஒற்றர்கள் இரு மகளிர்நிலைகளுக்குள்ளும் ஊடுருவி இரு அரசியரிடமும் பழிகோள் ஏற்றினர். பட்டத்தரசி இளையவரின் எண்ணங்கள் கரவுவழிச் செல்பவை என அரசரை நாளும் எச்சரித்துக்கொண்டிருந்தார்.

ஒருநாள் மூத்தவர் மதுவருந்திக் கொண்டிருக்கையில் இளையவர் சென்று அரசச்செய்தி ஒன்றை சொன்னார். மூத்தவர் அவர் தன்னிடம் நின்றுபேசியதனாலேயே உள்சினம் கொண்டவரானார். மது அவரது சினத்தை பெருக்கியது. அரசரிட்ட ஆணையை இளையவர் மறுத்துச் சொல்லாட நேர்ந்தது. சொல்லென்பது பன்னிரு பக்கங்கள் கொண்ட பகடை என்கிறார்கள் நூலோர். அதில் வாழ்கின்றன ஊழை ஆளும் ஏழு தெய்வங்கள். கல்லுரசி எழும் பொறி என விரும்பாச் சொல் ஒன்று அரசரின் நாவில் எழுந்ததைக் கண்டு ‘எண்ணிச் சொல்லுங்கள் மூத்தவரே’ என்றார் எந்தை.

அக்கணத்தை தெய்வங்கள் பற்றிக்கொண்டன. சினந்தெழுந்த மூத்தவர் இளையவரை நோக்கி ‘சிறுமதியோனே, எதிர்ச்சொல் எடுக்கிறாயா? என் கால்கட்டைவிரல் நீ…’ என்றார். அச்சொல்லின் சிறுமையால் ஆணவம் புண்பட்ட எந்தை ‘இந்நகரை என் செல்வத்தால்தான் அமைத்திருக்கிறீர்கள். இந்நகருக்கு நானும் உரிமை கொண்டவன். நானும் இதற்கு அரசனே’ என்றார். மூத்தவர் சினந்தெழுந்து தன் காலில் இருந்த மிதியடியை எடுத்து இளையவரை அடிக்கப்போக அதைத் தடுக்கும் பொருட்டு கையை உயர்த்தி அவர் தலையில் ஓங்கி அறைந்தார் எந்தை. அவரது கைகள் மதகளிற்றின் துதிக்கைக்கு நிகரானவை என்று மற்போர் வீரர் சொல்வதுண்டு. அடிபட்ட தமையன் அங்கேயே விழுந்து உயிர் துறந்தார்.

அதன்பின்னரே தான் செய்ததென்ன என்று எந்தை அறிந்தார். நெஞ்சு நடுங்கி அலறியபடி இடைநாழியில் ஓடி மயங்கி விழுந்தார். அமைச்சர்கள் அவரை எழுப்பியதும் நெஞ்சில் அறைந்து கதறி அழுதார். அக்கணமே தானும் உயிர்துறக்க எண்ணி வாளை உருவ அவர்கள் அவர் கையை பற்றிக்கொண்டனர். ‘நான் உயிர் வாழ மாட்டேன்! இப்பெரும்பழியுடன் இங்ஙனமே இறக்க விழைகிறேன்!’ என்று கதறினார்.

39

‘அரசே, இன்றுதான் நூற்றாண்டுகள் பழமைகொண்ட இந்தச்செடி வேரூன்றி கிளைவிரித்து மரமாகத் தொடங்கியுள்ளது. இதன் எதிரிகள் நாற்புறமும் சூழ்ந்துள்ளனர். அவர்களின் அம்புமுனைகள் அனைத்தும் இந்நகரை நோக்கி அமைந்துள்ளன. இத்தருணத்தில் நீங்கள் இருவரும் உயிர் துறந்தால் ஆவதென்ன? தங்களுக்கு இன்னும் மைந்தர் பிறக்கவில்லை. மூத்தவருக்கும் மைந்தரில்லை. முடிகொண்டு நாடாள மைந்தரின்றி சிந்துநாடு அடிமைகொண்டு அழியும். தங்கள் வாழ்க்கை மலர்ந்தது என எண்ணி புன்னகை கொண்டுள்ள இம்மக்கள் அனைவரும் தங்களைச்சார்ந்தே இருக்கின்றனர். மன்னன் முதற்றே மலர்தலையுலகு.’

‘இது அறியாது செய்த பிழை. இதற்கு மாற்றுகள் என்னவென்று பார்ப்போம். வைதிகரை வினவுவோம். நிமித்திகரை உசாவுவோம். களஞ்சியம் நிரம்ப பொன் இருக்கின்றது. நெஞ்சில் துயரும் உள்ளது. வேண்டிய பூதவேள்விகள் செய்வோம். பெருங்கொடைகள் இயற்றுவோம். பேரறங்கள் அமைப்போம். தாங்கள் வாழ்ந்தாக வேண்டும். இந்நாட்டின் கொடியை தாங்கள் ஏந்தவேண்டும். தங்கள் குருதியில் பிறக்கும் மைந்தனுக்கு மணிமுடி சூட்டியபின் தாங்கள் காடேகலாம். வேண்டும் தவம் செய்து பிழையீடு செய்யலாம்’ என்றனர்.

பல நாழிகை நேரம் அமைச்சர்கள் சூழ்ந்து நின்று சொல்ல எந்தை மனம் தேறினார். மூத்தவர் இயல்பாகவே இறந்தார் என்று அரண்மனை மருத்துவர் எழுவர் முறைமைசார்ந்து அறிவிக்க அவரது உடல் எந்தையாலேயே எரியூட்டப்பட்டது. ஆனால் மஞ்சத்தில் வெண்பட்டு மூடிக்கிடத்தப்பட்டிருந்த மூத்தவரின் முகத்தை ஒருமுறை நோக்கியதுமே பேரரசி சுமதிதேவிக்கு தெரிந்துவிட்டது. ‘இனி எனக்கு ஒன்றும் எஞ்சவில்லை இங்கு. என் கொழுநரின் சிதையில் பாய்ந்து உயிர் துறப்பேன்’ என்று அவர் சொன்னார். அரசியின் கால்பற்றி அழுதனர் மகளிர். ‘மைந்தர் இல்லாத கைம்பெண் உயிர் துறப்பதே முறை. நான் வாழ்வதன் பொருளும் இன்றே அழிந்துவிட்டது’ என்று அவர் சொன்னார்.

செய்தியறிந்த எந்தை அரசியின் மாளிகை முகமுற்றத்தில் சென்று இரவெல்லாம் நின்று மன்றாடினார். அரசி அவர் அரண்மனைக்கு அருகே வரக்கூட ஒப்புதல் அளிக்கவில்லை. எரியூட்டுநாளில் மணக்கோலம் பூண்டு கண்ணீருடன் வந்த பட்டத்தரசியைக் கண்டு நகர்மக்கள் கதறியழுதனர். அவர் எரிமேல் ஏறியபோது இரு கைகளையும் கூப்பியிருந்தார். உதடுகள் எதையோ சொல்லிக்கொண்டிருந்தன. எரிந்தமைந்து மூன்றாம்நாள் சிதைஎலும்பு எடுத்தபோது அந்தக் கைகள் எலும்புக்குவையாக கூப்பிய வடிவிலேயே இருந்தன என்றார்கள் சுடலையர்.

பதினாறு நாட்கள் நீத்தார்க்கடன்கள் முடிந்தபின் அரியணை அமர்ந்தபோது எந்தையின் பேருடல் பாதியாக வற்றிச் சுருங்கியிருந்தது. செங்கோலை ஏந்தவும் மணிமுடியை சூடி நிமிர்ந்தமரவும்கூட அவரால் இயலவில்லை. நஞ்சுண்ட யானை என அவர் நடுங்கிக் கொண்டிருந்தார். இரவுகளில் கண்மூடினால் கைகூப்பியபடி நடந்து சென்று தன் கொழுநரின் சிதைமேல் ஏறி கொழுந்துவிட்ட நெருப்பை பட்டாடையை என எடுத்து அணிந்துகொண்ட பேரரசியின் தோற்றமே அவர் கண்களுக்குள் இருந்தது. எந்தை மிதமிஞ்சி மதுவருந்தும் பழக்கம் கொண்டவரானார். துயில்வதற்காக மது அருந்தத்தொடங்கியவர் பின்னர் அரியணையிலும் மதுஅருந்தி அமர்ந்திருந்தார். படைநடத்தவும் அவையமர்ந்து அரசுசூழவும் அவரால் இயலாதென்று ஆயிற்று.

அமைச்சர்கள் அவர்பொருட்டு அரசாண்டனர். ஒவ்வொரு நாளும் தலைமை அமைச்சர் வராகரின் கைகளை பற்றிக்கொண்டு ‘எனக்கு விடுதலை கொடுங்கள். இவ்வரியணை அமர்ந்து கோலேந்தும் ஒவ்வொரு முறையும் என் உடல் பற்றியெரிகிறது. நான் உண்ணும் ஒவ்வொரு உணவும் அமிலமென என் உடலை எரிக்கிறது. இப்பெரும் கொடுமையிலிருந்து என்னை விடுவியுங்கள்’ என்று மன்றாடினார். ‘அரசே, இனிமேலும் பிந்த வேண்டியதில்லை. தாங்கள் மற்றொரு மணம் கொள்ள வேண்டும். தங்கள் குருதியில் ஒரு மைந்தர் பிறக்கையில் அவனிடம் அரசை ஒப்படைத்துவிட்டு காடேகலாம்’ என்றார் அமைச்சர்.

எந்தை வேறுவழியின்றி அதற்கு ஒப்புக் கொண்டார். அவருக்காக அண்டை நாடுகளில் பெண் தேடினர். சௌவீரர்கள் அவர்களின் இளவரசியை அவருக்கு அளிக்க விழைந்தனர். ஆனால் எந்தை தொலைமலையின் பழங்குடி அரசான திரிகர்த்தர்களின் இளவரசி மித்ரையை தெரிவுசெய்தார். மிக இளையவளாகிய இரண்டாவது துணைவியிடம் இனிதாக அவர் ஒரு நாளும் இருந்ததில்லை. தன் நாட்டிற்கென ஆற்றவேண்டிய கடனென்றே எண்ணியிருந்தார். அவள் கருவில் நான் எழுந்தேன்.

தீரா உளநோய் ஒன்றால் எந்தை உருகி அழிந்து கொண்டிருப்பதை என் அன்னை பார்த்தார். அவரைக் கொல்லும் அக்கூற்று எது என அறிய விழைந்தார். ஆயிரம்முறை நயந்து கேட்டும் அவர் உரைக்கவில்லை. பின்னர் கள்மயக்கில் அவர் துயில்கையில் ஒருமுறை அன்னை அருகணைந்து ‘அரசே, தங்களை அலட்டும் அத்துயர் என்ன?’ என்று கேட்டபோது அவர் சினந்து ‘செல்… விலகு!’ என்று கூவினார். ‘நீங்கள் என் மைந்தனுக்காக சேர்த்துவைத்துள்ள பழி என்ன?’ என்றார் அன்னை. அருகே இருந்த வாளை எடுத்து அவளை வெட்ட வந்தார்.

என் அன்னையின் உள்ளத்தில் அவரது அச்சினம் ஆறாது எரியும் தழல் ஒன்றை உருவாக்கியது அவரது குருதியில் நான் வளர வளர அவ்வினா அவருள் எழுந்து பெருகியது. எந்தையருகே அன்னை செல்லாமலானார். அவருள் எழுந்த வினா அவர் துயிலை தென்னகப்பெருங்காற்று முகில்மாலைகளை என அள்ளி அகற்றிக் கொண்டிருந்தது. இரவுகளில் அரண்மனைகளில் நடந்தலைவது அவர் வழக்கமாயிற்று. ஒவ்வொருநாளும் தந்தை துயிலும் படுக்கை அறைக்குள் வந்து அவரை நோக்கி நின்று மீள்வார். ஒருமுறை எந்தை மதுவருந்தி தனிமஞ்சத்தில் துயில்கையில் அவர் துயிலில் அழும் ஓசை கேட்டு அன்னை மெல்ல நடந்து அவர் அறைக்குள் சென்றார்.

அவர் கால் தட்டி ஒரு கிண்ணம் உருளவே எந்தை திடுக்கிட்டு விழித்து இரு கைகளையும் மஞ்சத்தில் ஊன்றி எழுந்தமர்ந்து அவரை நோக்கி ‘நீங்களா! மூத்தவளே நீங்களா? சிதையிலிருந்து எழுந்து வந்தீர்களா? உங்கள் உடல் எரிவதை நான் பார்த்தேன். அனல் உங்கள் தசைகளை பொசுக்க நெளிந்துருகும் உடலில் இரு விழிகள் ஒளிவிடுவதை கண்டேன்’ என்று இருகைகளையும் தலைக்கு மேல் கூப்பி கூவினார். ‘என்னை முனியாதீர்கள்! என் பிழை பொறுத்தருளுங்கள்! நான் அறியாது செய்த செயல் அது. மூத்தவரை கொன்றபிழை என் தலைமுறைகளை எரியச்செய்யும் என்றறிவேன். இப்பொறுப்பை நிறைத்து பெருந்தவம் செய்து என்னை மீட்பேன். நம்புங்கள்! என்னை முனியாதீர்கள் அன்னையே!’

அன்னை அன்று அறிந்துகொண்டார் நடந்தது என்னவென்று. அவர் அனல் அவிந்தது. ஆனால் அதன் பின் அவர் உடல் உருகத்தொடங்கியது. அவர் பார்வை எப்போதும் வெறுஞ்சுவரில் நின்றிருந்தது. பிறகு ஒருமுறைகூட எந்தை முன் அவர் வரவில்லை. தன்னை பார்க்கவரும் அவரையும் முழுமையாக தவிர்த்துவிட்டார். மகளிர்மாளிகையின் இருண்ட தனிமையில் நிலைத்த விழிகளுடன் ஓயாது ஆடைநுனி பற்றி சுற்றிச்சுற்றி தவித்துக்கொண்டிருக்கும் கைகளுடன் நடுங்கும் உதடுகளுடன் அவர் அமர்ந்திருந்தார் என்கிறார்கள். பத்தாவது மாதம் நான் பிறந்தபோது அன்னை என்னைப்பாராமலே உயிர் துறந்தார்.

என்னை மருத்துவச்சிகள் குருதி துடைத்து கருவறை மணத்துடன் கொண்டுவந்து தந்தையின் கையில் அளித்தபோது கைநீட்டி என்னை வாங்கக்கூட அவர் முன்வரவில்லை. ‘அரசே, இது தங்கள் மைந்தன். தொட்டுப்பாருங்கள்’ என்று மருத்துவச்சிகள் சொன்னபோது ‘வேண்டாம்… என் கைகளில் வேண்டாம்’ என்று மட்டும் அவர் சொன்னார். அமைச்சர்கள் ‘தாங்கள் கையில் மைந்தனை வாங்கி குடிமுத்திரையை நெற்றியிலணிவிக்கவேண்டும் என்று குலமுறை உள்ளது’ என்று சொன்னபோது கைகளை பின்னுக்கு கட்டிக் கொண்டு ‘இல்லை… என் கைகளுக்கு அத்தகுதி இல்லை’ என்றார்.”

முந்தைய கட்டுரைவெண்முரசும் தனித்தமிழும்
அடுத்த கட்டுரைபுதியவாசகர்களின் கடிதங்கள் 10