மிமிக்ரி கேரளம்

நாதிர்ஷா
நாதிர்ஷா

சில விசித்திரமான ரசனைகள் எனக்குண்டு என்று சொல்லும்போது நண்பர்கள் ஆச்சரியப்படுவதுண்டு. அதிலொன்று மலையாள மிமிக்ரி மற்றும் காமெடி ஷோக்கள். எப்போதும் சலிப்புறும்போது நான் அதைத்தான் தேடிச்செல்கிறேன்

பொதுவாகவே மிமிக்ரி என்பது ஒரு அசட்டுக்கலை.தமிழக மிமிக்ரி ஒரு வன்கொடுமை. ஆனால் மலையாளத்தில் மட்டும் அதை ஒரு நுண்கலையாக வளர்த்து எடுத்து மிகப்பெரிய ஒரு துறையாக ஆக்கியிருக்கிறார்கள். மலையாள வெகுஜனப்பண்பாட்டையும் பொதுவான அரசியல் சூழலையும் அறிந்தவர்களுக்கு அது பெரியதோர் கொண்டாட்டவெளி. நக்கல்களும் கிண்டல்களும் மிகநுட்பமானவை என்பதனால் அதை அறியாதவர்கள் அதிகமாகரசிக்க முடியாது.

நண்பர் தமிழினி வசந்தகுமார் ஒருமுறை சொன்னா. மிகிக்ரிக்கலையை வளர்த்து அதை ஒரு கேரளப்பொதுப்பண்பாடாகவே ஆக்கிவிட்டார்கள் மல்லுக்கள், விளைவாக  மலையாளிகளில் மிமிக்ரி செய்யாதவர்களே இல்லை என்று.

இன்னொரு பக்கம் மிமிக்ரி கலையால் கேரளத்தில் எதுவுமே தீவிரமல்ல என்ற மனநிலை உருவாகிவிட்டது என்று சகரியா கடுமையாகக் குற்றம்சாட்டினார் ஒருமுறை. [ஆனால் அவரே ஓர் இலக்கிய மிமிக்ரிக் கலைஞர். பிறரது எழுத்துமுறையை போலிசெய்து அவர் எழுதிய கேலிக்கதைகள் பல முக்கியமான கலைப்படைப்புகள்]

சொல்லப்போனால் இடதுசாரி அரசியலின் தசையிறுக்கத்தை மிமிக்ரி முழுமையாகவே அடித்து நொறுக்கிவிட்டது என்றே சொல்லலாம். அரசியல்வெறிகளை சிரிப்பால் எதிர்கொண்ட மிமிக்ரிதான் கேரளத்தில் அரசியல்கொலைகளை இல்லாமலாக்கியது என்பவர்கள் உண்டு.

மிமிக்ரி கேரளத்தின் செல்லக்குழந்தை. அதை சீண்ட எவரையும் அனுமதிப்பதில்லை அங்குள்ள பொதுமக்களின் கூட்டுமனசாட்சி. ஆகவே அவர்கள் எதையும் செய்யலாம். மம்மூட்டியையும் மோகன்லாலையும் உட்காரச்செய்து கேலிசெய்து தாறுமாறாகக் கிழிக்கலாம். முதலமைச்சரையும் அமைச்சர்களையும் எதிர்கட்சிக்காரர்களையும் வேடிக்கைப்பொருட்களாக ஆக்கலாம்,

 

அய்யப்ப பைஜு
அய்யப்ப பைஜு

அத்தனை தொலைக்காட்சிகளிலும் மிமிக்ரிதான் பெரும்பாலும் ஓடிக்கொண்டிருக்கும். அதைத்தவிர அன்றாடம் என மேடைநிகழ்ச்சிகள். பல மிமிக்ரிக் கலைஞர்கள் திரைநட்சத்திரங்களைவிட புகழும் பணமும் சம்பாதிப்பவர்கள். சாதாரண மக்களின் பேச்சில் புழங்கும் பல சொல்லாட்சிகள் மிமிக்ரியில் இருந்து வந்தவை.

கேரளத்தின் பல புகழ்பெற்ற கலைஞர்கள் மிமிரியிலிருந்து வந்தவர்கள். நெடுமுடிவேணு, கலாபவன் மணி, கலாபவன் ஷிஜுன், லால், ஹரிஸ்ரீ அசோகன் ,சலீம்குமார்,ஜெயசூர்யா,ஜெயராம், திலீப், சுராஜ் வெஞ்ஞாறமூடு, என ஒரு நீண்ட பட்டியலே உண்டு.ஒவ்வொரு சினிமாவிலும் ஒருவர் அப்படி வந்துகொண்டிருக்கிறார்கள்

ஹரிஸ்ரீ , கலாபவன் என்னும் இரு கலைக்குழுக்கள் மிமிக்ரியின் விளைநிலங்கள். என் பிரியத்திற்குரிய பல கலைஞர்கள் அவற்றிலிருந்து வந்தவர்கள். கலாபவன் மணி அவர்களில் முதன்மையானவர். ஜெயராம் மேடையில் நஸீராகவே மாறக்கூடியவர்.

இன்றுள்ள நட்சத்திரங்களில் கோட்டயம் நசீர் மலையாள நடிகர்கள் அனைவரின் குரலிலும் பேசுவார். அதாவது அவர்களின் புகழ்பெற்ற வசனங்களை தோராயமாக உச்சரிப்பதல்ல அது. அந்த நடிகர்களின் மனைவியரிடமே ஃபோனில் அழைத்து அவர்களைப்போல பேசி ஏமாற்றும் அளவுக்கு துல்லியமானது. அப்படி ஒரு நிகழ்ச்சி ஒருமுறை ஒளிபரப்பானது.

 

நடிக்ர்கள் மட்டுமல்ல அரசியல்வாதிகள் இலக்கியவாதிகள் செய்தியறிவிப்பாளர்கள் என அனைவரின் குரல்களிலும் அத்தனை ஒலிநுட்பங்களுடனும் உரையாட அவரால் முடியும். அவருக்கு நிகரான கலைஞர் நாதிர்ஷா.. சமீபமாக பிஷாரடி என்பவர் புகழ்பெற்ற கலைஞர். அவருடையது புத்திசாலித்தனமான உள்ளடிகள்.

அய்யப்ப பைஜூ, நெல்ஸன் இருவரும் சில நிரந்தரக் கதாபாத்திரங்களை நடிப்பவர்கள். ஸ்டேண்டப் காமெடி என சொல்லலாம். குடி கேரளத்தின் முக்கியமான நோய், குடிகாரர்களின் பாவனைகளை இவர்கள் நடிப்பது மிகமிகநுட்பமானது. சற்றும் மிகையற்ற, ஆனால் வெடித்துச் சிரிக்கவைக்கும் நடிப்பு. உண்மையாகவே அரசியலையும் பண்பாட்டையும் புரிந்துகொண்டு உருவாக்கப்படும் நக்கல்கள்.

1[கோட்டயம் நசீர்]

 

பலசமயம் இந்த நக்கல் எந்த எல்லையையும் கடக்கும். மறைந்த கேபி.உம்மர் நடனநிகழ்ச்சிக்கு நீதிபதியாக வருகிறார். ’ஷாஜியுடே பெண்வேடம் அஸலாயி. வைகுந்நேரம் பங்களாவிலேக்கு வா” . . இஸ்லாமிய நம்பிக்கைகளை துபாயில் வைத்து கிண்டல் செய்கிறார்கள். முஸ்லீம் மதகுரு இவர்களின் நிரந்தர இலக்கு

இன்னொரு முக்கியமான விஷயம் இந்த நகைச்சுவைகளை இவர்களே உருவாக்குவதில்லை. தேர்ந்த நகைச்சுவை எழுத்தாளர்கள் அமர்ந்து உருவாக்கி பயின்று மேடையேற்றுகிறார்கள். கிண்டல்களும் பகடிகளும் நுணுக்கமானவையாகவும் அர்த்தமுள்ளவையாகவும் இருக்கும். தீவிர இலக்கியவாதிகளைப் பற்றிய பகடிகளும் பெருவாரியாக ரசிக்கப்படுகின்றன. குறிப்பாக சச்சிதானந்தன் இவர்களின் முக்கியமான இரை. ஒருமுறை என்னையே ஒருவர் பகடி செய்தார், தமிழ்நெடியடிக்கும் மலையாளத்தில் நிறுத்தி நிறுத்தி நான் பேசிக்கொண்டிருப்பதை நானே திகைப்புடன் கேட்டுக்கொண்டிருந்தேன்.

பண்பாட்டுரீதியாகவும் ஒரு நுட்பம் உண்டு. இவர்களில் அனேகமாக அனைவருமே வடகேரளத்தைச்சார்ந்தவர்கள். கணிசமானவர்கள் இஸ்லாமியர். திருவனந்தபுரத்தைச்சேர்ந்த கலைஞர்கள் எவருமில்லை. இக்கலை உருவாவதற்கான சூழல் அங்கே உள்ளதுபோலும்.

பிஷாரடி
பிஷாரடி

ஏசியானெட் அத்தனை கலைஞர்களையும் மேடையேற்றி ஒரு நிகழ்ச்சி நடத்தியத்து. நட்சத்திர மதிப்புள்ளவர்களே கிட்டத்தட்ட ஐம்பதுபேர் இருக்கிறார்கள். இந்தியாவில் வேறெங்கும் இத்தனை மிமிக்ரிக் கலைஞர்கள் இல்லை. அவர்களுக்கு இத்தனை சுதந்திரமும் இல்லை. கேரளம் அதன் அனைத்து கலை இலக்கிய அரசியல் கொந்தளிப்புகளுக்கும் அடியில் சிரித்துக்கொண்டே இருக்கிறது.

இந்தக்கலைஞர்களின் மிதமிஞ்சிய பணிவைத்தான் நான் எப்போதும் பார்த்துக்கொண்டிருப்பேன். நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன் என்ன ஒரு பவ்யம், மன்னிப்பு கோரல். ஆரம்பித்ததுமே விஸ்வரூபம் எடுத்து கிழித்து கந்தரகோலமாக்குகிறரகள். அந்தப்பணிவு நடிப்பு அல்ல. ஆனால் உள்ளே ஆன்மா கேலிப்புன்னகை செய்துகொண்டிருக்கிறது.

இன்று ஒரு நீண்ட எழுத்துப்பணிக்குப்பின், வாசிப்புச் சோர்வுக்குப் பின் ஒருமணிநேரம் யூடியூபில் அவர்களின் மிமிக்ரியை பார்த்து வெடித்துச் சிரித்து எளிதானேன். அவர்களில் பலர் தெரிந்தவர்கள். அய்யப்ப பைஜுவுக்குப் ஃபோன்செய்து நன்றி சொல்லிவிட்டு புன்னகையுடன் தூங்கச்செல்கிறேன்

முந்தைய கட்டுரைசங்கரர் உரை -விமர்சனம்
அடுத்த கட்டுரைஆயிரம் நாற்காலிகள்