‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 37

 பகுதி நான்கு : கூற்றெனும் கேள் – 14

அறைவாயிலில் நின்ற பிரமோதர் மெல்லிய குரலில் “அரசே” என்றார். அணியறையிலிருந்து முழுதணிக் கோலத்தில் வந்த கர்ணன் அவரை நோக்கி புன்னகைத்து “பிந்திவிட்டதா பிரமோதரே?” என்றான். அவர் புன்னகைத்து தலைவணங்க “செல்வோம்” என்றபடி தலை நிமிர்ந்து கைகளை வீசி இடைநாழியில் நடந்தான். அவன் காலடிகள் அரண்மனையின் நெஞ்சுத் துடிப்பென எதிரொலி எழுப்ப படிகளில் இறங்கி கூடத்தை அவன் அடைந்தபோது மூச்சிரைக்க தொடர்ந்து வந்த பிரமோதர் “பேரரசரின் சிற்றவையில் தங்களை சந்திக்க விழைவதாக அரசர் சொன்னார்” என்றான்.

கர்ணன் திரும்பி “இன்று அந்திக்குப்பின் அல்லவா பெருமன்று கூடுகிறது?” என்றான். “ஆம் அரசே. இளவரசர் மண்அளித்து பொன்சூடும் விழவுகள் இதுவரை நடந்தன. வைதிகரும் குலமூத்தாரும் சூதரும் செய்யும் சடங்குகள் முடிந்து அரசர் தன் தனியறைக்கு மீண்டார். நீராடி தந்தையின் அவைக்குள் அவர் வரும்போது தாங்கள் அங்கு இருத்தல் நலம் என்று எண்ணினார்” என்றார்.

கர்ணன் புன்னகைத்து அவர் தோளில் தட்டியபடி “நன்று” என்றபின் படிகளில் இறங்கி முற்றத்தில் அவனுக்காக காத்துநின்ற பொற்பூச்சுத் தேரில் ஏறிக்கொண்டான். தலைவணங்கி வாழ்த்துரை சொன்ன பாகன் புரவியை மெல்ல தட்ட அது கிண்கிணி ஒலியெழுப்பி குளம்போசை பெருகிச்சூழ விரைந்து சாலையை அடைந்தது. அஸ்தினபுரியின் கற்பாளங்களால் ஆன தரை அந்திவெயிலில் பொன்னிற நீரால் நனைக்கப்பட்டதுபோல் ஒளிவிட்டது. தேரின் நிழல் நீண்டு முன்னால் விழ அதை தொட்டுவிடத் துடிப்பவை போல புரவிகள் காலெடுத்து வைத்து ஓடின. அனைத்து மாளிகைகளிலும் சுண்ணச் சுவர்பரப்புகள் பொன்னொளி கொண்டிருந்தன. கொடிநிழல்கள் நீண்டு பிற மாளிகைச் சுவர்களில் துடித்தன.

அஸ்தினபுரியின் அரண்மனைத்தொகுதி மாலையொளியில் முகில்திரளென எழுந்து வந்தது. அப்பால் மாலைப்பிறை பனங்குருத்தோலை போல ஒளியின்றி நீலவானில் நின்றது. கொடிகளின் நிழல்கள் குவைமாட வளைவுகளில் முலைகள்மேல் மாலை என வளைந்துகிடந்தன. கோட்டைமுகப்பில் இருந்த காவல்மாடத்து வீரன் கர்ணனைக் கண்டதும் சங்கை முழக்க கீழே அவனுக்காகக் காத்திருந்த ஏழு குதிரை வீரர்கள் முன்னால் வந்து தலைவணங்கி முகமன் சொன்னார்கள். கர்ணன் தேரை நிறுத்தி அவர்களின் வாழ்த்துக்களை பெற்றபின் புஷ்பகோஷ்டத்தின் முகப்பை நோக்கி சென்றான்.

அங்கு அவனுக்காகக் காத்திருந்த கனகர் ஓடிவந்து “தங்களுக்காக பேரரசர் காத்திருக்கிறார்” என்றார். கர்ணன் “சிந்துநாட்டரசர் வந்துவிட்டாரா?” என்றான். “இல்லை, இளவரசருக்கான சடங்குகள் இப்போதுதான் முடிந்தன. அவரை நீராட்டி மாற்றாடை அணிவித்து கொண்டு வருவதாக சொன்னார்கள். இளவரசியும் சிந்துநாட்டு அரசரும் மைந்தருடன் பேரரசரின் அவைக்கு சிறிதுநேரம் கழித்தே வருவார்கள். அரசர் தன் அறையிலிருந்து கிளம்பிவிட்டார்.”

கர்ணன் புருவம் சுருங்க “இதுவரை சிந்துநாட்டு இளவரசரை பேரரசர் பார்க்கவில்லையா?” என்றான். கனகரின் விழிகள் சற்று மாறுபட்டன. “பார்க்கவில்லையா?” என்று இன்னும் உரத்த குரலில் கேட்டான். “ஆம்” என்றார் கனகர்.

கர்ணன் அவர் முகத்தை நோக்கி இடையில் கைவைத்து சிலகணங்கள் நின்றபின் மெல்ல “ஏன்?” என்றான். கனகர் தயங்க “சொல்லும்” என்றான். அவர் மெல்ல “பேரரசர் விழியிழந்தவர். எனவே முறைமைச் சடங்குகள் அனைத்தும் முடித்து குலதெய்வங்களை மைந்தருக்கு காவல் அமைத்தபின் அவர் கையில் மைந்தரை கொடுத்தால் போதுமென்று நிமித்திகரும் வைதிகரும் கருதுகின்றனர்” என்றார். கர்ணன் இதழ்களை வளைத்து “பேரரசரே ஆனாலும் விழியிழந்தவர், அல்லவா?” என்றான். கனகர் விழிகளைத் தாழ்த்தி “நெறிகள்” என்றார். “எவருடைய நெறிகள்?” என்று கர்ணன் உரத்த குரலில் கேட்டான். “விழியுடையோரின் நெறிகள் அல்லவா?”

கனகர் விழிதூக்கி “ஆம், விழிகொண்டவர்களின் நெறிகள்தான். இவ்வுலகை விழிகொண்டவர்களின் பொருட்டே தெய்வங்கள் படைத்துள்ளன” என்றார். ஏதோ சொல்லெடுக்க இதழசைத்தபின் கைகள் தளர்ந்துவிழ கர்ணன் தலையை இல்லை என்பது போல் அசைத்தபின் திரும்பி நடந்தான். கனகர் அவனைத் தொடராது அங்கேயே நின்றுவிட்டார்.

புஷ்பகோஷ்டத்தின் படிகளில் ஏறும்போது ஒவ்வொரு படிக்கும் தன் உடல் எடை மிகுந்தபடியே வருவது போல் அவன் உணர்ந்தான். இடைநாழியில் ஏறி அங்கு நின்ற காவலனின் வணக்கத்தைப் பெற்று அவன் தோளில் கைவைத்தபடி “அரசர் எழுந்தருளிவிட்டாரா?” என்றான். “வந்துகொண்டிருக்கிறார் அரசே” என்றான் காவலன். மீண்டும் நடக்கத்தொடங்கியபோது தான் எதையோ கண்டு நெஞ்சதிர்ந்ததை உணர்ந்தான். எதை என்று திரும்பி நோக்குகையில் மேலே நின்றிருந்த வீரன் தலைவணங்கியதைக் கண்டு எவரும் இல்லை என்று உணர்ந்து திரும்பி இடைநாழியில் நடந்தபோது எதிரே தூணோடு உடல் ஒட்டி நின்றிருந்த கரிய பேருருக்கொண்ட முதியவரை பார்த்தான்.

இடையில் செம்மரவுரி அணிந்து கழுத்தில் வெண்கல் மாலையும் காதுகளில் உருத்திரவிழிக்காய் குண்டலமும் அணிந்த முனிவர். கர்ணன் அவரை நோக்கியபடியே மேலும் இரண்டு அடி எடுத்து வைத்த பிறகுதான் அவரது விழிகள் ஒளியற்றவை என்பதை அறிந்தான். அவர் அருகே சென்று தலைவணங்கி “வணங்குகிறேன் உத்தமரே, தாங்கள்…” என்றான். “இங்குதான் இருக்கிறேன்” என்றார். கர்ணன் “தாங்கள்…?” என்று மீண்டும் கேட்டான். “என் மைந்தர் இங்குள்ளனர்…” என்றார் அவர். அவன் வணங்கி “வருக உத்தமரே. தங்களுக்கு பீடம் அளிக்க நல்லூழ் கொண்டுள்ளேன். அமர்ந்தபின் சொல்லாடலாம்” என்றான்.

அவர் “நான் ஆயிரம் மைந்தரால் நாள்தோறும் உணவும் நீரும் ஊட்டப்படும் தந்தை” என்றார். கர்ணன் புருவம் சுருங்க “என்ன சொல்கிறீர்கள்?” என்றான். “ஆனால் நான் எதையும் பார்க்கவில்லை. நான் பார்க்காதவை எவையும் என்னுடையவை அல்ல. பார்வையற்றவனுக்கு ஏதுமில்லை என்பது தெய்வங்களின் ஆணை.” அவர் சற்று சித்தமாறுபாடு அடைந்தவர் என்று தோன்றியது. மரவுரியும் சடைமுடியும் கொண்ட முதிய முனிவர் அரண்மனைக்கூடத்தில் எவராலும் வழிநடத்தப்படாது எப்படி விடப்பட்டார் என்று அவன் உள்ளம் வியந்தது. மறு எல்லையில் நின்ற அவைக்காவலனை பார்த்தான். அவன் கர்ணனை நோக்கி தலை வணங்கினான்.

கர்ணன் சினத்துடன் அவனை நோக்கி விழியசைத்து அருகே வரும்படி ஆணையிட்டான். பதறியபடி அவன் அருகே வந்து தலைவணங்கி “அரசே” என்றான். கர்ணன் திரும்பி நோக்கியபோது அங்கு அந்த முதிய முனிவர் இல்லையென்பதை உணர்ந்தான். விழிமயக்கா என்று ஒரு கணம் தோன்றியது. பெருந்தூணின் பின்பக்கம் அவர் சென்றிருக்கக்கூடும் என்று தோன்ற குரல்தாழ்த்தி “இங்கு யார் வந்தது?” என்றான். “இங்கா? எவருமில்லை அரசே. தாங்கள் படியேறி வந்தீர்கள். தாங்கள் அணுகுவதற்காக நான் காத்திருந்தேன்” என்றான். “இந்தத் தூணின் அருகே…” என்றான் கர்ணன். காவலன் “தாங்கள் இந்தத் தூணின் அருகே நின்று ஆடை சீர் செய்வதை பார்த்தேன்” என்றான்.

ஒரு கணம் அவன் உடல் மெய்ப்பு கொண்டு வியர்த்தது. நெஞ்சின் அறைதல் ஓசையை கேட்டபின் “ஆம், நன்று” என்று கூறி அவன் விழிகளை நோக்காது நடந்தபோது பின் பக்கம் அவர் நின்றிருக்கிறார் என்ற எண்ணம் எழுந்தது. திரும்பிப் பார்க்கும்படி அவன் உளக்குரல் அவனை அறிவுறுத்தியது. கூரிய வேல் ஒன்று நெஞ்சை குத்த அதை உந்தியபடி முன்செல்வதுபோல அவன் சென்றான். பின்பு அறியாக்கணம் ஒன்றில் திரும்பி நோக்கினான். ஓடைக்கரை மரங்களென நிரைவகுத்த பெருந்தூண்களில் பித்தளைப் பூண்களும் சித்திரப் பட்டுப்பாவட்டாக்களும் மலர்த்தார்களும் வண்ணத்தோரணங்களும் அணிவிக்கப்பட்டிருந்தன. அவை காலமில்லா அமைதியில் காலூன்றி நின்றிருந்தன.

அத்தூண்கள் தாங்கிய வளைந்த உத்தரங்களின்மேல் கவிழ்ந்த உட்குடைவுக்கூரைக்குக் கீழே பெருங்கூடம் ஓய்ந்து கிடந்தது. தேய்த்த கரிய தரைப்பரப்பில் நீருக்குள் என மிதந்திறங்கியிருந்தன தூண்களின் நிழல்கள். நீள்மூச்சுடன் உடலை எளிதாக்கி கர்ணன் படிகளில் ஏறி இரண்டாவது இடைநாழிக்கு சென்றபோது மிக வலுவாக அந்த இருப்புணர்வை தன் பின்னால் அடைந்தான். முதுகில் விழித்திருக்கும் அறியாப் புலனொன்று அறிந்தது அவரை. அங்கிருக்கிறார். திரும்பிப் பார்த்தால் அவர் இருக்க மாட்டார். இல்லை நின்றிருக்கவும்கூடும்.

அவர் என்ன சொன்னார் என்று எண்ணிக்கொண்டபோது அச்சொற்கள் எவையும் நினைவுக்கு வரவில்லை. பார்வையின்மை பற்றி ஏதோ சொன்னார். பார்க்கப்படாதவை அளிக்கப்படாதவையே. இவையல்ல. என்ன சொற்கள்? கலைந்து குவிந்த களஞ்சியமொன்றை இரு கைகளாலும் அள்ளி அள்ளி வீசித் தேடுவது போல சொற்களைத் தேடி சலித்து இல்லையென்பது போல் தலையசைத்தான்.

அவன் முன் நின்றிருந்த காவலன் தலைவணங்கி “அரசே” என்றான். “பேரரசர்?” என்றான் கர்ணன். “அரசர் வந்து கொண்டிருக்கிறார். தாங்கள் பேரரசரை இப்போது சந்திக்கலாம்” என்றான். “ஆம்” என்றான் கர்ணன் நீள்மூச்சுடன். “இவ்வழியே” என அவன் கர்ணனை அழைத்துச் சென்றான். நெடுந்தொலைவில் என யாழிசை கேட்டுக்கொண்டிருந்தது. கேட்டதை உணர்ந்த மறுகணமே வண்டுக்கூட்டமென வந்து செவிசூழ்ந்தது. “பேரரசர் இசை கேட்கிறாரா?” என்றான் கர்ணன். “ஆம். இங்கு இசை ஒலிக்காத தருணமே இல்லை” என்றான் காவலன்.

அவன் திருதராஷ்டிரரின் அவை வாயிலில் நின்று கதவை மெல்ல தட்ட அது திறந்து இளங்காவலன் ஒருவன் எட்டிப்பார்த்து கர்ணனை அறிந்ததும் தலை வணங்கி “வருக அங்க நாட்டரசே” என்று இதழ் மட்டும் அசைத்து சொன்னான். கர்ணன் தன் பாதக்குறடுகளை கழற்றிவிட்டு ஓசையின்றி காலெடுத்து வைத்து உள்ளே சென்றான். உள்ளே பீடத்தில் மெலிந்த நீள்காலை தூக்கிவைத்தபடி உடல் மெலிந்து விழிதளர்ந்த விப்ரர் அமர்ந்திருந்தார். கர்ணன் தலைவணங்கி கையால் அரசரை பார்க்க விழைகிறேன் என்றான். விப்ரர் சற்று பொறுக்கும்படி கைகாட்டிவிட்டு கைகளை பீடத்தில் ஊன்றி மெதுவாக எழுந்து மேலாடையை சீர் செய்தபின் முதுமை தளரச்செய்த காலடிகளுடன் மெல்ல நடந்து இசைக்கூடத்திற்குள் சென்றார்.

யாழின் ஒலி வழக்கத்தைவிட மும்மடங்கு ஓசையுடன் இருப்பதை கர்ணன் கேட்டான். அத்தனை தொலைவுக்கு அத்தனை உரத்து கேட்க வேண்டுமென்றால் அது மிகப்பெரிய யாழாக இருக்க வேண்டும். அதை எப்படி மீட்ட முடியும்? நின்று கொண்டு கைகளால் மீட்டும் பேரியாழ் ஒன்றை அவன் எண்ணத்தில் வரைந்தெடுத்தான். அந்த எண்ணத்தினூடாக சிறிய அமைதியின்மை போல பிறிதொன்று ஓடியது. சற்று முன் நிகழ்ந்தது ஒரு உளப்பிறழ்வின் காட்சியென. உளப்பிறழ்வு என்னும் சொல் அவனை அதிரச்செய்தது. ஏழுகுதிரைத் தேரில் எப்போதும் ஒரு குதிரை கட்டற்றிருக்கும். அதன் கடிவாளம் நம் கையில் இருக்காது என்று அவன் தந்தை சொல்வதுண்டு. அவன் எவரைக் கண்டான்?

விப்ரர் இசைக்கூட வாயிலில் நின்று கர்ணனைப் பார்த்து உள்ளே செல்லும்படி கையசைத்தார். கர்ணன் அருகே சென்று மெல்ல தலைவணங்கிவிட்டு உள்ளே சென்றான். தடித்த மரவுரிமெத்தைத் தரைகொண்ட நீள்வட்ட இசைக்கூடத்தில் நடுவே இருந்த அணிச்சுனையில் மேலிருந்து அந்தியின் செவ்வொளி விழுந்து அதை பொன்னுருகி நிறைந்த கலமென மாற்றியிருந்தது. அவ்வொளிக்கு விழிபழகிய பின்னர்தான் இசைக்கூடம் முழுக்க நிரந்து அசைவிழந்து அமர்ந்திருந்த இளைய கௌரவரைக் கண்டான். ஆயிரம் குளிர்ந்த கற்சிற்பங்கள் போல் விழிகள் மட்டுமே என அவர்கள் யாழ்சூதர்களை நோக்கியிருந்தனர். விப்ரரையோ கர்ணன் நுழைந்ததையோ அவர்கள் அறியவில்லை.

அப்பால் இசை மேடையில் பன்னிரு பேரியாழ்கள் சூதர்களால் இசைக்கப்பட்டன. பன்னிரு விரல்கள் மீட்டிய இசை ஒற்றை இசையோடை என பிசிறின்றி முயங்கி இசைக்கூடத்தை முற்றிலும் நிறைந்திருந்தது. மெத்தைமேல் அவன் நடந்தபோது அது பதிந்து குழிந்து மீண்டது. ஓசையின்மை அவன் நீரில் மூழ்கிச்செல்வதுபோல எண்ணச்செய்தது. அங்குள்ள பீடங்களெல்லாமே பெரியவை, மெத்தை மூடப்பட்டவை. நுரைமேல் அமரும் ஈ என அவன் அமர்ந்தான். கைகளை தொடைகள்மேல் வைத்துக்கொண்டான்.

தொலைவில் இருந்து பார்க்கையில் திருதராஷ்டிரரின் உடல் மழைகழுவிய கரும்பாறை என குளிர்ந்து அசைவற்றிருப்பதாக தோன்றியது. இரு கைகளும் பீடத்தின் பிடிமேல் பதிந்திருந்தன. கால்கள் சற்றே நீட்டப்பட்டு மண்ணில் வேரோடியவை போல் தோன்றின. துணிப்புரி கருகிய சாம்பல்சுருள்போல் விரிந்த தோள்களில் படர்ந்திருந்த நரைகுழல்கற்றைகள் கூட அசைவற்றிருந்தன. தவளையின் தாடையென இருஊன்விழிகள் மட்டும் அசைந்துகொண்டிருந்தன.

இசை தன் உடலில் மெல்லிய தாளமொன்றை படிய வைத்திருப்பதை கர்ணன் உணர்ந்தான். இரு கைகளிலும் சுட்டுவிரல்கள் துடித்து அசைந்து அத்தாளத்தின் படிகளில் ஒற்றைக்கால் வைத்து ஏறி மேலே சென்று கொண்டிருந்தன. நீர்த்துளிசொட்டும் இலைபோல அவன் அந்தத் தாளத்தால் ஆட்கொள்ளப்பட்டான். அப்போது தொலைவில் திருதராஷ்டிரரின் உடலும் பட்டுச் சல்லா துணியில் வரையப்பட்ட ஓவியம் காற்றிலென இசையில் அலைவுறுவதாக தோன்றியது. விழிமயக்கா என்று நோக்கி இல்லை என்று கண்டான். அவர் உடலில் ஒவ்வொரு தசையும் நெகிழ்ந்து யாழிசை அதிர்வுக்கு என இயைந்து அசைந்து உள்நடனம் ஒன்றில் இருந்தது.

ஒரு மனிதன் தன் உடலுக்குள் நடமிட முடியும்! தோல் போர்த்திய தசைக்குவைக்குள் அமர்ந்துகொண்டே நெடுந்தொலைவு செல்ல முடியும்! எங்கிருக்கிறார் இம்மனிதர்? என்றேனும் இங்கிருந்திருக்கிறாரா? இங்குளோரை எவ்வண்ணம் அறிந்திருக்கிறார்? இங்கொலித்துக் கொண்டிருக்கும் நில்லா இசையின் பிறழொலிகளாகவே உறவும், சுற்றமும், நாடும், மானுடப் பெருவலையும் அவருக்கு பொருள் படுகின்றனவா என்ன? அன்றி அப்பேரிசையின் ஒலியதிர்வுகள் மட்டும்தானா அவை?

ஒருபோதும் அவரை அணுகியதில்லை. அவர் தொடுகையை உணர்ந்ததில்லை என்று அவன் அறிந்தான். எங்கிருந்தோ மிதந்தெழுந்து மேலே வந்து அவனை அவர் அள்ளி தன் அகன்ற மார்போடள்ளி அணைக்கையில் அணியறையிலிருந்து தோள்பட்டமும் கங்கணமும் கச்சையும் எழுகொண்டையும் தலையொளிவட்டமும் அணிந்து அறிபடுதோற்றமொன்றென வரும் கூத்தன். அணியறையோ அடியற்ற ஆழமுடைய ஒரு சொல். இக்கரிய அரக்கன் பின்பு ஒலியின்றி அதில் கால் வைத்து இறங்கி தன் பாதாளத்திற்கு மீள்கிறார். அங்கு இருள் சூழ்ந்து இறுகியிருக்கிறது. செவியிருள், விழியிருள், மூக்கிருள், நாக்கிருள், தொடுஇருள், மொழியிருள், அறிவிருள். முழுமையென தன்னை காட்டும் இன்மை…

நீள்முச்சுடன் அவன் கால்களை நீட்டி எளிதாக்கிக் கொண்டான். அவ்விசைக்கூடத்தில் அவன் மட்டுமே அம்மெல்லிய அசைவை விடுக்கும்நிலையில் அகன்றிருந்தான் என்று தோன்றியது. நீர்ப்பரப்பில் தூசுவிழுந்ததுபோல அங்கிருந்த அனைத்துடல்களும் மெல்ல நலுங்கின. அத்தனை இளமைந்தரும் திருதராஷ்டிரர் போலவே இருந்தார்கள். ஒன்று நூறு ஆயிரமெனப் பெருகி அறை நிறைத்திருந்தது ஓர் இருப்பு. ஆயிரம் உடல் கொண்டிருந்தது ஓருயிர். கர்ணன் அம்மைந்தரின் ஒவ்வொரு விழியையாக நோக்கினான். இங்கு இவ்வண்ணம் இச்சரடில் தொடுக்கப்படுபவை என்பதனால்தானா பிறிதெவற்றாலும் இணைக்கப்படாமலேயே இவை இந்நகரமெங்கும் சிதறிப்பரந்து கொந்தளித்தன? ஒருதுளி நதியென்றாகியதுபோல் பெருகி இந்நகரை நிறைத்திருக்கும் விழியின்மை. ஏன் இது நிகழ்கிறது இங்கு? விண்ணறியும் மண்ணறியா பொருளென ஒன்று இதன் பின்னிருக்கும் போலும்.

ஒற்றைவிழி, ஒற்றைக்கனவு, ஒற்றைப்பெருக்கென்றெழுந்த ஊழ்கம். தவழ்ந்து தலைதூக்கி நோக்கிய மைந்தர்கள் அவர்களில் இருந்தனர். கரிய சிறுதோள்களை சற்றே முன்னொடுக்கி செவிநோக்கு கூர்ந்து விழியின்மையாகி இருந்தனர் குழந்தைகள். பிறிதொன்றிலாது அங்கிருந்தனர். லக்ஷ்மணன் அவர்களில் ஒருவர் என கண்டான். எப்போதேனும் இப்பெருந்திரளிலிருந்து அவனால் விடுபட முடியுமா? பிறிதொருவனாக ஆகலாம். அப்புண்ணை அவன் எப்படி ஆற்றிக் கொள்வான்? கையாயிரம் கொண்ட கார்த்தவீரியன். விழியீராயிரம் கொண்ட விராடன். இவ்வடிவில் அவன் எழுந்தால் வென்று நடக்க இப்புவி போதுமா என்ன?

யாழிசை அருவியெனப் பெருகி மண் நிறைந்து பரவி மெலிந்து ஓய்ந்து துளித்து சொட்டி நிலைத்து அமைதி கொண்டது. அவ்வமைதியின் உலகிலிருந்து அப்போதும் உதிராமலிருந்தனர் இளையோர். உளவிரல்கள் இசையில் துழாவ உடலின்றி இருந்தனர் சூதர். அவர்களின் உடல்விழிகளும் ஓய்ந்தகைகளும் கைவிழுந்து அமைந்த யாழ்நரம்புகளும் அதுவரை ஒலித்த இசையாகவே எஞ்சியிருந்தன. நீள்மூச்சுடன் திருதராஷ்டிரர் மீண்டு வந்தார். கர்ணனை நோக்கி அவரது குருதி விழிகள் திரும்பி அசைந்தன. “மூத்தவனே” என்றார். கர்ணன் எழுந்து அவர் அருகே சென்று குனிந்து அவர் கால்களில் தலை வைத்தான்.

“ஆஹ்ஹ்” என்னும் மூச்சொலியுடன் அவர் தன் பெருங்கையால் அவன் தலையை வளைத்து தோளுடன் அணைத்து குழலை மறுகையால் நீவியபடி “உன்னை நோக்கியிருந்தேன்” என்றார். கர்ணன் அவர் அருகே தரையில் அமர்ந்து தன் கைகளை அவர் தொடையில் வைத்துக்கொண்டான். “இன்று காலை களத்தில் என்னுடன் தோள் கோக்க நீ வருவாய் என்று எண்ணினேன்.” கர்ணன் “புலரிக்கு முன்பே நான் கோட்டை முகப்புக்கு செல்லவேண்டியிருந்தது அரசே” என்றான். “கோட்டை முகப்புக்கா?” என்றபின் புரிந்துகொண்டு “ஆம், மைந்தனை நீ சென்று வரவேற்பதே முறை. அஸ்தினபுரியின் ஒரே மகளின் முதல் மகன். இந்நகராளும் கோல் அவன் கையிலும் ஒன்று இருக்கும்” என்றார்.

“தாங்கள் இன்னமும் மைந்தனை பார்க்கவில்லை அல்லவா?” என்றான் கர்ணன். “தாங்கள்…” அவர் அவன் தலையைத் தட்டி “நீ சொல்லவருவதை அறிவேன். என்னிடம் முதுநிமித்திகர் வந்து சொன்னார். தெய்வங்களை துணைநிறுத்தி கங்கணமும் கணையாழியும் அளித்தபின் மைந்தன் என் கைதொட வந்தால்போதும். ஆம், அதுவே முறை என்று நானும் சொன்னேன். இன்னமும் விதுரனுக்கு இது தெரியாது. அவனிடம் நீ உளறிவிடாதே… சினம் கொண்டு எழுவான்” என்றார். கர்ணன் அவர் தொடையை இன்னொரு கையால் தொட்டான்.

“என் தீயூழ் என்னுடன் செல்லவேண்டும் மைந்தா. நினைக்கவே சமயங்களில் நெஞ்சு நடுங்கும். கண் என்பது எத்தனை நுணுக்கமானது. இரு மெல்லிய மலர்கள் அவை. இன்மது ததும்பி விளிம்பு நிறைந்து நிற்கும் இரு கோப்பைகள். இந்நகரமோ எங்கும் கூரியவற்றை நிறைத்து வைத்துள்ளது. அம்புகள் வேல்கள் கூர்விளிம்புகள்… இளையோர் களிவெறிகொண்டு கூத்தாடுகிறார்கள். கண்களை அவர்கள் எண்ணுவதேயில்லை…” அவர் புன்னகைத்து “எண்ணினால் நான் இவர்கள் எவரையும் அரண்மனைவிட்டு வெளியே செல்லவே விடமாட்டேன்” என்றார்.

திருதராஷ்டிரரின் கைகள் கர்ணனின் தலைமேல் அழுந்தி குழல்சுருள்களை விரல்களில் சுற்றி நீவி இறங்கி, செவிமடல்களை பற்றி மெல்ல இழுத்து, தோளில் படிந்து புயம்வரை தடவிச்சென்று, திரண்ட பெருந்தசைப்புடைப்பில் எழுந்து கிளைவிரித்து இறங்கிய நரம்பை யாழ்நரம்பென மீட்டி, கழுத்தெலும்பின் படகு விளிம்பை தடவி, குரல்வளை முழையை மெல்ல வருடி மேலேறின. கன்னங்களின் அடர்மயிர்ப் பரவலை, கூர் கொண்டு நின்ற மீசையை, வளைவற்ற நேர் மூக்கை, கீழே அழுந்திய சிறிய உதடுகளை தொட்டுச்சென்று கண்களை அடைந்ததும் தயங்கின. இரு விழிகளையும் மாறி மாறி தொட்டு எதையோ தேடின. புதைத்திட்ட முட்டை நோக்கி முகர்ந்து வரும் கடலாமை. எங்கோ மறந்திட்ட புதையலைத் தேடும் விழியிழந்த உலோபி.

நெற்றியை, மறுசெவியை, மறுதோளை, மார்பின் மயிரற்ற கரும்பளிங்கு பிளவுப்பலகைப் பரப்பை. மீண்டும் கழுத்தை, உதடுகளை. மீண்டும் கண்களை. மரக்கட்டை என கடுமைகொண்ட பெரிய விரல்கள் அவன் கண்களை மிகமென்மையாக தொட்டன. அவர் பெரும்பாலும் கண்களைத் தொட்டு நோக்குகிறார் எனபதை அவன் நினைவுகூர்ந்தான். கண்களைத் தொட்டு அவர் தேடுவது என்ன? ஒளியின்மையை அறியும் ஒளியையா? “மூத்தவனே” என்று நீள்மூச்செறிந்து தனக்குள் என அழைத்தார் திருதராஷ்டிரர். மூடிய அறைக்குள் எழும் காற்றொலி போல அது கேட்டது. “சொல்லுங்கள் தந்தையே” என்றான்.

“நீ இங்கிரு” என்றார். “ஆம், ஆணை” என்றான் கர்ணன். “நீ இளையவனுடன் இரு. இங்கு அவன் நிலையழிந்திருக்கிறான்.” ”மகிழ்ந்திருக்கிறாரென்று தோன்றுகிறது” என்றான் கர்ணன். “ஆம், மகிழ்ந்திருக்கிறான். ஆனால் ஷத்ரியன் மகிழ்ந்திருக்கலாகாது மைந்தா. அவனுள் இருப்பவை தசைபுடைத்த பெரும் புரவிகள். ஒவ்வொரு நாளும் நூறுகாதம் ஓடினால் மட்டுமே அவை நின்று உறங்கி விழிக்க முடியும். அரசாள்வதில் அவனுக்கு விழைவில்லை. இங்கு அவனை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று அமைச்சர்களுக்கும் தெரியவில்லை” என்றார் திருதராஷ்டிரர். “இல்லை, அவர்…” என கர்ணன் சொல்லத்தொடங்க கையசைத்து தடுத்தார்.

“நான் அறிவேன். அவை அமர்ந்த அவன்முன் விழிநீர் விடும் முதல் மனிதனுக்கு சார்பாக தீர்ப்பளித்துவிடுகிறான். இரு தடம் நோக்கி நடுநிலை கொள்ள அவனால் முடியவில்லை. கண்ணீருக்கு இரங்குபவன் அரசனாக முடியாது. நீதியால் தண்டிக்கப்படும் குற்றமிழைத்தோரும் விழிநீர் விடக்கூடும். பிழை செய்து உளம் நொந்தவரும் விழிநீர் விடுவார்கள். வென்று செல்லவேண்டும் என்று வெறியெழுந்தவரும், பிறரை உண்டு கடக்க விழைவு கொண்டோரும் விழிநீர் விடுவார்கள்” என்றார். கர்ணன் “நானும் விழிநீரை கடக்க இயலாதவன்தான் அரசே” என்றான். “அதை நான் அறிவேன். ஆனால் நீ கதிரவன் மைந்தன். அனைத்தையும் கடந்து சென்று உண்மையைத் தொடும் ஒன்று உன் கண்களில் உள்ளது” என்றார்.

கர்ணன் “இங்கிருக்கிறேன் அரசே. ஆனால் பானுமதி உள்ளவரை இவ்வரசு முறையான கோலால்தான் ஆளப்படும்” என்றான். “ஆம். இங்குள்ள அரசைப்பற்றி நான் எவ்வகையிலும் கவலை கொள்ளவில்லை. விதுரனும் பானுமதியும் இருக்கையில் கோலாளும் அரசத்திருவும் சொல்லாளும் அருந்தவத்தோனும் இணைந்திருப்பதற்கு நிகர். நான் துயருறுவது என் மைந்தனைக் குறித்து மட்டுமே.”

கர்ணன் அவ்வுணர்வுநிலையை மாற்ற விரும்பி திரும்பி அசைவிழந்து அமர்ந்திருந்த இளைய கௌரவரை நோக்கி புன்னகைத்து “இவர்கள் இவ்வண்ணம் இருக்கமுடியுமென்பதை என்னால் எண்ணக்கூடுவதில்லை” என்றான். “இவர்கள் எப்போதும் இப்படித்தான் என் முன் இருக்கிறார்கள். இங்கு நுழைகையிலேயே ஆழ்ந்த அமைதி கொண்டுவிடுவார்கள். வெளியே இவர்கள் ஓசையும் கொப்பளிப்புமாக இருக்கிறார்கள் என்கிறார்கள். நான் அறிந்ததில்லை” என்றார் திருதராஷ்டிரர். “துஷ்கிரமா, இப்படி வா” என்றார். ஒன்றரை வயதான துஷ்கிரமன் எழுந்து அருகே வந்து அவர் கால்களைத்தொட்டு சென்னி சூடி “வணங்குகிறேன் முதுதந்தையே” என்றான்.

அவனை அவர் ஒற்றைக்கையால் புயம் பற்றித்தூக்கி சுழற்றி தன் தோளில் அமர்த்திக் கொண்டார். அவன் அவர் தலையை தழுவியபடி மயங்கி அமர்ந்திருந்தான். “அதோ இருப்பவன் துர்லபன். அவனருகே துஷ்பிரபன்…” என்றார். கர்ணன் “இவர்களின் பெயர்கள் எவராலும் முற்றிலும் நினைவில்கொள்ள முடியாதவை என்கிறார்கள்” என்றான். “ஏன்? அனைவர் பெயரும் நன்கு தெரியும். அவர்களின் காலடியோசையை, உடல்மணத்தை, குரலை என்னால் அறியமுடியும். ஏன் நெஞ்சோடு சேர்த்தால் அவர்கள் குருதித் துடிப்பைக்கூட என்னால் அடையாளம் காண முடியும்” என்றார். கர்ணன் சிரித்து “அஸ்தினபுரியில் இம்மைந்தரை அடையாளம் காணும் ஒரே மனிதர் தாங்களே” என்றான்.

திருதராஷ்டிரர் “ஆம், நானே நூறென ஆயிரமென பெருகி இங்கு நிறைந்திருப்பதாக சூதர்கள் பாடுவதுண்டு. என்னுடலை நானே தொட்டறிவதில் என்ன வியப்பு? இளமையில் நான் முதலில் அறிந்தது என் உடலைத்தான். என் அன்னை என் கையைப்பற்றி என் காலில் வைத்து கால் என்றாள். விரல் என்றாள். நகம் என்றாள். அங்கு தொடங்கி பல்லாயிரம் முறை தொட்டுத் தொட்டு என்னை நான் அறிந்தேன். மானுடரெல்லாம் ஆடி நோக்கியே தங்களை ஆளென அறிகிறார்கள் என்கிறார்கள். என் விரல்களில் உள்ளது நானென வகுத்துக்கொண்ட இது. ஓய்ந்திருக்கையில் இசையறியாதோன் பேரியாழை என என்னை நானே தொட்டுத் தொட்டு மீட்டிக் கொள்வேன்” என்றார். “இத்தனை ஆண்டுகளுக்குப் பின்பும் என் உடலை நானே தொடுவது எனக்கு சலிக்கவில்லை.”

கர்ணன் மைந்தரை நோக்கி அருகே வரும்படி கையசைத்தான் அவர்கள் மெல்லிய அலையென அசைந்து எழுந்து ஓசையின்றி ஒழுகி திருதராஷ்டிரரை சூழ்ந்து கொண்டனர். அவர் கைநீட்டி ஒவ்வொருவரையாக அணைத்து அவர்களின் பெயர்களை கூறினார். “இவன் மகாவீர்யன். இவன் பிறந்த அன்று நல்ல மழை. ஈற்றறைக்குச் சென்று இவனைப் பார்க்க விழைந்தேன். ஏனெனில் நான் பிறந்த அதே நாளிலும் கோளிலும் பிறந்தவன் இவன்.” அவர் காலைப்பற்றி நின்ற சிறுவன் ஒருவனை கையால் தூக்கி மடியிலமர்த்தி “இவன் பெயர் ஊஷ்மளன். பதினெட்டாவது மைந்தன். சலனுக்கு அரக்கர்குலத்தரசி காளிகையில் பிறந்த குழந்தை” என்றார்.

கர்ணன் சிரித்து “நண்டுக் குஞ்சுகள் அன்னையின் உடலை கவ்விக்கொள்வதுபோல் உள்ளது அரசே” என்றான். “ஆம், நான் இவர்களை கட்டெறும்புகள் என்று சொல்வதுண்டு. விரலை வைத்தால் போதும் அவர்களே ஏறி மூடிக்கொள்வார்கள்.” கைகளை நீட்டி அவர் ஒவ்வொருவர் கன்னங்களையாக தொட்டார். அவை இரு தவிக்கும் ஆமை முகங்கள் என்றாயின. நாவென சுட்டுவிரல் பதைத்தது. ஒவ்வொரு முட்டையாக தோண்டி எடுத்து முகர்ந்து நீள்மூச்சு விட்டு மீண்டும் புதைத்தன அவை. கர்ணன் இயல்பாக விழிதிரும்பி நோக்கியபோது அவ்வறைக்குள் பெருந்தூணின் அருகே விழியிழந்த முனிவரை பார்த்தான். அறியாது ஓர் ஒலியை அவன் எழுப்ப திருதராஷ்டிரர் “என்ன?” என்றார். “இல்லை அரசே” என்றபின் அவன் மீண்டும் பார்த்தான்.

அவர் திருதராஷ்டிரரையே நோக்கியபடி அசைவற்று நின்றிருந்தார். அவ்வுருவை தங்கள் இசைக்கலங்களை தொகுத்து உறையிட்டுக் கொண்டிருந்த சூதர்கள் பார்க்கிறார்களா என்று அவன் திரும்பிப் பார்த்தான். அவர்கள் பார்ப்பதாக தெரியவில்லை. அவன் அவர்களை பார்ப்பதைக் கண்டு இருவர் அவனை நோக்கி தலைவணங்கினர். நோக்கைத் திருப்பி மீண்டும் அவரைப் பார்த்தான். எங்கோ பார்த்த பேருடல். கொழுத்த பெருந்தோள்கள். பாறையில் நீர்வழிந்த தடம்போல கருமையில் நரை படர்ந்த தாடி. தோளில் புரண்ட வேர்த்தொகை போன்ற சடைக்கற்றைகள். ஓடு விலக்கி குஞ்சு வெளிவந்த உந்துகையில் பதைக்கும் சவ்வு போன்ற கண்கள்.

“இளையோனே” என்றார் திருதராஷ்டிரர். கர்ணன் அவர் கால்களைத்தொட்டு “நான் மூத்தவன் அரசே” என்றான். “ஆம், நீ மூத்தவன்” என்றபின் கைகளால் தன் தலையை மூன்று முறை தட்டினார். “என்ன?” என்றான். “இம்மைந்தருடன் இருக்கையில் நான் உவகை கொண்டு நிலைமறந்தாட வேண்டுமல்லவா? அதுதானே உயிர்களுக்கு இயல்பு? நான் குலம்முளைக்கும் பிரஜாபதி அல்லவா?” கர்ணன் “ஆம்” என்றான். “ஆனால் நானோ எப்போதும் நிலையழிகிறேன். இப்போதுகூட அறியாத ஆழத்தில் என் நீர்மை நலுங்குகிறது. மிகத்தொலைவிலிருந்து எவரோ என்னை நோக்குவது போல் உணர்கிறேன். இரு நோக்கற்ற விழிகள்…” அவர் கைகளை வீசி “இந்த உளமயக்கிலிருந்து என்னால் தப்பவே முடியவில்லை” என்றார்.

நீள்மூச்சுடன் “இசை என்னைச் சூழாது இம்மைந்தருடன் சற்றுநேரம் கூட என்னால் இருக்க முடியவில்லை. இதோ பெருகி நிறைந்திருக்கிறேன். ஆனால் இவர்களிடம் களியாடியதில்லை. கானாடச் சென்றதில்லை. நீர்விளையாட்டில் ஈடுபட்டதில்லை.” அருகே நின்ற ஒருவனைப் பிடித்து “இவன் பெயர் தீர்க்கநேத்ரன். குண்டாசியின் மைந்தன். மிகமிகத் தனிமையானவன். என்னைப்போன்று” என்றார். கர்ணன் மீண்டும் அவரை நோக்கியபடி நின்று கொண்டிருந்த விழியிழந்தவரை பார்த்தான். அவரில் திருதராஷ்டிரரைப்போன்ற சாயல் இருந்தாக வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அவர் வாழ்நாளில் ஒருமுறையேனும் உடற்பயிற்சி எதையும் செய்தவர் போல் தோன்றவில்லை. குனித்த தோள்களும் தசை முழுத்த கைகளும் பெரிய வயிறும் புடைத்திருந்த தொடைகளுமென தெரிந்தார்.

“ஏனோ நான் இப்போது அவனை பார்க்க விழைகிறேன்” என்றார் திருதராஷ்டிரர். நடுங்கும் குரலில் “யாரை?” என்று அவன் கேட்டான். “துவாரகையின் தலைவனை. அது ஏனென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவன் இங்கிருந்தால் எழுந்து சென்று அவன் கைகளை இறுக பற்றிக்கொள்வேன். இதெல்லாம் ஏன் என்று கேட்பேன். கனிநிறைந்த மரம் அஞ்சுவது எந்தக்காற்றை?” பின்பு உரக்க நகைத்து கையால் தன் இருக்கையின் பீடத்தை அடித்து “பொருளற்ற சொற்கள்! ஒரு பொருட்டுமற்ற துயரம்! ஏன் இதை அடைகிறேன் என்று எனக்கே தெரியவில்லை. ஒருவேளை துவாரகையின் தலைவன் இருந்தால் என் விழியின்மை அது என்று எண்ணி எள்ளி நகையாடவும் கூடும்” என்றார்.

“இல்லை அரசே. இம்மைந்தர்ப் பெருக்கு எவருக்காயினும் சிந்தையை அழிக்கும். தீவிழிகள் படலாகாது என்றும் தீயூழ் தின்னலாகாது என்றும் தந்தை மனம் பதைப்பது மிக இயல்புதானே?” என்றான் கர்ணன். தன் தலையை ஓசையெழ மீண்டும் அடித்து திருதராஷ்டிரர் பற்களை காட்டினார். “தலைகுடைகிறது மூத்தவனே. முன்பொரு நாள் இங்கு ஒரு சூதன் பாடினான். தவளை பல்லாயிரம் முட்டைகளை இடுகிறது. தன் உடலின் கொழுப்புப் படலத்தால் அவற்றை ஒன்றெனப்பிணைத்து நீரில் பறக்க விடுகிறது. நானும் அவ்வண்ணமே என்றான். இங்கு என் குருதி நுரைத்தெழும் இசையால் இவர்களை பிணைத்திருக்கிறேன் என்றுதான் அவன் சொல்ல விரும்பினான். நானோ பல்லாயிரம் தவளை முட்டைகளில் வால்நீண்டு கால்முளைத்துத் தாவி கரையேறி நின்றிருக்கும் நல்லூழ் கொண்டவை எத்தனை என்று எண்ணி அஞ்சினேன்.”

பெருமூச்சுடன் “இவ்வச்சம் அன்று தொடங்கியதாக இருக்கலாம்” என்றார். கர்ணன் “ஆம் அரசே, ஆனால் அது பொருளற்ற அச்சம். அதை தங்கள் கல்வியாலும் பட்டறிவாலும் கடந்து போக வேண்டியதுதான்” என்றபின் மீண்டும் திரும்பி நோக்கினான். அவனை ஒரு பொருட்டென்றே எண்ணாதவர் போல் அம்முதிய முனிவர் திருதராஷ்டிரரையே பார்த்துக்கொண்டிருந்தார்.

முந்தைய கட்டுரைபத்மஸ்ரீ
அடுத்த கட்டுரைபுதிய வாசகர்களின் கடிதங்கள் 8