சென்றகாலங்கள்

1

அ. மார்க்ஸ் அவர்களின் இப்பதிவை அருண்மொழியின் குடும்பத்தைச்சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் எனக்குச் சுட்டி அனுப்பியிருந்தார். நினைவுகள் ஒரு நிலத்தையும் மக்களையும் துல்லியமாகக் காட்டுமளவுக்கு சமகாலப்பதிவுகள் காட்டுவதில்லை. ஏனென்றால் சமகாலப்பதிவுகள் விழியும் மனமும் தொட்ட அனைத்தையும் பதிவுசெய்கின்றன. நினைவுகள் எது முக்கியமோ அதை மட்டும் எஞ்சவைக்கின்றன. அ. மார்க்ஸின் இப்பதிவிலேயேகூட அன்று அந்த தலைவர்கள் என்ன பேசினார்கள் என்பது பதிவாகவில்லை என்பதைக் கவனிக்கலாம்

என் மாமனார் சற்குணம் புதுக்கோட்டை அருகே திருவோணம் ஊரைச்சேர்ந்தவர். அன்றும் இன்றும் அதிதீவிர திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளர். தம்பிக்குக் கடிதங்கள், ரோமாபுரிப்பாண்டியன் என சேர்த்துவைத்துக்கொண்டு படிப்பவர். என் சங்கசித்திரங்கள் தொகுதியை அவருக்குத்தான் சமர்ப்பணம் செய்திருக்கிறேன். இப்போது இங்கே என் வீட்டில்தான் பொங்கலுக்கு வந்திருக்கிறார்

முந்தைய தலைமுறை திமுக என்பதனால் அன்றைய சில உணர்வுநிலைகள் சில அறிவுநிலைகள் அவரிடமுண்டு. பெரியார்,அண்ணாத்துரை, மு.கருணாநிதி அளவுக்கே அவர் ஜெயகாந்தனுக்கும் நா.பார்த்தசாரதிக்கும் ரசிகர். அவர்கள் திமுகவின் விமர்சகர்கள் என்றால் ”விமர்சனம் இருக்கணும்ல? நல்ல தமிழிலே விமர்சனம் பண்ணினாங்க” என்பார். பெரியார், அண்ணா, கலைஞர் என அவரது தொன்மங்களைத் தகர்க்க ஆரம்பிப்பது எனக்கு ஒருவேடிக்கை. மருமகன் என்பதனால் “அப்டீங்கறீங்க” என்று மெல்ல சொல்வார். ஆனால் அருண்மொழியிடம் பலகோணங்களில் அதற்கெல்லாம் மறுப்பு சொல்வார்

அக்காலகட்டத்தின் உத்வேகத்தை அவர் சொல்லிக்கேட்கையில் ஆச்சரியமாகவே இருக்கும். அண்ணாத்துரை புதுக்கோட்டையில் சொற்பொழிவாற்றிவிட்டு பட்டுக்கோட்டைக்குச் செல்வார். அந்தப்பேச்சு முடிந்ததுமே சைக்கிளில் பெரும்திரளாக இளைஞர்கள் கிளம்பி பட்டுக்கோட்டைக்குச் செல்வார்கள். அப்படியே திருப்பத்தூர்.மதுரையில் பேசிக்கேட்டபின் அடங்காமல் ஸ்ரீவில்லிப்புத்தூர் வரைக்கும்கூடச் சென்றிருக்கிறார்கள். ‘விதவிதமா பேசுவாரா?” என்றால் “இல்ல, ஒரே பேச்சுத்தான். அதை நாங்களே வார்த்தைக்குவார்த்தை பேசிருவோம். சும்மா அந்த தோரணையைப்பாக்கணும்னுதான்” என்பார்

அவரது சித்தரிப்பில் வரும் தி.மு.க நாமறியாத இன்னொன்று. அன்றையதஞ்சையின் ஆதிக்கம் மூன்று தரப்பினரிடம். சைவமடங்கள், நிலச்சுவான்தார்கள் [வலிவலம் தேசிகர், பூண்டி வாண்டையார், கபித்தலம் மூப்பனார் என அண்ணாத்துரை அடுக்கிக்கொண்டே செல்வார்] மற்றும் பிராமணர்கள். அவர்களுக்கு எதிரான ஒரு மாற்றம் தேவை என உணர்ந்த எளிய மக்கள் அன்று காங்கிரஸ்,கம்யூனிஸ்டுக் கட்சிகளை ஆதரித்தனர்.

இன்னும் அடித்தளமக்கள் நேரடியாக மேடைவழியாகவே முதல் அரசியல்கல்வியை அடைந்து திமுகவுக்கு வந்தனர் திமுக அவர்களின் கட்சியாகவே கிராமங்களில் வேரூன்றியது. சலவைத்தொழிலாளர்களின், சவரத்தொழிலாளர்களின் கட்சி என அதற்கு ஒருகாலத்தில் பெயர் இருந்தது. ஆரம்பகால ஊழியர்கள் பலர் அவர்களே

காமராஜரின் ஓர் உத்தியே தமிழகத்தில் காங்கிரஸுக்கு வலுவான ஆட்சியை ஆரம்பத்தில் உருவாக்கியளித்தது. தமிழகத்தில் காங்கிரஸ் எப்போதும் வலுவான கட்சியாக இருக்கவில்லை. சுதந்திரத்திற்குமுன் அவர்களால் நிலையான ஆட்சியை அளிக்கமுடிந்ததே இல்லை. சுதந்திரத்திற்குப்பின் நான்கில் மூன்று பெரும்பான்மை பெற்று அரசியல்நிர்ணயசபையை நிலைநிறுத்த வலுவான வாக்குப்பின்புலம் காங்கிரஸுக்குத் தேவையாகியது. தமிழகத்தில் அதற்குக் காங்கிரஸ் கண்டடைந்த வழி வெல்லும் வாய்ப்புள்ளவர்களை காங்கிரஸுக்கு இழுத்து வேட்பாளராக நிறுத்துவது

பூண்டிவாண்டையாரும் கபித்தலம் மூப்பனாரும் காங்கிரஸ் வேட்பாளராக ஆனார்கள். அது காங்கிரஸ் மீதிருந்த அடித்தளமக்களின் நம்பிக்கையை அழித்தது. ஆரம்பகால தேர்தல்வெற்றிகள் அளித்த உறுதியான அரசைக்கொண்டே காமராஜ் இன்றும் தமிழகத்தை வாழவைக்கும் மகத்தான பொருளியல் அடிக்கட்டுமானங்களை உருவாக்கினார். ஆனால் காங்கிரஸின் வெகுஜன அடித்தளம் உடைந்தது. இன்றுவரை அது பெரியமனிதர்களின் கட்சிதான்

அந்த இடைவெளியில்தான் திமுக என்னும் குறுகியகால இலட்சியவாதம் இளைஞர்களை கொந்தளிக்கச் செய்திருக்கிறது. அடித்தளமக்களுக்கென ஒரு காலம் தமிழ்நாட்டில் எழும் என்ற நம்பிக்கை இருந்திருக்கிறது. படிப்பகம் நடத்துதல்,செந்தமிழில் பேசுதல், பொங்கல்கொண்டாடுதல், அரும்புமீசை வைத்து தோளில் துண்டு அணிதல் என ஓர் அரசியல் எழுச்சியின் கொண்டாட்டம்.

திமுகவின் அக்கிலிஸ்கணுக்கால் என்ன? இப்போது தோன்றுகிறது சினிமாதான் என. மேடைப்பேச்சு அவர்களை அரசியல்கட்சியாக எழுச்சியுறச்செய்தது. ஆனால் அடுத்தகட்ட வளர்ச்சிக்காக அவர்கள் சினிமாவை நோக்கிச் சென்றனர். சினிமா அவர்களை பிரபலப்படுத்தியது.பணம் கொண்டவர்களாக ஆக்கியது. ஆனால் அவர்களின் அறிவார்ந்த அடித்தளத்தை அது தகர்த்தது. இருந்த எளிய இலட்சியவாதத்தையும் வரண்டுபோகச்செய்து  ஒருவகைக் கேளிக்கையாக அரசியலை மாற்றியது. காரணம்  அன்று வளர்ந்துகொண்டிருந்த வணிகக்கலை அது.மிகசில ஆண்டுகளிலேயே திமுக என்றாலே சினிமாமோகம் என்னும் நிலைவந்தது

அதை என் மாமனாரிடம் கேட்டேன், அவர்  “என்னிக்கு அண்ணாவை விட அதிககூட்டம் எஸ்.எஸ்.ஆருக்கு வர ஆரம்பிச்சுதோ அன்னிகே எல்லாம் செத்திட்டுது”என்றார் அதன் அடுத்தகட்டம் வாக்கரசியல். அதன் ஒருபகுதியான சாதி அரசியல். மீண்டும் காமராஜ் விழுந்த அதே குழி. அதைத்தான் அ.மார்க்ஸ் இறுதியாகச் சொல்கிறார். பூண்டிவாண்டையார்களுக்கும் கபித்தலம் மூப்பனார்களுக்கும் காங்கிரஸ் தியாகிகள் பிரச்சாரம் செய்யநேர்ந்த சோகத்தின் அடுத்த அத்தியாயம். இப்போது, கடைசியாகக் குடும்ப அரசியல்.

சென்றகாலங்கள் எத்தனை சுருக்கமானவையாக தெளிவானவையாக இருக்கின்றன. சமகாலமும் அப்படி இருந்தால் எத்தனை நன்றாக இருக்கும்!

 

 

புகைத்திரை ஓவியம்

 

 

முந்தைய கட்டுரைபுதியவாசகர்களின் கடிதங்கள் 4
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 34