அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம் நலமறிய விழைவு.
ஆசிரியர்களால் ஆன இந்த உலகில், நாம் மனதிற்கருகே அடிக்கடி கவனிக்கும் ஆசான்கள் ஒரு சிலர் இருக்கின்றனர். அவர்கள் அவ்வப்போது, அல்லது உற்ற சமயம் பார்த்து ஒவ்வொரு ஜன்னலாகத் திறந்து நம் உலகின் பரப்பை பெரிதாக்கிக் கொண்டே போகிறார்கள்.
அவர்கள் காண்பிக்கும் அறிவுகளில் உள்ள பன்முகத்தன்மையைக் கண்டு மனம் முதலில் மயங்கியும், நாளாக நாளாக அந்த பன்முகத்தன்மையில் மறைந்திருந்த ஒருமைத்தன்மை வெளித்தெரிகையில் மனம் உலகை விட்டு மெல்லப் பிரபஞ்சத்திற்கும் தாவுகிறது. அந்த தாவலுக்கு முந்தைய புள்ளியே இலக்கியம் என என் மனம் கூவ நினைக்கிறது.
நீங்கள் அப்படி ஒரு முக்கியமான ஆசான் ஆவீர்கள் எனக்கு; அப்படி நான் தாவ நினைத்து என்னையே நான் கட்டிப் போட்டுக் கொண்ட காலங்கள் உண்டு. ஆயினும் என்னைத் தாவத்தூண்டிய இலக்கிய ரசனை உங்களிடமிருந்தே உண்டாகியது. நான் முதல் நிலை வாசகன் தான், என்பதில் எனக்கு ஐயமே இல்லை. ஆனால் இந்த ஓராண்டு காலமாகத்தான் நான் வாசகன் என்ற ஐயமின்மை உண்டாகியது எனக்கு.
இந்த உலகில் குறிப்பாக நம் நாட்டின் சூழலில், இலக்கியத்தில் நம் மனத்தைச் செல்லவிடாத அளவிற்கு வேலை செய்யும் `கவனச்சிதறல் சாதனங்கள்` நிரம்பிக் கிடக்கின்றன. அவை ஒவ்வொன்றையும் மெல்ல மெல்ல புரிந்து கொண்டு விலக்கி விலக்கியே ஒருவன் இலக்கியத்தைக் கண்டடைகிறான். பலர் அந்த சாதனங்களிலேயே தன் மனநிறைவைக் கண்டடைகிறார்கள்.
பாலியல், அரசியல், ஊடகம், விவாதம், முகநூல், கடவுள் என எல்லா அத்தியாவசிய மனத்துறைகளிலும் உள்ள போலிகளைக் களைந்துவிட்டே அவன் உண்மையான இலக்கியத்தை அடைகிறான். ஆனால் ஒருவன் உண்மையான இலக்கியத்தைக் கண்டடைய பெரும் தடையாக இருப்பதாக நான் கருதுவது, இலக்கியத் தோற்றம் கொண்ட ஒரு நடிப்பிலக்கியம்தான். அது ஒரு அடி தோண்டி பெற வேண்டிய ஒரு டன் புதையலை தோண்டவிடாமல் தடுக்க ஒரு சில சில்லறைக் காசுகளை எறிந்து பொறுக்க விடுகிறது பலரையும்!
இதைக் கடப்பதுதான் ஒரு இலக்கிய வாசகனுக்குப் பெரும் சவாலாக இருக்கிறது. இலக்கியத்திற்கும் இலக்கியத்தோல் போர்த்திய வணிகத்திற்கும் உள்ள இடைவெளியைப் புரிந்து கொண்டதும் காலம் தலைகீழாகி விடுகிறது. பதற்றம் மேலிடுகிறது. நீங்கள் சொல்வதைப் போல `இலக்கியம் எதையும் எளிமையாக்குவதில்லை; மாறாகச் சிக்கலாக்கிக் காட்டுகிறது`!
என் வயது 29; இந்த இலக்கியப் போலிகளில் திளைத்த போது எனக்கு வாழ இன்னும் பல ஆண்டுகள் இருப்பது போல ஒரு மனநிறைவு இருந்து கொண்டே இருந்தது. அந்த கவனச்சிதறல் வெற்றி பெற்றுக் கொண்டும் இருந்தது. நேர்மையும், இலக்கியமும், பகுத்தறிவும், மழலைமையும் ஒரே புள்ளியில் இணையும் புள்ளியில் வாழ்க்கையின் சிக்கல் தெளிகிறது. அதாவது தெளிவின்மையே வாழ்வின் தெளிவென்றாகிறது.
ஆம், கடந்த இரு ஆண்டுகளாய் இலக்கியத்தை அடைந்து வாசித்த பின்னர், ஒவ்வொரு நொடியும், இதயமிருக்கும் இடத்தில் ஒரு குறுகுறுப்பு தொடர்ச்சியாக இருக்கிறது.
அது சொல்கிறது; ”உனக்கு வயது 29; இன்னும் கொஞ்ச காலம்தான் இருக்கிறது உனக்கு !” என்று.
அன்புடன்
`திருச்சியிலிருந்து` கமலக்கண்ணன்.
அன்புள்ள கமலக்கண்ணன்
திருவனந்தபுரத்திலிருந்து ஒரு மலையாளப் பெண்ணெழுத்தாளர் பேசினார். பத்தாண்டுகளாக எழுதுகிறார். பத்தாண்டுகளில் எழுத்துக்கும் வாசிப்புக்குமாகச் செலவிட்டநேரம் நூறுமணி மட்டுமே என்றார். பிறநேரமெல்லாம் வீடு குடும்பம் அலுவலகம் உறவு. அப்படியென்றால் எத்தனைகுறைவான நேரம் நம் ஆளுமைக்குரியதாக அளிக்கப்பட்டுள்ளது. நம் மேலைநாட்டு மக்களைப்போல சுதந்திரமானவர்கள் அல்ல. உறவாலும் கடமைகளாலும் கட்டுண்டவர்கள். ஆகவே நேரமில்லை என்பதைப்போல தாரகமந்திரம் வேறில்லை
ஜெ
அன்புள்ள ஜெமோ அவர்களுக்கு,
நான் ராகேஷ் கன்னியாகுமரி. இப்போது வட இந்தியாவில் வேலை செய்து வரும் முப்பதை நெருங்கும் இளைஞன். உங்கள் தளத்தின் நிரந்தர வாசகன். உங்கள் புதியவர்களுக்கான ஊட்டி சந்திப்பில் பங்கு பெற விரும்புகிறேன். பிப்ரவரி 13, 14 ஆகிய தேதிகளில் சந்திப்பு இருந்தால் என்னை போன்ற தொலைதூரத்தில் இருப்பவர்களும் வருவதற்கும் , ரெயில் முன்பதிவு / நிறுவனத்தின் விடுப்பு கிடைப்பதற்கும் ஒரு மாதக்கால இடைவெளி உதவியாகவும் இருக்கும். தயவுசெய்து இந்த தேதிகளை பரிசீலிக்குமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.
நீங்கள் 13,14 ஆகிய தேதிகள் என முடிவெடுத்தால் என்னையும் ஒருவனாக கணக்கில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். அதேபோல் நான் என்ன கொண்டுவர வேண்டும் என்றும் கட்டண விவரங்களை பற்றியும் தெரிவிக்க கோருகிறேன்.
இப்படிக்கு ,
ராகேஷ் கன்னியாகுமரி
அன்புள்ள ராகேஷ்
ஒரு மாதகால இடைவெளி இருக்கிறது, வாருங்கள். மேலும் நாம் சந்திக்கலாம். நம்மூர் என்பதனால்
ஜெ
அன்புள்ள ஜெ
நலம் தானே
புதிய வாசகர்களுக்காக நீங்கள் அமைக்கும் சந்திப்பில் கலந்துகொள்ள மிகவும் ஆசைப்பட்டேன். ஆனால் என் நிலை இப்போது கொஞ்சம் நெருக்கடி. ஏனென்றால் பிப்ரவரி எங்கள் தொழிலில் மிக பரபரப்பாக இருக்கும். மார்ச் கணக்கு முடிந்தபிறகுதான் நிம்மதி
நீங்கள் மேலும் ஒரு சந்திப்பை இவ்வருடமே உருவாக்கவேண்டுமென நினைக்கிறேன். இது என் விண்ணப்பம்
ஹரிகுமார்