புதியவாசகர்களின் கடிதங்கள் 5

 

1

அன்பின் ஜெ

 
வணக்கம்,இதுவே உங்களுக்கு முதல் கடிதம்.
நானும் இங்கே கடிதம் எழுதும் பல பேரை போன்ற மன நிலையையே உடையவன்.உங்கள் அருகில் அமர்ந்திருந்த பொழுதும் உங்களிடம் பேசுவது இயலாத காரியமாகவே எனக்கு அமைந்தது.எனக்கு உங்களின் படைப்பில் மிகவும் பிடித்தது,நான் மிகவும் விரும்பி படித்தது, உங்களின் ஆஸ்திரேலியா பயண கட்டுரையான “புல்வெளி தேசம்”.எனது சாதனை என்னவென்றால் அந்த புத்தகத்தில் உங்கள் கையொப்பம் பெற்றது.இன்று காலையில் உங்கள் வலை பக்கத்தில் புதியவர்களுக்கு ஆன சந்திப்பு குறித்து அறிந்தேன்.உங்களை சந்தித்து பேச ஆவல்,இந்த முறை பேசிவிடுவது என்று முடிவு செய்தாயிற்று.

நன்றி

ல.ஸ்ரீனிவாசன்.

 

அன்புள்ள சீனிவாசன்,

உங்கள் முதலெழுத்து உங்களை நினைவுக்குள் நிறுத்தும் நண்பர் ஆடிட்டர் வெ.சுரேஷை வே சுரேஷ் என நெல்லை மொழியில் கூப்பிடுவதுண்டு. உங்களை லே சீனிவாசன் என குமரி மொழியில் அழைக்கலாம்

ஜெ

அன்புள்ள ஜெ,

தொடர்ச்சியான புதியவர்களின் கடிதங்கள் ஒரு சந்திப்பைத் திட்டமிடத் தூண்டியது மகிழ்ச்சி. நேரில் சந்திக்காவிட்டாலும் தொடர்ந்து படித்தும், முரண்பட்டும், விட்டு விலகியும், மீண்டு திரும்பியும் தொடர்ந்துள்ளது உங்கள் தளத்துடனான பயணம். நேர்ச் சந்திப்பில் பங்கேற்பது ஆர்வமாக உள்ளது.

ராஜேஸ்
சென்னை.

 

அன்புள்ள ராஜேஷ்

இத்தகைய ஒரு சந்திப்பு எனக்கே தேவைப்பட்டது

ஜெ

 

வணக்கம்,
புதியவர்கள் சந்திப்பு – உதகை குறித்த பதிவைப் பார்த்தேன். பிப்ரவரி 13, 14ம் தேதிகளில் வரலாம் என ஆவல் உந்தினாலும் சிறு தயக்கம் இருக்கிறது. காரணம் நான் உங்களின் வெண்கடல் தொகுப்பை மட்டும்தான் படித்திருக்கிறேன். இப்போதுதான் ‘புறப்பாடு’ என் கைக்கு வந்துள்ளது. இனிமேல்தான் வாசிக்கப் போகிறேன். கே.என்.சிவராமன் அவர்கள் கொற்றவையை எனக்கு வாசிக்கக் கொடுத்து நீண்ட நாட்கள் ஆகி விட்டன. எனது வாசிப்பறிவை இன்னும் கொஞ்சம் வளர்த்துக் கொண்ட பிறகு கொற்றவையைப் படிக்கலாம் என காத்திருக்கிறேன். வெண்கடல் எனக்களித்த வாசிப்பனுபவம் அபாரமானது. இருந்தும் உங்களின் ஒரு சிறுகதைத் தொகுப்பை மட்டுமே படித்த நான் அச்சந்திப்பில் கலந்து கொள்வது சரியாக இருக்குமா?

கி.ச.திலீபன்

அன்புள்ள திலீபன்

நேரில் வருக, சந்திப்போம்

சந்திப்புகளில் முதல்தயக்கமே பெரிய சிக்கல். அதை உடைப்பதே பெரிய விஷயம். ஜே ஜே சிலகுறிப்புகளில் அந்த தருணம் அழகாக வந்திருக்கிறது

ஜெ

 

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு

வணக்கங்களுடன் அ. மலைச்சாமி எழுதுகிறேன். சுமார் 7 ஆண்டுகளாக நான் தங்களின் வாசகன். என்னை புரட்டிய படைப்புகள் தங்களுடையவை. இன்றைய காந்திதான் நான் வாசித்த தங்களின் முதல் புத்தகம். அதன் பின்னர் வாசித்த தங்களின் படைப்புகள் என்னை மிரள செய்தன. 7 ஆண்டுகளுக்கு முன்பு நான் தேவி வார இதழில் 2 சிறுகதைகளும், சில சிறு பத்திரிகைகளில் சில கவிதைகளும் எழுதியிருக்கிறேன். தங்கள் படைப்புகள் என்னை ஆள ஆரம்பித்த பின் கிட்டத்தட்ட நான் எழுதுவதையே நிறுத்திவிட்டேன். எழுதுவது வாசிக்கத்தான். வாசிப்பு சலிக்கும்போதோ அல்லது வாசிப்பில் குறை காணும்போதோ அல்லது அனுபவம், வாசிப்பினூடாக சில புதிய தரிசனங்கள் பெறும் போதுதானே எழுத முடியும்? நான் தங்கள் படைப்புகளை வாசிக்கும் தோறும்(குறிப்பாக அறம், வென்முரசு) பிரம்மிக்கவும், சிந்தனா இன்பத்தில் திளைக்கவுமே நேரம் போதவில்லை. அதனால்தான் எழுதுவது நின்று போனது. தங்கள் படைப்புகள் என்னை சுத்திகரித்து பேரின்ப வெளிக்கு தள்ளுகிறது.

தங்களை சந்திக்க வேண்டும் என்ற ஆவலில் 2013 ல் ஒரு முறை நாகர்கோவிலுக்கு வந்தேன். ஆனாலும் மனம் தங்களை சந்திக்க துணியவில்லை. திரும்பி வந்துவிட்டேன். அதன் பிறகு நீங்கள் சென்னைக்கு பல முறை வந்த போதும் தங்களை நேரில் பார்க்கும் பேறு தள்ளிக்கொண்டே போனது. கடந்த ஆண்டு தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையின் மாதாந்திர விழாவில், நாஞ்சில் நாட்டு தனிச்சிறப்புகள் குறித்து தாங்கள் உரை நிகழ்த்திய போது மூன்றாவது வரிசையின் நடுவில் அமர்ந்து தங்களையும், தங்கள் உரையையும் கேட்கும் பேறு பெற்றேன். ஒரு இலக்கிய விழாவில் அதுமாதிரியான நுட்பமான பேச்சுகளை அதுவரையும், அவ்வுரைக்கு பின்னும் நான் கேட்டதே இல்லை. அன்று எனக்கு இன்னொரு பயம் வந்தது. எழுத்துக்கும், பேச்சுக்கும் வித்தியாசமே இல்லாமல் துல்லியமாக பேசும் தங்களிடம், எதிலும் அரை குறையாக இருக்கும் நான் பேசி தங்களை வெறுப்படைய செய்ய கூடாது என்பதால் நாமெல்லாம் எட்டி நின்றால் போதும் என்று எண்ணிக்கொண்டேன். ஆனால் ஆசைக்கு அறிவு கிடையாது அல்லவா? பதின்ம வயது காமம் போல தங்களை நெருங்க ஆசை. நெருங்கினால் பயம்.

இலக்கியம் குறித்து பேசவும், பழகவும் நல்ல நண்பர்கள் வாய்க்கவே இல்லை. பல காலம் நான் ஏங்கியிருக்கிறேன். சில நண்பர்களை(என் மனைவி உட்பட) புத்தகங்கள் வாசிக்க செய்ய முயற்சிக்கவும் செய்தேன். முடியவில்லை. அதனால் எனக்கு நண்பர்களும் அவ்வளவு அதிகம் இல்லை. அறிதலின் இன்பத்தை அனுபவிக்க விரும்பாதவர்களிடம் தொடர்ந்து பேச எனக்கும் ஆர்வம் இல்லை. கடைநிலை அரசூழியனான நான் 150 பேர் பணியாற்றும் பணியிடத்தில் என்னைத் தவிர இலக்கியம் பேச யாருக்கும் ஆர்வம் இல்லை. யாரும் வாசிப்பதுமில்லை.

ஆகவே தங்களின் நீலகிரி இலக்கிய வாசகர் கூடலில் பங்கேற்க நான் ஆவலோடு காத்திருக்கிறேன். என் பெயரை பரிசீலிக்குமாறு வேண்டுகிறேன்.

அன்பன்

அ.மலைச்சாமி

 

அன்புள்ள மலைச்சாமி

நேரில் சந்திப்போம். ஊட்டி நல்ல சூழல். பொதுவாக நேரில் பேசும்போது ஓர் இயல்புநிலை உருவாகும். அதேசமயம் தீவிரநிலை சற்று தளரவும் செய்யும். சந்திப்புகளைப்பற்றிய பிரமைகள் இல்லாமல் சந்திப்பதே முக்கியமானது

வருக

ஜெ

 

 

அன்பு ஜெ,

வணக்கம்.

இளமையில் சுஜாதா, சாண்டில்யன் நாவல்களும் இடதுசாரி இயக்க தொடர்பு மூலம் சில ஜெயகாந்தன் நாவல்களும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு குடும்ப சூழல், பொருள் தேடிய வாழ்க்கை என்று, படிப்பு என்பது வார இதழ் வாசிப்புடன் நின்று விட்டது. மூன்று வருடங்களுக்கு முன் காங்கோ மகேஷ் மூலம் தங்களின் வாசகனாகும் வாய்ப்பு கிடைத்தது. அன்று முதல் தொடர்ந்து தங்கள் தலத்தில் வரும் அனைத்து பதிவுகளையும் வாசித்து விடுகிறேன். வெண்முரசு தொடர்ந்து வாசித்து வருகிறேன். தங்களின் புறப்பாடு, எனக்குள் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.இரவு, கன்னிநிலம், கன்னியாகுமரி, ரப்பர், நாவல்களும், அறம் தொகுப்பும் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.தற்போது விஷ்ணுபுரம் வாசித்து வருகிறேன். கடந்த ஆண்டு விஷ்ணுபுரம் விருது விழாவிற்கு வந்திருந்தேன். தங்களின் பாலக்காடு உரையை கேட்க மகேஷ், கிருஷ்ணன், மற்றும் நன்பர்களுடன் வந்திருந்தேன். இந்த ஆண்டு விஷ்ணுபுரம் விழாவிற்க்கு இரண்டு நாட்கள் தங்களுடன் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. தங்களின் எளிமை என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இருந்தும் தங்களிடம் பேசவும், பகிரவும் எனக்குள் ஒரு தடை இருந்து கொண்டே உள்ளது. தாங்கள் அறிவித்துள்ள புதியவர்களுக்கான ஊட்டி சந்திப்பு அதை போக்கும் என நினைக்கிறேன். அதற்காக காத்திருக்கிறேன்.

அன்புடன்,

வரதராஜன்

நாமக்கல்.

 

அன்புள்ள வரதராஜன்

சந்திப்போம். ஊட்டி நிகழ்ச்சிகளில் பொதுவான தலைப்புக்கள் முறையாக வகுத்திருப்பதனால் விரிவான உரையாடல்கள் நிகழாமல் போகிறது. இம்முறை அது நிகழவேண்டும் என நினைக்கிறேன். ஏனென்றால் தலைப்புகள் இல்லை. சந்திப்பே தலைப்பு

ஜெ

 

முந்தைய கட்டுரைபாவண்ணன் சிறப்பிதழ்
அடுத்த கட்டுரைசெவ்விலக்கியங்களும் செந்திலும்