புதியவாசகர்களின் கடிதங்கள் 4

images

அன்புள்ள ஜெ

சில நாள்களுக்கு முன் தோல்வியால் சோர்ந்திருந்த ஒரு இரவில் கடந்த காலங்களை வீணடித்ததை நினைத்து வருந்திக் கொண்டிருந்த பொழுதில் உங்களை நினைத்துக்கொண்டேன். அது தந்த மன நிறைவையும் நம்பிக்கையும் வார்த்தைகளைக் கொண்டு என்னால் சொல்ல இயலவில்லை. பின்னிரவுக்குப் பின்னும் மனம் நெகிழ்ந்து கண்ணீருடன் நினைத்துக் கொண்டேன். உங்களை வாசித்ததற்குப் பின் நான் கண்டு கொண்ட எத்தனை எத்தனை உலகங்கள், சிந்தனைகள், மனிதர்கள்,எழுத்தாளர்கள், புத்தகங்கள், என நினைக்க நினைக்க முடிவற்று வந்து கொண்டே இருக்கின்றன.

உங்கள் எழுத்துக்களை வந்தடைந்தது தற்செயலால் தான். தோழி ஒருத்தி பரிசாக தந்த நவீன தமிழ் இலக்கியம் ஓர் அறிமுகம் என்னும் நூல் தான் உங்களை வந்தடைய காரணம். ஜெயமோகன் என்ற எழுத்தாளரை பற்றி வாங்கிய அவளுக்கும் எனக்கும் அதற்கு முன்பு வரை தெரியாது (பின்னர் தான் அறிந்துகொண்டேன் தினமணி சிறுவர் மணியில்  உங்கள் பனிமனிதன் தொடரை பள்ளி நாட்களில் வாசித்திருப்பதை ). கடந்த மூன்று ஆண்டுகளாக ஏறத்தாழ எல்லா நாட்களும் உங்களது எழுத்துக்களை வாசிக்காமல் இருந்ததில்லை. உங்கள் எழுத்துக்கள் பாதிக்காத ஒரு என்னமோ நினைவுகளோ வந்ததில்லை. வண்ண தாசன் அகம் புறம் ஆனந்த விகடனில் எழுத ஆரம்பத்தில் அவரது எழுத்தை படித்துப் பின் ஆனந்த விகடனை தொடர்ந்து எட்டு ஆண்டுகள் மற்றும்  தினமணியின் கட்டுரைகளையும் பொழுது போக்காக வாசித்துக் கொண்டிருந்த பொழுதில் தற்செயலாய் கிடைத்த அந்த புத்தகத்தில் உங்களது சில வரிகள் என் வாழ்க்கையை  தலை கீழாக மாற்றி விட்டது. அறிவியலுக்கும் கலைக்கும் கணிதத்திற்கும் நீங்கள் கொடுத்த விளக்கம்   தான் என் வரையறைகளை உடைத்தது.நான் உங்களை கண்டுகொண்ட தருணம். அது எனக்கு மறு பிறப்பு. பைத்தியம் பிடித்ததை போல உங்கள் எழுதுக்களை வாசித்திருக்கிறேன்.

உங்களுக்கு எத்தனையோ முறை கடிதம் எழுத நினைத்தும் வாசகர் கடிதங்களை அதன் தரங்களை அவர்களின் நுண்ணுணர்வுகளை வியந்து நாம் மிக மேலோட்டமாக வாசிக்கிறோமோ என தயங்கி நின்று விடுவேன். ஒரு முறை மட்டும் எளிய மின்னஞ்சலினை அனுப்பி நின்றுகொண்டேன்.

வெள்ளை யானை வெளியீட்டு விழாவில் உங்களை முதன் முதலாக நேரில் கண்டேன். மிக எளிமையாக நீங்கள் மேடையில் அமர்ந்திருந்தீர்கள். நான் கண்ட ஜெயமோகன் அங்குதான் இருந்தார். நான் எழுத்துக்கள் வழியே கண்ட பிரம்மண்டத்துடன் அல்ல. பின் பனுவல் சந்திப்பில் பேச நினைத்து தயங்கி விட்டேன்.  மீண்டும் வெண்முரசு நாவல் வெளியீட்டு விழாவில் இறுதியாக உங்களிடம் இரண்டொரு சொற்கள் பேசினேன். என்னை உங்களோடு ஒரு கையால் சேர்த்து அணைத்து ஒரு புகைப்படம் எடுக்கச் சொன்னீர்கள். அந்த கணத்தின் எழுச்சியால் அந்த புகைப்படத்தை கூட அந்த நண்பரிடமிருந்து பெற்றுக்கொள்ள தவறிவிட்டேன். எத்தனையோ நாள் நான் நினைத்திருக்கிறேன் ஒரு தந்தையின் கரங்களை போல என்னை அணைத்துக்கொண்ட பின்னும் இன்னும் என்ன தயக்கம் என.

வெள்ளை யானையை இன்னும் நான் வாசிக்கவில்லை மன்னிக்கவும்.

இந்த முறை உங்களை சந்திக்க என் மனத் தடைகளை கடந்து விடுவேன் என நினைக்கிறேன். எனக்கும் ஒரு வாய்ப்பை தருவீர்கள் என நம்புகிறேன்.

அன்புடன்,

விஷ்ணு.

 

அன்புள்ள விஷ்ணு

முன்புபோல நான் நீண்ட தனிப்பட்ட கடிதங்கள் எழுதமுடிவதில்லை. ஆகவேதான் பொதுவான கடிதங்களைப் பிரசுரிக்கிறேன். அவை பலருக்கும் அவர்களுக்கு எழுதப்பட்டவை போலத் தோன்றுகின்றன. இந்தக்காலகட்டம் நமக்கு அளிக்கும் வசதி இந்த ஓயாத உரையாடல். இதை நம்மை மேலும் வளர்த்துக்கொள்ள பயன்படுத்தலாமென நினைக்கிறேன்.

நலமாக இருக்கிறீர்கள் அல்லவா? வருக, சந்திப்போம்

ஜெ

 

வணக்கம் திரு ஜெயமோகன்

நான் உங்களுக்கு அனுப்பும் கடிதங்களுக்கு நீங்க பதில் அனுபுவதே இல்லையே, அதற்கு காரணமாவது தெரியப்படுத்துங்கள்.

பா – சதீஷ்

 

அன்புள்ள சதீஷ்

மன்னிக்கவும்

புறக்கணிப்பெல்லாம் இல்லை. என்ன காரணம் என்றால் நீங்கள் முன்பு அனுப்பியது விரிவாகப்பதிலளிக்கவேண்டிய கேள்வி

அதை எடுத்துவைத்தேன். ஆனால் தொடர் எழுத்துவேலைகளால் பிந்திபோய் பின்னுக்குப்போய்விட்டது

வெண்முரசு தொடங்கியபின் இச்சிக்கல் அடிக்கடி வருகிறது

ஜெ

 

ஜெ

தங்களைச் சந்திக்கவேண்டும் என்பது நீண்டநாள் ஆசை. பலநாள் உங்கள் கூட்டங்களுக்கு வந்து அருகிலேயே தயங்கி நின்றுவிட்டுத் திரும்பிவந்திருக்கிறேன். இன்று உங்களை நேரில் சந்திக்க ஒரு வாய்ப்பை நீங்களே உருவாக்கித்தருகிறீர்கள். அதைப்பயன்படுத்தமுடியாத நிலையில் இருக்கிறேன். எனக்குத்தேர்வுகள் இருக்கின்றன. ஆகவே இந்த வாய்ப்பு இன்னும் இதேபோலத் தொடரவேண்டும் என நினைக்கிறேன். தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிரேன்

சிவராஜ்

 

வணக்கம் ஜெ,

என் பெயர் சுஷில் குமார். பூர்வீகம் குமரி மாவட்டம் தேரூரை அடுத்த குலசேகரன் புதூர். இரண்டு வருடங்களாக தங்கள் வாசகன். ரசிகன். இணையத்தில் கண்ட விவாதங்களின் அடிப்படையில் தங்கள் படைப்புகளை வாசிக்க ஆரம்பித்து இன்று முழுமையாக உங்கள் படைப்புகளை உட்கொள்ளும் பாதையில் இருக்கிறேன்.

ஆரம்பித்தது அறம். சோத்துக்கணக்கு என்றும் மனதில் பதிந்திருக்கிறது.என் நண்பர்களுக்கு நான் பரிந்துரைக்கும் முதல் புத்தகம் அறம். நான் பயின்ற கொட்டாரம் பள்ளியருகே ‘பூமேடை’ அய்யாவைக் கிண்டல் செய்த சிறுவர் கூட்டத்தில் நானும் இருந்தேன். தாங்கள் அவருடன் மிதிவண்டியில் சென்றது குறித்து எழுதியதைப் படிக்கும்போது மனசு இளகியது. அவருடன் ஒரு முறை பேசிய நினைவு மங்கலாக உறுத்திச் சென்றது.

ஒரு exploration என்ற முறையில் தங்களது நாவல்களைப் படிக்க ஆரம்பித்தேன். முதலில் ஏழாம் உலகம். பின் காடு. இன்னும் தினமும் ஒருமுறையாவது காட்டில் தாங்கள் வரைந்திருக்கும் ஏதேனும் ஒரு காட்சி என் கண்முன் வந்து செல்கிறது. அப்படி ஒரு உணர்ச்சிக் குவியல் காடு. கடைசிப் பக்கத்தின் பாதிப்பு அடுத்து விஷ்ணு புரத்தில் காலெடுத்து வைக்கும் வரை நீங்கவில்லை.

விஷ்ணுபுரம் தமிழுலகின் சின்னம். ஒவ்வொரு ஞாயிறும் நண்பர்களுடன் திருவட்டார் சுற்றித் திரிந்த நினைவுகள், அதிசயித்த காட்சிகள், நமது மாவட்ட வாழ்க்கை முறை,பூர்வீகம் குறித்த தேடல், இவை அனைத்திலும் என் நம்பிக்கையை மேலும் அழுத்தி என் சிந்தனையின் ஊடாக நிலைத்து இருக்கிறதுவிஷ்ணுபுரம்  வெள்ளை யானை,கன்னியாகுமரி, ஊமைச்செந்நாய் வாசித்து சமீபத்தில் கொற்றவையில் திளைத்து நேற்று ரப்பர் முடித்தேன். அடுத்து பின் தொடரும் நிழலின் குரல். தொடர்ந்து தங்கள் வலைப் பதிவுகளையும் வாசிக்கிறேன். என் வாழ்வின் நீங்கா ஆதர்சன எழுத்தாளராக தங்களை மனதில் இருத்தி மகிழ்கிறேன். மிகவும் தாமதமாகவே தங்களை வாசிக்க ஆரம்பித்து விட்டோமே என்கிற வருத்தம் இருக்கிறது.

நேரில் சந்திக்க எப்படா என்று காத்திருந்தேன். தங்கள் இன்றைய அறிவிப்பு மிகவும் மகிழ்ச்சியளித்தது. கண்டிப்பாக ஊட்டி சந்திப்பிற்கு வருகிறேன்.சந்திப்பிற்கான முன்னேற்பாடுகளில் உதவி தேவையிருப்பினும் மகிழ்ந்து வருவேன்.(தற்போது கோவையில் வசிக்கிறேன். ஈஷா வித்யா கிராமப் பள்ளிகளின் Academic Coordinator ஆக பணிபுரிகிறேன்.)தாங்கள் கொடுத்த அனைத்து அனுபவங்களுக்கும் நன்றி…

சுஷீல்

 

அன்புள்ள சுஷீல்

நல்ல பழக்கங்கள் கொண்டவர் என்று பெயர். நேரில் வாருங்கள் உறுதிசெய்துகொள்கிறேன்

ஜெ

 

முந்தைய கட்டுரைகாந்தியின் முகங்கள்
அடுத்த கட்டுரைசென்றகாலங்கள்