«

»


Print this Post

புதியவர்களின் கடிதங்கள்-1


IMG_20160103_181332

அன்புள்ள ஜெயமோகன்,

வணக்கம். நான் சென்னயில் பணிபுரிகிறேன் . சொந்த ஊர் கும்பகோணம். புதியவர்களுக்கான சந்திப்பின் அறிவிப்பை பார்த்தேன். நிச்சயம் இந்த முறை கலந்துகொள்ள வேண்டுமென ஆவல் கொண்டுள்ளேன். சென்னையில் சில கூட்டங்களில் கூட்டத்தோடு கூட்டமாக உங்களோடு உரையாடியுள்ளேன். தனிப்பட்ட அறிமுகம் நிகழ வாய்க்கவில்லை.

ஒரு வகையான ஆன்மீக தேடலில் அலைந்துகொண்டிருந்த பொழுதே உங்களை வந்தடைந்தேன் . உங்கள் இணையத்தில் எதேச்சையாக நுழைந்து நான் அறியாத ஒரு அறிவு உலகத்தோடு அறிமுகம் கொண்டேன் . உங்கள் இணையத்தில் பல பதிவுகளை தொடர்ச்சியாக வாசித்துகொண்டிருந்த நாட்கள் அவை. அந்த நாட்கள் என்னில் பெரும் மாற்றத்தை விளைவித்தது. உண்மையான ஆன்மீகத்தை அதற்கு பின்பே அறிந்துகொண்டேன். அதற்கு முன்பு சுஜாதா, பாலகுமாரன் , வைரமுத்து இவர்களை வாசித்திருந்தாலும் தீவிரமான இலக்கிய உலகோடு எந்த வித அறிமுகமும் பெற்றிருக்கவில்லை. உங்களிடம் வந்து சேர்ந்த பின்பே என்னுடைய வாசிப்பு, தேடல் எல்லாம் மேம்பட்டது. உங்களை மட்டுமே வாசித்திருந்த நாட்கள் இன்று நினைக்கையில் ஏக்கத்தை உருவாக்குகிறது. வண்ணநிலவன், தேவதேவன், மனுஷ்யபுத்திரன், பிரமிள், ஆத்மநாம், எஸ்.ராமகிருஷ்ணன், ஞானக்கூத்தன், சுந்தரராமாசாமி, நித்ய சைதன்ய யதி, தேவதச்சன் ..எல்லோரும் உங்கள் மூலம்தான் எனக்கு அறிமுகமானார்கள். இன்று நான் அனுபவிக்கும் வாசிப்பின்  பேரின்பத்திற்கு நீங்களே காரணம்.

அறம், ரப்பர்,  உங்கள் குறுநாவல்கள் தொகுப்பு, கன்னியாகுமாரி, ஈராறு கால் கொண்டெழும் புரவி, முள் சுவடுகள் , பண்படுதல், இயற்கையை அறிதல்  ஆகிய நூல்களை முழுமையாய் வாசித்துள்ளேன். விஷ்ணுபுரம் பாதிவரை வாசித்திருக்கிறேன். வெண்முரசில் உங்களோடு நீலம் வரை தொடர்ந்து பயணித்தேன். பிரயாகையிலிருந்து தொடரமுடியாமல் போய்விட்டது. மீண்டும் உங்களை வந்து பிடிக்க வேண்டும்.

புதியவர்களுக்கான சந்திப்பு நிகழ்ந்தால் அதில் கலந்து கொள்ள ஆவலாய் உள்ளேன். சென்னையில் நடந்தால் மிகவும் வசதி. உதகை என்றாலும் நிச்சயம் முயல்கிறேன்.

நன்றி

உமாரமணன்

 

அன்புள்ள உமாரமணன்

நன்றி

எழுத்தாளனுக்கும் வாசகனுக்குமான உறவு ஓர் அந்தரங்கமான தளத்தில் நிகழ்வது. அகங்காரம் கொஞ்சநேரம் திரைவிலகுவது. அது ஓர் உன்னதத்தருணம். அதைநானும் உணர்ந்திருக்கிறேன். நம்மிடையே மேலும் தீவிரமான உரையாடல்கள் நிகழட்டும்

ஜெ

 

அன்புள்ள ஜெயமோகன் சார்,

“நீ வாழ்வது வீணல்ல,கீழே விழுந்த ஒரு சிட்டுக்குருவியை அதன் கூட்டுக்கு மீட்க உதவினாலே” ,இந்த வரியை வாசிக்கும் போது இருபத்தி ஓர் வயது,அந்த வரியின் வீரியம் புரியும் போது முப்பத்து ஆறு. உணர வைத்ததற்கு நன்றி.

சார் ,நான் ஒட்டுமொத்தமாக ஒரு வீணடிக்கப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தவன். அறியாமை,வறட்டு ஆணவம்,செயலின்மை என்னும் கள்ளசாராய போதை,அனைத்தும் கலந்த ஆனால் மிகப்பிரமாண்டமான கனவினை வைத்துக்கொண்டு அதற்காக ஒரு துளி அரப்பணிப்போ,தைரியமோ இல்லாமல் பதினைந்து வருட வாழ்க்கையை வீணடிப்பது என்பது எவ்வளவு பயங்கரம்.

எனது துறையில் நான் ஒரு ஜீரோ என எனக்கு மூன்று வருடங்களுக்கு முன் தெரிந்தது. ஈவு இரக்கம் இன்றி சுயபரிசோதனை செய்ய வேண்டிய தருணம் வந்தது ,ஆனால் எப்படி ? யார்மூலம் எதுவும் தெரியவில்லை.உங்கள் எழுத்து பன்னிரெண்டு வருடங்களுக்கு முன் என்னை அடைந்தது,உங்களை  எனக்கு ஒன்பது வருடங்களுக்கு முன் தெரியும்.விஷ்ணுபுரம் வாசித்திருக்கிறேன், ரப்பர்,காடு,ஏழாம் உலகம் அனைத்தும் பாக்கெட் நாவல்களைப்போல் வாசித்து அப்படியே எறிந்திருக்கிறேன்.நீங்கள் காட்டிய உலகம் அதன் மூலம் இந்த மானுடம்,அதன் இயங்குமுறை,வாழ்வின் பொருள் எதுவும் புரியாமல் அறியாமல் உங்களை  கடந்திருக்கிறேன்.

ஆனால் நான் அனாதை. வேர் இல்லாமல் இருக்கும்போது எத்தனை கொம்புகளைக்கொண்டு என்னை நிமிர்த்தியிருக்கவேண்டும்? அனைத்தையும் வறட்டு அகங்காரத்தினால் அறியாமையினால்  ஒடித்து எரிந்து விட்டு பிறக்கும்போது எப்படி இருந்தேனோ அப்படியே இருப்பதென்பது எவ்வளவு பயங்கரம்.

தற்கொலையின் விளிம்பில் நிற்கும்போது நீங்கள்  மீட்சியை அளிக்கும் வாக்குத்தத்தங்களை ,தரிசனங்களை,வாழ்வின் ,உறவின் ,சுயத்தின்  பொருளை எனக்கு அளித்தீர்கள் உங்கள் வலைத்தளத்தின் மூலம். வெண்முரசு எனது கீதை எனது வாழ்வின் வரைபடம் .உங்கள் அனுபவங்கள்,உங்கள் கட்டுரைகள் வாழ்க்கையின் போக்கு ,மனிதர்களின் இயல்பு , நான் செய்யவேண்டிய அனைத்தையும்  எனக்கு காட்டியது. வெறும் லோகாதாய வாழ்வு மட்டும் சிறுவயதில் இருந்தே ஒப்பவில்லை( பீதியினால் கூட இருக்கலாம்) .இன்று உலகம் அவ்வளவு சுவையாக இருக்கிறது. சலிப்பற்ற வாழ்க்கை,உடலை பலவீனமாக்கும் எந்த பழக்கவழக்கங்களும் இல்லாமை தெளிவான எண்ணங்கள்,தமிழகத்தின் புகழ் வெளிச்சத்தில் இருக்கும் சில நண்பர்கள்,அவர்கள் எனது கனவினை நனவாக மாற்ற அளிக்கும் நம்பிக்கைகள் என எந்நேரமும்  எங்கோ ஓர் ஆனந்தம் உள்ளில் இருந்துகொண்டே இருக்கிறது.

ஆம் கீழே விழுந்த சிட்டுக்குருவியினை அதன் கூட்டுக்கு மீட்டிருக்கிறீர்கள். இனி என்னால் லட்சியவாதியாக ஆக முடியும் என்றெல்லாம் தோணவில்லை. இன்று  எனது மனதில் ஓடுவதெல்லாம்  ஒரு ரஜோகுணம் கொண்டவனாக சாங்கிய யோகத்தின் மூலம் கர்மத்தை செய்து  கூட்டிலிருந்து பறந்து எழுந்து இந்த உலகில் வாழ்வது. பரிபூரணமாக.

நான் உங்களுக்கு என்ன பண்ண முடியும் ? துச்சளைக்கு கொற்றவை ஆலயத்தை அமைக்கும் கர்ணனைப்போல் எனக்குள் நீங்கள்.புத்துயிர்ப்பு நாவலை தல்ஸ்த்தோய்  டூகோர்ஸ்களுக்காக எழுதினார் என வாசித்திருக்கிறேன். நீங்கள் எழுதிய அனைத்தும் எனக்காக.எனக்காக மட்டும்.

ஸ்டீஃபன் ராஜ்

 

அன்புள்ள ஸ்டீபன்

நலம்தானே?

பொதுவாக நம் சூழல் ஒருவகையான இலட்சியவாதமின்மையை உருவாக்கி அளிக்கிறது. அரசியல் இலட்சியங்கள் பொருளிழந்துவிட்டன. ஒரு தனிமனித இலட்சியவாதத்தை உருவாக்கியளிக்கவேண்டிய வேலை எழுத்துக்கு உள்ளது என நினைக்கிறேன்

அறவுணர்ச்சியும் ரசனையும் கொண்ட ஒருவர் சற்றேனும் இலட்சியவாதம் இல்லாமல் வாழமுடியாது. நானே கண்டுகொண்ட ஒன்றே உங்களிடம் என் எழுத்துவழியாக வந்துள்ளது

வாழ்த்துக்கள்

ஜெ

 

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/83324