முகங்களின் தேசம் கடிதங்கள்

Mugam_Desam

 

ஜெ,
நலமா?..  இந்தியப் பயணம் மிக கம்பீரமாய் நெகிழ்வாய் தொடங்கியிருக்கிறது.வெகுஜன இதழில் மிக ஆழமான எழுத்தின் தேவை என்ன என்பதை அழுத்தமாய்  உணர்த்துகிறது. சாதவாகனர்களின் அரசு நானோகாட் கணவாய் என்று முதல் பகுதியே மிக அழகாக வந்திருக்கிறது.எப்பொழுதும் உங்கள் பயணக்கட்டுரைகளை மிகவும் ரசித்து வாசிப்பேன்.மிக இயல்பாகத் தொடங்கி நுட்பமாய் விவரங்களைச் சொல்லிச் செல்கிறீர்கள்.

அமுதசுரபி எனும் அறம் எளிய மனிதர்களிடமே  இருக்கிறது என்ற வரி என்னை நெருக்குகிறது எனலாம்.ஆம் அத்தகைய மனிதர்களை வாழ்வில் தரிசிப்பவர்களுக்கே அது புரியும்.இந்தியாவின் அடிப்படையே ஏன் மானுடத்தின் அடித்தளமே ஷிண்டே போன்றவர்கள்தான் என்பது தங்கள் எழுத்தின் மூலமாய் இன்னும் வலுப்படுகிறது.

என் இரண்டாவது குழந்தை கருவிலிருந்த போது புதிதாய் ஒரு பணி இடத்திற்கு மாறுதலில் வந்தேன்.எனக்கு அங்கு யாரையுமே தெரியாது.யாரென்றே நானறியாத, எந்த உறவுமற்ற சகோதரிகள் என்னை  புளிக்குழம்பும், கீரை மசியலும் மீன்குழம்புமாய் போஷித்திருக்கிறார்கள்.கருவுற்ற பெண்ணை தம் வீட்டு மகளாய் எண்ணி  அக்கறையாய் கவனித்த அவர்களெல்லாம் மிகச்சாதாரண நிலையிலிருப்பவர்களே.அதையெல்லாம் இன்றும் நினைத்தாலும் என்ன உறவு இவர்களுக்கும் நமக்கும் என்று என் மனம் எண்ணுகிறது.

எத்தனை கொடூரங்கள் நடந்தாலும் எத்தனை ஏமாற்று வேலைகள் நடந்தாலும் இத்தேசத்தை இன்னும் பிணைத்திருப்பது இவர்களைப் போன்றவர்களே.இப்படியான ஒட்டுமொத்த தரிசனங்களையே  உங்கள் எழுத்துகளில் நான் பெறுகிறேன்.
நன்றி
மோனிகா மாறன்.

 

அன்புள்ள மோனிகா

நன்றி

முகங்களின் வழியாக ஓர் இந்தியா. அது தொகுத்துப்பார்க்க அற்புதமான இன்னொரு பயண அனுபவமாக இருக்கிறது

ஜெ

 

அன்பில் ஜெ அவர்களுக்கு,

வணக்கம்.நீங்கள் குங்குமத்தில் எழுதி வரும்முகங்களின் தேசத்தில் (முன்பே எழுதியதுதான்) நானேகட் பற்றி கூறியிருந்தீர்கள் அந்த பாதை வட இந்தியாவையும் தென்னிந்தியாவையும் இணைக்கும் வணிகப்பாதை என்றீர்கள் பழம் சங்கப் பாடல்களில் அகத்தில் கூட

.”விண்பொரு நெடுவரைஇயல்தேர் மோரியர்

பொன்புனை திகிரி திரிதரக்குறைத்த அறை இறந்து அகன்றனர்”

என்று மெளரியர் தென் திசை மீது போர் தொடுத்து வந்தார்கள் வடுகர்கள் உதவி செய்தனர்.மெளரியர் படை வரும் வழியில் வானளாவிய பனிபடர்ந்த மலை ஒன்று குறுக்கிட்டது.அவர்கள் செம்மையான பாதை ஒன்றை அமைத்தார்கள் என்றும் அந்த எல்லையில் மாபெரும் அறச்சாலைகள் இருந்தன என்கிறார்களே அந்த இடத்திற்க்கும் நானேகட்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா?

இப்படிக்கு

சுந்தர்ராஜ சோழன். .

 

அன்புள்ள சுந்தர்

ஆச்சரியமான பாடல். நான் கவனித்ததில்லை.  மிகச்சரியாக பொருந்துவதுபோலத் தெரிகிறது

ஜெ

 

முந்தைய கட்டுரைவெண்முரசு கலந்துரையாடல் -கோவை
அடுத்த கட்டுரைஇலக்கியம் மானுடனை மாற்றுமா?