பண்பாட்டரசியலின் குரல்

1

 

ஜடாயு என்னும் பேரில் எழுதும் திரு சங்கரநாராயணன் சென்ற சில ஆண்டுகளில் தமிழ்ஹிந்து உள்ளிட்ட இணையதளங்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுதி இது. ஜடாயுவின் நிலைப்பாட்டை ’இந்துத்துவப் பண்பாட்டு அரசியல்’ என்று சுருக்கமாகச் சொல்லலாம். அந்நோக்கில் இன்றைய பண்பாட்டுச்சிக்கல்களை ஆராய்ந்து விரிவான ஆராய்ச்சிக்குறிப்புகளுடன் இக்கட்டுரைகளை எழுதியிருக்கிறார்

இன்றைய சூழலில் இந்து என்ற சொல்லே ஓரு வசைச்சொல்லாக ஆக்கப்பட்டுள்ளது அதன் வெறுப்பாளர்களால். இந்துத்துவம் என்னும் சொல் ஓர் அரசியல்நோக்கு. ஆனால் அதை எவ்வகையிலும் புரிந்துகொள்ளாத எதிர்த்தரப்பினர் அதன்மேல் வெறுப்பை மட்டுமே கொட்டி ஒரு பூதமாக அதைச் சித்தரிக்கிறார்கள். அந்த அறமற்ற, தர்க்கமற்ற பூதம்காட்டல் உண்மையில் தங்களை இந்துக்கள் என நம்பும் பெரும்பான்மையினரை இந்துத்துவ அரசியலை நோக்கித்தள்ளுவதன் வெற்றிகளை இந்துத்துவத் தரப்பினர் அடைந்து வருகிறார்கள்.

ஜடாயுவின் இக்கட்டுரைகள் இன்றைய அறிவுச்சூழலில் இந்த்துவத்தை ஒரு முக்கியமான தரப்பாக நிறுத்தும் ஆற்றல் கொண்டவை. அதை மறுத்துவிவாதிக்க விரும்பும் அறிவியக்கவாதிகளுக்கும் அதனால் அவை முக்கியமானவை. அவ்வரசியலின் ஏற்புகளும் கடும் நிராகரிப்புகளும் இவற்றில் நேரடியாக வெளிப்படுகின்றன. ஆனால் அவ்வரசியலின் நெறிப்பாடுகளும் பண்பாட்டு உள்ளடக்கமும் வரலாற்றுத்தன்மையும் தெளிவாகவே பதிவாகியிருக்கின்றன. ஓர் அரசியல்தரப்பாக மட்டுமல்லாமல் அறிவுத்தரப்பாகவும் இந்துவத்தை விவாதிகக்காமல் நிராகரிக்க முடியாது என்பதற்கான சான்றாகவும் இந்நூல் உள்ளது

ஜடாயுவின் நோக்கு ஐந்து அடிப்படைகளால் ஆனது.

1. இந்தியா என்னும் இந்த தேசத்தின் பண்பாடும் அரசியல்கட்டுமானமும் இந்துமதம்சார்ந்த விழுமியங்களால் உருவாகி வந்தவை
2. அதன் அடிப்படை வேதப்பண்பாடு.
3. ஆனால் இந்தியாவில் உள்ள அத்தனை தொன்மையான பண்பாட்டுக்கூறுகளும் முக்கியமானவை.
4. வேதப்பண்பாடு அவற்றை தழுவி ஒன்றாக்கி வளர்த்தது, அந்த இணைவுநோக்கு அதன் வலிமை. அதுவே இந்தியாவை நிலைநிறுத்தும்விசை.
5. இந்தியாவின் பண்டைய பண்பாட்டுமேன்மை குறித்த உணர்வுதான் இந்தியாவை ஒன்றாக்கி நிறுத்தும் விசை. அதுவே சமகாலத்தில் இந்தியா சந்திக்கும் அறைகூவல்களை எதிர்கொள்ள ஒரே வழி

 

2
ஒட்டுமொத்தமாக இந்நூல் முழுக்க இத்தகைய கருத்துக்கள் வெவ்வேறு சொற்களில் வந்துகொண்டே இருக்கின்றன.ஜடாயுவின் இத்தொகுதியில் இருக்கும் இரு கட்டுரைகளை ஒரு தொடர்ச்சியாக அமைத்தால் அவரது நோக்கு குறியீட்டுரீதியாகவே புரியுமென நினைக்கிறேன்.

தலைப்புக்கட்டுரையான காலம்தோறும் நரசிங்கம் நரசிம்ம வழிபாட்டுக்கு இந்திய மரபில் உள்ள வேர்களை நோக்கிச் சென்று சிந்துசமவெளிப் பண்பாடு முதலே தொட்டுவந்து சமகாலம் வரை வருகிறது. ஓர் இறையுருவம் எப்படி பல்லாயிரமாண்டுகளாக மெல்லமெல்ல திரண்டு ஒரு தொன்மமாக ஆழ்படிமமாக ஆகி நம்மிடையே வந்து நின்றிருக்கிறது எனக்காட்டுகிறது.

இன்னொரு கட்டுரை அம்பலவாணரும் அமெரிக்க ஆப்பிள்களும் நடராஜர் என்னும் சிலைவடிவம் இன்றைய நவீன வாழ்க்கைச்சூழலில் எப்படி பிரபஞ்சநடனமாக, அலகிலாஆடல் என்னும் தத்துவத்தின் கலைவெளிப்பாடாக உலகுதழுவியதாக உள்ளது என விளக்குகிறது. இந்துப்பண்பாட்டின் தொன்மையின் மகத்துவமும் அதன் இன்றைய நாளைய பெறுமதியும் என இவ்விருகட்டுரைகளின் கூறுபொருளை மதிப்பிடலாம். ஜடாயுவின் நோக்கு அதுவே

நவீன அரசியலையும் இந்த மாபெரும் குறியீட்டுவெளியின் அலையாகவே ஜடாயு பார்க்கிறார். காந்தியின் கிராமராஜ்யம் குறித்த கட்டுரை எப்படி காந்தி ராமன் என்னும் அடையாளத்திலிருந்து தன் இலட்சியங்களை உருவாக்கிக்கொண்டார் என்றும் எப்படி அதை நேருவின் ஐரோப்பிய நோக்கு தோற்கடித்தது என்றும் ஆதங்கத்துடன் பேசுகிறது.

ஒட்டுமொத்தமாக இந்நூலை இந்து ஆழ்படிமங்களினூடாக ஒர் இந்தியக்கனவை உருவாக்கும் முயற்சி என்று சொல்லலாம். இரு உதாரணங்கள். ஒன்று திரௌபதி. அவளுடைய அறச்சீற்றத்தை ஒரு முக்கியப்படிமமாக முன்னெடுக்கிறார். இன்னொன்று ஐயப்பன். அதிலுள்ள சைவ வைணவ ஒருங்கிணைப்பை ஓர் முதன்மையாக படிமமாக முன்வைக்கிறார்

இந்தப்பார்வை குறைந்தது இருநூற்றாண்டுகளாக இந்தியாவில் பலபடிகளாக உருவாகி வந்த ஒன்று. இந்துமறுமலர்ச்சி இயக்கமான ஆரியசமாஜம் முதல் இந்திய தேசிய எழுச்சி வழியாக காந்தியம் வழியாக நவீன இந்து ஆன்மீக இயக்கங்கள் வரை அதற்கொரு வரலாற்றுப்பரிணாமம் உள்ளது. அதிலிருந்து கிளைத்து தனக்கென தீவிரநோக்குகளை உருவாக்கிக்கொண்டது இது.

ஜடாயுவின் மொழி ஆய்வாளருக்குரிய நிதானம் கொண்டது. அவரது பார்வையில் இந்துத் தொன்மைசார்ந்து மொத்த இந்தியப்பண்பாட்டையும் அவற்றின் தனித்தன்மைகளுடன் இணைக்கும் இயல்பே உள்ளது. எவ்வகையிலும் அதில் மேலாதிக்கத்தை உருவாக்கும் மூர்க்கமோ ஏற்றதாழ்வுகளை ஆதரிக்கும் பழமைநோக்கோ வெளிப்படவில்லை

அதேசமயம் அது பிரிவினை நோக்குகளுக்கு எதிரான அழுத்தமான நிலைப்பாடு எடுக்கிறது. ஆகவே சைவ ஆகமங்கள் வேதங்களுக்கு அயலானவை போன்ற ஆய்வடிப்படை அற்ற வெற்றுக்கூற்றுகளை ஆதாரபூர்வமாக மறுக்கிறார்

தனிப்பட்டமுறையில் லா.ச.ராவிலிருந்து தொடங்கி லலிதா சகஸ்ரநாமத்தை விவாதித்துச் செல்லும் சிறிய கட்டுரை முக்கியமான ஓர் அனுபவம் என எனக்குப்பட்டது.

இங்குள்ள அரசியல்சொல்லாடலில் எதிரி என ஒன்றை உருவகித்தால் அதை அனைத்து எதிர்க்குணங்களுக்கும் அடையாளமாக்கி வசைபாடுதலே நிகழ்ந்துகொண்டிருக்கிறது. சமநிலையுடன் எதிர்தரப்பை நோக்குவதென்பது ஜனநாயக அரசியலின் அடிப்படைகளில் ஒன்று. ஜடாயுவின் இந்நூல் அத்தகைய நோக்கில் இந்த்துவ பண்பாட்டரசியலை நோக்குபவர்களின் விரிவான விவாதத்துக்குரியது.

இந்நூல்மீதான என் விமர்சனங்கள் என்ன?ஒன்று பரிசீலனை அற்ற கண்மூடித்தனமான பழமைவழிபாட்டின் வீழ்ச்சிகளை சந்தித்த ஒரு தேசம் நாம். அதன்மீதான கண்டனம் இந்நூலில் இல்லை.இந்துத்துவம் என்று இந்நூல் சொல்லும் நோக்கு பன்மைத்தன்மையை வலியுறுத்துவது. ஆனால் அரசியல்களத்தில் ஒற்றைப்படைக்குரலுக்காக எழும் மூர்க்கம் இத்தரப்பில் இன்றுள்ளது. அதையும் கணக்கில்கொள்ளாமல் இதை வாசிக்கமுடியாது.

இரண்டு, இஸ்லாமும் கிறித்தவமும் நவீன இந்தியாவின் நெசவின் ஊடுபாவுகளில் கலந்தவை. இந்நூல் அவற்றை அன்னியசக்திகளாக நிறுத்தி ஒரு விமர்சன கோணத்திலேயே அணுகிறது. சமண, பௌத்த மதங்கள் கூட இதில் பேசப்படவில்லை. இந்துமதத்தின் அனைத்துத் தரப்புகளையும் தழுவும் மனவிரிவு அதில் இந்த மதங்களை உள்ளடக்க மேலும் விரியவில்லை. மதங்கள் நம்பிக்கைகளால் ஆனவை.நம்பிக்கைகளை மறுப்பது அவற்றின் இருப்பை நிராகரிப்பதே.

அழகிய வடிவில் தெளிவான அச்சில் அமைக்கப்பட்டிருக்கிறது இச்சிறிய நூல்.

 

 

காலந்தோறும் நரசிங்கம். ஜடாயு. தடம் பிரசுரம். சென்னை

 

முந்தைய கட்டுரைகுறள்முகம்
அடுத்த கட்டுரைவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 28