ஓ.என்.வி.குறுப்புக்கு ஞானபீடம்

ஓ.என்.வி.குறுப்பு

இவ்வருடத்தைய ஞானபீட விருது மலையாளக்கவிஞர் ஓ.எ.வேலுக்குறுப்புக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஓர் இலக்கிய விமர்சகனாகவும் வாசகனாகவும் முற்றிலும் தகுதியற்ற ஓரு விருது என்றே இதைச் சொல்வேன். தேசிய அளவில் ஒரு நல்ல கவிஞராக அறியப்படவோ, கேரளக்கவிதையின் முகமாக குறிப்பிடப்படவோ அருகதை இல்லாத ஒரு மேலோட்டமான கவிஞர் அவர். ஓ.என்.விக்குக் கிடைத்திருக்கும் இந்த விருது எல்லா வகையிலும் துரதிருஷ்டவசமானது.

ஓ.எ.வி ஒரு மோசமான கவிஞர் அல்ல. கண்டிப்பாக மலையாளக் கவிதையின் விரிந்த பரப்பில் அவருக்கான இடம் உண்டு. அபாரமான மொழித்திறன் கொண்டவ்ர் ஓ.என்.வி. மென்மையான மலையாளச்சொற்களையும் சம்ஸ்கிருதச் சொற்களையும் கலந்து கவிதைகளை செவிக்கினியவையாக உருவாக்கும் ஆற்றல் அவருக்குண்டு. யாப்பில் தேர்ச்சி கொண்டவர். ஆகவே மலையாள மொழியின் சில மிகச்சிறந்த பாடல்களை அவர் புனைந்திருக்கிறார். கவிதையில் அதிக பழக்கமில்லாத எளியமலையாளிகளுக்கு ஓ.என்.விக்குக் கிடைத்த இந்த அங்கீகாரம் மகிழ்ச்சியை அளிக்கும். அவர்கள் அறிந்த, அவர்கள் ரசிக்கும் கவிஞர் அவர்

பாடலாசிரியராகவே ஒ.என்.வி புகழ்பெற்றார். இளம் வயதுமுதலே கம்யூனிஸ்டுக் கட்சியின் தீவிர ஆதரவாளர். மலையாளப்பேராசிரியராக இருந்துகொண்ட்டே கம்யூனிஸ்டுக் கட்சியின் பிரச்சார அமைப்பாக விளங்கிய கெ.பி.ஏ.சி. நாடகக்குழுவில் இணைந்து பணியாற்றினார். தோப்பில் பாசியால் நடத்தப்பட்ட கே.பி.ஏ.சி கேரளத்தின் மாபெரும் கலாச்சார சக்தியாக ஒரு காலத்தில் விளங்கியது. அதில் இருந்துதான் கேரளத்தின் முக்கியமான இசையமைப்பாளரான தேவராஜன் மாஸ்டர் உருவாகி வந்தார். தேவராஜன் மாஸ்டரும் ஓ.என்.வியும் இணைந்து உருவாக்கிய நாடகப்பாடல்கள் இன்றும் கேரள கம்யூனிஸ்டுக் கட்சியின் அடையாளங்களாக உள்ளன. இன்றும் அவை மேடைகளில் புகழுடன் ஒலிக்கின்றன.

ஓ.என்.வி தேவராஜனுடன் இணைந்து சினிமாவுக்கு வந்து பாடலாசிரியராக ஆனார். ஆனால் அது இரு பாடலாசிரியர்களின் பொற்காலம். சம்ஸ்கிருதம் ஓங்கிய செவ்வியல்தன்மை கொண்ட பாடல்கள் வழியாக வயலார் ராமவர்மாவும் நாட்டார்த்தன்மைகொண்ட பாடல்கள் வழியாக பி.பாஸ்கரனும் திரைப்பாடல்களை ஆண்ட காலகட்டம். ஆகவே ஓ.என்.வி அடங்கியே ஒலித்தார். ராமவர்மாவின் மரணத்துக்கும் பாஸ்கரனின் முதுமைக்கும் பின்னர் அந்த இடம் ஓ.என்.விக்கு வந்தது.

மலையாளப்பாடல்களில் ஓ.என்.வி ஒரு இடத்தை தனக்கென உருவாக்கிக் கொண்டார். சராசரி மலையாள இயக்குநருக்கு பாடலுக்கு ஒரு ‘கிளாசிக் ட்ச்’ வேண்டுமென்றால் நிறைய சம்ஸ்கிருத வார்த்தைகள் தேவை என்ற பிரமை உண்டு. அத்தகைய பாடல்களை எழுதக்கூடியவராக அவர் ஆனார்.

நம்ற சீர்ஷராய் நில்பூ நின்முன்னில்
கம்ற நக்‌ஷத்ர கன்யகள்

என்பது அவர் வரி. ‘உன் முன்னால் ஒளிரும் நட்சத்திரங்கள் தலைகுனிந்து நிற்கின்றன’ என்ற பொருள். இதை நல்ல மலையாளத்தில் ‘குனிஞ்ஞ சிரசுமாய் நில்பூ நின்முன்னில் மின்னுந்ந நக்‌ஷத்ர கன்யகள்’ என்று சொல்லலாம்தான். சொன்னால் அதில் அந்த ’கிளாசிக் டச்’ இல்லாமலாகுமே!

எளிமையான நல்ல பாடல்களையும் ஓ.என்.வி நிறைய எழுதியிருக்கிறார். பொதுவாக சினிமாப்பாடல்களின் மையக்கருவான காதல் அவருக்கு அதிகம் வராது

இந்து புஷ்பம் சூடிநில்கும் ராத்ரி
சந்தனப் பூம்புடவ சுற்றிய ராத்ரி

[நிலவுப்பூ சூடி நிற்கும் இரவு
சந்தன பூ புடவை கட்டிய இரவு]

என்ற வர்ணனைகள் அதிகம் எழுதியிருக்கிறார். அவ்வப்போது இறந்தகால ஏக்கம் வடியும் பாடல்கள். மலையாளிகளில் பாதிப்பேர் சொந்த மண்ணை விட்டு வெளியே வசிப்பவர்கள் என்பதனால் அவர்களுக்கு இந்த உணர்ச்சிகள் அதிகம் பிடிக்கும்

ஒருவட்டம் கூடி என் ஓர்மகள் மேயுந்ந
திருமுற்றத்து எத்துவான் மோகம்..

[இன்னொருமுறையும் என் நினைவுகள் மேயும்
திருமுற்றத்த்துக்கு சென்றுசேர விரும்புகிறேன்]

என்ற பாடலே அவர் எழுதிய இறந்தகால ஏக்கப்பாடல்களில் அதிகம் புகழ்பெற்றது.

இந்தப்பாடல்களைக் கவனிப்பவர்களே அவரது சிக்கலையும் புரிந்துகொள்ள முடியும். எதுகை மோனை அமைந்த சரியான செய்யுள்கள் அவரது பாடல்கள். அவரது மனமே அப்படிப்பட்டது. ஆகவே சலீல் சௌதுரி இளையராஜா போன்ற புதுமையான இசையமைப்பாளர்களிடம் அவர் திறம்பட வெளிப்பட முடியவில்லை. தேவராஜன் போன்றவர்கள் அவர் எழுதும் வரிகளுக்கு இசையை அமைப்பார்கள். அவை அந்த யாப்பு அனுமதிக்கும் எளிட இசையாகவே இருக்கும். சலீல் சௌதுரியும் இளையராஜாவும் உருவாக்கும் எதிர்பாராத வடிவம்கொண்ட ஒலிக்கோவைகளுக்காக ஓ.என்.வி மிகவும் திணறியே வரியமைத்திருக்கிறார்.

பாடலாசிரியரான ஓ.என்.வி என்றுமே முதல்தர கவிஞராக அங்குள்ள முக்கியமான கவிதை விமர்சகர்களால் கருதப்பட்டதில்லை. நெடுங்காலம் அவரது பெயர் பட்டியல்களில் கூட இடம்பெற்றதில்லை. அவர் ஒரு கட்சிக்கவிஞர், அவ்வளவுதான். பொதுவாக முற்போக்காகக் கருதப்படும் கருத்துக்களை அவ்வப்போதைய பொதுபோக்குக்கு ஏற்ப யாப்பில் அமைப்பதே அவரது கவிதைமுறை. அவை அழகாக இருக்கும். ஆழமோ அவருக்கே உரிய தரிசனமோ இருக்காது. மேடைகளுக்குப் பயன்படும், ஆத்மார்த்தமான கவிதைவாசகனுக்கு ஒன்றையும் அளிக்காது.

பின்னர் ஓ.என்.வி இலக்கியப்புகழ் பெறும் நோக்குடன் ‘உஜ்ஜயினி’ போன்ற குறுங்காவியங்களை எழுத ஆரம்பித்தார். அவருக்கு ஒரு கவிஞர் என்ற சித்திரம் இக்காலகட்டத்திலேயே உருவாகியது. பலகாரணங்கள். கேரளத்தின் கறாரான இலக்கிய விமர்சன மரபைச் சேர்ந்த விமர்சகர்கள் பலர் மறைந்தார்கள். வார இதழ்களில் எழுதும் இதழாளர்களும் ஆங்கில நூல்களை ஒட்டி கட்டுரை எழுதும் ஆசிரியர்களும் விமர்சகர்களாக அறியப்படலானார்கள். அத்துடன் அங்கே விமர்சனத்தின் தரம் மறைந்தது. தர மதிப்பீடும் இல்லாமலாகியது.

இரண்டாவதாக ஓ.என்.விக்கு வயதாகியது. இப்போதிருக்கும் மூத்த கவிஞர் அவர். தந்தைவழிபாடு கொண்ட சமூகத்தில் அதுவே எல்லா அங்கீகாரங்களையும் உருவாக்கி அளிக்கும். கடைசியாக அவர் இடதுசாரிகளுக்கு அந்த பழைய பொற்காலத்தின் தொல்பொருள்சின்னமாக எஞ்சும் ஒரு இடிபாடு அவர். ஆகவே இந்த விருது.

ஓ.என்.வியின் கவிதைகளின் இயல்பும் தரமும் என்ன? மற்ற இந்திய மொழிகளில் ஐம்பதுகளிலேயே புதுக்கவிதை உருவாகி அதுவே கவிதை என நிலைபெற்று விட்டது. ஆனால் மலையாளத்தில் அறுபதுகளுக்குப் பின்னரே புதுக்கவிதை பிறந்தது. எண்பதுகளிலேயே கவனிக்கப்பட்டது. தொண்ணூறுகளுக்கு பின்னரே இலக்கிய அங்கீகாரம் பெற்றது. இன்றும்கூட மரபுக்கவிதையே மைய ஓட்டமாக உள்ளது. எழுபதுகள் வரைக்கூட பெரும் கற்பனாவாதக் கவிஞர்கள் மலையாளக்கவிதையை ஆண்டார்கள்.

மரபும் கற்பனவாதமும் கலந்த கேரளக்கவிதையின் கடைசி நட்சத்திரம் என நான் நினைப்பது வைலோப்பிள்ளி ஸ்ரீதரமேனோனை. கற்பனாவாதக் கவிஞர்கள் இலட்சியவாதிகள். சமூகக் கனவுகளை முன்வைப்பவர்கள். அச்சமில்லாத போராளிகள். பொதுவாழ்க்கையின் அனைத்து தளங்களையும் ஊடுருவும் தத்துவநோக்கு கொண்டவர்கள். அதே சமயம் மொழியிலும் கட்டமைப்பிலும் மிகமிகத் தொன்மையானவர்கள்.

அவர்களில் இரு வகை. பொதுவான கருத்துக்களை மட்டும் முன்வைக்கும் கவிஞர்கள் என வள்ளத்தோள் நாராயண மேனன், ஜி.சங்கரக்குறுப்பு போன்றவர்களை சொல்லலாம். அந்தரங்கத்தை முன்வைப்பவர்கள் என குமாரன் ஆசான், சங்ஙம்புழ கிருஷ்ணபிள்ளை, பி.குஞ்ஞிராமன்நாயர் முதலியோரைச் சொல்லலாம். இரண்டாம்வகையினரே வலுவான ஆழமான கவிதைகளை எழுதியிருக்கிறார்கள். முதல்வகையினர் ஒருவகை பாடப்புத்தகக் கவிஞர்கள் மட்டுமே.

ஞானபீடம் நிறுவப்பட்டபோது அதன் முதல் விருது அளிக்கப்பட்டது ஜி.சங்கரக்குறுப்புக்குத்தான். ஓ.என்.வி.குறுப்பு ஜி.சங்கரக்குறுப்பின் அதே பாணியிலான கவிதைகளை எழுதியவர். அவற்றை கவிதைகள் என சொல்வதைவிட செய்யுட்கள் எனலாம். திறமையான சமையல்கள் அவை. மரபார்ந்த வர்ணனைகள், சம்பிரதாயமான உவமைகள், பொதுவான தத்துவக்கருத்துக்கள் ஆகியவற்றை முறைப்படிக் கலந்து கொஞ்சம் கடந்தகால ஏக்கம் தாளித்துக்கொட்டி பரிமாறப்படும் ஆக்கங்கள்.

ஒரு கவிதை அளிக்கும் முதல் அனுபவமே அதன் புதுமை மூலம் நமக்கு வரும் பிரமிப்பும் தத்தளிப்பும்தான். பிறந்து விழுந்த குழந்தையைப்பார்க்கும் அனுபவம். இது இக்கணம் வரை எங்கிருந்தது என்ற பரவசம் கலந்த வியப்பு. புதுமை, பிறிதொன்றிலாத தன்மையில் இருந்தே கவிதையின் மற்ற குணங்கள் உருவகின்றன. வாசிக்கும்தோறும் பெருகும் சொல்நயம், சிந்திக்கும்தோறும் விரியும் தரிசனம், கடைசிவரை பிரியாத அகச்சித்திரங்கள் என கவிதையின் அனுபவம் தீவிரமானது.

ஓ.என்.வி கவிதைகள் மிக மிக சம்பிரதாயமானவை. அவற்றின் மூல வடிவங்கள் ஏற்கனவே நமக்கு தெரிந்தவை. அவர் நகலெடுப்பதில்லை, எதிரொலிக்கிறார். முன்பு விமர்சகரான எம்.கிருஷ்ணன்நாயர் ஓ.என்.விகுறுப்பின் முன்னோடியான வயலார் ராமவர்மாவை எதிரொலிக்கவிஞர் என அடையாளப்படுத்தினார். ஓ.என்.வி. எதிரொலிகளின் எதிரொலி. சென்ற காலம் என்ற இருட்குகையில் இருந்து கசிந்து வரும் ஒரு சத்தம்.

கேரள இலக்கிய விமர்சனம் எந்த அளவுக்கு முனைமழுங்கியுள்ளது என்று காட்டும் விருது இது.

முந்தைய கட்டுரைகடிதங்கள்.
அடுத்த கட்டுரைகுரு, ஒரு கடிதம்