காந்தியம் நடைமுறைச் சாத்தியங்கள்…..சித்தநாத பூபதி

1

2014 இல் ஊருக்குச் சென்றிருந்த பொழுது படித்த பள்ளிக்கும் சென்றிருந்தேன். முன்பு வேதியியல் ஆசிரியையாக-வழிகாட்டியாக் இருந்தவர் பள்ளித் தலைமை ஆசிரியராக பதவிஉயர்வு பெற்றிருந்தார். பள்ளியின் தொடர்ச்சியான முன்னேற்றத்தில் கண்ணும் கருத்துமாக செயலூக்கத்துடன் இருப்பவர். அங்கு சென்றிருந்த பொழுது பள்ளி மாணாக்கர்களின் தரைக்கீழ் நீர்த்தேக்கத் தொட்டி பழுதடைந்து விட்டது என்றும் புதிய தொட்டிக்கு நிதி தேவைப்படுவதாகவும் – முன்னாள் மாணவர்கள் உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். நாங்கள் நடத்தி வரும் அறக்கட்டளையிலிருந்து 25000 கொடுத்தேன். அதற்கு ஆகும் செலவு எவ்வளவு என்று கேட்டேன். ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ஆகும் என்றார். மீதத்தொகையை பழைய மாணவர்களிடமிருந்து பெற்றுத்தருவதாகவும் உறுதி சொன்னேன். முதலாவதாக புதிய தொட்டிக்கு அவ்வளவு தொகை தேவைப்படுமா என்று சரிபார்த்தேன். சற்றேறக்குறைய அவ்வளவு ஆகும் என்று சிவில்-எஞ்சினியரிங் அறிவு சொல்லியது.

எனக்கு மனம் உறுத்திக்கொண்டே இருந்தது. எங்கோ சிக்கனமான ஒருவழி இருக்கிறது. சிக்கனம் என்றாலே காந்தியின் தாக்கம் தான். கடிதங்களில் குத்தப்பட்டிருக்கும் குண்டூசியை எடுத்து வைத்துக் கொள்பவர் அல்லவா.

முதலாவதாக தரைக்கு கீழ் நெகிழி(பிளாஸ்டிக்) தொட்டி வாங்கிப் பதித்தால் என்ன என ஆராய்ந்தேன். தரைக்கு மேல் வைக்கப்படும் தொட்டியை விட தரைகீழ் நெகிழித் தொட்டி விலை அதிகமானது. பள்ளி மாணவர்களின் தேவைக்கு வேண்டுமென்றால் அது சரியான தீர்வாக அமையவில்லை.

தரைக்கு கீழ் நெகிழித்தொட்டி பதிக்கப்பட்டால் அது விலை அதிகமாயிருக்க காரணம் மண் தரும் அழுத்தம். ஏற்கனவே இருக்கும் தொட்டிக்குள் நெகிழித்தொட்டியை இறக்கிவிட்டால் மண்ணின் அழுத்தம் நெகிழித்தொட்டிக்கு வராது. ஆகவே தரைக்கு மேல் பயன்படுத்தப்படும் தொட்டியையே பயன்படுத்தலாம் என நினைத்தேன். ஆனால் செவ்வக வடிவில் இருக்கும் தொட்டியில் உருளை வடிவிலான தொட்டி கொள்ளும் நீரின் அளவு மாணவர்களின் தேவைக்குப் போதாது.

சிவில் படித்திருந்தாலும் இரும்பிலான அமைப்புகள் அதன் வடிவமைப்பில் வேலையில் இருப்பதால் கான்க்ரீட் தொடர்பில் அடிப்படையை விட கொஞ்சம் தான் அதிகம் தெரியும். ஆகவே என்னுடைய வழிகாட்டியாக இருந்த கோவை. வெங்கடசுப்ரமணி அவர்களைத்தொடர்பு கொண்டுகேட்டேன். அவர் ஏற்கனவே இருக்கும் தொட்டியில் உட்புறமாக இன்னொரு கான்கிரீட் தொட்டியை அமைத்துவிடலாம் என்று ஒரு வழிமுறை சொன்னார். அது 20 % அளவிற்கு செல்வைக் குறைக்கும்.

சிலநாட்களாக அதே சிந்தனை. ஜெ.சாரிடமும் தொடர்பு கொண்டு திருவண்ணாமலை வீட்டை வடிவமைத்த லாரி-பெக்கர் சிந்தனைத் தாக்கமுள்ள அந்த வல்லுனரிடம் ஏதும் தொழில் நுட்ப உதவி கிடைக்குமா என்று கேட்டேன். அவர்கள் கட்டடம் தொடர்பில் இருந்தாலும் நீர்த்தேக்கத் தொட்டிக்காக எதுவும் செய்யமுடியுமா என்று தெரியவில்லை என்று சொன்னார்.

தண்ணீர் தொட்டிக்குள் இறங்கிப் பார்த்தேன். பக்கத்து மரத்தில் இருந்து சல்லி வேர்கள் சிறு அளவிலும் , ஒரு பெரிய வேர் தரையையும் துளைத்திருந்தது. இதே தொட்டியையே சரி செய்து பயன்படுத்த முடியும் என்று நம்பிக்கை வந்தது.

தமிழில் வரும் தொழில்நுட்ப இதழ்கள் குறித்து பெரிய நம்பிக்கை இல்லயென்றாலும் சில புத்தகங்களை வாங்கிப் படித்தேன். ஒரு ஒளிக்கீற்றாக சுவற்றின் விரிசல்களைச் சரி செய்வது தொடர்பில் ஒரு கட்டுரை வந்திருந்தது. அந்த வேதிப்பொருள் ஊரின் மிக அருகில் ராஜபாளையத்தில் தயாராவது என்றவுடன் இன்னும் மகிழ்ச்சி. உடனே தொடர்பு கொண்டு பேசினேன். அவர்களுக்கு அவர்களின் தொலைபேசி எண் அந்த இதழில் வெளிவந்திருப்பதே தெரியவில்லை. இந்த வேதிப்பொருள் தண்ணீரில் கலந்து மாணாக்கர்களுக்கு தீங்கு விளைவிக்குமா என்று கேட்டேன். இல்லை. இது கிட்டத்தட்ட சுண்ணாம்பு. நீர் வெளிப்புகாவண்ணம் சிறிதளவு பலபடி சேர்க்கப்படும். நிறையபேர் எதுவும் விசாரிக்காமல் நீச்சல் குளத்திற்கான வேதிப்பொருளை வாங்கிச்சென்று குடிநீர்த் தொட்டிக்கு பூசுகின்றனர். அது தவறு.

இந்த வேதிப்பொருள் தண்ணீர் தொட்டிகென்றே வடிவமைக்கப்பட்டது. எங்கள் வீட்டிலயே இருந்த தொட்டியைப் பலப்படுத்த இதைப் பயன்படுத்தியிருக்கிறோம். என்றார். மிகுந்த மகிழ்ச்சியுடன் வாங்கிப் சிறிய சரிபார்த்தல் பணிகளுக்குப் பின் சுவற்றில் பூசினோம். முதல் நாள் தண்ணீர் தேக்கி வைத்திருந்த நீரளவிற்கு செந்நிறக்கோடு வரைந்து , மறு நாள் கோட்டை விட நீர்மட்டம் குறைந்திருக்கிறதா என்று பார்த்தோம். நூலளவு வேறுபாட்டைத் தவிரஏதுமில்லை. ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் தேவைப்பட்ட வேலை , பதிமூன்றாயிரத்தில் முடிந்தது. இங்கு தொழில்நுட்பமும், பெருந்தொழிலும் பயன்பட்டிருக்கின்றன. ஆனால் சிக்கனமாகச் செலவிடவேண்டும் என்று கருத்தியல் காந்தியிடம் பெற்றது தான். விமான நிலையம் , பெரிய கட்டடங்கள் என பிரமாண்ட கட்டடங்களின் வடிவமைப்பில் ஒருபகுதியாக இருந்ததை விட மனநிறைவு தந்த பணி அது.

வீட்டுக்கான திட்டவரைபடம் கேட்டு வருபவர்களுக்கு முடிந்த அளவிற்கு சிறிய வீட்டிற்கான வரைபடத்தையே அளிக்கிறேன். அப்படியும் சிலர் பெரிய வீடாக மாற்றிக் கட்டி முடிக்க முடியாமல் என்னிடமே இரண்டு லட்சம் கடன் கேட்கின்றனர்.

முழுமையான காந்திய வழியிலான தொழில் முறை நடைமுறையில் இல்லை. வருவதற்கான வாய்ப்புகளும் குறைவே. ஆனால் காந்தியக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு தேவையான மாறுதல்களுடன் அரசும் , மக்களும் இணைந்து செயல்பட்டால் அதற்கான வாய்ப்புகள் உண்டு. தொழிற்சாலைகள் சமூகத்தில் ஏற்படுத்தி இருக்கும் நல்ல மாற்றங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். உழவு மட்டுமே பெருந்தொழிலாக இருந்த ஊரில் உருவான தொழிற்சாலைகள் ஓரளவிற்கு சாதிக்கட்டுமானத்தைத் தளர்த்தி இருக்கின்றன.

பாப்பாபட்டி கீரிப்பட்டியில் அரசு ஒரு தொழிற்சாலை அமைத்திருந்தால் தாழ்த்தப்பட்டவர்கள் வேலை கிடைக்காமைக்குப் பயந்து தேர்தலில் வென்றவுடன் ராஜினாமா பண்ணியிருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்.

அன்புடன்

பூபதி

 

[குழுமத்தில் இருந்து]

 

முந்தைய கட்டுரைபுதியவர்களின் கடிதங்கள் 2
அடுத்த கட்டுரைவட்டார வழக்கு