நண்பர் திருமூலநாதன் விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தைச் சேர்ந்தவர். குறியீட்டியலில் முனைவர் ஆய்வுசெய்கிறார்.. இளமையிலேயெ திருக்குறள் கவனகம் மற்றும் அஷ்டாவதானம் செய்யும் பயிற்சி பெற்று பலநாடுகளில் ஏராளமான நிகழ்ச்சிகளைச் செய்திருக்கிறார். சமீபத்தில் திருக்குறள் பரப்பும் தேசிய அமைப்பு ஒன்றில் பங்கெடுத்துவந்து எழுதிருக்கிறார்
அன்புள்ள ஜெயமோகன்,
திரு. தருண் விஜய் (உத்தரகண்டிலிருந்து தேர்வான ராஜ்யசபா உறுப்பினர்) திருக்குறளைப் பரப்பும் பணியில் (மோடி பதவியேற்ற காலம் முதல்) ஈடுபட்டு வருவதைத் தாங்கள் அறிந்திருக்கலாம். அவர் அண்மையில் திருக்குறளை முழுதும் படித்த 133 இளைஞர்களுக்கு நாடாளுமன்றத்தில் பாராட்டுவிழா நடத்த விருப்பம் தெரிவிக்க, சில வாரங்களுக்குமுன் மதுரையில் போட்டி நடந்தது. இன்று அத்தேர்வில் வெற்றி பெற்றவர்களை அறிவித்து மின்னஞ்சல் வந்திருந்தது. பட்டியலில் என் பெயர் முதலாவதாக இருப்பதால் தேர்வில் முதலிடம் பெற்றிருக்கலாம் என்று ஊகிக்கிறேன். வரும் 17ஆம் தேதி பாராளுமன்ற வளாகத்தில் பாராட்டுவிழா நிகழவிருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். மின்னஞ்சலை இணைத்துள்ளேன்.
தங்கள் ஆசியைக் கோருகிறேன்.
அன்புடன்,
த.திருமூலநாதன்.
thirumulanathan
அன்புள்ள ஜெயமோகன்,
கடந்த டிசம்பர் 17ஆம் தேதி திருக்குறள் ஒப்பித்த 133 மாணவர்களுக்குப் பாராளுமன்றத்தில் பாராட்டுவிழா நிகழப்போவது குறித்து நான் அனுப்பிய கடிதம் உங்களுக்கு நினைவிருக்கலாம். 16ஆம் தேதி புதுதில்லி சென்று சேர்ந்தோம். அன்று மதியமே ஜனாதிபதி பிரணப் முகர்ஜியோடு போட்டோ எடுத்துக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது. ராஷ்டிரபதி பவனத்தை (அவசர அவசரமாக) சுற்றிப்பார்த்தபின் மொகலாயத்தோட்டத்தில் போட்டோ எடுத்துக்கொண்டோம். ஜனாதிபதி அரைநிமிஷ நேரமட்டில் வந்து போஸ் கொடுத்து ஓடிவிட்டார். அப்துல் கலாம் அங்கில்லையே என்று ஆதங்கப்பட்டோம். போட்டோவை இணைத்திருக்கிறேன்.
அன்று மாலை தில்லியில் கொஞ்சம் சுற்றிப்பார்த்தோம். அக்ஷர்தம் கோயிலுக்குச் சென்று ‘வாட்டர் ஷோ’ பார்த்தோம். லேசர் தொழில்நுட்பமும் வண்ணக்கலவைகளையும் இணைத்து கேனோபநிடதக் கதையொன்று நீர்விளையாட்டாகக் காட்டப்பட்டது. ஒரு சிறந்த ‘தியேட்டர் ஷோ’ என்று சொல்லலாம். ஏனோ கோயிலிலிருக்கும் உணர்வே இல்லை. நிகழ்வு சிறப்புற நிகழ்ந்தது என்றுமட்டும் சொல்லலாம்.
அடுத்தநாள் காலையில் பாராளுமன்ற வளாகத்தில் உள்ளே நுழைந்தபோது லோக்சபாவில்தான் பாராட்டுவிழா என்று நம்பியிருந்த எங்களுக்கு அது நிகழவிருப்பது வளாகத்திலுள்ள வேறொரு ஹால் என்று தெரியவந்தபோது கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருந்தது. விழாவிற்குக் கிட்டத்தட்ட 30 எம்பிக்கள் வந்தார்கள். வெவ்வேறு கட்சி எம்பிக்கள். பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், திமுக போன்ற கட்சிகளின் எம்பிக்கள் இருந்தார்கள் (அதிமுக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது). தமிழக எம்பிக்களிலேயே து.ராஜா, டி.கெ.ரங்கராஜன், திருச்சி சிவா, கனிமொழி ஆகியோர் இருந்தார்கள். அங்கும் கொஞ்சம் தமிழக அரசியல் மேடை போலவே சிலசொற்களை இவர்கள் பேசியபோது பீதியடைந்தேன். பின்பு பாஜகவின் வெங்கைய நாயுடு வழக்கமான இந்துத்துவ அரசியல் பேசியபோதுதான் பீதி பறந்து ஆசுவாசம் ஏற்பட்டது. வெளிநடப்பு செய்யவில்லை, குறுக்கே பேசவில்லை, ஆனால் ஒருவர்பின் ஒருவராக அவரவர் அரசியலைத்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று ஒருவழியாகப் புரிந்துகொண்டேன். தருண் விஜய் பேசும்போது “இந்த கட்சியைச் சேர்ந்தவர்கள் எப்போதும் ஒரே மேடையில் அமர்ந்ததில்லை. திருக்குறள்தான் இதைச் சாதித்திருக்கிறது” என்று சொன்னபோது உண்மையாகத்தான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.
இந்தக் களேபரத்திற்கு நடுவில் நாங்களும் இரண்டு அதிகாரங்களை உரக்க ஒப்பித்தோம் (கடவுள் வாழ்த்து, நாடு). அதன்பிறகு பரிசளிப்பு விழாவில் முதலாவதாக அழைக்கப்பட்டேன் (போட்டியில் முதலிடம் ஆயிற்றே!). ஸ்மிருதி இரானியிடம் பரிசு வாங்கும்போது “நீ இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயன்சில் படிக்கிறாயா?” என்று விழிவிரிய வியப்போடு கேட்டார்கள் (ஓராண்டுக்கு முன்பு stipend அதிகப்படுத்தவேண்டும் என்று எங்கள் instituteஇல் அவருக்கு எதிராகப் போராட்டம் நடந்தது). ஆமாம் என்று சொன்னவுடன் வலுவாகக் கைகுலுக்கினார்கள் (அப்பாடா!). 133 பேருக்கும் பரிசு கொடுக்கப்பட்டதன்பின்பு விழா இனிதே நிறைவுற்றது. தருண் விஜய் “ஹரித்வாரில் கங்கைக்கரையில் திருவள்ளுவருக்கு சிலைவைக்க அடிக்கல் நாட்டப்பட்டுவிட்டது” என்று பலத்த கையொலிகளுக்கிடையில் அறிவித்தார்.
இன்னமும் இந்த நிகழ்ச்சியால் என்ன செய்ய முயன்றார்கள் என்பதில் எனக்குப் பிடிகிடைக்கவேயில்லை. இதையாவது செய்திருக்கிறார்கள் என்று மட்டும்தான் புரிந்துகொண்டிருக்கிறேன்!
நான் பெற்ற பரிசுக்கேடயத்தையும் இணைக்கிறேன்.
அன்புடன்,
த.திருமூலநாதன்.
thirumulanathan