பகுதி நான்கு : கூற்றெனும் கேள் – 12
அரண்மனையின் பெரிய உட்கூடத்தின் வாயிலை அடைந்ததும் கர்ணன் “முன்னால் செல் தங்கையே! நீ உன் இல்லம் புகும் நாள்” என்றான். அவள் திரும்பி புன்னகைத்து “ஆம் மூத்தவரே, என் கால்கள் நடுங்குகின்றன” என்றாள். சுநாபன் “விழுந்துவிடாதே. பேரொலி எழும்” என்றான். கையை நீட்டி “போடா” என்றபின் அவள் கைகூப்பியபடி முன்னால் சென்றாள்.
அவள் நடை சற்றே தளர, பெரிய இடை ஒசிய அழகிய தளுக்கு உடலில் குடியேறியது. குழலைநீவி கைவளைகளை சீரமைத்து, மெல்லிய கழுத்தில் ஒரு சொடுக்கு நிகழ, உதடுகளை மடித்து சிறிய கண்கள் மட்டும் நாணத்துடன் சிரிக்க சென்று நின்றாள். சேடியர் சூழ பானுமதியும், துச்சாதனனின் அரசி அசலையும் பிறஅரசியர் தொண்ணூற்றெட்டுபேரும் நிரைவகுத்து வந்தனர். பானுமதி கையில் ஏழுசுடர் எரியும் பொற்குத்துவிளக்கு இருந்தது. அசலையின் கையில் எண்மங்கலங்கள் கொண்ட தாலங்கள் இருந்தன.
முதன்மைக் கௌரவர்களின் துணைவிகளும் காந்தார இளவரசிகளுமான ஸ்வாதா, துஷ்டி, புஷ்டி, ஸ்வஸ்தி, ஸ்வாகா, காமிகை, காளிகை, ஸதி, க்ரியை, சித்தை, சாந்தி, மேதா, பிரீதி, தத்ரி, மித்யா ஆகியோர் தங்கள் குலத்திற்குரிய ஈச்சஇலை முத்திரை கொண்ட தலையணி சூடி கையில் மலர்த்தாலங்கள் ஏந்தியிருந்தனர். செம்பட்டு ஆடையணிந்து அணிக்கோலம் பூண்டிருந்தனர். கோசல இளவரசிகளான காமிகை, கௌசிகை, கேதுமதி, வசுதை, பத்ரை, சிம்ஹிகை, சுகிர்தை ஆகியோர் இக்ஷுவாகுகுலத்தின் கொடிமுத்திரையான மண்கலத்தை தங்கள் மணிமுடியில் சூடி கைகளில் சுடர்தாலங்கள் ஏந்தியிருந்தனர். மஞ்சள்பட்டாடை அணிந்திருந்தனர்.
அவந்திநாட்டு இளவரசியரான அபயை, கௌமாரி, ஸகை, சுகுமாரி, சுகிர்தை, கிருதை, மாயை, வரதை, சிவை, முத்ரை, வித்யை, சித்ரை ஆகியோர் தங்கள் மாங்கனி இலச்சினைகொண்ட முடிசூடி கைகளில் கங்கைநீர் நிறைத்த பொற்தாலங்களை ஏந்தியிருந்தனர். நீலப்பட்டாடை அணிந்திருந்த அவர்களைத் தொடர்ந்து நிஷாதகுலத்து இளவரசியரான பூஜ்யை, ஸுரை, விமலை, நிர்மலை, நவ்யை, விஸ்வகை, பாரதி, பாக்யை, பாமினி, ஜடிலை, சந்திரிகை ஆகியோர் தங்கள் குடிக்குரிய குரங்குமுத்திரைகொண்ட முடிகளைச் சூடி மஞ்சளரித்தாலங்களை வைத்திருந்தனர். இளநீலப்பட்டாடை அணிந்திருந்தனர்.
வேசரநாட்டு இளவரசியரான குமுதை, கௌமாரி, கௌரி, ரம்பை, ஜயந்தி ஆகியோர் தங்கள் குடிக்குரிய இரட்டைக்கிளி முத்திரைகொண்ட முடிநகை சூடி கைகளில் பட்டுத்துணிகொண்ட தாலங்களை வைத்திருந்தனர். பச்சைப்பட்டாடை அணிந்து தத்தைகள் போலிருந்தனர். ஒட்டரநாட்டு அரசியர் விஸ்வை, பத்ரை, கீர்த்திமதி, பவானி, வில்வபத்ரிகை, மாதவி ஆகியோர் தங்கள் குடிக்குரிய எருமைமுத்திரை கொண்ட குழலணிசூடி கைகளில் சிறிய ஆடிகளை வைத்திருந்தனர். அவர்கள் செம்மஞ்சள்நிறப்பட்டாடை அணிந்திருந்தார்கள்.
மலைநாட்டு மூஷிககுலத்து இளவரசியர் கமலை, ருத்ராணி, மங்கலை, விமலை, பாடலை, உல்பலாக்ஷி, விபுலை ஆகியோர் தங்கள் குடிச்சின்னமான எலி பொறிக்கப்பட்ட கூந்தல்மலர் அணிந்து அன்னத்தாலங்களுடன் வந்தனர். அவர்கள் கருஞ்சிவப்புப்பட்டாடை அணிந்து அவற்றின் மடிப்புகள் மலரிதழ்களென விரிந்து அமைய நடந்துவந்தனர். தொலைகிழக்குக் காமரூபத்து இளவரசியர் ஏகவீரை, சந்திரிகை, ரமணை, நந்தினி, ருக்மிணி, அபயை, மாண்டவி, சண்டிகை ஆகியோர் தங்கள் நாட்டு அடையாளமான எழுசுடர் பொறித்த முடிசூடி தாலங்களில் உப்பு ஏந்தியிருந்தனர். கிழக்கெழு சூரியனின் பொன்மஞ்சள் பட்டணிந்திருந்தனர்.
மச்சநாட்டு இளவரசியர் சிம்ஹிகி, தாரை, புஷ்டி, அனங்கை, கலை, ஊர்வசி, அமிர்தை ஆகியோர் கருநீலப் பட்டணிந்து பறக்கும் மீன்போன்ற முடிசூடி தாலங்களில் மயிற்பீலி ஏந்தியிருந்தனர். செந்நீலப் பட்டணிந்த ஔஷதி, இந்திராணி, பிரபை, அருந்ததி, சக்தி, திருதி, நிதி, காயத்ரி என்னும் திரிகர்த்தர்குலத்து இளவரசியர் மலைமுடிச்சின்னம் பொறிக்கப்பட்ட முடிசூடி களபகுங்குமப்பொடித் தாலங்களுடன் வந்தனர்.
உத்கலத்தின் இளவரசியர் திதி, சுரசை, பானு, சந்திரை, யாமி, லம்பை, சுரபி, தாம்ரை ஆகியோர் மயில்சின்னம் கொண்ட முடியுடன் கைகளில் மஞ்சள்பொடிச்சிமிழ்களுடன் வந்தனர். மயில்கழுத்துப்பட்டை அணிந்து தோகைக்கூட்டமென வந்தனர். வேல்முத்திரைகொண்ட முடிசூடிய விதேகநாட்டு இளவரசியர் துஷ்டி, வபுஸ், சாந்தி, ஸித்தி ஆகியோர் மஞ்சள்நீருடனும் மல்லநாட்டு இளவரசியர் தேவமித்ரை,தேவகாந்தி, தேவமாயை, தேவகி ஆகியோர் ஆலமர இலச்சினைகொண்ட முடிசூடி, கைகளில் நறுஞ்சுண்ணத்துடன் வந்தனர். செம்மஞ்சள் ஒளிர்பச்சை ஆடைகள் அணிந்திருந்தனர்.
அவர்களுக்குப் பின்னால் கௌரவர்களின் அசுரகுலத்து மனைவியரும் அரக்கர் குலத்து மனைவியரும் தங்கள் குடிமுத்திரைகள் கொண்ட தலையணிகளுடன் மங்கலத்தாலங்கள் ஏந்தி முழுதணிக்கோலத்தில் நிரையென வந்தனர். அணிகளின் மெல்லொலிகளும் ஆடைகளின் கசங்கல் ஒலிகளும் மூச்சொலிகளும் மெல்லிய பேச்சொலிகளுமாக அந்தக்கூடம் நிறைந்தது. “பொன்னொளிர் வண்டுகள் மொய்க்கும் கூடுபோல” என்று துச்சலன் சொன்னான். கர்ணன் அவனை நோக்கி புன்னகைசெய்தான்.
பானுமதி முன்னே வந்து விழிகள் அலைய நாற்புறமும் நோக்கி நின்றாள். “வணங்குகிறேன் அரசி” என அவள் கால்களைத் தொட்டு சென்னிசூடிய துச்சளையிடம் “நலம்பெற்று நீடுவாழ்க!” என்று வாழ்த்திய பானுமதி அவளுக்குப் பின்னால் நோக்கியபின் புருவம் சுழிக்க “மைந்தன் எங்கே?” என்றாள். துச்சளை “மைந்தனை முன்னேரே இங்கு கொண்டுவந்து விட்டார்களே?” என்றாள். “யார்?” என்றாள் பானுமதி திகைப்புடன். “இளையோர்” என்றாள் துச்சளை. “யார்?” என்றாள் பானுமதி. “இளைய கௌரவர்கள்தான்” என்றான் கர்ணன்.
பானுமதி பதைத்து “அவர்களிடமா கொடுத்தீர்கள்?” என்றாள். கர்ணன். “கொடுக்கவில்லை. அவர்களே தூக்கிக்கொண்டு வந்துவிட்டார்கள்” என்றான். “தூக்கிக் கொண்டா?” என்று பானுமதி சொல்லி திரும்பி நோக்கி மேலும் குரல்தாழ்த்தி “அவர்கள் எங்கு வந்தார்கள்? மைந்தன் எப்போது அரண்மனை புகுந்தான்?” என்றாள். சேடி “இங்கு அவர்களின் ஓசை கேட்டது. குழந்தை கையில் இருப்பதை நாங்கள் நோக்கவில்லை” என்றாள். இன்னொருத்தி “நறுஞ்சுண்ணத்தையும் குங்குமத்தையும் அள்ளி இறைத்தனர் அரசி. இப்பகுதியே வண்ணத்தால் மூடப்பட்டது. கண்களே தெரியவில்லை. நான் அவர்களை ஓசையாகவே அறிந்தேன்” என்றாள்.
“மூத்தவரே” என்று கர்ணனைப் பார்த்து முகம் சுளித்து பட்டுஉரசும் ஒலியில் கேட்டாள் பானுமதி “என்ன இது? நீங்கள் சென்றதே மைந்தனை மங்கலம் கொடுத்து நகர்புக வைப்பதற்காகத்தானே?” கர்ணன் “ஆம், அதற்காகத்தான் சென்றேன். அவனுக்கு மண்புகட்டி மங்கலமும் செய்தேன். அதன் பின்னர் இளையோர் அவனை சேர்த்துக்கொண்டார்கள். அவன் இருக்கவேண்டிய இடம் அதுதானே என்று விட்டுவிட்டேன்” என்றான்.
சிரித்தபடி அசலை “அவர்களிடமிருந்து இளவரசரை பிரித்து நோக்கவே முடியாது அக்கா… மொத்தமாகவே அத்தனைபேரும் ஏழுவண்ணங்களாக இருந்தனர்” என்றாள். “நீ பார்த்தாயா?” என்றாள் பானுமதி. “ஆம், ஒருவனை பிடித்தேன். அவன் நீலவண்ணமும் செவ்வண்ணமும் கலந்திருந்தான். கண்கள் எங்கே என நான் தேடுவதற்குள் என்னை அடிவயிற்றில் உதைத்துவிட்டு தப்பி ஓடினான்” என்று அசலை மேலும் சிரித்தாள். “அவர்களில் ஏதோ ஒரு வண்ணம் சிந்துவின் இளவரசர். நான் அவ்வளவுதான் சொல்லமுடியும்.”
பின்பக்கம் நின்ற அசுரகுலத்து இளவரசி ஒருத்தி “வண்ணத்தை வைத்து அவர்கள் சென்ற வழியை தேடலாமே” என இன்னொருத்தி “அரண்மனையே ஏழுவண்ணங்களாக கிடக்கிறது” என்றாள். அத்தனைபேரும் கண்களால் சிரித்துக்கொண்டு உதடுகளை இறுக்கி அதை அடக்கி நின்றனர்.
பானுமதி தன்னை முழுமையாக அடக்கிக்கொண்டாள். முகம் இறுக கண்கள் கூர்மைகொள்ள திரும்பி நோக்கினாள். இளவரசிகள் அதனால் சற்று விழிகுன்றினர். “நன்று” என்று அவள் சொன்னபோது மிக இயல்பாக இருந்தாள். மெல்லிய குரலில் “அவர்களிடம் மைந்தரை கொடுக்கலாமா இளவரசி? என்ன இது? நீ ஒரு அன்னையல்லவா?” என்றாள். “என் மைந்தன் அவர்களிடம் மகிழ்வாக இருப்பான்” என்றாள் துச்சளை. “அறிவிலிபோல பேசாதே” என்று பானுமதி பல்லைக் கடிக்க துச்சளை முகம் கூம்பி “ம்” என்றாள்.
“மைந்தனை அவர்கள் என்ன செய்தார்கள் என்றே தெரியவில்லையே!” என்றாள் பானுமதி. துச்சளை சிறிய மூக்கு சிவக்க “அவர்கள் என் தமையன்களைப் போல, அரசி. இங்கு நூறு தமையன்களுக்கு ஒரு தங்கையாக வாழ்ந்தவள் நான். எனக்குத் தெரியும், அது எப்படிப்பட்ட வாழ்க்கை என்று” என்றாள்.
பானுமதி மீண்டும் திரும்பிப் பார்த்து விழிகளால் சேடி ஒருத்திக்கு ஆணையிட அவள் திரும்பி உள்ளே ஓடினாள். பின்பு அவள் குத்துவிளக்கை துச்சளையிடம் கொடுத்து “மங்கல விளக்குடன் உன் அன்னையின் அரண்மனைக்குள் வருக!” என்றாள்.
மங்கலஇசை தாளத்தடம் மாறி எழுச்சி கொண்டது. கையில் ஏழுமலர் எரிய வலக்காலை எடுத்து வைத்தாள் துச்சளை. சிவந்த அடிகொண்ட சிறுபாதங்களை தூக்கிவைத்து அரண்மனையின் படிகளில் ஏறினாள். அவளை வலப்பக்கம் பானுமதியும் இடப்பக்கம் அசலையும் கைபற்றி உள்ளே கொண்டு சென்றனர்.
அரண்மனைக்குள் நுழைந்து அணிச்சேடியர் தொடர இடைநாழியில் நடந்தபோது விதுரர் பின்னால் வந்து கர்ணனிடம் “இளவரசன் இங்கு வரவில்லையா?” என்றார். கர்ணன் “ஆம், குழந்தைகள் அப்படியே எங்காவது விளையாட கொண்டு போயிருக்கலாம்” என்றான். விதுரர் “அவர்களுடன் லட்சுமணனும் இருந்தான். அவன் மூத்தவன், அவனுக்குத் தெரியும்” என்றார்.
துச்சலன் “வந்துவிடுவார்கள்” என்றான். விதுரர் “ஒவ்வொரு நாளும் இரவு எழுந்த பிறகுதான் வருகிறார்கள். இன்று அனைத்து விழாக்களிலும் சிந்துநாட்டு இளவரசனே மையம்” என்றார். “கண்டுபிடித்துவிடலாம், நான் ஆளனுப்புகிறேன்” என்றான் துச்சகன். “அஸ்தினபுரி முழுக்க ஆளனுப்ப வேண்டும். ஆளனுப்பி இவர்கள் அனைவரையும் பிடித்தாலும் குழந்தையை அவர்கள் எங்கு போட்டிருக்கிறார்கள் என்று தெரியாது” என்றார் விதுரர். கர்ணன் பொதுவாக தலையசைத்தான்.
விதுரர் திரும்பி கனகரிடம் கைகாட்ட கனகர் தொலைவிலிருந்து உடல்குலுங்க ஓடிவந்து தலைவணங்கினார். “என்ன?” என்றார் விதுரர். “இளவரசரை காணவில்லை” என இயல்பாகச் சொன்ன கனகர் விதுரரின் முகத்தை நோக்கியதும் எச்சரிக்கை கொண்டு “எங்கு சென்றார்களோ?” என்றார் கவலையுடன்.
விதுரர் அவர்களுக்கு மெல்லிய குரலில் ஆணைகளை பிறப்பிக்கத் தொடங்கவும் கர்ணன் புன்னகையுடன் துச்சலனிடம் “நன்று, ஜயத்ரதனுக்கு அஸ்தினபுரியை புரிந்துகொள்ள நல்ல வாய்ப்பு” என்றான். அவன் “ஆம், இங்கு நாமனைவரும் எவ்வளவு ஒற்றுமையாக இருக்கிறோம் என்று அவருக்கு தெரியும்” என்றான்.
கர்ணன் உரக்க நகைத்தபடி “தெளிவாக புரிந்து கொள்கிறாய் இளையோனே. ஒருநாள் நீ நடத்தும் ஒரு படையில் ஒரு படைவீரனாக வருவதற்கு விரும்புகிறேன்” என்றான். துச்சலன் “ஆம் மூத்தவரே, மகதம்மேல் படை எழுகையில் நானே நடத்துகிறேன் என்று மூத்தவரிடம் கேட்டிருக்கிறேன்” என்றான். கர்ணன் “என்ன சொன்னார்?” என்றான். “சிரித்தார்” என்றான் துச்சலன் பெருமையுடன். கர்ணன் சிரித்தான்.
மேலிருந்து பானுமதி மூச்சிரைக்க கீழே எட்டிப்பார்த்து புன்னகையுடன் “மூத்தவரே, மைந்தன் அன்னையிடம்தான் இருக்கிறான்” என்றாள். கர்ணன் “அன்னையிடமா?” என்றான். “ஆம், மொத்த இளையோரும் அப்படியே புஷ்பகோஷ்டத்துக்குச் சென்று அன்னையிடம் குழந்தையை காட்டியிருக்கிறார்கள். பேரரசி குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்” என்றாள்.
கர்ணன் “நான் அங்கு செல்லலாமா?” என்றான். “ஆம், அதைச் சொல்லவே வந்தேன். அரசி ஏழெட்டுமுறை தங்களை உசாவினார்களாம்” என்றாள் பானுமதி. கர்ணன் “இவ்வேளை அன்னைக்கும் மகளுக்கும் உரியது. அன்னையிடம் துச்சளையை அழைத்துச்சென்று முறைமைகள் செய்துவிட்டு அவைக்கு வருக! நான் அங்கிருப்பேன்” என்றான். “பேரரசி தங்களை உடனே வரச்சொன்னார்களே” என்றாள் பானுமதி. “பேரரசரிடமும் குழந்தையை காட்ட வேண்டும்.”
பின்பக்கம் வந்து மூச்சிரைக்க நின்ற அசலை “அக்கா, சிந்துநாட்டரசியை புஷ்பகோஷ்டத்துக்குத்தானே அழைத்துச் செல்லவேண்டும்?” என்றாள். “அதைத்தானே இவ்வளவு நேரம் சொல்லிக்கொண்டு வந்தேன்?” என்றாள். “அவர்கள் தந்தையை பார்க்கவேண்டும் என்று சொல்கிறார்களே?” என்றாள் அசலை.
சற்று பொறுமையை வரவழைத்துக்கொண்டு பானுமதி “முதலில் தாயைப் பார்த்து வாழ்த்து பெற்றபிறகுதான் தந்தையை பார்க்கவேண்டும். அதுதான் இங்குள்ள முறைமை. அவளிடம் சொல்” என்றாள். “சரி” என்றபின் அவள் திரும்பி ஓடினாள். கர்ணன் புன்னகைத்தபடி “இன்னும் சிறுமியாகவே இருக்கிறாள்” என்றான். பானுமதி “அவள் இளைய யாதவரை தன் களித்தோழனாக எண்ணுபவள். பிருந்தாவனத்தில் மலர்கள் வாடுவதே இல்லை என்கிறாள்” என்றாள். “நீ?” என்றான் கர்ணன். “நான் அவரை தேரோட்டியாக வைத்தவள். எனக்கு பாதை பிழைப்பதில்லை.”
கர்ணன் சிரித்து “இங்கே அத்தனை பெண்களுக்கும் அவன்தான் களித்தோழன் என்றார்கள்” என்றான். “ஆம் மூத்தவரே, சூதர்பாடல் வழியாக உருவாகிவரும் இளையவன் ஒருவன் உண்டு. கருமணிவண்ணன். அழியா இளமை கொண்டவன். அவன் வேறு, அங்கே துவாரகையை ஆளும் யாதவ அரசர் வேறு. அவ்விளையோனை எண்ணாத பெண்கள் எவரும் இல்லை.”
கர்ணன் வண்ணங்களாக ஒழுகிச்சென்றுகொண்டிருந்த இளவரசியரை நோக்கியபடி “அஸ்தினபுரி இவ்வளவு உயிர்த்துடிப்பாக எப்போதும் இருந்ததில்லை இளையவளே. எங்கு எவர் எதை செய்கிறார்கள் என்று எவருக்குமே தெரியவில்லை” என்றான். பானுமதி சிரித்தபடி “வந்து ஒரு சொல் அன்னையிடம் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்” என்றாள். “அதற்கு ஏன் சிரிப்பு?” என்றான் கர்ணன். “பெரும்பாலும் சொல்கேட்கத்தான் வேண்டியிருக்கும், வாருங்கள்” என்றாள்.
கர்ணன் படிகளில் ஏறி மாடியில் நீண்டுசென்ற மெழுகிட்டு நீர்மைபடியச்செய்த கரிய பலகைத்தரையில் நடந்தான். அவன் காலடிகள் அம்மாளிகையின் அறைகள்தோறும் முழங்கின. சாளரங்களிலும் கதவுகளின் விளிம்புகளிலும் பெண்முகங்கள் அவனைப் பார்க்கும் பொருட்டு செறிந்தன. பானுமதி “கண்பட்டுவிடப்போகிறது” என்றாள். “என்ன?” என்றான் கர்ணன். “ஒன்றுமில்லை” என அவள் வாய்க்குள் சிரித்தபடி முன்னால் ஓடிச்சென்று சேர்ந்துகொண்டாள்.
கர்ணன் திரும்பி துச்சலனிடம் “நான் அன்னையை சந்தித்துவிட்டு என் அறைக்குச் சென்று நீராடிவிட்டு அரசரின் அவைக்கு வருகிறேன். சிந்துநாட்டரசர் அங்குதான் இருக்கிறாரா?” என்றான். “இல்லை. அவர் நகர்புகுந்ததுமே நீராடச் சென்றுவிட்டார். உணவருந்தி அவரும் அரசரின் தனியவைக்கு வருவார்” என்றார் அருகே வந்த கனகர்.
கர்ணன் “முறைமைகள் முடிய விடியல் எழும் என நினைக்கிறேன். நான் நேற்றும் சரியாக துயிலவில்லை” என்றான். துச்சலன் “உறங்கிவிட்டு வாருங்கள் மூத்தவரே. ஜயத்ரதனுக்காக நீங்கள் துயில்களையவேண்டுமா என்ன?” என்றான். “’தாழ்வில்லை” என்றான் கர்ணன். துச்சலனும் துர்முகனும் துச்சகனும் துர்மதனும் அவனுடன் வர பிற கௌரவர் வணங்கி விலகிச்சென்றனர்.
புஷ்பகோஷ்டத்தில் காந்தாரியின் மாளிகை முகப்பில் தரையெங்கும் உடைந்த பீடங்களும் கலங்களும் கலைந்த துணிகளும் இறைக்கப்பட்ட உணவுப்பொருட்களும் சிதறிய மங்கலப்பொருட்களுமாக பேரழிவுக்கோலம் தெரிந்தது. உள்ளே இளைய கௌரவர்களின் கூச்சல் எழுந்தது. படாரென்று ஒரு மரப்பலகை அறைபட்டது. ஏதோ பீடம் சரிந்து விழுந்தது. கதவு ஒன்று கீல்சரியும் முனகல் எழுந்தது. கூடத்தில் கௌரவ அரசியர் இருநூற்றுவர் ஒதுங்கி நின்று தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர்.
கர்ணன் கடந்து செல்ல கோசல நாட்டு இளவரசி காமிகை “எங்கு செல்கிறீர்கள் அரசே?” என்றாள். கர்ணன் “அழைத்தார்கள்…” என்றான். “அழைத்தால் வந்துவிடுவதா?” என்றாள் அவள் தங்கை கௌசிகை. அவளைச்சுற்றி நின்ற பெண்கள் சிரித்தனர். அவர்கள் தன்னை கேலிசெய்கிறார்கள் என அவன் உணர்ந்தான். புன்னகையுடன் கடந்துசெல்ல முயல ஒருத்தி அவன் கையைப் பிடித்து நிறுத்தி “மூத்தவரே நில்லுங்கள்” என்றாள். கர்ணன் முகம்சிவந்து “என்ன இது?” என்றான். துச்சகனின் மனைவியான காந்தாரத்து அரசி ஸ்வாதை “மூத்தவரே, தப்பிச்செல்லுங்கள். தங்களை சூழ்ந்துகொள்ளவேண்டும் என இவர்கள் முன்னரே சொல்லிக்கொண்டார்கள்” என்றாள்.
“அதற்கு அவர் என்ன செய்ய முடியும்? சாளரம் வழியாக குதிக்கச் சொல்கிறாயா?” என்றான் துச்சலன். ஜலகந்தனின் மனைவியான புஷ்டி “தாவி ஓடலாமே…” என்றாள். அவந்தி நாட்டு இளவரசிகளான அபயை, கௌமாரி, ஸகை ஆகியோர் அவன் ஆடையை பற்றிக்கொண்டார்கள். ஸ்வஸ்தி “ஆடையை கழற்றிவிட்டு ஓடட்டும், பார்ப்போம்” என்றாள்.
பெண்களின் சிரிப்பு தன்னைச்சூழ கர்ணன் இடறும்குரலில் “என்ன செய்யவேண்டும் நான்?” என்றான். “என்னை ஒருமுறை தூக்கிச் சுழற்றி கீழே விடுங்கள். உங்கள் உயரத்திலிருந்து வானம் எத்தனை அணுக்கமானது என்று பார்க்கிறேன்” என்றாள் நிஷாதகுலத்து இளவரசி பூஜ்யை. பெண்கள் ‘’ஓஓ” என்று கூச்சலிட்டு ஒருவரை ஒருவர் பற்றிக்கொண்டு சிரித்தனர்.
கர்ணன் கைகால்கள் நடுங்கின. அவன் துச்சலனை நோக்க அவன் சிரித்தபடி “பலகளங்களில் வென்றவர் நீங்கள். இதென்ன? சிறிய களம்…” என்றான். “இது மலர்க்களம். இங்கே சூரியன் தோற்றேயாகவேண்டும்” என்று கனகர் பின்னால் நின்று சொன்னார். அவந்திநாட்டு அபயையும் கௌமாரியும் சிரித்துக்கொண்டே அவன் கைகளைப்பற்றி தங்கள் தோளில் வைத்துக்கொண்டு நின்று “நான் சொன்னேனே? பார்!” என்றார்கள். “என்ன?” என்றான் கர்ணன். “நான் உங்கள் தோள் வரை வருவேன் என்றேன். இல்லை இடைவரை என்றாள் இவள்…”
“அங்கரே, உங்களை இவள் கனவில் பார்த்தாளாம்” என்றாள் கௌசல்யையான கேதுமதி. “என்ன கண்டாள்?” என்றாள் அவந்தியின் கௌமாரி. “நீங்கள் பொன்னாலான கவசமும் மணிக்குண்டலங்களும் அணிந்து தேரில் செல்லும்போது உங்கள் மீது சிறிய சூரியவடிவம் ஒன்று சுடர்விட்டுக்கொண்டே வந்ததாம்.” கர்ணன் “சூதர்பாடல்களை மிகையாக கேட்கிறாள்” என்றான். “வழிவிடுங்கள்… நான் அன்னையை பார்க்கவேண்டும்.”
“வழிவிடுகிறோம். ஆனால் ஒரு தண்டனை” என்றாள் நிஷாதகுலத்து நிர்மலை. “தண்டனையா? என்ன?” என்றான் கர்ணன். “நீங்கள் எங்களை உயரமான தலையுடன் நோக்குகிறீர்கள். அது எங்களுக்கு அமைதியின்மையை அளிக்கிறது. ஆகவே நீங்கள் எங்களிடம் பொறுத்தருளக்கோரவேண்டும்.” கர்ணன் “பொறுத்தருள்க!” என்றான். “இல்லை… இப்படி இல்லை. கைகூப்பி கோரவேண்டும்.” கர்ணன் கைகூப்பி “பொறுத்தருள்க தேவியரே” என்றான்.
“இது கூத்தர் நாடகம்போலிருக்கிறது” என்றார்கள் வேசரநாட்டு இளவரசியரான குமுதையும் கௌமாரியும். “ஆம் ஆம்” என்று பிறர் கூவினர். “நான் என்ன செய்யவேண்டும்?” என்றான் கர்ணன். “என்ன செய்வதா? இருங்கள். எங்கள் கால்களைத் தொட்டு பிழை சொல்லவேண்டும்.” கர்ணன் “அத்தனைபேர் காலையுமா?” என்றான். “வேண்டாம். ஒரே காலை பிடித்தால்போதும்… காந்தாரியான ஸ்வேதையின் காலை பிடியுங்கள். அவள்தான் மூத்தவள்…” கோசலநாட்டு சிம்ஹிகை “வேண்டாம், சித்ரைதான் இளையவள். அவள் கால்களைத் தொட்டால் போதும்” என்றாள்.
அவர்களின் உடல்கள் கூத்துக் கைகளென்றாகி பிறிதொரு மொழி பேசின. காற்றுதொட்ட இலையிதழ்கள். வானம் அள்ளிய சிறகிதழ்கள். ஒசிந்தன கொழுதண்டு மலர்ச்செடிகள். எழுந்து நெளிந்தன ஐந்தளிர் இளங்கொடிகள். ஒன்றை ஒன்று வென்றன மதயானை மருப்புகள். வியர்த்து தரையில் வழுக்கின தாரகன் குருதி உண்ட செந்நாக்கெனும் இளம்பாதங்கள். மூச்சு பட்டு பனித்தன மேலுதட்டு மென்மயிர் பரவல்கள். சிவந்து கனிந்தன விழியனல் கொண்ட கன்னங்கள்.
கலையமர்ந்தவள். கருணையெனும் குருதிதீற்றிய கொலைவேல் கொற்றவை. கொடுகொட்டிக் கூத்தி. தலைகோத்த தாரணிந்தவள். இடம் அமைந்து ஆட்டுவிப்பவள். மும்மாடப் புரமெரித்து தழலாடியவள். மூவிழியள். நெடுநாக யோகபட இடையள். அமர்ந்தவள். ஆள்பவள். அங்கிருந்து எங்குமென எழுந்து நின்றாடுபவள். சூழ்ந்து நகைப்பவள். விழிப்பொறியென இதழ்கனலென எரிநகையென கொழுந்தாடுபவள். முலைநெய்க்குடங்கள். உந்திச்சுழியெனும் ஒருவிழி. அணையா வேள்விக்குளம். ஐம்புலன் அறியும் அனைத்தென ஆனவள். மூண்டெழுந்து உண்டு ஓங்கி இங்குதானே என எஞ்சிநின்றிருப்பவள்.
ஸ்வேதை உரக்க “போதுமடி விளையாட்டு” என்றாள். பெண்கள் “ஆ! அவளுக்கு வலிக்கிறது” என்று கூவினர். “போதும், சொன்னேன் அல்லவா?” என்றாள். “போடி” என்றனர். கூவிச்சிரித்தனர். ஒரே குரலில் பேசத்தொடங்கினர். ஒருவரை ஒருவர் பிடித்துத்தள்ளி கூச்சலிட்டனர். வளைகளும் ஆரங்களும் குலுங்கின. கனகர் “அந்த கௌரவப்படை எங்கிருந்து முளைத்திருக்கிறது என்று தெரிகிறது” என்றார்.
பானுமதி வருவதைக் கண்டதும் பெண்கள் அப்படியே அமைதியாயினர். வளையல்கள் குலுங்கின. கால்தளைகள் மந்தணம் சூழ்ந்தன. கடும்மென்குரல் கொண்டு “என்ன?” என்றாள் அவள். எவரும் ஒன்றும் சொல்லவில்லை. சித்ரை மட்டும் மெல்லிய குரலில் “சூரியனின் புரவிகளுக்கு லாடம் அடிப்பதுண்டா என இவள் கேட்டாள்” என்றாள். “என்ன?” என்றாள் பானுமதி. அவள் பின்னால் வந்த அசலை சிரித்தபடி “லாடம் கட்டியிருக்கிறதா என்று பார்க்கிறார்கள் அக்கா” என்றாள்.
முகம் சிவக்க “பிச்சிகள் போல பேசுகிறார்கள். அரசியர் என்னும் எண்ணமே இல்லை” என்ற பானுமதி “வாருங்கள் மூத்தவரே. பேரரசியை பார்க்கலாம்… அங்கே குரங்குக்கூட்டம் நிறைந்திருக்கிறது. பாதிப்பேரை பிடுங்கி வெளியே போடச் சொல்லிவிட்டு வந்தேன்” என்றாள்.
பெண்கள் விலகி உருவான புதர்ச்சிறு வழியினூடாக செல்லும்போது தன் பெரிய உடலை முடிந்தவரை குறுக்கிக்கொண்டான். கைகள் கிளையென்றான புதர்களில் புன்னகைகள் விரிந்திருந்தன. விழிகள் சிறகடித்தன. மல்லநாட்டு தேவமித்ரை “சூரியக்கதிர் எங்கே?” என்றாள். பலர் சிரித்தனர். தேவகாந்தி “தள்ளிநில்லடி… தேர்செல்லவேண்டாமா?” என்றாள். சிரிப்புகள், வளையோசைகள் அவனைச் சூழ்ந்து உடன்வந்தன.
இடைநாழியில் படியேறியபோது அவன் உடல்தளர்ந்து மூச்செறிந்தான். அசலை சிரித்து “இங்கே நீங்களும் இளைய யாதவரும்தான் தேவர்கள் அரசே” என்றாள். “பிச்சிகள்… இவர்கள் நடுவே இளைய யாதவர் வந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?” என்றான் துச்சலன். “என்ன ஆகியிருக்கும்? அவர் ஆடுகளை மேய்க்கத்தெரிந்தவர்” என்றாள் அசலை. “இவர்கூட குதிரைமேய்த்தவர் அல்லவா?” என்றாள் பானுமதி. “குதிரைகளை இவர் எங்கே மேய்த்தார்?” என்று அசலை சிரித்தாள்.
காந்தாரியின் அறைவாயிலில் காவல்பெண்டுகள் நின்றிருந்தனர். அவர்களுக்கு ஆணையிட்டபடி நின்ற இளையகாந்தாரியரான சுஸ்ரவையும் நிகுதியும் அவளை நோக்கினர். நிகுதி “எங்கே போனாய்? அக்கா கேட்டுக்கொண்டே இருந்தாள்” என்றாள். கர்ணன் இருவரையும் நோக்கி தலைவணங்கி “வாழ்த்துங்கள் அன்னையரே” என்றான். சுஸ்ரவை “இருவரும் கருவுற்றிருப்பதாகச் சொன்னார்கள்… நன்று மூத்தவனே… நலம் சூழ்க!” என்றாள்.
அப்பாலிருந்து மூச்சிரைக்க வந்த சுபை “அப்பாடா, ஒருவழியாக…” என்றாள். தடித்த இடையில் கைவைத்து நின்று “எனக்கு மைந்தரின்பத்தால்தான் சாவு என ஊழ்நூலில் எழுதியிருக்கிறது” என்றாள். பானுமதி “என்ன ஆயிற்று அத்தை?” என்றாள். “யானைக்கொட்டிலுக்கு பாதிபேரை கொண்டு சென்றுவிட்டோம்” என்றாள் சுபை. கீழே ஒரு குழந்தை அமர்ந்து ஒரு கோப்பையை தரையில் ஓங்கி அறைந்துகொண்டிருந்தது. அவர்கள் தலைக்குமேல் செல்வதை அது அறியவே இல்லை.
“முழுமையான ஈடுபாடு…” என்றாள் பானுமதி. சுபை “இது கருடர்குலத்து அரசி சிருங்கியின் மைந்தன் என நினைக்கிறேன்…” என்றாள். அவள் குனிந்து அதைத் தொட “போ” என்று அது தலைதூக்கி சீறியது. பானுமதி சிரித்து “அய்யோ, இளவரசர் கடும் போரில் இருக்கிறார்” என்றாள். தேஸ்ரவை “உள்ளே போ… மூத்தவர் அழுதுகொண்டும் சிரித்துகொண்டும் இருக்கிறார்கள்” என்றாள்.
அசலை உள்ளே சென்று நோக்கி விட்டு “வருக அரசே” என்றாள். கர்ணனும் துச்சலனும் துர்முகனும் துச்சகனும் துர்மதனும் உள்ளே சென்றனர். வாயிற்காக்கும் அன்னையர். கதவுக்கு அப்பால் பீடம் அமர்ந்த அன்னை. கர்ணன் மூச்சை இழுத்துவிட்டான். எங்கிருந்தோ மீண்டு அங்கு வந்தமைந்தான்.
பெரிய மஞ்சம் நிறைய கரிய குழந்தைகள் இடைவெளியில்லாமல் மொய்த்து கூச்சலிட்டுக்கொண்டிருக்க நடுவே பல இடங்களிலாக காந்தாரியின் வெண்ணிறப் பேருடல் சிதறித்தெரிந்தது. சுவர் சாய்ந்து இளைய காந்தாரிகளான சத்யவிரதை, சத்யசேனை, சுதேஷ்ணை, சம்ஹிதை ஆகியோர் நின்றிருக்க அவர்களின் உடலெங்கும் இளமைந்தர் பற்றிச் செறிந்திருந்னர். அவர்கள் அக்குழந்தைகளின் உலகில் முழுமையாகவே சென்றுவிட்டிருந்தனர்.
சத்யசேனையின் இடையிலிருந்த சுமதன் “பாட்டி பாட்டீ… நான் யானை… நான் பெரிய யானை” என்றான். அவன் இளையவனாகிய சுசருமன் “போடா… போடா… நீ சொல்லாதே. நான் நான் நான்” என்றான். சம்ஹிதை தன் இரு கைகளிலும் வைத்திருந்த குழந்தைகளை மாறிமாறி முத்தமிட்டபடி ஆழ்ந்திருந்தாள்.
அன்னையருகே காலடியில் துச்சளை அமர்ந்திருந்தாள். அவளருகே பானுமதியும் அசலையும் அமர்ந்தனர். அசலைமேல் பாய்ந்தேறிய மிருத்யன் “அன்னையே, நான் அதை எடுத்துவிட்டேன்” என்றான். “எதை?” என்றாள் அவள். இன்னொரு பக்கம் இழுத்த கராளன் “ஒரு செம்பு வேண்டும்… எனக்கு ஒரு செம்புவேண்டும்” என்றான். எல்லா குரல்களும் இணைந்த கூச்சலில் சொற்களை பிரித்தறிவதே கடினமாக இருந்தது.
“அன்னை அழிமுக நதிபோல பரந்துவிட்டார்” என்றான் துச்சலன். காலடியோசை கேட்டு திரும்பிய காந்தாரி “யார் மூத்தவனா?” என்றாள். நீளுடல் வளைத்துப் பணிந்து “ஆம், அன்னையே” என்றான் கர்ணன். “உன்னைத்தான் தேடிக்கொண்டிருந்தேன்… நீ என்னை வந்து முறைவணக்கம் செய்து போனபின் மீளவே இல்லை. இங்கே என்ன செய்கிறாய்? அறிவிலி” என்று அவள் சீறினாள். “இங்கே வா… அருகே வா” என்று அறைவதுபோல கையை ஓங்கினாள்.
கர்ணன் பின்னடைந்து “பல பணிகள் அன்னையே… இளவரசர் நகர்நுழைவு” என்று மெல்ல சொல்ல “அதற்கு நீயா மண்சுமக்கிறாய் இங்கே? நீ வந்த அன்றே இளையவனுடன் அமர்ந்து புலரியிலேயே உண்டாடியிருக்கிறாய். நான் நீ இங்கு வந்த அன்று அதை அறிந்திருந்தால் உன் பற்களை அறைந்து உதிர்த்திருப்பேன்” என்றாள். கர்ணன் துச்சலனை நோக்க அவன் விழிகளை திருப்பிக்கொண்டான்.
“இது நீத்தாரும் மூத்தாரும் குடிகொள்ளும் நகரம். அவர்களுக்கு ஒளியும் நீரும் மலரும் படையலும் அளிக்காது இங்கே அரசர்கள் வாயில் நீர்பட விட்டதில்லை…” என்று காந்தாரி மூச்சிரைக்க சீறினாள். “ஆம், நான் சொன்னேன்” என்றான் கர்ணன். “பொய் சொல்லாதே. இளையவன் அஸ்தினபுரிக்கு அரசன் இன்று. நீ அவனுக்கு நன்றுதீது சொல்லிக்கொடுக்கவேண்டிய மூத்தவன். நீயும் உடன் அமர்ந்து மதுவருந்தினாய்…”
கர்ணன் பானுமதியை நோக்க அவள் உதடுகளை இழுத்தாள். “நான் இனிமேல் சொல்லிக்கொள்கிறேன்” என்றான் கர்ணன். “இனிமேல் நான் ஒரு சொல் உன்னிடம் சொல்லப்போவதில்லை… செய்தி என் காதில் விழுந்தால் அதன்பின் மூத்தவனும் இளையவனும் இந்நகரில் இருக்கப்போவதில்லை. என் சிறியவன் சுஜாதனே போதும், இந்நகரை ஆள. அவனுக்கு கல்வியறிவும் உண்டு.”
“அவன்தான் அன்று முட்டக்குடித்தான்” என்றான் துச்சகன். பானுமதி சிரிப்பை அடக்க காந்தாரி திகைத்து தன் சிறிய வாயை திறந்தாள். துச்சலன் “கோள் சொன்னவன் சிறியவன்தான் மூத்தவரே. அவனை நாம் பிழிந்தாகவேண்டும்” என்றான். காந்தாரி அத்தருணத்தைக் கடந்து புன்னகைத்தபடி தன் கையைத்தூக்கி ஜயத்ரதனின் மைந்தனைக் காட்டி “சிறியவன்…” என்றாள். கர்ணன் “ஆம் அன்னையே, அழகன்…” என்றான்.
“அழகனெல்லாம் இல்லை. நான் நன்றாக தொட்டுப்பார்த்துவிட்டேன். உனக்கு உன்னைப்போல மைந்தன் பிறந்தால்தான் எனக்கு அழகிய பெயரன் அமையப்போகிறான்” என்றாள் காந்தாரி. “ஆனால் தளிர்போலிருக்கிறான். தொட்டுத்தொட்டு எனக்கு மாளவில்லை” என்றபின் “இங்கே வாடா” என்றாள். கர்ணன் அவளருகே அமர்ந்தபோது அவள் உயரமிருந்தான். அவள் அவன் முகத்தில் கைவைத்து தடவியபடி “வெயிலில் வந்தாயா?” என்றாள். “ஆம், அங்கத்திலிருந்து திறந்த தேரில் வந்தேன்.” காந்தாரி “ஏன் வெயிலில் வருகிறாய்?” என்றாள்.
துச்சளை “அன்னையே, அவர் சூரியன் மைந்தர் அல்லவா?” என்றாள். “போடி, முகமெல்லாம் காய்ந்திருக்கிறது. நான் மருத்துவச்சியிடம் சொல்கிறேன். அவள் ஒரு நெய் வைத்திருக்கிறாள். அதை துயிலுக்குமுன் முகத்தில் போட்டுக்கொள். முகம் பளிங்குபோல் ஆகிவிடும்” என்றபடி அவன் தோள்களையும் புயங்களையும் தடவி “என் மைந்தன் அழகன். நான் அவனை தொட்டுப்பார்த்ததெல்லாம் என் கைகளிலேயே உள்ளதடி” என்றாள்.
கர்ணன் “நான் சென்று நீராடிவிட்டு அவைபுகவேண்டும் அன்னையே” என்றான். “ஆம், சொன்னார்கள்…” என்றாள் காந்தாரி. “அவைமுடிந்து நாளை இங்கே வா. நான் இன்னமும் உன்னை பார்க்கவில்லை. அன்று முறைமைக்காகப் பார்க்கவந்தாய். அரசமுறையில் வந்தால் எவரோ போலிருக்கிறாய்.” கர்ணன் “வருகிறேன் அன்னையே” என்றான். “பார்த்துக்கொள், இந்த அரக்கர்கூட்டம் அஸ்தினபுரியையே சூறையாடிவிடும்” என்றாள் காந்தாரி.
கர்ணன் “ஆணை ,அன்னையே” என்றபடி எழுந்துகொண்டு பானுமதியை நோக்கி புன்னகைசெய்ய அசலை அவனை நோக்கி உதட்டை நீட்டி பழிப்புக்காட்டி சிரித்தாள். பேரொலியுடன் கதவு அவர்களுக்கு அப்பால் விழுந்தது. “யாரோ ஆணியை உருவிவிட்டார்கள்” என்றாள் அசலை. அவள் மடியிலிருந்த மிருத்யன் “மிகப்பெரியது!” என்றான். “இவ்வளவு பெரியது!”
காந்தாரியை பிடித்து இழுத்த தூமகந்தன் “பாட்டி பாட்டி பாட்டி” என்று கூவினான். காந்தாரி “இனி ஒருவாரத்துக்கு இவன் குரல் என் செவிகளிலிருந்து விலகாது” என்றாள். சத்யசேனை “தாங்கள் ஓய்வெடுக்கவேண்டும் மூத்தவரே” என்றாள். “எனக்கென்ன ஓய்வு…? நான் இவ்வாறு இருக்கவேண்டுமென்பது இறையாணை” என்றாள் அவள்.