கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம். நீண்ட நாள் கழித்து எழுதுகிறேன். [நீங்கள் லாஸ் ஏஞ்சலஸ் வந்தபோது ராம் வீட்டில் உங்களை நேரில் சந்தித்து உரையாடினேன்..] சரி விஷயத்துக்கு வருகிறேன்,

உங்களது சிறுகதை ஒரு சமையல்குறிப்பு படித்தேன். அதன் பின் “அலை அறிந்தது…” என்ற சிறு கதையையும் படித்தேன். சிறுகதை என்றால் திருப்பம் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். இந்த சிறுகதையில் திருப்பம் ஒன்றும் இல்லையே? ஒரு பாய் வாசனை திரவியம் விற்கும்போது தன் குடும்பத்தை பற்றியும் தம் முன்னோர்கள் பற்றியும் உரையாடுகிறார்.

இந்த சிறுகதை எந்த வகையை சேர்ந்தது? இப்படி எழுதப்படும் சிறுகதை வாசகரை கதையை பற்றி அல்லது கதையின் முடிவை பற்றி கற்பனை செய்ய தூண்டுமா? அல்லது வாசகருக்கு கதையை ஆர்வத்துடன் படிக்க தூண்டுமா?

சிறுகதை எழுத ஆசைபடும் என் போன்றோருக்கு உங்களது விளக்கம் மிகவும் உதவும்.

நன்றி அன்புடன் அருள்.

அன்புள்ள அருள்

உங்களை நினைவுகூர்கிறேன். . நலமாக இருக்கிறீர்கள் அல்லவா?

பொதுவாக எழுத்தாளர்கள் ஒருபோதும் கதைகளை விளக்கக் கூடாது. அது கலைக்கே எதிரான செயல். அதன் விளைவுகள் பல. ஒன்று, அக்கதை அந்த ஆசிரியனின் கோணத்திலேயே மேலே வாசிக்கப்படும் .மாற்றுவாசிப்புகள் முழுமையாகவே இல்லாமலாகும். இரண்டு கதையை விட்டுவிட்டு ஆசிரியன் அளிக்கும் விளக்கத்தை வைத்துக்கொண்டு வம்புபேசும் கும்பல் வேலையை ஆரம்பிக்கும். ‘பிள்ளைகெடுத்தாள்விளை’ போன்ற கதைகள் அபத்தமாக வாசிக்கப்பட்டு பலவகை பிரச்சினைகள் உருவானபோதும்கூட சுந்தர ராமசாமி வாயே திறக்காமல் இருந்தது இதனாலேயே. அதுதான் சரி.

ஆனாலும் ஒரு நண்பர், ஒருவாசகர் கேட்கும்போது என்னால் பதில் சொல்லாமல் இருக்க இயலாது. இந்தக்கதை அதன் வசீகரத்தை இழந்தால்கூட சிலருக்கு ஒரு வாசிப்புப்பயிற்சி கிடைக்கும் என்றால் அதுவே நிகழட்டும் என்றே நினைப்பேன்.

அலையறிந்தது கொடை பற்றிய கதை. இஸ்லாமில் சக்காத் என்ற கொடை ரமலான் மாதத்தின் சிறப்பு. ஆனால் இஸ்லாமிய நிபந்தனைகளின்படி நண்பருக்கு நண்பர், தோழனுக்கு தோழன் கொடுப்பதுபோல கொடுக்க வேண்டும். கதையில் கபீர்பாயின் தந்தையின் பெரும்கொடை சொல்லப்படுகிறது. ஆனால் தர்மம் தலை காக்கவில்லை. காரணம் மாடிமீதிருந்து வாரி எறிந்தது. அதுவே கதையின் கடைசிவரி. அதுதான் உச்சம், அல்லது திருப்பம்.

சிறுகதையின் உச்சம் வெளிப்படையாக இருக்கவேண்டுமென்பதில்லை. அது கிளாசிக் சிறுகதையின் இலக்கணம். அவ்விலக்கணத்தை நாம் நம் படைப்புத்தேவைக்காக மீறலாம். மௌனமான திருப்பம் இருக்கலாம். என் நதி என்ற கதையில் கதை முழுக்க ஆறு என்று சொல்லப்படுவது கடைசி வரியில் நதி என்று இருக்கும் -அதுவே திருப்பம். ஒரு சொல்லப்படாத கதை நோக்கி வாசகனை கொண்டுசெல்வதும் திருப்பம் ஆகலாம்.

இன்னொருவாசிப்பு வேண்டும் என்றால் அதில் அம்மா கொடுக்கும் ஜாக்கெட் துணியை கொடுக்கலாம். தன்னைப்போலவே நெடுநாள் திருமணம் காத்து இருக்கும் ஒரு தோழியை மனதில் கண்டு கொண்டு, எவ்வகையிலும் உறுத்தாமல் அளிக்கப்பட்ட கொடை அது. அதைத்தான் கபீர்பாய் உணர்ந்துகொண்டு கடைசிவரியில் சொல்லிச் செல்கிறார்.

கதைமுழுக்க அம்மா, பாய் இருவருடைய குணச்சித்திரங்கள் நுட்பமாக வருவதெல்லாம் இந்தக்கதைக்கான களமாக மட்டுமே

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்,
ஊர்புகுதல் படித்துவிட்டு பொழுது போகாமல் விகிபெடியாவை அலசிகொண்டிருந்தேன். கதை நடக்கும் காலம் 1725-1730 என்று கொள்ளலாமா? புகையிலை பாண்டியிலிருந்து நாஞ்சிலுக்கு போயிருக்கும் என்று நினைக்கிறீர்களா? எனக்கென்னமோ வேனாட்டிலிருந்துதான் போயிருக்கும் என்று தோணுது. போர்த்துகீசியர்கள் மேற்கு கடற்கரைகளில் தானே முதலில் வியாபாரம் செய்தார்கள். அவர்கள் கொண்டு வந்த அமெரிக்க புகையிலை, தக்காளி, மிளகாய், உருளை கிழங்கு எல்லாம் மேற்கு கடற்கரையிலிருந்து பரவியிருக்காதா? (மெட்ராசை சென்னைனும் பாம்பய்யை மும்பைனும் மாத்தின கும்பல் மேற்கூறிய காய்கறிகளை சாப்பிட கூடாதுன்னு தடுக்கணும் :-)

நவீன்

அன்புள்ள நவீன்

ஊர்புகுதல் சொல்லும் தகவல் உண்மையான வரலாற்றுத்தகவலே. அதை நாகம்அய்யா வேலுப்பிள்ளை போன்றவர்களின் திருவிதாங்கூர் ஸ்டேட் மானுவலிலும் காணலாம். தூத்துக்குடி வழியாக வந்த யாழ்ப்பாணப்புகையில் அன்று கேரளத்தின் பெரிய நுகர்பொருள். யாழ்ப்பாணம் என்றாலே புகையிலை என்றுதான் பொருள்.சற்றே தரமற்ற புகையிலை வடக்கே மங்களூரில் இருந்து வரும். அதற்கு வடக்கன் என்று பெயர். வடக்கா யாப்பா என்ற கேள்வி எழுபதுகளில்கூட வெற்றிலைபாக்குக் கடைகளில் ஒலித்தது

புகையிலை திருட்டுத்தனமாக உள்ளே வருவதை தடுக்க திவான் ஐயப்பன் மார்த்தாண்டன் காலத்தில் ஒரு கோட்டை கட்டப்பட்டது. கன்யாகுமரி கடலில் தொடங்கி பூதப்பாண்டி மலை ஏறி மறு பக்கம் செல்லும் இந்தக்கோட்டை தமிழகத்தையும் திருவிதாங்கூரையும் பிரித்தது. பின்னர் பிரிட்டிஷார் அந்தக்கோட்டையை இடித்து தேவாலயங்களும் கட்டிடங்களும் கட்டினார்கள். இப்போதும்கூட கன்யாகுமரி கொட்டாரம் போல பல இடங்களில் இக்கோட்டையின் இடிபாடுகள் உள்ளன

ஜெ

முந்தைய கட்டுரைஇசை, ராமசந்திர ஷர்மா
அடுத்த கட்டுரைசிலுவையின் பெயரால்: ஒரு கடிதம்