தெய்வ மிருகம்

index

 

நான் நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது ஒருநாள் காலையில் என்னால் கையைத்தூக்க முடியவில்லை. கை கனமாக இருந்தது. சற்று தூக்கியபோது அக்குளருகே ஒரு நரம்பு அழுத்தப்பட்டது போல தெறித்தது. அத்துடன் எனக்கு நல்ல காய்ச்சலும் இருந்தது. உதடுகள் காய்ந்து நாவால் தொட்டபோது சொரசொரவென்றிருந்தன.

முழுக்கோட்டில் டாக்டர்கள் யாருமில்லை. அரசு மருத்துவமனைக்குப்போக அருமனைக்குச் செல்லவேண்டும். அருமனை வரை நடப்பதற்குச் சோம்பல்பட்டுக்கொண்டு உள்ளூரிலேயே கம்பவுண்டரிடம் காட்டி மாத்திரை வாங்குவது வழக்கம். பொதுவாக அன்றெல்லாம் உபதேசியார்கள் என்று சொல்லப்படும் கிறித்தவப் பிரச்சாரகர்கள் மருந்துகள் வழங்குவார்கள். என்னைப்பார்த்த ஏசுவடியான் உபதேசியார் எனக்கு காய்ச்சல் மாத்திரை தந்தார். சாயங்காலம் காய்ச்சல் குறைந்தது. மறுநாள் காலை மீண்டும் காய்ச்சல். மீண்டும் மாத்திரை.

மூன்றாம்நாள் காய்ச்சல் குறையாதபோது என்னை அருமனை ஆஸ்பத்திரிக்கு சைக்கிளின் பின்பக்கத்தில் அமரச்செய்து கொண்டு போனார்கள். டாக்டர் என்னை பொதுவாகப் பரிசோதனைசெய்துவிட்டு மீண்டும் காய்ச்சல் மாத்திரை கொடுத்தார். மூன்றுநாள் காய்ச்சல் மாத்திரைகளையே விழுங்கினேன். ஐந்தாம் நாள் காய்ச்சல் அதுவே நின்றது. எழுந்து அமர்ந்தேன். ஆனால் கையை அசைக்க முடியவில்லை. மெல்லிய வீக்கம் இருந்தது. மூட்டுகள் கனமாக இருந்தன. அசைப்பதைப்பற்றி நினைத்தாலே வலி கொக்கிபோட்டு இழுத்தது

அப்பா அதுவரை ஆஸ்பத்திரிக்கு வரவில்லை. அன்று டாக்ஸிக்கார் வரவழைத்து என்னை தூக்கிப்போட்டுக்கொண்டு அருமனை ஆஸ்பத்திரிக்குச் சென்றார். வராந்தாவில் என்னை அமர வைத்து விட்டு உள்ளே போய் டாக்டரைப்பார்த்தார். டாக்டர் வெளியே வந்து என் கையை அசைக்க நான் கதறி அழுதேன். டாக்டர் அப்பாவிடம் ”நாகர்கோவிலுக்குக் கொண்டு போகணும். இல்லேண்ணா திருவனந்தபுரம்…என்னதுண்ணு தெரியல்லை…போலியோ மாதிரி இருக்கு…”என்றார்.

”ரெட்சை உண்டுமா? வலதுகையாக்குமே”என்றார் அப்பா. டாக்டர் ”சொல்லுகதுக்கு என்ன? குணமாகி கை கிட்டுறதுக்கு வாய்ப்பு கொறைவு…நான் கண்டதில்லை”என்றார். அப்பா என்னை திரும்பி வீட்டுக்கே கூட்டிவந்தார். நான் இரவெல்லாம் முனகி முனகி அழுதுகொண்டிருந்தேன். அம்மா கொஞ்சநேரம் என்னருகே அமர்ந்து விசிறியால் வீசிக்கொண்டிருந்தாள். என் தலைமயிரை வருடிக்கொண்டு அழுதுகொண்டிருந்தவள் அப்படியே என் அருகில் படுத்து தூங்கிவிட்டாள். அவள் மூச்சு என் மீது பட்டுக்கொண்டிருந்தது.

வெளியே ஈஸி சேரில் அப்பா தூங்காமல் படுத்திருந்தார். செருமல்கள் விசிறி ஒலிகள். வெற்றிலை போடுவதும் எழுந்து சென்று துப்புவதும் மீண்டும் வெற்றிலைபோடுவதும். வாசலில் தென்னைமரம் சலசலத்துக்கொண்டே இருந்தது. ஏதோ பறவையின் குழறல் ஒலி. பெரிய பெண்டுலக்கடிகாரத்தின் டிக் டிக் டிக். அப்பா சிலசமயம் நீளமாக பெருமூச்சு விட்டார். சிலசமயம் ஈஸிசேர் கிரீச்சிட திரும்பி அமர்ந்தார். நானும் அப்பாவும் மட்டும் இரவெல்லாம் விழித்திருந்தோம். என் கை தனியாக கிடந்து வேறு ஒரு நபர் போல என்னிடம் வலியால் பேசிக்கொண்டிருந்தது.

பின்னிரவில் அப்பா சட்டென்று எழுந்து கொல்லைப்பக்கம் போய் கிணற்றில் தண்ணீர் இறைத்து பல்தேய்த்து விட்டு வந்தார். வேட்டியை மாற்றி சட்டையைப் போட்டுக்கொண்டு உள்ளே வந்து என்னருகே படுத்திருந்த அம்மாவை குடையால் தட்டி எழுப்பினார். அம்மா பாய்ந்து எழுந்து ”எந்தா ? எந்தா?” என்றாள். அப்பா உடனே வெளியே போகப்போவதாகச் சொன்னார். எங்கே என்று கேட்கும் வழக்கம் எங்கள் குடும்பத்தில் கிடையாது.

”தேயிலை இட்டு தரட்டா?”என்று அம்மா மென்மையாகக் கேட்க ”வேண்டா” என்று சொல்லிவிட்டு என்னைத்தொட்டு காய்ச்சல் இருக்கிறதா என்று பார்க்கச் சொன்னார். அம்மா தொட்டுவிட்டு ”இல்ல”என்றாள். அப்பா சற்று குனிந்து என் கையைப் பார்த்தார். நான் ஏனென்று தெரியாமல் மனம் உருகி அழ ஆரம்பித்தேன். ”ச்சே… நாயுடெமோனே…நாட்டில உள்ள ரோகமெல்லாம் இவனுக்குத்தான் வரும், எரப்பாளி ..”என்று அப்பா குடையை தூக்கி என்னை அடிக்க ஓங்கினார். ”அய்யோ ”என்றாள் அம்மா.

அப்பா நேராக இறங்கி வெளியே செல்ல அம்மா கதவை மூடிவிட்டு வந்து என்னருகே அமர்ந்து என் தலையைக் கோதிவிட்டுக்கொண்டு ஆறுதல் சொன்னாள். பரவாயில்லை, அப்பாதானே? அப்பா நல்லவர்.நமக்கு அப்பா இல்லாமல் யார் இருக்கிறார்கள்? கண்ணீர் வழிய நான் பெருமூச்சு விட்டேன்.

மறுநாள் மதியம்தான் அப்பா வந்தார். அண்டுகோட்டு அன்பையன் வைத்தியரைக் கூட்டிக்கொண்டு வந்திருந்தார். அன்பையன் வைத்தியருக்கு அப்பா முன்பு சில பத்திரங்கள் பார்த்துக்கொடுத்திருக்கிறார். முக்கால்கை காமராஜ் சட்டையும் வேட்டியும் வளைந்த குடையுமாக அன்பையன் வைத்தியர் வந்து வெளித்திண்ணையில் அமர்ந்துகொண்டார். ”டீ”என்று அப்பா அழைத்தார். ”வைத்தியர்க்கு மோர் எடுக்குக” வைத்தியர் அம்மாவிடம் ”ஓர்மை உண்டா? அன்¨பையனாக்கும். அண்ணனை நமக்கு நல்லா தெரியும்…வீட்டுக்கு வந்திட்டுண்டு”என்றார். அம்மா ”ஓர்மை உண்டு”என்றாள்.

வைத்தியர் சட்டையைக் கழற்றி ஆணியில் தொங்கவிட்டார். குடையையும் மாட்டினார். நல்ல தொப்பை. மாநிற உடலெங்கும் சுருள்முடி. முன்வழுக்கை. மீசை கிடையாது. வெற்றிலைக்கறைபடிந்த பற்கள். பெரிய தங்கச்சங்கிலி அணிந்திருந்தார். அதன் நுனியில் சிலுவை ஆடியது. ”எங்க கொச்சன்?” என்றார். அம்மா ”அகத்து கிடப்புண்டு”என்றாள்

அன்பையன் வைத்தியர் உள்ளே வந்து என்னை கூர்ந்து நோக்கினார். அவரைக் கண்டதுமே நான் அஞ்சி கதறி அழ ஆரம்பித்தேன். ”அய்யய்ய…என இது? வாளும் ஈட்டியும் கொண்டு சண்டைக்குப் போற படைநாயராக்குமா இப்டி கெடந்து ஊளை போடுகது?ச்சே! ஆரெங்கிலும் கேட்டா நாணக்கேடுல்லா” என்றபடி என்னருகே அமர்ந்து என் கையை தொட்டார். நான் வலியில் கண்ணை மூடிக்கொண்டு கதறினேன். அதைப்பொருட்படுத்தாமல் கையை தூக்கினார், தாழ்த்தினார். பல்வேறு இடங்களில் அமுக்கிப்பார்த்தார். பெருமூச்சுடன் எழுந்து வெளியே சென்றார்.

”எந்தா காரியம்?”என்றார் அப்பா. ”பாலவாதம். முத்தின வரவாக்கும். ஒரு வாரம் தாண்டிப்பொச்சு கண்டியளா? சதையெல்லாம் வீங்கி கட்டியாட்டு ஆகிப்போச்சு. நீரு உறைச்சுப்போச்சு” என்றார் அன்பையன் வைத்தியர் . அப்பா ”ரெட்சை உண்டா?”என்றார். ”நான் ஒண்ணும் உறப்பு தரமாட்டேன். ஏன்னா நம்ம சிகிழ்ச்சை மருந்து சிகிழ்ச்சை இல்ல. பத்திய சிகிழ்ச்சையாக்கும். பாத்த்துக்கிடுத வகையில இருக்கு காரியம். பின்ன ரொம்ப மூத்துப்போச்சு கேட்டியளா? சதையும் முட்டும் இறுகியிருக்கு. அதுகளை ஒண்ணு மயப்படுத்தி எடுக்குதது பெரிய காரியமாக்கும்…”

ஒரு வாரம்தானே ஆகியிருக்கிறது என்று அம்மா சொன்னாள். ” ஒரு வாரம் போதும் அம்மிணி. காய்ச்சலுண்ணு போனா உடனே டாக்டர் வலியுண்டான்னுல்லா கேட்டிருக்கணும்….செரி, நாம சொல்லுகதுக்கு ஒண்ணுமில்லை. இப்பம் உங்களுக்கெல்லாம் இருபது வருசம் பச்சிலை அரைச்சு படிச்ச எங்கமேல நம்பிக்கை இல்ல. ஒருமாசம் எங்கியாம் போயி நாலு மருந்தும் கொண்டு வாறவன் நல்ல டாக்டர்..நடக்கட்டு நடக்கட்டு..இங்கிலீஷ் மருந்தாக்குமே”

”ஒரு தப்பு நடந்துபோச்சு…நான் இப்டி நெனைக்கல்லை”என்று அப்பா நயமாகச் சொன்னார். ”செரி பாப்போம். ஈஸ்வரானுக்ரஹம் உண்டுண்ணாக்க எல்லாம் நல்லபடியா நடக்கும். நான் இந்தக் கொச்சனுக்க ஜாதகம் பாத்திருக்கேன். கீர்த்திமானாக்கும். அதனால ஒரு கொறையும் இருக்காது.”என்றார் அன்பையன் வைத்தியர்

வைத்தியம் தொடங்கியது. கண்டிப்பான ஆயுர்வேத முறை. மதியமும் இரவும் இரு வேளை கஷாயங்கள். காலையில் ஒருவேளை ஒரு லேகியம். மிகக்கடுமையான பத்தியம். காபி டீ சீனி எதுவுமே கூடாது. பால் மோர் கூடாது. எந்தப்பழங்களும் உண்ணக்கூடாது. சம்பா அரிசிச்சோறு சாப்பிடலாம். ஆனால் தேங்காயெண்ணையில் வரட்டிய முருங்கியிலை மட்டுமே தொட்டுக்கொள்ள வேண்டும். வேறு எந்தக்காய்கறியும் சேர்த்துக்கொள்ளக் கூடாது. ஆனால் இவையெல்லாம் சாதாரணம் .மிகக் கடுமையான இரு பத்தியங்கள் மேலும் உண்டு. ஒன்று, உப்பே சேர்த்துக்கொள்ளக்கூடாது. இரண்டு தண்ணீர் குடிக்கக் கூடாது. கஷாயத்தில் உள்ள தண்ணீர் மட்டும்தான் நீராக உள்ளே செல்ல வேண்டும்.

காற்றோட்டம் உள்ள கிணற்றடி வராந்தாவில் சிமிண்ட் தரையில் பாய்போட்டு படுத்திருப்பேன். காரணம் வியர்த்தால் தாகம் எடுக்கும். இரண்டு வேளை உப்பில்லாத முருங்கைக்காய் வரட்டலை சோற்றில் போட்டு பிசைந்து உண்பேன். குமட்டி வரும். ‘சாப்பிடுடா சாப்பிடுடா, என் ராஜா இல்ல , என் தெய்வமில்ல?’என்று அம்மா கெஞ்சி மன்றாடி ஊட்டுவாள். அப்பா வெளியே இருந்தாரென்றால் ”வந்தேன்ன அடிச்சு கொடலை எடுத்திருவேன்.படவா நாயே.. உள்ள ரோகமெல்லாம் வருத்தி வச்சிட்டு உயிரையா எடுக்கிறே?” என்று கத்துவார். அம்மா குரல் தாழ்த்தி ‘சாப்பிடுடா ”என்று மன்றாடுவாள்.

கடுமையாக தாகமெடுக்கும். அப்பா தொடக்கத்திலேயே சுட்டுவிரல் ஆட்டி சொல்லிவிட்டார் ”டேய் தெரியாமப்போயி ஒரு வாய் தண்ணி குடிச்சேன்னு தெரிஞ்சா அண்ணைக்கே உலக்கையல மண்டைய பேத்திருவேன்…ஞாபகம் வச்சுக்கோ” அண்னாவையும் தங்கையையும் கூப்பிட்டு தெளிவாகச் சொல்லிவிட்டார். தண்ணீர் குடிப்பதை அவர்கள் பார்த்தால் உடனே சொல்லிவிடவேண்டும். சொல்லவில்லை என்று தெரிந்தால் அவ்வளவுதான். இது போக தண்ணீர் சேந்தித்தர வரும் எஸிலி, மற்ற வேலைகளுக்கு வரும் செல்லம்மா, பக்கத்துவீட்டு விஜயன் எல்லாருக்கும் கடுமையான கட்டளைகள். ஊரே நான் தண்ணீர் குடிக்காமலிருக்க வேவு பார்த்தது.

பத்தியத்தை தாங்கிக்கொள்ளலாம். தினமும் உள்ள தடவு சிகிழ்ச்சை மாபெரும் சித்திரவதை. கையில் தினம் ஐந்துவேளை எண்ணைபோட்டு நீவிவிடவேண்டும். காலையில் அன்பையன் வைத்தியர் அவரே சைக்கிளில் வந்துவிடுவார். சைக்கிள் மணி கேட்டதுமே நான் கதறி அழ ஆரம்பிப்பேன். ”நாயம்மாரு அலமுறையிட்டு அழுதா நாடான்மாருக்கு கேக்கதுக்கு நல்ல சொகமுண்டு கேட்டியளா?’ என்று சிரித்தபடி வந்து நிதானமாக சட்டையைக் கழற்றிப்போட்டு குடையை அதன்மீது தொங்கவிட்டுவிட்டு என்னருகே கையில் எண்ணைப்புட்டியுடன் வருவார். நான் அலறி அலறி சோர்ந்துபோய் தேம்புவேன்.

அன்பையன் வைத்தியர் முதலில் என் கைவிரல்களைச் சொடுக்கு எடுப்பார். ஒவ்வொரு விரலுக்கும் நான் வீரிட்டு கால்களால் தரையை அறைவேன். அலறல் கேட்டு தாங்க முடியாமல் அம்மா ஓடிப்போய் பக்கத்து வீட்டுக்கொல்லையில் ஒளிந்துகொள்வாள். மெல்ல கையை நீவி நீவி தோள்பட்டை வரை வரும்போது வலி தாங்கமுடியாமல் நான் அரை மயக்கநிலையை அடைந்திருப்பேன். பின்பு அன்பையன் வைத்தியர் ”கொச்சன் சங்கீதம் படிக்கணும் என்ன? நல்ல நாதமாக்குமே….சீர்காழி தோற்றுபோவான்”என்றபடி சட்டையைப்போடச் செல்வார்.

அப்பா ஈசிசேரிலேயே அசையாமல் அமர்ந்திருப்பார். ”எண்ணையும் தடவலும் விடப்பிடாது…அதாக்கும் உண்மையான மருந்து”என்று அன்பையன் வைத்தியர் சொல்வார். வைத்தியருக்கு தினம் ஒரு இளநீர் வெட்டி வைக்கப்பட்டிருக்கும். அதைக் குடித்தபின் சட்டையைப்போட்டுக்கொண்டு சைக்கிளில் ஏறிச் செல்வார்.

அப்பா அதன் பின் தன் காலைவேலைகளை எல்லாம் முடித்துவிட்டு ஆபீஸ் கிளம்பும் முன்பு என்னிடம் வருவார். எண்ணைபோட்டு நீவ அன்பையன் வைத்தியர் அப்பாவுக்குச் சொல்லிக்கொடுத்திருந்தார். என்னை நெருங்கும்போதே நான் அலற ”வாயப்பொத்துடா நாயுடெமோனே… ”என்று சீறியபின் என் கையைப்பிடித்து மீண்டும் நீவி எண்ணைபோட்டுவிடுவார். அதன்பின் குளித்து ஆபீஸ் கிளம்புவார். அப்போது நான் தூங்கிவிட்டிருப்பேன்.

மதியம் அப்பா வழக்கமாக சாப்பாடு எடுத்துச்செல்வார். எனக்கு வாதம் வந்தபின் அவர் மதியம் ஐந்து கிலோமீட்டர் தூரம் நடந்து வீட்டுக்கு வருவார். வந்ததும் சட்டையைக் கழற்றி துண்டு கட்டிக்கொண்டு சாப்பிட்டுவிட்டு வந்து எண்ணை போட்டு நீவுவார். வெயிலில் குடைபிடித்து திரும்பி நடந்துசெல்வார்.சாயங்காலம் வந்ததுமே ஒருமுறை எண்ணையும் நீவலும் உண்டு. பின்னர் இரவு பத்து மணிக்கு.

மருந்தின் மயக்கமும் தாகமுமாக நான் பகலெல்லாம் அரைமயக்கத்தில் இருப்பேன். இரவில் நல்ல தூக்கம் இருக்காது. எப்போது விழித்துக்கொண்டாலும் அப்பாவின் செருமலும், வெற்றிலை துப்பும் ஒலியும், விசிறி ஒலியும்தான் கேட்டுக்கொண்டிருக்கும். ஒன்றுக்குப் போகவேண்டுமென்றால் ”அம்மா ”என்று மெல்ல முனகுவேன். ஆனால் அம்மாவை எழுப்புவது அத்தனை எளிதல்ல. தூங்கினால் அவளுக்கு உலகமே இல்லை. அப்பாதான் எழுந்து வருவார் ”எந்தெடா?” என்பார். நான் ”புறத்து போகணும்”என்பேன்

அப்பா என்னை அம்மாவைப்போல ஆதுரமாகத் தூக்க மாட்டார். இடதுகையைப்பிடித்து எழச்செய்தபின் பின்னால் வருவார். நான் வெளியே சென்று சிறுநீர் கழிக்கும்போது சற்று தள்ளி வேறு திசையை நோக்கிக்கொண்டு நிற்பார். திருப்பிக் கூட்டிக்கொண்டு வந்து படுக்க வைத்தபின் திரும்பிப்பார்க்காமல் சென்றுவிடுவார்.

பதிநான்கு நாட்கள் கழிந்தபின்னர் சூடான தண்ணீர் கொஞ்சம் குடிக்கலாமென்றார் அன்பையன் வைத்தியர். அந்த சொல்லே எனக்கு பெரும் கொண்டாட்டமாக இருந்தது. ஆனந்தம் தாளாமல் கண்ணீர் விட்டு அழுதேன். ”பண்டு காலத்திலே நீரில்லா பத்தியம் விட்டதும் கொஞ்சநாளுக்கு முத்திரம் குடிக்கணும்ணாக்கும் சொல்லுவாங்க… இப்பம் சொன்னா கேப்பானுகளா? கொச்சன் குடிக்குதா மூத்திரம்?”என்றார் அன்பையன் வைத்தியர் ” நல்ல எளநீ கணக்காட்டு இருக்கும். நாலுநாளு குடிச்சா பின்ன சாயா காப்பி ஒண்ணும் பிடிக்காது..”

பதினைந்தாம் நாள் முதல் பயிற்சிகள் ஆரம்பமாயின. அதுவரை நான் அனுபவித்த வலியெல்லாம் வலியே இல்லை என்பது போன்ற அனுபவம் அது. காலையில் அப்பா என்னை வீட்டுக்கூடத்துக்கு முன் போடப்பட்டிருந்த அழிக்கு அருகே நிறுத்துவார். நானே என் வலது கையை தூக்கி அழியின் கீழே உள்ள கட்டத்தைப் பிடிக்க வேண்டும். கையை தூக்க நினைத்தால் அந்த நினைப்பே கைக்குச் சென்று சேராது. ”கை எடுத்து வைடா”என்று அப்பா கூவுவார். கையில் முற்றிய பிரம்பு. ”எடுடா கை” என்னால் தூக்க முடியாது. படீரென பிரம்பு என் பிருஷ்டச் சதையில் விழும். அலறியபடி ஆவேசமாக கையைத்தூக்கி அழியைபிடித்துக்கொள்வேன்.

மீண்டும் தூக்கி அடுத்த கட்டத்தில் வைக்கவேண்டும். இரண்டு மூன்றுமுறை பிரம்பு சுழன்றபிறகுதான் என்னால் கையை தூக்க முடியும். கைக்குள் நரம்புகள் முறுக்கேறி ஒடியப்போவது போலிருக்கும். மீண்டும் அடி. மீண்டும் கைதூக்கி அதற்கும் மேலே உள்ள கட்டத்தில் வைப்பேன். ஒருமுறை முழுக்க கையைத்தூக்க ஆறு கட்டங்களில் கையை வைக்க வேண்டும். மீண்டும் படிப்படியாக கையை இறக்க வேண்டும்

முதல்நாள் அடிவிழுந்தபோது நான் அலறிய ஒலி கேட்டு அம்மா ஓடிவந்து பிரம்பைப்பிடித்தாள். அப்பா வெறிகொண்டு அம்மாவை பிரம்பால் விளாசினார். அம்மா கீழே விழுந்து முகத்தை மூடிக்கொண்டாள். அடித்து கை சலித்து மூச்சுவாங்க வேட்டியை சரிசெய்தபின் அப்பா என்னிடம் ”தூக்கெடா கை..கொன்னு போடுவேன்..நாயே.. ”என்று கூவினார். அம்மா அடிதாங்காமல் அரைமயக்கமாகி தரையில் கிடந்தாள்.

நான்காம்நாள் பக்கத்துவீட்டு நாராயணன் தாத்தா என் அழுகை கேட்டு வந்து கோபமும் ஆங்காரமுமாக, ”எடா பாகுலேயா…எந்தாடா இது?நீ அவனைக் கொல்லாதே”என்று சொன்னார்.அப்பா பைத்தியம்போல பிரம்பை ஓங்கியபடி எண்பது வயது கிழவரை நோக்கி பாய்ந்தார் ”கொல்லுவேன்…எல்லாரையும் கொல்லுவேன்..ஒற்ற ஒருத்தன் இந்த வழி வரப்பிடாது..போடா..போடா நாயே…” என்று கத்தினார். ”உனக்கு கிறுக்குட…முழுக்கிறுக்குடா..”என்று சொல்லியபடி பீதியுடன் தாத்தா பின்வாங்கினார்.

ஒருமாதம் தாண்டியதும் வலிமிகவும் குறைந்தது. மெல்ல மெல்ல நானே கையை தூக்கி வைக்க ஆரம்பித்தேன். முதலில் பத்துமுறை தூக்கி வைக்க வேண்டியிருந்தது. கடைசியில் ஆயிரம் முறையாக அது அதிகரித்தது. அப்பா அருகிலேயே பிரம்புடன் அமர்ந்து எண்ணுவார். நடுவே அவர் யாரிடமாவது ஏதாவது பேசி எண்ணிக்கையை விட்டுவிட்டால் ஆரம்பத்திலிருந்து மீண்டும் செய்யவேண்டும். நான் மனம் உடைந்து விசும்பி அழுது கொண்டே கையை தூக்குவேன்.

அறுபது நாளில் கை அனேகமாக சரியாகிவிட்டது. தொண்ணூறு நாளில் முற்றிலும் சரியாகியது. ஒருவருடம் வரை வலதுகைக்கு சற்று வலிமைக்குறைவை உணர்ந்தேன். அதன்பின் இன்று வரை எந்தப்பிரச்சினையும் இல்லை. அது பெரிய அற்புதம் என்று பேசிக்கொண்டார்கள். என் வலது கை சரசரவென மெலிந்து குச்சி போல ஆகிவிடும் என்று எல்லாரும் எதிர்பார்த்தார்கள். அன்றெல்லாம் ஊரில் பாலவாதம் வந்து கையோ காலோ ஒல்லியாக இருப்பவர்கள் வீட்டுக்கு ஒருவர் இருப்பார்கள்.

என்னைப்பார்க்க பெரிய டாக்டர்கள் எல்லாம் வீட்டுக்கு வந்தார்கள். அப்பாவைப்பார்க்க யார் வந்தாலும் நான் வந்து ஜன்னல் அருகே சட்டை இல்லாமல் தயாராக நின்று கொள்வேன். அப்பா ‘டா’என்றழைத்ததுமே ஒடிப்போய் என் வலதுகையை அவர்களுக்குக் காட்டுவேன். த்ர்ர்ந்த வித்தைக்காரன் போல கைகளைச் சுழற்றியும் தூக்கியும் தாழ்த்தியும் காட்டுவேன். அவர்கள் பாராட்டுவது என்னைத்தான் என்று எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்

அப்பாவும் அன்பையன் வைத்தியர்மாக என்னை திருவனந்தபுரம் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கொண்டு சென்று பெரிய டாக்டர்களிடம் காட்டினார்கள். அவர்கள் என்னிடம் நிறைய கேள்விகள் கேட்டார்கள். நான் பத்மநாபசாமி கோயில்,மேத்தமணி, சிங்கம் புலி ஒட்டகம் எல்லாம் முதல்முறையாகப் பார்த்தது அப்போதுதான். ஒரு ஓட்டலில் நுழைந்து இலைபோட்டு சாப்பிட்டோம்.

நான் பள்ளி விட்டு வரும்போது கோயில் முன் நின்றிருந்த அன்பையன் வைத்தியர் என்னை அழைத்து ஒரு தாத்தாவுக்கு என் கையைக் காட்டினார். என் கையை பலவாறாக அமுக்கிப்பார்த்துவிட்டு, ”இனி சதை எறங்காது அன்பையா… சதை வலுக்க ஆரம்பிச்சாச்சுல்லா…” என்ற பின் என்னிடம் ”பிள்ள போகணும்..பிள்ள இனிமே பயல்வானாக்குமே”என்றார் கிழவர்.அன்பையன் வைத்தியர் ”கொச்சனுக்க ஜாதகம் நான் பாத்தேன். சரஸ்வதி கடாட்சம் உண்டு…”என்றார் .

”நான் இண்ணைக்குவரை இப்டி ஒரு பூர்ண சொஸ்தம் பாத்தது இல்ல. நல்ல சிகிழ்ச்சைன்னா சதைகள் வளரும். ஆனா இதுமாதிரி எல்லா சதையும் வளராது…”என்று என் கையை மீண்டும் பிடித்துப்பார்த்து கிழவர் ஆச்சரியப்பட்டார். ”இப்பம் பலரும் பிள்ளைகளைக் கொண்டு வாறானுக அம்மாச்சா… ஆனா இவனை கொணமாக்கினது பிள்ளைசாராக்குமே. மனுசன் ராப்பகலா இவனுக்க கூடயில்லா கெடந்தார். வேற நெனைப்பு இல்ல. ஊணொறக்கம் இல்ல….உம்மாணை ஓய், பய தப்பீருவான், ஆனா தகப்பனுக்கு கட்டை அடுக்கணுமிண்ணாக்கும் நான் நெனைச்சது…அந்த மாதிரி ஒரு ஆவேசம்…இப்டியும் உண்டுமா மனுஷனுக?”

அப்பாவுக்கு மட்டும் முழுநம்பிக்கை வரவில்லை. நான் நன்றாக வளர்ந்தபின்னரும்கூட என்னை நெருக்கத்தில் பார்த்தால் என் வலது கையைத்தான் அவரது கண்கள் நாடும். எனக்குக் காய்ச்சல் வந்தால் அவரிடம் போய் அம்மா ”எளையவனுக்கு பனி” [காய்ச்சல்] என்று சொன்னால் ”ம்” என்பார். திரும்பிப் பார்க்க மாட்டார். அண்ணாவே போய் மருந்து வாங்கி வருவான். அப்பா தன் சாய்வுநாற்காலியில் அமர்ந்து வெற்றிலை குதப்பி துப்பி வாய்கழுவி மீண்டும் வெற்றிலை போட்டுக்கொள்வார்.

ஆனால் நள்ளிரவில் அனைவரும் தூங்கியபின்னர் மெல்ல காலடி எடுத்து வைத்து இருட்டுக்குள் அப்பா வருவார். அவரது காலடி ஓசை ஒரு சருகு விழுவதை விட மெல்லிதாக இருக்கும். என்னை நெருங்கி என் நெற்றியில் தொட்டு காய்ச்சல் இருக்கிறதா என்று பார்ப்பார். பெருமூச்சு விடுவார். அவரது உடலின் வெப்பமும் மூச்சின் காற்றும் என்மீது படும்.ஆனால் கண்களைத் திறக்காமல் அசையாமல் படுத்திருப்பேன். அப்பா ஒவ்வொருமுறையும் என் வலதுகையை அமுக்கி அழுக்கிப் பார்ப்பார். விரல்களை இழுத்துப்பார்ப்பார். திருப்தி அடைந்து திரும்பிச் சென்றவர் மீண்டும் திரும்பி வந்து இன்னொரு தடவை அழுத்திப்பார்ப்பார்.

அன்பையன் வைத்தியர்ருக்கு அப்பா பணம் கொடுக்கவில்லை. அன்பையன் வைத்தியர் பெரும் பணக்காரர். ஊரில் பெரும்பகுதி அவரது நிலங்கள்தான். அவரது வறுமையான நோயாளிகளுக்கு மருந்து காய்ச்சும் செலவை அப்பா கொடுத்தால்போதும் என்று ஒப்பந்தம். அப்படி பலரிடம் அன்பையன் வைத்தியர் ஒப்பந்தம்போட்டிருந்தார். நான் பத்தாம் வகுப்பு தேறும் காலம் வரைக்கும்கூட அன்பையன் வைத்தியர் அனுப்பிய நோயாளிகள் வந்துகொண்டிருந்தார்கள். அப்படி வருபவர்களை அப்பா தன் சாய்நாற்காலியில் இருந்து கூப்பிய கரங்களுடன் எழுந்துபோய் வரவேற்று அமரச்செய்து, உணவு கொடுத்து, பணமும் கொடுத்தபின்பு, என்னை வரவழைத்து எனக்கு அவர்கள் ஆசீர்வாதம் செய்யச் சொல்லுவார்.

பின்பு ஒருமுறை அப்பாவைப்பற்றி கிண்டலாக ஏதோ பேசிக்கொண்டிருந்தேன். நான் இதுவரைச் கேட்டறிந்தவர்களிலேயே மிகப்பெரிய மீன்வெறியர் அவர்தான். கறிக்குழம்பு இருந்தாலும் கூட மீன் வேண்டும் அவருக்கு. என் தங்கை கல்யாணத்தின்போது சொந்த மகளின் திருமணச்சாப்பாட்டை அவர் உண்ண மறுத்துவிட்டார். ஒருவேளை மீனில்லாமல் உண்ணக்கூட அவரால் முடியாது. டிபன்பாக்ஸில் ஓட்டலில் இருந்து வரவழைத்த மீன்கறியுடன் ரகசியமாக உள் அறையில் இருந்து சாப்பிட்டார் அவர்.

அம்மா சொன்னாள் ”நீ சொல்லுவே…உனக்கு என்ன தெரியும்? நீ கைவாதம் வந்து முருங்கையிலையும் சோறும் தின்னு கிடந்த காலத்திலே அவர் ஒரு துண்டு மீனு வாயிலே வைச்சிருப்பாரா?” அன்று அன்பையன் வைத்தியர் வீட்டுக்குப் போன அப்பா அவர் கதவைத்திறந்ததும் அப்படியே முகம் தரையில் அறைபட்டு உதடு கிழியும்படியாக அவர் கால்களில் குப்புற விழுந்து பாதங்களைப் பற்றிக்கொண்டு ”என் மகனை ரெட்சிக்கணும் வைத்தியரே”என்று கதறி அழுதார். அவருடன் வைத்தியர் கிளம்பி வந்தார்.

நான் பத்திய உணவை சாப்பிட்ட முதல்நாள் அப்பா ராத்திரி சாப்பிட அமர்ந்தார். தட்டில் சோறும் சூரைமீன்கறியும் பொரித்த சாளையும் பரிமாறப்பட்டிருந்தது. ஒருகணம் தட்டை வெறித்துப் பார்த்தார். தலை நடுநடுங்கியது. அப்படியே தூக்கி தட்டோடு கொல்லைப்பக்கத்தில் விட்டெறிந்தார். ”கொண்டு போடி, எரப்பாளியுடே மோளே …அவளுடே ஒரு மீனும் கறியும்… ” என்று கத்தி எழுந்து அம்மாவை ஓங்கி ஒரு அறைவிட்டார். நேராகச்சென்று ஈஸிசேரில் படுத்துக்கொண்டார்.

அம்மா வாசலருகே நின்று அவரையே பார்த்துக்கொண்டு கண்ணீர்விட்டாள். மறுநாள் முதல் அம்மா அவருக்கும் சோறும் முருங்கையிலைப்பொரியலும்தான் கொடுத்தாள். சிலசமயம் தேங்காய்ச்சட்டினி. சிலசமாயம் சுட்ட பப்படம்மும் கஞ்சியும். அதைக்கூட அவர் சாப்பிடுவதில்லை. அளைவார் கொஞ்சம் சாப்பிடுவார். திடீரென்று தட்டோடு தூக்கி வீசிவிட்டு எழுந்து போய்விடுவார்.

” நான் நாலஞ்சுநாள்தான் பாத்தேன்.பின்ன நான் நல்லா சாப்பிட்டேன்…உன் அப்பாவுக்குத்தான் உள்ளே தீ எரிஞ்சுகிட்டே இருந்தது” என்றாள் அம்மா. ”ஊணும் இல்ல உறக்கமும் இல்ல….நல்லகாலம் நீ தப்பினே…இல்லேன்னா ரோட்டிலபோற பத்துபேரை குத்திக்கொன்னுட்டு தானும் செத்திருப்பாரு… கிறுக்கு முத்தின காட்டானையாக்குமே?”

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Apr 26, 2010

முந்தைய கட்டுரைகோவை சந்திப்பு கடிதங்கள் 3
அடுத்த கட்டுரைகொடிக்கால் அப்துல்லா – என் உரை