‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 31

பகுதி நான்கு : கூற்றெனும் கேள் – 8

முதன்மைக்கூடத்திற்கு வெளியே முற்றத்தில் படைநிரையின் கொம்புகளும் முழவுகளும் ஒலிக்கத்தொடங்கின. துச்சலன் “நன்கு ஒளிவந்துவிட்டது. இனிமேலும் நாம் பிந்தலாகாது மூத்தவரே” என்று வெளியே சென்றான். “ஆம், கிளம்புவோம்” என்று நூற்றுக்கணக்கான தொண்டைகள் கூச்சலிட்டன. “பெரீந்தையே, என் ஆடையை காணவில்லை” என்று ஒரு குரல் கேட்டது. “பெரீந்தையே, இவன் என் வாளை எடுத்துக்கொண்டான்.” “பெரீந்தையே, யானை எப்போது வரும்?” கர்ணன் “நாம் இப்போது கோட்டைமுகப்புக்கு செல்கிறோம்” என்றான்.

அத்தனை பேரும் ஒரே சமயம் வெளியேற முயன்றதனால் அந்தப் பெரிய வாயிலே உடல்களால் இறுக மூடப்பட்டது. அவர்களின்மேல் தோள்களைப்பிடித்து ஏறி அப்பால் சென்றவர்கள் களிக்கூச்சலிட்டனர். மேலும் மேலும் இறுகி அசைவிழந்த வாயிலில் செறிந்த உடல்கள் ஒரு கணத்தில் விடுபட இளவரசர்கள் வெளியே இருந்த முற்றத்தை நோக்கி கூட்டமாக உமிழப்பட்டனர். கீழே விழுந்து உருண்டு எழுந்து அவர்கள் அங்கு நின்றிருந்த தேர்களை நோக்கி ஓடினார்கள்.

“ஒரு தேரில் பத்து பேருக்கு மேல் ஏற்ற வேண்டாம்” என்று துச்சலன் கை நீட்டி கூவினான். “எஞ்சியவர்களை எப்படி இறக்கிவிடுவது?” என்று அங்கிருந்த வீரன் ஒருவன் கேட்டான். “பத்து பேர் ஏறியவுடனே தேர்களை முன்னால் செலுத்துங்கள். அது ஒன்றே வழி” என்றான் துச்சலன். தேர்த்தட்டுகளில் இளையோர் ஏறிக்கொண்டிருக்கையிலேயே குதிரைகளை அடித்துக் கிளப்பிக்கொண்டு சென்றார்கள். ஒவ்வொரு தேருக்குப் பின்னாலும் இளைய கௌரவர்கள் காய்களைப்போல உதிர்ந்தார்கள். புரண்டெழுந்து அடுத்த தேரின் தட்டுகளிலும் தூண்களிலும் பற்றிக்கொண்டு தொற்றி உள்ளே ஏறினார்கள்.

அகன்ற தட்டுகள் கொண்ட அறுபது தேர்களிலாக அவர்கள் கிளம்பிச் சென்றபோது பணியாள் சொன்னதுபோல பன்னிரு கைக்குழந்தைகள் முற்றத்தில் தவழ்ந்து கொண்டிருந்தன. ஒன்று சிறுநீர் கழித்து அதை இரு கைகளாலும் தப் தப் என்று அடித்து வாயில் வைத்து சுவைத்துப் பார்த்தது. ஒன்று அமர்ந்து தன் ஆண்குறியை பிடித்து இழுத்துக் கொண்டிருந்தது. பெரிய இரு முன்பற்களுடன் ஒருவன் கர்ணனைப் பார்த்து சிரித்தான். அவனை நோக்கி கைகளை ஊன்றி ஒரு பெண்குழந்தை வந்தது. இன்னொன்று இங்கிருந்து அதை நோக்கி முனகியபடியே சென்று அமர்ந்து கைநீட்டி “ஆ” என்று கூச்சலிட்டது.

துச்சலன் இரண்டு கைக்குழந்தைகளை எடுத்து தன் அருகே நின்ற பணியாளிடம் கொடுத்து “இவற்றை திரும்பச் சென்று கொடுத்துவிடு” என்றான். “ஆம், இளவரசே. வழக்கமாக அதைத்தான் செய்வோம்” என்றான் ஏவலன். “உள்ளே நாலைந்து குழந்தைகள் கிடக்கின்றன” என்று உள்ளிருந்து வந்த ஏவலன் சொன்னான். இன்னொரு முதிய ஏவலன் “நன்கு தேடிப்பாருங்கள்! ஏதாவது இண்டு இடுக்குகளில்கூட நுழைந்து சென்றுவிடும்” என்றான். ஒரு குழந்தை எம்பி எம்பி விழுந்து சுபாகுவை நோக்கி “ஆ ஆ ஆ” என அதட்டியது. “இவன் மகோதரனின் மைந்தன்… ஐயமே இல்லை. என்னை இப்படி அவன்தான் அதட்டுவான்.”

கர்ணன் “இவை அழுவதே இல்லை” என்றான். துச்சலன் “ஆம். இவற்றுக்கு தந்தையரோ அன்னையரோ ஒரு பொருட்டே அல்ல. ஒவ்வொரு குழந்தையும் தன்னைவிட மூத்த தமையனை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது” என்றான். “மூத்தவரே” என துச்சகன் சொல்ல கர்ணன் தேரில் ஏறிக்கொண்டு “என்னுடைய தேரிலும் சில இளைய கௌரவர்களை ஏற்றிக் கொண்டிருக்கலாம்” என்றான். “தனியாகச் செல்வது சோர்வளிக்கிறது.”

சிவதர் “தங்கள் ஆடைகள் அனைத்தும் கலைந்துள்ளன” என்றார். “தாழ்வில்லை” என்றபடி மேலாடையை சீர்செய்துகொண்டான் கர்ணன். கூந்தல் கலைந்திருந்தது. அதை கைகளால் நீவி பட்டுநூலால் கட்டினான். “தங்கள் முத்தாரம் அறுந்து மேலே மணிகளாக உருண்டு கிடக்கிறது” என்றார் சிவதர். “அதை சேர்த்து வைக்கச் சொல்லும்” என்றபின் கர்ணன் தேரோட்டிக்கு கிளம்பிச் செல்லும்படி செய்கையால் ஆணையிட்டான். தேர் குலுங்கி குளம்படி ஒலிக்க சகடங்கள் அதிர கிளம்பியது.

அவன் தேருக்குப் பின்னால் துச்சலனும் துச்சகனும் துர்முகனும் ஒரு தேரில் வந்தனர். ஜலகந்தன், சமன், சகன், விந்தன், அனுவிந்தன், சுபாகு, விகர்ணன், சலன், சத்வன், சுலோசனன், சித்ரன், உபசித்ரன், சுஜாதன், பீமபலன், வாலகி, உக்ராயுதன், சுவர்மன், துர்விமோசன், சுநாபன், நந்தன், உபநந்தன் என பிற கௌரவர்களும் தேர்களில் வந்தனர். தொலைவில் இளைய கௌரவர்கள் அஸ்தினபுரியின் தெரு வழியாக பீரிட்டு கலைந்து செல்லும் ஓசை கேட்டுக்கொண்டிருந்தது. தேர்ப்பாகன் திரும்பி “செல்லும் வழியெல்லாம் கூச்சலிட்டுக் கொண்டேதான் செல்வார்கள். ஓடும் தேரிலிருந்தே தொற்றி வீடுகளுக்குள் சென்று விடுவார்கள்” என்றான்.

கர்ணன் “ஆம், ஊர்ணரே, இந்நகரம் அவர்களை விரும்பும்” என்றான். “ஆம், இங்குள்ள ஒவ்வொரு குழந்தையும் இளைய கௌரவராக மாறிக் கொண்டிருக்கிறது என்கிறார்கள்” என பாகன் சிரித்தான். “தங்கள் மைந்தன் தேர்பழகிவிட்டானா?” என்றான் கர்ணன். “அவன் புரவிமருத்துவம் பயில்கிறான்” என்றான் தேர்ப்பாகன். “அவன் பெயர் சதானீகன் அல்லவா?” என்றான் கர்ணன். “ஆம், நினைவு வைத்திருக்கிறீர்கள்.” கர்ணன் நகைத்து “எனக்கு இந்த இளையோரைத்தான் நினைவில் கொள்ளவே முடியவில்லை. நான் செல்லும்போது எழுபது பேர்தான் இருந்தார்கள்…” பாகன் “இங்கு எவருக்குமே அவர்களை தனித்தனியாக நினைவில்லை. அவர்கள் ஒற்றைத்திரள்” என்றான்.

கர்ணனின் தேர் மையப்பெருஞ்சாலைக்கு செல்லும்போது அங்கிருந்த மரத்தின் கிளைகளில் இரு கௌரவர்களை கண்டான். அவர்கள் அவன் தேரின் வளைகூம்புக் கூரை மேல் குதித்து தூணில் தொற்றி இறங்கி “நாங்கள் உங்களுக்காக காத்திருந்தோம்” என்றனர். “ஏன்?” என்றான் கர்ணன். “நாங்கள் உங்களுடன் தான் இருப்போம். ஏனெனில் நான் வில் பயிலப்போகிறேன்” என்று ஒருவன் சொன்னான். “எதற்காக?” என்றான் கர்ணன். “காட்டுக்குச் சென்று மான்களை வேட்டையாடி தின்பதற்காக” என்றான் இன்னொருவன்.

சிரித்து “உன் பெயரென்ன?” என்றான் கர்ணன். “என் பெயர் துந்துபி. இவன் பெயர் துர்ஜயன்” என்றான். “இந்தப் பெயர்களையெல்லாம் யார் போடுகிறார்கள்?” என்றான் கர்ணன். “தந்தையர் பெயரிடுவதில்லை. அமைச்சர்களே ஒரு நூலில் உள்ள நீண்ட பட்டியலை வைத்து பெயரிடுகிறார்கள். இட்ட பெயரை குறித்து வைக்காவிடில் திரும்ப போடவேண்டி நேரும் என்ற அச்சம் அவர்களுக்கு இருக்கிறது” என்றான் பாகன்.

இருபுறங்களிலும் உப்பரிகைகளில் எழுந்த மக்கள் இளைய கௌரவர்களை நோக்கி கைவீசி கூச்சலிட்டனர். பழங்களையும் அப்பங்களையும் அவர்களை நோக்கி வீச அவர்கள் தேர்த்தட்டுகளில் எழுந்து அவற்றை தாவிப்பற்றி உண்டனர். சிலவற்றை திரும்ப மக்களை நோக்கி வீசினர். முன்னால் சென்ற கௌரவர்களின் தேர்களில் இரண்டு கடைவீதி அருகே நின்றிருந்தன. அவற்றில் இருந்து அவர்கள் இறங்கி கடைவீதிக்குள் புகுந்து அங்கே சுற்றிவருவதன் ஒலிகள் கேட்டன.

துர்ஜயன் “அங்காடியில் கட்டப்பட்டிருக்கும் தோல் கூரைகள் வழியாகத் தாவி வருவது இன்பமானது” என்றான். “ஆம், அது அலைகளில் நீச்சலடிப்பது போலவே இருக்கும்” என்றான் துந்துபி. அக்கணமே அவர்கள் பாய்ந்து புழுதியில் இறங்கி கைவீசி கூச்சலிட்டபடி அங்காடி நோக்கி ஓடினார்கள். அங்கே நின்றிருந்த வணிகர்கள் அவர்களை வரவேற்று கூச்சலிட்டனர்.

அஸ்தினபுரி இளவரசன் நகர்நுழையும் விழவுக்காக பட்டுப்பாவட்டாக்களாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. முன்னரே சென்ற இளைய கௌரவர்கள் தேரில் செல்லும் விரைவிலேயே பட்டுப்பாவட்டாக்களை பற்றி இழுத்து அவற்றை பறக்கவிட்டுக் கொண்டே சென்றிருந்தார்கள். காற்றில் சுழன்றெழுந்த அவை வீடுகளிலும் சுவர்களிலும் படிந்து நின்று வழிந்து தவழ்ந்து மண்ணிறங்கின. புழுதியில் புரண்டு தேர்களின் சகடங்களில் சுற்றி கசங்கின. தரையில் அலையடித்த செந்நிற திரைச் சீலைகளைக் கண்ட புரவிகள் அஞ்சி கனைத்தபடி அவற்றை பாய்ந்து கடக்க தேர்ச்சகடங்கள் குலுங்கி அதிர்ந்து முன் சென்றன.

“இந்நகரத்தை அணி செய்ய எவராலும் இயலாது. அணி அனைத்தும் சில நாழிகைக்குள் குப்பைகளாக மாறிவிடும்” என்றான் தேர்ப்பாகன். கர்ணன் “இந்நகருக்கு மைந்தரே அணிகலன்கள்” என்றான். “இம்மக்கள் இதுபோல் என்றும் உவகை கொண்டாடியதில்லை என்று எண்ணுகிறேன்” என்றான் கர்ணன். “ஆம் அரசே, அது உண்மை. நகைப்பொலி அன்றி வேறு ஒலியே கேட்காததாக இந்நகரம் மாறிவிட்டது என்கிறார்கள். இப்போது அஸ்தினபுரி ஒரு கிஷ்கிந்தை என்று சூதன் ஒருவன் பாடினான். இளைய கௌரவர்களை வானரங்களாக சித்தரித்து அவன் எழுதிய கபிகுலவிலாசம் என்னும் குறுங்காவியம் இங்குள்ள இளையோரிடம் புகழ் பெற்றது.”

இளைய கௌரவர்கள் சென்ற தேர்கள் ஆங்காங்கே சாலை ஓரமாக நின்றிருந்தன. கர்ணன் தன் தேரை இழுத்து நிறுத்தச் சொல்லி தேரில் சவுக்குடன் அமர்ந்திருந்த ஒரு பாகனிடம் “அவர்கள் எங்கே?” என்றான். “தேர் வந்து கொண்டிருக்கும்போதே அனைவரும் வெளியேறிவிட்டனர். ஆகவே நிறுத்தி காத்திருக்கிறேன், அவர்கள் வரக்கூடும்” என்றான் பாகன். “இங்குள்ள மற்ற குழந்தைகளும் அவர்களுடன் இணைந்து கொள்கிறார்கள். ஒரு சிறுவர் படையே கோட்டைமுகப்புக்கு செல்லக்கூடும்” என்றான் அருகே நின்றிருந்த காவல்வீரன். கையசைத்தபின் பாகனிடம் “செல்க!” என்றான் கர்ணன்.

அஸ்தினபுரியின் பெருங்கோட்டை முகப்பின்மீது இருந்த காவல்மாடங்களிலும் புரிபடிக்கட்டுகளிலும் உப்பரிகைகளிலும் மூத்த கௌரவர்கள் ஏறி நின்று கூச்சலிட்டுக் கொண்டிருப்பதை தொலைவிலேயே காண முடிந்தது. காவல் மாடங்களில் நின்ற வீரர்களின் மேலே தொற்றி ஏறி அவர்கள் கைவீசினர். கீழே நின்றிருந்த தேர்களில் பெரும்பாலானவை கூரை ஆடிச்சரிந்தும் முகப்பு உடைந்தும் தென்பட்டன. இரு தேர்கள் குடைசரிந்து கீழே விழுந்து கிடந்தன. பெருமுற்றமெங்கும் ஆடைகளும் மலர்மாலைகளும் திரைச்சீலைகளும் அப்பங்களும் பழங்களும் கிடக்க நால்வர் அவற்றை பொறுக்கிக் கொண்டிருந்தனர்.

கர்ணனின் தேர் நின்றதும் கோட்டைக்காவலன் முன்னால் வந்து வணங்கி “அங்கநாட்டரசருக்கு நகர்முகப்புக்கு நல்வரவு” என்றான். கர்ணன் “நன்று சூழ்க!” என்றபடி சூழ நோக்கினான். “எங்கள் மேல் சினம் கொள்ளாதீர்கள் அரசே. அனைத்தையும் சித்தமாக்கி விட்டுத்தான் இப்புலரியை அமைத்தோம். இதோ விழவொழிந்த களமென ஆகிவிட்டது. என் பிழையன்று. இங்கு ஒழுங்கு என்பது எவ்வகையிலும் இல்லை” என்றான். “அவ்வண்ணமே திகழட்டும். இவ்வொழுங்கின்மை இங்கிருக்கும் வரை அஸ்தினபுரி வெல்லற்கரியது” என்றான் கர்ணன்.

கோட்டைமுற்றத்தில் வெண்ணிறப்பந்தல் காற்றில் குமிழியிட்டு அமைந்தபடி காத்திருந்தது. அமைச்சர் பிரமோதர் மூச்சிரைக்க உடல்வியர்க்க ஓடிவந்து வணங்கி “அமைச்சர் கனகரும் பேரமைச்சர் விதுரரும் வந்துகொண்டிருக்கிறார்கள் அரசே. வெளியே நம் அணிப்படைகளும் இசைச்சூதரும் மங்கலக்கணிகையரும் நிரைவகுத்துள்ளனர்” என்றார். “சிந்துநாட்டவர் எங்கே உள்ளனர்?” என்றான் கர்ணன். “அவர்கள் நேற்றிரவு கங்கைக்கரைக்கு வந்துவிட்டனர். உண்மையில் அவர்கள் நாளை காலையில்தான் இங்கு வருவதாக திட்டம். ஆனால் இளவரசி உடனே கிளம்பவேண்டும் என்று சொன்னதனால் படைகள் ஓய்வெடுக்காமல் கருக்கலிலேயே புறப்பட்டுவிட்டன. பாதிவழி வந்துவிட்டார்கள்.”

கர்ணன் “ஆம், அது இயல்பே” என்றான். “நேற்று பேரரசரைப் பார்த்தபோது அவரும் பரிதவித்துக்கொண்டிருந்தார். இளவரசி அஸ்தினபுரி விட்டு சென்று மூன்றாண்டுகள் ஆகின்றன.” துச்சலன் “ஆனால் அன்னை பெருந்துயர் கொள்வதாக தெரியவில்லை” என்றான். துர்முகன் “மகளைக் காணாமல் தந்தை கொள்ளும் துயரம் தாயிடம் இருப்பதில்லை என்று என் மனைவி சொன்னாள். ஏன் என்று கேட்டேன். அது தெய்வங்களின் ஆடல் என்றாள்” என்றான். கர்ணன் “சகுனித்தேவரை சந்தித்தபோது அவரும் துச்சளையைக் காணும்பொருட்டு தவித்துக்கொண்டிருப்பதை கண்டேன். வியப்பாக இருந்தது” என்றான். துச்சலன் “அவருக்கு அவள் மிக அணுக்கமானவள். இளமையில் அவரது அரண்மனையில்தான் எப்போதும் விளையாடிக்கொண்டிருப்பாள்” என்றான்.

காற்றில் வெம்மை கலக்கத் தொடங்கியது. கோட்டைமதில்மேல் கதிரொளி விழுந்து அதன் மடிப்புகளின் நிழல்கள் நீண்டன. அஸ்தினபுரியின் அனைத்துச் சுவர்ப்பரப்புகளும் ஒளிகொண்டன. அவர்களுக்குப் பின்பக்கம் கதிர் எழத்தொடங்கியதும் செம்மண் தரையில் மெல்ல நிழல்கள் தெளிந்து வந்தன. கோட்டைக்கு அப்பால் விரிந்திருந்த குறுங்காட்டில் பல்லாயிரம் பறவைகள் அமலை எழுப்பியபடி இலைப்புயல் என சிறகுகளை அடித்துச் சுழன்று பறந்தெழுந்து நகர் மேல் பரவின. அவற்றின் நிழல்கள் கூரைகளிலும் செம்மண் தரைகளிலும் காவல்மாடங்களிலும் விழுந்து இழுபட்டுச் சென்றன. நகர் முழுக்க நிறைந்திருந்த ஆலமரங்களிலிருந்து எழுந்த பறவைகள் அவற்றுடன் இணைந்து கொண்டன.

பறவைக்குரல்களுடன் இணைந்தவை என தொலைதூரத்தில் ஆயர்குடிகளில் இருந்து பசுக்கள் குரலெழுப்பின. யானைக்கொட்டடிகளில் களிறுகள் பிளிறின. புலரி தொட்டு நகரை மீட்டுவது போலிருந்தது. கதிரை வரவேற்பதற்கென்று அஸ்தினபுரியின் காவல்மாடங்களில் இருந்து ஏழு பெருமுரசங்களும் விம்மின. பல்வேறு ஆலயங்களில் புலரிபூசனைக்கான மங்கலமணிகளும் முழவுகளும் முழங்கத்தொடங்கின. படைவீரர்கள் திரும்பி கதிரவனை வணங்கினர். கர்ணன் சூரியனை சிலகணங்கள் இமைக்காது நோக்கியபின் திரும்பி தன்நிழல் நீண்டு சென்றிருப்பதை நோக்கி தன்னுள் மூழ்கி ஊழ்கம் கொண்டு நின்றான்.

துச்சலன் கோட்டைமேல் எழுந்த ஓசைகளைக் கண்டு கையசைத்து வினவி விடைகொண்டபின் கர்ணனிடம் “அவர்கள் அணுகிக் கொண்டிருப்பதாக பறவைச்செய்தி வந்துள்ளது மூத்தவரே” என்றான். “அணி ஊர்வலமாக சைத்ரகம் என்னும் முனையை அணுகிக் கொண்டிருக்கிறார்கள்.” கர்ணன் தலையசைத்தான். “தாங்கள் அமைதி கொண்டுவிட்டீர்கள்” என்றான் துச்சலன். “இல்லை” என்றான் கர்ணன். “இல்லை, எங்களுக்குத் தெரிகிறது மூத்தவரே. தாங்கள் எதைப் பற்றியாவது கவலை கொள்கிறீர்களா?” என்றான் அவன். “இல்லை” என்றான் கர்ணன். “எங்களுக்குத் தெரியும் மூத்தவரே, தங்கள் உள்ளம் உவகையுடன் இல்லை” என்றான் துர்முகன்.

சுபாகு “ஜயத்ரதரை நீங்கள் கலிங்கத்தில் நாணிழக்க வைத்ததை இங்கு அனைவரும் அறிவர். அந்த வஞ்சம் அவருள் இருக்குமென்று நீங்கள் ஐயுறுகிறீர்கள்” என்றான். கர்ணன் வெறுமனே புன்னகைத்தான். உரத்த குரலில் துச்சலன் “அந்த வஞ்சம் அவருக்குள் இருக்குமென்றால் அதை நெஞ்சுக்குள் இருந்து வெளியே எடுக்காமல் இருப்பதே அவருக்கு நல்லது. விழிகளின் ஓரத்தில் எங்கேனும் அந்த வஞ்சம் ஒருதுளி தெரியுமென்றால் அக்கணமே அவர் தலையை அறைந்து உடைப்பேன்” என்றான். “மூத்தவரே, இந்தநாடு, இந்நகர் தங்களுக்குரியது. இந்நகரின் வாயில்வரை வந்து தாங்கள் வரவேற்பது அவனையல்ல, எங்கள் தங்கை பெற்ற மைந்தனை. அவ்வாழ்த்தைப் பெற்றமைக்காக சிந்துநாடும் ஜயத்ரதனும் ஏழு தலைமுறைக்காலம் இந்நாட்டை வாழ்த்த வேண்டும்.”

சமன் “அவர் தங்களை எப்படி வணங்கப்போகிறார் என்பதை நாங்கள் பார்த்துக் கொண்டுதான் இருப்போம்” என்றான். துச்சலன் “அவருடன் வருபவள் எனது தங்கை. இப்புவியில் அவளுக்கு தலைவர் என்பவர் இருவரே. தாங்களும் துவாரகை ஆளும் இளையயாதவரும். அவளைப் போன்ற அரசி ஒருத்தியை அடைந்த அரசன் தான் செய்வதென்ன, எண்ணுவதென்ன என்பதை நன்கு அறிந்திருப்பான்” என்றான். கோட்டைக்கு அப்பால் பேரோசை எழுந்தது. “வந்துவிட்டார்கள் கிஷ்கிந்தை குலத்தவர்” என்றான் துச்சலன். “இங்கு அப்போதே வந்திருக்கிறார்கள். இவ்வனைத்தையும் சூறையாடிவிட்டு அப்பால் சென்றுவிட்டிருக்கிறார்கள்” என்றான்.

கோட்டைக்கு அப்பால் இருந்த குறுங்காட்டில் இருந்து அவ்வோசை கேட்டது. உப்பரிகையிலிருந்து படிகளில் தொற்றி இறங்கி அவர்களை நோக்கி வந்த இளைய கௌரவர்களில் ஒருவன் “நான் பார்த்துவிட்டேன்” என்றான். “நான் பார்த்துவிட்டேன்… பார்த்துவிட்டேன்” என்று அவனுக்குப் பின்னால் மேலும் சிலர் ஓடிவந்தனர். இறுதியாக ஓடிவந்த ஒருவன் வந்த விரைவிலேயே புழுதியில் விழுந்து உருண்டு எழுந்து ஓடி வந்து “நானும் பார்த்தேன் பெரிய தந்தையே” என்றான். முன்னால் வந்த சகஸ்ரன் கர்ணனின் கைகளைப் பிடித்து தொங்கி மேலேறியபடி “நான் பார்த்தேன். சிந்து நாட்டின் படைகள் வருகின்றன. சிந்து நாட்டின் கரடிக் கொடி பறப்பதை பார்த்தேன்” என்றான். “வரட்டும். அவருக்காகத் தானே காத்திருக்கிறோம்” என்றான் கர்ணன்.

கோட்டைக்கு மேலிருந்தும் அப்பாலிருந்தும் வந்து இளைய கௌரவர்கள் முற்றத்தை சூழ்ந்து கொண்டனர். ஒவ்வொருவரும் “நாங்கள் பார்த்தோம் நாங்கள் பார்த்தோம்” என்று கூவினார்கள். “பாதிபேர்தான் இருக்கிறீர்கள். மீதிப்பேர் எங்கே?” என்றான் துச்சலன். “அவர்கள் சிந்து நாட்டின் படைகளை நோக்கி ஓடியிருக்கிறார்கள்” என்றான் ஒருவன். சிரித்தபடி “இது ஒரு படை என்று நினைத்து சிந்து நாட்டுப் படைகள் படைக்கலம் எடுக்காமல் இருக்கவேண்டும்” என்றான் கர்ணன். “படைக்கலம் எடுக்கமாட்டார்கள். குரங்குகள் என்று எண்ணி கவண் எடுத்தால் வியப்பில்லை” என்றான் துச்சலன்.

சற்று நேரத்தில் முற்றமெங்கும் இளைய கௌரவர்களின் கூச்சல்கள் நிறைந்தன. ஒருவரை ஒருவர் பிடித்து தள்ளியும் ஒருவர்மேல் ஒருவர் பாய்ந்து ஏறியும் குதித்தும் மண்ணை அள்ளி வீசியும் உருண்டு விழுந்து எழுந்தும் கட்டிப்புரண்டும் அவர்கள் கூச்சலிட்டனர். அங்கிருந்த அத்தனை கைவிடுபடைகளிலும் ஏறி அதன் அம்பு முனைகளைப்பற்றி தொங்கி ஆடினர். “அவற்றின் பொறிகள் விடுபட்டுவிடப்போகின்றன” என்றான் கர்ணன்.

“ஒரு முறை நிகழ்ந்தபின் அத்தனை பொறிகளையும் அவிழ்த்துவிட்டோம். அஸ்தினபுரியை எதிரிகள் தாக்கினால் எங்கள் முதல் கைவிடுபடைகள் இந்த எண்ணூறு பேரும்தான்” என்றான் சுபாகு. “எண்ணூறு பேர் என்று யார் சொன்னது? ஒவ்வொரு நாளும் எண்ணிக்கை மாறிக்கொண்டிருக்கிறது.” “எண்ணூறு என்பது ஒரு மங்கல எண் மட்டுமே” என்றான் சுபாகு. “இதில் பாதிப்பேர் கௌரவர்கள் அல்ல, நகரிலிருந்து வந்துசேர்ந்த குழந்தைகள்… அவர்களிடையே வேறுபாடே கண்டுபிடிக்கமுடியாது” என்றான் துர்முகன்.

நெடுந்தொலைவில் முரசொலி கேட்டது. கோட்டை மேலிருந்த இரு முரசுகள் அதிரத்தொடங்க ஜயத்ரதனின் கரடிக்கொடி முகப்பில் ஓங்கி நின்றிருந்த கொடிமரம் ஒன்றில் மெல்ல ஏறி பொதியவிழ்ந்து சிறகு விரித்து காற்றில் படபடக்கத் தொடங்கியது. நடுவே அஸ்தினபுரியின் அமுதகலசக்கொடியும் வலப்பக்கம் திருதராஷ்டிரரின் யானைக்கொடியும் அதன் அருகே துரியோதனனின் அரவக்கொடியும் இடப்பக்கம் சகுனியின் ஈச்சஇலைக்கொடியும் கர்ணனின் யானைச்சங்கிலிக்கொடியும் பறந்துகொண்டிருந்தன. கொடி ஏறியதும் நகரின் பல இடங்களில் முரசுகள் முழங்கத்தொடங்கின. அரண்மனை முரசு முழங்க அங்கும் சிந்துநாட்டுக்கொடி ஏறுவது தெரிந்தது.

கர்ணனின் முழங்காலுக்குக் கீழே பெரிய கொப்பரை மண்டையுடன் நின்ற சுமந்திரன் அவன் ஆடையைப்பற்றி இழுத்து “பெரீந்தையே, சிந்துநாட்டு அரசர் எங்களுக்கு என்ன கொண்டு வரப்போகிறார்?” என்றான். “ஒரு மைந்தனை” என்றான் கர்ணன். அவனுக்கு அப்பால் நின்ற இரண்டு வயதான சுஜலன் “அதை நாங்கள் உண்ணலாமா?” என்றான். கர்ணன் சிரித்தபடி “ஐயோ” என்றான். துச்சகன் “உண்மையிலேயே அச்சமாக இருக்கிறது. இவர்கள் பிடுங்கித்தின்றாலும் தின்றுவிடுவார்கள்” என்றான். “அவன் உங்கள் இளையோன். நீங்கள் தொட்டு வணங்க வேண்டியவன்” என்றான் கர்ணன்.

“எங்கள் வீட்டில் ஓர் இளையோன் இருக்கிறான்” என்றான் இன்னொரு கொப்பரை மண்டை. “ஆனால் அவன் எப்போதும் கால்களை ஆட்டிக்கொண்டே இருக்கிறான். நான் அவன் கால்கள் இரண்டையும் ஒரு துணியால் சுற்றி கட்டிவைத்தேன். அப்போது அவன் கைகளை ஆட்டத்தொடங்கினான். கைகளையும் நான் கட்டிவைத்தபோது என் அன்னை வந்து என்னை அடித்து தலை மயிரைப்பிடித்து வெளியே தள்ளினார்கள்” என்றான். “ஒவ்வொரு குழந்தையும் தன் மூத்தவரைக் கடந்து வளர்வதையே இங்கு வாழ்க்கையின் அறைகூவலாகக் கொண்டுள்ளது” என்றான் துச்சலன்.

“ஆனால் குழந்தைகள் தமையர்களைத்தான் விரும்புகின்றன. அங்கே பாருங்கள்!” இளைய கௌரவர்களில் ஒருவன் தோளில் அமர்ந்த எட்டுமாதக்குழந்தை ஒருவன் இரண்டு கைகளையும் ஒரே சமயம் வாய்க்குள் விட்டு கால்களை ஆட்டி எம்பிக் குதித்துக் கொண்டிருந்தான். “அவன் பெயர் சுமுகன் என நினைக்கிறேன். மேலே இருப்பவன் சுபூதன். எப்போதும் இளையவனை மூத்தவனின் தோள் மேல் பார்க்க முடியும்” என்றான் துச்சலன். “அவர்கள் ஒரு வயிற்றுப் பிள்ளைகளா?” என்றான் கர்ணன். “அந்த வயிற்றுக்கே அது தெரிந்திருக்காது. பிறகென்ன விடுங்கள்” என்ற துச்சலன் “அணுகிவிட்டார்கள் என்று எண்ணுகிறேன்” என்றான்.

கோட்டைக்கு அப்பால் இருந்த அமைச்சர் கனகர் புரவியில் வந்து கர்ணன் முன் இறங்கி தலைவணங்கினார். “கோட்டைக்கு முன் அணிநிரைகளும் மங்கலத்திரளும் சித்தமாக நிற்கின்றன. முன்னிலையமைய தாங்கள் வரலாம்” என்றார். கர்ணன் கூடி கொப்பளித்துச் சூழ்ந்திருந்த இளைய கௌரவர்களை நோக்கியபின் “இவர்கள் வந்தால் அங்கு மங்கலமென ஏதும் எஞ்சாது” என்றான். கனகர் சிரித்து “மழைநீர் செல்ல ஓடை அமைக்கும் அதே வழிமுறைதான் இங்கும். அவர்கள் கடந்துசெல்வதற்கான வழி நடுவே விடப்பட்டுள்ளது. மங்கலங்களைக் கண்டு சலித்திருப்பதனால் இப்போது அவர்களின் நோக்கு முழுக்க வந்து கொண்டிருக்கும் சிந்துநாட்டுப் படையிடம்தான் உள்ளது” என்றார்.

கர்ணன் சிரித்தபடி திரும்பி கைகாட்ட அவனுடைய தேர் வந்து அருகே நின்றது. அவன் அதில் ஏறியதும் பிற கௌரவர்களும் தேரில் ஏறினர். முற்றமெங்கும் பரவியிருந்த இளையகௌரவர்களை வீரர்கள் வேலால் தடுத்து விலக்கி உருவாக்கிய இடைவெளிப்பாதை வழியாக அவர்களின் தேர்கள் சென்று கோட்டை பெருவாயிலைக் கடந்து மறுபக்கம் எழுந்தன. கோட்டையின் நிழல் பெரிய திரைபோல சரிந்து தரையில் விழுந்து கிடந்தது. அப்பால் ஒளிவிழுந்த இடத்தில் கூழாங்கற்கள் சுடர்கொண்டு நிழல்மேல் அமர்ந்திருந்தன. சருகுகள் பொற்தகடுகளாக அசைந்தன. இலைகளில் எண்ணைப்பூச்சு போல காலை பளபளத்தது.

முகப்பில் விரிந்து நீண்ட சாலையின் இருபுறமும் வரவேற்புத்திரள் பெருகி நின்றிருந்தது. பொற்குமிழ்களும் மணிச்சுழிகளும் அமைந்த முகபடாமணிந்த பதினெட்டு களிறுகள் வால்சுழித்து உடலாட்டியும் செவிகள்வீசியும் ஒற்றைக்கால் தூக்கிவைத்தும் துதிக்கைநீட்டியும் சுருட்டியும் தரைப்புழுதி பறக்க மூச்சுவிட்டும் நிரைகொண்டு நின்றன.

அஸ்தினபுரியின் அமுதகலசக்கொடியும் துரியோதனனின் அரவக்கொடியும் கர்ணனின் யானைச்சங்கிலிக் கொடியும் ஏந்திய பதினெட்டு வெண்புரவிகள் அணிகொண்டு பொற்பூணிட்ட தந்தச்செப்புகள் போல் நின்றன. அவற்றின் ஈச்சைப்பூங்கொத்து வால்கள் சுழன்றன. லாடவளைவு தெரிய ஒற்றைமுன்னங்கால் தூக்கி நின்று ஒரு புரவி நீள்மூச்செறிந்தது. பிடரிமயிர் உலைய ஒன்று தலைகுனிந்து தரைமுகர்ந்தது. கடிவாளத்திலமைந்த புன்மணிகள் சிலம்பின. கழுத்திலணிந்த செறிசரப்பொளிகள் நலுங்கின. சேணத்தின் கண்ணிகள் குணுகின.

நிரையின் வலப்பக்கம் நூற்றெட்டு வைதிகர்கள் கங்கைநீரும் அரிமலர் நிறைத்த தாலங்களுமாக நின்றனர். இடப்பக்கம் அணிப்பரத்தையர் மங்கலத்தாலங்களுடன் நிற்க சூதர் தங்கள் இசைக்கலங்களுடன் காத்திருந்தனர். இளவெயில் அவர்களின் கண்களை சுருங்கவைத்திருந்தது. கோட்டைமேல் சிறகடித்த கொடிகளின் நிழல்கள் தரையில் அசைந்தன. தொலைவில் ஒரு வேலின் முனை திரும்பி கர்ணனின் கண்களை கூசவைத்து கடந்துசென்றது.

காலையை சுடரென ஏற்றிக்கொண்ட வாள்களையும் வேல்களையும் ஏந்திய படையணியினர் செந்நிறத்தலைப்பாகையும் பொற்கச்சையும் குண்டலங்களும் கங்கணங்களும் அணிந்து சீர்நிரை கொண்டு நின்றனர். கர்ணனைக் கண்டதும் வீரர்கள் உரத்த குரலில் வாழ்த்துரை எழுப்பினர். “வெய்யோன் மகன் வருக! அங்க நாட்டரசர் வருக! எழுகதிர் வேந்தர் வருக!” என்று ஒலி எழ கர்ணன் இருபக்கமும் திரும்பி கைகூப்பியபடி தேரிலிருந்து இறங்கி அவர்களின் முகப்பில் சென்று நின்றான். அவனுக்கு இருபுறமும் துச்சலனும் துச்சகனும் நிற்க பின்னால் சுபாகுவும் ஜலகந்தனும் அவர்களுக்குப் பின்னால் பிற கௌரவரும் நின்றனர்.

தன் கைகள் நடுங்கிக்கொண்டிருப்பதை கர்ணன் உணர்ந்தான். அதை மறைக்க ஆடைநுனியை பற்றிக்கொண்டான். சுருட்டியும் கசக்கியும் கைகள் மேலும் நிலையின்மையைக் காட்டுவதை உணர்ந்து அதை விட்டான். அத்தனை உளவல்லமை அற்றவனா என தன்னை நோக்கி கேட்டுக்கொண்டான். இத்தகைய எளிய தருணத்தைக்கூட எதிர்கொள்ள இயலாதவன் என்றால் நான் என்ன அரசன்? வில்லம்புடன் களம் காணமுடியும். ஆனால் அரசர்கள் இத்தகைய தருணங்களை எதிர்கொள்வதில்லை.

ஆனால் ஜயத்ரதனும் சிறுமைபடுத்தப்பட்டிருக்கிறான். அர்ஜுனனால் துருபதன் அவமதிக்கப்பட்டார். துரோணர் துருபதனால் அவமதிக்கப்பட்டார். ஒவ்வொருவரும் பிறரை இழிவுசெய்கிறார்கள். அதன்மூலமே வென்று செல்கிறார்கள். அவனும் ஜயத்ரதனை அதற்காகவே குன்றச்செய்தான். அது கொலைக்கு மேல் என்று அறிந்தே அதை இயற்றினான். எங்கோ எவரோ அவன்மேல் காட்டிய வஞ்சங்களுக்கெல்லாம் அங்கே ஜயத்ரதன் இரையானான். அதுதான் உண்மை. பிற அனைத்துமே அச்செயலை நிறுவும்பொருட்டு உள்ளம் நிகழ்த்தும் நாடகங்கள்.

ஜயத்ரதனின் கண்களை நினைத்துக்கொண்டான். நம்பமுடியாத திகைப்பு. பின் நிலைகுலைவு. பின் சிறுமை. அழியாத பெருந்துயரம்.  அவன் அன்றாடம் அருந்தும் நஞ்சு. அதை பிற எவருக்கும் அளிக்கலாகாதென்று அவன் எண்ணியிருந்தான். அதை அவன் பிறிதொருவனுக்கு அளித்துவிட்டான். அவன் உள்ளம் நெகிழ்ந்தது. இந்தத் தருணம் ஜயத்ரதனுக்குரியது. அவன் தன்னை சிறுமைசெய்வதே முறை. அதன் வழியாக அவன் இழைத்தவை நிகர் செய்யப்படுகின்றன. அதன்பின் தெய்வங்களுக்கு முன் அவனுக்கு கடன்கள் இல்லை.

அத்தருணத்தில் ஜயத்ரதன் கோருவது அதையே என்றால் அவன் அதை அளிப்பான். உளம் கனிந்து. இளையோனே, இது உன்னை ஆறச்செய்யும் என்றால் அவ்வண்ணமே என்றபடி. அவன் கால்கள் தன் தலைமேல் பதியட்டும். அவன் உமிணீர் தன் முகத்தில் படியட்டும். அவன் வசைமொழி தன் மீது படரட்டும். அதன் வழியாகவே இத்தருணத்தில் உள்ளம் கொள்ளும் இந்தக் குன்றுதலை கடந்து செல்லமுடியும்.

கர்ணன் மேலும் மேலும் எளிதானபடியே சென்றான். தொலைவில் எரியம்பு ஒன்று எழுந்தமைந்தது. அவன் புன்னகை செய்தான்.

வெண்முரசு ஓவியங்கள் ஷண்முகவேல்

வெண்முரசு நாவல்கள் வாங்க

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

வெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்

முந்தைய கட்டுரைபீப்
அடுத்த கட்டுரை“நம் நாயகம்”