வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 30

பகுதி நான்கு : கூற்றெனும் கேள் – 7

முதற்பறவைக் குரல் எழுவதற்கு முன்னரே எழுந்து நீராடி, ஆலய வழிபாட்டுக்குரிய வெண்பருத்தி ஆடை சுற்றி ஒற்றை முத்துமாலையும் கங்கணங்களும் அணிந்து, கதிர்க்குறி நெற்றியிலிட்டு கர்ணன் சித்தமாகிக் கொண்டிருந்தபோது கீழே குழந்தைகளின் ஒலி கேட்டது. முதலில் அவன் அதை கலைந்த பறவைத்திரளின் ஒலி என்று எண்ணினான். மறுகணமே குழந்தைகளின் குரல் என்று தெரிந்ததும் முகம் மலர அறையைத் திறந்து இடைநாழிக்கு வந்தான்.

மறுஎல்லையில் படிகளில் இளைய கௌரவர்கள் காடுநிறைத்து முட்டிக்கொந்தளித்து வழிந்திறங்கி வரும் பன்றிக்குட்டிகள் போல கரியதிரள்பெருக்கு என கூச்சலிட்டபடி அவனை நோக்கி வந்தனர். அவர்களில் மூத்தவனுக்கே ஐந்து வயதுதான். ஆனால் ஒவ்வொருவரும் அவர்கள் வயதுக்குமேல் வளர்ந்திருந்தனர். முதலில் வந்த கூர்மன் முழு விரைவில் தலையை குனித்தபடி துள்ளி ஓடி வந்து அவன் தொடையை வலுவாக முட்டி பின்னால் தள்ளினான்.

அதை எதிர்பார்த்திருந்த கர்ணன் ஒரு அடி பின்னால் வைத்து சிரித்தபடி அவனை பற்றித் தூக்கி பின்னால் இட்டான். தொடர்ந்து வந்த இளையவர்களும் தங்கள் தலைகளால் அவன் மேல் முட்டினார்கள். கூச்சலிட்டவர்களாக படிக்கட்டை நிறைத்து ஏறி சிதறிப்பரந்து அவனை சூழ்ந்துகொண்டே இருந்தனர்.

“பெரியதந்தையே பெரியதந்தையே” என அவனைச் சுற்றி கூச்சலிட்டபடி துள்ளிக் குதித்தனர். “பெரீந்தையே! பெரீந்தையே!” என நா திருந்தாத சின்னஞ்சிறு மழலைகள் கைதூக்கி எம்பிக் குதித்தன. ஒவ்வொன்றும் கரிய குட்டித்தோள்களுடன் அடுப்பிலிருந்து இறக்கிய கலங்கள் போல கொழுத்திருந்தன. பளிங்கில் ஆணியால் கிறீச்சிடுவதுபோன்ற குரல்கள்.

சிலர் ஒருவர் தோளில் ஒருவர் கால் வைத்து எழுந்து அவன் தோள்களை பற்றிக்கொண்டு தலையில் ஏற முயன்றனர். சற்று நேரத்தில் அவன் உடலெங்கும் உணவை மொய்த்து முழுக்க மூடும் எலிகளைப்போல் அவர்கள் தொற்றி நிரம்பியிருந்தனர். கைகளிலும் கால்களிலும் தோளிலும் தலையிலும் இளமைந்தர்களுடன் உரக்க நகைத்தபடி கர்ணன் சுழன்றான்.

கீழிருந்து மேலும் மேலும் இளையகௌரவர்கள் வந்து கொண்டிருந்தனர். தொடர்ந்து வந்த ஏவலன் ஒருவன் “ஒன்றாகத் திரண்டுவிட்டால் இவர்களை எதுவுமே கட்டுப்படுத்த முடியாது அரசே” என்றான். “ஏன் நீ கட்டுப்படுத்துகிறாய்? அவர்களுக்கு தங்களுக்குரிய நெறிகள் உள்ளன” என்றான் கர்ணன்.

30

அவன் முழங்காலுக்கு கீழே நின்றிருந்த சிறுமண்டையுடன் சுதமன் இருகைகளையும் விரித்து “பெரீந்தையே பெரீந்தையே பெரீந்தையே” என மூச்சில்லாது தொடர்ச்சியாக அழைத்தான். கர்ணன் குனிந்தபோது தலையிலிருந்து தூமன் முன்னால் சரிந்து கீழே நின்றிருந்தவர்கள் மேல் விழுந்தான். அவன் புரண்டு எழுந்து “என் கதாயுதம்! அதை நான் கீழே வைத்திருக்கிறேன்” என்று கீழே ஓடப்போக கீழிருந்து வந்தவர்களால் தடுக்கப்பட்டு மீண்டும் திரும்பி வந்தான்.

சுதமன் “பெரீந்தையே பெரீந்தையே பெரீந்தையே” என அழைத்தபடி கர்ணனின் முழங்காலை உலுக்கினான். “என்ன வேண்டும் மைந்தா?” என்றான் கர்ணன். “நான் நான் நான்” என்று அவன் சொல்லி கைதூக்கி “நான் ஒரு யானையை கொன்றேன்” என்றான். “ஆமாம், கொன்றான்… இவன் கொன்றான்” என்று அவனுக்குப் பின்னால் நின்ற மேலும் சிறியவனாகிய சுகீர்த்தி சொன்னான். “அவன் உன் சான்றுசொல்லியா?” என்றான் கர்ணன். சுதமன் “ஆம்” என்று பெருமையுடன் தலையசைத்தான். பின்னால் எவரோ “யானையை எப்படிக் கொல்லமுடியும்? மூடன்” என்றான். இன்னொருவன் “பெரியதந்தை பீமன் யானையை கொன்றார்” என்றான்.

சற்றுநேரத்தில் அந்த இடைநாழி முழுக்க குழந்தைக் கௌரவர்களால் நிறைந்தது. கரிய உடலும் பெரிய பற்களும் கொண்டிருந்த துர்விநீதன் உரத்த குரலில் “நான் புரவியேறப் பயின்றுவிட்டேன். நான் புரவியில் ஏறி இந்த நகரை மும்முறை சுற்றி வந்தேன்” என்றான். “மும்முறை” என்று அவன் அருகே இருந்த இளையோன் துர்கரன் சொன்னான். “மூன்று முறை!” “ஆமாம், மூன்று முறை” என்று பல குரல்கள் எழுந்தன. ஒருவன் எம்பிக்குதித்து “பெரியகுதிரை!” என்றான். இன்னொருவன் “ஆமாம், யானைபோன்ற குதிரை” என்றான். “சிவப்பு” என்று ஒருவன் வேறெதையோ ஒப்புக்கொள்ள அப்பால் ஒருவன் “மிகவும் இனிப்பு!” என்று மகிழ்ந்தான்.

கர்ணனால் எந்த முகத்தையும் தனியாக பிரித்தறிய முடியவில்லை. விழித்த வெண்பளிங்குருளைக் கண்கள், ஒளிவிடும் உப்புப்பரல்பற்கள், உவகையன்றி பிறிதொன்றும் அறியாத இளைய உடல்கள். யானைக்குட்டிகள், எருமைக்கன்றுகள், பன்றிக்குருளைகள், எலிக்குஞ்சுகள். துள்ளுவதற்கென்றே உருவான கால்கள். அணைப்பதற்கென்றே எழுந்த தளிர்க்கைகள்.. செவிப்பறைகளை கீறிச்செல்லும் குரல்கள்.

ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைச் சொன்னார்கள். “பெரீந்தையே” என அவன் காலுக்கு கீழே ஒரு குரல் கேட்டபோது அடிவைத்துப் பழகிக்கொண்டிருக்கும் சிறிய குழந்தையை கண்டான். “ஆ, இத்தனை சிறியவனா?” என்றபடி கர்ணன் அவனை ஒற்றைக்கையால் எடுத்தான். “அவன் நேற்றுதான் பிறந்தான்… மிகச்சிறியவன்” என்று சொன்னவனும் அப்போதுதான் பேசக் கற்றிருந்தான். எச்சில் வழிந்து மார்பில் வழிந்திருந்தது.

கர்ணனின் அறைவாயிலில் நின்றிருந்த சிவதர் “எண்ணவே முடியாது போல் தோன்றுகிறதே” என்றார். கர்ணன் “எண்ணூற்றைம்பதுபேர் என்பது முறையான கணக்கு என நினைக்கிறேன்” என்றான். “இல்லை அரசே, ஆயிரம் கடந்துவிட்டது. நாள்தோறும் ஒன்றிரண்டு பிறக்கிறது” என்றான் ஏவலன். “இளையவர் கவசீக்கு மட்டும் பன்னிரு துணைவியர். அத்தனைபேரும் அரக்கர்குலம். பெற்றுக்கொண்டே இருக்கிறார்கள்.” கர்ணன் தன்னைச்சுற்றி திரும்பித்திரும்பி நோக்கி சிரித்தபடி “அத்தனை பேரும் துரியோதனன் போல் இருக்கிறார்கள்” என்றான். “என் நண்பன் நல்லூழ் கொண்டவன். இப்புவியில் அவனைப்போல் இத்தனை பல்கிப் பெருக பிறிது எவராலும் இயலவில்லை.”

சரசரவென்று பெருந்தூண் ஒன்றின்மேல் ஏறிய ஒருவன் “பெரியதந்தையே, நான் இங்கிருந்து குதிக்கவா?” என்றான். சிரித்தபடி “சரி, குதி” என்று சொல்லி கர்ணன் திரும்புவதற்குள் அவன் பேரோசையுடன் வந்து மரப்பலகையில் விழுந்தான். “அடடா…” என்று கர்ணன் ஓடிச்சென்று அவனை அள்ள முயல இருவர் அவன் தோள்மேல் தாவி ஏற கால் தடுமாறி நின்றான். கீழே விழுந்தவன் கையை ஊன்றி எழுந்து “எனக்கொன்றுமே ஆகவில்லை” என்றான். ஆனால் அவன் கால்களில் அடிபட்டிருப்பது தெரிந்தது. சிவதர் “இவர்களுக்கு சொல் என்றால் அக்கணமே செயல்போலும்” என்றார்.

ஏவலன் “அவர்களை நாம் நோக்கவேகூடாது அரசே… இதெல்லாம் அவர்களுக்கு அன்றாடச்செயல்” என்றான். “பெரீந்தையே” என அழைத்த ஒருவன் தன் கையிலிருந்த ஒரு கலத்தைக் காட்டி “இன்னீர்…” என்றான். “நான் முழுமையாக குடித்துவிட்டேன்.” கர்ணன் “என்ன உண்டீர்கள்?” என்றான். ஏதேதோ சொல்லிக் கூவிய நூற்றுக்கணக்கான குரல்கள் சூழ ஒலித்தன. “என்ன உண்கிறீர்கள் என்று கேட்க வேண்டும்” என்றார் சிவதர்.

“கேட்கவே வேண்டியதில்லை. எது உள்ளதோ அதை கொண்டு வைத்தால் போதும். உண்பதில் தந்தையரை ஒவ்வொருவரும் மிஞ்சிவிடுவார்கள் போலிருக்கிறது” என்றான் கர்ணன். “எனக்கு யானை… யானை வேண்டும்” என்றான் ஒருவன் காலுக்கு அடியில். அவனை ஒற்றைக்கையில் தூக்கி “எதற்கு?” என்றான் கர்ணன். “நான் யானையை தின்பேன்.”

கீழிருந்து படியேறிவந்த சுஜாதனிடம் “எங்கே சென்றிருந்தாய்?” என்றான் கர்ணன். “நானும் இவர்களுடன் வந்தேன் பெரியதந்தையே” என்றான் அவன். அப்போதுதான் அவன் குரல் வேறு என கர்ணன் உணர்ந்து “நீ யார்?” என்றான். “பெரியதந்தையே, நான் லட்சுமணன்… மறந்துவிட்டீர்களா?” கர்ணன் உரக்க நகைத்து “அருகே வா அறிவிலி… நான் செல்லும்போது நீ சிறுவனாக இருந்தாய். சுஜாதன் உன்னைப்போலிருந்தான்” என்றான் கர்ணன்.

அவனை திகைத்து நோக்கிய சிவதரிடம் “அஸ்தினபுரியின் பட்டத்து இளவரசன் லட்சுமணன். சுயோதனனின் முதல்மைந்தன்…” என்றான் கர்ணன். சிவதர் “ஆம், நாம் செல்லும்போது மிகச்சிறியவர். மும்மடங்கு வளர்ந்துவிட்டார்” என்றார். ”இன்று அத்தையும் சிந்து நாட்டரசரும் வருகிறார்கள்” என்றான் லட்சுமணன். அவனுக்கு இளையவனாகிய உதானன் “நான் சிந்துநாட்டரசரை கதைப்போருக்கு அழைத்துள்ளேன்” என்றான். குழந்தைகளை நோக்கி “நீங்களெல்லாம் அதற்கென்று அணிசெய்து கொள்ளவில்லையா?” என்றான் கர்ணன்.

“நாங்கள் புலரியிலேயே அணிசெய்துவிட்டோம். அதன் பிறகு இவன் என்னை அடித்துவிட்டு ஓடினான். நான் அவனை துரத்திச்சென்று…” என்று துர்தசன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே தசகர்ணன் அவன் மேல் தாவி அவனை மறித்து “இருவரும் சண்டை போட்டார்கள். புழுதியிலே புரண்டு… அப்படியே புரண்டு…” என்றான். கஜபாகு “யானைக் கொட்டில் வரைக்கும் நாங்கள் ஓடினோம்” என்றான்.

ஏவலன் “இளவரசர்கள் என்கிறார்கள். இவர்கள் அணிந்திருப்பதெல்லாம் பொன்னும் மணியும் முத்தும் பவளமும். ஆனால் புழுதியின்றி இவர்களை இந்நகர் மக்கள் எவரும் பார்த்ததில்லை” என்றான். “அது அஸ்தினபுரியின் புழுதி” என்றான் கர்ணன். அவர்களை கைநீட்டி அள்ளியபடி “வாருங்கள், அறைக்குள் செல்வோம்” என்றான்.

சிவதர் “அறைக்குள் இத்தனை பேரை விடமுடியாது அரசே. இங்கேயே இருக்கலாம்” என்றார். “பீடம்?” என்றான் கர்ணன். “பீடமெதற்கு? இத்தனை பேர் ஏறினால் எந்தப் பீடமும் உடைந்துவிடும். இங்கேயே தரையில் அமர்ந்து கொள்ளுங்கள்” என்றார் சிவதர். லட்சுமணன் சிரித்து “பெரியகூட்டம்… எவருக்கும் எந்த ஒழுங்கும் கிடையாது… எதையும் செய்வார்கள்” என்றான்.

அவனைச் சுற்றி நீர்ப்பெருக்கில் கொப்பரைகள் போல மண்டைகள் அலையடித்தன. சிரித்தபடி. கர்ணன் அவர்களில் ஒவ்வொருவரையாக தூக்கி வானில் எறிந்து பிடித்தான். “என்னை! பெரீந்தையே என்னை! என்னை!” என்று பலநூறு கைகள் எழுந்தன. இறுதியாக படிகளில் ஏறிவந்த ஒரு வயதான சுப்ரஜன் தன் ஆடை அனைத்தையும் சுருட்டி கையில் எடுத்துக்கொண்டு அழுதபடி அணுகினான்.

“யாரவன்?” என்றான் கர்ணன். “யார் நீங்கள் இளவரசே?” என ஏவலன் அவனிடம் கேட்க சுப்ரஜன் அழுதபடியே “என் ஆடை கிழிந்துவிட்டது” என்றான். “அவமதிக்கப்பட்டுவிட்டார். ஆகவே அனைத்து ஆடைகளையும் கழற்றி கையில் எடுத்துக்கொண்டு வருகிறார்” என்றார் சிவதர். “அவனைத் தூக்கி இங்கு வீசு” என்றான் கர்ணன்.

ஏவலன் சுப்ரஜனைத் தூக்கி கர்ணனை நோக்கி எறிய ஒற்றைக்கையால் அவனைப் பிடித்து சுழற்றித் தன் தோளில் அமரவைத்து “எப்படி கிழிந்தது ஆடை?” என்றான். “நான் வாளை எடுத்து ஆடைக்கு கொடுத்தேன். அதுவே கிழித்துக்கொண்டது” என்றான் அவன். “வாளா? இவனிடம் யார் வாளை கொடுத்தது?” என்றான் கர்ணன். “என்ன செய்வது? நகரெங்கும் படைக்கலங்கள்தான். நாளுக்கு ஒருவர் குருதிக் காயத்துடன் ஆதுரசாலைக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்” என்றான் ஏவலன். “இப்போது அங்கே பதினெட்டுபேர் படுத்திருக்கிறார்கள்…”

“இரண்டு வாரங்களுக்கு முன் மூவர் சென்று கைவிடுபடை ஒன்றை இயக்கி விட்டனர். நூற்றிஎழுபது அம்புகள் வானில் எழுந்து காற்றில் இறங்கின. நல்லூழாக அது நள்ளிரவு. இல்லையேல் பல வீரர்களின் உயிர் அழிந்திருக்கும்” என்றான் இன்னொரு ஏவலன். “அரண்மனை எப்படி தாங்குகிறது இவர்களை?” என்று சிவதர் கேட்டார்.

“இவர்களை அவைநிகழும் இடங்களுக்கெங்கும் வர விடுவதில்லை. அஸ்தினபுரியின் மேற்கே ஏரிக்கரையில் இவர்களுக்கென்று மாளிகைகள் கட்டப்பட்டுள்ளன. அன்னையரும் ஏவலருமாக இவர்கள் அங்குதான் வாழ்கிறார்கள். இவர்கள் வெளிவராமல் இருக்க சுற்றி உயரமான கோட்டை கட்டி ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர்கள் காவலுக்கு நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்” என்றான் ஏவலன். ”இவர்களை எவர் காவல் காப்பது?” என்றான் கர்ணன்.

பேரொலியுடன் அவனுக்குப் பின்னால் இருந்த சாளரக்கதவு நான்கு இளைய கௌரவர்களுடன் மண்ணில் விழுந்ததைக் கேட்டு திடுக்கிட்டான். சிவதர் திரும்பிப் பார்த்து “ஐயையோ” என்றார். ஏவலன் “அவர்களுக்கு அடியேதும் படாது. பட்டாலும் அன்றிரவுதான் அது வெளியே தெரியும். பொதுவாக நடமாடும் நிலையில் இருக்கும் இளவரசர்களை நாங்கள் பொருட்படுத்துவதில்லை. இவர்களில் கால்முளைத்தவர்களை அரணெல்லாம் கட்டுப்படுத்த முடியாது” என்றான்.

“ஆம், ஐம்பதுபேருக்கு மேல் பத்து வயதை கடந்தவர்கள். அவர்கள் அங்கிருக்கும் அணித்தோட்டத்து மரங்களில் ஏறி கோட்டைக்கு மேல் உலவக்கூடியவர்கள். அங்கிருந்தே களிறுகளின் முதுகில் தாவவும் கற்றிருக்கிறார்கள். நூற்றுக்கும் மேலானவர்களுக்கு நான்குவயது கடந்துவிட்டது. அதற்கும்கீழே உள்ளவர்களே மிகுதி. கோட்டை என்பது இவரைப் போன்ற நடை நன்கு பழகாத சிறுவர்களுக்காகத்தான்.”

ஏவலன் சுட்டிக்காட்டிய சிறுவன் அழிப்பரப்பில் தொற்றி ஏற முயன்றுகொண்டிருந்தான். தன் கையில் இருந்த குறுவாளால் தரைப்பலகையை குத்திப் பெயர்த்து எடுத்த இளைய கௌரவன் ஒருவன் உள்ளே காலை விட்டு “மூத்தவரே, இதன் வழியாக நாம் கீழ்த்தளத்தில் குதித்து விடமுடியும்” என்றான்.

ஆவலுடன் “எங்கே?” என்று கேட்டபடி ஏழெட்டு பேர் அந்தப் பலகை இடைவெளியை நோக்கி சென்றார்கள். பெயர்த்தவன் அந்த இடைவெளி வழியாக தன் உடலை நுழைக்க பாதி நுழைந்தபின் மேலும் கீழே செல்ல முடியாமல் சிக்கிக்கொண்டான். சிவதர் “ஐயையோ… தூக்குங்கள் அவரை” என்று பதற “இல்லை சிவதரே. இதிலெல்லாம் நாங்கள் தலையிட முடியாது. அவர்களே ஏதேனும் வழி கண்டுபிடிப்பார்கள். மேலும் இப்படி எவரேனும் ஒருவர் சிக்கி ஓரிரு நாழிகைகள் செல்லுமென்றால் நான் சற்று ஓய்வெடுக்க முடியும்” என்றான் ஏவலன்.

இன்னொருவன் “கீழே நால்வர் காவல்மாடத்தில் ஏறி இறங்கமுடியாமலிருக்கிறார்கள்” என்றான். கீழே மாளிகைமுற்றத்தில் கொம்பு ஒலி கேட்டது. இளைய கௌரவர்களில் ஒருவன் “தந்தையர் வருகிறார்கள்” என்றான். “தந்தையர்! தந்தையர்!” என கூச்சல்கள் கிளம்பின. பேரொலியுடன் இளவரசர்களில் ஒரு பகுதி பிரிந்து படிகளில் உருண்டு பொழிந்து கீழ்க் கூடத்தை நிறைத்து வாயிலை நோக்கி ஓடியது.

தொடர்ந்து ஓடிய குட்டிக்கால்கொண்ட இளவரசர்கள் நாலைந்து பேர் உருண்டு விழுந்து புரண்டபடியே கீழே சென்றார்கள். சிலர் படிகளின் கைப்பிடிகளைத் தொற்றி தொங்கி கீழே குதித்தனர். மேலிருந்த கைப்பிடி மீது ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் ஒரே சமயத்தில் ஏற மரம் முறியும் ஒலி கேட்டது.

“கைப்பிடிச்சுவர் உடைகிறது” என்றார் சிவதர். “ஆம், உடைகிறது” என்றான் ஏவலன் இயல்பாக. “பிடியுங்கள்! விழப்போகிறார்கள்” என்றார் சிவதர். “ஐம்பது பேரை பிடிக்கும் ஆற்றல் எனக்கு இல்லை” என்ற ஏவலன் “ஒன்றும் ஆகாது சிவதரே” என்று சிரித்தான். கைப்பிடி உடைந்து சரிய மொத்தமாக அத்தனை பேரும் கீழிருந்த பலகையில் விழும் ஒலி கேட்டது. யாரோ அலறும் ஒலி.

“யாருக்கோ அடிபட்டிருக்கிறது” என்றார் சிவதர் ஓடிச்சென்று நோக்கியபடி. “அவர்கள் எழுந்தோடிய பிறகு யார் எஞ்சியிருக்கிறார்களோ அவர்களுக்கு அடிபட்டிருக்கிறது என்று சொல்லமுடியும்” என்றான் ஏவலன். அவர்களின் ஓசையை அந்த மாளிகையின் அத்தனை வாயில்களும் வாயாக மாறி முழங்கின.

கர்ணன் சென்று பார்த்தபோது அங்கு எவரும் எஞ்சியிருக்கவில்லை. இறுதியாக எழுந்து ஓடிய ஒருவன் மட்டும் காலை சற்று நீட்டி நீட்டிச் சென்றதுபோல் தோன்றியது. வாயிலைக் கடந்து துச்சலனும் துர்முகனும் சுபாகுவும் ஜலகந்தனும் சித்ரகுண்டலனும் உடலெங்கும் மைந்தர்கள் தொற்றியிருக்க தள்ளாடி நடந்தபடி வந்தனர். அவர்களைச் சூழ்ந்து கூச்சலிட்டபடி வந்தனர் இளைய கௌரவர். சுபாகு அங்கிருந்தபடியே வெடிக்குரலில் “மூத்தவரே, இன்றுதான் சிந்து நாட்டரசர் நகர் புகுகிறார். நாம் சென்று நகர் வாயிலிலேயே அவரை வரவேற்க வேண்டியுள்ளது” என்றான்.

சிவதர் “இந்த எண்ணூறு பேரையும் அழைத்துக்கொண்டா நாம் செல்லவிருக்கிறோம்?” என்றார். “ஆம், அரச முறைப்படி இவர்கள் சென்றாக வேண்டுமல்லவா?” என்றான் சுபாகு. “சிந்து நாட்டரசர் இவர்களை இதற்குமுன் பார்த்திருக்கிறாரா?” என்றான் கர்ணன். சிவதர் “கேள்விப்பட்டிருப்பார். இதற்குள்ளாகவே இவர்களைப் பற்றி ஏழெட்டு குறுங்காவியங்கள் சூதர்களால் பாடப்பட்டிருக்காதா என்ன?” என்றார்.

பேரொலியுடன் துச்சலனின் பின்னாலிருந்த கதவு பித்தளைக் கீலிலிருந்து கழன்று சரிந்தது. அவன் ஒற்றைக்கையால் அதை பிடித்துக்கொண்டு அதில் தொங்கியிருந்த கௌரவர்களை உலுக்கி கீழே வீழ்த்தினான். அவர்கள் அதை ஓரு விளையாட்டாக ஆக்கி கூச்சலிட்டனர். கதவைப்பிடுங்கி சாற்றி வைத்துவிட்டு “நம் அரண்மனையில் கதவுகள் மிகவும் மெலிதாக பொருத்தப்பட்டுள்ளன மூத்தவரே” என்றான்.

கர்ணன் படிகளில் இறங்கி வந்தபடி “ஆம், அஸ்தினபுரி நகரமே மிக மெல்லிய பொருட்களால் கட்டப்பட்டுள்ளது இளையோனே. அனேகமாக இந்த மாளிகையை நாளை திரும்பக் கட்டவேண்டியிருக்கும்” என்றான். அறைக்குள் படாரென்ற ஒலி கேட்டது. சிவதர் திரும்பி “கலம்” என்றார். உடனே இன்னொரு ஒலி கேட்டது. கர்ணன் நோக்க “தங்கள் மஞ்சம் இரண்டாக உடைந்துள்ளது என்று நினைக்கிறேன்” என்றார்.

வெளியே புரவி உரக்க கனைத்தது. “அதை யார் என்ன செய்தது?” என்று கேட்டான் கர்ணன். “புரவிகளில் ஏற முயல்கிறார்கள்” என்று வாயிலில் நின்ற பணியாள் சொன்னான். கர்ணன் “நாம் பேரரசரை பார்க்கப் போகிறோமல்லவா?” என்றான். “அவர் நீராடி அணிபுனைந்து அவைக்குச் சென்றுவிட்டார். அரசரும் பிற தம்பியரும் அவையில் இருப்பார்கள் . நாம் சென்று ஜயத்ரதரை வரவேற்று அவை சேர்ப்போம். குழந்தைக்கு மாமனாகிய தாங்களும் நகர வாயிலிலேயே வரவேற்க வேண்டுமென்பது முறைமை.”

கர்ணன் “ஆம், இளவரசன் முதலில் நகர்நுழையும் தருணம்” என்றான். துச்சலன் உரக்க “பழைய முறைமை என்றால் மூத்தவருக்குப்பின் அரசாளவேண்டியவர் ஜயத்ரதனின் மைந்தர்தான். தந்தையின் மணிமுடி மைந்தனுக்கு என்பது பழைய காலத்தில் இல்லை” என்றான்.

துர்முகன் “சௌனக குருமுறையின் நெறிகளின்படிதான் இப்போது தந்தையின் மணிமுடி மைந்தனுக்கு வருகிறது அல்லவா? அதற்கு முன் உத்தாலக நீதியின்படி தாய்க்கு தமையனே அரசாளும் முறை இருந்தது” என்றான். கர்ணன் “அரச முறைகளை பேசுவதற்கான இடமா இது?” என்றான். “சிறந்த நெறிகளை களத்திலேயே உரைக்கவேண்டுமென்பது சூதர் சொல்” என்றார் சிவதர்.

அவர்களைச் சுற்றி போர்க்களமே நிகழ்ந்து கொண்டிருந்தது. அந்த மாளிகையின் பின்பக்கத்துக்குச் சென்ற இளைய கௌரவர்கள் அங்கிருந்த சேடியர் அறைகளுக்குள் புகுந்துவிட்டிருப்பதை பெண்களின் கூச்சல்களும் உலோகப்பாத்திரங்களின் ஒலியும் காட்டின. “உண்கிறார்கள்” என்றான் துர்முகன்.

துச்சலன் “ஏன் இப்படி உண்கிறார்கள் என்றே தெரியவில்லை. நாங்களெல்லாம் இளமையில் இவ்வாறெல்லாம் உண்டதில்லை” என்றான். “நீ எப்படி உண்டாய் என்று எனக்குத் தெரியும்” என்றான் கர்ணன். “இவர்களைத் திரட்டி எப்படி அரண்மனை முகப்புக்கு கொண்டு செல்வது?” என்று சிவதர் கேட்டார். “அத்தனை பேரையும் கொண்டு செல்வது நடவாது. நான்கு வயதுக்கு மேற்பட்ட இளவரசர்களை மட்டும் கொண்டு செல்வோம்” என்றான் கர்ணன்.

“அப்படியெல்லாம் எந்தக் கணக்கையும் எடுக்க முடியாது. அதற்கு இவர்களை முதலில் எண்ணவேண்டும். அப்பணிக்குரிய கணக்குநாயகங்கள் அமைச்சுப்பணியில் இருக்கிறார்கள்” என்றான் துர்முகன்.

“நான் வருவேன்! நான் வருவேன்! நான் வருவேன்!” என்று கர்ணனின் முழங்கால் உயரமிருந்த சுதீபன் கூச்சலிட்டபடி எம்பிக்குதித்தான். அவனைவிட சிறியவனாகிய சம்பு “நான் கதாயுதத்தை கொண்டு வந்திருக்கிறேன்” என்றான். அவன் கையில் சிறிய மரத்தாலான கதாயுதம் ஒன்று இருந்தது. “நான் அவனை போருக்கு அழைப்பேன்” என்றான்.

கர்ணன் குனிந்து “யாரை?” என்றான். “சிந்து நாட்டு இளவரசனை.” சிரிப்புடன் “ஏன்?” என்றான் கர்ணன். “அவன் என் தங்கையை மணமுடிப்பான் என்று சொன்னார்கள்” என்றான் அவன் முகம் சுளித்து. “இவனுக்கு தங்கை இருக்கிறாளா?” என்று கர்ணன் கேட்டான்.

துச்சலன் சிறுவனை குனிந்து நோக்கி “முதலில் இவன் யார்?” என்றான். “உங்கள் நூற்றுவரில் ஒருவருடைய மைந்தன்” என்றான் கர்ணன். “ஆம், அது தெரிகிறது. ஆனால் எவர் மைந்தன்?” முழங்கால் வரைக்குனிந்து “அடேய், உன் தந்தை பெயரென்ன?” என்றான் கர்ணன். அவன் “அனுமன்” என்று சொன்னான். “அனுமனா?” என்றபின் கர்ணன் சிரிப்பை அடக்கியபடி “எந்த அனுமன்?” என்று கேட்டான்.

அவன் கையை விரித்து எம்பிக்குதித்து “பெரிய அனுமன்… இலங்கைக்கு அப்படியே தாவி” என்றபின் அவன் தன் பின்பக்கத்தை தொட்டு அங்கே இருந்த கற்பனை வாலை இழுத்துக் காட்டி “இவ்வளவு பெரிய வால்! அதில் தீயை வைத்து…” என சொல்லத்தொடங்கி உளவிரைவால் திணறினான். சிவதர் “சரிதான். விளையும் பயிர் முளையிலே! இப்போதே தீ வைக்க எண்ணுகிறான்” என்றான்.

துர்மதன் வெளியே இருந்து வந்து “மூத்தவரே, நாம் செல்வோம். பொழுது விடிந்து கொண்டிருக்கிறது” என்றான். “இவர்கள் யாருடைய மைந்தர்கள் என்று எப்படி அறிவீர்கள்?” என்றான் கர்ணன். துச்சலன் “உண்மையில் எனக்கு ஏழு மைந்தர்கள் இருக்கிறார்கள். இரு புதல்வியர். புதல்வியரை மட்டும்தான் என்னால் அடையாளம் காணமுடியும். அது இருவருக்குமே என்னை தனித்தறிய முடியும் என்பதால்தான். மைந்தரை அடையாளம் காணமுடியாது.”

“ஆனால் அடையாளம் கண்டு ஆவதொன்றுமில்லை மூத்தவரே. எண்ணூற்றுவரும் ஒரே முகமும் ஒரே பண்பு நலன்களும் கொண்டிருக்கிறார்கள்” என்றான் துச்சகன். சிவதர் ஐயமாக “பண்பு என்ற சொல்லை இதற்கெல்லாம் பயன்படுத்தலாகுமா?” என்றார்.

அவர் சொல்வதை புரிந்துகொள்ளாமல் துச்சலன் “ஆம், அதைத்தான் நானும் சொல்கிறேன். இவர்களை எல்லாம் துரோணரிடம் கல்வி கற்க அனுப்பலாம் என்று எண்ணமிருக்கிறது” என்றான். கர்ணன் வெடித்துச் சிரித்தபடி “அதை நான் வழிமொழிகிறேன். துரோணர் அவரது குருகுலத்திலிருந்து என்னை அவமதித்து துரத்திவிட்டார். அதற்கு இப்படித்தான் நாம் பழிதீர்க்க வேண்டும்” என்றான்.

துச்சலன் “ஏன்?” என்றான். கர்ணன் “இல்லை, துரோணர் மிகச்சிறந்த ஆசிரியர் என்று சொல்லவந்தேன்” என்றான். துச்சலன் குனிந்து தவழ்ந்து சென்ற ஒருவனைப் பார்த்து “இவன் இன்னும் நடக்கவே தொடங்கவில்லை. இவன் எப்படி வந்தான்?” என்றான்.

“யாராவது தமையன்கள் தூக்கிக்கொண்டு வந்திருப்பார்கள்” என்றார் சிவதர். “எப்போதும் இப்படித்தான். மொத்தமாக ஓர் அலைபோல இவர்கள் கிளம்பிச்சென்ற பிறகு ஏழெட்டு குழந்தைகள் அப்பகுதியில் உதிர்ந்துகிடந்து தவழ்ந்து கொண்டிருக்கும். அவற்றை பொறுக்கி திருப்பி அரண்மனைக்கு கொண்டு சேர்ப்போம்” என்றான் ஏவலன்.

துச்சலன் ஒற்றைக்கையால் அதை தூக்கி அதன் முகத்தை பார்த்தான். “இதைப் பார்த்தால் தம்பி விருந்தாரகனின் முகம் போலுள்ளது” என்றான். முகத்தருகே கொண்டுவந்து “அடேய், உன் தந்தை பெயரென்ன?” என்றான். அவன் தன் இடக்கையை வாய்க்குள் திணித்து இரு கால்களை உதறி சிணுங்கினான்.

“மிகச்சிறுவன்” என்று துச்சலன் கர்ணனிடம் சொன்னான். “பேச்சு வரவில்லை. அதற்குள் கிளம்பிவிட்டான்.” கர்ணன் “விருந்தாரகனுக்கு எத்தனை மனைவியர்?” என்றான். “மொத்தம் நான்கு எனநினைக்கிறேன்..அவன் மத்ர நாட்டுக்கு மேலே இமயச்சாரலுக்குச் சென்று அங்குள்ள சம்பரர் என்னும் அரக்கர் குடியிலிருந்து ஒரு பெண்ணை தூக்கி வந்தான். அவர்களுக்கு ஒன்பது குழந்தைகள் பிறந்தன. ஆனால் இன்றுவரை கொழுநனும் துணைவியும் பேசிக்கொண்டதில்லை” என்றான் சுபாகு. “ஏன்?” என்றான் கர்ணன். “மொழி தெரியவில்லை” என்று சுபாகு சொல்ல கர்ணன் வெடித்துச் சிரித்தான்.

சிறுவன் உரத்த குரலில் ஏதோ சொன்னான். “இது அரக்கர் மொழிதான். அப்படியென்றால் இவன் விருந்தாரகனின் மைந்தன்தான்.” குழந்தையை அருகே கொண்டு வந்து அதன் கன்னத்தில் முத்தமிட்டான். சிறுவன் ஆவலுடன் பார்த்து இரு கைகளாலும் துச்சலனின் தலையை அள்ளிப்பிடித்து கன்னத்தை இறுகக் கடித்தான்.

“ஸ்ஸ்” என கூவியபடி அவனைப் பிய்த்து தூக்கி தலைக்கு மேல் நிறுத்தி “இவன் பலவர்தனனின் மைந்தன்… அவன் சிறுவயதில் இதைப்போலவே என்னைக் கடித்திருக்கிறான்” என்றான். சிறுவனை ஆட்டியபடி “பேன் போலிருக்கிறான்” என்றான். கைகளையும் கால்களையும் பிடிபட்ட பேன் போலவே நெளித்தபடி சிறுவன் கூச்சலிட்டான்.

“அரிய பற்கள்… முழுக்க முளைத்தபின் அஸ்தினபுரியின் அஞ்சத்தக்க படைக்கலமாக அவை இருக்கக்கூடும்” என்றபடி அவனை கீழே விட்டான். அவன் கைதூக்கி ஏதோ கூவியபடி ஓடினான். “ஆ, அது அரக்கர் மொழி அல்ல” என்றான் துச்சலன். சுபாகு “ஆம், அது நம் மொழியின் கெட்டவார்த்தை. சற்று மழுங்கியிருக்கிறது. அதை நானே சொல்லவேண்டாமென நினைத்தேன்” என்றான். வெளியே இருந்து சித்ராயுதன் வந்து “மூத்தவரே, அனைத்தும் சித்தமாகிவிட்டன. நாம் கிளம்புவோம்” என்றான்.

முந்தைய கட்டுரைஅஞ்சலி: கே.ஏ.குணசேகரன்
அடுத்த கட்டுரைபுதியவர்களின் கடிதங்கள்-1