‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 29

பகுதி நான்கு : கூற்றெனும் கேள் – 6

கௌரவநூற்றுவரில் சிலர் அப்போதும் அறைக்கு வெளியேதான் இருந்தனர். அறைவாயிலில் நெருக்கினர். சாளரங்கள் வழியாக எட்டிப்பார்த்தனர் சிலர். சிலர் பிறரை தொட்டுக்கொண்டு நுனிக்காலில் எம்பி நின்றிருந்தனர். ஒவ்வொருவரும் நெஞ்சு விம்மிக் கொண்டிருந்தனர். ஒருவரை ஒருவர் தழுவி ஓருடலாக ஆக விழைந்தனர். ஒற்றை உருவின் நூறு நிழல்களென பிரிந்திருந்தவர்கள் ஒரு நதிப்பெருக்கின் அலைகளென மாறினர்.

கர்ணனின் இடையாடையின் நுனியைப் பற்றியபடி “மூத்தவரே” என்று சுபாகு அழைத்தான். மறுபக்கம் அவன் கைகளை தொட்டபடி “அங்கரே, அங்கரே” என்றான் துச்சலன். “மூத்தவரே, சற்று மெலிந்து விட்டீர்கள்” என்றான் மகோதரன். “மூத்தவரே, நான் முன்னரே உங்களை பார்த்தேன்” என்று பின்நிரையில் நின்று எம்பி எம்பிக்கூவினான் சோமகீர்த்தி. “மூத்தவரே! மூத்தவரே!” என்று அவ்வறை முழுக்க குரல்கள் எழுந்தன.

ஒவ்வொருவரும் சொல்ல எண்ணுவதை அவர்களின் நா அறியவில்லை. கைகளால், சொற்களால் ஒருவரோடொருவர் முற்றிலும் ஒன்றாகத் துடித்து தவித்தனர். அவ்விழைவால் ஒவ்வொரு உடலும் ததும்ப அக்கூட்டம் தன்னைத்தானே நெரித்துக்கொண்டு நெளிந்தது. பொருளற்ற ஓசைகளும் குரல்களும் ஏங்கும் மூச்சொலிகளுமாக சுருண்டு இறுகி உருளைவடிவாக மாறவிழையும் கரியபெருநாகம் போல் அது முறுகியது.

பின்பு அவர்கள் தொடுகையினூடாகவே முற்றிலும் தொடர்புற்றனர். ஒற்றை உடலும் இருநூறு கால்களும் இருநூறு பெருந்தோள்களும் கொண்டு கர்ணனை சூழ்ந்தனர். ஓசைகள் அடங்கின. உடல்கள் அமைந்தன. உணர்வுகள் வெறும் விழிநீர் வழிதலாக மட்டும் வெளிப்பட்டன. உடல்வெம்மையே அவர்களைத் தொடுத்து ஒன்றென்றாக்கியது. அறைக்குள் ஆழ்ந்த அமைதி நிறைந்தது.

துரியோதனன் கர்ணனின் கைகளை தன் தோளிலிட்டு விலாவோடு சேர்த்து பற்றிக்கொண்டு தலையை அவன் தோளில் சாய்த்து எங்கிருக்கிறோம் என்று அறியாதவன் போல் விழிபுதைத்து நின்றான். அவன் இடக்கையை பற்றிய துச்சலன் அதை தன் தோளில் அமைத்தான். அக்கையின் விரல்களை தன் தலைமேல் வைத்து கனவிலென உறைந்திருந்தான் பீமவேகன். அவன் மார்புடன் சேர்ந்து தலைசாய்த்து நின்றான் துச்சாதனன். அவன் காலடியில் அமர்ந்திருந்தனர் அனூதரனும் திடஹஸ்தனும் துராதரனும் கவசியும். அவன் ஆடைநுனியைப் பற்றி கன்னத்துடன் சேர்த்திருந்தனர் மகாபாகுவும் துர்விமோசனனும் உபநந்தனும்.

அவன் முதுகில் கால்களில் எங்கும் அவர்களின் உடல்கள் தொட்டுக் கொண்டிருந்தன. தன்னுள் தான் நிறைந்து குளிர்ந்து அமைதிகொண்டது ஒற்றைக் கரும்பாறை. வெளியே நின்றிருந்த படைவீரர்களின் மெல்லிய பேச்சொலிகள், படைக்கலச் சிலம்பல்கள், தொலைவில் அரண்மனை முற்றத்தில் தேர்களின் சகடங்கள் எழுப்பிய அடிகள், குதிரைமூச்சுகள், குளம்படிச் சிதறல்கள், சாளரத்திரைச்சீலைச் சிறகடிப்புகள், குடுமிகளில் மெல்லத்திரும்பும் சிறுகதவுகளின் முனகல்கள். தெய்வங்கள் விண்விட்டு இறங்கிச் சூழ்வதன் ஒலியின்மை.

நெஞ்சுலைய நீள்மூச்செறிந்த விதுரர் அவ்வொலியை தானே கேட்டு திடுக்கிட்டார். பின்பு அடைத்த தொண்டையை சீரமைத்து “அரசே” என்றார். அப்போதுதான் தன் முகம் சிரித்து மலர்ந்து அவ்வண்ணமே உறைந்திருப்பதன் தசையிழுபடலை உணர்ந்து கைகளால் தொட்டு விழிநீரை அறிந்தார். சால்வையால் துடைத்தபடி “அரசே” என்றார். அவ்வொலி கருநீர் குளத்தில் விழுந்த கல்லென அத்தனை உடல்களையும் விதிர்க்க வைத்தது. “தெய்வங்களுக்குரிய தருணம் மைந்தர்களே” என்றார். “மூதாதையர் களிகொள்ளும் நேரம். இந்த அழியாத அவியை ஏற்று அவர்கள் அமரர்களென ஒளிகொள்ளட்டும்.”

பெருமூச்சுடன் கலைந்த கர்ணன் “அமைச்சரே” என்றான். அச்சொல்லின் பொருளின்மையை உணர்ந்து “அடிபணிகிறோம் தந்தையே” என்றான். விதுரர் தன் உதடுகளை இறுக்கியபடி விம்மலை அடக்கினார். தொண்டையை சீரமைத்து “இது அமைச்சு மாளிகை. நீங்கள் மேலே சென்று அரசரின் அவையில் அமைந்து உரையாடலாமே” என்றார். “அங்கே உங்கள் உண்டாட்டையும் சொல்லாடலையும் நிகழ்த்த இடமுள்ளது.”

துரியோதனன் கலைந்து “ஆம்” என்றபின் தன் சால்வையை இழுத்து சுற்றிக்கொண்டு “மேலே செல்வோம் இளையோரே. அங்கு நம் அறை சித்தமாக உள்ளது” என்றான். விதுரர் மேலும் “அங்கர் நெடுந்தூரம் பயணம் செய்து வந்திருக்கிறார். ஏதேனும் அருந்த விழைவார். அவர் சற்று ஓய்வும் எடுக்கவேண்டும்” என்றார். கர்ணன் “ஒன்றரை ஆண்டு காலத்துக்குரிய ஓய்வை இப்போது எடுத்துவிட்டேன் அமைச்சரே” என்று சிரித்தான். துச்சலன் “அவரை ஓய்வுக்குத்தான் நாங்கள் அழைத்துச்செல்கிறோம் தந்தையே. அவருடன் நாங்களும் ஓய்வெடுப்போம்…” என்றான். “ஆம், ஓய்வு!” என்றான் சுஷேணன். “ஓய்வு! ஓய்வு!” என உவகைக்குரல்கள் எழுந்தன.

“இவர்கள் ஓய்வு என எதைச் சொல்கிறார்கள்?” என்றார் விதுரர். கர்ணன் நகைத்தபடி “அவர்களுக்கு பயிற்சி ,ஓய்வு ,ஆட்சி, போர் எல்லாமே ஒன்றுதான்” என்றான். விதுரர் நகைத்தார். பீமவிக்ரன் “மேலே ஊனுணவு சித்தமாக உள்ளது!” என்று விதுரரிடம் சொன்னான். “செல்வோம்… ஓய்வுக்கு… ஊனுணவு” என அவர்கள் கூச்சலிட்டபடி திரும்பினர். அவர்கள் ஒற்றை உடற்பெருக்காக வழிந்து இடைநாழிகளில் நிறைந்து படிக்கட்டுகளில் மடிந்து மேலே சென்றனர்.

துரியோதனன் கர்ணனின் தோளைத்தட்டி “அங்கரே, எப்படி அவை முன் நின்று தூது சொன்னான் என் இளையோன்?” என்றான். “எங்கள் நூற்றுவரிலேயே அவன்தான் கற்றவன். அவன் கல்வியுள்ளவன் என்று துரோணரே சொன்னார்.” கர்ணன் திரும்பி பின்னால் வந்துகொண்டிருந்த சுஜாதனிடம் “அப்படியா சொன்னார்?” என்றான். “ஆம், இதற்குமேல் எனக்கு கல்வி வராது என்று அவரே சொல்லிவிட்டார்.” துச்சலன் மகிழ்ந்து நகைத்து “சிறப்பாகப் பேசுகிறான். மிகமிகச் சிறப்பாக!” என்றான். “அவன் பேசும் ஒரு சொல்கூட எனக்குப் புரிவதில்லை.”

“அப்படியென்றால் விதுரருக்குப் பின் அவனை அஸ்தினபுரியின் அமைச்சனாக்க வேண்டியதுதான்” என்றான் கர்ணன். துரியோதனன் உவகை தாளாமல் திரும்பி சுஜாதனை இழுத்து தன்னருகே கொண்டுவந்து அவன் தோள்தழுவி “உண்மையாகவா?” என்றான். துச்சகன் “நம்பமுடியவில்லை” என்றான். துரியோதனன் “கொன்றுவிடுவேன் உன்னை” என்று சீறினான். “அங்கரே சொல்கிறார்… என் இளையோன் அறிஞன்.”

உண்மையல்லவா அது என்பதுபோல சுஜாதன் பெருமிதப் புன்னகை பூத்தான். “மூத்தவர் பகடியாடுகிறார்” என்றான் சுவர்மன். “கௌரவருக்கு சொல் வராது என்பதை சூதர்களே பாடிவிட்டனர்.” குண்டபேதி “ஆகவே நாம் அதை மீறக்கூடாது” என்றான்.

கர்ணன் “நான் உண்மையாகவே சொல்கிறேன். அச்சமின்றி அவைநின்று தெளிவாக செய்தியை உரைத்தான்” என்றபின் “யவனமது என்னும்போது சற்றே நாவூறியதை தவிர்த்திருக்கலாம்” என்றான். சுஜாதனை படீர் படீர் என அறைந்தும் முடியைப்பற்றி உலுக்கியும் கௌரவர்கள் கூச்சலிட்டு உவகையாடினர். “என்ன ஒரு சொல்லாட்சி! என்ன ஒரு நிமிர்வு!” என்றான் கர்ணன். “உண்மையாகவா?” என்றான் துச்சலன் ஐயமாக. “சிம்மம்போல அவையில் நின்றான். அருகே கலைமகள்!” அவனை நோக்கியபின் “அப்படியென்றால் அவன் கௌரவன் அல்ல” என்றான் சுபாகு.

“எவரும் பேச வேண்டியதில்லை. நான் அவைமுன் நின்று பேசியதென்ன என்பதை வரலாறு அறியும்” என்றான் சுஜாதன். “வரலாறுக்கு எத்தனை பொன்பணம் செலவிட்டாய்?” என்றான் துச்சாதனன். “கூடவே சூதரை அழைத்துக்கொண்டு செல்லும் வழக்கம் எனக்கில்லை” என்றான் சுஜாதன். “அந்த வழக்கம் எனக்கிருக்கிறது என்று நினைத்தாயா?” என்றான் துச்சாதனன்.

“அப்படி நான் சொல்லவில்லை. சூதர்கள் தங்கள் பின் வருகிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு பகடிசெய்ய கதைகள் தேவைப்படுகின்றன.” துச்சாதனன் “என்னை அவர்கள் புகழ்ந்துதானே பாடுகிறார்கள்?” என்றான். “ஆம் மூத்தவரே, புகழ்ந்துதான் பாடுகிறார்கள்” என்றனர் கௌரவர் கூட்டமாக. ஐயத்துடன் துச்சாதனன் “மொழியறிந்தவர்களை அழைத்து கேட்கவேண்டும்” என்றான்.

“அதைக் கேட்கையில் அவை அடையும் மெய்ப்பாடுகள் என்னென்ன?” என்றான் கர்ணன். “சிரிப்பு!” என்றான் சுஜாதன். “முன்பு ஒருமுறை துச்சாதனவிலாசம் என்னும் கதையைக் கேட்டு மட்டும் அழுதார்கள்.” “ஏன்?” என்றான் கர்ணன். “நெடுநேரம் சிரித்து தொண்டை அடைத்துவிட்டது. அதன்பின் அழுகை” என்ற சுஜாதன் “ஆனால் மிக அதிகமாக பாடப்பட்டவர் உக்ராயுதரும் வாலகியும் பீமபலரும்தான்” என்றான். “அவர்கள்தான் சூதர்களுக்குரிய மடைப்பள்ளிப் பொறுப்பு. புதிய உணவுகளை உருவாக்கி அவற்றை சூதர்களுக்கு அளித்தபின்னரே ஷத்ரியர் உண்ணவேண்டும் என நினைக்கிறார்கள்.”

“அசுர இளவரசியை மணந்தவர் எப்படி இருக்கிறார்?” என்றான் கர்ணன். “அவனைத்தான் எந்தப்போரிலும் இனிமேல் முன் நிறுத்தப்போகிறோம். எத்தனை அடி விழுந்தாலும் தாங்கும் உடல் பெற்றிருக்கிறான்” என்றான் துச்சாதனன். கௌரவர்கள் கூவி நகைத்தனர். “நீங்கள் ஒவ்வொருவரும் உணவுண்ணும் விதத்தைப் பற்றி பாரதவர்ஷமே பேசிக் கொண்டிருக்கிறது” என்றான் கர்ணன். “அது சூதர்களின் பொய். நாங்கள் அளவுடனேயே உண்கிறோம். யானைகள் உண்பதையெல்லாம் எங்கள் கணக்கில் சேர்த்துவிடுகிறார்கள்” என்றான் துர்முகன். “ஆனால் உணவு பற்றிய பேச்சு எழுந்துவிட்டது. ஆகவே இனி நன்மதுவும் இனியஊனும் சற்றும் பொறுக்கக்கூடாது” என்று துச்சலன் கைகளைத்தூக்கி கூவினான்.

“எங்கே? ஏவலர்கள் எங்கே? அடுமனைக்கு நேற்றே ஆணையிட்டிருந்தேனே?” என்றான் துச்சாதனன். இடைநாழியில் தலைவணங்கி நின்ற ஏவலர்தலைவர் “அனைத்தும் சித்தமாக உள்ளன இளவரசே” என்றான். அங்கே நின்றிருந்த யுயுத்ஸுவை நோக்கிய கர்ணன் “மூடா… உன்னைத்தான் விழிதேடிக்கொண்டிருந்தேன்” என்றான். “நான் உங்களைப் பார்க்க வரவிருந்தேன் மூத்தவரே. தந்தை என்னை அவர் முன் அமரும்படி ஆணையிட்டார். ஒருவழியாக இப்போதுதான் கிளம்பிவந்தேன். எப்படியும் மேலே உணவுண்ண வருவீர்கள். அனைத்தும் சித்தமாக உள்ளனவா என்று பார்க்கலாமென எண்ணி இங்கே நின்றேன்.”

கர்ணன் “அவனை தூக்குங்கள்!” என்றான். அக்கணமே யுயுத்ஸு பல கைகளால் வானிலேற்றப்பட்டு அம்பென பீரிட்டு கர்ணன் மேல் வந்து விழுந்தான். அவனைப் பிடித்து சுழற்றி திரும்ப எறிந்தான் கர்ணன். துர்முகனும் பலவர்த்தனனும் அவனைப் பிடித்து திரும்ப வீசினர். “மூத்தவரே மூத்தவரே” என அவன் கூச்சலிட்டான். “இவன் ஒருவனுக்குத்தான் பேரரசரின் தோள்கள் இல்லை” என்றான் கர்ணன். “இறகுபோலிருக்கிறான்.” துரியோதனன் “அவனுக்குத்தான் காது இருக்கிறது என்கிறார் தந்தை. நாளும் அவருடன் அமர்ந்து இசைகேட்கிறான்” என்றான்.

“நம்மில் எவருக்குமே இசைச்சுவை அமையவில்லை” என்றான் ஜலகந்தன். “ஏனென்றே தெரியவில்லை.” சமன் “மூத்தவரே, அரசர் தந்தையை மகிழ்விக்கும்பொருட்டு இசைகற்றதை அறிவீரா?” என்றான். கௌரவர் வெடித்துச் சிரிக்கத் தொடங்கினர். “இது எப்போது?” என்றான் கர்ணன். “அதெல்லாம் இல்லை, வெறும் பகடி” என துரியோதனன் நாணினான். “இல்லை மூத்தவரே, உண்மை” என்றான் சுஜாதன். கீழே இறங்கி கர்ணனின் அருகே நின்று மூச்சிரைத்த யுயுத்ஸு “நான் சொல்கிறேன்… நான் உண்மையில் நடந்ததை சொல்கிறேன்” என்றான்.

“இவன் சொல்வதெல்லாம் பொய்…” என்று துரியோதனன் முகம் சிவக்க கூச்சலிட்டான். “அடேய்! அவனைப் பிடித்து அவன் வாயை மூடுங்கள்!” திடஷத்ரன் “அப்படியெல்லாம் செய்யக்கூடாது மூத்தவரே. சொல்லாத சொல்லை சரஸ்வதியின் அக்காள் கொண்டுசெல்வாள்” என்றபின் “தம்பி, என் அழகா, சொல் பார்ப்போம்” என்றான். யுயுத்ஸு “எட்டு தேர்ந்த இசைச்சூதரை அமர்த்தி அரசர் இசைகேட்டு பயிலத் தொடங்கினார். நான்குநாட்களில் அந்த நேரத்தை ஏன் வீணடிக்கவேண்டும் என எண்ணி அப்போது உணவுண்ணத் தொடங்கினார். உணவுண்ணும் அசைவுகளின் தாளத்துக்கு ஏற்ப சூதர்களின் பாடல்கள் மாறியபோது மகிழ்ந்தார்” என்றான்.

“பிறகு?” என்றான் கர்ணன் நகைத்துக்கொண்டே. “ஒருநாள் நான் அறைக்குள் செல்லப்போகிறேன். நூறுபேர் உணவுண்ணும் ஒலிகள். உறிஞ்சுதல்கள், மெல்லுதல்கள், கடித்தல்கள், நாசுழற்றல்கள்.” கர்ணன் “ஏன்?” என்றான். “சூதர்களின் இசையே உணவுண்ணும் ஒலிகளாக நாளடைவில் மாறிவிட்டிருந்தது.” கர்ணன் சிரித்தபடி துச்சலன் தோளில் ஓங்கி அறைந்தான். கௌரவர்கள் கூவிச்சிரித்தபடி அவனை சூழ்ந்துகொண்டனர். “நான் அரசர் யானையுடன் போட்டியிட்டு உணவுண்ட கதையை சொல்கிறேன்” என்றான் வாலகி பின்னால் நின்று எம்பி கைவீசி. “மூடா, நீ என்ன சூதனா? வாயைமூடு” என்றான் துரியோதனன். “மூடர்கள். சூதர்கள் எதைச் சொன்னாலும் இவர்களே அதை நம்பிவிடுகிறார்கள். இவர்களின் மனைவியரின் பெயரையே சூதர்களிடம் கேட்டுத்தான் தெரிந்துகொள்கிறார்கள்.”

“உணவு சித்தமாக உள்ளது” என்றார் ஏவலர்தலைவர் கிருதசோமர். கைகளை வீசி பெரிய உடலை அசைத்து மெல்ல நடனமாடி “வருக! அனைத்தும் இங்கு வருக” என்றான் துச்சலன். “இன்று நாம் உண்ணும் உணவு அனைத்தும் அங்க நாட்டரசரை மகிழ்விப்பதற்காக” என்றான் துச்சாதனன். துச்சலன் “கலிங்கத்து அரசி கருவுற்றிருப்பதாக சொன்னார். அதற்காக நாம் இன்று மாலை உணவுண்கிறோம்” என்றான். “அதன் பின் மூத்த அரசி கருவுற்றிருப்பதற்காக நாளை காலை உணவுண்கிறோம்” என்றான் துச்சகன். “அதன்பிறகு வழக்கமாக உணவை உண்ணத்தொடங்க வேண்டியதுதான்” என்றான் சுஜாதன். “ஆம் ஆம்” என்று கௌரவர் கூவினர்.

அவர்கள் துரியோதனனின் தம்பியர் அவைகூடும் நீள்வட்டப் பெருங்கூடத்திற்குள் சென்றனர். ஓசைகளுடன் பீடங்களை இழுத்திட்டு மூத்த கௌரவர் அமர தரையிலேயே பிறர் அமர்ந்தனர். “உணவு உண்பது நன்று. மிகையாக உண்பவர்கள் தெய்வங்களுக்கு அணுக்கமானவர்கள்” என்று சுலோசனன் சொன்னான். “யார் அப்படி சொன்னது? எந்த நூலில்?” என்றான் சுபாகு. சுலோசனன் “நான் அப்படி சொல்கிறேன். நேற்று எனக்கு அப்படி தோன்றியது” என்றான். கர்ணனிடம் “என் தம்பியர் ஆழ்ந்து சொல்சூழ்கிறார்கள். உணவைப்பற்றித்தான் என்றாலும் சொல்சூழ்கை என்பது சிறப்புதானே…?” என்றான் துரியோதனன். “அன்னமே பிரம்மம்” என்ற துச்சாதனன் “அதற்குமேல் வேதங்களில் இருந்து கௌரவர்கள் தெரிந்து கொள்வதற்கு எதுவுமில்லை” என்றான்.

ஒவ்வொருவரும் அதுவரை இருந்த நெகிழ்வனைத்தையும் சிரிப்புகளால் உவகைக் கூச்சல்களால் கைகளை தட்டிக்கொள்ளும் ஓசைகளால் கடந்து சென்றார்கள். அந்த நீள்பெரும் கூடமே அவர்களின் குரல்களால் நிறைந்திருந்தது. கருந்தூண்களும் அவர்களுடன் இணைந்து களியாடுவதுபோல தோன்றியது. அணுக்கர்கள் நான்கு வாயில்கள் வழியாகவும் அவர்களுக்கு பலவகை ஊனுணவுகளையும் இன்கள் நிரையையும் கொண்டு வந்தனர். கயிறு சுற்றப்பட்ட பீதர் நாட்டுக் கலங்களில் இறுக மூடப்பட்ட தேறல் வந்தது. அதை உடைத்து கடலாமைக் கோப்பைகளிலும் மூங்கில் குவளைகளிலும் பரிமாறினர்.

அவர்களிடம் எப்போதுமே உணவுமுறைமைகள் ஏதுமிருப்பதில்லை. எரிதழலில் அவியிடுவதுபோலத்தான் உண்பார்கள். “இங்கே! மூடா இங்கே!” என்று துரியோதனன் கூச்சலிட்டான். “யவனமது எங்கே?” என்றான் துச்சலன். “ஊனுணவு… மேலும் ஊன்…” என்றான் சுபாகு. “சிறந்த ஊன்… இந்த மான் ஓடும்போதே கொல்லப்பட்டுள்ளது” என்றான் சித்ரகுண்டலன். “எப்படி தெரியும்?” என்று கர்ணன் கேட்டான். “இதன் கால்கள் நீண்டிருக்கின்றன” என்றான் சித்ரகுண்டலன். “நெய்யில் பொரிக்கும்போது அது ஓட முயன்றிருக்கும்” என்று கர்ணன் சிரிக்காமல் சொல்ல “ஆம், நெய் மிகச்சூடானது. என் கையில் ஒருமுறை விழுந்துள்ளது” என்றான் சித்ரகுண்டலன். கர்ணன் தன் சிரிப்பொலி மட்டும் தனித்து எழுவதை கேட்டான். உண்ணும் ஓசையும் குடிக்கும் ஓசையும் சூழ்ந்திருந்தன.

களிற்றுக்காளை இறைச்சியை எலும்பு முனையை பற்றித்தூக்கி கடித்து இழுத்து உரித்து மென்றபடி துச்சாதனன் “அங்கு உண்டாட்டு உண்டா மூத்தவரே?” என்றான். “இல்லை” என்றான் கர்ணன். “உண்பார்கள், ஆடுவார்கள். ஆனால் பாரதவர்ஷத்தில் அஸ்தினபுரியில் மட்டுமே உண்மையில் உண்டாட்டு நிகழ்கிறது. உண்டபிறகு அரண்மனையில் மட்டுமல்ல கலவறைகளில்கூட எதுவும் எஞ்சாமல் இருப்பதற்குப் பெயர்தான் உண்டாட்டு” என்றான். அதிலிருந்த நகையாடலை புரிந்து கொள்ளாமல் துச்சாதனன் “எஞ்சுகின்றதே? ஒவ்வொரு உண்டாட்டுக்குப் பின்னும் நான் அடுமனைக்குச் சென்று பார்ப்பேன். சில கலங்களில் உணவு எஞ்சியிருக்கும்” என்றான்.

“அதை அவர் உண்டுவிட்டு திரும்பி வருவார்” என்றான் பின்னணியில் இருந்த சுபாகு. “ஆம், எஞ்சும் உணவை வீணாக்கலாகாது” என்றபின் துச்சலன் எட்டி ஒரு பெரிய ஆட்டுக்காலை எடுத்து தன் பெரிய பற்களால் கடித்து உடைத்தான். “சிறந்த ஆடு” என்றான். “அது மேயும்போது கொல்லப்பட்டது” என்றான் யுயுத்ஸு. “எப்படி தெரியும்?” என துச்சலன் பெரிய கண்களை விழித்துக் கேட்டான். “ஆடுகள் எப்போதும் மேய்ந்துகொண்டுதானே இருக்கின்றன?” என்று சொல்லி கர்ணனை நோக்கி புன்னகை செய்தான் யுயுத்ஸு. கர்ணன் சிரிக்க “ஆம், அவை நல்லவை” என்று துச்சலன் சொன்னான். “உண்மை, அவை கடுமையாக உழைத்து நமக்காக ஊன்சேர்க்கின்றன” என்றான் சுபாகு. “ஆம்” என்று கருணையுடன் துச்சலன் தலையாட்டினான்.

கர்ணன் “தந்தை எப்படி இருக்கிறார்?” என்றான். யுயுத்ஸு “இன்று செம்பாலைப்பண் கேட்டார். கண்கலங்கி அழுதபடியே இருந்தார்” என்றான். “ஏன்?” என்றான் கர்ணன். “அவர் அரசியை மணம்கொள்ள காந்தாரநகரிக்கு சென்றதை நினைவுகூர்ந்தார். அன்று ஒரு மணற்புயல் அடித்ததாம். புயல் ஓய்ந்தபின் பார்த்தால் அவரது வலக்கையை விதுரரும் இடக்கையை அரசியும் பற்றியிருந்தனராம்.” கர்ணன் “ஆம், இன்றும் அவர்களின் பிடிதானே” என்றான். துரியோதனன் “சற்று தளர்ந்துவிட்டார்” என்றான். “ஏன்?’ என்றான் கர்ணன். துச்சாதனன் “இப்போதெல்லாம் எலும்புகளை மிச்சம் வைத்துவிடுகிறார்” என்றான். அவன் நகையாடுகிறானா என்று விழிகளை நோக்கிய கர்ணன் அப்படியில்லை என்று தெரிந்ததும் வெடித்து நகைத்தான்.

“இந்த உண்டாட்டில் அவரும் இருக்கவேண்டும்” என்றான் கர்ணன். “நமக்கெல்லாம் எலும்புகள்தான் கிடைக்கும்” என்றான் சுபாகு. “ஆமாம், அவர் உண்பதை நோக்கினால் அச்சமே எழும். ஆனாலும் மானுடர் அத்தனை பெருந்தீனி எடுக்கக்கூடாது… எத்தனை பேர் பசித்திருக்கையில் ஒருவரே அவ்வளவு உண்பது பெரும்பிழை” என்றான் துச்சலன். துரியோதனன் “இத்தனை புலரியில் அவர் உண்பதில்லை. இப்போது தன் பயிற்சிக்களத்தில் எடை தூக்கிக் கொண்டிருப்பார்” என்றான்.

“நீங்களெல்லாம் கதாயுதப்பயிற்சி எடுப்பதில்லையா?” என்று கர்ணன் கேட்டான். “பயிற்சியா? அதன் பெயர் அடிவாங்குதல்” என்றான் பின்னணியில் இருந்த நாகதத்தன். “மூத்தவர்கள் நால்வரும் பயிற்சி எடுக்கிறார்கள். நாங்கள் எதிர்முனையில் நின்று அடிவாங்கி விழுகிறோம். இது பல ஆண்டுகளாக நடந்து வருவதுதானே?” என்றான் நிஷங்கி. திரும்பி அணுக்கனிடம் “மானிறைச்சி எங்கே?” என்றான். அவன் கொண்டுவைத்த மரக்கூடையிலிருந்த மானின் பாதியை எடுத்து கடித்து இழுத்து மென்றபடி “நாங்கள் அடிவாங்குதலில் தேர்ச்சி பெற்றுள்ளோம்” என்றான். “அத்தனை அடிவாங்கியும் நீங்கள் பயிலவில்லையா?” என்றான் கர்ணன். “பயில்கிறோம் மூத்தவரே. ஆனால் நாங்கள் பயில்வதைவிட விரைவாக எங்களை அடிப்பதில் மூத்தவர்கள் தேர்ச்சி பெற்று வருகிறார்கள்.”

கர்ணன் சிரித்தபடி “நன்று. இனி உங்களுக்கு நான் விற்பயிற்சி கற்றுத் தருகிறேன்” என்றான். துரியோதனன் கைநீட்டி “மூடனைப்போல் பேசாதீர்! கதைப் பயிற்சியிலே கை பழகாத இந்தக் கூட்டமா வில்லேந்தப் போகிறது?” என்றான். எலும்பு ஒன்றை ஊன் தெறிக்க கடித்து உடைத்து சங்குபோல வாயில் வைத்து உறிஞ்சியபின் தலையாட்டி அதன் சுவையை ஒப்புக்கொண்டுவிட்டு “வில்லுக்கு கண்ணும் கையும் மட்டும் இருந்தால் போதாது. அவற்றுக்கு நடுவே ஒன்று வேண்டும்” என்றான். துச்சாதனன் பெரிய மண்குவளை நிறைய மதுவை ஊற்றி எடுத்து இரு மிடறுகள் அருந்தியபிறகு ஐயத்துடன் “என்ன அது?” என்றான். அதை “அறிவு என்று சொல்வார்கள்” என்றான் துரியோதனன்.

அவன் சொல்வது விளங்காமல் சில கணங்கள் நோக்கியபின்பு கர்ணனை நோக்கி “அறிவில்லாதவர்கள் வில்பயில முடியாதா மூத்தவரே?” என்றான் துச்சாதனன். “பார்த்தீரா…? அவனுக்கு தன்னைப்பற்றி ஐயமே இல்லை” என்றான் துரியோதனன். கர்ணன் சிரிக்க துச்சாதனன் “அறிவில்லாவிட்டால் அம்புகள் குறிதவறுமா?” என்றான். “தவற வாய்ப்பில்லை, ஆனால் தவறான குறிகளை தேர்வுசெய்வோம்” என்றான் கர்ணன். துச்சாதனன் ஏப்பம் விட்டபடி மதுக்குடுவையை கையில் எடுத்து தலையை மேலே தூக்கி வாயில் விடத்தொடங்கினான். “யானை நீர் அருந்தும் ஒலி என நினைத்து அம்புவிட்டான் தசரதன்” என்றான் சுபாகு. “அந்தக்கதை எது?” என்றான் துச்சலன். “சிரவணகுமாரன் கதை” என்று சுஜாதன் சொன்னான். “ஓ” என்று சற்றும் ஆர்வமில்லாமல் சொல்லி “அந்த மீன்களை இங்கே அனுப்பலாமே!” என்றான் துச்சலன்.

மறுபக்கம் வாயில் சற்றே திறந்து ஏவலன் வந்து நின்று “காசி நாட்டரசி” என்றான். உணவுண்ணும் கொண்டாட்டத்தில் தரையில் இறங்கி அமர்ந்திருந்த துரியோதனன் பாய்ந்து எழுந்து தன் வாயையும் கையையும் துடைத்தபடி “யார் அவளை இங்கு வரச்சொன்னது? இவர்கள் உண்பதைப் பார்த்தால்…” என்றபடி “யாரங்கே? எனக்கொரு பீடத்தை போடுங்கள்” என்றான். “மூத்தவரே, தாங்கள் இன்னும் உண்டு முடிக்கவில்லை” என்றான் துச்சாதனன். “நான் உண்ணவேயில்லை… இங்கு அமர்ந்து உணவுண்ணும் உங்களை பார்த்துக்கொண்டிருக்கிறேன்” என்றபடி தன் ஆடையில் இருந்த உணவுத் துணுக்குகளை உதறி மேலாடையை தலை மேல் சுழற்றி தோளிலிட்டு தலைப்பாகையை சீரமைத்தான்.

“ஏன்? உண்டாலென்ன?” என்று கர்ணன் கேட்டுக் கொண்டிருக்கும்போதே பானுமதி உள்ளே வந்து அங்கு நூற்றுவரும் அமர்ந்து உண்டுகொண்டிருந்த காட்சியைப் பார்த்து திகைத்தவள் போல் நின்றாள். துச்சாதனன் “நாங்கள் உண்கிறோம் அரசி, மூத்தவர் உண்ணாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்” என்றான். பானுமதி துரியோதனனைப் பார்த்து “இன்னும் புலரவேயில்லை” என்றாள். “ஆம், புலரவேயில்லை. ஆனால் இவர் புலர்வதற்குள் வந்துவிட்டார்” என்றான் துரியோதனன் தடுமாற்றத்துடன். பானுமதி கர்ணனிடம் “மூத்தவரே, இவர்கள்தான் உண்பதன்றி வேறேதுமறியாத கூட்டம் என்றால் உங்களுக்கு அறிவில்லையா? முதற்புலரி எழும் காலையில் நீங்களுமா இத்தனை ஊனையும் மதுவையும் உண்பது?” என்றாள்.

“இது உண்டாட்டு. நான் வருவதன் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்டது” என்றான் கர்ணன். சுஜாதன் “முதல் உண்டாட்டு” என்றான். பானுமதி அவனை நோக்கி “வாயை மூடு… உன்னை பிறகு பார்த்துக்கொள்கிறேன்” என்று சீறியபின் “மூத்தவரே, ஓர் அரண்மனை என்றால் அதில் விடியல்பூசனைகளும் சடங்குகளும் என ஏராளமாக இருக்கும் என அறியாதவரா தாங்கள்? குலதெய்வங்களையும் மூதாதையரையும் வழிபடாமல் உணவுண்ணும் வழக்கம் கொண்ட அரசர்கள் பாரதவர்ஷத்தில் உண்டா?” என்றாள். “இல்லை” என்றான் சத்வன். சினத்துடன் அவனை நோக்கிய பானுமதி அவன் நகையாடவில்லை என உணர்ந்து சலிப்புடன் தலையில் அடித்து “நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. சொல்லிச் சொல்லி சலித்துவிட்டது” என்றாள்.

“நான் சொல்கிறேன் இவர்களுக்கு…” என்றான் கர்ணன். “ஆம், நீங்கள் சொல்லி இவர்கள் கேட்கிறார்கள்… மூத்தவரே, நீங்கள் இவர்களை மாற்றவில்லை. இவர்கள் உங்களை மாற்றிவிட்டார்கள்” என்றாள் பானுமதி. “ஆம், உண்மை” என்றான் சத்வன். “வாயை மூடு!” என்றாள் பானுமதி அவனிடம். பின் கர்ணனிடம் “மூத்தவரே, உண்டு முடித்து இவர்கள் அங்கங்கே விழுந்தபின் தாங்கள் என் அரண்மனைக்கு வாருங்கள். நாளை காலை சிந்து நாட்டின் அணிப்படைத் தொகுதி நகர் நுழைகிறது. இங்கு செய்ய வேண்டிய முறைமைகள் பல உள்ளன. அவற்றைப் பற்றி பேச வேண்டும்” என்றாள். “ஆம், இதோ வருகிறேன்” என்று கர்ணன் எழுந்தான். “அந்த ஊன் தடியை உண்டு முடித்துவிட்டு வந்தால் போதும்” என்றாள் அவள்.

அவள் திரும்பும்போது துரியோதனன் மெல்ல “உண்மையிலேயே நான் எதையும் உண்ணவில்லை பானு” என்றான். “உண்ணாமலா உடையெங்கும் ஊன் சிதறிக் கிடக்கிறது?” என்றாள் பானுமதி. “ஆம். நான் அப்போதே பார்த்தேன் மூத்தவரே, நீங்கள் சரியாக துடைத்துக் கொள்ளவில்லை” என்றான் சுபாகு. கர்ணன் பானுமதியின் கண்களை பார்த்தபின் சிரிப்பை அடக்க அவள் சிவந்த முகத்துடன் ஆடையை இழுத்துச் சுற்றிக்கொண்டு திரும்பிச் சென்றாள்.

“சினத்துடன் செல்கிறாள்” என்றான் துரியோதனன். “ஆம், நான் சீரமைத்துவிடுகிறேன்” என்றான் கர்ணன். “நீத்தவர்களுக்கான பூசனைகள் செய்யாது உணவுண்பது பெரும்பிழை… விதுரரும் சொல்லியிருக்கிறார்” என்றான் துரியோதனன். “அரசே, உங்கள் மூதாதையரும் உங்களைப்போன்று புலரியில் முழுப்பன்றியை உண்பவர்களாகவே இருந்திருப்பார்கள். துயர்வேண்டாம்” என்றான் கர்ணன். “ஆம், மாமன்னர் ஹஸ்தி வெறும் கைகளால் யானையை தூக்குவார்” என்றான் துச்சலன். துச்சாதனன் கள்மயக்கில் “யானையை எல்லாம் எவராலும் தூக்கி உண்ண முடியாது…” என்றான். சிவந்த விழிகள் மேல் சரிந்த இமைகளை தூக்கி “வேண்டுமென்றால் பன்றியை உண்ணலாம்” என்றான்.

“பொதுவாக அவள் இங்கு வருவதில்லை. இங்கு நீர் வந்திருப்பதை அறிந்து உம்மை பார்க்காமலிருக்க முடியாமல் ஆகித்தான் வந்திருக்கிறாள்” என்றான் துரியோதனன். பின்பு “நான் மிகை உணவால் பருத்தபடியே செல்வதாக சொல்கிறார்கள்” என்றான். “ஆம், நீங்கள் மிகவும் எடை பெற்றுவிட்டீர்கள்” என்றான் துச்சலன். சினத்துடன் திரும்பி “என்னைவிட மும்மடங்கு பெரியவனாக இருக்கிறாய். நீ என்னை சொல்ல வேண்டியதில்லை” என்றான் துரியோதனன். அவன் தலை மெல்ல ஆடியது. வாயைத் துடைத்தபடி “நான் தேரில் ஏறினால் குதிரைகள் சிறுநீர் கழிக்கின்றன… இழிபிறவிகள்” என்றான். “ஆம், நானே பார்த்தேன்” என்றான் சத்வன். துரியோதனன் அவனை சிவந்த விழிகளால் நோக்கியபோது அவன் சித்தம் செயல்படாதது தெரிந்தது. தேவையில்லாமல் துச்சலன் வெடித்துச் சிரித்தான்.

“நான் உண்மையை சொல்லவா?” என்றான் கர்ணன். “நீங்கள் அத்தனை பேரும் நான் சென்றபோதிருந்ததைவிட இருமடங்கு பெரியவர்களாகிவிட்டீர்கள். உண்மையில் ஒரு பெரிய படைப்பிரிவே என்னை சூழ்ந்தது போல் உணர்கிறேன்” என்றான். “ஆம், எங்களை அரக்கர் படைப்பிரிவு என்று சொல்கிறார்கள்” என்றபடி சுபாகு எழுந்து “எங்கே யவனமது? தீர்ந்துவிட்டதா?” என்றான். “தீரும் வரை உண்பது என்று ஒரு பழக்கத்தை வைத்திருக்கிறார்கள். அரசி என்ன, விண்ணிலிருந்து கொற்றவையே இறங்கி வந்தாலும் இவர்களை ஒழுங்குபடுத்த முடியாது” என்று யுயுத்ஸு சொன்னான். “ஆம், ஒழுங்குபடுத்தமுடியாது” என்றான் சமன்.

29

அவனை நோக்கி ஏதோ சொல்ல முயன்றபின் அச்சொல்லை மறந்து ஏப்பம் விட்டான் துரியோதனன். “ஆமாம். அதற்கு முயல்வதைவிட நாம் இன்னும் சற்று உணவருந்துவது உகந்ததாக இருக்கும்” என்றான் கர்ணன். “அதைத்தான் நானும் எண்ணினேன்” என்றபடி துரியோதனன் அமர்ந்து “அந்த மானிறைச்சிக் கூடையை இங்கு எடு” என்று ஆணையிட்டான்.

வெண்முரசு ஓவியங்கள் ஷண்முகவேல்

வெண்முரசு நாவல்கள் வாங்க

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

வெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்

முந்தைய கட்டுரைஈரோடு சந்திப்பு -ஒருகடிதம்
அடுத்த கட்டுரைதான்சானியாவில் தேர்தல்- அருண் மதுரா