அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
உங்கள் நலத்தினிலும் வளர்ச்சியிலும் மகிழ்ச்சியடையும் எண்ணற்ற தின வாசகர்களில் நானும் ஒருவன்.
ஒரு கேள்வி..
தீவிர வாசிப்பினால் அடிப்படை குணத்தில் மாற்றம் வருமா? இலக்கிய வாசிப்பில் ஒரு முழு வாழ்கையையும் அதில் வரும் கதாபாத்திரங்களின் மன நிலையையும் கூறு போட்டு சொல்லப்படுகிறதை நிதானமாக வாசிக்கிறோம்.மனித மனத்தை நுட்பமாகவும் ஆழமாகவும் சித்தரிக்கும் நல்ல இலக்கிய படைப்புக்களை வாசிக்கும்பொழுது நம்மை அந்த தருணத்தில் வைத்து யோசித்து பார்க்கிறோம் நம் மனம் கனக்கிறது அந்த படைப்பின் பாதிப்பு சில மணி நேரங்களோ அல்லது நாட்களோ இருக்கலாம். அந்த பாதிப்பு இருக்கும் காலத்திலோ அல்லது முடிந்த பின்னரோ இயல்புவாழ்க்கையில் நமது அடிப்படை குணத்தில் அந்த படைப்பின் பாதிப்பு இருக்குமா ?
அடிப்படை குணம் என்று நான் சொல்வது பொறாமை, தன்னைப்போல் பிறரை நினையாமை, துணிவின்மை, நேர்மையின்மை, அகங்காரம், பாரபட்சம்,மற்றும் பல. வாசிப்பின் விளைவாக நற்பணி குழுக்கள் உருவாகின்றன அனால் அதுவுமே அந்த குழுவினரிடம் இருக்கும் நல்ல குணத்தை வெளிபடுத்தவும் என்னத்தை செயல் ஆகவும் உதவிகின்றது. நற்குணங்களை படைத்த தீவிர வாசகர் ஒருவர் எதையும் வாசிக்காமல் இருந்தாலும் அவர் நற்குணங்களுடனேயே இருப்பார் அல்லவா ? மாறாக பேஸ்புக் நரம்பு புடைக்க காந்தியை பற்றி பேசியவர் மற்றும் வாசிப்பவர் நிஜ வாழ்வில் ஒரு பொது விடயத்தில் துணையாக இருக்ககூட பின்வாங்கியவரை நான் பார்த்திருக்கிறேன்.
நூற்றுகணக்கான நூல்களைபடித்த மேதைக்கு மனிதர்களை சமமாக பாவிக்கும் மனது இல்லை – அறிவில் சமமாக இல்லை என்றோ என்னமோ. அலுவலகத்தில் ஒருவரின் உடல்மொழிகூட அவரது மேலாளருக்கு ஒரு மாதிரியும் அவரின் கீழ் படிநிலையில் உள்ளவருக்கு வேறுமாதிரியாக தனிச்சையாக வரும். புதுமைபித்தனின் “தனி ஓருவனுக்கு” என்ற கதையில் ஒருவன் வயிற்று பிழைப்பிற்கு ஏமாற்றியதற்காக அவனை அடித்து உதைத்து ஊர்ரைவிட்டு துரத்தி அவன் செத்தும் போவான். அன்று இரவு ஊர்மக்கள் பின்வருமாறு என்று வரும்..
“அப்பொழுது எங்களூர் கோகலே ஹாலில் ‘பாரத ஜனங்களின் தற்கால நிலைமை’ என்ற பிரசங்கம். ஊர் பூராவாகவும் திரண்டு இருந்தது; அதைக் கேட்க அவ்வளவு உற்சாகம். முதலிலே ‘பாரத சமுதாயம் வாழ்கவே’ என்ற பாட்டை ஒரு நண்பர் வெகு உருக்கமாகப் பாடினார். ‘தனியொருவனுக்கு உணவில்லையெனில், ஜகத்தினை யழித்திடுவோம்’ என்ற அடிகள் வந்தவுடன், என்ன உருக்கம்! என்ன கனிவு! நாங்கள் ஆனந்த பரவசத்தில் கை தட்டினோம்!
இலக்கியத்தின் பயனை பற்றியல்ல இந்த கேள்விகள். வாசிப்பிலிருந்து நாம் அறிவில் செழுமை அடைகிறோம் ஆனால் குணத்தில் கனிவடைகின்றோமா ?
நன்றி
கார்த்திகேயன் வெள்ளைசாமி
அன்புள்ள கார்த்திகேயன்
இலக்கியம் எழுதப்பட்ட காலம் முதலே இருந்துவரும் கேள்வி இது. ஆகவே முழுமையாக பதில்சொல்லிவிடமுடியாதது
இப்படிச் சொல்லலாம், ஒரு தனிமனிதனாக எடுத்துப்பார்த்தால் இலக்கியம் ஒருவரின் வாழ்க்கையை முழுமையாக மாற்றி அவரது தனிக்குணங்களை தீர்மானித்திருப்பதை புறவயமாகப் பார்க்கமுடியாது
ஆனால் ஒட்டுமொத்தமாக ஒரு சமூகத்தை, ஒரு காலகட்டத்தை எடுத்துப்பார்த்தால் அவர்களின் பண்படுதலில் இலக்கியம் பெரும்பங்களிப்பாற்றியிருப்பதைக் காணமுடியும். பண்பாடு இலக்கியத்தையும் இலக்கியம் பண்பாட்டையும் வளர்ப்பதையே வரலாறெங்கும் நாம் காண்கிறோம்.
மனிதவாழ்க்கையைத் தீர்மானிப்பது இங்குள்ள வாழ்க்கைப்போட்டியும் அதன் போராட்டக் கருவிகளாக உள்ள அடிப்படை இச்சைகளும்தான். இது ஒரு தரப்பு. அறம் என்றும் நீதி என்றும் கருணை என்றும் சொல்லப்படும் விழுமியங்கள் நேர்எதிர் தரப்பு. இரு தரப்பின் முரணியக்கமே வாழ்க்கையாக வரலாறாக உள்ளது
இதில் இரண்டாம்தரப்பை உருவாக்கி நிலைநிறுத்துவதே அடிப்படையில் இலக்கியம் என்னும் இயக்கத்தின் நோக்கம். எத்தனை நுணுக்கமாக ஆனாலும் இந்த அடிப்படை நோக்கம் இல்லாமலாவதில்லை
இந்த உலகை எடுத்துக்கொண்டால் அது அறத்திலும் நீதியிலும் படிப்படியாக முன்னேறி வந்துள்ளது என்பதையே காண்கிறோம். மனிதவரலாற்றில் இந்தக்காலகட்டம்போல் அறம் திகழ்ந்த பிறிதொரு காலகட்டம் இல்லை
இதுவரை நாம் வந்துசேர உதவியவை இலக்கியங்களும் தத்துவங்களும்தான். அவை பேசும் மெய்யியல்கள்தான். தோல்விகள் சரிவுகள் வரலாறெங்கும் உள்ளன, ஆனால் நேற்றைப்பற்றி கொஞ்சமேனும் அறிந்தவர்கள் மானுட இனம் முன்னேறுவதையே காண்பார்கள்
ஆகவே இலக்கியம் பெரும்பங்களிப்பாற்றுகிறது என்பதே உண்மை. நம் செயல்கள் என்பவை நம்மால் சிந்தித்து எடுக்கப்படுபவை அல்ல. நம் உள்ளுணர்வால், ஆழ்மனச்செயல்பாடுகளால் முடிவுசெய்யப்படுபவை அவை. இலக்கியத்தின் பாதிப்பு நிகழ்வது அங்குதான்,
ஆகவே இலக்கியம் வாசித்தவர்கள் ‘மறந்துவிட்டு’ இயல்பு வாழ்க்கைக்குச் செல்வதில்லை. ஆழ்மனதில் ஏற்றிக்கொண்டே செல்கிறார்கள். அது அவர்களின் ஆளுமையை மிக நுட்பமாக மறைமுகமாக வரையறைசெய்யவே செய்கிறது
தனிப்பட்ட உதாரணங்களை பெரும்பாலும் நாம் நம்முடைய முன்முடிவுகள் மற்றும் உணர்ச்சிகளைக்கொண்டே பார்க்கிறோம். ஒட்டுமொத்தமாக நோக்கினால் பதில் தெளிவானதுதான்
என் இளமையில் இத்தகைய கேள்விகள் என்னை துரத்தியபோது தெளிவான பதில்களை எமர்சனிடமிருந்தே பெற்றேன். பின்னர் எழுதி வாசித்து இத்தனை காலமாகியும் நான் அவரையே ஆதர்சமாகக் கொள்கிறேன்
அவரே உங்களுக்கும் வழிகாட்டக்கூடும்
ஜெ