நட்பும் புதியவர்களும்…கடிதங்கள்

1

 

 


அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

சென்ற வருடம் எழுத்தாளர் பூமணி அவர்களுக்கு விஷ்ணுபுரம் அமைப்பு சார்பாக நடந்த பாராட்டுவிழாவிலிருந்து ஆரம்பித்து, தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை நடத்திய கூட்டத்தில் தொடர்ந்து, ஒருவழியாக “எப்ப வருவாரோ” நிகழ்ச்சியில் உங்களை சந்தித்தே விட்டேன். பூமணி அவர்களுக்கான பாராட்டு விழாவிலேயே உங்களை சந்தித்து பேசலாம் என்று வந்தேன். ஆர்வக்கோளாறில் ஆறு மணி நிகழ்ச்சிக்கு ஐந்து மணிக்கே வந்துவிட்டேன். வந்துசேர்ந்தபின்தான், என் காமிராவை எடுத்துக்கொண்டு வரவில்லை என்பதையே உணர்ந்து நொந்துகொண்டேன். ஒரு கிளர்ச்சியான மனநிலையுடன் கிட்டத்தட்ட ஒவ்வொரு நொடியும் உங்களை எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். சாலையின் எல்லா அசைவுகளும் ஒரு பதட்டத்தை கொடுத்துக்கொண்டே இருந்தன. இதோ இந்த நொடியில் நீங்கள் என் பார்வையில் பட்டுவிடுவீர்கள் என்று எண்ணி எல்லா பக்கமும் பார்த்துக்கொண்டிருந்தேன்.

கடலூர் சீனு சில பேருடன் பேசிக்கொண்டே வந்தார். கொஞ்சம் ஆர்வமும் கூடவே ஒரு விலகலும் வந்தது. அதற்கு சில காலம் முன்புதான் குழுமத்தில் அவர் எழுதிய ஒரு அஞ்சலுக்கு நக்கலாக பதிலெழுதியிருந்தேன். அவர், ஏன், யாருமே அதை கண்டுகொள்ளவில்லை என்பது வேறு விஷயம். இருந்தாலும் எனக்கு அந்த நேரத்தில் மிகவும் சங்கடமாக இருந்தது. சரி அவராக பார்த்து பேசினால் பார்த்துக்கொள்ளலாம் என்று தள்ளியே நின்று கொண்டிருந்தேன். பின்னர்தான் வீட்டிலிருந்து வந்ததில் என் முகம் மிக சோர்வாக இருப்பதை உணர்ந்தேன். ஷேவ் கூட செய்து கொள்ளாமல் வந்திருந்தேன் என்று நினைக்கிறேன். பின்னர் அருகிலிருந்த ஒரு தேநீர் கடைக்கு சென்று தேநீர் குடிக்கும் சாக்கில் முகத்தை கழுவிக்கொண்டு வரலாம் என்று கிளம்பினேன். கிளம்பிவிட்டேனே தவிர அதே பதட்டம்தான். எடுத்துவைத்த ஒவ்வொரு அடியிலும் “இதோ இந்த திருப்பத்தில் ஒரு குழுவாக நீங்களும் நமது குழுமத்திலுள்ளோரும் வரப்போகிறீர்கள்” என்ற எண்ணத்துடன் ஒரு தேநீர் கடையை கண்டடைந்தேன். அருகிலிருந்த ஒரு டாஸ்மாக் கடையை பார்த்துவிட்டு சற்று இலகுவானேன் :)

பின்னர் மீண்டும் படபடத்து வந்து பார்த்தால் அப்போதும் யாரும் வரவில்லை. சீனு இன்னும் சில பேருடன் பேசிக்கொண்டிருந்தார். நான் பலவித கற்பனைகளில் ஈடுபட்டுக்கொண்டே என் பதட்டத்தை தொடர்ந்துகொண்டிருந்தேன். ஒருவேளை உங்களை பார்த்து பேசும் வாய்ப்பு கிடைத்தால் என்ன பேசுவது என்ற ஒத்திகைகள், ஒருவேளை ஏதாவது ஒரு காரணத்தினால் என் இரு சக்கர வாகனத்தில் உங்களை ரயில் நிலையத்திற்கோ அல்லது வேறு எங்குமோ அழைத்து செல்லும் வாய்ப்பு வந்தால் என்ன செய்வது என்பது போன்ற யோசனைகள். பின்னர் சா. கந்தசாமி அவர்கள் வந்தார்கள். அதன்பின் யுவன் சந்திரசேகர் அவர்களும், பூமணி அவர்களும் வந்தார்கள் என்று ஞாபகம்.

எனக்கு அருகில் வந்த ஒரு இளைஞர் எனக்கு வணக்கம் சொல்லிவிட்டு “நேரமாகுதுல்ல” என்று பேச்சை ஆரம்பித்தார். நானும் சற்று இலகுவாகி “ஆமா” என்றேன். “இந்த, சாரு நிவேதிதாங்குறாங்களே? அவர் இவர்தானா?” என்று யுவனை சுட்டிக்காட்டி கேட்டார்! யுவனின் பெயரை மட்டும் உங்கள் இணையதளத்தில் அடிக்கடி பார்த்திருக்கிறேன். ஆனால் இவர்தான் யுவன் என்று தெரியவில்லை. சாரு அவர்களை புகைப்படத்திலும், தொலைக்காட்சியில் ஒரு முறையும் பார்த்திருந்ததால், “இல்லை இவர் வேறு யாரோ” என்று சொன்னேன். பிறகு ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் சுதாரித்து “ஒரு வேளை இவர்தான் சாருவோ?” என்று யுவனையே சற்று நேரம் உற்று பார்த்தேன். குழப்பம்தான் வந்தது. அந்த இளைஞரிடம் “தெரியலைங்க” என்று சொல்லிவிட்டு பின் எதற்கும் இருக்கட்டும் என்று அவரிடமிருந்து கொஞ்சம் தள்ளி நின்றுகொண்டேன்.

அதன் பின்னர்தான் நீங்கள் வந்தீர்கள். நீங்கள் வந்திறங்கிய காரை பார்த்ததும் என் இருசக்கர வாகன கற்பனைகளை கலைத்துவிட்டு உங்களை கவனிக்க ஆரம்பித்தேன். மன்னித்துக்கொள்ளுங்கள், நேர்மையாக சொல்வதென்றால் ஒரு சிறு மனவிலகலும் பொறாமையும் வந்தது :) பின் அனைவருடனும் பேசிக்கொண்டிருந்தீர்கள். சீனு உங்களை நெருங்க அவரை அன்புடன் முதுகில் தடவிக்கொடுத்துக்கொண்டே அவருடனும் மற்றவர்களுடனும் பேசிக்கொண்டிருந்தீர்கள். பின்னர் இந்த சம்பவத்தை என் நண்பரிடம் விவரிக்கும்போது அவர் “சீனு இடத்தில் எப்போது நீங்கள் இருப்பீர்கள் என்றுதானே அந்த சமயம் நினைத்துக்கொண்டிருந்தீர்கள்?” என்று கேட்டார். புன்னகைக்க மட்டுமே முடிந்தது.

பின்னர் யுவன் மற்றவர்கள் என ஒவ்வொருவரும் வந்து உங்களுடன் பேசிக்கொண்டிருக்க, நான் மெதுவாக வாயிற்படியருகில் வந்து நின்றுகொண்டிருந்தேன். அப்போது நீங்கள் அனைவரும் உள்ளே செல்ல ஆரம்பிக்க, அரங்கசாமி என்னை கவனித்து புன்னகைத்தார். நானும் பதிலுக்கு சிரிக்க, “முதல் தடவை வர்றீங்களோ?” என்று கேட்டார். நான் “ஆமா. நான்…” என்று ஆரம்பிக்க, அவர் “ரொம்ப தயங்கி நிக்கிறீங்களே.. வாங்க வாங்க” என்று சொல்லி விட்டு உங்களை நோக்கி சென்றுவிட்டார். நான் சற்று ஏமாற்றத்துடன் ஆனால் ஒரு சிறு நம்பிக்கையுடன் பின்னால் வந்தேன். நீங்கள் அனைவரும் தேநீர் பருக ஆரம்பிக்க, நான் என்ன செய்வது என்று தெரியாமல் (விஷ்ணுபுரம் வட்ட உறுப்பினர்களுக்கு மட்டும்தான் தேநீரோ என்று ஒரு எண்ணம்) உள்ளே சென்று அமர்ந்தேன்.

பின்னர் நீங்கள் அனைவரும் உள்ளே வந்து அமர்ந்தீர்கள். பின்னர் நீங்கள் ஒருமுறை யாருடனோ பேசிக்கொண்டே என, மற்றொரு முறை அஜிதனை அழைத்துவர என இருமுறை வந்தீர்கள் என ஞாபகம். அதிலும் முதல்முறை நான் அமர்ந்திருந்த இருக்கைக்கு சற்றுமுன்னே நின்றுகொண்டு யாருடனோ பேசிக்கொண்டிருந்தீர்கள். ஒரேயொரு நொடி உங்கள் பார்வை என்னை வந்து தொட்டு சென்றது. “அதை பயன்படுத்தி புன்னகைத்திருக்கலாமே” என்று பிறகு என்னை நானே நொந்துகொண்டேன். பொதுவாகவே நான் யாரையாவது அல்லது எதையாவது பார்த்துக்கொண்டிருக்கும்போது கோபமாக அல்லது தூக்கக் கலக்கமாகத்தான் என் பார்வை இருக்கும் என்று சொல்வார்கள். நீங்களும் அப்படித்தான் நினைத்திருப்பீர்களோ என்று தோன்றிக்கொண்டேயிருந்தது. சிறிது நேரத்தில் கடலூர் சீனுவும், மற்றும் சிலரும் எனக்கு பின்வரிசையில் வந்து அமர்ந்து சிரித்து பேசிக்கொண்டிருந்தனர். கொஞ்சம் அப்படியிப்படி நான் திரும்பவில்லையே! அசையாமல் உட்கார்ந்திருந்தேன். பின்னர் விழா நிகழ்ச்சியில் மனதை செலுத்தினாலும் பெரும்பாலும் உங்களின் அசைவுகளையே கவனித்துக் கொண்டிருந்தேன். விழா முடிந்ததும் வந்து உங்களிடம் பேசலாமா என்று தோன்றியது. என்னவோ தெரியவில்லை. மறுபடியும் ஒரு மனவிலகல்.

மற்றவர்கள் உங்களிடம் வந்து சகஜமாக பேசிக்கொண்டிருந்ததை பார்த்தாலே எனக்கு அவ்வாறு தோன்றிக்கொண்டிருந்தது. ஆகவே உடனே கிளம்பி சென்றுவிட்டேன். வீட்டிற்கு செல்லும் வழியெல்லாம் நாமிருக்கும் இந்த நகரத்தில் சில கிலோமீட்டர்கள் தொலைவில் ஜெயமோகனும் இருக்கிறார் என்ற கிளர்ச்சியோடு சென்றேன். ஆச்சரியம் என்னவென்றால், அன்று காலைதான் அஞ்ஞாடி நாவலை புத்தக கண்காட்சியில் வாங்கி என் அம்மாவிற்கு கொடுத்திருந்தேன். இவ்விழா திரு.பூமணிக்கானது என்பதை கவனித்திருந்தால், கையோடு எடுத்துவந்து அவரிடம் ஆட்டோகிராஃப் வாங்கியிருக்கலாம். உங்களை பார்ப்பதை தவிர எதுவும் மண்டையில் ஏறவில்லை. மக்கு மாதிரி வந்து நின்றிருந்தேனோ என்று பின்னர் நொந்துகொண்டேன்.

பின்னர், தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை சார்பாக நடந்த கூட்டதிற்கு வந்தேன். இம்முறை கவனமாக காமிராவோடு. என் இருசக்கர வண்டியை நிறுத்திவிட்டு திரும்பினால் அருகிலேயே பத்ரி சேஷாத்ரி அவரது வண்டியை நிறுத்திவிட்டு என்னை பார்த்தார். அவரை அவ்வளவு அருகில் எதிர்பார்க்காததால், கொஞ்சம் தடுமாறிவிட்டேன். முதல்முறை வந்த படபடப்பு மறுபடியும் வந்துவிட்டது. சமாளித்து உள்ளே வந்து அமர்ந்து யாரேனும் தெரிந்தவர்கள் இருக்கிறார்களா என்று பார்த்துக்கொண்டேயிருந்தேன். செந்தில் குமார் தேவன் வந்தார் என்று நினைக்கிறேன். மற்ற யாரையும் தெரியவில்லை. இம்முறை அரங்கத்தில் கூட்டம் இருந்ததால் கொஞ்சம் சௌகரியமாக உணர்ந்தேன்.

அருகிலிருந்த ஒருவர் தனது கைபேசியில் வெண்முரசை படித்துக்கொண்டிருப்பதை பார்த்து “இவர் நம்மை எதுவும் கேட்டுவிடுவாரோ” என்று பயந்து அவர் பக்கம் திரும்பாமலே இருந்துவிட்டேன். சிறிது தாமதமாக கடலூர் சீனு மற்றும் சிலர் சூழ வந்து சேர்ந்தீர்கள். ஏற்கனவே காமிராவை தயார் நிலையில் வைத்திருந்தேன். நீங்கள் ஒருமுறை (அறம் அறக்கட்டளை நிகழ்ச்சி என்று நினைவு) ஒரு புகைப்படக்காரரை சற்று கடுமையாக “அப்புறம் எடுத்துக்கொள்ளலாம்” என்று சொன்னது நினைவு வந்து, ரொம்ப தயங்கி, கவனமாக ஃப்ளாஷ் இல்லாமல் சில புகைப்படங்கள் எடுத்துவிட்டு அமைதியாகிவிட்டேன். அப்போதுகூட ஒருமுறை புகைப்படம் எடுத்தவுடன் நீங்கள் கவனம் கலைந்து என் பக்கம் பார்த்தீர்கள். அந்த நிகழ்ச்சியிலும் உங்கள் அருகில் கூட வராமல் சென்றுவிட்டேன். அந்த புகைப்படங்களை இங்கு இணைத்திருக்கிறேன். ஜெயமோகன் எழுச்சியுரையாற்றினார் என்ற தலைப்புக்கு யாரேனும் புகைப்படங்கள் கேட்டால் இவற்றை தரலாம் :)

அதன் பின்னர்தான் சற்றும் எதிர்பாராத சூழ்நிலையில் கோவையில் உங்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. கோவை என் மனைவியின் ஊர். சில காரணங்களுக்காக கோவை வரும் திட்டம் இருந்தபோது, உங்கள் கீதை பேருரை அறிவிப்பு வந்தது. சரி வரலாம் என்று பார்த்தால் முடியவில்லை. பின்னர் நாங்கள் திட்டமிட்ட அதே தேதியன்று விஷ்ணுபுரம் விருது விழா அறிவிக்கப்பட்டிருந்ததை கவனித்தேன். ஆனால் அதற்கு முந்தைய வாரத்தில் என் தந்தைக்கு உடல்நலமில்லாமல் போனதால், விழாவிற்கு முதல்நாள் இரவே சென்னை திரும்புமாறு ஆகிற்று. பின்னர் மனைவி குழந்தைகளை திரும்ப கூட்டிக்கொண்டுவர திட்டமிட்டபோது உங்களின் சங்கரர் உரை அறிவிப்பு வெளியானது. ஆனால் மறுபடியும் சிக்கல். நிகழ்ச்சிக்கு முந்தின நாள் இரவு நாங்கள் கோவையிலிருந்து திரும்புவதாக திட்டம். அட போங்கடா என்று நொந்திருந்தேன். முதல் நாள் மாலை என் இளைய மகளுக்கு உடல்நலமில்லாமல் போகவே பயணத்தை ரத்து செய்யவேண்டியதாயிற்று. ஆனால் நிகழ்ச்சிக்கும் வரமுடியுமென்று தோன்றவில்லை. ஆச்சரியகரமாக ஞாயிற்றுக்கிழமை மதியம் வாக்கில் என் மகள் இயல்பு நிலைக்கு ஓரளவு திரும்பியதால், அடித்து பிடித்துக்கொண்டு மாலை உங்கள் நிகழ்ச்சிக்கு வந்துவிட்டேன்.

வழக்கம்போல அரைமணி நேரம் முன்னால் வந்து காத்திருந்தேன். இம்முறை நிச்சயம் இயல்பாக இருப்பேன் என்று நம்பிக்கையுடன் காத்திருந்தபோது, திரு. நாஞ்சில் நாடன் அவர்கள் வந்து எனக்கு இரு வரிசைகள் முன்பு அமர்ந்தார். வழக்கம்போல் பதட்டம். இருந்தாலும் “இப்படி இருந்தால் சரிப்பட்டு வராது” என்று எண்ணி அவரிடம் பேசலாம் என்று எழப்போனேன். அதற்குள் சிலர் வந்து அவரிடம் பேச, அப்படியே அமர்ந்துவிட்டேன். பின்னர் பாட்டு நிகழ்ச்சிகள் ஆரம்பிக்க நாஞ்சில் நாடன் மேல் ஒரு கண்ணும், வாசலில் ஒரு கண்ணுமாக கவனித்துக்கொண்டிருந்தேன். வழக்கம்போல் கடலூர் சீனுவும் மற்றோரும் சூழ வந்தீர்கள். மேடையிலிருந்த ஆடம்பர ஆசனத்தை பார்த்து சற்று குழம்பி, நீங்கள் அதில் அமர மாட்டீர்களே என்று கணித்தேன். அதே சமயம் அமர்ந்தால் அட்டகாசமாக இருந்திருக்கும். நான் எண்ணியது போலவே அதை புறக்கணித்து நின்றபடி பேச ஆரம்பித்தீர்கள். ஒரு பெருமிதம் கலந்த சிரிப்புடன் (உங்களை கணிக்க முடிந்துவிட்டதே) பேச்சை கவனிக்க தயாரானேன். “குரு நித்ய சைதன்ய யதி இந்த ஆசனத்தில் அமர்ந்திருப்பதாக எண்ணி உரையை ஆரம்பிக்கிறேன்” என்றதும் என் பெருமிதங்கள் கரைந்து அதே சமயம் நெகிழ்ந்தும் போனேன்.

உரை மிகவும் நன்றாக இருந்தது. நீங்கள் சொன்ன உவமைகளை மிகவும் ரசித்தேன். நிறைய இடங்களில் கண்கள் கலங்கி துடைத்துக்கொண்டு கேட்டுக்கொண்டிருந்தேன். அறிபவர், அறிதல், அறிபடுபொருள் ஆகியவற்றை பற்றி நீங்கள் மாமர உவமையுடன் விளக்கியது ஆகியவை மிகவும் நன்றாக இருந்தது. இரு நாட்களுக்கு முன் ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது உங்கள் உரையின் இந்த பகுதிகளை எளிதாக அவருக்கு சொல்லமுடிந்தபோது, உங்கள் உரை நன்றாகவே என் மனதில் இறங்கியிருப்பதை உணர்ந்தேன். என்னதான் நீங்கள் அந்த ஆசனத்தில் அமராவிட்டாலும், அதற்கு நேர் முன்னால் நின்று பேசியதை பக்கத்தில் வீடியோவில் பார்த்தபோது நீங்கள் அதில் அமர்ந்திருப்பதைப் போன்றே தோற்றமளித்தது. நன்றாகவும் இருந்தது! :)

அருகில் ஒரு இளைஞர், “பாரதம் அணுகுண்டுகளை அந்த காலத்திலேயே பயன்படுத்திக்கொண்டிருந்தது” என்ற ரீதியில் எழுதப்பட்டிருந்த ஒரு புத்தகத்தை நீங்கள் வருவதற்குமுன் ஆழ்ந்து படித்துக்கொண்டிருந்தார். சௌந்தர்ய லஹரியும் பஜகோவிந்தமும் சங்கரர் எழுதியதல்ல என ஏற்கனவே உங்கள் தளத்தில் நீங்கள் எழுதியதை படித்திருந்ததால், உங்கள் உரை நிச்சயம் அவரை சீண்டப்போகிறது என்று அவரையும் அவ்வப்போது ஓரக்கண்ணில் பார்த்துக்கொண்டிருந்தேன். பெரும்பாலும் அமைதியாக இருந்தவர், இக்கால இளைய சமுதாயம் வெறும் காலிச்சட்டியாக இருக்கிறது என்று நீங்கள் சொன்னபோது கனிவுடன் ஆமோதித்தார். இந்தப்பக்கம் இருந்தவர் ஒரு சுயமுன்னேற்ற நூலை நீங்கள் வரும்முன் படித்துக்கொண்டிருந்தார். அவரிடம் பெரிய மாறுதல்களில்லை. நடுவில் ஃபோன் பேசிக்கொண்டு நேர மேலாண்மையில் பிஸியாக இருந்தார். பின்னர் விழா முடிந்தவுடன், பேசவேண்டாம் ஆனால் உங்கள் அருகில் சற்று நின்றுவிட்டு போகலாம் என்று நெருங்கி நின்றுகொண்டிருந்தேன்.

நிறையபேர் உங்களை பாராட்டியது மனதிற்கு மிகவும் இனிமையாக இருந்தது. நடுவில் ஒருவர் உங்களிடம் வெள்ளையும் சொள்ளையுமாக வந்து அதிகாரமாக பேசிக்கொண்டிருந்ததை பார்த்தபோது சற்று கோபத்துடன் நெருங்கிவந்தேன். அவர் கேட்டது எனக்கு சரியாக காதில் விழவில்லை. நீங்களோ பொறுமையாக “நான் அந்த அளவிற்கு யோசிக்கவில்லை” என்று சொன்னது மட்டும் காதில் விழுந்தது. பின்னர்தான் அவர் சங்கரரின் கூடுவிட்டு கூடுபாய்ந்த கதையை கேட்டார் என்று பிறர் சொல்லி தெரியவந்தது. பின்னால் வந்த ஒரு இளைஞனும் நானும் “பாண்டிச்சேரி மொண்ணை மாதிரி கோவை மொண்ணைன்னு ஒரு கட்டுரை எழுதப்போறார்” என்று சொல்லி சிரித்தோம்.

பின்னர் வெளியில் வந்து நீங்கள் பேசிக்கொண்டிருந்தபோது தயக்கத்துடன் வந்து நின்றேன். அப்போது சீனு யாரிடமோ பேசிவிட்டு ஒதுங்க, “முதலில் இவரிடம் பேசுவோம். நாம் நக்கலாக முன்னர் எழுதியற்கு இது ஒரு மன்னிப்பாக இருக்கட்டும்” என்று அவரிடம் சென்று அறிமுகப்படுத்திக்கொண்டு பேச ஆரம்பித்தேன். அவர் “குழுமத்தில் இருக்கீங்களா” என்று கேட்க, “அப்பாடா. நாம் எழுதியது இவருக்கு நினைவில்லை” என்று தைரியமாக பேச ஆரம்பித்தேன். அடுத்தடுத்து ஷிமோகா ரவி, அரங்கசாமி, ஈரோடு கிருஷ்ணன் (இன்னும் சிலரின் பெயர் நினைவிலில்லை) என எல்லோரும் வந்து பேச ஆரம்பிக்க இயல்பாகிவிட்டேன். சீனுவே தானாக உங்களை காட்டி “சார்கிட்ட பேசிட்டீங்களா” என்றார். நான் “உங்ககிட்ட வந்து பேசுறதுக்கே எனக்கு படபடப்பா இருக்கு. இதுல நான் எங்க அவர்கிட்ட போய் பேச” என்றேன். “அதெல்லாம் ஒன்னும் இல்ல. போய் பேசுங்க” என்றார். அடுத்த நாள் நீங்கள் கோவையிலிருந்தாலும், பிஸியாக இருப்பீர்கள் என்று அவர் சொன்னதால், பின்னர் ஒருவழியாக காரில் ஏற இருந்த உங்களிடம் வந்து பேச ஆரம்பித்தேன்.

”நான் கணேஷ் பெரியசாமி. உங்களுக்கு முன்னாடி கடிதம்லாம் எழுதியிருக்கேன். துக்ளக் சோ தொடர்பா. இது மனைவியோட ஊர். வந்தப்போ உங்க பேச்சை கேட்க முடிஞ்சது” என்றெல்லாம் பேச தயார் பண்ணிக்கொண்டு வந்தால், நீங்கள் நான் என் பெயரை சொன்னவுடன் “நீங்கதானா அது? கடிதம்லாம் எழுதியிருக்கீங்களே” என்று சொல்ல, என் மூளை செயலிழந்துவிட்டது. :) திக்கி திணறி “நீங்க என்னைய ஞாபகம் வச்சுருக்கிறதே எனக்கு பெரிய கௌரவம் ஸார்” என்று மட்டும் சொல்ல முடிந்தது. தொடர்ந்து இயல்பாக நீங்களும் மற்றவர்களும் என்னிடம் பேசியபடியே செல்ல எனக்கு அது ஒரு கனவு போல் இருந்தது. பின்னர் உங்களிடம் விடைபெற்று திரும்பும்போது மிகவும் சந்தோஷம் நிரம்பியிருந்தது. என் மனைவியை உடனே தொடர்பு கொண்டு உங்களிடம் பேசியதை பகிர்ந்துகொண்டேன். பின்னர் பெற்றோரிடம், நண்பன் ஒருவனிடம் என்று திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டேயிருந்தேன். வீட்டிற்கு வரும் வழியில் ஒரு ஆட்டோ பின்னால் “நீங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்” என்பதை படித்து சிரித்தேன். அந்த இரவில் சிரிப்பு நிறைந்த வாயுடன் சென்று பெட்ரோல் போட்டுக்கொண்டு நன்றி சொல்லிவிட்டு வந்த என்னை அந்த பெட்ரோல் பங்க் ஊழியர் குழப்பமாகத்தான் பார்த்திருக்க வேண்டும்.

பின் அடுத்த நாளும் உங்களை பார்க்க ஹோட்டலுக்கு வந்தபோதுதான் கொஞ்சம் இயல்பாக உங்களை எதிர்கொண்டேன் என்று சொல்லவேண்டும். பின்னர் நீங்கள் இருக்கும் அறைக்கு வந்தபோதும் உங்களிடம் எதுவும் பேச தோன்றவில்லை. நீங்கள் வெகுவேகமாக தட்டச்சு செய்வீர்கள் என்று ஒரு முறை உங்கள் தளத்தில் சொல்லியிருந்தீர்கள். மடிக்கணினியோடு உங்களை பார்த்தபோது, அதை பார்ப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கபோகிறது என்று ஆர்வமாக பார்த்தேன். நான் பார்த்த நேரத்தில் எதையோ எடிட் செய்துகொண்டிருந்தீர்கள். சற்று ஏமாற்றமாகிவிட்டது. பின்னர், வெளியில் அந்த ஹாலுக்கு வந்து சீனு, கிருஷ்ணன், மீனாம்பிகை, ராஜமாணிக்கம் மற்றும் சிலரோடு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். கிருஷ்ணன் இயல்பாக என்னையும் பேச்சில் உள்ளே கொண்டுவந்தார். ஆனால் நான்தான் அவர் கேட்ட எளிய கேள்விகளுக்குக்கூட திணறி திணறி பதில் சொல்லிக்கொண்டிருந்தேன். ஏன் என்று பின்னர் யோசித்தபோது, இம்மாதிரி வேறு யாரிடம் பேசியதேயில்லை என்று அறிந்தேன். ஒருபக்கம் கஷ்டமாக இருந்தாலும், இப்போதாவது இப்படி ஒரு நண்பர்கள் குழு கிடைத்ததே என்று சந்தோஷமாக இருக்கிறது.

பின் நீங்கள் வந்து அமர்ந்து எங்களுடன் பேசிக்கொண்டிருந்தது எனக்கு ரொம்பவே பெருமையாக இருந்தது. பல விஷயங்களை தொட்டு தொட்டு பேச்சு சென்றுகொண்டேயிருந்தது. இடையிடையே சிறு சிரிப்புகள் என்று லேசாக ஆகிக்கொண்டேயிருந்தேன். யோசித்து யோசித்து ஒரு கேள்வியும் கேட்டேன் (ஆத்மானந்தர் பற்றி). பின்னர் என் மகளை திரும்ப மருத்துவரிடம் காட்ட செல்லவேண்டியிருந்ததால், ஆறுமணியளவில் கிளம்ப வேண்டியதாயிற்று. உங்கள் பேச்சை கலைக்க விரும்பாமல், மெலிதாக கிருஷ்ணனிடம் மட்டும் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டேன். வெளியில் வந்து வண்டியை எடுக்கும் முன், ஒலித்துக்கொண்டிருந்த உங்கள் குரலை சில விநாடிகள் நின்று காதில் ஏற்றிக்கொண்டு கிளம்பிவிட்டேன். ஒருவரிடமும் கைபேசி எண் வாங்கிக்கொள்ளவில்லையே என்றும், சீனுவிடம் சொல்லிக்கொண்டு வந்திருக்க வேண்டும் என்றும் பிறகு தோன்றியது. என் மனைவி “ஜெயமோகன்கிட்ட சொல்லாம வந்துட்டியே? அவர் என்ன நெனச்சுக்குவார்” என்று கடிந்துகொண்டாள். அதெல்லாம் அப்போதும் சரி இப்போதும் சரி ஒரு பொருட்டாகவே இல்லை.

இப்போது கொஞ்சம் தைரியம் வந்திருக்கிறது. இனிமேல் சென்னையில் நடக்கும் வெண்முரசு கூடுகைக்கு செல்வேன் என நினைக்கிறேன். உங்களை ஏழு வருடங்களாக தெரியும் என்றாலும் கடந்த மூன்று வருடங்களாகத்தான் தீவிரமாக படித்துக்கொண்டு வருகிறேன். முதலில் உங்கள் தளத்தில் உள்ள கட்டுரைகள், பின்னர் அறம் வரிசை கதைகள், ஊமைச்செந்நாய் என்று உள்ளே வந்துவிட்டேன். ஒரு ஆர்வத்தில் விஷ்ணுபுரம் வாங்கி படித்து உள்ளே செல்லமுடியாமல் வைத்திருக்கிறேன். வெண்முரசில் காண்டீபம் தவிர மற்றவற்றை படித்துக்கொண்டுவருகிறேன். மழைப்பாடலை மட்டுமே எனக்கு நெருக்கமாக என்னால் உணரமுடிகிறது. மற்றவை அனைத்துமே திரும்ப ஒருமுறை படிக்கவேண்டும் என்று வைத்திருக்கிறேன். காண்டீபம் ஒருபுறம், வெய்யோன் ஒருபுறம் என படித்துக்கொண்டிருக்கிறேன். என்றாவது ஒரு நாள் நீங்கள் எழுதும் அனைத்தையும் படித்து புரிந்துகொண்டுவிடுவேன் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

மிக்க அன்புடன்,
கணேஷ் பெரியசாமி.

அன்புள்ள கணேஷ் பெரியசாமி

அன்று உங்களைச் சந்தித்தது நிறைவளித்தது. பொதுவாக நான் இவ்வகை நிகழ்ச்சிகளில் தொடர் உரையாடலில்தான் இருப்பேன். ஏதேனும் ஒரு தலைப்பில் பேசத்தொடங்கி பேச்சு அதுவே சென்றுகொண்டிருக்கும். அந்தத்தலைப்பு மட்டுமே முக்கியமே ஒழிய மனிதர்கள் அல்ல. ஆகவே பலசமயம் புதியவர்களைத் தவறவிட்டுவிடுகிறேன்.

மேலும் நிகழ்ச்சிகளில் சந்திப்பதற்கும் ஓர் எல்லை உள்ளது. அது தொடர்ச்சியாக என்னுள் ஓடிக்கொண்டிருக்கும் பதற்றத்தின் விளைவாக இருப்பதனால் ஆழமான பதிவாக இருக்காது

நாம் மேலும் சந்திப்போம்

ஜெ

ஜெ,

2015 பலவகையினில், எதிர்பாரா நிகழ்வுகளினூடாக செழுமையான அனுபவங்களை அளித்துள்ளது. குறிப்பிடத்தக்கவையாக, தங்களை ஏப்ரல் 12 அன்று முதல்முறையாக சந்தித்தது..அதைத் தொடர்ந்து ஈரோடு கிருஷ்ணன் அவர்களின் நட்பு…விஷ்ணுபுரம் விழா சங்கமம். ஒவ்வொரு முறையும் இணையத்தில் மட்டுமே பார்த்து மகிழும் (ஏக்கம் கொள்ளும்)இந்நிகழ்வினில், பங்கெடுக்கப்போகும் மனநிலை அனைத்து செயல்களிலும் வெளிப்படத் தொடங்கியது. நாமக்கல் நண்பர்கள் சனிக்கிழமை காலையே அங்கிருக்க வேண்டுமென்று முடிவு செய்திருந்தோம். வெள்ளிக்கிழமை கோழிக்கோட்டிலிருந்து பாபு அவர்கள் நேராக கோவை வருவதாகக் கூறியது, ஓர் எதிர்பாரா மகிழ்ச்சி. இவர் தற்போது குர்திஸ்தானில் பணிபுரிகிறார். 2008 முதல் 2011 வரை காங்கோவில் ஒன்றாக பணிபுரிந்தோம்.

இவர் தான் தங்கள் எழுத்துக்களை எனக்கு அறிமுகப் படுத்தியவர். சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் நாமக்கல்லிருந்து காரில் கிளம்பினோம். கிருஷ்ணன் பெருந்துறையில் நிற்பதாகச் சொன்னார். அவர் ஏறியதும் தொடங்கியது இலக்கிய விழா.உங்களின் பயண அனுபவங்கள், ஊட்டி காலை நடையின்போது நீங்கள் பேசியது என பகிர்ந்து கொண்டார். 11.30 மணியளவில் ராஜஸ்தானி நிவாஸிற்க்கு வந்து சேர்ந்தோம். மரபின் மைந்தன் முத்தைய்யா அவர்கள் அப்போது தான் வந்தார். உள்ளே நுழைந்தவுடன் அரங்கா அவர்கள் ஆரத்தழுவிக் கொண்டார். தொலைபேசியில் பேசும்போது கூறுவது போலவே “நண்பா” என்ற விளி. ஏகாந்தமாக இருந்தது. உள்ளே விழா நாயகருடனான விவாதங்கள் போய்க்கொண்டிருந்தது.

இது தான் நான் பங்கு கொள்ளும் முதல் இலக்கிய சந்திப்பு. எனவே செவி முதல் வாதமே உகந்ததாக இருந்தது.முகமறியா குழும உறுப்பினர்களை அடையாளம் கண்டது பரவசமாக இருந்தது. ஒவ்வொரு அமர்வும் ஓர் திறப்பென்றே சொல்வேன். புதிய கோணங்கள், சொல்லாட்சிகள்..நீங்கள் கூறிய மூன்று தளத்திலான கவிதை வாசிப்பு, கவிதையினை அணுக புதிய பாதையினை இட்டுத் தந்தது. எழுத்தாளர்கள் செந்தில், முருகவேல் ஆகியோருடனான விவாதங்களின் போது, நண்பர்கள் எழுப்பிய கேள்விகள், அவர்களது வாசிப்பின் ஆழத்தை பறைசாற்றியது. ஜோடி குரூஸ்….அவரது ஆகிருதி, உடல் மொழி, நிமிர்ந்த நோக்கு, வலியையும் புன்னகையுடன் வெளிப்படுத்திய பாங்கு…வியந்து போனேன்.

உச்சம்….Wedge Bank. கடந்த ஒன்பது ஆண்டுகளில் பெரும்பாலான நாட்கள் கடலிலே கழித்திருக்கிறேன். அவரின்பால் ஈர்ப்பிர்க்கு அதுவும் ஓர் காரணமாக இருக்கலாம். ஆனால் மீனவ வாழ்க்கையினைப் பற்றி ஒன்றுமே தெரிந்து கொள்ளவில்லை என்று உரைத்தது. யுவன் அவர்களின் நிதானமான பேச்சு மிகவும் பிடித்தமானதாக இருந்தது. தேவதச்சன் அவர்களுடனான அனுபவங்களில் ஆசிரிய மாணவ உறவு அழகாய் வெளிப்பட்டது. நீண்ட நாட்கள் கழித்து நாஞ்சில் நாடன் அவர்களுடன் உரையாடினோம். ஷண்முகவேலுடன் பேசிக்கொண்டிருந்தது மகிழ்ச்சி அளித்தது.அவரது மறுவரவின் பரவசத்தை வாழ்த்துக்களுடன் தெரிவித்துக்கொண்டோம்.

சனிக்கிழமை மாலை உங்களுடனான மாலை நடை ஓர் கனவு அனுபவம்.தங்கும் விடுதிக்கருகில் தேநீர் கடைகள் இல்லாதது பெருஞ்சிறப்பு. கேளிக்கை பேச்சினூடாக…முடிவிலியினை நோக்கி நடக்கலாமே என்ற ப்ரேமை. விஜய்சூரியன் வட்டமடித்துக் கொண்டேயிருந்தார்.அவரது கவனம் முழுவதும் ஒருங்கிணைப்பிலேயே இருந்தது..அனைவருக்கும் ஓர் புன்னகை பரிசாக. அமைச்சர் சுரேஷர் நான் என்றேன்றும் உயரத்தில் வைக்கும் ஓர் ஆளுமையாக நெஞ்சில் நிறைந்து விட்டார். அவரது வாசிப்பு, ஒவ்வோர் அமர்விலும் அவர் எழுத்தாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசியது தனிச்சிறப்பு. அமர்வுகளின் இடைவெளிகளிலும் நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ, அங்கு ஓர் நிற்பு…ஒர் குறு விவாதம். இரவு பாட்டுக் கச்சேரி…பார்வையாளனாக அல்லாமல் பங்கேற்பாளனாக உணர்ந்தேன். ஆனந்த் மற்றும் அமைச்சருக்கு சிறப்பு நன்றி.

கச்சேரி முடிந்தவுடன், கிருஷ்ணன் மற்றும் அஜிதனுடன் மீண்டும் ஓர் நடை.இரவு 11.45..நிலவு மற்றும் வெண்முரசு…உணர்ச்சிகரமான உரையாடல்கள்…12.30 திரும்பி..மண்டபத்தின் வெளியிலேயே அரட்டை தொடர்ச்சி. மாலை விருது விழாவில் உங்கள் பேச்சு ஓர் வினையூக்கி.ஆவணப்படத்தின் நோக்கம் தெளிவாக வெளிப்பட்டது. உங்கள் வரிகள் தான் பொருத்தமாக அமைகிறது. “வாழ்க்கையில் நாம் எதுவோ, அது மட்டுமாக நாம் இருக்கும் தருணங்களில் மட்டும் நம்மில் நிறையும் குதூகலம்..நாம் உணர முடியும்.அப்படி உணரும் பலர் கொண்ட சூழலில் இருக்கும் ஆனந்தம் எளிதில் ஒவ்வொருவரையும் தொற்றிக் கொள்கிறது.” இந்த இரு நாட்களிலும் ஒருவரிடமும் ஓர் முகச்சுளிப்பு இல்லை.அனைவருக்குள்ளும் ஒரே மனநிலை…அது இலக்கியம் மட்டுமேயென்று எண்ணியிருந்தேன்..மற்றொன்றும் உண்டென்று பின்னரே உணர்ந்தேன். அன்பு…அது மட்டுமே இவ்வாறான சூழலை உருவாக்க முடியும்.

அன்புடன்,

மகேஷ்.

 

அன்புள்ள மகேஷ்

நலமாகச்சென்றுசேர்ந்துவிட்டீர்கள் அல்லவா?

கோவைச் சந்திப்பு இத்தனைநாட்களுக்குப்பின்னரும் பெரும் எழுச்சியை அளித்துக்கொண்டே இருக்கிறது. ஆச்சரியம்தான். ஒவ்வொருமுறையும் இந்த விரிவு உருவாகிறது. அற்புதமான நாட்கள்

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 23
அடுத்த கட்டுரைசங்கரர் உரை கடிதங்கள் 6