வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 27

பகுதி நான்கு : கூற்றெனும் கேள் – 4

கர்ணன் மீண்டும் தன் அறைக்குள் செல்ல சிவதர் உள்ளே வந்தார். “தந்தை சொல்வதிலும் உண்மை உள்ளது” என்றான் கர்ணன் தலைகுனிந்து நடந்தபடி. “உண்மையில் கருவுற்றவள் விருஷாலி. அச்செய்தியை இன்னும் அங்க நாடு அறியவில்லை.” சிவதர் “இல்லை அரசே, அச்செய்தியை முறைப்படி நமக்கு அறிவிக்க மறுத்தவர் அரசி. சொல்லப்போனால் இன்னும் கூட அரசியிடமிருந்து நமக்கு செய்தி வரவில்லை” என்றார். “ஆம், அது அவளது அறியாமை. அதை கடந்து சென்று அவளை நான் சந்தித்திருக்க வேண்டும்” என்றான் கர்ணன். “மைந்தர் பிறக்கவிருப்பதை முறைப்படி அங்க நாட்டுக்கு அறிவிப்பதும் என் கடனே.”

சிவதர் “அரசே, தான் கருவுற்றிருக்கும் செய்தியை கொழுநரிடம் அறிவிப்பது எப்பெண்ணுக்கும் பேருவகை அளிக்கும் தருணம். தன் அறியாமையால் அதை மறைத்துக்கொண்டவர் அரசி. தான் இழந்ததென்ன என்றுகூட அவர் இன்னும் உணரவில்லை. ஒருபோதும் உணரப்போவதும் இல்லை” என்றார். கர்ணன் நீள்மூச்சுடன் “அதைப் பற்றித்தான் நானும் எண்ணிக் கொண்டிருந்தேன். இவ்விரு நாட்களும் ஒரு தந்தையென நான் என்றும் நினைவுற வேண்டியவை. என் உள்ளத்தில் மைந்தர் நினைவு ஊறிப்பெருக வேண்டிய நேரம். ஆனால் சிதறிப் பறந்து எங்கெங்கோ சென்று கொண்டிருக்கிறது என் சித்தம். ஒருமுறை கூட பிறக்கவிருக்கும் என் மைந்தனைப்பற்றி நான் எண்ணவில்லை” என்றான்.

சிவதர் “ஹரிதர் நேற்று மூத்தஅரசியிடம் பேசிய நிமித்திகர்களை வரவழைத்து உசாவினார். மூத்தஅரசியின் குருதியில் பிறக்கும் மைந்தன் அங்க நாட்டை ஆள்வது உறுதி என்றார் அவர்” என்றார். கர்ணன் “அது எவ்வாறு? இளவரசென அவனுக்கு பட்டம் கட்டுவதே நிகழ வாய்ப்பில்லை” என்றான். “அது நமது கணிப்பு. நிமித்திகர் கணிப்பது நம் அரசியலை அல்ல. காலத்தை ஆளும் ஊழை” என்றார் சிவதர். “அப்படியென்றால்…” என்று கேட்டபடி கர்ணன் தன் பீடத்தில் எடையுடன் அமர்ந்தான். “பெருவீரர்கள் தடையற்றவர்கள். அங்க நாட்டின் அரசமுறைமை, நமது முடிவுகள், குடிவழக்கங்கள் என்னும் அனைத்து எல்லைகளையும் கடந்து இவ்வரியணையை தங்கள் மைந்தர் அடையக்கூடும்” என்றார் சிவதர்.

“அவ்வண்ணம் நிகழட்டும்” என்றான் கர்ணன். சிவதர் “நிமித்திகரின் அக்கூற்றைத்தான் இளைய அரசி அஞ்சுகிறார்” என்றார் சிவதர். “நிமித்திகர் அவளுக்கும் சில நாட்குறிகளை சொல்லியிருப்பார்களே?” “ஆம். அவர் பெறப்போகும் முதல் மைந்தர் அங்க நாட்டின் இளவரசராக பட்டம் சூட்டப்படுவார் என்று நிமித்திகர் சொல்லியிருக்கிறார்கள்” என்றார் சிவதர். “மணிமுடி சூட மாட்டானா?” என்றான் கர்ணன். “அதற்கு வாய்ப்பில்லை. ஏனெனில் அவருக்கு மூன்று கண்டங்கள் உள்ளன என்கின்றனர் நிமித்திகர். அச்செய்தியால் இளைய அரசி உளம் கலங்கி இருக்கிறார்.” கர்ணன் “கண்டங்களா?” என்றான். சிவதர் “ஷத்ரியர் பிறக்கையில் முதலில் நோக்குவது முழுவாழ்நாள் உண்டா என்றே” என்றார்.

கர்ணன் “இவை அனைத்தையும் முன்னரே அறிந்து கொள்வதனால் என்ன நன்மை?” என்றான். “நிமித்த நூல் அறிவுறுத்துகிறது, எச்சரிக்கிறது, வழிகாட்டுகிறது. ஆனால் ஊழின் பல்லாயிரம் கைகள் நமது ஆட்டக்களத்தில் பகடைக் காய்கள் கொண்டு அமர்ந்திருக்கின்றன எனும்போது அவற்றால் எந்தப் பயனும் இல்லை” என்றான். “நிமித்த நூலை பொருட்டாக எண்ணலாகாதென்றே என் உள்ளம் சொல்கிறது. அது ஊழுக்கு அடிபணிவதாகும். நான் நிமித்திகருடன் உரைகொள்ள விழையவில்லை. என்னை இப்பெருக்குக்கு ஒப்படைத்துக் கொள்ளவே எண்ணுகிறேன்.”

சிவதர் “தோற்பதே முடிவு என்றாலும் ஊழுடன் ஆடுவதே வீரரும் அறிவரும் யோகியரும் ஏற்கும் செயல்” என்றார். கர்ணன் “ஆம், அது உண்மை” என்றான். பின்பு “பார்ப்போம்… நீங்கள் முன்பு சொன்னதைப்போல ஓர் அரசனாக நான் எனது அம்புகள் எட்டும் தொலைவுக்கு மேல் நோக்குவதை மறுக்கிறேன்” என்றான். சிவதர் “இத்தருணத்தில் அது நல்ல வழிமுறை என எண்ணுகிறேன். இரு அரசியரும் அவர்களின் ஆடலை முடிக்கட்டும். அதன்பின்னர் நாம் செய்வனவற்றை சூழலாம்” என்றார். “இரு துணைவியரின் கருவுறலையும் அறிவித்துவிட்டு நீங்கள் இங்கிருந்து கிளம்பலாம். அதற்கு அஸ்தினபுரியின் தூது ஒரு நல்ல தூண்டு.”

வாயிலில் ஏவலன் வந்து நின்று தலைவணங்கினான். சிவதர் திரும்பி புருவத்தை தூக்க அவன் “அமைச்சர் செய்தியனுப்பினார்” என்றான். கர்ணன் சொல்லும்படி கைகாட்டினான். “அமைச்சர் ஹரிதர் அஸ்தினபுரியின் இளவரசர் சுஜாதருடன் தங்களை சந்திப்பதற்காக வந்து கொண்டிருக்கிறார்” என்றான். “வரச்சொல்” என்று சொன்னதுமே கர்ணன் முகம் மலர்ந்து “இளையவன் அழகன். அவனை ஒரு காலத்தில் என் ஒற்றைக்கையில் தூக்கி தலைமேல் வைத்து விளையாடியிருக்கிறேன்” என்றான். “அவர்கள் ஒவ்வொருவரும் மூத்தவரைப் போலவே உருக்கொண்டு வருவது விந்தை” என்றார் சிவதர். “வெவ்வேறு அன்னையருக்குப் பிறந்தவர்கள். ஆனால் ஒற்றை அச்சில் ஒற்றி எடுக்கப்பட்டவர்கள் போல் உள்ளனர்”

கர்ணன் “அது குருதியால் மட்டுமல்ல எண்ணங்களாலும் அமைவது” என்றான். “அவர்களில் வாழும் ஆன்மா மூத்தவர் சுயோதனரைப்போல் ஆகவேண்டுமென்றே விழைகிறது. அது உண்டு உயிர்த்து தன்னை அவ்விதம் ஆக்கிக் கொள்கிறது.” சிவதர் “இனியவர், தங்கள் மேல் பெருங்காதல் கொண்டவர். அவையில் அமர்ந்திருக்கையில் தங்களை அன்றி பிற எவரையும் சுஜாதர் நோக்கவில்லை என்பதை கண்டேன்” என்றார். கர்ணன் “ஆம், நானும் அவனையே நோக்கிக் கொண்டிருந்தேன். கண்களால் நூறுமுறை தோள் தழுவிக்கொண்டிருந்தேன்” என்றான். பின்னர் நகைத்து “துரியோதனரை எனக்காக சிற்றுருவாக்கிப்  படைத்துப் பரிமாறியதுபோல் உணர்கிறேன் சிவதரே” என்றான்.

வாயிலில் வந்து நின்ற ஏவலன் “அஸ்தினபுரியின் இளவரசர், குருகுலத்தோன்றல் சுஜாதர்! அமைச்சர் ஹரிதர்!” என்று அறிவித்தான். கர்ணன் எழுந்து கைகளை விரிக்க கதவைத் திறந்து தோன்றிய சுஜாதன் விரையும் காலடிகளுடன் ஓடி வந்து குனிந்து அவன் காலடிகளைத் தொட்டு சென்னி சூடினான். கர்ணன் அவன் தோள்களைப் பற்றி தூக்கி நெஞ்சோடணைத்துக் கொண்டான். இறுக்கி நெரித்து அதுவும் போதாமல் அவனைத் தூக்கி பலமுறை சுழற்றி நிறுத்தினான். அவன் குழல் கற்றைகளைப் பற்றி தலையை இறுக்கி முகத்தருகே திருப்பி அவன் விழிகளை நோக்கி “வளர்ந்துவிட்டாய்” என்றான். கைகளால் அவன் கன்னங்களைத் தடவி “மென் மயிர் முளைத்துள்ளது… மீசை கூட” என்றான்.

“ஆம், ஒருவழியாக” என்றான் சுஜாதன். “எத்தனை நாள் ஏங்கியிருப்பேன் மூத்தவரே! தம்பியரில் எனக்கு மட்டும்தான் இன்னும் மீசை அமையவில்லை.” ஹரிதர் சிரித்தபடி “அங்க நாட்டை மிக விரும்புகிறார்” என்றார். கர்ணன் “எதையும் உண்டு அறிவதே கௌரவர் வழக்கம்” என்றான். ஹரிதர் “நான் சொன்னதும் அதையே” என்றார். சிவதர் சிரித்தபடி “இளையவர் ஊனுணவு மணத்துடன் இருக்கிறார்” என்றார். “இங்குள்ள முதலைகள் உணவுக்கு ஏற்றவை மூத்தவரே. மீன்போலவே வெண்ணிறமான ஊன். பளிங்கு அடுக்குகள் போல…” என்றான். “அல்லது தென்னங்குருத்து போல…” கர்ணன் “உணவைப் பற்றிப் பேசுகையில் கௌரவர்கள் கவிஞர்களும்கூட” என்றான்.

சிரித்தபடி ஹரிதர் “இங்கு சில நாள் தங்கிச் செல்லும்படி நான் சொன்னேன்” என்றான். “ஆம், நீ இங்கு சில நாள் இரு. உனக்கு வேண்டியதென்ன என்பதை ஹரிதர் இயற்றுவார்” என்றான் கர்ணன். “இல்லை மூத்தவரே, நான் தங்களுடன் வருகிறேன்” என்றான் சுஜாதன். “ஏன்?” என்றான் கர்ணன். “இந்நகரில் அழகிய பெண்களும் உள்ளனர் இளையோனே.” சுஜாதன் “ஆம், ஆனால் நான் உங்களுடன்தான் வருவேன்” என்றான். “அஸ்தினபுரிவிட்டு நீ வெளியே செல்வதே முதன் முறை அல்லவா?” என்றான் கர்ணன்.

“ஆம், மூத்தவரே. எல்லை கடந்தபின் கண்ட ஒவ்வொன்றும் என்னை எழுச்சி கொள்ளச் செய்தது. இந்நகரின் கோட்டை வாயிலைக் கண்டதும் நான் நெஞ்சு விம்மி அழுதுவிட்டேன். நான் காணும் முதல் அயலகக் கோட்டை இதுவே. ஆனால் எங்கள் அனைவருக்குமே அரசரும் நீங்களும் தோள் தழுவி அமர்ந்திருக்கும் காட்சி என்பது கருவறையமர்ந்த சிவனும் விண்ணுருவனும்போல. அதை நான் தவறவிடமாட்டேன். அஸ்தினபுரியில் நீங்கள் இருவரும் இருக்கும் அவையில் எங்கேனும் ஒரு மூலையில் இருந்து கொண்டிருப்பதையே விழைகிறேன்.”

சிவதர் அந்த உணர்ச்சியை எளிதாக்க “இவரும் கதாயுதம்தான் பயில்கிறாரா?” என்றார். சுஜாதன் திரும்பி “என் தோள்களைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது?” என்றான். கர்ணன் அவன் தோள்களில் ஓங்கி அறைந்து “மூத்தவருக்கு இணையாக உண்கிறாய், அதில் ஐயமே இல்லை” என்றான். “ஆம், மூத்தவரே. கிட்டத்தட்ட அரசருக்கு இணையாக உண்கிறேன். ஒருமுறை அவரே என்னைப் பார்த்து நான் நன்கு உண்பதாக சொன்னார்” என்றான் சுஜாதன். “அதனால் நீ கதாயுதமேந்துபவன் என்று பொருள் வரவில்லை. முதன்மைக் கதையை ஒற்றைக் கையில் ஏந்த முடிகிறதா?” என்றான் கர்ணன். “அப்படியெல்லாம் கேட்டால்… இல்லை… கேட்கக்கூடாதென்றில்லை… ஆனால் அப்படி கேட்கப்போனால் உண்மையில் அப்படி முழுமையாக சொல்லிவிடமுடியாது” என்றான் சுஜாதன்.

“சிறந்த மறுமொழி” என்றார் சிவதர் சிரித்தபடி. “நான் பயிலும் முறையில்தான் பிழை என ஏதோ இருக்கிறது. கதாயுதத்தை தூக்கி அடிப்பது எளிது. ஆனால் பிறர் நம்மை அடிப்பதை அதைக் கொண்டு தடுப்பதுதான் சற்று கடினமாக இருக்கிறது. எல்லா பயிற்சியிலும் மூத்தவர் என்னை அடித்து வீழ்த்துகிறார். இருமுறை நான் அரசரின் பெருங்கதாயுதத்தை தலைக்கு மேல் தூக்கியிருக்கிறேன்” என்றான் சுஜாதன். “பிறகு…?” என்றான் கர்ணன். “மூன்றாவது முறை அது என் தலையையே அறைந்தது. இன்னும் சற்று தோள் பெருத்தபின் அதை தூக்கலாம் என்று விட்டுவிட்டேன்.”

ஹரிதர் “ஒரு மாறுதலுக்காக நீங்கள் ஏன் கதாயுதம் இல்லாமலேயே பயிற்சியை மேற்கொள்ளக்கூடாது?” என்றார். அவர் கண்களில் சிரிப்பை நோக்கிய கர்ணன் “அதைத்தான் செய்கிறானே. உண்பதும் கதாயுதப் பயிற்சியின் ஒரு பகுதியே” என்றான். “ஆம்” என்றான் சுஜாதன். “என்னிடம் அதை துரோணரும் சொன்னார்.” “வா, அமர்ந்து கொள்!” அவன் தோளை வளைத்துக்கொண்டு தன் பீடத்தருகே கொண்டுசென்றான் கர்ணன். சுஜாதன் பீடம் ஒன்றை இழுத்து கர்ணன் அருகே போட்டு அமர்ந்து அவன் கைகளை தன் கைகளில் எடுத்துக் கொண்டு “மூத்தவரே, எத்தனை நாள் நான் கனவில் உங்கள் தோள்களை பார்த்திருக்கிறேன் தெரியுமா? ஆனால் இப்போது பார்க்கையில் உங்கள் தோள் அளவுக்கே என் தோள்களும் உள்ளன. என் கனவில் என்னுடையவை மிகச் சிறியனவாகவும் தங்கள் தோள்கள் யானையின் துதிக்கை அளவு பெரியவையாகவும் இருக்கின்றன” என்றான்.

பீடத்தில் அமர்ந்த ஹரிதர் பொதுவாகச் சொல்வதுபோல “கலிங்க இளவரசியை பார்த்தோம்” என்றார். “ஆம், பார்த்தோம்” என்று சொன்னான் சுஜாதன். “அங்கு அஸ்தினபுரியில் தங்களால் தூக்கி வரப்பட்டபோது எப்படி இருந்தார்களோ அப்படியே இருக்கிறார்கள்” என்றான். “இன்னும் அவர்களின் சினம் போகவில்லை. என்னைப் பார்த்ததும் ஒரு கணம் நான் துரியோதனர் என்றே நினைத்துவிட்டார். பிறகுதான் இளையவன் என்று தெளிந்தார். சில கணங்கள் அவர் கண்கள் கனிந்ததை கண்டேன். தன் மூத்தவர் சுதர்சனை எவ்வண்ணம் உள்ளார் என்றார். தமக்கை பானுமதியுடன் மகிழ்ந்து விளையாடி அமைந்திருக்கிறார் என்றேன். நீள்மூச்சுடன் ஆம், அறிந்தேன் அவளுக்கு உகந்த கணவனை அடைந்திருக்கிறாள். அதற்கும் நல்லூழ் வேண்டும் என்றார்.”

கர்ணன் “நீ என்ன சொன்னாய்?” என்றான். “உண்மைதான் என்று சொன்னேன். ஏனென்றால் அவர்களுக்கு உங்களை சற்றும் பிடிக்கவில்லை என்று எனக்கு அப்போதே தெரியும். இப்போது அது மீண்டும் உறுதியாயிற்று. அவர்கள் கருவுற்றிருக்கிறார்கள் என்ற செய்தியை நான் செல்லும் வழியிலேயே எண்ணிக்கொண்டிருந்தேன். பிடிக்காமல் எப்படி கருவுற முடியும் என்று அமைச்சரிடம் கேட்டேன். என் தலையை அறைந்து இளையோரைப்போல் பேசும்படி சொன்னார். உண்மையில் நான் இன்னும் சற்று முதிர்ச்சியுடன்தான் பேசவேண்டும் என்று ஒவ்வொரு முறையும் எண்ணிக் கொள்கிறேன். ஆனால் பேச ஆரம்பிக்கும்போது அத்தனை பேரும் சிரிக்கக்கூடிய ஒன்றை சொல்லிவிடுகிறேன்” என்றான் சுஜாதன்.

“நீ அப்படியே இன்னும் சில நாள் இரு” என்றான் கர்ணன். “கண்ணெதிரில் இளையோர் வளர்ந்து ஆண்மகன்களாவதை பார்ப்பதென்பது துயரளிப்பது. இனி உங்கள் நூற்றுவரில் எவரையுமே கையில் எடுத்துத் தூக்கி கொஞ்ச முடியாது என்று உன்னை முதலில் பார்த்தபோதே எண்ணினேன். அவ்விழப்பைக் கடப்பதற்கு நீங்கள் அனைவரும் ஆளுக்கு நூறு பேர் என்று மைந்தரை பெற வேண்டியுள்ளது” என்றான் கர்ணன். “பத்தாயிரம் கௌரவர்களா? கௌரவர்களால் ஆன ஒரு படையே அமைத்துவிடலாம் போலிருக்கிறதே!” என்றார் சிவதர். “ஏன்? அமைத்தால் என்ன? நாங்கள் ஆடிப்பாவைகள் என்கிறார்கள். முடிவின்றி பெருகுவோம்” என்றான் சுஜாதன்.

அந்த இயல்பான உரையாடலில் விடுபட்டுக்கொண்டே இருப்பதை உணர்ந்து “சுப்ரியை என்ன சொன்னாள்?” என்றான் கர்ணன். நேரடியாக அப்படி கேட்டிருக்கக்கூடாது என அவன் உணர்ந்த கணமே மேலும் நேரடியாக சுஜாதன் “அவர் என்னை அவமதிக்க விழைந்தார். என் முகம் நோக்கி ஒற்றைச் சொற்றொடரை மட்டுமே பேசினார். மற்ற ஐந்து சொற்றொடர்களையும் தன் செவிலிக்கும் சேடிக்கும் ஆணைகளிட்டபடி பேசினார். நான் அஸ்தினபுரியின் முறைமை வணக்கத்தை அவர்களுக்கு தெரிவித்தபோது நன்று என்று சொன்னதுமே மறுமுறைமைச் சொல் அளிக்காமல் திரும்பிக் கொண்டு அருகே நின்ற சேடியிடம் எதற்காகவோ சினந்தார்” என்றான்.

“இளையவனே” என கர்ணன் சொல்லத் தொடங்க “நீங்கள் அதை பெரிதாக எண்ண வேண்டியதில்லை மூத்தவரே. அவர்கள் என் மூத்தவரின் துணைவியல்லவா? என் அன்னையல்லவா?” என்றான் சுஜாதன். “ஆனால் நான் விடவில்லை. நேராக முகத்தை நோக்கி அரசி நீங்கள் எனக்கு முறைப்படி மறுமொழி அளிக்கவில்லை. நான் அஸ்தினபுரியின் தூதனாக வந்த அரசகுலத்தவன் என்றேன். அவர் இளக்காரமாக உதட்டைச் சுழித்து என்னை நோக்காமல் அப்படியா எனக்கு அது தோன்றவில்லை என்றார். சரி நீங்கள் எனக்கு விடையளித்ததாகவே எண்ணிக் கொள்கிறேன் என்ற பிறகு அவர் காலைத் தொட்டு சென்னி சூட முயன்றேன். காலை விலக்கி எழுந்துவிட்டார்.”

“கருவுற்றமையால் சற்று அஞ்சிக் கொண்டிருக்கிறாள். அது பெண்களின் இயல்பல்லவா?” என்று கர்ணன் சொன்னான். “மற்றபடி கௌரவர்கள் மேல் அவளுக்கு என்றும் அன்புதான். அவள் தமக்கைக் கொழுநரின் குடியினர் அல்லவா நீங்கள்?” “அதெல்லாமில்லை மூத்தவரே” என்றான் சுஜாதன். “அவருக்கு என்னை பிடிக்கவில்லை. நான் உங்களுடையவன் என எண்ணுகிறார். என்னை இழிவுபடுத்துவதுடன் அதை நான் புரிந்துகொள்ளும்படி செய்ய வேண்டுமென்பதிலும் பொறுப்புடன் செயல்பட்டார்” என்றான். கர்ணன் கைகளை விரித்தான்.

“நான் அஸ்தினபுரியின் பரிசில்களை அரசிக்கு அளித்தேன். பாண்டியநாட்டு அரிய முத்தாரம் ஒன்று. யவனப்பொன்னில் காப்பிரிநாட்டு மணிகள் பதிக்கப்பட்ட கைவளைகள். அவற்றை அவர் ஏறெடுத்தும் நோக்கவில்லை. சேடியிடம் எடுத்து உள்ளே வைக்கும்படி புருவத்தால் ஆணையிட்டார். அந்தச் சேடி, அவள் பெயர் சரபை என நினைக்கிறேன், அதை எடுத்து நோக்கி உதட்டைச் சுழித்து இப்போதெல்லாம் காப்பிரிநாட்டு மணிகள் மிக மலிந்துவிட்டன அரசி, கலிங்கத்தில் குதிரைகளுக்கு இனி நெற்றிமணிகள் அணிவிக்கவேண்டாம் என்று அரசர் ஆணையிட்டிருக்கிறார் என்றாள். நான் அறியாமல் குதிரைகளுக்கா என்று கேட்டுவிட்டேன். அவள் உதட்டைச் சுழித்தபடி திரும்பி நடந்தாள். அப்போதுதான் அது இழிவுபடுத்தல் என்பதே எனக்கு புரிந்தது. ஆனால் ஒன்றை அறிந்தேன். அவர்கள் இருவரும் உதட்டைச் சுழிப்பது ஒன்றுபோலிருக்கிறது.”

கர்ணன் மெல்ல அசைந்து “அந்தச் சேடி கலிங்கப் பெருமைகொண்டவள். அறிவிலி” என்றான். “ஆம், அணுக்கச்சேடிகள் சற்று அத்துமீறுவார்கள்” என்றார் ஹரிதர். பேச்சை மாற்றும்பொருட்டு சிரித்தபடி “இளையவர் இங்குதான் தன்னை ஆண்மகன் என உணர்கிறார். தன் முதல் தூதுச் செய்தி அங்கநாட்டு அவையில் சொல்லப்பட்டதை எண்ணி எண்ணி மகிழ்ந்து கொண்டிருக்கிறார்” என்றார். சுஜாதன் “ஆம், மூத்தவரே, இங்கு வரும் வரை ஒவ்வொரு கணமும் நான் அஞ்சிக் கொண்டிருந்தேன். அவைநிகழ்வு என்பது ஒரு நாடகம் என்றார்கள். நான் என் மூத்தவரிடமே உளறுவேன்…” என்றான்.

“ஆனால் அனைத்தையும் விதுரர் சொல்லிக் கொடுத்திருந்தார். எப்படி நான் அவையில் எழுவது, என்னென்ன சொற்களை சொல்வது, கைகளை எப்படி அசைப்பது, எவருக்கு எப்படி தலைவணங்குவது அனைத்தையும். வரும் வழியில் வேடிக்கை பார்த்ததால் எல்லா சொற்களையும் மறந்துவிட்டேன். அங்க நாட்டு அவையில் வந்து அமர்ந்திருக்கும்போது எனக்கு சிறுநீர்தான் வந்து முட்டிக் கொண்டிருந்தது. எப்படியாவது எதையாவது சொல்லிவிட்டு வெளியே சென்று சிறுநீர் கழிக்க வேண்டும் என்று மட்டும்தான் துடித்துக் கொண்டிருந்தேன். என் பெயரை அமைச்சர் அறிவித்ததும் எழுந்து வந்து அவை நடுவே நின்று வணங்கினேன். நான் அறியாமலேயே விதுரர் எனக்கு கற்றுக் கொடுத்த சொற்களை சரியாக சொல்லிவிட்டேன்.”

“அதை பயணம் முழுக்க உனக்கு நீயே பலமுறை சொல்லிக் கொண்டிருப்பாய்” என்றான் கர்ணன். “எப்படி தெரியும்? உண்மையிலேயே சொல்லிக் கொண்டிருந்தேன்” என்று சுஜாதன் சொன்னான். “அவை கலைந்த போதுதான் நான் முதன்முறையாக ஒரு அவையில் எழுந்து அரசுமுறைத் தூதை சொல்லியிருக்கிறேன் என்பதை உணர்ந்தேன். கைகளை விரித்துக் கூச்சலிட்டபடி துள்ளிக் குதிக்கவேண்டும் என்று எண்ணினேன். நல்லவேளை, அப்படி செய்திருப்பேன்.” “செய்திருக்கலாம்” என்றான் கர்ணன். “அவை நெடுநாள் அதை நினைவில் வைத்திருக்கும்.” சுஜாதன் “அப்படியா? அதெல்லாம் செய்யலாமா அவையில்?” என்று கேட்டான்.

ஹரிதர் “விளையாடாதீர்கள் அரசே. எது வேடிக்கை என்று இன்னும் தெரியாதவராக இருக்கிறார்” என்றார். அறை வாயிலில் ஏவலன் வந்து நின்றான். “யார்?” என்றார் ஹரிதர். “சரபை” என்று ஏவலன் சொன்னான். புருவம் சுருங்க “இவ்வேளையிலா…?” என்றார் ஹரிதர். புரியாமல் “ஏன்?” என்றான் கர்ணன். ஹரிதர் எழுந்து “தாங்கள் பேசிக் கொண்டிருங்கள் அரசே. நான் சென்று அவளிடம் என்னவென்று கேட்கிறேன்” என்றார். கர்ணன் “இல்லை. அவளை வரச்சொல்லுங்கள்” என்றான். ஹரிதர் திரும்பிப் பார்த்து கண்களில் அறிவுறுத்தலுடன் “வேண்டியதில்லை. இவ்வேளையில் அரசரின் அவையில் சேடியரும் செவிலியரும் வருவது முறையல்ல” என்றார்.

“இதிலென்ன உள்ளது? வரட்டும்” என்றான் கர்ணன். “இளையவனுக்கு முறைப்படி சொல்லளித்து பரிசிலுடன் விடைகொடுக்கவில்லை என்ற குற்றவுணர்வு சுப்ரியைக்கு எழுந்திருக்கலாம். பெரும்பாலும் ஏதேனும் பரிசுப்பொருட்களுடன் செவிலியை அனுப்பியிருப்பாள்” என்றபின் ஏவலனிடம் “வரச்சொல்” என்றான். ஹரிதர் சற்று நிலையழிந்தவராக நின்றார். சிவதர் ஹரிதரிடம் ஒன்றும் செய்வதற்கில்லை என்பது போல் புருவத்தை காட்டினார். சுஜாதன் “எனக்கு மணிகள் பதிக்கப்பட்ட நல்ல உடைவாள் உறை ஒன்று கொடுக்கப்பட்டால் நான் அதை விரும்பி வைத்திருப்பேன்” என்றான்.

கதவு திறக்க சரபை உள்ளே வந்தாள். இறுகிய முகமும் நிமிர்ந்த தலையுமாக வந்து சற்றே விழிசரித்து வணங்கி “அங்க நாட்டரசர் வசுஷேணருக்கு கலிங்க நாட்டு அரசியின் ஆணையுடன் வந்திருக்கிறேன்” என்றாள். திடுக்கிட்டு ஹரிதர் ஏதோ சொல்ல வாயெடுக்க அவள் மேலும் உரத்த குரலில் “அரசியை இன்றிரவு அங்க நாட்டரசர் சென்று சந்திக்க வேண்டுமென்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை புலரியில் பெருங்கொடையாட்டு ஒன்றை நிகழ்த்தவும் பிறநாட்டு அரசர் அனைவருக்கும் முறைப்படி செய்தி அனுப்பவும் அரசி முடிவெடுத்திருக்கிறார். அதற்குரிய ஆணைகளை இன்றே பிறப்பிக்க வேண்டுமென்றும் அச்செய்தியை அரசரே கலிங்க நாட்டு அரசியிடம் அறிவிக்க வேண்டுமென்றும் கூறுகிறார்” என்றபின் தலைவணங்கி திரும்பி கதவைக் கடந்து வெளியே சென்றாள்.

திகைத்து எழுந்து கைசுட்டி “ஆணையா? அரசி அரசருக்கு ஆணை பிறப்பிப்பதை இப்போதுதான் பார்க்கிறேன்” என்று உரக்க சொன்னான் சுஜாதன். “இல்லை, இது இங்குள்ள ஒரு சொல்லாட்சி மட்டுமே” என்றார் ஹரிதர். “உண்மையாகவா? மூத்தவரே, இது உண்மையா?” என்று சுஜாதன் திரும்பி கர்ணனை நோக்கி கேட்டான். கர்ணன் “ஆம்” என்றான். ஒரு கணம் கர்ணனின் விழிகளை சந்தித்ததும் சுஜாதன் அனைத்தையும் உணர்ந்துகொண்டான். அவன் முன்னால் சென்றபோது பீடம் காலில் முட்டி ஓசையுடன் உருண்டு பின்னால் விழுந்தது.

“கலிங்கத்து இழிமகள் என் மூத்தவரின் முகம் நோக்கி இச்சொற்களை சொன்னபின்னும் வாயில் கடக்க எப்படி விட்டீர்? இக்கணமே அவள் குருதியுடன் திரும்புகிறேன்” என்று வாயிலை நோக்கி சென்றான். “இளையோனே!” என்று கர்ணன் கூவினான். “தடுக்காதீர்கள் மூத்தவரே. உயிருடன் நான் இருக்கும் காலம் வரை என் மூத்தவர் முகம் நோக்கி எவரும் இழிசொல் சொல்ல நான் ஒப்பமாட்டேன். இது எனக்கு இறப்பின் தருணம். இத்தருணத்தை வீணாகக் கடந்து சென்றபின் என் மூத்தவரிடம் எச்சொல் எடுப்பேன்?” என்றான் சுஜாதன்.

“இளையோனே!” என்று உடைந்து தாழ்ந்த குரலில் கர்ணன் அழைத்தான். “இது என் ஆணை!” சுஜாதன் சிலகணங்கள் உறைந்து நின்றபின் அனைத்து தசைகளும் தளர தலைகுனிந்து “ஏன் இங்கு இவ்வண்ணம் இருக்கிறீர்கள் மூத்தவரே?” என்றான். கர்ணன் “இவ்வண்ணம் ஆயிற்று” என்றான். “ஏன், மூத்தவரே? அஸ்தினபுரியின் அரசராகிய என் தமையன் உங்கள் தோழர் மட்டுமல்ல. சுட்டுவிரல் சுட்டி நீங்கள் ஆணையிடத்தக்க ஏவலரும்கூட. அவரது ஆணைகளை குருதி கொடுத்து நிறைவேற்றும் தம்பியர் நூற்றுவர் நாங்கள் இருக்கிறோம். ஒரு சொல் சொல்லுங்கள்! கலிங்கத்தின் அரண்மனைக் கலசத்தைக் கொண்டு உங்கள் காலடியில் வைக்கிறோம். உங்கள் முன் நின்று ஒருத்தி சொல்லெடுக்க எப்படி நாங்கள் ஒப்ப முடியும்?” என்றான்.

கர்ணன் “இளையோனே, இங்கு நான் இவ்வண்ணம் இருக்க நேர்ந்துள்ளது” என்றான். “சேற்றில் சிக்கிய யானை என்று சூதர்கள் சொல்வார்கள். இப்போதுதான் அதை பார்க்கிறேன்” என்றான் சுஜாதன். கர்ணன் சட்டென்று கண்களில் துயருடன் உரக்க நகைத்தான். அதை திகைப்புடன் நோக்கிய சுஜாதன் ஒரு முடிவெடுத்தவனாக எழுந்து ஓசையெழ கதவைத் திறந்து வெளியே விரைந்தான். “எங்கு செல்கிறான்?” என்றான் கர்ணன் எழுந்து அவனைத் தொடர்ந்தபடி. சிவதர் அசையாமல் கண்களில் நீருடன் நின்றார். ஹரிதர் கர்ணனின் பின்னால் சென்றபடி “சரபையை தொடர்கிறார்…” என்றார். கைநீட்டி உரக்க “நில் இளையோனே!” என்றான் கர்ணன்.

அதை கேட்காமல் இடைநாழிக்குச் சென்று பாய்ந்த காலடிகளுடன் ஓடி படிக்கட்டின் மேல் நின்ற சுஜாதன் “யாரங்கே? அந்த கலிங்கப் பெண்ணை நிறுத்து!” என்றான். கீழே வீரர்கள் “நிற்கச் சொல்லுங்கள்… பிடியுங்கள்” என்று கூவினர். அவளை அவர்கள் இழுத்துவர முதற்படியில் நின்றபடி சுஜாதன் உரத்த குரலில் கைநீட்டி “இழிமகளே, என் தமையன் முன் நின்று நீ இன்று சொன்ன சொற்களுக்காக உன் தலைகொய்து அஸ்தினபுரிக்கு மீளவேண்டியவன் நான். தமையனின் ஆணைக்காக உன் உயிரை இப்போது அளிக்கிறேன். ஆனால் இனி ஒரு முறை நீயோ உன் அரசியோ ஒற்றை ஒருசொல் கீழ்மையுரைத்தால், அச்சொல் உங்கள் அரண்மனைக்குள் எழுந்ததே என்றாலும், அதற்காக குருதியாலும் தீயாலும் பழி தீர்ப்போம். இது அஸ்தினபுரியை ஆளும் கௌரவநூற்றுவரின் வஞ்சினம். குருகுலத்து மூதாதையர் மேல் ஆணை! எங்கள் குலதெய்வங்களின் ஆணை!” என்றான்.

27

அறியாமல் ஹரிதர் இருகைகளையும் தலைக்குமேல் கூப்பிவிட்டார். “சென்று சொல் உன் அரசியிடம்! இனி அவள் சொல்லும் ஒரேயொரு வீண்சொல்லுக்கு விலையாக கலிங்கத்து அரசகுலத்தின் இறுதிச்சொட்டுக் குருதிகூட எஞ்சாமல் கொன்று குவிப்போம். கலிங்கத்து நகர்களில் ஓர் இல்லம்கூட இல்லாமல் எரித்தழிப்போம். அந்த நகர்களில் ஒற்றைப் புல்லிதழும் எழாது செய்வோம். மேலும் பத்து தலைமுறைகளுக்கு கலிங்கம் மீது எங்கள் வஞ்சம் அணையாது நின்றிருக்கும். எண்ணியிருக்கட்டும் இனி அவள். எந்தையர் மேல் ஆணை! அறிக இங்குள்ள அனைத்து தெய்வங்களும்!”

அவன் சொற்களில் எழுந்த முழக்கம் அங்கிருந்த அத்தனை வீரர்களையும் கைகூப்பச் செய்தது. சரபை நிற்கமுடியாமல் கால்தளர்ந்து விழப்போனாள். ஒரு காவலன் அவளை பற்றிக்கொள்ள அவள் அவன் தோள்மேல் தலைசாய்த்து நினைவிழந்தாள். அவள் கீழே துவள இன்னொருவன் ஓடிவந்து பிடித்துக்கொண்டான். சுஜாதன் தன் கண்களில் வழிந்த கண்ணீரை இரு கைகளாலும் துடைத்துக்கொண்டு திரும்பி “என் சொற்கள் அங்கத்தின் அரசநெறியை மீறியவை என்றால் என்னை கழுவேற்றுக அரசே! ஆனால் இச்சொற்களை இங்கு சொல்லாமல் என் தமையன் முன் சென்று நின்றால் நான் பெரும்பழியில் அமர்ந்தவனாவேன்” என்றான்.

கர்ணன் கண்ணீரை அடக்கி உடைந்த குரலில் “நீ விழியற்ற பேரறத்தின் மைந்தன் இளையோனே. பிறிதொன்றை உன்னால் எண்ணமுடியாது” என்றபின் அறைக்குள் செல்ல திரும்பினான். “நான் நாளை புலரியில் அஸ்தினபுரிக்கு கிளம்புகிறேன் மூத்தவரே. இந்நகரில் இனி நான் இருக்கவியலாது” என்றான் சுஜாதன். “நானும் உன்னுடன் கிளம்புகிறேன் இளையோனே. நாம் சேர்ந்து செல்வோம்” என்றான் கர்ணன்.

முந்தைய கட்டுரைபுதியவர்களின் சந்திப்பு -2
அடுத்த கட்டுரைகுறள்முகம்