பகுதி நான்கு : கூற்றெனும் கேள் – 3
தன் தனியறைக்கு வந்ததும் வழக்கம் போல உடல் நீட்டி கைகளை விரித்து மரக்கிளை நுனியில் இருந்து வானில் எழப்போகும் பறவை போல் எளிதான கர்ணன் நீள்மூச்சுடன் திரும்பி பின்னால் அறைவாயிலில் நின்ற சிவதரை நோக்கி “அமைதியிழந்துள்ளேன் சிவதரே” என்றான். சிவதர் “அரசத் தருணங்கள்” என்று மட்டும் சொன்னார். “ஜயத்ரதனை எப்படி எதிர்கொள்வேன் என்று தெரியவில்லை” என்றபடி அவன் கைகளை இடையில் வைத்து தோள்களை சுழற்றி இடுப்பை வளைத்தான்.
“தங்கள் உள்ளம் வழக்கமாக இயங்கும் ஒரு பாதையை தவிர்த்தாலே போதும். அதைத்தான் ஹரிதரும் சொன்னார்” என்றார் சிவதர். “அன்று மணத்தன்னேற்புக் களத்தில் தன் எல்லையும் ஆற்றலும் அறியாது வில் கொண்டு எதிர்த்தது ஜயத்ரதரின் தவறு. அப்போது அவ்வாறு அவரை வென்று கடந்திருக்காவிட்டால் அவர் தங்களை இழிவு படுத்தியிருப்பார் என்பதே தங்கள் செயலை சரியென ஆக்கும். எனவே அவர் நிலையில் நின்று அந்நிகழ்வை நோக்கி இரக்கமோ பரிவோ அடைய வேண்டியதில்லை” என்றார் சிவதர்.
கர்ணன் ஏதோ சொல்ல வாயெடுக்க சிவதர் அதை மீறி மேலும் இயல்பாக “தங்களிடம் எழும் பரிவும் அவரை மேலும் சினம் கொள்ளவே வைக்கும். உங்கள் முன் தான் சிறியவர் என்றாவதை அவர் எந்நிலையிலும் உணர்ந்தபடியே இருப்பார்” என்றார். கர்ணன் “ஆம், இதை நான் உணர்ந்திருக்கிறேன்” என்றபடி சென்று தன் பீடத்தில் அமர்ந்து கால்களை நீட்டிக் கொண்டான். “உள்ளத்தை நேரடியாக திறந்து வைப்பது மானுடர் நடுவே உள்ள தடைகள் அனைத்தையும் அகற்றும் என்று நான் எப்போதும் நம்பி வந்திருக்கிறேன். ஆனால் அது ஒரு போதும் நிகழ்ந்ததில்லை” என்றான்.
“அதை புரிந்து கொள்வது ஒன்றும் கடினமல்ல” என்றபடி சிவதர் அருகே வந்தார். “மானுடரின் அனைத்து சொல் முறைமைகளும் உள்ளத்தை மறைக்கும் பொருட்டுதான். உண்மையை எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்டவர்கள் யோகிகள் மட்டுமே. அவர்களுக்கு மொழியே தேவையில்லாமல் ஆகிவிடுகிறது.” கர்ணன் அவரையே நோக்கினான். புன்னகையுடன் “மொழி ஓர் அழகிய பட்டுத்திரை என்று சூதர்கள் மீள மீள பாடுவதுண்டு. அது சொல்வதற்காக அல்ல மறைப்பதற்காக மட்டுமே” என்றார். “ஆயினும் இதை நம்பி ஏற்க என்னால் இயலவில்லை” என்றபின் கர்ணன் கைகளைத் தூக்கி உடலை நெளித்து அலுப்புடன் “நான் சற்று ஓய்வெடுக்க விழைகிறேன்” என்றான்.
“ஆம். நான் அஸ்தினபுரியின் விருந்தினர்களுக்கு ஆவன செய்துவிட்டு மீள்கிறேன்” என்று திரும்பிய சிவதர் “தாங்கள் ஒரு கிண்ணத்திற்கு அப்பால் மது அருந்த வேண்டியதில்லை” என்றார். “ஆணை” என்று கர்ணன் சிரித்தான். சிவதர் நகைத்து “அச்சிரிப்பை நான் நம்பப் போவதில்லை. வெளி ஏவலருக்கு இறுதி ஆணைகளை இட்டுவிட்டுதான் செல்வேன்” என்றார். “ஆணை சிவதரே, நான் சொற்களை எதையும் மறைக்க பயன்படுத்துவதில்லை” என்றான் கர்ணன். சிவதர் சிரித்தபடி வெளியே சென்று தனக்குப்பின் கதவை மூடிக் கொண்டார்.
கர்ணன் கண்களை மூடி கைகளை தளரவிட்டு பீடத்தில் சாய்ந்து அமர்ந்தான். சற்று நேரம் கழித்து கதவு திறக்கும் ஒலி கேட்டபோதுதான் தான் எதை எண்ணிக்கொண்டிருந்தோம் என்று உணர்ந்தான். ஒவ்வொரு அறியா இடைவேளைகளிலும் அவளையே எண்ணிக் கொண்டிருக்கிறான். அவளை! அதை எவ்வண்ணமோ அவன் இரு துணைவியரும் அறிந்திருக்கிறார்கள். அவர்கள் அவன் மீது கொள்ளும் விலக்கமும் சினமும் ஈர்ப்பும் துயரும் அதனால்தான் போலும். வாயிலில் வந்து பணிந்த ஏவலனின் கையில் யவனமது இருந்தது. அப்போது அவனுக்கு அது விடாய் நீரென தேவைப்பட்டது. ஒரே மிடறில் அருந்தியபின் பிறிதொரு கோப்பைக்கு ஆணையிடலாமென்று எண்ணி உடனே சிவதரின் முகத்தை நினைவு கூர்ந்து தவிர்த்தான்.
“நான் சற்று நேரம் துயில விழைகிறேன்” என்றபடி எழுந்து மஞ்சத்தறை நோக்கி சென்றான். வெண்பட்டு விரிக்கப்பட்ட மஞ்சத்தில் காலையில் மலர்ந்த முல்லைப்பூக்கள் தூவப்பட்டிருந்தன. மேலாடையை கழற்றிவிட்டு அதில் அமர்ந்து கால்களை நீட்டி கைகளை ஊன்றி அமர்ந்தபடி அப்போது தன்னுள் எவ்வெண்ணம் ஓடிக் கொண்டிருக்கிறது என்று நோக்கினான். முல்லையின் மணம் பெண்மைகொண்டது. மெல்ல நெளிவது. பெண். பெண் என்றால் வேறெவருமில்லை. “ஆம்” என்றபடி உடலை சரித்து தலையணையை சீரமைத்துக் கொண்டு கண்களை மூடினான். அவளைத்தான் எண்ணிக் கொண்டிருக்கிறேன் . ஆனால் நினைக்கவில்லை. நினைவுகூர்வதும் இல்லை. எண்ணம் எழுந்து நிறைந்து வழிந்து விழிதொட்டதும் மறைந்து மீண்டும் ஊறி கரவாடுகிறது.
எண்ணம் என்பது அவனுடையதல்ல. அது காற்று. விண்மூச்சு. தெய்வங்களின் ஊர்தி. நிலையழிந்தவனாக புரண்டு படுத்தான். புரண்டு புரண்டு படுக்காமல் எப்போதேனும் துயில் கொண்டிருக்கிறோமா என்று எண்ணிக் கொண்டான். இந்த யவனமது மிக மென்மையானது. ஆனால் எண்ணங்களின் புரியாழிகளுக்கு நடுவே உயவுப்பொருளாக மாறும் திறன் கொண்டது. ஓசையின்றி அவை சுழன்று கொண்டிருக்கின்றன. இன்னும் சற்று நேரத்தில் அவை விலகி ஒன்றையொன்று தொடாமல் ஆகும். அப்போது துயில முடியும். துயில்வதென்பது ஆழ்தல். எது அவனோ அங்கு சென்றுசேர்தல்.
மிக அண்மையிலென கரிய பெருமுகம். மலரிதழ் வரிகளென உதடுகள். மலர்ந்த விழிகளில் நீர்மையென்றாகிய ஒளி. மூக்கின் மெல்லிய பனிப்படலம். விழித்தடங்களின் பட்டுவரி. கருங்கல் தீட்டி ஒளியெழச் செய்த கன்னங்கள். குறுமயிர் மென்நிரை. குழைநிழலாடும் கதுப்புகள். அவன் மீண்டும் புரண்டு படுத்து தலையணையைத் தூக்கி தன் முகத்தின் மேல் வைத்து அழுத்திக் கொண்டான். இவ்வெண்ணங்களிலிருந்து எப்போது விடுபடுவேன்? அன்பென்றும் பகையென்றும் விழைவென்றும் வஞ்சமென்றும் ஆன ஒரு உறவு. தேனீ ஒருமுறை கொட்டிவிட்டால் கொடுக்கிழந்து உதிர்கிறது. அதை பறக்க வைத்த விசை அந்நஞ்சு. பின்பு அதற்கு வாழ்வில்லை.
இதை ஏன் இப்போது எண்ணுகிறேன்? மேடைநின்று பேசுபவனின் சொற்கள். இங்கு அனைவரும் எண்ணுவது ஒரே வகையில்தான். இளமை முதலே சூதர் பாடலை கேட்டு வருகிறான். அணிசெறிந்த மொழி. ஒப்புமைகள், உருவகங்கள், புராணங்கள் இன்றி எதையும் எவரும் உரைக்க முடியாது. இங்குள்ள சொற்களெல்லாம் நகைகள். ஆடைகள், மாளிகைகள், நகரங்கள் அனைத்தும் அணிநுணுக்கிய ஆயிழைகள். அவன் மீண்டும் புரண்டு படுத்தான். தலையணையில் முகத்தை அழுத்திக் கொண்டான். இன்று கொற்றவைக்கு ஓர் ஆலயம் எழுப்ப ஆணையிட்டேன். என் நகரில் நான் எழுப்பும் மூன்றாவது கொற்றவை. என் நெஞ்சின் மேல் கால் வைத்து எழுந்தோங்கி நின்று என் தலை கொய்யும் வாளை ஓங்கப்போகும் தலைமாலைத் தலைவி.
கன்னங்கரிய திருமுகம். செந்நுதல்விழி. மான்மழு பரிஎரி முப்பிரி படையணி உடுதுடி நீறணி ஓங்குரு அன்னை. பழுதற்ற பாய்கலை. பைநாகக் கச்சை. பறக்கும் அனலாடை. பூண்அணி பொற்கழல். மணியொளிர் மைநாக முடிசடை. இருளில் இருக்கும் கொற்றவைதான் முழுமை கொண்டவள். புலரியில் நடை திறக்கும் பூசகர் மட்டுமே பார்க்கும் தெய்வம். முதல்சுடர் ஏற்றப்படுகையில் அவள் இம்மண்ணுக்குரியவளாகிவிடுகிறாள். அவள் கொண்ட கொடுந்தோற்றம் அனைத்தும் கருணையின் மாற்றுருக்களாக மாறிவிடுகின்றன.
வீண் எண்ணங்கள். அவன் தன் தலையை நீவி அவ்வெண்ணங்களை அகற்ற விரும்பியவன் போல் உடலை நெளித்தான். என்ன செய்கிறது இந்த யவனமது? குருதியில் கலந்து உள்ளத்தை அடைவதற்கு இத்தனை காலம் எடுத்துக் கொள்கிறது! மீண்டும் உடலை நெளித்தபோது மெல்லிய குறுகுறுப்பென தொடையில் அவ்வலியை உணர்ந்தான். அது உள்ளத்தின் விழைவென்கிறார்கள் மருத்துவர்கள். வெறும் அகமயக்கு. ஆனால் தசை அறிகிறது அவ்வலியை. மாம்பழத்துக்குள் வண்டென அங்கு உள்ளது. விரல் நீட்டி அவ்வடுவை தொடப்போனான். அவன் விரல் அங்கு செல்வதற்குள்ளே உள்ளம் அதைத் தொட்டு சுண்டப்பட்ட வீணை நரம்பு என தசை அதிர்ந்தது.
சீரான தாளத்துடன் வலி அதிரத் தொடங்கியது. தொடையிலிருந்து அனலுருகி குருதியென ஆனதுபோல் மெல்ல வழிந்து முழங்காலுக்கும் கெண்டைக்காலுக்கும் பாதங்களுக்கும் விரல் நுனிகளுக்கும் செல்வதாக வலியை உணர்ந்தான். அரக்குருக அடுக்கு வெடிக்கப் பற்றி எரியும் விறகு போல் இடக்கால் வலியில் துடித்தது. பற்களை கிட்டித்து கைகளை நீட்டி விரல்களை சுருக்கி இறுக்கி அவ்வலியை எதிர்கொண்டான். இடை மேலேறி நெஞ்சில் படர்ந்து அனைத்து நரம்புகளையும் சுண்டி இழுத்து அவனை முறுக வைத்தது. அவ்வடுவில் ஒரு கொக்கியிட்டு வானில் அவனை தூக்குவது போல.
வலியின் அதிர்வு மேலும் உச்சம் கொண்டு ஒற்றைப்புள்ளியில் நின்று அசைவிழந்தது. அங்கு காலமில்லை என்பது அது அறுபட்டு குளிர் வியர்வையுடன் தன்னை உணர்ந்தபோது அறிந்தான். அவ்வடுவில் நாவெழுந்து ஆம் ஆம் என்ற சொல்லாக வலி ஒலித்துக் கொண்டிருந்தது. தொலைவில் எங்கோ ஒரு பறவை ஆம் ஆம் என்றது. வியர்த்த உடலை சாளரக்காற்று வருடிச் சென்றது. கட்டிலுக்கு அடியில் எங்கோ நிலம் ஆம் ஆம் என்றது. யாரோ எங்கோ முனகிக் கொண்டார்கள். ஒரு தனிப் பறவை துயரில் எடைகொண்டு வான்சரிவில் மிதந்து தொடுவான் நோக்கி இறங்கியது. நெடுந்தொலைவில் அறியாத நதியொன்று ஒளிப்பெருக்கென ஓடிக் கொண்டிருந்தது.
உஸ்ஸ் என்னும் ஒலியை அவன் கேட்டான். மிக மெல்லிய ஒலி. பட்டுத்திரைச்சீலை மடிந்து பறந்து உரசிக்கொள்வதுபோல. பின்னர் துருத்தி சீறுவதுபோல. அருகே துதிநீட்டிய பெருங்களிறு உயிர்ப்பதுபோல. அவன் உடல் விதிர்த்துக் கொண்டது. அவன் விழிதிறந்தபோது கட்டிலை அவன் உடலுடன் வளைத்துச் சுற்றியபடி அரசப்பெருநாகம் பத்திவிரித்து அவன் மேல் எழுந்து நின்றிருந்தது. அதன் அடிக்கழுத்தின் அடுக்குப்பொன்நாணயங்கள் அசைந்தன. அனல்விழுதென நா பறந்தது. விழிகள் காலமின்மையில் திறந்திருந்தன. “மிக எளிது” என்றது அது. அச்சொல்லை அது விழியால் அவனுக்குரைத்தது. “மிக மிக எளிது.”
அவன் உடல் வியர்த்து அதிர்ந்து கொண்டிருந்தது. “பெற்றுக்கொள்” என்றது பாய்வளைத்து நின்ற பாந்தள். அவன் உடலே விடாய்கொண்டு எரிந்தது. மேலிருந்து ஒரு குளிர்மழை பெய்து அணைக்காவிட்டால் உருகி வழிந்து மஞ்சத்திலிருந்து அறைக்குள் பரவிவிடும் உடல் என தோன்றியது. “வருக…” என்றது அரவம். அவன் நாக்கு உலர்ந்த மலர்ச்சருகுபோல தொண்டைக்குவைக்குள் ஒட்டிப்பதைத்தது. “வருக…” என்று அவன் நெஞ்சு உரைத்தது. “எப்போதும் நான் அண்மையில் இருந்துகொண்டிருக்கிறேன்.” அவன் உதடுகள் இரும்பாலானவை போலிருந்தன. “ஆம்” என்று அவன் சொன்னது உடலால் அல்ல. “நான் அறிவேன்” கட்செவி மெல்ல காற்றிலென அசைந்தது. “இத்தருணமும் உகந்ததே… “
“இல்லை” என்றான் அவன். “விழைவை அறியாதவன் வீணன் என்றே விண்ணவரால் எண்ணப்படுவான்.” அவன் “இல்லை” என்று பேரோலமிட்டான். “எதற்காக? நீ எய்துவதென்ன?” அவன் “இல்லை இல்லை இல்லை” என மன்றாடினான். “நீ அடைவதற்கு அனைத்தும் உள்ளது. உன் முலைப்பால் மணம் கொண்டு உன்னைத் தொடர்ந்தவன் நான்.” அவன் தன் கையை வீசினான். மதுக்கிண்ணம் தெறித்து உலோக அலறலுடன் தரையில் உருண்டது. மலையுச்சியில் இருந்து விழுந்தவன் போல மஞ்சத்தில் துடிக்கும் உடலாக தன்னை உணர்ந்தான்.
சிவதர் வந்து கதவை மெல்ல திறந்து “அரசே” என்றபோது அவன் முற்றிலும் விழித்துக் கொண்டான். கைகளை ஊன்றி எழுந்தமர்ந்து “உம்” என்றான். “தங்கள் தந்தை காட்சி விழைகிறார்” என்றார் சிவதர். “யார்?” என்றபடி கர்ணன் எழுந்து தன் சால்வையை எடுத்து தோளில் போட்டுக் கொண்டான். “அதிரதர்” என்றார் சிவதர். “சற்று சினந்திருக்கிறார். இக்கணமே பார்க்கவேண்டுமென்று காவல் முகப்பில் நின்று கூவினார். தாங்கள் துயில்வதாகவும் எழுப்பி அமரவைத்துவிட்டு வந்து அழைத்துச் செல்வதாகவும் சொன்னேன்” என்றார்.
“அழைத்து வாருங்கள். இம்முறைமைகளை அவர் புரிந்துகொள்ள மாட்டார்” என்றான் கர்ணன். “அதற்குள் நான் முகம் கழுவிக்கொள்கிறேன்.” சிவதர் “ஆம். நீருடனும் மரவுரியுடனும் பணியாளை வரச்சொன்னேன். முகம் கழுவி நெற்றிக்குறியிட்டு அமர்ந்திருங்கள். நான் அவரை பேச்சு கொடுத்து சற்று திடுக்கமின்றி வரச்சொல்கிறேன்” என்றபடி வெளியே சென்றார். அவன் எழுந்தபோது உடல் மிக எடைகொண்டு கால்கள் அதை தாளாததுபோல் உணர்ந்தான். யவனமது துயிலில் நீர்விடாயை பெருக்குகிறது. அதுவே கனவுகளாக எழுந்து அனலென வருத்துகிறது.
உள்ளே வந்த ஏவலனிடமிருந்து குவைதாலத்தில் நறுமண வெந்நீரை பெற்று முக்கால் பீடத்தில் வைத்து குனிந்து நீரள்ளி வீசி முகத்தை கழுவினான். தலையிலும் சற்று தெளித்து கலைந்த கருவிழுதுக் குழலை நீவி பின்னால் இட்டான். ஏவலன் காட்டிய பொற்சிமிழில் இருந்த செஞ்சாந்துக்குழம்பில் கதிரவன்முத்திரை கொண்ட கணையாழியை அழுத்தி எடுத்து தன் நெற்றியில் குறி அணிந்தான். ஏவலனிடமிருந்து நறுமணப் பாக்கையும் மிளகையும் எடுத்து வாயிலிட்டு மென்று உடனே உமிழ்ந்துவிட்டு ஆடைதிருத்தி நின்றான்.
அப்பால் உரத்த குரலில அதிரதன் பேசிக்கொண்டு வருவது கேட்டது. “நானறிவேன் அனைத்தையும். இங்குள்ள திரக்கு எதை விழைகிறதென்றும் அறிவேன். அடிக்கடி இங்கு வரவில்லை என்பதனால் நான் அயலவன் என்று எண்ணவேண்டியதில்லை….” கர்ணன் “விலகுக” என்று சொல்லி ஏவலனை அனுப்பிவிட்டு கதவைத் திறந்து வெளியே சென்றான். இடைநாழியில் வந்து கொண்டிருந்த அதிரதன் அவனைக் கண்டதும் அங்கிருந்தே உரத்த குரலில் “பகல்பொழுதில் துயில்கிறாய்! கதிர்வாழும் பொழுதில் துயில்பவனால் உயிர்க்குலங்களை புரிந்துகொள்ள முடியாது. அவனை நோக்கி தெய்வங்கள் சலிப்புறும்” என்று கூவியபடி வந்தார்.
“மூடா, உன்னிடம் நூறு தடவை சொல்லியிருப்பேன் பகற்பொழுதில் துயிலாதே என்று” என்றபடி கையை நீட்டினார். “துயிலவில்லை, சற்று ஓய்வெடுத்தேன்” என்றான் கர்ணன். குனிந்து அவரது கால்களைத் தொட்டு சென்னியில் சூடி “வாழ்த்துங்கள் தந்தையே” என்றான். அவன் தலையில் கையை வைத்து “நன்று சூழ்க!” என்றபின் “உன்னிடம் சில சொற்களை சொல்வதற்காக வந்தேன். இந்த அணுக்கனை விலகிப்போகச் சொல்” என்றார். சிவதர் “தாங்கள் அறைக்குள் அமர்ந்து பேசலாம் மூத்தவரே. நான் கதவை மூடிவிட்டு வெளியேதான் நிற்பேன்” என்றார். “வெளியே நிற்காதே. நான் இவனிடம் சொல்வதை நீ ஏன் கேட்கவேண்டும்?” என்றார் அதிரதன்.
கண்கள் மட்டும் சிரிக்க “கதவை மூடினால் சொற்கள் எதுவும் வெளியே வாரா” என்றார் சிவதர். “ஆம், இவனுடன் அணுக்கச்சாலையில் அமர்ந்துதான் பேசுவேன். இது இவனது தனிப்பட்ட வாழ்வு குறித்து” என்றபின் “வா” என கர்ணனிடம் கையசைத்தபடி அதிரதன் அறைக்குள் சென்றார். சிவதர் கர்ணனை நோக்கி மெல்ல இதழ்விரித்து புன்னகை செய்தபடி நின்றார். கர்ணன் உள்ளே சென்றதும் கதவை இழுத்து மூடிக்கொண்டார்.
கர்ணன் “சொல்லுங்கள் தந்தையே, தாங்கள் சினங்கொண்டிருப்பதாக சிவதர் சொன்னார்” என்றான். “ஆம், சினம் கொண்டிருக்கிறேன். மூடா, நீ ஒரு அரசனாக இங்கு செயல்படுகிறாயா? இந்நாட்டை ஆள்வது நீயா? அல்லது அந்த குள்ள அந்தணனா? குதிரை வளர்ப்பைப் பற்றி ஐந்துமுறை அவனிடம் நான் பேசினேன். எதைச் சொன்னாலும் பணிவுடன் தலையாட்டுகிறான். ஒரு சொல்லேனும் அவனது ஒழிந்த உள்ளத்திற்குள் நுழைவதில்லை. மூடன், வெறும் மூடன்” என்று அதிரதன் கையசைத்தார்.
“யார் ஹரிதரா?” என்றான். “ஆம், அவனேதான். மூடா, முன்பு இங்கிருந்த முந்தைய அங்க மன்னனின் அணுக்கனாக இருந்த அந்தணன் அவன். இன்று உன் அணுக்கனாக மாறி அரசாள்கிறான். நீயும் உச்சிப்பொழுதில் மதுவருந்தி மஞ்சத்தில் மயங்குகிறாய்.” “மது அருந்தவில்லை” என்றான் கர்ணன் தாழ்ந்த குரலில். “பொய் சொல்லாதே. நீ அத்தனை தொலைவில் வந்து கொண்டிருந்தபோதே நீ அருந்திய மதுவை நான் மணம் அறிந்துவிட்டேன். மதுவுண்ட குதிரைபோலத்தான் மானுடனும். அவன் கண் விரிந்திருக்கும்” என்றார் அதிரதன். “குதிரை மேய்த்து குடிசையில் வாழ்ந்த சூதன் நீ. உனக்கு பொற்கிண்ணத்தில் யவனமது கைவந்தபோது அதுவே வாழ்க்கை என்று தோன்றுகிறது இல்லையா?”
கர்ணன் ஒன்றும் சொல்லவில்லை. அதிரதன் மஞ்சத்தில் அமர்ந்து கால்மேல் கால்போட்டபடி “நேற்று என்ன நடந்தது?” என்றார். “தாங்கள் எதை கேட்கிறீர்கள்?” என்றான் கர்ணன். “மூடா, நேற்று என்ன நடந்தது என்று என்னிடம் கேட்கிறாயா? நேற்று நீ விருஷாலியை பார்க்கச் சென்றபோது அவள் உன்னிடம் என்ன சொன்னாள்?” கர்ணன் “நான் அவளை பார்க்க முடியவில்லை” என்றான். “ஏன் பார்க்க முடியவில்லை? அதைத்தான் கேட்டேன். நீ ஏன் அவளை பார்க்கமுடியவில்லை?” என்றார் அதிரதன். “அவள் பார்க்க விரும்பவில்லை” என்றான். “ஆமாம் அறிவிலியே, ஏன் பார்க்கவிரும்பவில்லை?” என்றார். “அறியேன். அவள் கருவுற்றிருப்பதாக மருத்துவச்சி சொன்னாள்.”
“ஆம், கருவுற்றிருக்கிறாள். நாணிலியே, அச்செய்தியை நீ முறைப்படி எவருக்கு அறிவித்திருக்க வேண்டும்?” கர்ணன் பேசாமல் நின்றான். “எனக்கு. அதற்குமுன் என் மனைவிக்கு. நாங்கள் இங்கு வந்து அவளுக்கு குலமுறைப்படி சீர்வரிசை செய்ய வேண்டும். அதுவே சூதர் மரபு. நீ நாட்டின் அரசனாக இருந்து ஈட்டிக் கொடுத்த செல்வம் எனக்குத் தேவையில்லை. நான் குதிரை பேணி ஈட்டிய செல்வமே என் கை பெருக உள்ளது. எவர் தயவுமின்றி அவளுக்கு முறைவரிசை செய்வதற்கு நாங்களும் தகுதி கொண்டிருக்கிறோம்.”
கர்ணன் “அவ்வாறு அறிவிப்பதில் சில சிக்கல்கள் இருந்தன” என்றான். அதிரதன் மேலும் உரக்க எழுந்த குரலில் “அந்த அந்தணன் உன்னிடம் சொல்லியிருப்பான், அறிவிக்க வேண்டியதில்லை என்று. அல்லவா?” என்றார். “இல்லை. அம்முடிவை எடுப்பதற்குள் இளையவள் கருவுற்று இருப்பதாக செய்தி வந்தது” என்றான் கர்ணன். “இளையவள் கருவுறவில்லை. அதை நான் நன்கு அறிவேன். இந்த அரண்மனையே அறியும். மூத்தவள் கருவுற்ற செய்தியை அறிந்த உடனேயே இளையவள் கருவுற்றதாக அறிவித்தாள். அதை நீ உன் அவையில் வெளிப்படுத்தவும் செய்தாய். இன்று என்ன நடக்கிறது தெரியுமா?” என்றார். கர்ணன் “சொல்லுங்கள்” என்றான்.
“நான் சொல்லி நீ அறிய வேண்டுமா? நீ அரசனா இல்லை நான் அரசனா? கலிங்கத்து அரசி சூதர்களுக்கும் அந்தணர்களுக்கும் உன் கருவூலப் பொன்னை அள்ளிக் கொடுக்கிறாள். அவர்கள் அவளை வாழ்த்தி நகரெங்கும் சென்று பிறக்கவிருக்கும் அவள் மைந்தனே இந்நாட்டை ஆளப்போவதாக சொல் முழக்குகிறார்கள்” என்றார் அதிரதன்.
“பட்டத்தரசி அவளல்லவா?” என்றான் கர்ணன். “ஆம், அது இன்று. இந்நகரின் ஷத்ரியர்கள் விருஷாலியை ஏற்கவில்லை என்பதற்காக எடுக்கப்பட்ட முடிவு. ஆனால் அது நாளை உன் மைந்தருக்கும் பொருந்தும் என்று எவர் சொன்னது? விருஷாலியின் கருவில் பிறக்கும் மைந்தன் பெருவீரனாக இருந்தால் அவனை இம்மக்கள் வெறுப்பார்களா? வில்லெடுத்து அவன் இவ்வரியணையை வென்றெடுக்க எண்ணினால் எவர் தடை சொல்ல முடியும்?” என்றார் அதிரதன்.
“இப்போது நாம் அதை எதற்கு எண்ணவேண்டும்?” என்றான் கர்ணன். “இப்போதே எண்ண வேண்டும் அறிவிலியே. இன்றே உன் மூத்த துணைவி கருவுற்றிருப்பதை அறிவி. இளையவள் கருவுறவில்லை என்ற அரசு செய்தியும் இன்றே வெளிவர வேண்டும். இது என் ஆணை” என்றார். கர்ணன் “தந்தையே, மூத்தவள் கருவுற்றிருக்கும் செய்தியை முறையாக அறிவிக்கச் செய்கிறேன். இளையவள் கருவுறவில்லை என்பதை எப்படி அரசு சொல்ல முடியும்? தான் கருவுற்றிருப்பதாக அரசி சொன்னது பொய் என்று அரசு முறைப்படி அறிவிக்க முடியுமா என்ன?” என்றான்.
“ஏன் அறிவிக்க முடியாது? நீ இந்நாட்டின் அரசன். நீ அறிவிப்பதே உண்மை. ஆண்மை இருந்தால் சென்று மக்களிடம் உண்மையை சொல்” என்றார் அதிரதன். “எந்த உண்மையை? அரசியும் அவர்களின் மருத்துவர்களும் சொல்வதல்லவா உண்மை? அதை அல்லவா அரசு ஏற்றாக வேண்டும்?” என்றான் கர்ணன். அதிரதன் கைகளைத் தட்டியபடி எழுந்து “ஏன்? வேறு இரு மருத்துவர்களைக் கொண்டு இளையவளை நோக்க இயலாதா?” என்றார். “அதைத்தான் நான் கேட்கிறேன். நானே மருத்துவர்களை அனுப்புகிறேன். அவர்கள் சொல்லட்டும்…”
கர்ணன் சட்டென்று சலிப்புற்று “இவை அரசுசூழ்தல்கள். தாங்கள் இவற்றை முழுமையாக புரிந்து கொள்ள முடியாது தந்தையே” என்றான். அதிரதன் புண்பட்டு “சீ, வாயைமூடு. நீ குதிரையைக்கூட அறியாத சூதன். நான் குதிரை வழியாக உலகை அறிந்த முதியவன். நான் அறியாத அரசுசூழ்தலா? அந்த மூட பிராமணன் என்னைவிட அறிந்திருக்கிறானா என்ன? எனக்குத் தெரியும். என்ன செய்வது என்று அறிந்தவன் நான். நான் சொல்லும் ஆணைகளை நீ இடு. ஐந்து நாட்களில் இங்குள்ள அனைத்து நிலைமைகளையும் மாற்றிக் காட்டுகிறேன். இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது அறிவாயா நீ?” என்றார். கர்ணன் தாழ்ந்த குரலில் “இல்லை” என்றான்.
“அறியமாட்டாய். ஏனெனில் நீ மதுவருந்தி மஞ்சத்தில் புரண்டு கொண்டிருக்கிறாய். மூடன். அஸ்தினபுரியிலிருந்து வந்த அமைச்சரை இளவரசரை அந்த ஆணவம் எழுந்த அங்கநாட்டு பிராமணன் அழைத்துக்கொண்டு கலிங்க நாட்டரசியை பார்க்கச் சென்றிருக்கிறான். இன்று அங்கு அவர்களின் சந்திப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.” கர்ணன் “அது முறைமை. அரசவையில் என்னை சந்தித்தபின் முறைப்படி பட்டத்தரசியை சந்தித்தாக வேண்டும். அவள் கருவுற்றிருப்பதால் அவைக்கு வரவில்லை என்பதனால் அதுவே செய்யக்கூடுவது” என்றான். “என்ன முறைமை? மூத்தவள் விருஷாலி இங்கிருக்கிறாள். அவளை சந்தித்துவிட்டல்லவா கலிங்கத்து அரசியை சந்திக்கவேண்டும்?” என்றார் அதிரதன்.
“தந்தையே, இது தனிப்பட்ட சந்திப்பு அல்ல. இது அரச முறை சந்திப்பு. பட்டத்தரசியைத்தான் சந்தித்தாக வேண்டும்” என்றான். “யார் சொன்னது? மூடா, அஸ்தினபுரியின் அரசன் தன் தங்கையாக ஏற்றுக் கொண்டவள் விருஷாலி. அவளை முதலில் சந்திக்க வேண்டுமென்றுதான் அஸ்தினபுரியின் இளையவரும் அமைச்சரும் விரும்பியிருப்பார்கள். அங்க நாட்டை ஆளும் அந்த அந்தணன் செய்த சூழ்ச்சி இது. இதைக்கூட புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் தலைக்கு மேல் எழுந்த தோள் கொண்டு தடித்த உடல் தூக்கி ஊன்தடி என நீ இங்கு இருப்பது எதற்காக? உன்னை எண்ணி நாணுகிறேன். உன்னை தந்தையென நின்று பேணி வளர்த்தமைக்காக இத்தருணத்தில் உளம் கூசுகிறேன்.”
“தாங்கள் சினம் கொள்வது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. அவைகலந்து அறிந்தபின் நான் தங்கள் ஆணையை நிறைவேற்ற சித்தமாக இருக்கிறேன்.” அதிரதன் “இங்கு அவை என்பது நானே. என் ஆணை ஒன்றே. இக்கணமே கிளம்பி விருஷாலியின் அரண்மனைக்கு செல். அங்கு அவளுடன் அமர்ந்து அவை ஒன்றை கூட்டு. உன் அணுக்கனை அனுப்பி அஸ்தினபுரியின் அமைச்சரையும் இளவரசரையும் அங்கு வரச்சொல். விருஷாலியின் முன் அவர்கள் தலை வணங்கி அஸ்தினபுரியிலிருந்து அவர்கள் கொண்டு வந்த பரிசில்களை அளிக்கட்டும். அப்போது அவர்களிடம் சொல் விருஷாலி கருவுற்றிருப்பதாக. அச்செய்தியை அவர்கள் முறைப்படி அஸ்தினபுரியின் அவைக்கு அறிவிக்கட்டும்” என்றார்.
கர்ணன் பேசாமல் நின்றான். அதிரதன் “அஸ்தினபுரியிலிருந்து அவளுக்கு பேரரசர் திருதராஷ்டிரரும் அரசர் துரியோதனரும் நீட்டும் பரிசிலும் அனுப்பட்டும். நூறு யானைகள் அவ்வரிசை சுமந்து இந்நகர் புகட்டும். அரசவீதியில் அவை அணிவகுத்து அரண்மனையை அடையட்டும். அப்போது தெரியும் சம்பாபுரியின் மக்களுக்கு இந்நகரத்தை ஆளும் உண்மை இளவரசி அவள்தான் என்று. மூடா, இந்நகர் எவரால் பாதுகாக்கப்படுகிறது? அஸ்தினபுரியின் பெரும்படைகளால். உன்னால் அல்ல. துரியோதனர் உன்னைவிட தனக்கு அணுக்கமென எண்ணுவது அவர் தங்கை விருஷாலியை. அதை மறவாதே” என்றார்.
“ஆம், நான் அதை அறிவேன்” என்றான் கர்ணன். “அந்தக் கலிங்கத்து சிறுமியிடம் சொல், அவள் இடம் என்ன என்று. இன்றே அரசுமுறை அறிவிப்பு வந்தாக வேண்டும். அவள் கருவுற்றிருப்பது உண்மையல்ல என்று. அது இயலாது என்றால் அக்கரு கலைந்துவிட்டது என்று சொல். நாளை அவ்வறிவிப்பு வரட்டும்.” கர்ணன் “இது என்ன அரசமுறை என்று எனக்கு புரியவில்லை. அரசன் என நான் அவைக்குக் கட்டுப்பட்டவன். எதையும் அமைச்சரிடம் சொல்சூழாது நான் அறிவிக்க முடியாது” என்றான்.
அதிரதன் கழுத்துநரம்புகள் புடைக்க உதடுகள் கோணலாக இழுபட “நான் இத்தனை சொல்லியும் கேளாது மீண்டும் அந்த வஞ்சம்சூழ் அந்தணனிடம் கேட்கப் போகிறாயா?” என்று கூவினார். “முதலில் அவனை காடேகும்படி ஆணையிடு. இல்லையேல் நீ வாழமாட்டாய். அடேய், நான் சொல்கிறேன், தகுதி வாய்ந்த அமைச்சர் எவரென்று. அவரை அமைச்சராக்கு. இல்லையேல் துளைவிழுந்த படகு போல் இந்த நாடு மூழ்கி அழியும். இது என் இறுதி ஆணை. நாளை இளையவளின் கரு கலைந்த செய்தியை அரசுமுறை அறிவிப்பாக வெளியிட வேண்டும். இன்றே இப்போதே நீ விருஷாலியின் அரண்மனைக்கு வரவேண்டும்” என்றபின் அதிரதன் வாயிலை நோக்கி சென்றார்.
“தந்தையே, தாங்கள் என் அரண்மனைக்கு வந்து ஏதும் அருந்தாமல் செல்கிறீர்கள்” என்றான் கர்ணன். “அருந்தலாகாது என்று முடிவெடுத்து வந்தேன். உன் யவனமதுவை அருந்துவதற்காக இங்கு வரவில்லை. எனக்கென்று சில எண்ணங்கள் உள்ளன. அவற்றை சொல்லிவிட்டுச் செல்லலாம் என்று வந்தேன். மூடா, என் மருமகள் விருஷாலி. அவள் வயிற்றில் பிறக்கும் மைந்தராலேயே நான் நீரும் உணவும் அளித்து விண்ணுக்கு ஏற்றப்படுவேன். என் கடப்பாடு அவளோடுதான். அதை உன் மூட நெஞ்சுக்கு உரைக்கும்படி சொல்லிவிட்டுச் செல்லத்தான் வந்தேன்” என்றபடி பேரோசையுடன் கதவைத் திறந்து வெளியே சென்றார் அதிரதன்.
அவருக்குப் பின்னால் சென்ற கர்ணன் வாயிலுக்கு அப்பால் நின்ற சிவதரை நோக்கினான். சிவதர் கண்களால் ஒன்றுமில்லை என்று காட்டி தலைவணங்கினார். “எவரும் எனக்கு அகம்படி வரவேண்டியதில்லை. என் குதிரை லாயத்துக்குச் செல்லும் வழி எனக்குத் தெரியும்” என்று கை தூக்கி உரக்கக் கூவியபடி அதிரதன் நடந்து சென்றார். கர்ணன் சிவதரை நோக்கி “ஆணைகளை பிறப்பித்துவிட்டுப் போகிறார்” என்று மெல்லிய குரலில் சொன்னான். “ஆம், அவ்வாணைகளை முன்னரே என்னிடமும் சொல்லிவிட்டார்” என்றார் சிவதர்.
படியிறங்கி கீழே சென்றபடி அதிரதன் உரத்த குரலில் “உச்சிப்பொழுதில் துயில்பவனை யானையை நரிகள் சூழ்வது போல் இங்குள்ள வீணர்கள் நாற்புறமும் கவ்வி இழுக்கிறார்கள். அனைவரும் எண்ணிக் கொள்ளுங்கள், அவன் என் மைந்தன். நான் கற்ற கல்வியும் பெற்ற அறிதல்களும் அவனுக்கு என்றும் துணையிருக்கும். எவரும் அவனை மீறி இந்நகரத்தை ஆளலாம் என்று எண்ணவேண்டாம்” என்று கூவியபடியே சென்றார்.
கர்ணன் சிவதரிடம் புன்னகைத்து “தந்தை வளர்ந்துகொண்டே இருக்கிறார்” என்றான். “ஆம்” என்று சொன்னபின் மேலும் ஒரு சொல் எடுக்கலாகாது என்பதுபோல் தன் இதழ்களை சிவதர் இறுக்கிக் கொண்டார்.
வெண்முரசு ஓவியங்கள் ஷண்முகவேல்\