வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 25

பகுதி நான்கு : கூற்றெனும் கேள் – 2

அவை இன்நீர் அருந்தி முடித்த பிறகு மெல்லிய பேச்சொலி இணைந்து முழக்கமென்றாக, அசைவுகள் அமைந்து சீர் கொள்ளத்தொடங்கியது. அவர்கள் அச்செய்தியால் கிளர்ந்திருப்பதை அரசமேடை மேலிருந்து காணமுடிந்தது. ஷத்ரியர்களிடம் மட்டும் சற்று ஏளனமும் அமைதியின்மையும் தெரிந்தது. வைதிகர்கள் சிறிய குழுக்களாக ஆகி தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர்.

ஹரிதர் கைகாட்ட நிமித்திகன் மேடையேறி “அவையோரே, இன்று பிற ஆயத்து அலுவல்கள் ஒன்றுமில்லை. அஸ்தினபுரியின் நற்செய்தியுடன் இங்கு அவைக்கு வந்த அமைச்சரையும் இளவரசரையும் நமது வைதிகரும் ஷத்ரியக்குடியினரும் வணிகரும் உழைப்பாளர் குலங்களும் முறைப்படி கண்டு வணங்கி வரிசை முறை இயற்றுவார்கள். அதன்பின் இத்தருணத்தை நிறைவுறச் செய்யும்படி அங்க நாட்டின் கருவூலத்திலிருந்து அஸ்தினபுரியின் அமைச்சரும் இளவரசரும் தொட்டளிக்கும் செல்வம் முனிவருக்கும் வைதிகர்க்கும் ஆலயங்களின் அறநிலைகளுக்கும் அளிக்கப்படும்” என்றான்.

அஸ்தினபுரியின் அவை நிகழ்வுகள் நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட நாடகம் போன்று இருக்கும் என்பதை கர்ணன் பலமுறை கண்டிருக்கிறான். ஒவ்வொருவரும் தாங்கள் செய்வதென்ன என்பதை முன்னரே அறிந்திருப்பர். பலமுறை அவற்றை நிகழ்த்தியிருப்பர். எனவே எந்த தடுமாற்றமும் இன்றி எழுந்து பலநூறு முறை பயிற்சி அளிக்கப்பட்டது போன்ற அசைவுகளுடன் தெளிவாக வகுக்கப்பட்ட பாதையில் வந்து அவைநின்று ஒவ்வொருவரும் முன்னரே அறிந்த சொற்றொடர்களை சொல்லி ஒவ்வொரு விழிக்கும் நன்கு பழகிய அசைவுகளை அளித்து மீள்வார்கள். தலைமுறைகளாக காடுகளுக்கு மேயச் செல்லும் மாடுகள் குளம்புகளில் வழி கொண்டிருப்பதைப் போல.

மாறாக அங்க நாட்டின் அரசவை ஓராண்டு அவைக்களப் பயிற்சிக்குப் பிறகும் பலமுறை அறிவுறுத்தப்பட்டபின்னரும் எப்போதும் ஒழுங்கற்ற ஒரு பெருந்திரள் ததும்பலாகவே இருந்தது. முன்நிரையில் இருந்த பெருவணிகர்களும் ஷத்ரியரும் எழுந்து அஸ்தினபுரியின் அமைச்சரை நோக்கி செல்வதற்குள்ளாகவே பின்நிரையிலிருந்து உரத்தகுரலில் கூவியபடி கிளர்ந்தெழுந்த சூத்திர குலங்களின் தலைவர்கள் தங்களுக்குள் கூவி அழைத்தபடியும் உரக்க பேசியபடியும் கைகளை வீசி வாழ்த்தொலி எழுப்பியபடியும் கைடபரை நோக்கி வந்தனர். அவர்கள் சற்று பிந்தி வரவேண்டும் என்று துணை அமைச்சர்கள் இருவர் ஊடே புகுந்து கையசைக்க ஒரு குலத்தலைவர் அவர்களில் ஒருவரை தூக்கி அப்பால் நகர்த்திவிட்டு முன்னால் வந்தார்.

வேதச்சொல்லெடுத்து முதலில் வாழ்த்த வேண்டிய வைதிகர்கள் கைடபரை அணுக சூத்திர குலத்தலைவர்கள் அந்நிரையை வெட்டி உட்புகுந்து அவரை சூழ்ந்து கொண்டனர். தோள்களால் உந்தப்பட்ட கைடபர் பின்னால் சரிந்து பீடத்தின்மீது விழப்போக அவரை சுஜாதன் பிடித்துக்கொண்டான். முதிய குடித்தலைவர் ஒருவர் கைடபரின் கைகளைப்பற்றி உலுக்கி அவரது தோளில் ஓங்கித் தட்டி பெருங்குரலில் “மிக மிக நல்ல செய்தி!” என்றார். “எங்கள் அரசர் அஸ்தினபுரியால் மதிப்புடன் நடத்தப்படுகிறார் என்பதை அறிந்தோம். அவர் அங்கு சூதன்மகனாகத்தான் அமர்ந்திருக்கிறார் என்று அலர்சொல்லும் வீணர்களுக்கு உரிய மறுமொழி இது.”

கைடபர் திகைத்தவராக திரும்பி ஹரிதரை நோக்க ஹரிதர் எதையும் காணாதவர் போல் திரும்பி கொண்டார். “ஆம், இங்குள்ள ஷத்ரியர்களுக்கு சரியான அடி இது” என்றார் ஒருவர். இன்னொருவர் கைடபரின் முகவாயைப் பிடித்து தன்னை நோக்கி திருப்பி “எங்கள் அரசர் பாரதவர்ஷத்தின் நிகரற்ற வீரர். பீஷ்மரும் துரோணரும் அர்ஜுனனும் அவர் முன் வெறும் விளையாட்டுச் சிறுவர்கள். சூதர்கள் வில் பயின்றால் ஷத்ரியர் அஞ்சி ஒடுங்க வேண்டியிருக்கும் என்பதற்கான சான்று அவர்தான்…” என்றார். “இது சூதன்மகன் ஆளும் அரசு… எங்கள் மூதாதையர் ஆளும் நிலம் இது.”

பின்னால் நின்ற முதிய குலத்தலைவர் ஒருவர் தன் கோலை உயரத் தூக்கி “எங்கள் சூதன்மகன் அள்ளிக் கொடுக்க அஸ்தினபுரியின் இளவரசியின் மைந்தன் முதலுணவு கொள்வதை சிந்து நாட்டரசர் ஒப்புக்கொள்வாரா?” என்றார். கைடபர் என்ன சொல்வதென்றறியாமல் திகைத்தபின் பொதுவாக “இது அரசு முடிவு மூத்தவரே. நான் ஒன்றும் சொல்வதற்கில்லை” என்றார். “எங்கள் அரசர் அஸ்தினபுரியின் அச்சத்தை நீக்கும் பெருவீரர். அவரில்லாவிட்டல் அர்ஜுனரின் அம்பு அஸ்தினபுரியை அழிக்கும். அதனால்தான் துரியோதனர் அவரை தன் அருகே வைத்திருக்கிறார்” என்றார் ஒருவர்.

கர்ணன் முதலில் சற்று திகைத்து நின்றான். அவர்களை எப்படி தடுப்பது என்பது போல சிவதரைப் பார்த்து அவரது புன்னகையை பார்த்த பின்னர் தோள் தளர்ந்து மெல்ல புன்னகைக்க தொடங்கினான். சிவதர் அவனருகே தலைகுனிந்து “ஒவ்வொரு சொல்லையும் அறிவின்மையால் முழுக்க நிறைத்தே அவையில் பரிமாற வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார்கள்” என்றார். “ஆம். அதில் அவர்களுக்கு ஓர் ஆண்டு பயிற்சியும் உள்ளது” என்றான் கர்ணன். சிவதர் சிரித்தார்.

சம்பு குலத்தலைவர் “நாங்கள் சம்புகுலத்தவர். சம்புமரமே மரங்களில் பழமையானது என அறிந்திருப்பீர்கள். உண்மையில் சூதர்களைவிடவும் சற்று உயர்ந்த சூத்திரர்கள் நாங்கள். ஆயினும் மாமன்னரின் போர் வல்லமையையும் தோற்ற எழிலையும் கண்டு அவரை எங்கள் தலைவராக ஏற்றிருக்கிறோம். எங்கள் மூத்த பெண்கள் அவ்வப்போது அரசரின் குலத்தை சுட்டிக் காட்டுவதுண்டு. ஆனால் ஆண்களாகிய நாங்கள் சற்றும் அதை பாராட்டுவதில்லை” என்றார்.

காஜு குலத்தலைவர் “ஆனால் ஒன்றுண்டு. எங்களுக்கு மனக்குறை என்று சொல்ல வேண்டுமென்றால்…” என தொடங்க கைடபர் “அரசமுறைப்படி நான் வாழ்த்துரைகளையே இங்கு பெற்றுக்கொள்ள முடியும். பிற சொற்களை பின்னர் பேசலாம்” என்றார். “வாழ்த்துக்களைத்தான் சொல்ல வந்தோம். ஆனால் கூடவே இவையனைத்தும் நினைவுக்கு வருகின்றன. ஏனென்றால் நீங்கள் அஸ்தினபுரியின் அரசரின் தூதர். அஸ்தினபுரியிடமே பெரிய படை உள்ளது… மேலும் எங்கள் அரசர் மேல் சூதன் என்று பார்க்காமல் அஸ்தினபுரியின் அரசர் அன்பு பாராட்டுகிறார்.”

“வாழ்த்துக்களை சொல்லிவிட்டு ஒவ்வொருவராக பின்னால் செல்லுங்கள்” என்றார் கச்சகுடியின் மூத்தவர். அவர்கள் ஒருவரை ஒருவர் முட்டி முண்டியடித்து முன்னால் முகம்காட்டி கைடபரின் முன்னால் தலைவணங்கி வாழ்த்துக்களை சொன்னார்கள். ஒவ்வொருவரும் தங்கள் குலத்தின் சிறப்பை சற்று மிகைப்படுத்தி சொன்னார்கள். “உண்மையில் நாங்கள் அயோத்தியில் ராகவ ராமனின் படையில் இருந்த ஷத்ரியர்கள். அங்கிருந்து ஏதோ அரசு சூழ்ச்சியால் தோற்கடிக்கப்பட்டு விரட்டப்பட்டு இங்கே வேளாண் குலங்களாக மாறிவிட்டோம். எங்கள் வாழ்த்துக்களை அஸ்தினபுரியின் அரசருக்கு தெரிவியுங்கள்” என்றார் ஒருவர்.

கைடபர் முகத்தை மாற்றமில்லாமல் வைத்துக் கொண்டு “ஆவன செய்கிறேன்” என்றார். சுஜாதனுக்கு முதலில் என்ன நிகழ்கிறதென்று புரியவில்லை. பின்னர் அவன் சிரிக்கத் தொடங்கினான். அவன் சிரிக்கலாகாது என காலால் கைடபர் அவன் விரல்களை மிதித்தார். அவன் சிரிப்பை அடக்க கழுத்து விம்மி அதிர்ந்தது. ஆனால் அவன் சிரிப்பை குலத்தலைவர்கள் தங்களை நோக்கி காட்டிய மகிழ்ச்சி என்றே எடுத்துக்கொண்டார்கள்.

பெரிய மீசையுடன் இருந்த ஒருவர் “இதை கேளுங்கள், இங்குள்ள அத்தனை சூத்திர குடிகளும் முன்னர் தாங்கள் ஷத்ரியர்களாகவோ வைசியர்களாகவோ இருந்ததாகவே சொல்வார்கள். ஆனால் நாங்கள் உண்மையிலேயே கார்த்தவீரியனின் படையில் போர் புரிந்த அரசகுடி யாதவர்கள். எங்களிடம் நாங்கள் ஹேஹயர்கள் என்பதற்கான சான்று உள்ளது. குந்தர்கள் என எங்களை இங்குள்ளவர்கள் அழைக்கிறார்கள் என்றாலும் எங்களுக்கு ஹேஹர்கள் என்று ஒரு குலப்பெயருண்டு” என்றார்.

“அது காகர்கள் என்றல்லவா?” என்றார் ஒருவர் குரலாக. அவர் திரும்பி நோக்கி சொன்னவரை உய்த்தறியமுடியாமல் பற்களை கடித்தபின் திரும்பி “கேளுங்கள் அமைச்சரே, அங்கநாட்டுக்குள் நாங்கள் வந்ததே எங்களை பரசுராமர் தேடித்தேடி வேட்டையாடுவதை தவிர்க்கத்தான். இங்கு நாங்கள் வேளாண் குடியினராக ஆனோம்.” கைடபர் பொதுவான முகத்துடன் கைகூப்பி “நன்று. பிறர் வாழ்த்துக்களை சொல்லட்டுமே” என்றார். “தங்கள் சொற்களை நான் சென்னி சூடிக்கொண்டேன் ஹேஹரே… அப்பால் விலகி அங்கு நெரித்துக்கொண்டிருக்கும் அவருக்கு வழிவிடுங்கள்.”

“இச்செய்தியை தாங்கள் நினைவில் நிறுத்தவேண்டும் என்று விரும்புகிறோம். ஏனென்றால் தாங்கள் அஸ்தினபுரிக்கு சென்றபிறகு அங்கு எங்களைப் போன்று மாகிஷ்மதியிலிருந்து வந்து குடியேறியுள்ள ஹேஹய குலத்து யாதவர்கள் எவரேனும் உள்ளனரா என்று வினவி அறிந்து எங்களுக்கு செய்தி அறிவியுங்கள்” என்றார் ஹேஹர். பின்னால் அதே குரல் “அங்கும் காகங்கள் இருக்கும்” என்றது. “யாரவன்?” என்றார் ஹேஹர்குலத்தவர். எவரென்று தெரியாமல் தவித்து திரும்பி கைடபரிடம் “ஒளிந்து நின்று பேசும் மூடர்கள். கோழைகள்” என்றார். “தெளிந்து நின்று பொய் பேசுவதைவிட ஒளிந்து உண்மை பேசுவதுமேல்” என்றது பின்னால் அக்குரல். ஹேஹர் தவித்து “நான் மேலே சொல்ல விழையவில்லை. எங்களுக்கு இங்கே எதிரிகள் மிகுதி” என்றார்.

அங்கத்தின் சிற்றமைச்சர் சாலர் “விரைந்து வாழ்த்துரைத்து விலகுக குடித்தலைவர்களே! அவை முடிய இன்னும் ஒரு நாழிகையே உள்ளது” என்றார். அவைநாயகம் உரக்க “வாழ்த்துரைத்தவர்கள் பின்னால் செல்லுங்கள். புதியவர்கள் வரட்டும்” என்றார். ஹரிதர் கைகளை விரித்து “வாழ்த்துரைத்தபின் எந்த குடியும் அவைக்குள் இருக்க வேண்டியதில்லை. வாழ்த்தொலி எழுப்பியபடியே அவர்கள் வெளியே செல்லட்டும்” என்றார்.

“ஆம், அதுவே முறை” என்றார் சூரர் குலத்தலைவர். “ஆனால் நாங்கள் எங்களை முறையாக அஸ்தினபுரியின் அமைச்சருக்கு சொல்லியாகவேண்டும். நாங்கள் சூத்திரகுடியினர் என்றாலும் எங்கள் தெய்வங்கள் ஆற்றல் மிக்கவை.” அமைச்சர் ஏதோ சொல்வதற்குள் அவர் கையமர்த்தி “மக்கள் இருப்பார்கள் இறப்பார்கள். நாடு தெய்வங்களுக்குரியது. நான் இறந்தால் என் வயல் விளையாமலாகுமா என்ன?” என்றார். “ஏன் சொல்கிறேன் என்றால், நீங்கள் நன்றாக என் சொற்களை நோக்கவேண்டும்…”

அதை நோக்காமல் ஹரிதர் “வெளியே செல்லும்போது குடிமூப்புபடி செல்லவேண்டும் என்பது நெறி. எக்குடி பெருமையிலும் வலிமையிலும் மூத்ததோ அது முதலில் செல்லட்டும். அதற்கு அடுத்த குடி தொடரட்டும்” என்றார். கர்ணன் அறியாமலேயே சிரித்துவிட சிவதர் “அரசே” என்றார். கர்ணன் தாம்பூலம் பெறுவதைப்போல முகத்தை திருப்பிக்கொண்டான். அடைப்பக்காரன் சிரித்தபடி “ஊட்டுபந்திக்கு முந்துவதுபோல முந்துகிறார்கள்” என்றான்.

அறிவிப்பை ஒருவர் இன்னொருவருக்கு சொல்ல சிலகணங்களுக்குள் அங்கு நிலைமை மாறியது. ஒவ்வொரு குடியும் ஓரிரு சொற்களில் கைடபரை வாழ்த்திவிட்டு அவையை விட்டு வெளியேற முண்டியடித்தது.  “ஊட்டுபந்தியேதான் சுக்ரரே” என்று கர்ணன் அடைப்பக்காரனிடம் சொன்னான். கண்ணெதிரிலே அவையின் பெரும்பகுதி மடைதிறந்த ஏரிக்குள்ளிருந்து நீர் ஒழிவது போல வாயிலினூடாக வழிந்தோடி மறைந்தது.

கர்ணன் தொடையில் தட்டி சிரித்தபடி சிவதரிடம் “எவர் களம்நின்று புண்கொண்ட உண்மையான ஷத்ரியர்களோ அவர்களும் வெளியேறலாம் என்று சொல்லியிருந்தால் அத்தனை வைசியர்களும் கிளம்பி சென்றிருப்பார்கள்” என்றான். அவனருகே நின்றிருந்த சேடி துணிகிழிபடும் ஒலியில் சிரித்தாள். கர்ணன் அவளை நோக்க அவள் சாமரத்துடன் விலகிச் சென்று அவைமேடை மூலையில் நின்று உடல்குறுக்கி சிரிப்பை அடக்கினாள்.

ஹரிதர் “வேதமுணர்ந்தோர் முதலில் வெளியே செல்லலாம் என்றால் எந்த அந்தணரும் வெளியேறமாட்டார்” என்றார். சிவதர் சிரிப்பை அடக்க முயன்று புரைக்கேற இருமியபடி மறுபக்கம் திரும்பிக் கொண்டார். கைடபர் ஹரிதரை நோக்கி புன்னகை செய்தார். சூத்திரர் வாழ்த்துரைத்து வெளியேறியதும் வைதிகர்கள் கைடபரை அணுகி கங்கை நீர் அள்ளி அரிமலர் சேர்த்து வீசி வேதச்சொல்லெடுத்து வாழ்த்துரைத்தனர். அதன்பின் ஷத்ரியர்களும் வைசியர்களும் அவருக்கு வாழ்த்துரை அளித்தனர்.

ஷத்ரியர் குலத்தலைவர் கைடபரிடம் “நீர் ஷத்ரியர் என எண்ணுகிறேன்” என்றார். கைடபர் “ஆம்” என்றார். “நன்று. இந்த மூடர்களின் சொற்களின் உண்மையை உணர்ந்திருப்பீர்கள்” என்றார். “ஆம்…” என்றார் கைடபர். “அதற்கு அப்பால் நான் சொல்வதற்கேதுமில்லை. நாங்கள் அனைவரும் தீர்க்கதமஸின் குருதிவழிவந்த ஷத்ரியர்கள். ராகவராமனின் இக்‌ஷுவாகு குலத்துக்குப்பின் எங்கள் குடியே தொன்மையானது. தீர்க்கதமஸ் எங்கள் குடியில் ஏழு மைந்தரைப் பெற்றார் என்பதை அறிந்திருப்பீர்.”

“ஐந்து என்றுதானே சொன்னார்கள்?” என்றான் சுஜாதன். “ஆம், அது சூதர்களின் ஒரு கதை. உண்மையில் ஏழுபேர். அங்கன், வங்கன், கலிங்கன், குண்டிரன், புண்டரன், சுமன், அத்ரூபன் என்று பெயர். அவர்களில் சுமன், அத்ரூபன் ஆகிய இருவரில் இருந்து ஏழு ஷத்ரிய குலங்கள் பிறந்தன. சதர், தசமர், அஷ்டகர், சப்தகர், பஞ்சமர், ஷோடசர் என்பவை பெருங்குலங்கள். சஹஸ்ரர் சற்று குறைவானவர்கள்” என்றார் அவர். கைடபர் “இது புதியசெய்தி” என்றார்.

“ஆனால் உண்மையில் சஹஸ்ரரே இன்று குடிகளில் முதன்மையானவர்” என பின்னால் ஒரு குரல் எழுந்தது. குடித்தலைவர் அதைச் சொன்னது யாரென்று நோக்கிவிட்டு “தீர்க்கதமஸின் குருதியில் பிறந்த காக்‌ஷீவானின் குலமே அங்கநாட்டு அரசகுலம். அது சத்யகர்மருடன் முடிவுக்கு வந்தது” என்றார். கைடபர் “ஆம், அதை அறிவேன்” என்றார். குடித்தலைவரை எவரோ பின்னாலிருந்து இழுத்தனர். அவர் மேலே சொல்ல வந்ததை விடுத்து தலைவணங்கி “நன்று சூழ்க!” என்றார்.

அவைவரிசைகள் முடிவுற்றன. பெரும்பாலானவர்கள் கிளம்பிச் செல்ல ஒழிந்த பீடங்கள் எஞ்சின. அவற்றில் குடித்தலைவர்கள் மறந்துவிட்டுச் சென்ற மேலாடைகளையும் சிறுசெப்புகளையும் ஏவலர் சேர்த்து வெளியே கொண்டுசென்றார்கள். வைதிகரும் அமைச்சர்களும் படைத்தலைவர்களும் மட்டும் இருந்தனர். சிவதர் “முறைப்படி நாம் இன்னும் அவை கலையவில்லை” என்றார். “அங்கநாட்டில் கூடிய அவைகளில் இதோ தெரிவதே அமைதியானது. அரசமுடிவுகளை இப்போதே எடுப்பது நாட்டுக்கு நலம் பயக்கும்.”

கர்ணன் எழுந்து அவையினரை வணங்கி “அமைச்சரே, இளையோனே, இருவரும் இளைப்பாறி மாலை என் தனியறைக்கு வாருங்கள். அங்கு நாம் சில தனிச்சொற்கள் பரிமாறுவோம்” என்றான். அவை முடிந்தது என உணர்ந்ததும் மேடைமாற்றுருக் கலைத்த நடிகனைப்போல இயல்புநிலைக்கு வந்த சுஜாதன் பெரிய கைகளை விரித்து யானைபோல உடலை ஊசலாட்டியபடி கர்ணனை நோக்கி வந்தான். பெரிய பற்களைக் காட்டி சிரித்தபடி சுஜாதன் “மூத்தவரே, நான் சென்ற ஒன்றரை ஆண்டு காலத்தில் அங்கு நிகழ்ந்த அனைத்தையும் தங்களிடம் சொல்ல வேண்டியிருக்கிறது. சில செய்திகளுக்கு தாங்கள் இன்றிரவு முழுக்க சிரிக்கும் அளவுக்கு நுட்பமுள்ளது” என்றான்.

கர்ணன் “என்ன?” என்று சொல்ல அவன் நகைத்தபடி “எல்லாம் உங்கள் இளையோரின் கதைகள்தான். அஸ்தினபுரியின் சூதர்களை இன்று பாரதவர்ஷமெங்கும் விரும்பி அழைக்கிறார்கள். எந்தச் சூதரும் சொல்லாத இளிவரல் கதைகளை இவர்கள்தான் சொல்கிறார்கள். மாலையுணவுக்குப்பின் அக்கதைகளை கேட்டுத்தான் ஜராசந்தரே சிரித்து உருண்டு பின் துயில்கிறார் என்கிறார்கள்” என்றான். “சான்றுக்கு ஒன்று, மூத்தவர் சித்ரகுண்டலர் பிண்டகர் என்னும் அசுரகுலத்து இளவரசி ஒருத்தியை சிறையெடுத்துவரச் சென்றார். ஆனால் அவள் அவரை சிறையெடுத்துச் சென்றுவிட்டாள். ஆயிரம் பொன் திறைநிகர் கொடுத்து மீட்டுவந்தோம்” என்றான்.

கர்ணன் வெடித்து நகைத்து “சித்ரனா? அவனுக்கென்ன அப்படி ஓர் எண்ணம்? அவனுக்கு அடுமனையே விண்ணுலகு என்றல்லவா எண்ணினேன்?” என்றான். “ஆம், ஆனால் அவரது மூத்தவர் பீமவிக்ரமர் தண்டகாரண்யத்தின் அரக்கர் குலத்துப்பெண் காளகியை கவர்ந்து வந்ததனால் இவர்  தூண்டப்பட்டிருக்கிறார். எவரிடமும் சொல்லாமல் போதிய உணவை மட்டும் எடுத்துக்கொண்டு படைக்கலமென ஏதுமின்றி அசுரநாட்டுக்கு சென்றிருக்கிறார்.”

கர்ணன் வியப்புடன் “பீமன் வென்றுவிட்டானா! அது எப்போது?” என்றான். “சிலமாதங்களுக்கு முன்பு. பீமர் இப்போது அவளை திரும்ப அனுப்ப நூல்களில் வழியுண்டா என்று துயருடன் வினவிக் கொண்டிருக்கிறார்” என்றான் சுஜாதன். “மூத்தவரே, இப்போது அஸ்தினபுரியில் எழுபது அசுரகுலத்து அரசிகளும் முப்பது அரக்கர்குலத்து அரசிகளும் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உணவுப்பழக்கம். ஒருத்தி ஒவ்வொருநாளும் தீயில் வாட்டிய பன்றிக்காது இன்றி உணவருந்துவதில்லை.”

சிவதர் முகம் சுளித்து “பன்றிக்காதா? அதை சுட்டுத் தின்கிறார்களா?” என்றார். கர்ணன் “ஏன் அப்படி கேட்கிறீர்கள் சிவதரே? அது மிகச்சிறந்த உணவல்லவா? நானே என் தென்னகப் பயணத்தில் நாள்தோறும் அதை உண்பதுண்டு” என்றபின் கண்களை சிமிட்டினான். சுஜாதன் உவகையுடன் கைவிரித்து முன்னால் வந்து “ஆம் மூத்தவரே. அவர்கள் எனக்கும் அளித்தார்கள். மிகச்சுவையானது. நான் நாள்தோறும் சென்று அவர்களுடன் அமர்ந்து அதை உண்கிறேன்” என்றான். சிவதர் வெடித்து நகைத்துவிட்டார்.

கர்ணன் கண்ணீர்வர சிரித்து திரும்பி சிவதரிடம் “அஸ்தினபுரியின் அழகே இந்த நூற்றுவரின் ஆடல்கள்தான்” என்றான். “நான் அங்கிருந்தபோது முதிய படைக்களிறு சுபரன் இவர்களில் நால்வரை மட்டும் எங்கு பார்த்தாலும் குத்த வந்தது. ஏனென்று உசாவியபோது தெரிந்தது, அதற்குப் பரிமாறப்பட்ட கவளங்களை நால்வரும் அமர்ந்து பேசியபடியே முற்றிலும் உண்டு முடித்திருக்கிறார்கள்.” ஹரிதர் கைகளை முட்டியபடி நகைத்து “இவரைப் பார்த்ததுமே எண்ணினேன் யானைக்கவளம் உண்ட உடல் என்று” என்றார்.

சுஜாதன் “குண்டசாயியும் மகோதரரும்தான் உண்மையில் யானைக்கவளத்தை அள்ளி உண்டவர்கள். வாலகியும் நிஷங்கியும் அருகே அமர்ந்திருந்த பிழையையே செய்தனர். ஆனால் சுபரன் இறுதியில் திடவர்மரைத்தான் பிடித்துக்கொண்டது. அவர் பார்க்க குண்டசாயி போலவே இருப்பார். இருவரும் ஆடைகளை மாற்றி அணிவதுமுண்டு” என்றான்.

சிவதர் “என்ன ஆயிற்று?” என்றார். “ஆடையை கழற்றிவிட்டு திடவர்மர் தப்பி விலகிவிட்டார். சபரன் அவரது ஆடையைப்பற்றிச் சுருட்டி அமலையாடியது. ஆனால் அதன்பின் கௌரவர்களைக் கண்டாலே நடுங்கத் தொடங்கிவிட்டது.” ஹரிதர் “ஏன்?” என்றார். “திடவர்மருக்கு அடுமனைப் பொறுப்பு. தென்னகத்து மிளகுத்தூள் இடிக்குமிடத்தில் இருந்து நேராகச் சென்றிருந்தார். யானையின் துதிக்கை அமைதி அடைய ஏழு நாட்களாயின.”

கர்ணன் சிரித்தபடி மீண்டும் சென்று அரியணையில் அமர்ந்துவிட்டான். அவனைச் சூழ்ந்து நின்ற அவைக்காவலரும் ஏவலரும் சாமரம் வீசிய சேடியரும் எஞ்சி நின்ற அந்தணரும் உரக்க நகைத்துக் கொண்டிருந்தனர். “எப்போதுமே யானைகளுக்கும் கௌரவர்களுக்கும்தான் ஊடலும் நட்பும் இருந்தது” என்றார் கைடபர். “அவர்களில் பலர் பிடியானையின் பாலருந்தி வளர்ந்தவர்கள்.”

சிவதர் கவலையுடன் “யானைப்பால் செரிக்குமா?” என்றார். “யானைக்குட்டிக்கு எளிதில் செரிக்காது. உடன் வாழைப்பழங்களும் அளிக்கவேண்டும். இவர்களுக்கு செரிக்கும். அரைநாழிகைக்குள் அடுத்த உணவு தேடி அலையத் தொடங்குவார்கள்” என்றார் கைடபர். “முழு எருமைக்கன்றை உண்டு குளம்புகளை மட்டும் எஞ்சவிடும் உயிர்கள் உலகில் மொத்தம் நூறுதான் என்று ஒரு சொல் அஸ்தினபுரியில் உண்டு.”

ஹரிதர் மெல்ல அருகே வந்து “கொடைநிகழ்வுக்கு பிந்துகிறது இளவரசே” என்றார். சுஜாதன் “நாங்கள் அங்கநாட்டுக்கு அரசகொடையாக பரிசில்கள் கொண்டுவந்தோம். அவற்றை கருவூலத்திற்கு அளித்துவிட்டோம்” என்றான். “ஆம், அவற்றை அரசர் இன்று மாலை பார்வையிடுவார்” என்றார் ஹரிதர். சிவதர் “அரசகொடைகளில் யானைப்பாலில் சமைக்கப்பட்ட இனிப்புகள் இல்லையா?” என்றார். “இருந்தன. அவற்றை நான் வழியிலேயே உண்டுவிட்டேன்” என்றான் சுஜாதன். அவை சிரிப்பில் அதிர்ந்தது.

கர்ணன் சிரிப்பு மாறாத முகத்துடன் எழுந்து “என் அறைக்கு வா இளையோனே. நாம் இன்றிரவெல்லாம் பேசவேண்டும்” என்றான். சுஜாதன் “அதற்குமுன் நான் பட்டத்தரசியை சந்தித்து வரிசை செய்யவேண்டும். அஸ்தினபுரியின் அரசி அளித்த பரிசில்கள் என்னிடம் உள்ளன. அவர்கள் அவையமர்வார்கள் என்று எண்ணினேன்” என்றான். “அவள் கருவுற்றிருக்கிறாள்” என்றான் கர்ணன்.

அதிலிருந்த சோர்வை சுஜாதன் அறியவில்லை. “ஆம், சொன்னார்கள். அஸ்தினபுரிக்கு மேலும் ஓர் இளவரசன் வரப்போகிறான். மூத்தவரே, அங்கே ஆமை முட்டை விரிந்ததுபோல அரண்மனையெல்லாம் இளவரசர்கள். விரைவாக ஓடமுடியாது. யாராவது ஒருவன் நம் கால்களில் சிக்கிக் கொள்வான்” என்றான். “பார்ப்பதற்கும் ஒன்றுபோலவே இருக்கிறார்கள். மொத்தம் எண்ணூறுபேர். எப்படி பெயர்களை நினைவில் வைத்துக்கொள்வது?”

சிவதர் “எண்கள் போடலாமே” என்றார். சுஜாதன் “போடலாம் என்று நானும் சொன்னேன். ஆனால் தெய்வங்கள் அவர்களை விண்ணுலகுக்கு கூட்டிச்செல்ல பெயர்கள் தேவைப்படும் என்றார்கள்” என்றான். “என்ன இடர் என்றால் ஒரேமுகத்துடன் இத்தனைபேர் பெருகிவிட்டதனால் அவர்களுக்கே அவர்களின் பெயர்கள் தெரியாது. கேட்டால் நினைவிலிருக்கும் பெயரை சொல்வார்கள். சிறியவர்கள் எப்போதும் வலிமையான பெரியவர்களின் பெயர்களைத்தான் சொல்கிறார்கள்.”

“அன்னையர் எப்படி அடையாளம் காண்கிறார்கள்?” என்றார் சிவதர் உண்மையான கவலையுடன். “அடையாளம் காண எவரும் முயல்வதே இல்லை. அருகே இருக்கும் மைந்தனை எடுத்து முலைகொடுத்து உணவூட்டுவதுடன் சரி… அவர்களை எவரும் வளர்க்க வேண்டியதில்லை. அவர்களே எங்கும் பரவி வளர்கிறார்கள்” சுஜாதன் சொன்னான். “நான் கிளம்புவதற்கு முந்தையநாள் ஐந்துபேர் மதவேழமான கீலனின் கால்சங்கிலியை அவிழ்த்து மேலேயும் ஏறிவிட்டார்கள். அவர்களை இறக்குவதற்கு எட்டு பாகன்கள் நான்கு நாழிகை போராடினர்.”

கர்ணன் சிரித்து “அத்தனைபேரையும் உடனே பார்க்க விழைகிறேன்” என்றான். “அதற்காகவே தமையன் தங்களை அழைக்கிறார்” என்றான் சுஜாதன். கைடபர் “அரசி கருவுற்றமைக்கான வரிசைகளை அஸ்தினபுரி பின்னர் தனியாக செய்யும் அரசே” என்றார். ஹரிதர் “அஸ்தினபுரியிலிருந்து ஏதேனும் ஒன்றைச் சொல்லி இங்கு பரிசில்கள் வந்தபடியேதான் உள்ளன” என்றார். “நன்று, மாலை சந்திப்போம்” என்றான் கர்ணன். சுஜாதனும் கைடபரும் தலைவணங்கி ஏவலர் சூழ அவை விட்டு நீங்கினர்.

அரசர் அவை நீங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டு முழங்கத் தொடங்கியது முரசு. நிமித்திகன் மும்முறை கொம்பை முழக்கி “அங்க நாட்டரசர் சூரியனின் மைந்தர் வசுஷேணர் அவை நீங்குகிறார். அவர் நலம் வாழ்க!” என்றான். “வாழ்க! வாழ்க!” என்றனர் அவையோர். கர்ணன் திரும்ப அவனுடைய சால்வையை சேடி எடுத்து அவனிடம் அளித்தாள். வெண்கொற்றக்குடை ஏந்திய காவலன் முன்னால் சென்றான்.

அவையிலிருந்து கர்ணன் தலைகுனிந்து எண்ணத்தில் ஆழ்ந்து நடந்தான். சிவதர் அவன் பின்னால் வர ஹரிதர் துணை அமைச்சர்களுக்கு ஆணைகளை பிறப்பித்தபடி விலகிச் சென்றார். சிவதர் “இளைய யானைக்கன்று போலிருக்கிறார். வந்த ஒரு நாளிலேயே நம் அரண்மனை மலர் கொண்டுவிட்டது” என்றார். “ஆம், இளையோரின் சிரிப்பில் ஏழு மங்கலத் தெய்வங்கள் குடிகொள்கின்றன என்பார்கள்” என்றான் கர்ணன். “எதையும் அறியாத அகவை” என்றபின் முகம் மலர்ந்து நகைத்து “நூற்றுவர் எப்போதும் அதே அகவையில் தங்கி நின்றிருக்கிறார்கள்” என்றான்.

சிவதர் “அஸ்தினபுரியின் அந்த இனிய அழைப்பு இனி என்றென்றும் சூதர்களால் பாடப்படும்” என்றார். கர்ணன் “நான் மூன்று நாட்களுக்குள் கிளம்பிச் செல்லவேண்டும் சிவதரே” என்றான். “மூன்று நாட்களுக்குள்ளா? அரசே, இங்கு பல கடமைகள் எஞ்சியிருக்கின்றன. முறைப்படி அங்கநாட்டு இளவரசர் பிறப்புக்குத் தேவையான விழவுகளையும் கொடைகளையும் நாம் இன்னும் தொடங்கவேயில்லை” என்றார் சிவதர்.

“ஆம், ஆனால் நான் சலிப்புற்றிருக்கிறேன் சிவதரே. இங்குள்ள இந்த சூழ்ச்சிகள், களவுகள் எனக்கு சோர்வூட்டுகின்றன. கேட்டீர் அல்லவா கள்ளமில்லாத என் தம்பியரை? அவர்களுடன் மட்டுமே நான் உவகையுடன் இருக்கமுடியும்” என்றான் கர்ணன்.

“தாங்கள் இரு அரசியரையும் இன்னமும் சந்திக்கவில்லை” என்றார் சிவதர். “சந்திக்கிறேன். ஆணைகளை போட்டுவிட்டு கிளம்புகிறேன். மற்றபடி இங்கிருந்து நான் ஆற்றுவது ஏதுமில்லை” என்றான். சிவதர் மீண்டும் “மூன்று நாட்களுக்குள்ளாகவா?” என்றார். “இங்கு ஹரிதர் இருக்கிறார். இந்த நாடு அவருடைய திறமைக்கு மிகச்சிறிது” என்றான். “அவரால் மட்டுமே கலிங்க அரசியை கட்டுப்படுத்தவும் முடியும் என நினைக்கிறேன்.”

25

சிவதர் “தாங்கள் எப்போது திரும்பி வருவீர்கள்?” என்றார். கர்ணன் நின்று இடையில் கைவைத்து அவரை நோக்கி “உண்மையில் நான் திரும்பி வருவதற்கே விழையவில்லை சிவதரே” என்றான். சிவதர் “அல்ல…” என சொல்லத் தொடங்க “ஆம், நான் அறிவேன். அரசகடமைகள். குலக்கடமைகள். ஆனால் நான் இச்சிறிய அரசுக்குரியவன் அல்ல. என் அரசு என்பது என் தம்பியர் உள்ளம். அங்கு மட்டுமே நான் நிகரற்ற மணிமுடிசூடி அரியணையில் அமர்ந்திருக்கிறேன்” என்றான் கர்ணன்.

வெண்முரசு ஓவியங்கள் ஷண்முகவேல்\

வெண்முரசு நாவல்கள் வாங்க

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

வெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்

முந்தைய கட்டுரைகிறிஸ்மஸ் தவளை
அடுத்த கட்டுரைவெள்ளையானை -கடிதங்கள்