தங்கம்மை அனந்தனை மெல்ல உலுக்கி ”அப்பீ…அப்பீ ”என்று கூப்பிட்டபோது அவன் சிவந்து தடித்த கண்களை திறந்து அவளைப்பார்த்தான். ”அப்பி எளிக்கணும்…நேரம் எட்டாச்சுல்லா…” அனந்தனுக்கு அவன் எங்கிருக்கிறான் என்ற எண்ணம் மெல்ல மெல்ல உள்ளே எழுந்தது. விருட்டென்று எழுந்து அமர்ந்து தலையை சொறிந்தான்.
தங்கம்மை அவனை தூக்கி கைத்தாங்கலாக அழைத்துச்சென்றாள். அவனுக்கு கண்கள் மிகவும் கூசி தலைக்குள் பல இடங்களில் வலி தெறித்தது. குமட்டல் எடுத்து உடல் உலுக்கியது, வாயில் கசப்பும் புளிப்புமான திரவம் எழுந்து வந்தது. தங்கம்மை அவனை வேகமாக இட்டுச்சென்றதும் திண்ணைக்கு அப்பால் வெளியே சிறிதளவு வாந்தி எடுத்தான். உடல் வியர்த்துவிட்டது. அப்படியே கால்கள் தலர்ந்து தூணைப்பிட்த்தபடி ஒட்டுத்திண்னையில் அமர்ந்தான். கண்களைமூடியபோது அமர்ந்திருந்த தரை ஆடுவதுபோலிருந்தது. திறந்தபோது வடக்குப்புறம் பயங்கர ஒளியுடன் கண்களை நிறைத்தது. மீண்டும் வெகுநேரம் கண்கலைமூடிக்கொண்டிருந்தான்.
தங்கம்மை சூடான கருப்பட்டி சாயையும் செம்பில் நீருமாக வந்து அவனை லேசாகத் தூக்கி அமரச்செய்து செம்புநீரை அவன் வாயில் விட்டாள். அவன் கொப்பளித்ததும் முகத்தை கழுவி சாயையை கையில்கொடுத்தால். அவன் நெற்றி நரம்புகள் துடிக்க சாயையை மெல்லமெல்ல உறிஞ்சி குடித்தான். சூடான திரவம் தொண்டையை நனைத்து இறங்கியது. மேலும் வியர்த்து குளிர்ந்ததும் அவனுக்கு சூழல் உணர்வு ஏற்பட்டது. கண்களை திறந்து காற்றிலாடிய மாமரத்தைப் பார்த்தான். இரண்டு காகங்கள் உட்கார்ந்திருந்தன, ஒன்று சிறகுகளை ஒருமுறை மடித்து இடுக்கியபின் முன்னால் அமிழ்ந்து விருட்டென்று எழுந்து எதிர்காற்றில் ஏறி வளைந்து சென்றது. கிளை மெல்ல இருமுறை ஆடியதைக் கண்டபோது அவனுக்கு துக்கம் வந்து தொண்டையை முட்டியது.
தங்கம்மை மெல்லியகுரலில் ”அப்பிக்கு இண்ணைக்கு பள்ளிக்கொடம் உண்டுல்லா?”என்றாள். அனந்தன் ”ம்” என்றான்.” இப்பிடி இருக்கும்பம் எப்பிடி போறது? நான் கேட்டு பாக்கேன்”என்றாள்.
அண்ணா நீலசட்டை போட்டு சுட்டிக்கரை வேட்டியை இறுக்கமாக தொடைமீது மடித்துக் கட்டி கையில் ரப்பர் வார்போட்ட புத்தகக் கட்டும் அதன்மீது செய்தித்தாளில் நீளமாகசுருட்டிய சோற்றுப்பொதியுமாக வந்து ”எந்திச்சானா?” என்ரபடி குந்தி அனந்தன் நெற்றியில் கையை வைத்துப் பார்த்தான்.
தங்கம்மை ”பனியொண்ணும் இல்ல”என்றாள். அண்ணா ”ம்ம். நல்ல சரக்குல்லா குடிச்சிருக்கான்.”என்றார். ”பள்ளிக்குடத்துக்கு எப்டி போறது, இந்த கெடை கெடக்கே ?”என்றாள் தங்கம்மை. ”பள்ளிக்குடத்துக்கா, தீனம் வந்த கோழி மாதிரி இருக்கான்…. இங்க இருக்கட்டு… டேய் வீட்டில இருக்கணும். எங்கயும் போகப்பிடாது கேட்டியா?”என்றான். அனந்தன் தலையாட்டினான்.
அண்ணா போனபின் அனந்தன் பல்தேய்த்து கஞ்சிகுடித்துவிட்டு மீண்டும் படுத்திருந்தான். அப்பா அலக்கிய வெள்ளை மில்வேட்டியும் பெரிய பித்தான்பட்டி வைத்த காலர் இல்லாத வெள்ளை மல்மல் சட்டையும் அணிந்தபடி வந்து எட்டிப்பார்த்து வெற்றிலையை மென்றபடி ”ம்ம்?”என்றார். ”நல்ல குறவுண்டு. கஞ்சி குடிச்சிட்டு” என்றாள் தங்கம்மை. அப்பா அவனை தடித்த புருவம் கோட்டி கூர்ந்து பார்த்தபின் ஒன்றும் பேசாமல் வெளியே சென்றார். அப்பாவின் உடைகளில் அலக்கும்போது போட்ட காரம் மணத்தது. சட்டையில் மடிப்புகள் கூர்மையாக நின்றன
”அப்பி உறங்கணும்.நான் செண்ணு பசுக்கள அவுத்து கெட்டிப்போட்டு வாறன் ”என்று தங்கம்மை போனாள். அனந்தன் மேலே உத்தரத்தில் இருந்த பல்லியையே பார்த்துக் கொண்டிருந்தான். அது தன் கண்களால் அவனை கூர்ந்து பார்த்து தூணில் ஒட்டிய கற்சிலை போல அசையாமல் இருந்தது. பின்பு மெல்ல வால் மட்டும் ஆடியது. அனந்தன் அதையே பார்த்தபடி அசையாமல் கிடந்தான். சட்டென்று அவனுக்கு அழுகை வந்தது. கண்ணீர் வழிய விசும்பி விசும்பி அழும்போதுதான் அவனுக்கு அம்மாவின் நினைவு வந்தது. அம்மா சமையலறையில் இருப்பதுபோலிருந்தது. ஆமாம், ஒலிகள் கேட்டன. பாத்திரங்களின் ஒலி. மறுகணம் அவன் உணர்ந்தான், அது அம்மாவின் ஒலிகள் அல்ல. பாத்திரங்கள் அம்மாவின் கைபட்டால் அப்படி ஒலிக்காது. அது வேறு யாரோ. ஆனால் அங்கே சென்று பார்த்தால் அம்மா இருக்கக்கூடும் என்று பட்டது. அந்த இடத்தில் அம்மா இருப்பது இயல்பானதாகையால் அம்மா இருப்பாள்.
பங்கஜாட்சி மாமிதான் சமைத்துக் கொண்டிருந்தாள். எதையோ தேடியாபடி ”நாசம்பிடிச்ச ஏற்பாடு…எங்க வச்சு தொலைஞ்சாளோ..”என்று அவனைப்பார்த்து ”என்னடா ?”என்றாள். அவள் வேறு யாரோ போல ஆகிவிட்டிருந்தாள். பார்வை குரல் எல்லாமே. அம்மா இருக்கும்போது அவள் அவனை மக்கா என்றுதான் அழைப்பாள்.
அனந்தன் ஒன்றுமில்லை என்று தலையை ஆட்டினான். ”பின்ன? போ போயி படு போ” அனந்தன் திரும்பி வந்து படிகளில் அமர்ந்து வைக்கோல்போரையே பார்த்துக் கொண்டிருந்தான். அப்பால் அப்பாவின் பூர்வீக வீட்டின் பெரிய சுவர் தெரிந்தது. அதன் மீது ஒரு ஓணான் ஏறிச்சென்றது. அப்பா பார்த்தாரென்றால் ஒரு கல்லை எடுத்து வீசி அதை துரத்துவார்.
தங்கம்மை கையில் ஒரு சேம்பிலை நிறைய சாணியுடன் வந்தாள். அதை எருக்குழியில்போட்டுவிட்டு கைகழுவியபடி ” அப்பி எளிச்சாச்சா?”’என்றாள். பங்கஜாட்சிமாமி உள்ளே இருந்தபடி ”தங்கம்மையே உனக்க கெட்டினவன் தேங்கா எடுக்க வந்தானேடீ…என்ன சொன்னான்? உனக்க எளையகுடியாளுக்க மொவ வயசறிவிச்சாளாம். கேட்டியா? ஒனக்கு விளியுண்டா?” என்றாள்
தங்கம்மை ‘அம்மிங்கிரு உங்க சொல்லியபாக்கணும்… எனக்க கெட்டினவனுக்க காரியத்த நான் பாக்குதேன்” என்றாள். ”சும்ம சொல்லப்பிடதுடீ எசக்கியேலுக்க வீட்ட பாத்தியா? நல்ல சுண்ணாம்பு உருக்கியாக்கும் கெட்டியிருக்கான். வெண்ணமாதிரி சொவரு…அவனுக்க கெட்டினவளும் வெண்ணமாதிரி இருக்கா…அந்த வீட்டிலே உன்ன மாதிரி கறுப்பிய கொண்டுவச்சா சொவரு கறையாடுமே…ஹெஹெஹெ” தங்கம்மை அதை கவனிக்காமல் ”அப்பி எழ்ந்திருச்சு காரியங்கள பாக்கணும்’;’ என்றாள்
மாமி ” தங்கம்மையே நான் போறேன். எனக்கு அங்க ஆயிரம் ஜோலி கெடக்கு. சோறும் கறியும் எடுத்துவச்சிருக்கேன்… வீட்ட பாத்துக்க. இங்கிண நிண்ணா எனக்க வீட்டிலே பூன கேறும் ” என்றபடி மறுபக்கமாக சென்றாள். தங்கம்மை வேகமாக ஓடி அடுக்களையைச் சுற்றி போய் பார்த்துவிட்டு திரும்பிவந்தாள். ”மடியப்பாத்தா சிந்தி எருமைக்க அகிடு மாதிரி தூக்கி கிடக்கு… அரியோ பருப்போ பயறோ என்னத்த எடுத்திட்டுபோறாளோ…இல்ல வல்ல பாத்திரத்தையும் கொண்டுபோறாளோ என்ன எளவோ…. ஒடயோன் இல்லாத்த வீடுல்லா…”
தங்கம்மை அனந்தன் அருகே அமர்ந்தாள். ” காலம்பற ஒரு வாய் சாயை சூடா குடுக்கல்ல மூதேவி. வச்சு ஆறி பழஞ்சி வெள்ளம் மாதிரி கொண்டுவந்து குடுக்கா…..ஆருக்க அம்மைக்க ஆமக்கனுக்க மொதலு? செரி போட்டு… ” புகையிலை காம்பைக் கிள்ளி வாயில் அதக்கியபடி ” இந்த கூத்திச்சி அப்பிக்க அப்பாவுக்க தங்கச்சியாக்குமிண்ணு சொல்லுகாளே ? உள்ளதா?”
”அப்பாவுக்க சொந்தம்” என்றான் அனந்தன் .” நல்ல தங்கச்சி . ஒறங்கும்பம் கோமணத்த உருவிக்கிட்டு சென்ணு வித்துப்போடுவா… கள்ளனுக்கு கஞ்சிவச்சவள்லா. அப்பி நான் எனக்க வீடுவரைக்கும் போணும். மூத்தவன் ஒத்தைக்காக்கும். அப்பி கூட வருதா? வீட்டை பூட்டிட்டுபோவம். இப்பம் வந்துபோடலாம்…”
அனந்தன் தலையாட்டினான். தங்கம்மை சாவிக்கொத்தை அறையில் இருந்து எடுத்து எல்லா கதவுகளையும் பூட்டினாள். வெளியே கிடந்த சாமான்களை எடுத்து நெல்லுபுரைக்குள் போட்டு அதையும் மூடி பூட்டிவிட்டு ”அப்பி வரணும்” என்று அவன் கையைபிடித்துக் கொண்டு நடந்தாள். கிழக்குவாசல் போய் அங்கிருந்து கைதோடில் நீரில் இறங்கி மறுபக்கம் பெருவரப்பில் ஏறி வயல்வெளி வழியாக நடந்தனர்.
”எசக்கியேலு உனக்க கெட்டினவனா தங்கம்மை?” என்றான் அனந்தன். ”அதினி செல்லி என்னத்துக்கு? கொச்சேமான், ஒண்ணு சொல்லட்டா, நாம ஒறங்கி எந்திரிக்கும்பம் ஓரோ பழைய நாலும் சொப்பனமாட்டு மாறிப்போவும். கொறே சொப்பனம் கண்டு முடிக்கிறப்ப சாமிக்க விளி வந்துபோடும். அந்த கடசீ நேரத்திலே ஜீவிதம் முளுக்க சொப்பனமா ஆயிடும்..அம்பிடுதான்.” அனந்தன் யோசித்துப்பார்த்தான். அப்படியானால் அம்மா அவனை விட்டுவிட்டுப்போனது கனவா? அம்மாவே கனவா?
”அம்மா சொப்பனமா தங்கம்மை?” தங்கம்மை சிரித்துக்கொண்டு அவன் தலையை தடவினாள் ”அம்மை சொப்பனமில்லை. அம்மை போனது சொப்பனம். நாளைக்கு அம்மை வந்திருவாவள்லா? கையிலே ஒரு நல்ல தங்கச்சி இருக்கும்லா?” அனந்தன் வியப்புடன் ”தங்கச்சி வயித்துக்குள்ளே இருந்து வந்திருவாள்ல?” என்றான். ”ஆமா” ”எப்டி வருவா?” தங்கம்மை ”தொப்புளு வளியா வந்திருவா” என்றான். அனந்தனுக்கு அந்தப்பதில் பொருத்தமாகப் பட்டது. அம்மாவின் தொப்புளை அவன் கவனித்திருந்தான். அது விரிந்து விரிந்து இந்தியா வரைபடம் போல கறையாக ஆகிவிட்டிருந்தது.
பாடச்சேரி எப்போதுமே ஈரமாகவும் குளுமையாகவும் இருப்பதுபோல அனந்தனுக்கு தோன்றும். அங்கே தென்னைமரங்கள் அடர்ந்திருந்தன. நிழலுக்குள் சிறிய ஓலைக்குடில்கள் எருமைகள் போல கரிய கூரைகளுடன் கிடந்தன. எருமைகளின் மூத்திரம் போல ஒவ்வொரு குடிசையும் நீரை தன்னைச்சுற்றி பரப்பி கரியசேறு சூழ்ந்து கிடந்தது. எங்கும் எதுவெதுவோ மட்கும் நாற்றம். கிளாத்தி மீனை யாரோ சுட்டிருந்தார்கள். அந்த வாடை தோலை கருக்கியதுபோல இருக்கும். தலைக்குமேல் காற்று மரங்களில் ஒழுகிச்செல்ல அந்தப்பகுதியே அமைதியாக இருந்தது. பாடகச்சேரியில் பகலில் ஆளே இல்லாதது போல் இருக்கும்
ஆனால் ஆட்கள் உண்டு. செம்பி வீட்டு மண்திண்ணையில் காராங்கிழவி கிடந்தது. மூத்திரம் சாணித்திண்ணையில் கறையாக வழிந்து முற்றத்தில் பெருகியிருந்தது. பரமன் வீட்டுத்திண்ணையில் கொச்சுகிழவன் அமர்ந்திருந்தான். எல்லா வீடுகளிலும் ஒரு கிழம் உண்டு. அவர்கள் பேசிக்கொள்வதே இல்லை. கண்களைச் சுருக்கி முற்றத்தில் நிழல்கள் ஆடுவதை பார்த்துக்கொண்டு பல்லில்லாத வாயை அசைத்து ஈறுகளை மென்றபடி அமர்ந்திருப்பார்கள்.
தங்கம்மையின் ஓசையைக் கேட்டதும் பச்சிக்கிழவி ‘ஆரு?’ என்றாள். தங்கம்மை ”நாந்தேன்,தேமானூர்க்காரி” என்றாள். ”சூடுவெள்ளம் இருக்கா குட்டீ?” ”தாறன் முத்தீ” அந்த கிழங்கள் எல்லாமே யாரிடம் பேசினாலும் உடனே தின்பதற்கோ குடிப்பதற்கோதான் கேட்பார்கள். அவர்களுக்கு சாயங்காலம் மட்டும்தான் சாப்பாடு. பகல்முழுக்க ஒன்றுமே இல்லை. அருகே சட்டியில் தண்ணிர் இருக்கும். அம்மா இருந்தால் பெரிய பாத்திரம் நிறைய தண்ணிக்கஞ்சி கொடுத்தனுப்புவாள். அதை தங்கம்மை சட்டிகளில் ஊற்றி கொடுத்தால் கிழங்கள் முகச்சுருக்கங்கள் சிலந்தி வலை போல விரிய பால்கறக்கும் ஒலி எழுப்பி உறிஞ்சி உறிஞ்சி குடிப்பார்கள். அதைத்தான் கேட்கிறார்கள்.
தங்கம்மையின் வீட்டுத்திண்ணையில் பொத்தன் அமர்ந்திருந்தான். அவன் மார்பு மரத்தால் செய்யப்பட்ட கோழிக்கூடு மாதிரி அழியழியாக எலும்புகள் தெரிய இருந்தது. கொப்பரைபோல நீளவாட்டுக்கு இருந்த பெரிய தலையின் வலப்பக்கம் கீழே விழுந்தது போல சப்பியிருந்தது. உருண்ட கண்கள் பக்கவாட்டில் பிதுங்கியிருந்தன. கரிய உதடுகளுக்குள் நிறைய புளியங்கொட்டைகளை போட்டு வைத்தது போல ஏராளமான பற்கள். தலையில் அடர்ந்த சுருள்முடி. மேலுதட்டில் அடர்ந்த கரிய மீசை. தங்கம்மையைக் கண்டதும் அவன் அமர்ந்த இடத்திலேயே ‘ஏ ஏ ஏ’ என்று எம்பி எம்பி குதித்தான். அவனுக்கு கால்கள் இல்லை. வாழைப்பூக்கள் போல இரு சிறிய கூம்புகள்தான். கைகள் இறகு பிடுங்கப்பட்ட கோழிச்சிறகுகள் மாதிரி வளைந்து சிறிதாக இருக்கும்.
தங்கம்மை அவனருகே அமர்ந்து ‘ஏன்ன மக்கா, என்ன மக்கா…எனக்க ராசாதானெ…அம்மைக்க சக்கரவர்த்திதானே…மக்களாக்குமே..”என்று அணைத்துக்கொண்டு கொஞ்சினாள். அவன் தலையை தடவி அவனை தன் மார்பில் சேர்த்து அணைத்துக்கொண்டாள். அவன் அவள் மடியில் ஊர்ந்து ஏறி மல்லாந்து படுத்துக்கொண்டு கூம்புக்கால்களை ஆட்டினான். கோணலான விரல்களால் அவள் மார்பை அள்ளி பற்றி மேல்சீலையை விலக்கி ஜம்பரை பிரித்தான். அவளுடைய முலைகளை அப்போதுதான் அனந்தன் பார்த்தான். அம்மாவின் முலைகள் போலவே பெரிதாக உருண்டிருந்தன. பொத்தன் வலது முலையை வாயால் கவ்வி சிறியபிள்ளைகளைப்போல பால்குடிக்க ஆரம்பித்தான்.
அனந்தனுக்கு மார்பு படபடத்தது. தங்கம்மை அவனை கவனிக்கவில்லை. கண்களை சரித்து பொத்தனையே பார்த்துக்கொண்டு அவன் கைகளையும் தோள்களையும் வருடியபடி இருந்தாள். பொத்தன் சப்பிக்குடிக்கும் மெல்லிய ஒலியும் அவன் வாயின் ஓரத்தில் மென்மையாக கசிந்த வெண்ணிறமான நுரையும் அனந்தனை பதற்றம் கொள்ளச்செய்தன. அவனுக்கு கால்கள் தளர்வதுபோல் இருந்தது. அவன் மெல்ல திண்ணையில் அமர்ந்தான்.
அந்த அசைவில் தங்கம்மை திரும்பிப்பார்த்தாள். ஒருகணம் அவள் அவனை அடையாளம் காணாதது போல் இருந்தது. சட்டென்று முகம் மலர்ந்து சிரித்து அவனை நோக்கி கைநீட்டினாள். அந்தச்சிரிப்பு அம்மாவைப்போலவே இருந்தது. அனந்தன் மனம் அதிர்ந்து ‘ஆ’ என்று தேம்பிவிட்டான். அவன் கண்ணீர் கன்னத்தில் வழிந்தது. தங்கம்மை ”வாலே..”என்று அவனை அழைத்தாள். அனந்தன் தளர்ந்து அவளருகே சென்றான். அவள் அவனை இழுத்து அணைத்து அவள் தோளுடன் சேத்து அணைத்துக்கொண்டாள். பாலில் வீச்சம் அடித்தது. மனித எச்சில் கலந்த பால் போல. கொஞ்சம் ரத்தவீச்சம் கலந்தது போல.
அனந்தன் கண்ணீருடன் தலைகுனிந்து அமர்ந்திருந்தான். தங்கம்மை அவனை மெல்லச்சரித்து மடியில் போட்டுக்கொண்டாள். பொத்தனின் தலையுடன் அவன் தலை முட்டியது. சட்டென்று தங்கம்மை இடதுமுலையை திறந்து அதன் காம்பை அனந்தன் வாயில் வைத்தாள். ‘குடிலே மக்கா’ என்றாள். அனந்தன் முலைக்காம்பை வாயில் வைத்தான். மென்மையான சுண்டுவிரல் போல் இருந்தது. அவன் சப்பவில்லை. ஆனால் அவன் வாயில் மெல்லிய இனிப்புடன் அடர்த்தியில்லாத பால் வந்து கொட்டியது.
போத்தன் கர் கர் என்று உரக்க மூச்சு விட்டு தூங்கிவிட்டான். அனந்தனும் கொஞ்ச நேரம் தூங்கியது போல உணர்ந்தான். ‘அம்மா’ என்றபடி அவன் விழித்துக் கொண்டான். தங்கம்மை பொத்தனை மெல்ல தூக்கி படுக்க வைத்துவிட்டு எழுந்து அவனிடம் ‘பிள்ள வரணும்… அரி இருக்கு… கஞ்சி வைக்குதேன்’ என்றாள். அவன் எழுந்துகொண்டான். அவள் ஜம்பரை கொக்கிபோட்டு தலைமயிரை கட்டியபடி எழுந்து உள்ளே சென்றாள்.
அவளது சமையலறை அனந்தன் வீட்டு கோழிக்கூடைவிட சிறிது. தரையில் மண்ணாலான இரு அடுப்புகள். தங்கம்மை வெளியே சென்று தென்னம்பாளையும் மட்டையும் கொண்டுவந்து அடுப்பில் வைத்து தீ பற்றவைத்தாள். அடுப்பை ஊதும்போது அவள் கழுத்தில் நரம்பு ஒன்று பாம்புக்குட்டி போல புடைத்தது. ‘பாம்பு’ என்று சொல்லி அனந்தன் அதை தொட்டான். ‘நரம்பாக்கும்…தீயூதி தீயூதிதானே பொண்ணாப்பொறந்தவ சாகுதா…எல்லா வீட்டிலேயும் கணக்குகொண்ணுதான் பிள்ள…அரமனையானாலும் ஓலைப்பொரையானாலும்…” தீ எரிந்தது. அதில் அவள் முகம் கோயிலில் தீபாராதனை காட்டப்படும் காளிச்சிலை போல இருந்தது.
கஞ்சி குடித்தபின் அனந்தன் தங்கம்மையுடன் பார்வத்தியார் தோட்டத்துக்கு போனான். அவள் அங்கே திருட்டுத்தனமாக சுள்ளி ஒடிக்கையில் அவன் ஒரு மரத்தில் ஏறி அமர்ந்து ஆள் பார்த்தான். அதே மரத்தில் ஒரு ஓணானும் ஏறியபோது அவன் குதித்துவிட்டான். தங்கம்மை ”ஓந்துக்கா பயருது? நல்ல ஆம்புள” என்றாள். ”ஓந்து பாத்துப் பாத்து ரெத்தத்த உறிஞ்சிடும்…மூத்திரம்போற வளியிலே ரெத்தம் போவும்” என்றான். ”பின்ன. ஏதோ மகாராணிக்குள்ள சாமான்லா…பத்திரமா வச்சுக்கிடுங்க” என்றாள் தங்கம்மை.
சாயங்காலம் மங்க ஆரம்பிக்கும்போதுதான் அனந்தனைக்கூட்டிக்கொண்டு தங்கம்மை திரும்பினாள். அதுவரை அனந்தன் தோட்டத்தில் சுற்றி நத்தைகளை பொறுக்கி சேர்த்தான். அவற்றை கொண்டுவந்து சாக்கடை ஓடையில் போட்டான். தங்கம்மை தென்னைஓலை கீற்றாக முடைந்தாள். அடுக்கி வைத்துவிட்டு இடுப்பில் கைவைத்து நிமிர்ந்து ‘எப்போ…இடுப்பு நோவுதே…” என்றாள். அவளும் அனந்தனும் ஓடைக்குச்சென்று குளித்தார்கள். அவள் ஓடையின் ஓரமாக படிந்திருந்த மென்மையான மணலை அள்ளி தேய்த்து உரசி அனந்தனை குளிப்பாட்டினாள்.
வரம்புவழியாக வரும்போது நீரில் சிவப்பு ஒளி கலந்து வயல்கள் மின்னிவிரிந்திருப்பதை அனந்தன் கண்டான். தூரத்தில் ரப்பர் தோட்டங்களில் காற்று புகுந்து மரக்கிளைக்கூட்டங்கள் கொந்தளித்தன. வயல்வழியாக காற்று வருவது ஒரு பெரிய அலைமாதிரி தெரிந்தது. நிறைய புறாக்கள் அவனை கடந்துசெல்வதுபோல காற்று சென்றது. ஓடையில் இறங்கி மறுபக்கம் ஏறி கோயில் வளைப்பில் திரும்பி வீட்டை அடைந்தார்கள்.
தங்கம்மை வீட்டை திறந்தாள். அனந்தன் திண்ணையில் அமர்ந்துகொண்டு நிழல்கள் கோயில் முற்றத்தின் வழியாக நீண்டு மதில்சுவரில் ஏறுவதை பார்த்துக்கொண்டிருந்தான். தங்கம்மை வாரியலை எடுத்துக்கொண்டு வந்தாள். அதை உள்ளங்கையில் தட்டியபடி ”அய்யே என்ன இருப்பு இது? திரிசந்தியை நேரமாக்குமே..அப்பி போயி கையும் மொகமும் களுவிட்டு வரணும்.. பிள்ளைண்ணா ஒரு ஐசரியம் வேண்டாமா?” என்றாள். அனந்தன் பேசாமல் நிழல்களையே பார்த்துக்கொண்டிருந்தான். இன்று இதுவரை நிகழ்ந்தது எல்லாமே இதற்குள் சொப்பனமாக ஆகிவிட்டிருக்குமா என்று யோசித்தான். அவன் அப்போதே கனவில்தான் இருப்பது போல இருந்தது.
தங்கம்மை முற்றத்தை கூட்டினாள். வாரியல் ஒலி புறாக்குறுகல் போல ஒலித்தது. முற்றத்தில் மணலில் மெல்லிய வளைவுகளை வரைந்தது வாரியல். தங்கம்மை பொன்னிறமான தூசிக்குள் குனிந்து சென்றுகொண்டிருந்தாள். அம்மா கூட்டும்போது அருகே நடந்து அவள் கனத்த வயிற்றை தொட்டது அனந்தனுக்கு நினைவுக்கு வந்தது. அது கனவா, இல்லை இது கனவா? ஒரு கனவுக்குள் இன்னொரு கனவு நினைவுக்கு வருமா என்ன?
போத்தி குடத்துடன் ஆற்றில் இருந்து படி ஏறி வந்தார். இடுப்பில் ஒற்றைத்துண்டு, சாணிக்கோடுபோல பூணூல். ஈரமான மார்பு முடிகளில் நீர்த்துளிகள் பளபளத்தன. ”ஏட்டீ தங்கம்மை…ஐசரியமா வீட்டு வெளக்கையும் ஏத்தி வை கேட்டியா…அவனுக ரெண்டாளும் எப்ப வாறானுகன்னு சொல்லமுடியாது. வீடு இருண்டு கெடக்கப்பிடாது…” தங்கம்மை ”லாந்தறு கொளுத்த எனக்கு தெரியாதேசாமி ” என்றாள்.
போத்தி ”லாந்தர நான் வந்து கொளுத்துதேன். நீ தாச்சாயணிவெளக்க கொளுத்தி வையி… கோயிலுவட்டமாக்கும். தேவிபிரசன்னம் உள்ள எடம்…” ”நானா?”என்றாள் தங்கம்மை குழப்பத்துடன். ”செரி, சாதியும் மயிரும் கெடக்கட்டு. கொளுத்தி வையி குட்டி. பெண்ணாப்பிறந்தாவ் எல்லாருக்கும் ஒரு வெளக்கு கொளுத்துகதுக்கு உண்டான தீ நெஞ்சில உண்டுல்லா?” என்றபடி போத்தி உள்ளே போனார்
[முற்றும்]