‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 22

பகுதி மூன்று : சிறைபெருந்தாழ்  10

ராஜபுரத்தின் அளவுக்கு பொருத்தமில்லாமல் மிகப்பெரிதாக இருந்தது அரண்மனை. கங்கை வழியாக கொண்டுவரப்பட்ட இமயச்சாரலின் தேவதாரு மரத்தடிகளை தூண்களென நாட்டி அவற்றின்மேல் ஒன்றன்மேல் ஒன்றென எழுந்து குறுகிச் சென்று  பன்னிரு குவை மாடங்களாக மாறி கொடிகள் தாங்கி வான்நீலப் பகைப்புலத்தில் எழுந்து நின்றிருந்த ஏழடுக்கு மாளிகை லாடவடிவம் கொண்டிருந்தது. அதன் அணைப்புக்குள் இருந்த பெருமுற்றத்தில் மணத்தன்னேற்பு விழவுக்கு என போடப்பட்டிருந்த அணிப்பந்தல் காலை இளங்காற்றில் அலையிளகி கொந்தளித்தது.

மாளிகையின் அனைத்து உப்பரிகைகளிலும் வண்ணப்பட்டுக் கொடிகளும் மலர்மாலைகளும் யவனமென்சீலைத் திரைகளும் பீதர்நாட்டு சித்திரஎழினிகளும் காற்றில் உலைந்தாட அது ஒழுகிச் சென்று கொண்டிருக்கும் பெருங்கலம் என்று தோன்றியது. அரண்மனையைச் சுற்றி அமைந்திருந்த நான்கு காவல் மாடங்களிலும் பெருமுரசங்கள் எச்சரிக்கை ஒலி எழுப்ப அதன் முகப்பில் காவலுக்கு நின்றிருந்த வீரர்கள் போர்க்குரலுடன் ஓடிச்சென்று தம் படைக்கலங்களை எடுத்துக் கொண்டு வாயில் நோக்கி வந்தனர். வந்த விரைவிலேயே துரியோதனனின் அம்புகள் பட்டு அவர்கள் மண்ணறைந்து விழுந்தனர். புரவிகள் அம்பு தைத்த உடம்பை விதிர்த்தபடி சுழன்றன.

கர்ணன் கோட்டைக்கு மேலும் மாளிகை விளிம்புகளிலும் எழுந்த அவர்களை விழிமுந்தா விரைவில் கணை தொடுத்து விழச்செய்தான். மூன்று புரவிகளும் அவர்களை எதிர்கொண்ட காவல்படையினரை கலைத்து சருகை எரித்துச் செல்லும் தழல்துளி போல பந்தலை நோக்கி சென்றன. அவர்கள் சென்ற வழியெங்கும் புண்பட்ட படைவீரர்கள் விழுந்து, துடித்து, கையூன்றி எழுந்து கூச்சலிட்டனர். அணிப்பந்தலின் வாயிலில் நின்ற படைத்தலைவன் பாதி முறிந்த ஆணையுடன் கழுத்து அறுபட்டு விழுந்தான். அவனைத் தொடர்ந்து வந்த அமைச்சர் தோளில் பாய்ந்த அம்புடன் சுருண்டு விழ திரும்பி நோக்கிய நிமித்திகன் அக்கணமே உயிர் துறந்தான்.

அம்புகள் பறவைக் கூட்டங்கள் போல் உட்புகுந்து கூடிநின்றவர்களை வீழ்த்தி உருவாக்கிய வழியினூடாக மூன்று புரவிகளும் பந்தலுக்குள் நுழைந்தன. ஆயிரங்கால் பந்தல் பூத்த காடு போல் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தொலைவில் அரைவட்ட அரசர்நிரையில் கலிங்கத்தின் மணஉறவு நாடி வந்த அரசர்கள் அமர்ந்திருந்தனர். ஓசைகளில் இருந்தே என்ன நடக்கிறது என்று உய்த்துணர்ந்த ஜயத்ரதன் தன் வில்லை கையில் எடுத்தபடி எழுந்து அவை முகப்பை நோக்கி ஓடி வந்தான். அவன் கையில் இருந்த அம்பு வில் உடைந்து தெறித்தது. அவன் திரும்புவதற்குள் அவன் அணிந்த பட்டுத்தலையணியை தட்டிச் சென்றது பிறிதொரு அம்பு.

மீசையை முறுக்கியபடி ஜராசந்தன் தன் பீடத்தின் மேல் கால்கள் போட்டு பெருந்தோள்களை அகற்றி சிலையென அமர்ந்திருந்தான். அவன் விழிகள் துரியோதனனை நோக்கிக் கொண்டிருந்தன. சினம்கொண்டு நிலையழிந்து பொருளிலா கூச்சலிட்டபடி ஜயத்ரதன் ஓடிவந்தான். அவனுடைய இரு படைத்தலைவர்களும் அவனை வில்லுடன் அணுக ஒருவரிடமிருந்து வில்லைப்பிடுங்கி இன்னொருவரிடமிருந்து அம்பறாத்தூணியை வாங்கிக் கொண்டு போர்க்கூச்சலுடன் அவன் கர்ணனை நோக்கி வந்தான். அவனுடைய அம்புகள் கர்ணனை சிறிய பறவைகள் போல சிறகதிர கடந்து சென்றன.

அம்புகளைத் தவிர்க்கும் பிற வில்லவர்களைப்போல கர்ணன் உடல் நெளியவில்லை. அம்புகளுக்கு எளிதில் அவன் இரையாவான் என்ற எண்ணத்தை அது அளித்தது. ஆனால் அம்பு அவன் உடலை அணுகுவதற்கு அரைக்கணத்துக்கு முன்பு இயல்பாக சற்று விலகி அவற்றை தவிர்த்தான். அவனைச் சூழ்ந்து பறந்த அம்புகள் உடலெங்கும் மண்படிந்து விதைகள் பதிந்து மெல்ல நடக்கும் காட்டுயானையைச் சூழ்ந்து கொஞ்சி விளையாடும் சிட்டுகள் என தோன்றின. அவனில் இருந்து எழுந்த அம்புகள் வைரக்கல் திரும்புகையில் சிதறுண்டு எழுந்து சுழலும் ஒளிக் கதிர்களென வந்தன. அவன் அம்பு எங்கு வரும் என்பதை அவன் விழிகளைக் கொண்டு அறிய முடியவில்லை. அவனைச் சூழ்ந்து அணுக முயன்ற வீரர்கள் அலறியவண்ணம் விழுந்தபடியே இருந்தனர்.

சடங்குகளில் ஈடுபட்டிருந்த சித்ராங்கதன் சிலகணங்களுக்குப் பின்னரே அனைத்தையும் புரிந்துகொண்டு அரியணையிலிருந்து எழுந்து இரு கைகளையும் வலிப்பு வந்ததுபோல் அசைத்து தன் படைவீரர்களை நோக்கி “விடாதீர்கள்! சூழ்ந்து கொள்ளுங்கள்! சூழ்ந்து கொள்ளுங்கள்!” என்று கூவினார். அவரது அமைச்சர்கள் அவைமேடையிலிருந்து இறங்கி ஓடி அணிமுற்றத்திற்கு வந்து “அனைத்து கோட்டை வாயில்களையும் மூடுங்கள். நம் படையினர் அனைவரையும் அரங்குக்கு வரச்சொல்லுங்கள்” என்றனர். “பின்னால் படைகள் வருகின்றனவா?” என்று ஒருவர் கூவ “பின்னால் படைகள்! பின்னால் படைகள்!” என பல குரல்கள் எழுந்தன. “மூடுங்கள்… அனைத்துவழிகளையும் மூடுங்கள்” என படைத்தலைவன் ஒருவன் முழக்கமிட்டபடி ஓடினான்.

ஜராசந்தன் தன் அருகே குனிந்த படைத்தலைவனுடன் தாழ்ந்த குரலில் பேச பிற அசரர்கள் திகைத்தவர்கள் போல செயலற்ற கைகளுடன் விழித்த கண்களுடன் அமர்ந்திருந்தனர். பலர் ஜராசந்தன் எழப்போகிறான் என எதிர்நோக்கினர். யவனத்து மெய்ப்பை அணிந்திருந்த சித்ராங்கதன் வீரர்களுக்கு ஆணைகளை பிறப்பித்தபடி ஓடிச்சென்று அரச மேடையின் வலப்பக்கத்து பெருந்தூணை அடைந்ததும் கர்ணனின் அம்பொன்று அவர் மெய்ப்பையைச் சேர்த்து அத்தூணுடன் தைத்தது. அவர் திரும்புவதற்குள் பிறிதொரு அம்பு மறுபக்கத்தை தைத்தது. என்ன நிகழ்கிறது என்று அவர் எண்ணுவதற்குள் பன்னிரு அம்புகளால் அத்தூணுடன் அவர் முழுமையாக பதிக்கப்பட்டார்.

அம்புகளால் வீரர்களை வீழ்த்தியபடியே உரத்த குரலில் கர்ணன் கூவினான். “அவையீர் அறிக! கலிங்கனின் குருதி உண்டு மீள என் அம்புக்கு விழிதொடும் கணம் போதும். அமைச்சர்கள் அறிக! படைக்கலன்கள் இக்கணமே தாழ்த்தப்பட வேண்டும். பிறிதொரு அம்பு என்னை அணுகும் எனில் உபகலிங்கர் உயிருடன் எஞ்ச மாட்டார்.” சித்ராங்கதனின் முதல் மைந்தன் சித்ரரதன் மேடைக்குப் பின்னாலிருந்து ஓடிவந்து கைகளை உயர்த்தி “படைக்கலம் தாழ்த்துங்கள். படைக்கலம் தாழ்த்துங்கள்” என்று கூவினான். அமைச்சர்கள் அவ்வாணையை ஏற்று கூவி பின்னால் ஓடினர். “படைக்கலம் தாழ்த்துங்கள். ஒரு அம்பு கூட எழலாகாது.”

அவ்வோசை முற்றத்தை எதிரொலிகளென எழுந்த மறுஆணைகள் வழியாக கடந்து சென்றது. சில கணங்களுக்குள் கலிங்கத்தின் படைகளனைத்தும் அசைவிழந்தன. ஜயத்ரதன் உரத்த குரலில் “எனக்கும் கலிங்க மன்னருக்கும் சாற்றுறுதி ஒன்றுமில்லை சூதன்மகனே…” என்றபடி நாண் அதிர வில் நின்று துடிதுடிக்க கர்ணனை நோக்கி அம்புகளை ஏவினான். அவன் வில்லை உடைந்து தெறிக்க வைத்தது கர்ணனின் பிறையம்பு. அவன் மேலாடை கிளிமுக அம்பில் தொடுக்கப்பட்டு சென்று தரையில் விழுந்தது. சினந்து அவன் திரும்பி தன் படைத்தலைவனை நோக்குவதற்குள் அப்படைத்தலைவன் சுருண்டு அவன் காலடியில் விழுந்தான். பிறிதொருவன் அவனை நோக்கி வந்த விரைவிலேயே முழங்கால் மடித்து ஒருக்களித்தான்.

ஜயத்ரதன் பின்னால் ஓட முயல்வதற்குள் கர்ணனின் வாத்துமுக அம்பு அவன் முன்நெற்றி முடியை வழித்துக்கொண்டு பின்னால் சென்றது. தலையைத் தொட்டு என்ன நடந்தது என்று புரிந்து கொண்டு அவன் திரும்புவதற்குள் அவன் வலக்காதில் அணிந்திருந்த குண்டலம் தசைத்துணுக்குடன் தெறித்தது. அவன் பாய்ந்து படைக்கலநிலை நோக்கி ஓட பிறிதொரு குண்டலம் தெறித்து அவன் முன்னால் விழுந்தது. இருகைகளையும் தூக்கியபடி அவன் அசைவிழந்து நின்றான். அவன் நெற்றியின் அமங்கலம் கண்டு அரசர்கள் சிரிக்கத் தொடங்கினர். “முழந்தாளிட்டு அமர்க சிந்துநாட்டரசே!” என்று அவனை நோக்காது உரத்த குரலில் ஆணையிட்டான் கர்ணன். சினத்தால் சுளித்து இழுபட்ட முகத்துடன் கைகளை வீசி “சூதன் மகனே சூதன் மகனே சூதன் மகனே” என்று ஜயத்ரதன் கூவினான்.

ஓர் அம்பு வந்து அவன் கச்சையைக் கிழித்து செல்ல இடையாடை நழுவி கீழே விழுந்தது. அனிச்சையாக அதைப் பற்றிய கைகளுடன் பதறியபடி தரையில் அமர்ந்தான். பிறிதொரு அம்பு வந்து அவன் இரு கால்களுக்கு நடுவே தரையில் குத்தி நின்றது. அரசர்கள் வெடித்துச் சிரிக்க ஜயத்ரதன் உடல்குறுக்கி அமர்ந்து நடுங்கினான். துரியோதனன் உரக்க நகைத்தபடி புரவியைத் திருப்பி பாய்ந்து மகளிர்நிலை நோக்கி சென்றான். உள்ளிருந்து உபகலிங்கனின் முதல்மகள் சுதர்சனை அவனை நோக்கி ஓடி வந்தாள். புரவியில் பாய்ந்து அணைந்து அவளை இடைவளைத்து தூக்கிச் சுழற்றி தன் புரவியில் அமர்த்திக் கொண்டான். திரும்பி கர்ணனிடம் “அங்கரே, உங்கள் அரசி இங்குளாள்” என்றான்.

கர்ணனின் புரவி முன்னால் பாய்ந்து அங்கு பரப்பப்பட்டிருந்த மங்கலப் பொருட்களையும் கனிகளையும் கிண்ணங்களையும் சிதறடித்தபடி மகளிர் பகுதிக்குள் சென்று பொன்பட்டுத் திரைச்சீலைகளால் மறைக்கப்பட்டிருந்த அறைக்குள் புகுந்தது. அங்கிருந்த பெண்கள் அலறியபடி சிதறி ஓடினர். பீடத்திலிருந்து எழுந்து சுவரோரமாக நெஞ்சைப் பற்றிக்கொண்டு நின்றிருந்த சுப்ரியை அவனைக் கண்டதும் இரு கைகளையும் முன்னால் நீட்டி பொருளற்ற ஒலி எழுப்பி கூவினாள். பாய்ந்து சென்று அவளை அள்ளித் தூக்கியபோது சித்ரரதன் ஓடிச்சென்று தன் தந்தையைத் தொடுத்த அம்புகளை பிடுங்க முயல இடக்கையால் அம்பு தொடுத்து அவன் தலைப்பாகையை பறக்கச் செய்தான்.

வலக்கையால் சுப்ரியையை தூக்கி தன் புரவியில் வைத்தபடி திரும்பிப் பாய்ந்து அவை முகப்புக்கு வந்தபோது மேலிருந்து சரிந்த வெண்ணிற திரைச்சீலை ஒன்று அவன் மேல் விழுந்தது. அம்பு நுனியால் அதை கிழித்தபடி முகில் பிளந்து வரும் கதிரவன் போல வெளிவந்தான். கைதூக்கி முழங்கும் குரலில் “அவையோரே, அரசே, இந்த அவை விட்டு நாங்கள் நீங்கும்வரை இங்கு எவர் அசைந்தாலும் அக்கணமே உபகலிங்கரை கொல்வேன் என்று உறுதிசொல்கிறேன்” என்று கர்ணன் கூவினான். “ஆம், இன்னும் எங்கள் படைக்கலங்கள் போதிய அளவு குருதி உண்ணவில்லை” என்று சொல்லி துரியோதனன் உரத்த ஒலியில் நகைத்தான்.

22

கர்ணனின் புரவியின் குளம்படிகள் அங்கிருந்த ஒவ்வொருவர் உடலிலும் விழுவது போல் அசைவுகள் எழுந்தன. மூங்கில்கால்களை கடந்து சிறியபீடங்களைத் தாவி அணிப்பந்தலை கடந்து சென்றதுமே கர்ணன் முற்றிலும் திரும்பி புரவியில் அமர்ந்தபடி பந்தலை இழுத்து மேலே கட்டியிருந்த கயிறுகளை தொடர் அம்புகளால் அறுத்தான். கயிறுகள் அறுபட கடல்அலை அமைவதுபோல் வெண்பந்தல் துணிப்பரப்பு வளைந்து அங்கிருந்த அனைவர் மேலும் விழத்தொடங்கியது. மேலும் மேலும் அம்புகளை விட்டு பந்தலை அறுத்தபடியே அவன் முன்னால் சென்றான். அவனுக்குப்பின்னால் பந்தல் சரிந்தபடியே வந்தது.

பின்னால் திரும்பிப் பார்த்த துரியோதனன் “அப்படியே எரியூட்டிவிட்டு கிளம்பலாம் என்று தோன்றுகிறது கர்ணா” என்றான். சிவதர் “விரைவு! விரைவு!” என கூவினார். “அரசே, நாம் இந்நகர் எல்லை விட்டு கடப்பதற்கு ஒரு நாழிகையே உள்ளது” என்றார். “ஆம், படைகள் நம்மை துரத்தக்கூடும்” என்று துரியோதனன் சொன்னான். சிவதர் “ஏற்புமண நெறிகளின்படி இந்நாட்டு எல்லை கடப்பதுவரை நம்மை கொல்வதற்கு உரிமை இவர்களுக்கு உண்டு” என்றார். அவர்கள் சிறுகோட்டைவாயிலை நோக்கிச் செல்ல அதை மூடியிருந்த கதவருகே கூடியிருந்த வீரர்கள் கூச்சலிட்டபடி வேல்களும் விற்களுமாக ஓடிவந்தனர்.

“கோட்டையை திறப்பதற்காக நாம் காத்திருக்கமுடியாது” என்று கூவியபடியே கர்ணன் புரவியில் விரைந்தான். “பக்கவாட்டில் திட்டிவாயிலொன்று உள்ளது… அது மடைப்பள்ளியை நோக்கி செல்லும்…” என்றார் சிவதர். அவர்கள் அணுகுவதை எதிர்நோக்கி நின்றிருந்த வீரர்களின் முன்வரிசையினர் அம்புபட்டு விழுந்துகொண்டிருக்க புரவிகள் திரும்பிப் பாய்ந்து துணைமாளிகையை அடைந்து படிகளில் ஏறி உள்ளே சென்றன. மாளிகைக்கூடங்களில் இருந்தவர்கள் கூச்சலிட்டபடி விலகியோடினர். பித்தளைக்கலங்களும் செம்புருளிகளும் ஓசையுடன் உருண்டன. திரைகள் கிழிபட்டு அவர்கள் மேல் ஒட்டி வழிந்து பின்னால் பறந்தன. உள்ளறைகளுக்குள் நுழைந்து பின்பக்க இடைநாழியை அடைந்து அப்பால் தெரிந்த தெருவில் பாய்ந்தோடின புரவிகள்.

அவர்கள் வெளியேறிவிட்டதை முரசுகள் கூவியறிவிக்க கலிங்கர் கோட்டைவாயிலை திறக்கத் தொடங்கினர். மரத்தாலான நகரச்சாலையில் பெருந்தாளமிட்டு விரைந்தோடிய புரவிகளை அங்கிருந்த கலிங்கப்படைகள் துரத்தின. மாளிகைகளின் உப்பரிகைகளிலும் திண்ணைகளிலும் எழுந்த கலிங்கத்து மக்கள் திகைத்து பரபரப்பு கொண்டு அவர்களை நோக்கி கூச்சலிட்டனர். சுப்ரியை அவன் தூக்கிச் சுழற்றியதில் தலைச்சமன் குலைந்திருந்தாள். புரவி சீர்விரைவு கொண்டபோது மீண்டு வெறிகொண்டவள் போல் குதிரையின் பிடரியை அறைந்தும் கர்ணனின் புயங்களை கடித்தும் திமிறினாள். அவன் அவளை இறுக்கி உடலை வளைத்து குதிரையின் பிடறியுடன் அழுத்திக் கொண்டான்.

வலி தாளாமல் அவள் கூச்சலிட்டாள். “சூதன் மகனே சூதன் மகனே” என்று சுப்ரியை கூச்சலிட்டாள். “நான் அவரை ஏற்றுக் கொண்டுவிட்டேன். அவருக்கு மலர்மாலையிட எழுந்துவிட்டேன்” என்றாள். கர்ணனின் விழிகளும் செவிகளும் போர்நோக்கி கூர்ந்திருந்தமையால் அவன் அவள் சொற்களை கேட்கவில்லை. மேலிருந்து வீசப்பட்ட தீப்பந்தம் ஒன்று தன்னை அணுகுவதை உணர்ந்து புரவியைத் திருப்பி அதைத் தவிர்த்து முன்னால் பாய்ந்த கர்ணன் மீண்டும் திரும்பி “என்ன சொன்னாய்?” என்றான். அவள் உதடுகள் வெளுத்திருக்க விழிகள் இமைகளுக்குள் சென்றன. “என்ன சொன்னாய்? என்ன சொன்னாய்?” என்று அவன் கேட்டான்.

கோட்டைப் பெருமுரசு முழங்க கதவைத் திறந்து வெளிவந்த கலிங்கத்தின் படைவீரர்கள் அருகிருந்த அரசமாளிகையின் இரு இடைவெளிகளிலிருந்து பெருகி அவர்களை நோக்கி பாய்ந்து வந்தனர். அவளைத் திருப்பி குதிரைப் பிடரியின் மேல் இருகைகளையும் கால்களையும் தொங்கவிட்டு அமைத்து தன் தொடைகளால் அவள் கால்களைக் கவ்வி குதிரைவயிற்றுடன் இறுக்கிக் கொண்ட கர்ணன் இருகைகளையும் விடுதலை செய்து அம்புக்கும் வில்லுக்கும் அளித்தான். அவன் முன் ஏவல் தெய்வங்களைப் போல அம்புகள் காற்றை நிறைத்து வழி அமைத்தன. அவை தீண்டிய வீரர்கள் அக்கணமே அலறி விழுந்தனர்.

“இவ்வழியே! இவ்வழியே!” என்று சிவதர் கூவிக்கொண்டிருந்தார். துரியோதனனின் உடலை இருகைகளாலும் இறுகப் பற்றியபடி அம்புகளிலிருந்து தன்னை காப்பதற்காக நன்றாகக் குனிந்து குதிரைப் பிடரியில் முகம் ஒட்டி அமர்ந்திருந்தாள் சுதர்சனை. துரியோதனன் அவள் கால்களை தன் கால்களால் கவ்வி குதிரை விலாவுடன் அழுத்தியபடி இரு கைகளாலும் அம்புகளை ஏவியபடி கர்ணனை தொடர்ந்து வந்தான். அவன் முகம் களிவெறியால் விழிகள் விரிந்து பற்கள் தெரிய வாய் திறந்து தெய்வமெழுந்தவன் போலிருந்தது.

பெருஞ்சாலைவிட்டு விலகி குறுகிய துணைப்பாதைக்குள் திரும்பி துடிமுழவின் விரைதாளத்தில் சென்று அதன் சந்திகளில் மும்முறை திரும்பி குறுவழிகளில் மடிந்து இரு சிறிய மாளிகைகளின் இடைவெளி வழியாக சென்றனர். சிவதர் முன்னால் சென்றபடி “என்னைத் தொடருங்கள் அரசே! இங்கு பாதை உள்ளது” என்றார். தங்களைத் தொடர்ந்து வந்த வீரர்களை அம்புகளால் தடுத்தபடி இருவரும் சென்றனர். துரியோதனனின் உடலில் அம்புகள் பாய்ந்து நின்றிருப்பதை கர்ணன் கண்டான். அவன் நோக்குவதைக் கண்டதும் “ஒன்றுமில்லை அங்கரே. எளிய புண்களே இவை. முன்செல்க!” என்றான் துரியோதனன். புரவிகளின் விரைவை குறைக்காமலேயே சாலையிலிருந்து குறுங்காட்டை அணுகி தாவிச் சென்றனர்.

புதர்களுக்கு அப்பால் எழுந்த பச்சைக்கோட்டையை அணுகியபோது கர்ணன் திரும்பி நோக்கினான். தொலைவில் அவர்கள் சென்றவழியைத் தேரும் கலிங்கர்களின் ஓசை கேட்டது. “இதோ… இதுதான்” என்று சிவதர் கூவினார். அவர்கள் வந்த பாதை திறந்திருந்தது. அங்கு மஞ்சள் துணியை ஆட்டியபடி வீரர்கள் நின்றிருந்தனர். பின்பக்கம் கலிங்க வீரர்கள் அவர்கள் சென்றவழியை புதர்களில் புரவிகள் வகுந்திருந்த வகிடைக்கொண்டே அறிந்துகொண்டு “இங்கே… இதோ!” என கூச்சலிட்டனர். “நாம் விரைவழிய முடியாது. புரவிகளை நிறுத்தாமலேயே மேலேறி செல்லவேண்டும்” என்று முன்னால் சென்றபடியே சிவதர் கூவினார்.

“புரவிகள் நம் எடையுடன் ஏற முடியுமா?” என்றான் துரியோதனன். “முழுவிரைவில் வாருங்கள். புரவிகளால் நிற்க முடியாது. முன்னரே ஏறிய வழியென அவற்றின் நுண்ணுள்ளம் அறிந்திருக்கும். ஆகவே அவை கடந்து பாயும்” என்றபடி முழு விரைவில் சிவதர் பாய்ந்து சென்றார். “என் எடை மிகுதி சிவதரே. என்னுடன் இளவரசியும் இருக்கிறாள்” என்றான் துரியோதனன். “வேறுவழியில்லை…” என்று கூவினார் சிவதர்.

சிவதரின் புரவி முழுவிரைவில் தடதடத்தபடி பாய்ந்து கோட்டைச் சுவர் அருகே சென்றதும் அரைக்கணம் திகைத்து பின்புட்டம் சிலிர்த்து வால்சுழற்றியது. ஆனால் நிற்கமுடியாமல் உரக்க கனைத்தபடி அதே விரைவில் ஐந்துமுறை குளம்பெடுத்து வைத்து சற்றே சரிந்து கோட்டையின் மண்சரிவில் ஏறி மறுபக்கம் பாய்ந்து ஓசையுடன் மண்ணில் இறங்கி வலிகொண்டு கனைத்தபடியே ஓடியது. கர்ணன் ஆழ்ந்து மேலும் ஆழ்ந்து என மூன்றுமுறை தன் குதிமுள்ளால் புரவியைக் குத்தி விரைவூட்டினான். உச்சவெறியில் கனைத்து தலைகுலுக்கியபடி சென்ற புரவி அதே போன்று சற்றே சரிந்து குளம்புகளை எடுத்து வைத்து நான்கு அடிகளில் பாய்ந்து கோட்டையைக் கடந்து உச்சியிலிருந்து மறுபக்கம் சென்று கீழே பாய்ந்தது.

அது தரையை தொடுவதற்குள் அவன் கடிவாளத்தை இழுத்து சேணக்கால்தட்டில் காலூன்றி இடைதூக்கி எழுந்து சுப்ரியையையும் ஏந்திக் கொண்டான். இரண்டு குளம்புகளும் மண்ணில் அறைபட விழுந்த புரவி வலியுடன் அலறியபடி அதே விரைவில் முன்னால் சென்று முட்புதர்களையும் குறுமரங்களையும் உடைத்தபடி ஓடியது. அது நான்கு கால்களும் நிலம் தொட்டு நிலை மீண்டபிறகு தன் உடல் அமர்த்தி முதுகில் அமைந்தான். குதிரை மூச்சுவிட்டபடி உறுமியது. அது நன்றி சொல்வதுபோலிருந்தது.

அவனுக்குப் பின்னால் தெறித்து காற்றில் எழுந்து வளைந்து கீழே வந்து விழுந்தது துரியோதனனின் புரவி. அரைக்கணத்திற்கு முன்னரே அவன் தன் உடலை அதன் முதுகில் அமைத்துவிட்டதனால் முதுகெலும்பு முறிந்து பேரொலியுடன் கனைத்தபடி முகம் தரையில் அறைபட விழுந்தது. அதன் மேலிருந்து துரியோதனன் சுதர்சனையை இடை வளைத்து அணைத்தபடி பாய்ந்து தாவி விலகினான். புரவி பின்னும் ஒருமுறை சுழன்று பின்னங்கால்கள் காற்றில் உதைபட எழுந்து மடிந்து விழுந்தது. வலி தாளாமல் தலையை சுழற்றி தரையில் அறைந்து நான்கு கால்களையும் ஓடுவது போல் அசைத்தபடி கதறியது.

சிவதர் தன் புரவியைத் திருப்பி துரியோதனன் அருகே கொண்டு வந்து “ஏறிக் கொள்ளுங்கள் அரசே, விரைந்து சென்று விடுங்கள்” என்றார். துரியோதனன் “நீங்கள்?” என்றான். “நான் இவர்களுடன் சென்று வேறு புரவியில் படகை அணுகுகிறேன். செல்லுங்கள்” என்றார். துரியோதனன் அவர் அளித்த கடிவாளத்தை பற்றிக்கொண்டு அப்புரவிமேல் ஏறி அமர்ந்தான். அவன் கையைப் பிடித்து அவன் கால்மேல் கால்வைத்து சுழன்று ஏறி அவன் முன்னால் அமர்ந்து கொண்டாள் சுதர்சனை.

கடிவாளத்தை இழுத்து தன் புரவியை செலுத்தியபோது அருகே துடிப்படங்கிக் கொண்டிருந்த குதிரையை ஒரு கணம் திரும்பி நோக்கிய துரியோதனன் முன்னால் சென்று கொண்டிருந்த கர்ணனை நோக்கினான். “செல்லுங்கள்! விரையுங்கள்!” என்றார் சிவதர். அவரும் அங்கு காவல் நின்ற மூன்று வீரர்களும் குறுங்காடுகளுக்குள் விலகி ஓடினர். கோட்டைக்கு மறுபுறம் துரத்தி வந்தவர்களின் புரவிகள் தயங்கி ஓசையிடுவதையும் வீரர்கள் கூச்சலிடுவதையும் கேட்க முடிந்தது. “விரைக! விரைக!” என்றபடி கர்ணன் முன்னால் பாய்ந்தகல துரியோதனன் தொடர்ந்தான்.

முந்தைய கட்டுரைவாசகசாலை நிகழ்ச்சி
அடுத்த கட்டுரைசங்கரர் உரை கடிதங்கள் 5