”பிரம்மா படைச்ச ஏழு லோகங்களிலயும் ஆகெ புண்யமானது பூமி. பூமியிலேயே புண்யம் உள்ளது இந்த பாரதவர்ஷம். புண்யபூமே பாரத வர்ஷேன்னுட்டாக்கும் சாஸ்திர விதி. பாரத வர்ஷம்பூமி கன்யகைக்க முகம்லா . அந்த முகத்தில இருக்க நெத்தியாக்கும் நம்ம திருவிதாங்கூர் தேசம். அனந்த பத்மநாப சாமி கிடந்துட்டு ஆட்சிசெய்த நாடு பாத்துக்க. இப்பம் செங்கோலும் கிரீடமும் இல்லேண்னாலும் நம்ம தம்புரான் சாட்சாத் சித்திரைத் திருநாள் பொன்னுதிருமேனியாக்கும். அதை மாத்த நேசமணியும் காமராஜும் நேருவும் வேற எந்த மயிரான் வந்தாலும் நடக்காது…. அது கதை வேற. செரி என்ன சொன்னேன்?”என்றார் ஜோசியர் போத்தி
”நெத்தி”என்றான் அனந்தன்.” ஆமா , நெத்தி. அதுல வச்ச குங்குமக்குறியாக்கும் திருவட்டார். நம்ம பொன்னுதிருமேனிக்க குலதெய்வம் திருவட்டாறு ஆதிகேசவனுல்லா? இங்க பாண்டி மறவன்மாரு வந்து பொறுதி கெடுக்கானுகண்ணாக்கும் திருவனந்தபுரத்துக்குப்போய் அங்க அனந்த பத்மநாபனை பிரதிஷ்டைசெய்தது…. அந்த திருவட்டார் தேசத்தில மொத்தம் பதினெட்டு திவ்ய ஷேத்ரங்கள் உண்டு. ஒம்பது விஷ்ணுவுக்கு ஒம்பது மகாதேவருக்கு. அதில எட்டாமத்த கோயிலாக்கும் இந்த திருவைப்பூர். நாரதரு சிவலிங்கத்தை கோகர்ணத்திலேருந்து எடுத்திட்டு தெக்கோட்டு போறப்பம் சூடு பொறுக்காம வச்ச ஊரு. சில்லறை ஊருண்ணா நினைக்கே? மகாதேவரு இங்க உக்கிர ரூபியாட்டு காளருத்ரமூர்த்தியா எழுந்தருளியிருக்காரு. காளருத்ரன்னா என்னது?”
”கோயிலுக்கு முன்னால காளைமாடு கெடக்கே, கல்லில கறுப்பாட்டு! ”என்றான் அனந்தன் உற்சாகமாக. ”மயிராப்போச்சு போ. டே கூமுட்ட, பொட்டா, காளன்னா கறுப்புணு அர்த்தம். இங்க மகாதேவர் கரியமூர்த்தியாட்டு இருக்காரு. கேட்டியா? ஒம்பது ஷேத்ரங்களிலயும் இங்கதான் உக்ரம் கூடுதல்…அதுக்காக்கும் எண்ணைக்கும் காலம்பற ஒம்பது கொடம் சாயங்காலம் ஒம்பது கொடம் குளுந்த தண்ணி விட்டு அபிஷேகம்செய்து தைலதாரை வைக்கியது… மகாதேவருக்க தேகத்த தொட்டா எப்டி இருக்கும்தெரியுமா? நல்ல சூடு தோசைக்கல்லு மாதிரி . ஒருநாலுநாளு அபிஷேகமும் தாரையும் இல்லேண்ணாக்க அப்டியே சூடாகி தீயா உருகிரும்லா? கொடி வெடிகள் சேந்து பொட்டினதுமாதிரி பொட்டும். ஆயிரம் சூரியன் சேந்து எந்திரிக்கிறதுமாதிரி சூடு. அம்பிடுதான். எல்லாம் காலி”
”எங்க வீடு?”என்று அனந்தன் கேட்டான்.”சகல வீடும். இந்த இந்தியா மகாராஜ்யமே போவும்ணாக்கும் சொல்லுகேன். ஹிரோஷிமால அணுகுண்டு வெடிச்சுதுல்லா அதுமாதிரி…”
அனந்தன் பீதியுடன் ”எங்க அம்மா?”என்றான். ஜோசியர் போத்தி அவன் தோள்களைப் பிடித்தபடி ”ப்ப்ட்டம்ம்ம்..அம்பிடுதான், எல்லாருமா சேந்து மேலே போயிருவோம்” என்றார். அவரது கைகள் கால் போல கொளகொளவென்றிருந்தன. அனந்தன் பீதியுடன் கண்களை இமைத்தான். ”ஒண்ணும் பயப்படாதே. போத்திமாரு பின்ன என்னத்துக்குடே இருக்கோம்? சும்மா மயித்துயதுக்கா பொன்னுதம்புரான் எங்களுக்கு மண்ணும்பொன்னும் பட்டும் வளையும் குடுத்து ஏல்பிச்சிருக்காரு? நாங்க தைலமும் வில்வநீரும் விட்டு மகாதேவனை நல்லா குளுக்க குளிப்பாட்டி வச்சிருக்கம்லா…. அந்த பாக்குவெட்டிய இங்க எடு பாப்பம்” அனந்தன் பாக்குவெட்டியை எடுத்து நீட்டினான். அவர் பாக்கை அதை வைத்து சீவி சுத்தபப்டுத்த ஆரம்பித்தார். தலையை ஆட்டியபடி ”தினமனி வம்சா. திலக லாவண்யா..”பாட்டை முனகி ”தினமணி வந்தாச்சாடே? அம்மைதாலி அறுக்கவனுக காலம்பறப்பேப்பர சாயங்காலம் அஞ்சுமணி பஸ்சில ஏத்தி விடுகானுக”
அனந்தன் ஜோசியர் போத்தியை வேடிக்கை பார்த்தான். போத்தி நல்ல வெள்ளை நிறம். தலைமயிர் அடர்த்தியாக சுண்ணாம்பு அடிக்கும் பனைத்தும்பு பிரஷ் போல இருந்தது. நீளமான வெண்ணிறத்தாடி இரு பிரிகளாக மார்பில் விழுந்து கிடந்தது. தலைமுடியை பெண்களைப்போல வளர்த்து வகிடு இல்லாமல் பின்னால் சீவிவிட்டிருப்பார். புருவம்கூட நல்ல வெண்ணிறம். வெற்றிலைபட்டு மீசையின் கிழிபக்கம் மட்டும் மண்நிறமாக இருந்தது. கழுத்தில் ஒரு ஸ்படிகமணிமாலையும் ஒரு ருத்ராட்சமாலையும் ஒரு துளசிமணிமாலையும் அணிந்திருந்தார். கையில் காப்பு . விரலில் ஆனைவால் மயிரால் மோதிரம். அவரை ஊரில் எல்லாரும் ”சாமி”என்றுதான் கூப்பிடுவார்கள். ஆனால் சாமியார்போல காவியெல்லாம் உடுக்க மாட்டார். அவரது கால்கள் இரண்டும் ஒல்லியாக உள்ளே எலும்பில்லாததுபோல் இருக்கும். உள்ளங்கால் வெள்ளை அனந்தனின் கைவெள்ளைபோல மென்மையானது. அதில் கைபோல ரேகையெல்லாம்கூட இருக்கும். ஜோசியர் போத்தி கட்டிலில் உட்கார்ந்து தன் கால்களை மலைப்பாம்பை எடுத்து வளைப்பதுபோல பலவிதமாக திருப்பி உள்ளங்கால் மேல்நோக்கி இருப்பதுபோலச் செய்வார். கால்விரல்கள் குழந்தைகளின் விரல்கள் போல நகம் வளர்ந்து மென்மையாக ஒன்றோடொன்று ஒட்டியிருக்கும். கட்டைவிரல் சற்று வளைந்து உள்ளே திரும்பி சப்பியிருக்கும்.
அவருடைய கைகள்தான் மிகப்பெரியவை. தோள்களும் புஜங்களும் முழங்கைச் சதையும் நன்றாக இறுகியிருக்கும். மார்பும் சதைப்பற்றாக மண்வெட்டுகாரர்களைப்போல இருக்கும். இடுப்புதான் மிக மிகச் சிறியது. கைகளை ஊன்றி தவழ்ந்து அவர் ஒன்றுக்குப்போகும்போது நண்டு செல்வதுபோல அனந்தனுக்குத் தோன்றும். வேறு எதற்குமே அவர் கட்டிலில் இருந்து எழுந்து போகமாட்டார். தன் பனந்தடிக் கம்பால் தரையை நாலைந்துமுறை தட்டினால் போத்தியம்மையோ பத்மமோ கொச்சுபோத்தியோ ஓடிவருவார்கள். அடிக்கடி சுக்குவெந்நீர் கேட்பார். கோளாம்பி நிறைந்து ததும்பினால் அதைக் கொண்டுபோய் கொட்டச் சொல்வார். அதிகாலையில் எழுந்து போத்திமடத்தில் வடக்குபுறத்தில் இருக்கும் கிணற்றிலேயே நீர் அள்ளி அங்குள்ள துவைகல்லில் அமர்ந்து கஸ்தூரிமஞ்சள் சேர்த்து அரைத்த பயறுமாவும் ஈஞ்சப்பட்டையும் தேய்த்து குளித்து சந்தனத்தில் கோபிக்குறி அணிந்து சலவை வேட்டியும் கைவைத்த பனியனும் அணிந்து தவழ்ந்து வெளியே வருவார்.
போத்தியின் வீட்டுக்கு முன்னால் ஓட்டுக்கூரை முனையிலிருந்து மூங்கில் வைத்து இறக்கி ஓலைவேய்ந்து பிரம்புத் தட்டி வைத்து இருபக்கமும் மறைத்த சாய்ப்பில் பனைநார்க்கட்டிலில் இரண்டு அழுக்கான தலையணைகளும் ஈட்டி மரத்தில் கொத்துபணிகள் செய்யப்பட்ட வெற்றிலைச்செல்லமும் , தோல் உறைபோட்ட சிறிய டிரான்சிஸ்டர் ரேடியோவும் பனைத்தடியாலான கழியுமாக அவர் பகல் முழுக்க உட்கார்ந்திருப்பார். அருகே ஒரு சிறிய கள்ளிப்பெட்டி மீது பஞ்சாங்கமும், ஆங்கில அகராதியும், மலையாள-சம்ஸ்கிருதம் அகராதியும், பெரியஞானக்கோவை சித்தர் பாடல்களும், மகாபாரதமும் ஒன்றின் மேல் ஒன்றாக இருக்கும். அருகே பளபளக்கும் சட்டைப்பைக் கடிகாரம். அதைப்போன்ற ஒன்றைத்தான் காந்தி இடுப்பில் செருகியிருந்தார் என்றார் ஜோசியர் போத்தி. புத்தகங்களின் மூலைகள் சுருண்டு மடிந்து அட்டை அழுக்கேறி உள்ளே ராமபாணப் பூச்சி துளைபோட்டு இருக்கும்.கந்த து¨ளைகள் வழியாக அனந்தன் தேங்காய்நாரிழையை போட்டுப்பார்ப்பது உண்டு. தாள்மடிப்புகளில் பூச்சிகளின் எச்சம்கூட இருக்கும். அருகே பேனாக்கள் வைக்கும் ஈட்டிமரத்தாலான நீளமான பெட்டி. அதன்மீது துணியில்லாத ஒரு சிவப்பான பெண் கனத்த பின்தொடையுடன் வளைந்து பின்புறம் காட்டியபடி உட்கார்ந்திருக்கும் படம் ஆங்காங்கே அழிந்து இருக்கும். அது ”இங்கிலீஷ் யக்ஷி ” என்று ஜோசியர் போத்தி சொன்னார். அவரது மூக்குக்கண்ணாடியை வைக்க ஆமையோட்டு கூடு. ஆமையின் செதில்மீது கைபட்டு கைபட்டு வழவ்ழப்பு ஏறியிருக்கும்.
ஜோசியர் போத்தி காலையிலேயே ரேடியோவை வைத்து சங்கீதம் கேட்பார். அதெல்லாம் சாஸ்த்ரீய சங்கீதம் என்று சொன்னார். ”அல்லாம இவனுகள்லாம் கேக்குத டப்பாத்தட்டு பாட்டு இல்ல. ஒரு காரியம்ணாக்க அதுக்கொரு சாஸ்திரம் வேணும். சாஸ்திரம் இல்லாதது நீசம். அதாக்கும் நான் படிச்சது… இப்பம் சினிமால பாடுகானுகளே ஆசனவாயில எறும்புகடிச்சதுமாதிரி ஒருபாட்டு….எம்போக்கிப் பயக்க…” பாட்டு குறைவாகவும் எழுத்துக்கள் மட்டும் அதிகமாகவும் இருக்கும் ஒரு வகை இசை அது. சில சமயம் ஒரு தாத்தா தப்பாகப் பாட அதை வயலின் வாசிப்பவர் சரியாக வாசித்து காட்டுவார். இவர் மீண்டும் பிடிவாதமாக தப்பாகவே பாடும்போது அவர் மீண்டும் சரியாக வாசித்துக் காட்டுவார். மாறி மாறி நீண்டநேரம் சண்டை நடக்கும். சண்டை மிகவும் வேகமாக துண்டுதுண்டாகக் கூட இருக்கும். ஜோசியர் போத்தி தலையை ஆட்டியபடி கைவிரல்களால் எதையோ எண்ணி சரிபார்த்தபடி அதை ரசித்துக் கேட்பார். சில சமயம் மகிழ்ச்சியுடன் ”பலே ” என்பார். மிகவும் உற்சாகம் வந்தால் ”கொன்னுட்டான் தாயோளி ! ”என்று கூவுவார். ”யாரு போத்தி ?”. ”இவந்தான் சோமு. கட்டையன் என்னமாப் பாடுதான் , கேட்டையா? தீ வச்சு கொளுத்தணும் தாயோளிய. ராட்சசன்லா?”
அனந்தன் அவர் அருகே போய் அமர்ந்து அதைப் போலவே தலையை ஆட்டியபடி கொஞ்சநேரம் பாட்டு கேட்க முயல்வான். சில நிமிடங்களிலேயே சலிக்கும். உடனே அவரது புத்தகங்களையும் பேனாப்பெட்டியையும் பரிசோதனைசெய்ய ஆரம்பிப்பான். ஜோசியர் போத்தி எதற்கும் விலக்கு சொல்லமாட்டார். அவர் நான்கு •பௌண்டன் பேனா வைத்திருந்தார், சிவப்பு,கறுப்பு , அரக்கு, நீலம். தினமும் எல்லாவற்றிலும் மை நிறைத்து உதறி வைப்பார். அவர் மை நிறைப்பதைப் பார்க்க அனந்தனுக்கு மிகவும்பிடிக்கும். •பில்லர் ஏதும் இல்லாமலேயே பேனாவை கணருகே கொண்டுவந்து கூர்ந்துபார்த்து புட்டியிலிருந்து சொட்டு சொட்டாக ஊற்றுவார். புட்டியில் மை கனிந்து ததும்பி கனத்து பசுவின் அகிடுபோல ஆகி நீண்டு துளியாகி ஆடி சொட்டி பேனாவுக்குள் விழுவதுவரை அனந்தன் பதற்றமாக இருபபன். துளிகளை எண்ணுவான். சரியாக கழுத்து நிறையும் இடத்தில் ஜோசியர் போத்தி மையை நிறுத்தி மூடிவிடுவார். அவர் கையில் ஒரு சொட்டுகூட படாது. ஆனால் ஜோசியர் போத்தி எழுதுவதெல்லாம் பெருமாள்செட்டி பென்சிலால்தான். ”பேனால்லாம் பெரிய காரியங்கள் எழுதறதுக்கு மக்கா. ஆதாரம் அக்ரிமெண்டு அந்தமாதிரி. வேணுமானா ஒப்பும் போடலாம். நம்ம எழுத்துகளுக்கு பெனிசில்தான் லாயக்கு, கேட்டையா?”என்பார்.
மெல்லிய குரலில் தாழ்ந்த தொனியில்தான் அவர் பேசுவார், தனக்குத்தானே அவர் பேசுவது போலிருக்கும். பார்த்தால்தான் அருகே அனந்தனோ பத்மமோ இருப்பதைக் காண முடியும். நிறைய சந்தர்ப்பங்களில் அவரே தனியாக பேசிக் கோண்டிருப்பார். தலையை ஆட்டிக்கொண்டு சிரிப்பதும் உண்டு. புத்தகங்களை கண்ணாடிபோட்டுக் கொண்டு கூர்ந்து படிப்பார். பென்சிலால் தாள்களை வாங்கி அவரே தைத்த நோட்டில் குறிப்புகள் எடுப்பார். அனந்தன் அந்தக் குறிப்புகளைப் பார்ப்பதுண்டு. எல்லாமே இங்க்லீஷ்தான். ” இங்க்லீஷ¤தான் இனியுள்ள லோகத்துக்க பாஷை. ஒரு காரியம் சத்தியமானா அதை இங்க்லீஷிலே சொல்லிப்பாக்கணும். அப்பம் அது செரியா இருந்ததுண்ணாக்க அது ரைட்டுண்ணாக்கும் அர்த்தம்….. வாட் இஸ் யுவர் நெயிம்? ” அனந்தன் கைகளை விரைப்பாக வைத்து நின்று புருவத்தை மேலே தூக்கியபடி ” டி.அனந்த கிருஷ்ணன், •போர்த் பி.”என்றான். ”பாத்தியா, சொல்லும்பம் ஒரு இது வருது பாத்தியா, இதாக்கும் சத்தியம்…”என்றார் ஜோசியர் போத்தி. அவரது கள்ளிப்பெட்டிக்குள் மேலும் நிறைய புத்தகங்கள் இருக்கும். எல்லாமே பழைய கனமான நூல்கள். உள்ளே அவரது அறையில் ஒரு அலமாராவிலும் புத்தகங்கள் வைத்திருந்தார். தேவை என்றால் பத்மத்திடம் போய் எடுத்துவரச்சொல்வார். அவரது அறைக்குள் வேறு யாரையும் அவர் அனுமதிப்பதில்லை.
ஜோசியர் போத்தி நீலமான பழுப்புக் காகிதத்தில் சரசரவென்று எழுதுவார். அனந்தன் அருகே நின்று அதை பிரமிப்புடன் பார்ப்பான். ”என்ன போத்தி எழுதிறீங்க?”என்று கேட்பான். ” இது சாஸ்திரம்லா.”என்று ஜோசியர் போத்தி சொல்வார்.”நம்ம ஏரியா என்னாண்ணாக்க ஜோசியமும் தர்சனமும். ஜோசியம் நடப்புகளை கெணிக்கிறதுக்கு. தர்சனம் ஏன் நடக்குதுண்ணு அறியிறதுக்கு….நீ இன்னும் கொஞ்சம் சோறு தின்னு இம்பிடு வளந்தேண்ணா உன்னை நான் சிஷ்யனாட்டு சேத்துக்கிடுதேன். ஆனா மீன் எறைச்சியெல்லாம் திங்கப்பிடாது. மாம்சம் திங்கிறவனுக்கு ஞானம் லபிக்காதுண்ணு சொல்லியிருக்கு…” அனந்தன் இனிமேல் மீன் சாப்பிடுவதில்லை என்று நினைத்துக் கொண்டான். புத்தகங்க¨ளை மோகத்துடன் மீண்டும் மீண்டும் புரட்டினான். அம்மா வாசிக்கும் நூல்கள் புதியவை. இவை மிகப்பழையவை. அனந்தனுக்கு இந்த நூல்களில்தான் முக்கியமான மர்மமான பல விஷயங்கள் இருப்பதாகப் பட்டது. அவன் மூச்சுப்பிடித்து எழுத்தெழுத்தாக கூட்டி படித்தான் ,” காகபுகண்டர் பாடல்கள்” . போத்தி, ” போட்டுக் கொளுத்து…டே அது காகபுசுண்டராக்கும். பெரிய சித்தர்லா” என்றார். அந்தப்பெயர் அனந்தன்னுக்குப் பிடித்திருந்தது, காக புசுண்டர்! ஆனால் அதை தனக்கு வைத்துக் கொள்வதைப்பற்றி யோசித்தபோது வேண்டாமென்று பட்டது.
”தாட்சாயணி இன்னும் எம்பிடுநாள் தீயாட்டு இருக்கணும் போத்தி?”என்று அனந்தன் கேட்டான். ” அதுக்கு இன்னும் ஒருயுகம் கெடக்கே…இது கலியுகம்லா…இந்த யுகம் முடிஞ்சு மறுபடியும் கிருதயுகம் வரணும்…” ஜோசியர் போத்தி அழுத்தமாக மென்றபடி மோவாயைத் தூக்கித்தொண்டையைக் காறினார். சுட்டுவிரலில் எடுத்து வைத்திருந்த சுண்ணாம்பை பல்லில் நீவினார்.
”எப்பம் கலிகாலம் முடியும்?”என்றான் அனந்தன் . ”சீக்கிரம் முடியும். முடியாம எங்க போக? அதுக்குண்டான லெட்சணங்கள் காணுதே…”என்றார் ஜோசியர் போத்தி ”உனக்க அம்மை இருட்டுயதுக்குள்ள அம்பிகவெளக்கை கொளுத்துதாளாடே?”
அனந்தன் உறசாகமாக ”ஓட்டில செஞ்ச தூக்கு வெளக்கை கொளுத்துவாங்க. பின்னைக்கா எண்ணைவிட்டு…” என்றான். ”நல்லெண்ணையோ தேங்காயெண்ணையோ விட்டா ஐஸ்வரியம். மீன்கறியில கோரி விடத்தெரியுதுல்லா? செரி, அந்தமட்டுக்கும் ஷேமம். இங்க செல அத்துவிட்ட சவங்க த்ரிசந்தியை நேரத்தில நிண்ணு குண்டணியும் குசும்பும் பேசுதாளுக…. பசுவு கெடந்து கத்துதுண்ணு நான் சொன்னா எனக்கமேல கோபம். நாசமத்துபோவட்டும்… இல்ல, நான் பொதுவாட்டு சொல்லுகேன்…. எப்டி நாடு வெளங்கும்?நாடு இருந்த இருப்பு என்னா, கெடந்த கெடை என்னா? செரி போட்டு. சொன்னேன்லா, கலிகால வைபவம்”
பத்மம் பாவாடை பறக்க ஓடிவந்தாள். மெல்ல வேகம் குறைந்து தலைகுனிந்து அருகே வந்து ” உன்னை உனக்க அம்மை தேடினாங்க” என்றாள். ” எதுக்கு?”என்றான் அனந்தன். ”ஆ!”என்று அவள் கையை விரித்தாள். ”பொய்யி”. பத்மம் உள்ளே சென்றபடி ”நான் என்னத்துக்கு பொய் சொல்லுகேன்…”என்றாள்.
”கொஞ்சம் சுக்குவெள்ளம் எடுப்பியாட்டீ பத்மமே?”என்றார் ஜோசியர் போத்தி. பத்மம் ஒன்றும் பேசாமல் உள்ளே போனாள். அனந்தன் ”நான் போயிட்டு பிறவு வாறேன்”என்றான். ”நீ சாயங்காலமாட்டு வா. நிறைய புராணக்கதைகள் இன்னும் இருக்கு பாத்துக்கோ… நீ எங்கிட்ட சிஷ்யப்பெடுடே”
அனந்தன்”நீங்க சாமியாரா?”என்றான். ஜோசியர் போத்தி ”இல்ல பிரம்மசாரியாக்கும். இண்ணைக்குவரை ஒரு பெண்ணை தொட்டு பாத்தது இல்லை. பத்து அறுபது வருஷமாட்டு ஹனுமார் உபாசனை செய்யுதது பின்ன என்னத்துக்கு? ஹனுமார் எனக்கு விளிச்சா விளிப்பெறமாக்கும். போன விசாகத்துக்கு அண்ணைக்கு பாத்துக்கோ நான் கொஞ்சம் மனசு விட்டுப்போட்டேன். நமக்கு ஆரும் துணையில்லேண்ணு நினைச்சு ஒரு துள்ளி கண்ணீர் விட்டேன், இந்தா இந்த மாமரத்தில வந்து இருக்காரு…”
”ஆரு?”என்றான் அனந்தன். ”வேற ஆரு? மத்தவனாக்கும். ஹனுமாரு. சாமீ நீதான் ரெட்சைண்ணு சொல்லி கும்பிட்டேன். ஒருதடவ இளிச்சுகாட்டீட்டு போயாச்சு. அச்சொட்டுண்ணா போருமே, அச்சொட்டு. உபாசனைண்ணா சும்மா இல்ல, குன்னிமணியிடை தெற்றப்பிடாது. பின்ன, நான் காவி உடுக்கல்ல, காரணம் குரு அமையல்ல. நான் இங்க இருக்கேன், காலு தளந்துபோச்சு. இல்லேண்ணா இந்நேரம் ஹிம ஸ்ருங்கங்களில தபஸ் செஞ்சிட்டிருப்பேன்.”
பத்மம் சுக்கு வெந்நீர் கொண்டுவந்து வைத்தாள். ஜோசியர் போத்தி அதை எடுத்து நாலைந்து மடக்கு குடித்தார். அனந்தன் தன் காரை ஸ்டார்ட் செய்து வளைத்து ஓட்டி கோயில்பறம்பைத் தாண்டி ஓடினான். கொட்டியம்பலத்தின் திண்ணைமீது அப்பா துண்டை விரித்து படுத்திருந்தார். அருகே தரையில் கருப்பன் படுத்திருந்தது. அப்பா அடிக்கடி அங்கே படுப்பது உண்டு. அண்ணா வைக்கோல் போரில் இருந்து வைக்கோல் பிய்த்துக் கொண்டிருந்தான்.
அனந்தன் வீட்டுக்குள் சென்றான். அம்மாவைக்காணவில்லை. சமையலறையில் சோறும் குழம்பும் எல்லாம் மூடிவைக்கப்பட்டிருந்தன. கனலடுப்பில் குடிக்க ஜீரகத்தண்ணீர் கிடந்து கணகணவென்றது. வடக்குபக்கம் தங்கம்மை உட்கார்ந்து கால்களை நீட்டியபடி வெற்றிலைபோட்டுக்கொண்டிருந்தாள்.அனந்தன் அவள் அருகே போய் அமர்ந்து அவள் தோளில் தலையைச் சாய்த்தான்.
”அப்பி அம்மைக்க கூட குளிக்கப் போகல்லியா?” என்றாள் தங்கம்மை ”அம்மை இங்க கெடந்து தேடிச்சே” . அனந்தன் ”நான் ஜோசியர்போத்திக்க கிட்ட பேசீட்டு இருந்தேன்” என்றாள்.”அவரு அஞ்செளுத்தும் நஞ்செளுத்தும் படிச்ச சாமியில்லா.அப்பி என்னத்த பேசுது அவியள்ட்ட ?” அனந்தன் ”நான் அவருக்க சிஷ்யனாட்டு ஆகப்போறன்”என்றான். ”அதுக்கு அப்பி சூத்ரனாக்குமே. சாஸ்திரம் படிக்க ஒக்காதே” என்றாள் தங்கம்மை. அனந்தன் அதைப்பற்றி தீவிரமாக யோசித்தான். போத்தி பிராமணர். மகாராஜாவும் அறைக்கல் பப்புதம்பியும் கொச்சுதம்பியும் எல்லாம் ஷத்ரியர்கள். மிச்சபேரெல்லாம் சூத்திரர்கள். நாயரும் நாடாரும் ஆசாரியும் கொல்லனும் எல்லாருமே சூத்திரர்கள்.
சூத்திரர்கள் மகாதேவரையும் விஷ்ணுவையும் பகவதியையும் எல்லாம் தொட்டு பூஜைசெய்ய முடியாது. சாமிகளுக்கு அதெல்லாம் பிடிக்காது. ஆனால் மாடனையும் எசக்கியையும் முத்தாலம்மனையும் எல்லாம் சூத்திரர்கள் தொட்டு கும்பிடலாம். அந்த சாமிகள்லாம் மாமிசம் சாப்பிடுகிற நீச தெய்வங்கள் என்று ஜோசியர் போத்தி சொன்னார். அவற்றுக்கு கருவாடும் சுருட்டும் கள்ளும் கூட படைப்பார்கள். பெரும்பாலும் நடு ராத்திரியில்தான் பூஜைவைப்பதெல்லாம். யக்ஷிகள்? சில யக்ஷிகளுக்கு போத்திகளே பூஜை வைக்கிறார்கள்… அனந்தனுக்கு குழப்பமாகவே இருந்தது.
முன்வாசலில் யாரோ வந்து கூப்பிடுவதுபோலக் கேட்டது. தங்கம்மை எழுந்து வாசல்கள் வழியாக எட்டிபபர்த்தபின் ”ஆரு?”என்று வீட்டை வளைந்து வாசலுக்குச் சென்றாள். முன் முற்றத்தில் தேங்காய் வியாபாரி எசக்கியேல் நின்றுகொண்டிருந்தார். அனந்தன் அவரளவுக்கு கறுப்பான யாரையுமே பார்த்தது இல்லை. எலும்புகள் புடைத்த ஒல்லியான கரிய தோல் வியர்வையில் நன்றாக பளபளத்தது. தோளில் ஒரு சிவப்பு சுட்டித்துண்டு. உச்சந்தலையில் எடைசுமந்து முடிவிழுந்த வழுக்கை.
தங்கம்மை ”வாருங்க”என்றாள். ”பிள்ளையளொக்கெ சொகமாட்டு இருக்காவளா?”. எசக்கியேல் தங்கம்மையை ஏறிட்டுப் பார்க்காமல் மாமரத்தைப்பார்த்து திரும்பியபடி ”இருக்காவ” என்றார்.
”மூத்தவள இந்நேற்று பாத்தேன். வயசறிவிச்சுப்போட்டா…. நல்ல குட்டியாக்கும்” என்றாள் தங்கம்மை.”இரியுங்க. வெள்ளம் குடிச்சுதியளா? அவிய இல்ல. குளிக்க போயிருக்காவ…”
”நான் நிக்குதேன்…” என்றார் இசக்கியேல். அவர் தங்கம்மையை திரும்பி பார்க்கவேயில்லை. தங்கம்மை அனந்தனிடம் ”அப்பி அப்பாவைப் பாத்துதா?” என்றாள். ”கொட்டியம்பலத்தில இருக்காரு”என்றான். ”ஓடிச்செண்ணு தேங்கா யாவாரி வந்திட்டுண்டுண்ணு செல்லிட்டு வரணும்…”
அனந்தன் ஓடிப்போய் கொட்டியம்பலத்தில் படுத்திருந்த அப்பா அருகே சென்று நின்றான். அப்பா கண்மூடி ஏதோ முனகியபடி இருந்தார். சுவர்களில் இருந்த ஓவியங்களின் கண்கள் அவரைப் பார்த்தன.
அவன் நிற்பதை உணர்ந்து அப்பா கண்விழித்தார். எழுந்து அமர்ந்து ”ம்ம்?”என்றார். அனந்தன் வீட்டை நோக்கி கைநீட்டினான். ”என்னடா? ” அனந்தன் ”ஆளு”என்றான். அப்பா எட்டி வீட்டை பார்த்தார். எழுந்து துண்டை தலையில் கட்டியபடி எரிச்சலுடன் ” சவம், வாயத்தெறந்து ஒரு வார்த்தை பேசாதே…”என்றபடி வீட்டை நோக்கிச் சென்றார்.
மனதுக்குள்”தேங்கா யாபாரி எசக்கியேல் வந்திருக்காரு. தேங்கா வாங்கிறதுக்கு…”என்று கூவியபடி அனந்தன் பின்னால் சென்றான். அப்பா வீட்டுமுன் சென்றபோது எசக்கியேல் திண்ணையில் அமர்ந்து தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தார். அப்பாவைக்கண்டதும் எழுந்து சிரித்தபடி நின்றார்.
”ஆ, என்ன நாடாரே?மகளுக்கு சடங்குண்ணு சொன்னாங்க… செலவுக்கு வழியாச்சு…ம்ம் ” என்றபடி அப்பா திண்ணையில் அமர்ந்தார். நாடார் ”ஆமா அது ஒருமாதிரி களிஞ்சு போட்டு. அதாக்கும் தேங்கா எடுக்க தாமஸமானது…”
”அது போட்டு.தேங்கா கெட்டுபோகாதுல்லா. நம்ம ஜாண்சனை பாக்கிறதுண்டா? ஒரு காரியம் சொல்லியிருந்தேன் அவன்கிட்ட” என்றார் அப்பா. ”ரெப்பர் தையிக்க காரியமோ?”என்றார் இசக்கியேல். ”ஆமா. உம்ம கிட்ட சொன்னானோ?”
”அவன் கள்ள களுவேறியாக்கும் ஏமானே. பல எடங்களில ஒட்டுரெப்பர்ணு காட்டுரெப்பரைக் குடுத்து சதிச்சுப்போட்டான். ஏமானுக்கு நான் நல்ல ஒறிஜினல் ரெப்பர் தை தாறன்.நம்ம வீட்டுக்காரிக்க தம்பி ஒருத்தனுக்கு நேழ்சறியாக்கும் தொளிலு…”
”எப்பம் சொல்லுவேரு?”என்றார் அப்பா.” மத்தாநாள் வெளுக்கும்பம் பயல வரச்சொல்லுதேன்… தேங்கா எம்பிடு கெடக்கு…?” அப்பா எழுந்தபடி ” ஆயிரம் தேத்தணும். சக்கறத்துக்கு வலிய புத்திமுட்டு உண்டு. பல செலவுகள். வந்து பாரும்…”
இருவருமாக தேங்காய்கூண்டை அணுகினர். வரிச்சில் போட்டு தடுத்து கட்டிய கூண்டுக்குள் தேங்காய்கள் உலர்ந்து கிடந்தன. எசக்கியேல் ஒவ்வொன்றாக எடுத்து குலுக்கி கையால் சுண்டி பார்த்தார். சுற்றுவந்து ஏறிட்டுபார்த்து தலையை ஆட்டினார்
அப்பா ”வெளைச்சிலுக்கு கொறையிருக்காது”என்றார். எசக்கியேல் ”சின்ன தேங்காயாக்கும்… தொலிச்சா அடைக்கா கணக்குக்கு இருக்கும்” .அப்பா ”நீரு நம்மகிட்ட உம்ம சோலிய காட்டவேண்டாம் நாடாரே.நாங்க தேங்காயப் பாக்க தொடங்கி காலம் குறெ ஆச்சு”என்றார்.
”ஆயிரம் தேறும்”என்றார் எசக்கியேல். ”என்ன வேணும்?” .அப்பா ”நீரு சொல்லும்வே”என்றார். ”அஞ்ஞூறுண்ணாக்க ஒருமாதிரி கட்டிவரும்” என்றார் எசக்கியேல்.
”செரி நீரு போவும். நம்ம தம்மில இனி பேச்சு இல்ல” அப்பா திரும்பினார். எசக்கியேல் ”ஒம்மாணை, கண்ணாணை, ஏமானே இப்பம் தேங்காய்க்கு வெலை இல்ல. பின்ன நாம ஒரு மரியாதிக்காக்கும் வந்து எடுக்கியது. செரி போட்டும், அம்பதுகூட்டிக்கிடுதேன்…” ”எழுநூறுண்ணாக்க சொல்லு. இல்லேண்ணா பாப்பம்” ”எளுநூறா?ஏமான் என்ன பேசுது? எளுநூறுக்கு வேங்கி கொண்டுபோய் உருக்கி உருப்படி செய்யியதுக்கு இதென்ன பொன்னா வெள்ளியா? கடசீ வெல, அம்பிடுதேன், எனக்கும் வேற கெதியில்ல .அறுநூறு வச்சுகிடணும்…” எசக்கியேல் மடியிலிருந்து தேக்கிலையில் பொதிந்து வைத்திருந்த ரூபாய்ச்சுருளை எடுத்து நீட்டி ”ஏமான் பிடிக்கணும்…. ஆண்டவராணை இதாக்கும் கடசீ வெலை…பிடிக்கணும்ணாக்கும் சொல்லுகது…”
அப்பா ரூபாயை வாங்காமல் பின்னாக்ர்ந்தபடி ”எழுநூறுக்கு ஒரு சில்லிபைசா கொறைஞ்சா எனக்கு வேண்டாம்வே” என்றார். ”இருக்கட்டும் ஏமானே, நாளைக்குப்பின்ன நாமளும் பாக்கணுமே”என்று இன்னொரு இருபது ரூபாயைச் சேர்த்து அப்பாவின் கையைப்பிடித்து அழுத்திவிட்டு பின்னால் திரும்பி ”லே எட்டான் ,வாபிலே வந்து பெறக்குலே”என்றார் எசக்கியேல்.
மாமரத்தடியில் பெரிய கயிற்று வல்லத்துடன் நின்ற எட்டான் சிரித்தபடி வந்தான். அவனுடைய பற்கள் மஞ்சளாக பெரிதாக இருந்தன. உடம்பெங்கும் தேமல். அப்பா ” ரொம்ப கொறைச்சுப்போட்டேருவே நாடாரே..”என்றபடி பின்னால் நடக்க எசக்கியேல் ”என்ன ஏமானே இண்ணைக்கா நாம ஏமானைப் பாக்கியது? பண்டு நான் அஞ்ஞானியாட்டு இருக்கும்பம் இஞ்ச தானே மண்ணும் சாணகமும் சொமந்தது… பெறக்குலே”
எட்டான் மணிப்பொச்சம் கயிற்றால் வலைபோலக் கட்டிய வல்லத்தை விரித்து பிடிக்க எசக்கியேல் ” ஏசுவே…”என்றபின் இரு தேங்காய்களை கையில் எடுத்து குலுக்கி ”ஒண்ணே லாபம் போடு ரெண்டே லாபம் போடு ” என்று போட ஆரம்பித்தார். வல்லம் நிறைந்ததும் சேர்த்து கட்டி எட்டானின் தலையில் தூக்கிவைக்க அவன் கால்களை வளைத்து சற்று குன்றி சரசரவென ஓட ஆரம்பித்தான். கோயிலுக்கு கிழக்கே குருவிக்காடு போகும் சாலையில் மாட்டுவண்டி நிற்கும்.
”அறப்புரைவீட்டுல என்னெண்ணு போச்சு? ” என்றபடி அப்பா அங்கே அமர்ந்து கொண்டார். ”அறுவதுமேனிக்கு. நல்ல உருளன் தேங்கா” எசக்கியேல் தேங்காய்களை எடுத்து எண்ணி கொட்டு போட்டார்.
அப்பா”அது எனக்க கிட்ட வெளையுமாவே ? நல்ல உருளன் தேங்காவ அறுவதுமேனிக்கு குடுக்க அறப்புரயானுக கேணையனுகளா? அந்த வெள்ளத்த வாங்கி வையும் ” என்றார்.
”கர்த்தாவாணை….எனக்க ரெண்டுமக்களாணை…உள்ளதாட்டு சொல்லுகேன்… நான் பொய் சொல்லமாட்டேன்…” அப்பா சிரித்தபடி ”கர்த்தாவ விடும் நாடாரே. பிள்ளையளுக்க மேல சத்தியம் செய்யப்பிடாது” என்றார்.
எசக்கியேல் தேங்காய்களை எண்ணிப்போட்டுக் கொண்டிருந்தபோது அம்மா குளித்து முடித்து மார்பில் முண்டுகட்டி தோள்நிறைய துவைத்து முறுக்கிய துணிகளுமாக வந்தாள். நெற்றியில் ஈரமான தலைமயிர் ஒட்டியிருந்தது. அம்மாவின் வயிறு நன்றாக உருண்டு அதன்மேல் வெண்ணிற வேட்டி ஈரமாக படிந்திருக்க பெரிய பீங்கான் பரணி போல இருந்தது. ஈரவேட்டியின் மீது அம்மாவின் தொப்புள்குழி தெரிந்தது. இலேசாக மூச்சு வாங்கியபடி கால்களை சற்றே பரப்பி வைத்து நடந்து வந்து இடுப்பில் கைவைத்து அரைக்கணம் நின்று படி ஏறினாள். எசக்கியேல் ” அம்மிணி குளிச்சதுக்கா?”என்று கேட்டபோது அம்மா ஒன்றுமே பேசாமல் அவரை திரும்பிக்கூட பார்க்காமல் நடந்துசென்றாள்.
எட்டான் மீண்டும் வல்லத்துடன் வந்தபோது ” வெக்கம் நடபிலே எரப்பாளி …வாறான் பாரு ஆனைநடை அளகுநடையாட்டு…”என்றார் எசக்கியேல். அம்மா ”டேய்” என்று கூப்பிட்டாள். அனந்தன் உள்ளே ஓடினான். அம்மா ஸ்டூலில் அமர்ந்திருக்க தங்கம்மை அவள் தலையை துவட்டிக்கொண்டிருந்தாள். ஈர உடை மாற்றி புதியவேட்டியும் ஜம்பரும் அணிந்திருந்தாள். வயிற்றின் மீது மென்மையான மயிர்ப்பரவல் வெண்தாளில் பென்சிலால் மரம் வரைந்தது போல தெரிந்தது. அனந்தன் அதை தொடப்போனான். இப்போதெல்லாம் அம்மாவைபபர்த்தாலே அவனுக்கு வயிற்றில் தொடவேண்டும் என்ற நினைப்புதான். அம்மா அவன் கையை லேசாக விலக்கி ”எங்கடா போனே?” என்றாள் அம்மா. ”ஜோசியர் போத்தி தாக்ஷாயணிதேவிக்க கதை சொன்னாரு…” அம்மா ”கண்டகண்ட எடங்களில வாயி பாத்துட்டு நில்லு…”என்றாள். சட்டென்று உடைந்த குரலில் ”என்னெண்ணு பிழைச்சு என்ன கெதியாட்டு வாழப்போறியோ” என்று சொன்னதும் கண்ணீ£ர் வந்து அழ ஆரம்பித்தாள்.
”அம்மிங்கிரு இப்பம் என்னத்துக்கு கரையுது? இதெல்லாம் எங்கும் உள்ள காரியங்க இல்லியா? சும்மா கொச்சைப்போட்டு கரைய வைக்காம சோலியப்பாக்கணும்… பெட்டி கெட்டியாச்சா?” அம்மா ஒன்றும் சொல்லவில்லை.
அனந்தன் ”பெட்டி எதுக்கு?” என்றான். உடனே அவனுக்கு புரிந்தது. ”நட்டாலம் போறமா? எனக்கு சட்டை? அலக்கின சட்டை?”என்று பரபரத்தான். தங்கம்மை கூடவே வெளியே ஓடி ”நான் நட்டாலம் போரேனே…. உன்னை கூட்டிட்டுப்போக மாட்டேனே…”என்றான். மீண்டும் உள்ளே வந்து நிலைகொள்ளாமல் சுற்றி மீண்டும் எட்டிபபர்த்து ”அங்கல்லாம் ஸ்கூலே இல்ல.” என்றான்.
அம்மா அறையில் இருந்து காய்ந்த முண்டும் சிவப்பு ஜம்பரும் புளியிலைக்கரை போட்ட நேரியதும் உடுத்து வந்தாள். கூந்தலை கையாலேயே நீவி நீவி சீவி நுனியில் முடிச்சு போட்டு கட்டியிருந்தாள். இறுக்கமான ஜம்பராதலால் புஜங்களில் சதை பிதுங்கி நின்றது.
அம்மா சீனவிளக்குடன் வைப்புமுறிக்குச் சென்றாள். ”நானும் சட்டை எடுத்து வைப்பேன்”என்று அனந்தன் கூடவே சென்றான்.”சும்மா போடா”என்று அம்மா அதட்டினாள். அனந்தன் சற்று குன்றினான். ஏன் அப்படி திட்டுகிறாள்? அழுவதுபோல் இருந்தது முகம்
அம்மா வைப்புமுறிக்குள் சென்று விளக்கை பத்ய்தாயம்மீது வைத்தாள். அறைக்குள் எலிப்புழுக்கை வாசனை. கரப்பாம்பூச்சி உருண்டை வாசனை. கூரை ஓரமாக காய்ந்த பலாஇலையும் மாவிலையும் நெற்கதிருமாக சென்ற சித்திரைக்கு அறை நிறைத்தது தொங்க அதன் நிழல் கூரைப்பரப்பில் விரிந்து கிடந்தது. முறியில் பாதியை அடைத்தபடி பெரிய பத்தாயம். இன்னொரு சுவர் ஓரமாக ஒன்றின்மேல் ஒன்றாக அப்பாவின் ஆதாரப்பெட்டிகள். உடுப்புபெட்டி மூன்றுதான். இருப்பதிலேயே பெரிய பெட்டிதான் அம்மாவுக்கு. அம்மாவின் சின்ன அண்ணா பட்டாளத்திலிருந்து கொண்டுவந்த இலைநிறமான தகரப்பெட்டியை எடுத்து கீழே டமாலென்று வைத்தாள். அந்தப்பெட்டிக்குள் உள்ளே சிவப்பாக இருக்கும், அத்தர் மணம் அடிக்கும். அனந்தன் அமர்ந்து அதன் உள்பகுதியை தொட்டுப்பார்த்தான். பெட்டியின் தகரம் நெளிநெளியாக இருக்கும். உள்ளே அதேபோல வளைந்து வளைந்து…”எந்திரிடா”என்று அம்மா எரிச்சலுடன் சொன்னாள். அனந்தன் நிமிர்ந்து அம்மாவை பார்த்தான். அம்மா மூக்கை லேசாக உறிஞ்சிக்கொண்டு அழுதாள். ”ஏம்மா அழுதே?” அம்மா ஒன்றும் சொல்லவில்லை.
அம்மா தன் உடுப்புபெட்டியை திறந்து முண்டுகளையும் நேரியதுகளையும் எடுத்து எடுத்து பெட்டிக்குள் தாறுமாறாகப் போட்டாள். ”நான் அடுக்கி வைக்கட்டா?” என்று அனந்தன் கேட்டான். அம்மா ஒன்றும் சொல்லாமலிருக்கவே அவனே துணிகளை அடுக்கி வைத்தான். அம்மாவுக்கு ஸாரிகள் எட்டுதான் இருந்தன. பச்சைப்பாசி மாதிரி வெல்வெட் ஸாரி ஒன்று. கொன்றைப்பூ மாதிரி மஞ்சள் ஒன்று. செம்பருத்திச் சிவப்பு ஒன்று. நீலத்தில் வெள்ளைக் கோடுபோட்ட ஸாரியை அனந்தனுக்கு அவ்வளவாகப் பிடிக்காது. அம்மா பஸ்ஸில் போவதாக இருந்தால்தான் ஸாரி உடுப்பாள். ”அம்மா இண்ணைக்கு நீ என்ன ஸாரி உடுப்பே?” என்றான் அனந்தன் ” இந்த செவலை ஸாரி உடுப்பியா?”
அம்மா அந்த நீல ஸாரியை மட்டும் எடுத்து பத்தாயம் மீது வைத்தாள். அதைத்தான் உடுக்கப் போகிறாளா? ”அது வேண்டாம். அது சீத்தை ஸாரி”என்றான் அனந்தன். அம்மா அதைப் பொருட்படுத்தவேயில்லை. பெட்டியை அப்படியே மூடி தூக்கிக் கொண்டு வெளியே போனாள். அனந்தன் பின்னால் போனான். அவனுடைய சட்டை ஏன் எடுக்கவில்லை. ”அம்ம எனக்க சட்டை?”
அம்மா அவனைப் பார்த்தாள். அவனை அவள் அடையாளம் காணவில்லை என்று தோன்றியது. ”அம்மா”என்றான். அம்மா உள்ளே வந்து இன்னொரு உடுப்புபெட்டியை திறந்து அனந்தனின் சட்டையையும் நிஜாரையும் எடுத்து நீட்டினாள். வெள்ளையில் சிவப்பு கோடுகள் போட்ட சட்டை. சிவப்பு கால்சட்டை. ”நான் இப்பமே போடட்டா?”என்றான் அனந்தன். ”செரி போடு” என்றாள் அம்மா.
அனந்தன் உற்சாகமாக துள்ளி உடனேயே தன் இடுப்பிலிருந்த கால்சட்டையை கழற்றி அங்கேயெ போட்டுவிட்டு அலக்கிய கால்ச்சட்டையை போட்டான். அது சற்று தொளதொளப்பாக இருந்தது. அப்பா சட்டைகள் தைக்கும்போதே சற்று பெரிதாகத்தான் தைக்கச் சொல்வார். பெரிதானலும்போடும்பொருட்டு. ”அம்மா ஊக்கு” அம்மா தரையில் சிரமப்பட்டு அமர்ந்து தன் மாலையில் இருந்து ஊக்கு எடுத்து அனந்தனின் இடுப்பை இறுக்கி போட்டுவிட்டாள்.
அனந்தன் மூச்சை இழுத்துப் பிடித்தபின் மெல்ல விட்டான். சட்டை அவனுக்கு மிகவும் பெரிதாகவே இருந்தது. கோளாம்பி ஸ்பீக்கர் போல விரைப்பாக நின்ற விரிந்த கைகள் வழியாக காற்று உள்ளே வந்து அக்குளில் பட்டது. அம்மா சட்டையை கால்சட்டைக்குள் விட்டு இழுத்து விட்டபோது நன்றாக இருந்தது. காலர் விரைப்பாக கன்னத்தை தீண்டியதை அனந்தன் தொட்டு தொட்டுப் பார்த்துக் கொண்டான்.
அம்மாவிடம் புத்தகங்களையும் சிலேட்டையும் எடுத்துக்கொள்ளலாமா என்று கேட்க அனந்தன் நினைத்தான். ஆனால் தேவையில்லை என்று தந்திரமாக எண்ணிக் கொண்டான். அங்கேதான் பள்ளிக்கூடமே இல்லையே. அம்மா சோர்வாக நடந்து அடுக்களைக்குப் போய் அடுப்பில் இருந்த சாப்பாட்டைப்பார்த்தாள்.
எசக்கியேல் சென்ற பின் அப்பா ரூபாயை எண்ணியபடி உள்ளே வந்தார். ”எடீ”என்றார் . அம்மா மூச்சுவாங்க நடந்து போய் ”ம்ம்”என்றாள். ”மேலு கழுவணும். வந்து உண்ணுதேன்”என்றார். அம்மா ”ம்ம்” என்றாள். அப்பா நீலத்துவர்த்தும் லைபாய் சோப்பும் எடுத்துக்கொண்டு குளிக்கப்போகும் வழியில் அவனைப் பார்த்தார்.
”இவன் என்னத்துக்கு இப்டி நிக்கான்?” என்றார். ”சும்மா. பிள்ள ஆசைப்பட்டான்”என்றாள் அம்மா. ”ம்ம்”என்றபடி அப்பா சென்றார். அப்பாவின் பின்மண்டையில் நல்ல வட்டமான வழுக்கை. ஒரு கல்லை விட்டெறிந்தால் கணீரென்று சத்தம் கேட்கும். நல்ல ரத்தம் வரும்.
வடக்குப்புறம் நெல்லறையில் உரலில் சாய்ந்து தங்கம்மை ஏதோ நினைத்தபடி அமர்ந்திருந்தாள். கண்களில் லேசாகக் கண்ணீர் இருந்தது போல அனந்தன்னுக்குத் தோன்றியது. தங்கம்மை அழுவதேயில்லை. கண்களைவிட்டு கன்ணீர் வெளியே வராது. அவள் திரும்பி அனந்தனைப் பார்த்து வருத்தமாக புன்னகை செய்தபடி ”அப்பி வரணும்”என்றாள்.
அனந்தன் அவள் அருகே போய் அமர்ந்தபடி, ”நீ எதுக்கு கரையுதே?”என்றான். ”ஆரு கரைஞ்சது நானா? நான் கரையியதில்ல அப்பியே” ”ஏன்” ”கரைஞ்சு ஒரு பிரயோஜனம் இல்லைல்லா. அதுக்கொண்டு கரைய வேண்டாம்ணு தீருமானிச்சாச்சு” அது நல்ல தீர்மானம்தான் என்று அனந்தன் நினைத்தான்.ஆனால் அவனுக்கு அழுகை அவனை மீறித்தான் வரும்.
தங்கம்மை அனந்தனின் தலையை தடவியபடி பெருமூச்சுடன் மீண்டும் ஏதோ சிந்திக்க ஆரம்பித்தாள். அவள் கவனம் விலகியதை அந்த தடவலில் வந்த வேறுபாடுமூலமே அனந்தன் அறிந்தான். மெல்ல எழுந்து அவன் விலகியபோது அவள் அறியவில்லை. வீட்டுக்குள் நுழைந்து அறைக்குள் போனான்.அம்மா மடியில் ஒரு புத்தகத்துடன் அமர்ந்திருந்தாள். அம்மா கன்னத்தில் கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. எங்கோ பார்த்து வெறித்துக் கொண்டிருந்தாள்.
அனந்தன் அலுப்புடன் கோயில் பறம்புக்கு சென்றான். இரண்டு எருமைகளை ஓட்டியபடி பாலையன் சென்றான்” அப்பியே இங்க இருந்து என்ன சொப்பனம் காணுது?”என்று கேட்டபடி சென்றான். அவனுடைய இறுக்கமான தொடைச்ச்சதைகளின் அசைவை வெகுதூரம் வரை அனந்தன் கவனித்தான். கிருஷ்ணவேணியின் நினைவு வந்தது. பத்மம் இப்போது எங்கே இருப்பாள். ஜோசியர் போத்தி வேகமாக எழுதிக் கொண்டிருபபர். எல்லாம் சாஸ்திரம். சாஸ்திரம் படிக்கவேண்டுமென்றால் மீன் சாப்பிடக்கூடாது.
தோளில் துணிகளுடன் எண்ணை தேய்த்து விரித்த கூந்தல் மின்ன, முகமெங்கும் எண்ணை தேய்த்து பகவதி சிலைபோல பளபளக்க கிருஷ்ணவேணி சென்றாள். ”அய்யோ இதாரு கொச்சோ? நல்ல சட்டையாக்குமே இட்டிருக்கது…”என்று அனந்தன் கன்னத்தை தொட்டுவிட்டு போனாள். அவள் மூக்கின் பெரிய வெள்ளிக்கல் மூக்குத்தியை அனந்தன் அருகே பார்த்தான். குனிந்தபோது அவள் மார்புகளின் பிளவு தெரிந்தது. அவள் சென்றபோது பின்பக்கம் எருமைப்புட்டம் போல அசைவதை கவனித்தான். அவள் படி இறங்கியதும் அவனும் எழுந்து மெல்ல நடந்து பின்னால் சென்றான்
ஆற்றுக்கு இறங்கும் வழியில் குஞ்சுவீட்டின் தோப்புக்கு அருகே கையாலையில் தவிட்டைசெடியில் கட்டப்பட்டு எருமைகள் நின்றன. ஒரு எருமை அனந்தனைப் பார்த்து ம்றாஅய்ங் என்று குரல் கொடுத்தது. அனந்தன் கண்களால் அப்பகுதியை துழாவினான். மெல்ல நடந்து அருகே போய் புதர்களுக்குள் நுழைந்து பறம்புக்குள் கூர்ந்து பார்த்தான். பறம்புக்குள் முன்பு எப்போதோ மண் எடுத்த குழி ஒன்று உண்டு. அதற்குள்தான் அவர்கள் இருக்கிறார்கள் என்று அனந்தனுக்கு தெரிந்தது. அங்கே போய் பார்த்தால் என்ன? ஆனால் அவனுக்கு அதற்கான தைரியம் வரவில்லை. அங்கே நின்றபடி பார்த்துக்கொண்டே இருந்தான். காற்று வேகமாக மரங்கள்மீது சென்றபடியே இருந்தது. நிழல்கள் கலைந்து கலைந்து ஆடும் பறம்புக்குள் எதுவெல்லாமோ சலசலத்து ஓடின. அனந்தன் சில கற்களை எடுத்து சருகுமீது வீசினான்.
அனந்தன் சட்டென்று பார்த்தபோது கிருஷ்ணவேணி அப்பால் சிறிய வழியினூடாக இறங்கி தாழைப்புதர்களை தாண்டி ஆற்றுக்குள் செல்வது தெரிந்தது. பாலையன் மட்டும் கையில் கோலுடன் தவிட்டைப்புதர்களையும் பிறுத்தி ஓலைகளையும் அடித்தபடி வந்தான். அனந்தனைப் பார்த்ததும் ”அப்பி இஞ்ச என்ன எடுக்குவு? பாம்பும் அரணையும் உள்ள எடமாக்கும்… வீட்டுக்கு போணும்” என்றான். அனந்தன் பேசாமல் பார்த்து நின்றான்.
பாலையன் குனிந்து எருமைகளை அவிழ்க்கும்போது அனந்தன் உரக்க ”போடா மயிரே ”என்றபின் பாலையன் திரும்புவதற்குள் பாய்ந்து படி எறி ஓடி பறம்பைக் கடந்து வீட்டுக்குள் மூச்சிரைக்க வந்தான்.
அப்பா சாப்பிட்டுவிட்டு ஈசிசேரில் அமர்ந்து விசிறிக் கொண்டிருந்தார். அம்மா வடக்குபுறத்தில் சிறு திண்ணையில் நீல ஸாரி உடுத்து அமர்ந்திருக்க தங்கம்மை எதுவோ பேசிக்கொண்டிருந்தாள். அம்மா நீல ஸாரியில் மிக அழகாக இருபப்தாக அனந்தனுக்குப் பட்டது. அந்த ஸாரியே அவளால் அழகாக ஆனது போலிருந்தது. அனந்தன் அவள் அருகே போய் அமர்ந்து ” அம்மா நாம எப்ப போறம்?”என்றான். அம்மா அவன் தலையை தடவினாள். ” காறு வருமா? பிளஷர்காறு? கறுப்பான பிளஷர் போரும் ”என்றான்
தங்கம்மை ”அப்பி வந்து சோறு உண்ணணும். மணி ரெண்டாச்சுல்லா?”என்றாள். ” அம்மா நீ சோறு உண்டாச்சா?”என்று அனந்தன் கேட்டான். ”அம்மை பிறவு உண்ணுவாவ. அப்பி உண்னணும்…”
அனந்தன் தங்கம்மை தேங்காய்க் குழம்புவிட்டு பிசைந்து உருட்டி தந்த சோற்றை விழுங்கினான். தொட்டுக்கொள்ள காய்ச்சில்கிழங்கு விழுக்குபிரட்டியும் வாழைக்காய் கூட்டும். அவனுக்கு நல்ல பசி இருப்பது சாப்பிடும்போதுதான் தெரிந்தது.
கைகழுவிக்கொண்டிருக்கும்போது முற்றத்தில் யாரோ வந்திருப்பதை குரல் மூலம் கேட்டான். நட்டாலம் கூட்டிப்போக ஆள் வந்தாகிவிட்டது. அனந்தன் ஓடிப் போய் பார்த்தான். மீனாட்சி வலியம்மையின் மூத்த மகன் ரெவி அண்ணனும் இன்னொரு அண்ணனும் வந்திருந்தனர். இருவர் தலையிலும் இரு பித்தளை போணிகள் இருந்தன.
அப்பா எழுந்து வேட்டியை கட்டியபடி வாயை கோட்டிக் கொண்டு வெளியே போய் மாமரத்தடியில் சாற்றைத் துப்பியபின் ”ம்ம்?”என்றார். ”செறியம்மைய விளிக்க வந்தோம்”என்றார் ரெவி அண்ணா.
”விளிச்சிட்டு போ…” அப்பா சொன்னார். ரெவி அண்ணா படி ஏறமுனைய , ”ஆ..ஆ…அது வேண்டாம்.காளிக்கல் வீட்டில பெறந்த ஒரு நாயும் இந்த படி ஏறப் பிடாது. அத மத்தவன்கிட்ட போன மட்டம் நான் சொன்னதாக்கும்…. உனக்க செறியம்மை உண்டு, விளிச்சிட்டு போ…உங்க முதலு நமக்குவேண்டாம்…எடீ”
அம்மா கையில் பெட்டியுடன் நெற்றி வியர்த்திருக்க களைப்புடன் மிகமெல்ல நடந்து வந்தாள். உதடுகளைக் கடித்திருந்தாள். அப்பா நின்றபடியே ”சொன்னதெல்லாம் ஓர்மை இருக்கில்லா? அதில எனக்கு ஒரு மாற்றமும் இல்லை. உனக்க அண்ணன்மாரிட்ட காரியங்களைச் சொல்லு. அல்லாம சும்மா பீத்த பேச்சு பேசி என்ன மூஞ்சலாமுண்னாக்கும் நெனைப்புண்ணாக்க அது நடக்காதுண்ணு சொல்லு…போ ” என்றார்.
”போய்ட்டு வாறேன்…” என்று அம்மா சொல்லிவிட்டு திரும்பி நடைக்கு அப்பால் நின்ற தங்கம்மையிடம் லேசாக தலையசைத்தாள்.அனந்தன் ஓடிப்போய் அம்மாவின் ஸாரியை பிடித்தான்.
ரெவி அண்ணாவும் மற்ற அண்ணாவும் போணிகளை திண்ணையில் இறக்கினர். ”டே டே அது என்னது…ஏ?”என்றார் அப்பா அவர்களை நோக்கி பாய்ந்தபடி.
”முறுக்கும் முந்திரிக்கொத்தும்…” என்றார் ரெவி அண்ணா.”சீ எடுடா நாயே….” அப்பா கை நீட்டி கத்த ரெவி அண்ணா திடமான குரலில் ”இங்க கொண்டு வைக்க எனக்க கிட்ட சொல்லியிருக்கு…. இது நாங்க செய்யுத கடமை”
அப்பா ஓடிப்போய் அந்த போணிகளை உதத்தார். அவை உருண்டு கணீரென்று கீழே விழுந்து உருண்டன. மூடியிருந்த வாட்டிய வாழையிலைகள் விலக முறுக்கும் முந்திரிக்கொத்தும் சிதறின. ”எடுத்திட்டு போடா மயிராண்டி… வச்சு சாத்திப்போடுவேன்” என்றார் அப்பா மூச்சிரைத்தபடி
ரெவி அண்ணா கனமான புஜங்கள் தெரிய கைகளைக் கட்டியபடி உதடுகளில் கேலியுடன் ”கெடக்கட்டு இங்க. நாலாளு பாக்கட்டு. அதுக்காத்தான் கொண்டுவந்தது .அல்லாம உமக்கு வாய்க்கரி இடுயதுக்காட்டு இல்லை.” அம்மா ”ரெவீ ” என்றாள் பலவீனமாக . ”சும்மா கெடக்கணும் செறியம்மே.. வேய், நீரு மறுவீட்டுக்கு வாறப்ப நாய்க்குபோடுத நாலு பிஸ்கெட் பாக்கெட்டோட வந்தீருல்லா, அதுமாதிரி இல்ல காளிக்கல் குடும்பத்தில. எங்க கடமைய அந்தஸாட்டு நாங்க செய்திட்டுண்டு… இந்தா கெடக்கு”
”டேய்..”’என்றபடி அப்பா கைநீட்டி படி இறங்கினார். ”தேகத்தில கைபெட்டா பின்ன செறியச்சன் மயிரச்சன்னு பாக்கமாட்டேன். அலவ திருப்பிப்போடுவேன் பாத்துக்கிடும்…..” சட்டைக் கைகளைச் சுருட்டியபடி ரெவி அண்ணா சொன்னார். அப்பா அப்படியே தளர்ந்து நின்று பின்பு குரல் பெற்று ”வெளிய எறங்குடா நாயே, எனக்க மண்ணை நீ சவிட்டப்பிடாது” என்று விசித்திரமாக கலங்கிய குரலில் கூவினார்.”எறங்காம பின்ன இங்க நிக்கவா போறம்? வேய் இது உம்ம மண்ணில்ல, எனக்க செறியம்மைக்க மண்ணு. செறியம்மே நீங்க வாறிங்களா இல்லியா?”
இன்னொரு அண்ணா அம்மாவின் பெட்டியை வாங்கிக் கொண்டார். அம்மா நடுநடுங்கிய கைகால்களுடன் படி இறங்கினாள் கடைசிப்படி இறங்கியதும் மூடி திறந்து பீரிட்டது போல தேம்பி முகத்தை பொத்தியபடி கேவி அழுதாள். அனந்தன் தொடைகள் நடுங்க அம்மாவின் ஸாரியை இறுகப்பற்றிக் கொண்டான்
குழப்பத்துடன் பரபரத்து நின்ற அப்பா அனந்தனைப்பார்த்தார். ”எங்கடா போர எரப்பாளி !” என்று கூவியபடி அவன் கைகளைப் பிடித்து இழுத்து சுழற்றி படீரென்று தோளில் அடிவைத்து ”உள்ளபோடா… உள்ளபோடா நாயே” என்று கூவினார். கதறியபடி அனந்தன் உள்ளே ஓடினான்.
தங்கம்மை ”அப்பி இஞ்ச வரணும்… ”என்று அவனைக் கூப்பிட்டாள். அவன் ஓடிப்போய் தங்கம்மையைக் கட்டிப்பிடித்தான்.” அப்பி இப்டி வேற வளியாட்டு கெழக்குமுற்றத்துக்கு போலாம். அங்க அம்மை பிளசர் காறில நிப்பாவ… அப்பி ஓடிப்போயி ஆத்தில அண்ணன் இருக்காராண்ணு பாத்துட்டு வரணும்…”
அனந்தன் பதறி அழுதபடி பறம்பில் இறங்கி ஆற்றுக்கு ஓடினான். ஆற்றுக்குள் அவன் இறங்கும்போது மேலே கார் ஸ்டார்ட் ஆகும் ஒலி கேட்டது. அனந்தன் ”அம்மா” என்று கதறியபடி மார்பில் கண்ணீர் கொட்ட புதர்கள் நடுவே பாய்ந்து ஓடினான். இரண்டு மூன்று இடங்களில் விழுந்து எழுந்து தொண்டை கமற கூவி அலறியபடி கிழக்குமுற்றம் போய் சாலையைப்பார்த்தான்.காரின் புகைமணந்தான் மிச்சமிருந்தது. ஹார்ன் அடித்து குஞ்சுவீட்டு முனையை கார் திரும்பும் ஒலி கேட்டது.
அனந்தன் ”அம்மா! அம்மா! ” என்று முகம் வலிப்புகொள்ள வீரிட்டபடி கார் சென்ற பாதையில் வெறியுடன் ஓடினான். குருவிக்காட்டிலிருந்து வந்த போத்தி அவனைப்பார்த்து ”டே டே”என்று பாய்ந்துவந்து பிடித்தார். அவரது கைப்பிடியில் சுழன்று தரையில் விழுந்து மண்ணில் புரண்டு கதறிக் கைவீசி அழுதான். போத்தி அவனை அப்படியே தோளில் தூக்கிக் கொண்டார். ”அம்மா விட்டுட்டு போய்ட்டா! அம்மா விட்டுட்டு போய்ட்டா! ”என்று அனந்தன் தேம்பினான்.
[மேலும்]