கே.என்.செந்தில்

1

அன்புள்ள ஜெயமோகன்

வணக்கம்.

இந்த முறை விஷ்ணுபுரம் விழாவில் திரு சு வேணுகோபால் அவர்களை எதிர்பார்த்திருந்தேன் அவரின் சில கதைகள் குறித்து பேசவும் கேட்கவும் சில விஷயங்கள் இருந்தன.

சுரேஷ் அண்ணன் அவர்கள் திரு கே என் செந்தில் அவர்களை அறிமுகம் செய்து பேச அவர் அறிமுகம் செய்த விதத்திலே ஒரு சிறு பதற்றம் உள்ளே தொற்றிக் கொண்டது எதுவுமே வாசித்திருக்கவில்லை நான்?

இந்த புத்தாண்டை ஒட்டிய  விடுமுறையில் நடத்திய நூலக வேட்டையில் இரவுக் காட்சி என்னும் அவரின் சிறுகதை  தொகுப்பு வாசிக்கக் கிடைத்தது.  சுரேஷ் அவர்கள் அறிமுகப்படுத்தும் போதே ஒரு விமர்சனமாகவும்  குறையாகவும்  சுட்டியிருந்தது அவர் நிறைக்கும் காட்சிகளை திரு மோகன ரங்கன் அவர்களும் அதையே தன் முன்னுரையில் கூறியிருந்தார்.

தொகுப்பின் முதல் கதையான கதவு எண் 13/78 கிட்டத்தட்ட காட்சிகளை நிறைக்கும் முறையில் அமைந்திருந்தது, ஆனால் தொடர்ந்த கதைகளின் ஆழமும் அவற்றின் விரிந்த தளமும் அவரின் நுண்ணிய காட்சி சித்தரிப்பும் வாசகனும் பெரும் வாசிப்பின்பத்தை அளிக்கக் கூடியவை.

இரண்டாவது கதையான கிளைகளிலிருந்து என்னும் ஒரு சிறுகதை, சிறார்களில் உறையும் குரூரத்தை மிக நுட்பமாக காட்சிப்படுத்தி இருந்தார்.குறிப்பாக ஒரு சிறுவன் வண்ணத்து பூச்சியின் கழுத்தில் ஒரு கயிற்றை கட்டி அதன் மறுமுனையில்  ஒரு கல்லை கட்டி அது பறக்க எத்தனித்து அதன் கழுத்தோரத்தில் ரத்தம் படர அது சாகும் காட்சியை சொன்ன விதம் உறைய வைத்தது.

காத்திருத்தல் என ஒரு நீளமான சிறுகதை அது ஒரு நாவலுக்கான களமும் உள்ளடக்கமும் கொண்டது எதிர்காலத்தில் அதை அவர் விரித்தெடுக்க் கூடும்.கிட்டத்தட்ட எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் கூறல் முறையை ஒத்திருந்தது, ஒட்டுதலோ தொடர்போ இன்றி தொடர்ந்து கதையை சொல்லி செல்லும் ஒரு தேர்ந்த  கதை சொல்லும் முறை . (கிளைகளிலிருந்து கதையின் மைய கதாபாத்திரத்தின் பெயர் சம்பத் அதுவும் ஒரு காரணமோ என சந்தேகிக்கிறேன்?)

இறுதிக் கதையான மேய்ப்பர்கள் மழையும் வெள்ளமும் கிட்டத்தட்ட ஒரு பாத்திரமாகவே கதையில் அமைத்திருக்கிறார் அதை அவர்  காட்சிப்படுத்தியிருக்கும் முறை அலாதியானது,விளிம்பு நிலை வாழ்கையின் துயரமும் கொண்டாட்டத்தையும் அவர் இணைக்கும் நேர்த்தியை இந்த கதையில் கவனிக்கலாம்,கதையின் மைய கதாபத்திரம் மனைவியை பிரசவ ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு மிகுந்த மன பதட்டம் கொள்கிறான் இந்த நிலையில் வீடு திரும்பி நண்பனின் மனைவியோடு உறவு கொள்வதும் மறு நாள் குழந்தை பிறந்த செய்தி அறிந்து அவனுக்கு ஒரு கை சர்க்கரையை அவளே அள்ளி போட்டு மகிழ்வதும் என கதை விரிகிறது.

தவிர்க்க முடியாமல் சு வேணுகோபால் அவர்களின் மீதமிருந்து கோதும் காற்று என்கிற சிறுகதை நினைவுக்கு வந்தது. இது வெறும் அதிர்ச்சியை கோரி பெறும் எழுத்து  அல்ல,அவர் நீங்கள் கேட்ட கேள்விக்கு விடையளிக்கையில் குரூரம் எனபது தான் இன்றைய வாழ்க்கையில் நிறைந்து கிடப்பதையும் அன்பு எனபது ஒரு சொல் என்பதை தாண்டி அதன் பெறுமதி இன்றைய உலகில் கேள்விக்குட்பட்டது என்றும் சொன்னதை நினைவு கூற முடிந்தது.

கிட்டத்தட்ட இருட்டை அள்ளி வைக்கிறார் ஆனால் பெரும் கலை அமைதியும் அழகும் கூடி வந்திருக்கிறது தொகுப்பு 2009 இல் வெளிவந்திருக்கிறது, 27 வயது இளைஞர் அன்றைய கணக்கின் படி.

மிக முக்கியமான ஒரு கதை சொல்லியை விஷ்ணுபுரம் விழா மூலமாக அறிய முடிந்ததில் மகிழ்ச்சி ஆனால் ஒரு இலக்கிய வாசகனாக புற வாழ்வின் அழுத்தம் கவனத்தை வெகுவாக கலைத்து போட்டிருப்பதையும் கவலையோடு அறிகிறேன்.

 

அன்புடன்

சந்தோஷ்

 

அன்புள்ள ஜெ

முன்பு விஷ்ணுபுரம் கூட்டத்தில்தான் சு வேணுகோபாலை அறிமுகம்செய்துகொண்டேன். இன்று அவர் என்னுடைய விருப்ப எழுத்தாளர். இந்தமுறை அப்படி அறிமுகமானவர் கே.என்.செந்தில். அவரது பெயரை நான் இணையத்தில் நிறையவே பார்த்திருக்கிறேன். புத்தகங்களையும் கடைகளில் கண்டிருக்கிறேன். கவனித்து வாசிக்கவில்லை.

அதற்குக் காரணம் ஒன்று உண்டு. இப்போது இணையம் வந்தபின்னர் நிறையபேர் எழுதுகிறார்கள். எல்லாருமே ஃபேஸ்புக்கில் ஒரு பெரிய தோரணையை காட்டுகிறார்கள். கனமான ஆங்கில நூல்களைப்பற்றிச் சொல்வதும் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் குறிப்பிடுவதும் தடாலடிக் கருத்துக்களைச் சொல்வதும் அவர்களின் வழிமுறை. அதை சில மூத்த எழுத்தாளர்களிடமிருந்து அவர்கள் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். நான் தொடர்ந்து இலக்கியம் வாசிப்பவன் என்பதனால் இந்த தோரணைகள் எல்லாம் பொய் என்று வாசித்ததுமே கண்டுகொண்டு விலகிவிடுவேன். சொல்லப்போனால் எவராவது ஃபேஸ்புக்கில் பெரியபேச்சு பேசினாலே அவரை தவிர்க்கவேண்டும் என்பது என் கொள்கை.

அதோடு சிலசமயம் நிறைய பேசப்படுகிறதே என்று சில இளம் ஆசிரியர்களை வாங்கி வாசித்துப்பார்த்து கடுமையான ஏமாற்றம் அடைந்திருக்கிறேன். மிகச்சாதாரணமான ஃபேஸ்புக் எழுத்தையே நூல்களாகவும் எழுதிவைக்கிறார்கள். ஒரு கிரியேட்டிவிட்டி இல்லை. இந்த ஆசிரியர்களின் நண்பர்கள்தான் ஃபேஸ்புக்கில் அந்த நூல் வந்ததுமே கொஞ்சநாள் ஒரு சத்தத்தை உருவாக்குகிறார்கள் என்று தெரிந்துகொண்டேன். ஒரு மூன்றுமாதம் அதிகபட்சம். அதன்பின் சத்தமே இருக்காது. ஆகவே நான் ஒரு கொள்கை வைத்திருக்கிறேன். தரமான ஒரு சில வாசகர்கள் சுட்டிக்காட்டாமல் எந்த நூலையும் வாங்கவோ வாசிக்கவோ கூடாது.

அதனால்தான் கே.என்.செந்திலையும் நான் வாசிக்கவில்லை. ஆனால் அந்தச் சந்திப்பில் அவர் எந்த பாவனைகளும் இல்லாமல் இயல்பாகப்பேசியது பிடித்திருந்தது. மற்றவர்களைப்போல அல்ல இவர், உண்மையிலேயே தமிழிலக்கியமும் உலக இலக்கியமும் கொஞ்சம் தெரிந்தவர் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆகவே ஊருக்கு வந்ததுமே அவருடைய நூல்களை வாங்கி வாசித்தேன். உண்மையில் இன்றைய எழுத்தாளர்களில் மிகமுக்கியமானவர் இவர் என நினைக்கிறேன்,

தமிழில் எப்போதுமே இருந்துவரும் objective writing வகையைச் சேர்ந்த எழுத்து இது. வாழ்க்கையை பெரியதாக வர்ணிக்காமல் சொல்லமுயல்வது. சிலசமயம் அழுத்தமாகச் சொல்லவேண்டும் என்பதற்காக  தேவைக்கும் அதிகமான செக்ஸும் வயலன்ஸும் இருந்தாலும் இக்கதைகள் தமிழ்வாழ்க்கையின் ஒரு பக்கத்தை கூர்மையாகச் சொல்கின்றன. இதற்குமேல் விரிவாக சர்ச்சை செய்ய எனக்கு விருப்பம் இல்லை. இலக்கியவிமர்சனம் இலக்கியத்திற்கு எதிரானது என்பது என் எண்ணம். இரவுக்காட்சி, அரூபநெருப்பு என்னும் இரண்டு தொகுப்புகளுமே முக்கியமானவை.

இவரைப்போன்றவர்களை உங்களைப்போன்ற மூத்த எழுத்தாளர்கள் மேலும் அழுத்தமாகச் சுட்டிக்காட்டவேண்டும் என நினைக்கிறேன். இவர்கள்மீது மற்ற எழுத்தாளர்களுக்குக் கிடைப்பதுபோல நண்பர்களின் சம்பிரதாயமான பாராட்டும் பதிப்பகம் உருவாக்கும் சம்பிரதாயமான மதிப்புரைப்பாராட்டும் இருந்தால்போதாது. வாசகக் கவனம் வேண்டும். எதிர்பார்ப்பும் விமர்சனமும் இருந்துகொண்டே இருக்கவேண்டும்.

நீங்கள் அந்த அரங்கிலே ஒன்று சொன்னீர்கள். அதாவது குறிப்பிடத்தக்க இளம் எழுத்தாளர்களை பரவலாக அறிமுகம் செய்யும் அரங்குகளை மட்டும் அமைக்கலாம் என்று. இன்றைக்கு அதை நீங்கள் செய்யமுடியும். பதிப்பகவிழாக்களெல்லாம் வெறும் பிரமோக்கள்தான். மேலும் அவர்கள் எல்லா குப்பைகளையும் ஒன்றாகச்சேர்த்து பாராட்டி முன்வைக்கிறார்கள். இரக்கமற்ற விமர்சகராகிய நீங்கள் செய்தால் அதற்கு பயன் அதிகம். வாசகர்கள் பின் தொடர ஒரு வழியாக அமையும்

கார்த்திக்

 

கே என் செந்தில் கதைகள்

முந்தைய கட்டுரைசங்கரர் உரை கடிதங்கள் 4
அடுத்த கட்டுரைவாசகசாலை நிகழ்ச்சி