‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 20

பகுதி மூன்று : சிறைபெருந்தாழ் – 8

நாணிழுத்து இறுக வளைத்த விற்களென பன்னிரு பாய்கள் தென்கிழக்கு நோக்கி தொடுத்துநின்ற விரைவுப்படகு திசை சரியும் விண்பருந்தின் அசைவின்மையை கொண்டிருந்தது. தொலைவில் பச்சைத்தீற்றலென இழுபட்டு மெல்ல சுழன்ற கரைகளே விரைவை காட்டுவனவாக இருந்தன. குடவீணை நரம்புகளென செவிக்கேள்வியின் கீழ்க்கோட்டில் விம்மி அதிர்ந்து கொண்டிருந்த பாய்வடங்களை கைகளால் பற்றி குனிந்து கர்ணன் அருகே வந்த துரியோதனன் “இன்னும் விரைவை கூட்டலாகாதா?” என்றான். “அஸ்தினபுரியின் உச்ச விரைவு இதுவே. பீதர் படகுகள் சில இதைவிட விரைவாகச் செல்லும் என்று அறிந்திருக்கிறேன். அவை கங்கையில் செல்லுமா என்று தெரியவில்லை” என்றான் கர்ணன்.

பொறுமையின்மையுடன் திரும்பி தொடுவானை நோக்கியபின் நீர்க்காற்றில் அரிக்கப்பட்டு முருக்குமுள் தொகுதியென ஆகியிருந்த இழுவடங்களை கையில் பற்றி உடலை நெளித்தபின் “நெடுநேரம் சென்று கொண்டிருக்கிறோம் என்று தோன்றுகிறது” என்று துரியோதனன் சொன்னான். “நாம் கிளம்பி மூன்று நாழிகைகளே ஆகின்றன. இன்னும் சற்றுநேரத்தில் படுகதிர்வேளை எழும்” என்றான் கர்ணன். “எப்போது தாம்ரலிப்தியை அடைவோம்?” என்றான் துரியோதனன். “காலைக்கருக்கிருட்டுக்கு முன்பு” என்று கர்ணன் சொன்னான். “வெள்ளி முளைக்கையில் நாம் ராஜபுரத்திற்குள் நுழைந்திருக்கவேண்டும்.”

துரியோதனன் திரும்பி “தாம்ரலிப்திக்குள் நுழைகிறோமா?” என்றான். “இல்லை” என்றான் கர்ணன். “அங்கு நுழைந்து வெளியேறுவது கடினம். வணிகத்துறைமுகமாயினும் விரிவான காவல் ஏற்பாடுகள் அங்குண்டு. நாம் வழியிலேயே ஒரு குறுங்காட்டில் இறங்குகிறோம். அங்கு நமக்கென புரவிகள் சித்தமாக நின்றிருக்கும்.” துரியோதனன் தன்னருகே நீட்டி அதிர்ந்த வடத்தை கையால் குத்தி “இன்னும் எத்தனை நாழிகை நேரம்?” என்றான். கர்ணன் நீள்பலகையில் மெல்ல உடலை விரித்து படுத்தபின் “கிளம்பியதிலிருந்து படகுக்குள் அலைமோதிக் கொண்டிருக்கிறீர்கள் அரசே. தாங்கள் சற்று ஓய்வெடுப்பது நலமென்று நினைக்கிறேன்” என்றான்.

“ஆம், ஓய்வெடுக்க வேண்டும்” என்றபின் கர்ணனின் கால்மாட்டில் வந்து அப்பலகையில் அமர்ந்தான் துரியோதனன். அவன் பேரெடையால் அப்பலகை மெல்ல வளைந்து ஓசையிட்டது. தன் தோள்களைக் குவித்து முழங்கால்களில் முட்டுகளை ஊன்றி அமர்ந்து “ஆனால் அமர்ந்திருப்பதும் கடினமாக உள்ளது அங்கரே” என்றான். “ஏன்?” என்றான் கர்ணன். “அறியேன். இச்செயல் பிழை என்று என் உள்ளத்தில் எங்கோ ஒரு முள் குடைகிறது” என்றான். “இது பிழைதானே?” என்றான் கர்ணன். “ஆம்” என்றான் துரியோதனன். திரும்பி “எளிய சூதர்களைப்போல் ஒரு பெண்ணின் விழிகளுக்கு உண்மையாக நாம் ஏன் வாழ்ந்து நிறைவுற முடியவில்லை?” என்றான். “அரசர்கள் முதலில் மணப்பது அரசத்திருவைத்தான் என்று ஒரு சூதர் சொல்லுண்டு. அங்கு துவாரகையில் இளையவர் எட்டு திருமகள்களை மணந்து அமர்ந்திருக்கிறார்.”

துரியோதனன் அப்பேச்சை தவிர்க்கும்படி கையை விசிறினான். பின்பு எழுந்து இருவடங்களை பற்றியபடி நின்று தொலைவில் சரிவணைந்த செங்கதிரவனையும் அலைப்பளபளப்புடன் தெரிந்த கங்கை நீர்ப்பரப்பையும் நோக்கியபடி குழல் எழுந்து உதறிப்பறக்க ஆடை துடிதுடிக்க நின்றான். அவன் மேலாடை தோளிலிருந்து நழுவி எழுந்து நீண்டு கர்ணனின் தலைக்குமேல் படபடத்தது. அவன் உள்ளத்தில் என்ன நிகழ்கிறது என்று அறிந்த கர்ணன் மேற்கொண்டு சொல்லெடுக்காமல் கண்களை மூடிக்கொண்டான்.

பறவைகள் கங்கையை கடந்து சென்றுகொண்டிருந்தன. நீர் ஒளியணைந்து கருமைகொண்டது. கரையோரக்காடுகள் நிழலாகி மெழுகுக்கரைவென இழுபட்டு தெரிந்தன. மிகத்தொலைவிலெங்கோ ஒரு யானையின் குரலெழுந்தது. நீர்ப்பரப்பிலிருந்து மீன்கள் துள்ளி எழுந்து ஒளிமின்னி விழுந்து அலைவட்டங்களை உருவாக்கின. படகுப்பாய்களில் மட்டும் கதிரொளி சற்றே எஞ்சியிருந்தது. விரல்களுக்குள் தெரியும் விளக்கின் ஒளிக் கசிவென.

20

உள்ளறையிலிருந்து மேலே வந்த சிவதர் தலைவணங்கி நின்றார். துரியோதனன் திரும்பி “சொல்லும்” என்றான். “தேவைக்கு மேல் விரைவிலேயே சென்று கொண்டிருக்கிறோம். குறுங்காட்டில் புரவிகள் வந்து சேர்வதற்குள்ளேயே நாம் சென்று விடுவோம் என்று நினைக்கிறேன்” என்றார் அவர். “இங்கிருந்தே அந்தக் கணக்குகளை போடவேண்டாம்” என்று துரியோதனன் உரக்கச் சொன்னான். “செல்லும் வழியில் என்ன வேண்டுமானாலும் ஆகலாம். ஆற்றிடைக்குறைகள் அருகே நீரின் விரைவு குறையும். சுழல்கள் இருந்தால் அதைக் கடந்து போகவே அரை நாழிகை ஆகிவிடும். இன்னும் விரைவாக செல்வதே நல்லது.”

சிவதர் ஒன்றும் சொல்லவில்லை. கர்ணன் திரும்பி “கங்கையில் பலமுறை வந்துளீரா?” என்றான். “ஆம், இப்பாதையில் பலமுறை வந்துளேன்” என்றார் சிவதர். அவர் செல்லலாம் என்று துரியோதனன் தலையசைத்தான். “தாங்கள் இருவரும் படுத்துத் துயில்வது நன்று என்று எண்ணுகிறேன். ஏனெனில் அங்கு சென்றதுமே புரவிக் கால்களின் உயரெல்லை விரைவை நாம் அடைந்தாக வேண்டும். செல்லும் வழியோ முட்செறிக் குறும்புதர்களால் ஆனது” என்றார். கர்ணன் திரும்பி ஒருக்களித்து தலையை கையில் வைத்தபடி “சிவதரே, ராஜபுரத்தின் கோட்டை பெரியதா?” என்றான். “இல்லை. தண்டபுரம்தான் கலிங்கத்தின் பழைய தலைநகரம். அதன் கோட்டை அந்தக்கால முறைப்படி வெறும் களிமண்குவையாக கட்டப்பட்டது. அதன் மேல் முட்புதர்கள் பயிரிட்டு ஒன்றுடன் ஒன்று சேர்த்து கட்டியிருப்பார்கள். வேர்களால் இறுகக் கவ்வப்பட்டு உறுதிகொண்டிருக்கும். அங்குள்ள அரண்மனை பெரியது.”

சிவதர் தொடர்ந்தார் “தமையனும் இளையோனும் தங்களுக்கென நிலம் வேண்டுமென்று பூசலிட்டபோது குடிமன்று கூடி இளையவருக்கென்று ராஜபுரத்தை அளித்தனர். இது அன்று உக்ரம், ஊஷரம், பாண்டூரம், பகம் என்னும் நான்கு சிற்றூர்களின் தொகைதான். பெரும்பாலானவர்கள் வேளாண் குடியினர். சிலர் வேட்டைக் குடிகள். ஒரு நகர் அமைக்கப்படுவதற்கான எவ்வியல்பும் இல்லாத நிலம் அது. உள்ளே சதகர்ணம், குஜபாகம், கும்பிகம் என்னும் மூன்று குளங்கள் உள்ளன. அக்குளங்களை நம்பி உருவான தொன்மையான குடியிருப்புகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து உருவான சிற்றூர்கள் அவை.”

“ராஜபுரத்தை அமைத்தபோது கோட்டையை கல்லால் கட்ட வேண்டுமென்று சித்ராங்கதர் விழைந்தார். ஆனால் கருவூலத்திலிருந்து அத்தனை பெரிய தொகையை எடுத்து அளிக்க அமைச்சர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. எனவே குடிமக்கள் ஒவ்வொருவரும் கொடையளித்து அக்கோட்டையை கட்டவேண்டியதாயிற்று. குடிகளால் ஓர் எல்லைக்குமேல் அளிக்க இயலவில்லை. ஆகவே இக்கோட்டையும் மண்குவையாகவே அமைந்துள்ளது. அதன் மேல் வளர்க்கப்பட்ட மரங்கள் இன்னும் புதர்களாகவே உள்ளன. படைகள் உட்செல்வதை அவை தடுக்கும். படைக்கலம்கொண்டு மரம் வெட்ட முடிந்த மனிதர்கள் எளிதில் உட்சென்று வெளிவரலாம்” என்றார்.

“எத்தனை ஆண்டுகளாயிற்று அதை கட்டி?” என்று துரியோதனன் அவரை நோக்காமலே கேட்டான். “பதினெட்டு ஆண்டுகள். இரண்டாவது இளவரசி சுப்ரியை பிறந்த மூன்றாவது வாரத்தில்தான் கோட்டைப் பணிகள் முடிந்து பெருவாயில் பூசனைகள் நடந்தன. அன்று அங்கநாட்டரசருக்கும் அழைப்பிருந்தது. கோட்டைத்திறப்பு நாளன்று அக்கோட்டை மேலும் சில வருடங்களில் கல்லால் எடுத்து கட்டப்படும் என்று சித்ராங்கதர் சொன்னார். ஆனால் அரியணை அமர்ந்த சில ஆண்டுகளிலேயே அது எளிதல்ல என்று கண்டு கொண்டார்.”

துரியோதனன் சற்று சீற்றத்துடன் திரும்பி “ஏன்?” என்றான். சிவதர் தலைவணங்கி “அரசே, பாரதவர்ஷத்தில் எந்த அரசரும் முடிசூடிய ஐந்தாண்டுகளுக்குப்பின் கோட்டையை எடுத்துக் கட்டியதில்லை. அரசுகள் அமையும்போது கட்டிய கோட்டைகள் மட்டுமே இங்கு உள்ளன” என்றார். பொறுமையழிந்து “ஆம். அது ஏன் என்று கேட்டேன்” என்றான் துரியோதனன். “அவ்வாறு நிகழ்ந்தது என்பதே அடியேன் அறிந்தது. ஏன் என்பதை நூலோர் உய்த்துச் சொன்னதை நான் சொல்ல முடியும். எனக்கென்று சொல்வதற்கு ஏதுமில்லை” என்றார் சிவதர். கர்ணன் புன்னகையுடன் எழுந்து அமர்ந்தான். “சொல்லும்” என்றான் துரியோதனன்.

“அரியணை அமர்ந்ததுமே நகரங்கள் கோட்டைகளால் காக்கப்படுவதில்லை, சொற்களால் காக்கப்படுகின்றன என்று அரசர்கள் அறிந்து கொள்வதாக சொல்கிறார்கள். குருதியுறவுகளால் வேதவேள்விகளால் அவை அரணிடப்பட்டுள்ளன” என்றார். “இவை வெற்றுச் சொற்கள்” என்றான் துரியோதனன். “இல்லை அரசே, பாரதவர்ஷத்தில் நன்கு பாதுகாக்கப்பட்டுள்ள அனைத்து அரசுகளும் கண்ணுக்குத் தெரியாத அரண்களை கொண்டவை. துணையரசுகளும் குலங்களும் சூழ்ந்தவை” என்றார் சிவதர்.

“அதுவல்ல…” என்று துரியோதனன் அருகே இருந்த வடத்தை கையால் தட்டியபடி சொன்னான். “அரசனின் உளஎழுச்சி குறைந்துவிடுகிறது. அரியணையில் அமர்ந்ததுமே அனைத்தும் தனக்கு இயைந்ததாகவே நிகழ்வதாக எண்ணிக்கொள்ளும் மிதப்பு வந்துவிடுகிறது.” சிவதர் ஒன்றும் சொல்லவில்லை. “சொல்லும்” என்றான் துரியோதனன். “அவ்வாறு நான் எண்ணவில்லை. பாரதவர்ஷத்தில் இன்று ஒவ்வொரு கணமும் தன் ஆற்றலை பெருக்கிக் கொண்டிருக்கும் அரசு என்றால் மகதம் மட்டுமே. ஆனால் இன்று வரை தனது கோட்டைகளை அது எழுப்பிக் கட்டவில்லை. நெடுங்காலத்துக்கு முன் கட்டப்பட்ட உயரமற்ற கல் கோட்டையால் சூழப்பட்டுள்ளது ராஜகிருகம். அதன் பல பகுதிகள் தொடர் மழையால் அரிக்கப்பட்டு கல்லுதிர்ந்து கிடக்கின்றன. ஜராசந்தரோ மேலும் மேலும் அசுரர் குலத்திலிருந்தும் அரக்கர் குலத்திலிருந்தும் பெண் கொள்கிறார். படை பெருக்கிக் கொள்கிறார்.”

துரியோதனன் “அவன் கருவூலத்தில் செல்வம் இல்லை போலும்” என்றான். “பாரதவர்ஷத்தில் மிகப்பெரும் கருவூலம் அவருடையதே என்பதை அறியாதவர் எவருமிலர். அதற்கப்பால் ஒன்றுள்ளது அரசே” என்றான் கர்ணன். துரியோதனன் திரும்பிப் பார்த்தான். “போரை எதிர்கொள்பவன் கோட்டையை கட்டமாட்டான்.” “ஏன்?” என்றான் துரியோதனன். “கோட்டையைக் கட்டுவது அவனது அச்சத்தின் அறிவிப்பாக ஆகலாம். மேலும் கோட்டை கட்டுவதென்பது ஒரு படைப்புப் பணி. அது போருடன் இயைவதல்ல. அதில் ஒரு களியாட்டமும் நிறைவும் உள்ளது.”

“கோட்டை கட்டுவதென்பது வாள்களை உரசி கூர்மை செய்வது போல” என்றான் துரியோதனன். “இல்லை அரசே. அது தன் இல்லத்தில் இளையோருக்கு திருமணம் செய்து வைப்பது போல” என்றான் கர்ணன். சிவதர் புன்னகை புரிந்தார். துரியோதனன் பொறுமையை முற்றிலும் இழந்து “இந்தச் சொல்லாடல் எதற்காக? வீண்பேச்சு” என்றபின் பறந்த மேலாடையை இழுத்து சுற்றிக்கொண்டு தன் குழலை தோல்வாரால் முடிந்தான். “நாம் கேட்க வந்தது ராஜபுரத்தின் கோட்டையைப்பற்றி. அதற்குள் நுழைவது அத்தனை எளிதா?” என்றான் கர்ணன் சிவதரிடம்.

“எளிது என்று கோட்டையை வைத்து சொல்லலாம். நகரின் இயல்பை வைத்து அத்தனை எளிதல்ல என்றும் சொல்லலாம்” என்றார் சிவதர். “ஓரிருவர் உட்புகுவதற்கான வழியை அங்கு உருவாக்குவது சில நாழிகைகளுக்குள் நிகழக்கூடியதே. நகரைச் சுற்றியிருக்கும் குறுங்காடுகள் பெரும்பாலும் காவல் காக்கப்படுவதில்லை. நகரின் புற வளைவுகளில் உள்ள வேளாண் பணிக்குடிகளின் இல்லங்கள் அமைந்துள்ள தெருக்களுக்குள் நாம் செல்வது வரை எந்தத் தடையும் இல்லை.”

அவர் சொல்லட்டும் என்று இருவரும் நோக்கி நின்றார்கள். “ஆனால் ராஜபுரம் அஸ்தினபுரி போலவோ மகதத்தின் ராஜகிருகத்தை போலவோ பல நாட்டு மக்கள் வந்து குவிந்து கலைந்து நாள்நடந்து கொண்டிருக்கும் பெருநகரல்ல. உண்மையில் அது நகரே அல்ல. அங்கு வருபவர் ஒவ்வொருவரையும் அங்குள்ள மக்கள் அறிந்திருப்பர். அறியாத சிலர் அங்கு நுழைந்தால் சற்று நேரத்திலேயே அது ஒரு செவிதொற்றுச் சொல்லாக மாறிவிடும். மிக எளிதில் காவலர் அறிந்து கொள்வார்கள்.”

“ஆனால் இப்பொழுது அங்கு ஏற்புமணம் நிகழவிருக்கிறது. அதன் பொருட்டு பிற நாட்டினர் பலர் வரக்கூடும்” என்றான் கர்ணன். “ஆம், ஆனால் அதனாலேயே அந்நாட்டு மக்கள் மேலும் கூர்ந்து வருபவர் அனைவரையும் பார்ப்பார்கள். வாசல் வழியாக வரிசை பெற்று வராது அயலவர் இருவர் நகரத் தெருக்களில் நடப்பதை மேலும் கூர்ந்து நோக்குவார்கள்” என்றபின் “தாங்கள் இருவரும் சிம்மமும் யானையும் போல். காட்டில் அவை இரண்டும் எங்கும் ஒளிந்து கொள்ள இயல்வதில்லை” என்றார் சிவதர்.

“உண்மை, நாம் மறைந்து செல்ல முடியாது” என்றான் துரியோதனன். “செய்வதற்கொன்றே உள்ளது. நகரத்தில் நுழைந்தால் முழுவிரைவில் ஏற்பு மணம் நிகழும் நகர் முன்றிலை அடையவேண்டும். நம்மை எவரும் அடையாளம் கண்டு தடுப்பதற்குள் எதிர்ப்படுவோரை வென்று இளவரசியரை கைப்பற்றவும் வேண்டும்.” துரியோதனன் தன் இரு கைகளையும் விசையுடன் தட்டியபடி “ஆம், அதைச் செய்வோம். என் தோள்கள் உயிர்பருகி நெடுநாளாகின்றன” என்றான்.

கர்ணன் “அங்கு ஜயத்ரதன் வந்திருப்பான்” என்றான். “அதற்கென்ன…?” என்றான் சினத்துடன் சீறியபடி துரியோதனன். “அவனை எவ்வகையிலும் நாம் குறைத்து மதிப்பிட முடியாது” என்றான் கர்ணன். “நம்மை அவன் தடுப்பான் என்றால் அங்கொரு போர் நிகழும். நிகழட்டுமே” என்றான் துரியோதனன். கர்ணன் புன்னகைத்தபடி “போரில் நாம் அங்கு சற்று நேரம் தங்கியிருந்தால்கூட நம்மை ஜராசந்தனின் படைகள் வளைத்துக் கொள்ளக் கூடும். கலிங்கத்துடன் ஜராசந்தனின் உறவென்பது மிக அணுக்கமானது. உபமகதம் என்றே உத்தர கலிங்கத்தை சூதர்கள் நகையாட்டாக சொல்வதுண்டு” என்றான்.

ஜராசந்தனின் பெயர் துரியோதனன் தோள்களை சற்று தளரவைத்தது. “ஆம், ஜராசந்தனை எதிர்கொள்வது எளிதல்ல” என்றான். சிலகணங்கள் அங்கு அமைதி நிலவியது. பின்பு துரியோதனன் திரும்பிப் பார்க்காமல் “அவன் வருகிறானா?” என்றான். “யார்?” என்றார் சிவதர். பின்பு உடனே உணர்ந்து கொண்டு “செய்தியில்லை. நாம் கிளம்பியபோதுதான் இச்செய்தி நமக்கு வந்தது. ஆனால் இந்திரப்பிரஸ்தத்தில் இருந்து எவரும் அங்கு செல்வதற்கான வாய்ப்பு குறைவு. ஜராசந்தன் அஞ்சுவது உங்களை மட்டுமல்ல. பீமனையும் கூடத்தான். கலிங்க இளவரசிகளை பாண்டவர் அடைவதை அவர் விரும்ப மாட்டார்” என்றார்.

துரியோதனன் திரும்பி “இவ்விரு பெண்களையுமே ஜராசந்தன் கொள்வதாகத்தான் திட்டமா?” என்றான். “அவ்வண்ணம் இல்லை. மூத்தவரை ஜராசந்தனும் இளையவரை ஜயத்ரதனும் கொள்வதாகத்தான் ஒற்றர் சொல்சொன்னது” என்று சிவதர் சொன்னார். “இளையவர் ஜயத்ரதன் மேல் அன்புடன் இருப்பதாகவும் தன்னை கொண்டு செல்லும்படி செய்தி ஒன்றை அவருக்கு அளித்ததாகவும் சூதர் சொல் உலவுகிறது. ஆனால் இதெல்லாம் சூதர்களே உருவாக்கும் கதைகளாக இருக்கலாம். பலசமயம் இக்கதைகளை உருவாக்கும் பொருட்டே சூதர்கள் ஏவப்படுவதும் உண்டு. ஜயத்ரதருக்கு கலிங்க மணவுறவால் நேட்டம் என ஏதுமில்லை. அத்தனை தொலைவுக்கு அவர் அரசோ வணிகவழிகளோ வருவதில்லை.”

துரியோதனன் இருகைகளையும் விரித்து உடலை நெளித்தபடி “போர் புரியலாம். போருக்கு முந்தைய இக்கணங்கள் பேரெடை கொண்டவை” என்றான். கர்ணன் “அரசே, நாம் ஈடுபட்ட அனைத்துப் போர்களிலும் தங்களின் இப்பொறுமையின்மையால் இழப்புகளை சந்தித்துள்ளோம்” என்றான். “ஆம்” என்றபடி துரியோதனன் தலையை அசைத்து “ஆனால் இதில் நாம் ஒன்றும் செய்வதற்கில்லை” என்றான். “எங்கும் வேட்டை என்பது பொறுமையின் கலையே” என்றான் கர்ணன்.

சிவதர் “தாங்கள் ஓய்வெடுக்கலாம் அரசே” என்றார். “மது கொண்டுவரச்சொல்லும். யவன மது வேண்டாம். உள்ளெரியும் இங்குள்ள மது…” கர்ணன் கையசைத்து மது வேண்டாமென்றான். “மது நாளை காலையில் நம்மை கருத்துமழுங்கச் செய்யக்கூடும்” என்றான் கர்ணன். “மதுவால் நான் ஒருபோதும் களைப்படைவதில்லை” என்று துரியோதனன் சொன்னான். “களைப்படைய மாட்டீர்கள். உங்கள் உடல் களைப்படையாதது” என்றான் கர்ணன். “உள்ளம் பொறுமை இழக்கும். நாம் செல்வது நுணுக்கமான ஓர் ஆடலுக்காக என்று நினைவு கூருங்கள்.”

துரியோதனன் “மதுவின்றி இவ்விரவில் என்னால் துயில முடியாது” என்றான். சிவதர் “துயிலவேண்டியதில்லை. படுத்துக் கொண்டால் போதும். உடல் ஓய்வு பெற்றாலே அது அரையளவு துயின்றது போல” என்றார். தலையசைத்தபின் அவர் செல்லலாம் என்று துரியோதனன் கையை காட்டினான். தலைவணங்கி சிவதர் பின்னால் காலெடுத்து வைத்து அறைக்குள் சென்றார். வடத்தில் சாய்ந்து விரைந்தோடிக் கொண்டிருந்த கரையின் கரிக்கோட்டை பார்த்தபடி “நாம் எங்கு வந்திருக்கிறோம்?” என்றான் துரியோதனன். “இவ்விரைவில் கரைகள் ஒரு கணக்கே அல்ல. விண்மீன்கள் இடம் சொல்லும். அணுகிக் கொண்டிருக்கிறோம்” என்றான் கர்ணன்.

விண்மீன்களை அண்ணாந்து நோக்கியபடி சற்று நேரம் நின்றதும் மெல்லிய பெருமூச்சுடன் துரியோதனன் கேட்டான். “அங்கரே, பானுமதியின் உள்ளம் இப்போது எதை எண்ணிக் கொண்டிருக்கும்?” அவ்வினாவால் சற்று அதிர்ந்த கர்ணன் “அதை எப்படி சொல்லமுடியும்?” என்றான். “ஆம், நாம் ஆண்கள் வென்று தோற்று ஆடும் இந்தக் களத்தில் பெண்களுக்கு இடமேயில்லை. யானைப்படைகளுக்கு நடுவே மான்கள் போல அவர்கள் இவ்வாடலுக்குள் வந்து நெரிபடுகிறார்கள்.” கர்ணன் “பிடியானைகளும் உண்டு” என்றான். துரியோதனன் வெடித்து நகைத்தபடி திரும்பி அவனைப் பார்த்து “ஆம், உண்மைதான். இவ்வாடலை நம்மைவிட திறம்பட ஆடும் பெண்கள் உள்ளனர்” என்றான். கர்ணன் புன்னகைத்தான்.

பின்பு நீள்மூச்சுவிட்டு “பானுவை எண்ண என் உள்ளம் மேலும் மேலும் நிலையழிகிறது” என்றான். கர்ணன் “அதை இனிமேல் எண்ணிப்பயனில்லை அரசே. கலிங்க அரசி பானுவை தன் தமக்கையாக ஏற்றுக் கொள்ளக்கூடும். பானு எவரிடமும் சென்று படியும் இனிய உள்ளம் கொண்டவள்” என்றான். துரியோதனன் “ஆம், அவ்வண்ணம் நிகழவேண்டும்” என்றான். கர்ணன் “உங்கள் இருபக்கமும் நிலமகளும் திருமகளும் என அவர்கள் இருவரும் அமர்ந்திருக்கக் கூடும்” என்றான். எரிச்சலுடன் கையசைத்து “நான் திருமால் அல்ல” என்றான் துரியோதனன். “நான் அன்னை மடி தேடும் எளிய குழந்தையாகவே இதுநாள்வரை அவளிடம் இருந்திருக்கிறேன்.”

“இளைய அன்னை ஒருத்தி இருக்கட்டுமே” என்றான் கர்ணன். “இருந்தால் நன்று. ஆனால் அவ்வண்ணம் நிகழ்வதற்கு வாய்ப்பே இல்லை. நேற்றெல்லாம் அதைத்தான் எண்ணிக் கொண்டிருந்தேன். எங்கேனும் இரு மனைவியர் உளமொத்து ஒரு கணவனை ஏற்றுக்கொண்டதாக நான் அறிந்ததேயில்லை. அவர்களிடையே அழியா பூசலே என்றுமுள்ளது. ஏனெனில் பெண்கள் எவரும் முழுதும் மனைவியர் அல்லர். அவர்கள் அன்னையர். தங்கள் மைந்தர்களின் முடியுரிமை என்னும் எண்ணத்தை என்று அவர்கள் அடைகிறார்களோ அன்று முதல் விழியில் வாளேந்தத் தொடங்குகிறார்கள். அமைதியற்ற உள்ளத்துடன் தங்கள் அரண்மனைக்குள் சுற்றி வருகிறார்கள்.”

கர்ணன் “அதை இப்போது எண்ணுவதில் பயனில்லை. நாம் அரசு சூழ்வதை மட்டுமே எண்ண முடியும். அரசர்கள் களத்தில் குருதி சிந்தவேண்டும், குடும்பங்களில் விழிநீர் சிந்தவேண்டும் என்பார்கள்” என்றான். துரியோதனன் “நீர் அதைப்பற்றி எண்ணியதில்லையா அங்கரே?” என்றான். கர்ணன் கரிய நீர்ப்பெருக்கென கடந்து சென்ற வானில் மிதந்து கொண்டிருந்த விண்மீன்களை பார்த்துக் கொண்டிருந்தான். “உம்?” என்றான். “விருஷாலிக்கு இணையென ஒருத்தியை கொண்டுவரப்போகிறீர்கள். அதைப்பற்றி…” என்றான் துரியோதனன். “இல்லை” என்றான் கர்ணன்.

சினத்துடன் திரும்பி “ஏன்? அவள் எளிய பெண் என்பதனாலா?” என்றான் துரியோதனன். கர்ணன் “எளிய பெண்தானே?” என்றான். “யார் சொன்னது? உமக்கும் எனக்குமான உறவுக்கும் அப்பால் அவளுடன் எனக்கோர் உறவுள்ளது. என் தங்கை அவள்…” என்றான். “அதை நான் அறிவேன்” என்றான் கர்ணன். “பின்பு…?” என்றபடி துரியோதனன் அணுகினன். “அவளைப்பற்றி நீ பொருட்டின்றி பேசுகிறாய்.” கர்ணன் “நான் சொன்னது நடைமுறை உண்மை. பானுமதி உயர்ந்த எண்ணங்களால் உந்தப்பட்டு இணைவி ஒருத்தியை ஏற்க ஒப்புக் கொண்டிருக்கிறாள். உயர்ந்த எண்ணங்கள் காலை ஒளியில் பொன்னென மின்னும் முகில்களைப்போல மிகக் குறுகிய பொலிவு கொண்டவை. விருஷாலி நடைமுறை உண்மையிலிருந்து இம்முடிவை ஏற்றுகொண்டவள். எனவே நான் இன்னொருத்தியை கைப்பற்றியே ஆகவேண்டும். இத்தகைய முடிவுகள் மலைப்பாறைகளைப்போல நமது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் அவை என்றுமென நின்றுகொண்டிருக்கும்” என்றான்.

“எல்லாவற்றையும் இப்படி எண்ணங்களாக வகுத்து அமைத்துக் கொள்வது எனக்கு சலிப்பூட்டுகிறது” என்றபடி தொடையில் தட்டினான் துரியோதனன். “ஏன் இப்படி சொற்களை அடுக்கிக் கொண்டே இருக்கிறோம்?” கர்ணன் “மனிதர்கள் சொற்களால் தங்களுடைய உலகை உருவாக்கிக் கொள்கிறார்கள். நாம் வாழும் நகரங்களும் கோட்டைகளும் அரண்மனைகளும் உண்ணும் உணவும் உடைகளும் முடியும் கோலும் அனைத்தும் சொற்களால் ஆனவையே. அச்சொற்களுக்கு ஒரு நீட்சி எனவே பருப்பொருட்கள் வெளியே உள்ளன. இது அமரநீதியில் உள்ள சொற்றொடர். விதுரரிடம் கேட்டால் மொத்தத்தையும் சொல்வார்” என்றான்.

“விடும்! இனி அச்சொற்களைக் கேட்க நான் விரும்பவில்லை” என்றான் துரியோதனன். “ஏன்?” என்றான் கர்ணன். “அச்சமூட்டுகின்றன. இச்சொற்களைக் கொண்டு எவற்றை விளக்கிவிட முடியும்? எச்செயலையும் குற்றவுணர்வின்றி ஆற்ற முடியும் கூர்சொல்லேந்தியவனைப்போல அச்சத்துகுரியவன் எவருமில்லை” என்றபின் “நான் உள்ளே சென்று படுத்துக் கொள்ளப்போகிறேன்” என்றான் துரியோதனன். “வேண்டாம்” என்றான் கர்ணன். “ஏன்?” என்று துரியோதனன் கேட்டான். “உள்ளே சென்றால் நீங்கள் மது அருந்துவீர்கள். இங்கு படுத்துக் கொள்ளலாம்” என்றான்.

“இங்கா…?” என்றபடி நீள்பலகையில் ஓசையுடன் அமர்ந்துகொண்டான் துரியோதனன். மெல்ல உடலை நீட்டிக் கொள்ள பலகை முனகி வளைந்தது. “விண்மீன்களை பார்த்துக் கொண்டிருப்போம். அரசர்கள் வானை நோக்க வேண்டுமென்று அமர நீதி சொல்கிறது.” “ஏன்?” என்றான் துரியோதனன். “மண்ணில் இருந்து தன்னை விண்ணுக்கு தூக்கிக் கொள்ளாமல் எவரும் அரசனாக முடியாது. புகழ்மொழிகளால் அரசமுறைமைகளால் குலக்கதைகளால் சூதர்பாடல்களால் ஒவ்வொரு கணமும் கீழிருந்து மேலேற்றப்படுகிறான். மேலே இருந்து கொண்டிருப்பதாக அவன் எண்ணிக் கொண்டிருப்பது இயல்பே. விண்ணைநோக்கினால் எந்நிலையிலும் தான் மண்ணில் இருப்பதை அவனால் புரிந்து கொள்ள முடியும்.”

துரியோதனன் விண்மீன்களையே நோக்கிக் கொண்டிருந்தான். “ஆம்” என்று நெடுநேரத்துக்குப் பிறகு சொன்னான். கர்ணன் பெருமூச்சுவிட்டு தன் கைகால்களை நன்கு நீட்டி தளர்த்திக் கொண்டான். விரைந்து செல்லும் படகின் கொடி துடிக்கும் ஒலி மிக அண்மையில் என கேட்டது. சித்தம் சற்று மயங்கியப்போது அது நெருப்பொலியாகியது. வெண்ணிறமான நெருப்புத் தழல்களுக்கு நடுவே சிதை நடுவில் அவன் படுத்திருந்தான். நெருப்பு குளிர்ந்தது. ஆனால் அவன் தசைகள் உருகி வழிந்து கொண்டிருந்தன. கைகால்கள் வெள்ளெலும்பாயின. குனிந்து தன் நெஞ்சைப் பார்த்தபோது அங்கு பொற்கவசத்தை கண்டான். இரு கைகளாலும் செவி மடல்களைத் தொட்டு அங்கே மணிக் குண்டலங்களை உணர்ந்தான்.

நெஞ்சு பறையொலிக்க அவன் எழுந்து அம்ர்ந்தபோது திசை நோக்கி பறந்து செல்லும் அம்பு ஒன்றில் அமர்ந்திருக்கும் உணர்வை அடைந்தான். படகின் அமர முனையில் காற்று கிழிபட்டு பாம்பென சீறிக்கொண்டிருந்தது. சற்று அப்பால் துரியோதனன் நீண்ட மூச்சொலியுடன் துயின்று கொண்டிருந்தான். விண்ணில் எதையோ தான் கண்டதாக ஓர் உணர்வை கர்ணன் அடைந்தான். துரியோதனனை திரும்பிப் பார்த்தபின் எழுந்து நின்று தன் ஆடைகளை சீர்படுத்திக் கொண்டான். விண்ணிலிருந்து ஒரு விழி தன்னை நோக்கியது போல. உடனே அவ்வெண்ணம் வந்து தன் பிடரியைத் தொட அண்ணாந்து பார்த்தபோது அங்கே விடிவெள்ளியை கண்டான்.

பலகைகள் காலொலி பெருக்கிக் காட்ட அறைக்குள் சென்று “சிவதரே” என்றான். அறைக்குள்ளிருந்து கையில் தோல்சுருளுடன் வந்த சிவதர் “ஆம் அரசே, சற்று பிந்திவிட்டோம். வெள்ளி முளைத்துவிட்டது” என்றார். “எவ்வளவு பிந்திவிட்டோம்?” என்றான் கர்ணன். “ஒரு நாழிகை நேரம்” என்றார் சிவதர். “படகு முழு விரைவில் சென்றதல்லவா?” என்றான் கர்ணன். “ஆம். ஆனால் மகதத்தின் பெரிய வணிகக் கலத்திரள் ஒன்று நமக்கெதிராக வந்தது. பெருவிரைவில் அவர்களைக் கடந்து செல்வது ஐயத்தை உருவாக்கும் என்று பாய்களை அவிழ்க்கச் சொன்னேன்”.

“குறுங்காட்டில் நம்மைக் காத்திருப்பவர்கள் எவர் கண்ணிலும் பட்டுவிடக்கூடாது” என்றான். “ஆம்” என்றார் சிவதர். கவலையுடன் “நாம் கருக்கிருட்டிலேயே ராஜபுரம் நோக்கி செல்வதாக அல்லவா திட்டம்?” என்றான் கர்ணன். “ஆம். அதைத்தான் நோக்கிக் கொண்டிருந்தேன். நேரடியான குறும்புதர்ப் பாதையில் ராஜபுரம் நோக்கி செல்வதாக இருந்தது. சற்று வளைந்து குறுங்காடுகளுக்குள் ஊடுருவிச் சென்றால் மேலும் ஒரு நாழிகை ஆகும் என்றாலும் எவர் கண்ணிலும் படாமல் ராஜபுரத்திற்குப் பின்புறமுள்ள குறுங்காட்டை அடைந்துவிட முடியும்.”

“ஏற்புமணம் அப்போது தொடங்கிவிட்டிருக்குமல்லவா?” என்றான் கர்ணன். “ஆம். நாம் செல்லும்போது அனைத்து அவை முறைமைகளும் முடிந்து ஏற்புமணத்திற்கான போட்டி தொடங்கும் தருணம் முதிர்ந்திருக்கும்.” கர்ணன் உடல் தளர்ந்து “ஒவ்வொன்றும் மிகச் சரியாக நடந்தாக வேண்டும்” என்றான். “ஆம், நான் நம்பிக் கொண்டிருப்பது ஜராசந்தரை” என்றார் சிவதர். “ஜயத்ரதன் இளைய அரசியை கொண்டு செல்வதை ஜராசந்தர் விரும்பமாட்டார் என்று என் உள்ளம் சொல்கிறது. ஆகையால் அங்கு சொற்பூசல் ஒன்று நிகழாதிருக்காது.”

“இத்தகைய முன் எண்ணங்களைச் சார்ந்து திட்டங்களை அமைப்பது நன்றல்ல” என்றான் கர்ணன். “அல்ல. ஆனால் இதை நான் வலுவான செய்திகள் வழியாக உறுதி கொண்டிருக்கிறேன். ஜயத்ரதனை ஜராசந்தர் தடுப்பார். ஆகவே படைக்கலப் போட்டியோ அதை ஒட்டிய சொல்லெடுப்போ அங்கு நிகழும். நாம் அங்கு சென்று சேர்வது அத்தருணத்திலாகத்தான் இருக்கும்” சிவதர் சொன்னார். “அவ்வாறாகட்டும்” என்றபின் கர்ணன் திரும்பி படகின் அகல் மேடைக்கு வந்தான். அவன் காலடி ஓசையைக் கேட்டு விழித்தெழுந்த துரியோதனன் பலகையில் அமர்ந்து “வந்துவிட்டோமா?” என்றபின் வானைப்பார்த்து “விடிவெள்ளி” என்று கூவியபடி எழுந்தான்.

“நாம் சற்று பிந்திவிட்டோம். இன்னும் அரை நாழிகையில் சென்றுசேர்வோம்” என்றான் கர்ணன். “ஒளி வரத்தொடங்கியிருக்குமே?” என்றான் துரியோதனன். “ஆம். மாற்றுப்பாதை ஒன்றை சிவதர் வகுத்திருக்கிறார்” என்றான். துரியோதனன் தன் தொடைகளில் அறைந்தபடி “நன்று நன்று” என்றான். “இருளில் விழிகளுக்குத் தெரியாமல் நரிகளைப்போல் செல்வது எனக்கு சலிப்பூட்டியது. இது போர். ஒருவகையில் இது நேரடி களப்போர். இதுவே ஷத்ரியர்களுக்குரியது. வழியில் உபகலிங்கர்களின் சிறுபடை ஒன்றை எதிர்கொண்டு சில தலைகளை வீழ்த்தி குருதிசொட்டும் அம்புகளுடன் ராஜபுரத்திற்குள் நுழைவோம் என்றால் நாளை நம்மைப் பற்றி சூதர்கள் பாடும்போது சுவை மிகுந்திருக்கும்” என்றான். கர்ணன் புன்னகைத்தான்.

முந்தைய கட்டுரைபுதியவர்கள் கடிதங்கள் 2
அடுத்த கட்டுரைசங்கரர் உரை கடிதங்கள் 3