அன்புள்ள ஜெ
நலமா ?
ஜன்னலில் உங்கள் கட்டுரைகளை வாசித்து வருகிறேன் .அவை தொகுக்கப்பட்டு புத்தகமாக வரும் நாளை ஆவலோடு எதிர் பார்க்கிறேன் காஞ்சிரகோட்டு யக்ஷியை குறித்து கீழ் கண்ட இணைப்பில் வாசித்தேன்.https://en.wikipedia.org/wiki/Kanjirottu_Yakshi.முழுமையான வரலாறு அல்ல .இருப்பினும் ஒரு சில விஷயங்கள் சுவாரஸ்யமாக உள்ளன .இந்த தொன்ம அமைப்பு பதிவான அமைப்புகளில் இருந்து வேறு பட்டு இருப்பதாக தோன்றுகிறது .பலராம உபாசனை ,ராமானுஜ பெருமாள் ஆகிய விஷயங்களும் தான்.(சுசிந்தரம் அருகே ஒரு பலராம க்ஷேத்ரம் இருந்தது என்றும் அது இப்போது கிருஷ்ணன் கோவில் ஆகி விட்டது என்றும் தந்திரி ஒருவர் கூறினார்).நீங்கள் இந்த தொன்மத்தை குறித்து கேள்விபட்டது உண்டா?
வேறு விசேஷம் ஏதும் இல்லை .ஆளுர் பக்கம் சென்று இருந்த போது கண்டன் நாயரும் நரசிம்ஹலு ரெட்டியும் உங்களை விசாரித்தார்கள் .நீங்கள் கடும் பணிச்சுமையில் இருப்பதாக கூறியதும் அனுமந்து ரெட்டி நாயர்களை நம்ப கூடாது என்றார் .
நன்றி
அனீஷ் க்ருஷ்ணன் நாயர்
அன்புள்ள அனீஷ் கிருஷ்ணன்
ஜன்னல் இதழின் கோரிக்கைக்கு ஏற்ப அக்கட்டுரைகளை வலையேற்றமும் செய்யவில்லை. நூலாக வரும்போது தருகிறேன்
குமரிமாவட்டத்தின் நாட்டார் கதைகளில் உள்ள கொடூரமான வசீகரம்தான் என் கட்டுரைத்தொடருக்கு ஊற்று. ஆனால் நீங்கள் குறிப்பிட்ட இக்கதை நீங்கள் ஊகித்ததுபோல ஒரு எளிய நாட்டார்க்கதை அல்ல. ஒரு வரலாற்றுக்கதையின் நாட்டார் வடிவம் – தம்பிமார் கதைபோல. இதிலுள்ளது அரசியலாடலில் வீழ்த்தப்பட்டவர்களின் வன்மம்
ரெட்டி பிரதர்ஸ் கொண்டுபோகும் பட்டும்பொன்னும் இல்லாமல் தலக்குளம் வலியதம்புராட்டியின் அரண்மனையில் புடவைக் கொடை எட்டாண்டுகளாக நின்றுகொண்டிருக்கிறது
ஜெ