புதுமைப்பித்தன்
அன்புள்ள ஜெயமோகன்
என்னுடைய முந்தைய கடிதத்தில் மிக முக்கியமாக நான் நினைத்த ஒரு கேள்வியைக் கேட்டிருந்தேன். அந்தக்கேள்வியை தவிர்த்துவிட்டு நீங்கள் பதில் எழுதியிருந்தீர்கள். அதாவது பரப்புக்கலைகளில் ஒன்றாகிய பரப்பிலக்கியத்தை நீங்கள் எந்த அளவுகோல்களின்படி பார்க்கிறீர்கள்? நீங்களும் பரப்புக்கலையை செவ்வியல்கலையை வைத்து மதிப்பிடக்கூடிய பிழையைத்தானே செய்கிறீர்கள்? பாலகுமாரனை நீங்கள் தி.ஜானகிராமனை அளவுகோலாகக் கொண்டுதானே மதிப்பிடுகிறீர்கள்? இது மட்டும் எப்படி நியாயமாக ஆகும்? ஜெமினி கணேசனுக்கு கொடுக்கப்படும் முழுமையான கவனம் ஏன் பாலகுமாரனுக்கு அளிக்கப்படவில்லை?
சரவணன்,சென்னை
அன்புள்ள சரவணன்,
முந்தைய கடிதம் மீதான என் பதிலே மிகப்பெரிதாக ஆகிவிட்டது. அதனுடன் வேறு விஷயங்களை கலக்கவேண்டாம் என நான் நினைத்தேன். உங்கள் கேள்வி முதலில் யார் மனத்திலும் எழுவதுதான். ஆனால் அதற்கான பதில் மிக எளியது. பாலகுமாரனை அல்லது சுஜாதாவை பரப்பிலக்கியத்தின் நாயகர்களாகக் கொள்வதை, அவர்களின் எழுத்த அந்த தளத்தில் முழுமையாக ஆராய்வதை, நானோ அல்லது வேறெந்த இலக்கியவாதிகளோ மறுக்கப்போவதில்லை. நானே அத்தகைய ஆய்வுகள் செய்யப்படவேண்டும் என்றே சொல்கிறேன்.
இங்கே பிரச்சினை என்னவென்றால் அவர்களை இலக்கியவாதி என அடையாளப்படுத்துவதுதான். பரப்பிலக்கியம் இலக்கியம் என்பதன் எல்லைக்கோட்டை அழிப்பதில்தான் முரண்பாடே எழுகிறது. டி.எம்.எஸ் பற்றி ஆராய்வது அவசியம். ஆனால் எம்.டி.ராமநாதனும் டி.எம்.எஸ்ஸும் ஒரே வரிசையில் வைக்கப்பட்டால் ஒரு இசை விமர்சகன் அவர்கள் நடுவே உள்ள வேறுபாட்டைக் கவனப்படுத்தவே முயல்வான்.
அதுதான் இலக்கியத்தில் எ.வி.சுப்ரமணிய அய்யர் ,க.நா.சு காலம் முதல் இன்றுவரை நிகழ்கிறது. என்னுடைய விமர்சனங்கள், ஒப்பீடுகள் அனைத்துமே அந்த வேறுபாட்டை முன்வைக்கதற்காக மட்டுமே. தி.ஜானகிராமன் வேறு பாலகுமாரன் வேறு என்று சொல்லவே அவர்களை நான் நான் ஒப்பிடுகிறேன்.
இந்த வேறுபாடழிதல் எப்படி நிகழ்கிறது. இங்கே பாமரன்கூட பரப்பிசைக்கும் மரபிசைக்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்திருக்கிறான். அதேபோல பரப்பிலக்கியத்துக்கும் மரபிலக்கியத்துக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு தெரியும். அவை நம் நீண்டகால மரபு ஒவ்வொருவருக்கும் இயல்பாகவே அளிக்கும் பண்பாட்டுப் பயிற்சி.
ஆனால் நவீன இலக்கியம், நவீனக் கலைகள் சார்ந்து அத்தகைய பயிற்சி நமக்கு இல்லை. நாம் நவீன இலக்கியம், நவீனகலைகளை நோக்கி பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் கண் திறந்தோம். அப்போது விடுதலை தவறிக்கெட்டு, பஞ்சத்தில் வாழ்விழந்து, பாழ்பட்டு நின்ற சமூகமாக இருந்தோம். நமக்கு சோறுதான் முக்கியமாக இருந்தது , கல்வியும் ஞானமும் அல்ல.
ஆகவே நமக்கு சிலதனிநபர்களைச் சார்ந்தே நவீனச் சிந்தனை, நவீன இலக்கியம், நவீனக் கலைகள் அறிமுகமாயின. மிகச்சிறிய வட்டத்தில்தான் அவை நிகழ்ந்தன. ஒரு பெரிய சக்தியாக விளங்கிய பாரதியேகூட 1500 பிரதிகள் விற்ற இதழ்களில்தான் எழுதினான். அந்த நிலை இன்றும் நீடிக்கிறது.ஒரு சமூகமாக நாம் இன்னமும்கூட அவற்றை நோக்கிச் செல்லல்லை
தமிழில் இதழியல் ஆரம்பத்தில் தேசிய இயக்கத்தின் ஒருபகுதியாக, இலட்சியவாத நோக்குடன் உருவாக்கப்பட்டது. அந்த காலத்தை நாம் பாரதிகாலகட்டம் எனலாம். அக்காலகட்டத்தின் மையமும் சிறந்த உதாரணமும் அவர்தான். ராஜம் அய்யர், அ. மாதவையா ஆகியைருவரையும் அந்த யுகத்தின் முக்கியமான அறிஞர்கள் என சொல்வது வழக்கம்.
அவர்களால் உருவாக்கப்பட்டதே நவீன இலக்கியம். ஆனால் மிகச்சீக்கிரத்திலேயே நம் இதழியல் அதன் வணிகச் சாத்தியங்களைக் கண்டுகொண்டது. உடனடியாக இன்றும் நம்மிடம் பெரும்செல்வாக்கு செலுத்திவரும் இரு விஷயங்கள் இதழியலில் நுழைந்தன. ஒன்று போலிமருத்துவ விளம்பரங்கள். இரண்டு, குலுக்கல்கள் மற்றும் போட்டிகள்.
இதழியல் வணிகமாக ஆனபோது அதற்குரிய எழுத்தும் உருவாகியது. இவ்வாறு தமிழில் நவீன இலக்கியம் உருவான சிலவருடங்களிலேயே வணிக இலக்கியம் உருவாகிவிட்டது. வடுவூர் துரைசாமி அய்யங்கார், வை.மு.கோதைநாயகி அம்மாள், – ஆகிய மூவரும் அந்தக்காலத்தின் வணிக எழுத்தின் முகங்கள்.
இன்றும் அவர்கள் உருவாக்கிய மூன்று முகங்கள்தான் நம் வணிக இலக்கியத்தை ஆள்கின்றன. கல்கி, அகிலன்,நா.பார்த்தசாரதி, பாலகுமாரன் போன்றோரை வடுவூரார் வழிவந்தவர்கள் எனலாம். அநுத்தமா, லட்சுமி, ரமணிசந்திரன் போன்றோரின் தொடக்கப்புள்ளி வை.மு.கோதைநாயகி அம்மாள். மேதாவி, தேவன், சுஜாதா, ராஜேஷ்குமார் வரையிலானவர்கள் – வழி வந்தவர்கள்
இந்த வணிக எழுத்த்தாளர்கள் பெரும்புகழும் அபாரமான செல்வமும் ஈட்டினார்கள். வடுவூரார் சென்னையில் பங்களா கட்டி தொழிலதிபர் போல வாழ்ந்தவர். இந்த பேரலைக்கு எதிராக டி.எச்.சொக்கலிங்கம் போன்றவர்களால் உருவாக்கப்பட்ட மாற்று இயக்கமே மணிக்கொடி முதலிய இலக்கிய இதழ்கள். அதில் எழுதிய புதுமைப்பித்தன், கு.ப.ரா, ந.பிச்சமூர்த்தி, மௌனி போன்றவர்களால் நவீன இலக்கியம் தமிழில் முதிர்ச்சியை அடைந்தது. ஆனால் அது பரவலாக வாசகர்களுக்குச்சென்று சேரவில்லை.
தமிழகத்தில் பொதுக்கல்வி பரவி, எழுத்தறிவுள்ள நடுத்தரவற்கம் உருவாகி, வாசிக்கும் பழக்கம் ஆரம்பமாகி வந்தபோது அவர்களுக்கு அறிமுகமானது பரப்பிலக்கியம் மட்டுமே. அந்த வாசிக்கும் வற்கத்தின் வணிகசாத்தியங்களை கண்டுகொண்டு ஆனந்தவிகடன் போன்ற இதழ்கள் உருவாயின. அவற்றில் கல்கி , தேவன் போன்ற பரப்பிலக்கியவாதிகள் எழுத ஆரம்பித்து பெரும்புகழ் பெற்று தமிழில் எழுத்தாளர் என்றாலே அவர்கள்தான் என்ற இடத்தை அடைந்தார்கள்.
பரப்புக்கலை என்பது சமூகத்தில் இருந்து அதன் தேவைக்காக உருவாகி வருவது. ஆகவே அதில் அச்சமூகத்தின் எல்லா கூறுகளும் கலந்திருக்கும். அதன் ரகசிய ஆசைகள், அதன் இலட்சியக்கனவுகள், அதன் சபலங்கள், அதன் தடுமாற்றங்கள், அதன் பாரம்பரியக்கூறுகள், அதன் அன்றாட வாழ்க்கை எல்லாமே. ஆகவே அது எங்கும் மிக விரைவில் ஒரு மாபெரும் நிறுவனமாக ஆகிவிடும். தமிழிலும் அப்படித்தான். ஐம்பதுகளிலேயே தமிழ் பரப்பிலக்கியம் தமிழ் வணிகசினிமா இரண்டுமே ஆழமாக வேரோடிவிட்டன.
தமிழ்பரப்பிலக்கியம் அக்காலத்தில் தமிழ்நாட்டில் உருவாகிவந்த பண்பாட்டு அலைகளையும் உள்ளடக்கிய ஒன்று. தேசியப்பெருமிதம், தமிழ்ப்பெருமிதம் போன்றவற்றை நாம் கல்கி ,நா.பார்த்தசாரதி, அகிலன் போன்றவர்களின் எழுத்தில் காணலாம். அன்று உருவாகி வந்த தமிழ்ப்பொதுச்சமூகம் ஜனநாயக அடிப்படைகளுக்கான போராட்டத்தில் இருந்தது. அந்த அம்சங்களை நாம் இப்படைப்புகளில் காணலாம். பெண்விடுதலை, கல்வி ஆகியவற்றுக்கான குரலை அவை எதிரொலித்தன. இவை அவற்றின் இலட்சியவாத முகம்
இன்னும் நுட்பமான ஒருதளத்தில் கூட நாம் பரப்பிலக்கியத்தின் சமூகப்பங்களிப்பை காணலாம்., எதிர்வினைகளை அவதானிப்பதன் வழியாகவே நம் சமூகத்தின் பலவகையான அந்தரங்கத்தேவைகளை தமிழ் பரப்பிலக்கியம் கண்டடைந்தது. அவற்றை அது சொல்லிச் சொல்லி வளர்த்தது.
உதாரணமாக அன்றுமுதல் இன்றுவரை நம் பரப்பிலக்கியத்தில் காதலுக்கு இருக்கும் இடம். தமிழ்ச்சமூகத்தில் நெடுங்காலமாகவே ஆணும் பெண்ணும் சந்தித்துப் பேசும் வாய்ப்புகள் இல்லை. அன்றெல்லாம் திருமணம் ஆனபின்னரும்கூட வெளிப்படையாக ஆணும் பெண்ணும் சந்திக்க முடியாது. இருளில் ரகசிய உடலுறவே ஆண்பெண் உறவாக இருந்த காலம் அது. அந்த சமூகத்துக்குத்தான் தமிழ் பரப்பிலக்கியமும் அதை ஒட்டி எழுந்த தமிழ் பரப்புசினிமாவும் காதலை மீண்டும் மீண்டும் சித்தரித்தன.
இன்றும்கூட காதல் இல்லாமல் நமக்கு பரப்புக்கலை இல்லை! நம் பரப்புக்கலையின் மிகப்பெரிய சிக்கலே காதல் இல்லாமல் எதையுமே சொல்லமுடியாது என்பதுதான். காதலர்களை துரத்தித்துரத்திக்கொல்லும் சமூகமாக நாம் இருக்கும் வரை அப்படித்தான் இருக்கும்!
பெரும்பாலும் இத்தகைய கருக்கள் மொழியாக்கம் மூலம் வெளியே இருந்து கொண்டுவரப்பட்டு முன்வைக்கப்படுகின்றன. அவற்றுக்கான எதிர்வினைகள் அவதானிக்கப்பட்டு அந்த கருக்கள் நமக்கே உரிய முறையில் மேம்படுத்தப்படுகின்றன. காதல் என்ற கரு தமிழ்புனைகதை இலக்கியத்தில் ஆரம்பத்தில் ஆங்கில நாவல்களின் தழுவல்கள் வழியாகவே முன்வைக்கப்பட்டது. அவற்றில் உள்ள காதல் அப்பட்டமாக ஆங்கிலேயக் காதலாக இருந்தது. ஆணும் பெண்ணும் ஆங்கில மனமும் ஆங்கில பழக்க வழக்கங்களும் கொண்டவர்கள்.
சிறந்த உதாரணம் டி.எஸ்.துரைசாமி எழுதிய ’கருங்குயில் குன்றத்துக்கொலை’ என்ற நாவல். வால்டர் ஸ்காட்டின் ஒரு நாவலின் தழுவல் அது அந்நாவலின் கதாநாயகி தனியாக கொழும்புவில் இருந்து இந்தியா வந்து விடுதியில் அறை எடுத்து தங்குகிறாள். தனியாக சென்று துப்பறிகிறாள். மாறுவேடங்கள் போடுகிறாள். விருந்துகளில் பங்கெடுக்கிறாள்.
அவ்விருந்துகள் முடிந்தபின் ஆண்களுடன் பூங்காக்களில் நடக்கச் செல்கிறாள். அங்கே அவள் ஆண்களிடம் சமத்காரமாக பேசுகிறாள். ஆண்கள் அவளிடம் மரியாதையாகவும் சம்பிரதாயமாகவும் பேசுகிறார்கள். அவள் அழகை புகழ்கிறார்கள். அவளிடம் ஆண்கள் தங்கள் காதலை தெரிவிக்கிறார்கள். ‘உன் காதல் கிடைத்தால் உலகிலேயே பாக்கியமானவன் நானே’ என்ற வகையில்!
இதெல்லாம் இந்தியாவில், தமிழகத்தில் எங்கே சாத்தியம்? எந்தப் பெண் குடும்பத்தை விட்டு வெளியே செல்ல முடியும்? தாசிகுலப்பெண்கள் கூட அப்படி ஆண்களுடன் பழக முடியாது. அது வாசகர்களுக்கும் தெரியும். ஆனாலும் அவர்கள் அதை விரும்பினார்கள். நம் ஆழ்மனதில் உள்ள ஆசை அது.
ஏனென்றால் வேறுஎங்கும் பெண் அடிமையாக இருந்தால் நமக்கு சுகம். காதலில் அவள் சமமானவளாக இருந்தால்தான் சுகம். தமிழ் ஆண்மனம் தேடிய ரகசியக்காதலி ஆணுக்கு நிகராக தன்னை நிறுத்திக்கொள்ளும் சுதந்திரமான அறிவார்ந்த பெண். ஆனால் மனைவி என்பவள் அடக்கமே உரிவானவள் !
அந்தக்காலத்தில் அத்தனை நாவல்களிலும் இந்த வகையான பெண் சித்திரம் முன்வைக்கப்பட்டது. அந்த குணச்சித்திரம் ‘வொர்க் அவுட்’ ஆனதுமே நம் பரப்பிலக்கியம் அதை பற்றிக்கொண்டது.
’கருங்குயில் குன்றத்துகொலை’ தமிழில் சினிமாவாக வந்து பெருவெற்றி பெற்றது. அதில் பானுமதி அந்தப்பெண் கதாபாத்திரத்தைச் செய்திருந்தார். அதே குணச்சித்திரத்தையே அவர் ‘மலைகள்ளன்’ உட்பட பல படங்களில் செய்திருந்தார்.
பானுமதி அந்தக் குணச்சித்திரத்தின் வடிவமாக ஆகி பலவருடங்கள் நம் திரையுலகை ஆண்டார். இன்றுகூட பானுமதி பாணியிலான ஒரு நடிகை நம்மிடம் இருப்பார். ஜெயலலிதா பானுமதியேதான். ஏன், ஜோதிகாகூட ஒருவகை பானுமதியே.
இருவகை பெண்சித்திரங்களை நாம் நம் காதல்கதைகளில் காணலாம். ஒன்று, ஏற்கனவே சொன்ன சுதந்திரமான அறிவார்ந்த பெண். இன்னொருத்தி அடக்கமான, பொறுமையே உருவான, காதலை உள்ளே புதைத்துக்கொண்ட, பேரன்பும் நெகிழ்ச்சியும் கொண்ட, மரபான பெண். முதலில் உள்ளவள் காதலி இரண்டாமவள் மனைவி. ஒரே பெண்ணே மணமானதும் இப்படி ஆகிவிடுவாள்!
இந்த இரண்டாம் சித்திரம் சரத்சந்திரர் போன்றவர்களின் வங்கநாவல்களில் இருந்து கொண்டுவரப்பட்டது. அ.கி.கோபாலன், ஆர்.ஷண்முகசுந்தரம், த.நா.சேனாபதி, த.நா.குமாரசாமி ஆகியோரால் மொழியாக்கம் செய்யப்பட்டது. இதுவும் நம் பரப்பிலக்கியப் காதல்கதைகளிலும் பின்னர் சினிமாக்களிலும் பரவலாகக் கையாளப்பட்டது.
இதைப்போலவே குடும்பம், சகோதர பாசம், நட்பு, தேசப்பற்று என பல விழுமியங்களை பேசிப்பேசியே கோடிக்கணக்கான மக்களுக்கு உகந்த முறையில் தன்னை உருவாக்கிக் கொண்டு மெல்ல எழுந்து வந்த ஒன்றுதான் பரப்பிலக்கியமும் பரப்பு சினிமாவும். ஆகவே நம் சமூக மனம் அவற்றில் இயல்பாக படிகிறது, ரசிக்கிறது, சொந்தம் கொண்டாடுகிறது.
ஆனால் நவீன இலக்கியம் அப்படி அல்ல. அது தன்னிச்சையானது. அது அந்தந்தக் கலைஞர்களின் அந்தரங்கத்தேடலையும் அந்தரங்க மனஎழுச்சியையுமே ஆதாரமாகக் கொண்டுள்ளது. அந்த அந்தரங்கம் என்பது அக்கலைஞன் நின்று எழுதும் பண்பாட்டின் அந்தரங்கமும்கூட என்பதனால் அதற்கு ஒரு பொதுத்தன்மை உண்டு. அதுவும் மிகநுட்பமான ஒரு சமூக நிகழ்வே.
ஆனால் அந்த சமூக அம்சம் வெளிப்படையானதோ நேரடியானதோ அல்ல. நவீன இலக்கியம் மேற்தளத்தில் வாசகனுக்கு ஒரு பிற மனிதனின் அந்தரங்க உலகில் நுழையும் துணுக்குறலையே அளிக்கும். ஆகவே அதை ஒரு ரசிகன் இயல்பாக ரசிக்க முடியாது. அவனுக்கு கொஞ்சம் பயிற்சி தேவை. அப்பயிற்சியை அடைய அவனுக்கு ஆர்வமும் பொறுமையும் இருந்தாகவேண்டும்.
ஆகவே வணிகஎழுத்து பெரும்செல்வாக்கு பெற்றது. அது இயல்பே, உலகில் எங்குமே இலக்கியம் வணிகஎழுத்தின் புகழை அடைவதில்லை. ஆனால் இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அச்சமூகத்தின் பண்பாட்டு மையத்தில் இருப்பவர்கள் அறிவார்கள். அவர்கள் பரப்பிலக்கியத்தை ஒரு எளிய சமூகப்பிரதிபலிப்பாக மட்டுமே கருதுவார்கள்.
அவர்கள் இலக்கியமே சமூகத்தின் ஆழத்தைக் காட்டுவது என எண்ணி அதையே ஆராய்வார்கள். தங்கள் சமூகத்தின் ஆன்மவெளிப்பாடாக இலக்கிய ஆக்கங்களையே முன்வைப்பார்கள். ருஷ்யாவிலும் பிரான்ஸிலும் அமெரிக்காவிலும் நம்மைவிட பலமடங்கு பிரம்மாண்டமான வணிக இலக்கியம் உண்டு. ஆனால் அந்த பண்பாடுகளில் இருந்து அவற்றின் குரலாக நமக்கு வந்து சேர்பவை அவர்களின் சீரிய இலக்கியங்களே.
தமிழில் என்ன நிகழ்ந்தது என்றால் நம்முடைய பண்பாட்டின் மையமாக இருந்தவர்களுக்கு இந்த வேறுபாடு தெரியாமல் போயிற்று என்பதே. நான் முதன்மையாகக் குற்றம்சாட்டுவது ராஜாகோபாலாச்சாரி அவர்களை. பலவகையிலும் அறிஞர் என்று சொல்லத்தக்க அவரது இலக்கியரசனை மிகச்சாதாரணமானது என்பது ஆச்சரியமாக இருந்தாலும் அபூர்வம் அல்ல. தனக்கு உவப்பான தேசியவாத, சீர்திருத்தவாத கருத்துக்கள் இருக்கும் ஆக்கங்கள் சிறந்த இலக்கியங்கள் என அவர் நினைத்தார்.
கல்கி முதல் மீ.ப.சோமு, கு.ராஜவேலு, அகிலன் வரையிலான பரப்பிலக்கியவாதிகளை இலக்கியக்கலைஞர்களாக அங்கீகாரம் பெறச்செய்தது ராஜகோபாலாச்சாரி அவர்கள் தலைமை தாங்கிய அதிகார மையமே. தமிழில் உருவாகி வந்து சாதனைகளை நிகழ்த்திக்கொண்டிருந்த நவீன இலக்கியம் ஒட்டுமொத்தமாகவே இந்த மையத்தால் நிராகரிக்கப்பட்டது. இவர்களே அன்று தமிழின் ஊடகங்களை, அரசை வழிநடத்திய சக்தி என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்
பின்னர் அதையே சி.என்.அண்ணாத்துரை அவர்களும் நிகழ்த்தினார். அவரது ரசனையை அவரது நூல்களில் வாசிக்க மிக ஏமாற்றமாக இருக்கிறது. மேலைநாட்டு வணிகக்கேளிக்கை நூல்களையே அவர் வாசித்திருக்கிறார். அவற்றை முன்னுதாரணமாகக் கொண்டே ரங்கோன்ராதா போன்ற பரப்பிலக்கிய நாவல்களை எழுதியிருக்கிறார். திராவிட இயக்கமும் ஒட்டுமொத்தமாக நவீன இலக்கியத்தை புறக்கணித்தது. திராவிட இயக்கமே ஒரு பரப்பிய இயக்கம். ஆகவே அது பரப்பிலக்கியம் பரப்புசினிமாவை ஆயுதமாகக் கொண்டதில் ஆச்சரியமே இல்லை.
ஆக, தமிழ்ச் சமூகத்தின் சிந்தனையை ஐம்பதாண்டுகளாக ஆண்டுவரும் இரு பேரியக்கங்களும் சீரிய இலக்கியத்தை முற்றாகவே நிராகரித்தன. கல்விநிறுவனங்கள் இலக்கியத்தை பொருட்படுத்தவில்லை. பாடங்களில் இலக்கியம் பயிற்றப்படவில்லை. இலக்கியத்தை ஒருவர் தற்செயலாக, தன்னிச்சையாக படித்தால்தான் உண்டு. அவற்றின் அடிப்படைகளை ஒரு மூத்த வாசகர் சொல்லிக்கொடுத்தால்தான் கிடைக்கும். இல்லையேல் தட்டுத்தடுமாறி அவரே புரிந்துகொள்ள வேண்டும்
புறக்கணிப்புக்கும் இருட்டடிப்புக்கும் உள்ளான இலக்கியம் சிற்றிதழ்கள் வழியாகவே தன்னை நிலைநிறுத்திக்கொண்டது. க.நா.சுப்ரமணியம், சி.சு.செல்லப்பா, சாலிவாஹனன் போன்ற சிற்றிதழ் முன்னோடிகள் சொந்தவாழ்க்கையை முற்றாகவே தியாகம் செய்து ஒருவகை தற்கொலைப்போராளிகள் போல இலக்கியம் என்ற இயக்கத்தை முன்னெடுக்க உழைத்தார்கள். விடாப்பிடியான அவர்களின் முயற்சியால்தான் இலக்கியம் இன்றளவும் நீடிக்கிறது.
இந்தக்காலகட்டத்தில் தமிழில் வணிகஇதழ்களின் பொற்காலம் ஆரம்பித்தது. ஏராளமான வார இதழ்கள் வெளிவந்து பலலட்சம் மக்களை சென்றடைந்தன. அவற்றின் வழியாக பரப்பிலக்கியவாதிகள் மாபெரும் நட்சத்திரங்களாக ஆனார்கள். அகிலன், நா.பார்த்தசாரதி இருவரும் இருந்த உச்சத்தில் எவருமே இருந்ததில்லை. அனைத்து அமைப்புகளாலும் அவர்களே பேரிலக்கியவாதிகளாகக் கருதப்பட்டார்கள்.
இந்நிலையில்தான் க.நா.சு போன்றவர்கள் பரப்பிலக்கியம் வேறு இலக்கியம் வேறு என்ற பிரிவினையை தொடர்ந்து முன்வைத்து விவாதித்தார்கள். அகிலன் ,நா .பார்த்தசாரதி போன்றவர்களின் வாசகர்களிடமிருந்து மிகமிகக் கடுமையான எதிர்ப்புகளை, வசைகளச் சம்பாதித்தார்கள். க.நா.சு சென்னைத்தெருவில் நடமாட முடியாத நிலையே உருவானது. அவர் தமிழகத்தைவிட்டே செல்ல நேர்ந்தது.
நான் எழுதவந்த எண்பதுகளின் இறுதிவரைக்கும்கூட இலக்கியம் என்றால் அது முழுக்க முழுக்க சிற்றிதழ்களைச் சார்ந்து சிறிய வட்டத்துக்குள் மட்டுமே ஒடுங்கியதாகவே இருந்தது. சுஜாதா, பாலகுமாரன், வாசந்தி, சிவசங்கரி, இந்துமதி ஆகியோர் உச்சநட்சத்திரங்களாக விளங்கிய காலகட்டம் அது. நல்ல இலக்கிய நூல்கள் 300 பிரதிகள் அச்சிடப்பட்டன. நல்லவாசகர்களுக்கு கூட புதுமைப்பித்தன் அறிமுகமில்லாத காலம். சுந்தர ராமசாமி என கேள்விப்படாமலேயே இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்று வெளிவரலாமென்ற நிலைமை இருந்த காலகட்டம்.
இரு காரணிகளால் வணிகஎழுத்தின் வேகம் மட்டுப்பட்டது. ஒன்று, தொலைக்காட்சி. தொடர்கதை வாசகர்களை அது எடுத்துக்கொண்டமையால் வணிக இதழ்களில் வெளிவந்துகொண்டிருந்த தொடர்கதைகள் காணாமலாயின. தொடர்கதை நட்சத்திரங்கள் மறைந்தார்கள். இரண்டு, ஐராவதம் மகாதேவன் தினமணி ஆசிரியராக வந்தார். இலக்கியத்தை தினமணி பக்கங்கள் வழியாக பல லட்சம் வாசகர்களுக்கு கொண்டுசென்றார்.
அதன்பின்னர் நடுத்தர இதழ்கள் வெளிவந்தன. இணைய ஊடகம் வலுப்பெற்றது. புத்தகச் சந்தைகள் வந்தன. இன்று இலக்கியம் முழுமையான புறக்கணிப்புக்குள் இல்லை. இன்று கல்விநிறுவனங்களில் ஆங்காங்கே நவீன இலக்கியம் சென்று சேர்ந்துள்ளது. ஒரு நல்ல நூல் சாதாரணமாக சில ஆயிரம்பேரால் வாசிக்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தின் மக்கள்தொகையை வைத்துப்பார்த்தால் புறக்கணிக்கத்தக்க சிறிய எண்ணிக்கைதான் இது.
நமது கல்விநிறுவனங்களில் இலக்கியம் என்பது சமூகத்துக்கு தேவையான உயரிய கருத்துக்களைச் சொல்வது என்றே கற்பிக்கப்படுகிறது. அந்த மனநிலையில் வந்த ஒருவருக்கு பரப்பிலக்கியமே இலக்கியம் என்று தோன்றும். ஏனென்றால் அதுதான் மிகச்சரியாக சமூக மனநிலையை பிரதிபலிக்கிறது. அந்தப்பிரதிபலிப்பு மேலோட்டமானது, மேற்தளத்தை மட்டுமே சார்ந்தது என்பதை அவர் உணர்வதில்லை.
இலக்கியம் என்பது கருத்துக்களால் ஆனதல்ல. அகஅனுபவங்களால் ஆனது என நம் கல்வித்துறை இன்னமும் உணரவில்லை. இலக்கியம் சமூகமனநிலைகளின் கண்ணாடி அல்ல. அது அச்சமூகத்தின் ஆழ்மனத்தின் வெளிப்பாடு. ஒருசமூகத்தின் பேச்சு அல்ல அது, அச்சமூகத்தின் கனவு.
சாதாரணமான பேச்சுகளில் நம் கல்விநிறுவனங்கள் அளிக்கும் எளிய வாய்ப்பாடுகளைக் கொண்டே இலக்கியங்கள் மதிப்பிடப்படுகின்றன. ஆகவே இன்னமும் பெருவாரியான எளிய வாசகர்களுக்கு இலக்கியம் பரப்பிலக்கியம் ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடு தெரியாது. இரண்டையும் ஒரே நோக்கில் வாசிப்பவர்கள்கூட உண்டு. ஆகவேதான் இன்றும் மீண்டும் மீண்டும் க.நா.சு சொன்னதையே சொல்லவேண்டியிருக்கிறது – இலக்கியமும் பரப்பிலக்கியமும் வேறு வேறு.
அந்த வேறுபாட்டை நிறுவியபின் பரப்பிலக்கியத்தை பரப்பிசையை ஆராய்வதுபோலவே நுட்பமாக, அறிவார்ந்த அளவுகோல்களுடன் ஆராய்வதிலும் மதிப்பிடுவதிலும் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. அதை நானே செய்யவேண்டுமென்றே ஆவலுண்டு.
உதாரணமாக, தமிழில் எப்படி காதல் என்ற கருத்து இந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றது என்று சொன்னேன். ஆங்கிலநாவல்களில் இருந்து இறங்கி வந்த அந்த விடுதலைபெற்ற ‘நவநாகரீக வனிதை’ எப்படியெல்லாம் தமிழ் பரப்பிலக்கியத்தில் இடம்பெற்றாள் என ஒருவர் ஆராய்ந்தால் நம் சமூகமனம் பற்றிய மிகப்பெரிய வெளிச்சங்கள் கிடைக்கும். ஆர்வி,எல்லார்வி, பி.வி.ஆர் வழியாக பாலகுமாரன் வரை அந்த பெண்சித்திரம் ஒரு நேர்கோடாக எப்படியெல்லாம் வளர்ந்து வந்தது என்பதை ஆச்சரியத்துடன் உணரலாம்.
பாலகுமாரன் ஆர்வியின் மிக நெருக்கமான வாரிசு. விடுதலைபெற்ற பெண் ஆர்வியில் ஆண்களுக்கு பிரியமானவளாக ஆக்கப்பட்டிருக்கையில் பாலகுமாரனில் அவள் பெண்களுக்கு பிரியமானவளாக மாறியிருக்கிறாள். காரணம் வேலைக்குப்போகும் நடுத்தரவற்கப் பெண்களுக்காக எழுதப்பட்டவையே பாலகுமாரனின் ஆக்கங்கள்.
தமிழ் வணிக எழுத்தில் பல நட்சத்திரங்கள் இருந்தன. அவர்களின் எழுத்துக்களுக்கான தேவை இருக்கும் வரை வணிக இதழ்கள் அவர்களைப்பற்றி பேசுகின்றன. அவர்கள் மறைந்ததும் அல்லது எழுதாமலானதும் அவை அவர்களை முழுமையாகவே மறந்துவிடுகின்றன. அவர்களும் அடையாளமே இல்லாமல் போய்விடுகிறார்கள். ஆர்வி, பிவிஆர் போன்றவர்கள் இருந்த உச்சபுகழில் ஒருபோதும் பாலகுமாரன் இருந்ததில்லை.
ஆனால் ஆர்வி, பிவிஆர் போன்றவர்களை இன்று பொருட்படுத்தவே யாருமில்லை. அது வணிகஎழுத்தின் இயல்பு, அது ‘நுகர்ந்துவீசு’ பண்பாட்டை சேர்ந்தது.. சமகாலத்தன்மையே அதன் வலிமை. சினிமாவும் அப்படித்தான். அது சென்றுகொண்டே இருக்கும். இன்று பல வணிகஎழுத்துக்கள் கிடைப்பதே இல்லை
நம் பரப்பிலக்கியத்தின் வரலாறு எழுதப்படவேண்டும். பரப்பிலக்கியமும் இலக்கியமே. அதுவும் நம் இலக்கியத்தின் ஒருபகுதியே. ஆகவேதான் நான் நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் நூலில் பரப்பிலக்கியத்தையும் ஒரு பகுதியாகச் சேர்த்து அதன் வரலாற்றையும் எழுதியிருக்கிறேன்.
பல இலக்கியவாதிகள் அதைப்பற்றி என்னிடம் குறை சொன்னதுண்டு. அந்நூலை பிழைசரிபார்த்த யுவன் சந்திரசேகர் அப்பகுதிகளை எடுத்துவிடவேண்டும் என அடம்பிடித்தான். அவனிடம் நான் விரிவாக விவாதிக்கவேண்டியிருந்தது.
பரப்பிலக்கியத்தை இலக்கியமாகக் கொண்டால் நம் இலக்கியரசனை மழுங்கும். நம் இலகிய இலக்குகள் சிறியனவாகும். நமக்கு பேரிலக்கியங்களை அளித்த முன்னோடிகளை அவமதித்தவர்களும் ஆவோம். எந்த பண்பாடு தன் கலைஞர்களையும் சிந்தனையாளர்களையும் போற்றி அவர்களிடம் மேலும் மேலும் எதிர்பார்க்கிறதோ அதுவே வளரும். ஆகவேதான் பரப்பிலக்கியத்தை இலக்கியத்தில் இருந்து வேறுபடுத்தி அடையாளம்காட்ட எப்போதுமே முயல்கிறேன்.
ஆனால் பரப்பிலக்கியத்தின் வரலாறு முறையாக எழுதப்படவேண்டும் என்றும்,பரப்பிலக்கியத்தின் சமூகப்பங்களிப்பு விரிவாக ஆராயப்படவேண்டும் என்றும் நினைக்கிறேன். அது நம் சமுகத்தை நாம் அறிவதற்கான ஒரு வழியாகும். கோடானுகோடி பேர் வாசித்து ரசிக்கும் பரப்பிலக்கியம் ஒரு மாபெரும் நிறுவனம் என்பதே காரணம்
ஜெ
மறுபிரசுரம் முதற்பிரசுரம் Sep 25, 2010