‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 19

பகுதி மூன்று : சிறைபெருந்தாழ் – 7

மாளிகையின் முன் தேர் நிற்பதுவரை கர்ணன் எதையும் அறிந்திருக்கவில்லை. புரவிகளின் குளம்படியோசைத்தொடர் அடுக்கழிந்து உலைந்ததை உணர்ந்து அவன் விழித்து எழுந்தபோது சகடங்கள் கிரீச்சிட்டு தேர் முன்னும் பின்னும் சலித்தது. அவன் இறங்கி பாகனை நோக்கி தலையசைத்துவிட்டு தன் மாளிகை நோக்கி நடந்தான். காவலர் தலைவன் ஊஷரன் அவனை நோக்கி வந்து தலைவணங்கி “பெரும்புகழ் அங்கத்தின் அரசரை வாழ்த்துகிறேன். இந்த மாலை இனிதாகுக!” என்றான். தலையசைத்துவிட்டு மாளிகையின் படிகளில் ஏறினான். ஊஷரன் பின்னால் வந்தபடி “அங்கத்தில் இருந்து செய்தியுடன் அணுக்கர் ஒருவர் தங்களைத் தேடி வந்துள்ளார்” என்றான்.

கர்ணன் திரும்பி நோக்க “எட்டாண்டுகள் அரசரின் அணுக்கமாக இருந்தவர். சிவதர் என்று பெயர். அங்க நாட்டு அவைமுறைமைகளையும் அரசுசூழ்தலையும் நன்கு அறிந்தவர் என்கிறார்” என்றான். “நான் எவரையும் வரச்சொல்லவில்லையே!” என்றான் கர்ணன். “இல்லை, ஆனால் பட்டத்து அரசி அவரைப்பற்றி ஒற்றர்கள் வழியாக விசாரித்து அறிந்திருக்கிறார். அரசியின் ஆணைப்படிதான் அவர் இங்கு வந்திருக்கிறார்” என்றான். ஆர்வமின்றி தலையசைத்தபடி அவன் கூடத்திற்குள் நுழைய அங்கே அவனுக்காகக் காத்து நின்றிருந்த வீரர்கள் தலைவணங்கி வாழ்த்துரை எழுப்பினர்.

உள்ளிருந்து சால்வையை சுற்றியபடி வந்த சிற்றமைச்சர் சரபர் “அங்கநாட்டரசரை என் முடி பணிவதாக! அலுவலில் இருந்தேன்” என்றபின் மூச்சுவாங்க “அரசே, இவர்தான் சிவதர்” என்றார். சிவதர் தலைவணங்கி “என் அரசரை சந்திக்கும் பேறுபெற்றேன்” என்றார். சுருக்கங்கள் ஓடிய விழியோரங்களும் பழுத்த இலைபோன்ற நீள்முகமும் கூரிய மூக்கும் சிறியகைகள் கொண்ட சிற்றுடலும் கொண்டிருந்த சிவதரை நோக்கி கர்ணன் “அஸ்தினபுரிக்கு நல்வரவு” என்றான். “அங்க நாட்டரசரை அடிபணிகிறேன். தங்கள் பணிக்கு என் உடலும் சித்தமும் ஆன்மாவும் என்றென்றும் சித்தமாக உள்ளது” என்றார்.

“சத்யகர்மரிடம் இருந்தீரா?” என்றான் கர்ணன். “ஆம். அவருடைய நான்கு அணுக்கர்களில் நானும் ஒருவன்” என்றார் சிவதர். கர்ணன் அவர் விழிகளை நோக்கி தன்னுள் எழுந்த வினாவைத் தவிர்த்து “என்னை அங்க நாட்டில் தாங்கள் பார்த்ததுண்டா?” என்று கேட்டான். “இல்லை. இளமையில் அங்கு இருந்தீர்கள் என்று அறிந்திருக்கிறேன்” என்றார். அவரது விழிகளையே மேலும் சிலகணங்கள் கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்த பின் அவன் உதடுகளை ஏதோ சொல்வதற்காக மெல்ல அசைத்தான். அவரும் விழிகளை விலக்கிக் கொள்ளவில்லை. தெள்ளிய இரு பளிங்கு நிலைகள் போன்ற விழிகள். அவற்றுக்கு அப்பாலும் எந்த மறைவுகளும் இருக்கவில்லை. கர்ணன் மீண்டுவந்து “நன்று” என்றான். “நன்று சிவதரே, தங்களை நாளை சந்தித்து விரிவாக உரையாடுகிறேன்” என்றான். அவர் தலைவணங்கி “அவ்வாறே” என்றார்.

திரும்பி ஊஷரனிடம் உளம் அமையாத வெற்றுச்சொல்லென “நன்று” என்றபின் கர்ணன் முன்னால் நடக்க சரபர் அவனுக்குப் பின்னால் வந்தபடி மெல்லிய குரலில் “சிவதரிடம் நான் உரையாடினேன். அரசியின் தேர்வு சரியானதே. சிறந்த அணுக்கர்களுக்கு வேண்டிய மூன்று பண்புகளும் அவரிடம் உள்ளன. தனக்கென்று விழைவுகள் இல்லாமல் இருக்கிறார். பணிவிடையாற்று செய்வதில் நிறைவு கொள்கிறார். செய்தோம் என்னும் ஆணவமும் அற்று இருக்கிறார்” என்றார். கர்ணன் “என் முதல் மனப்பதிவும் சிறப்பானதாகவே உள்ளது” என்றான்.

அமைச்சர் “அங்கு ஏழாம் நிலை அமைச்சராக ஹரிதர் என்பவர் இருக்கிறார். அமைச்சர்களில் அவரே இளையவர். மூத்தவர்கள் சத்யகர்மரை அன்றி பிறரை அரசராக ஏற்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள். அங்க நாட்டின் கருவூலத்திலிருந்து அவர்களுக்குரிய அந்தணர்காணிக்கையை அளித்து வைதிகமுறைப்படி காடேகலுக்கான முறைமைகள் செய்யப்பட்டுள்ளன. ஹரிதரைப் பற்றி விரிவாகவே அரசி உசாவி அறிந்திருக்கிறார். தங்களுக்கு அனைத்து வகையிலும் அவரே வழிகாட்டியாகவும் செயற்கரமுமாக இருப்பார்” என்றார்.

“நன்று” என்று களைப்புடன் சொன்னபின் கர்ணன் படிகளில் ஏற ஆரம்பித்தான். அவர் தலை வணங்கி கீழேயே நின்று கொண்டார். மேலே செல்லச் செல்ல தன் உடல் எடை மிகுந்து வருவது போல் அவனுக்குத் தோன்றியது. படிகளின் பலகையடுக்குகள் முனகி ஓசையிட்டன. இறுதிப் படியில் காலெடுத்து வைத்து நின்று கைப்பிடியை பற்றியபடி திரும்பி கீழே நோக்கினான். அமைச்சர் மறுபடியும் தலைவணங்கியபோது தலை அசைத்துவிட்டு இடைநாழியில் நடந்தான்.

படுக்கை வரைக்கும் தன் உடலை சுமந்து செல்வதே கடினம் என தோன்றியது. அப்போது அவன் விழைந்ததெல்லாம் மஞ்சத்தை அடைவதுதான். உடலை நீட்டி கண்களை மூடிக்கொண்டு இருளில் படுத்திருக்க வேண்டுமென்று விழைந்தான். துயில் கொள்ள முடியுமென்று தோன்றவில்லை. துயில்வதா என்று உடனே உள்ளம் விழித்துக் கொண்டது. அரை நாழிகைக்குள் கவசங்களுடனும் படைக்கலன்களுடனும் அரண்மனை முகப்புக்கு சித்தமாகி வரும்படி துரியோதனன் ஆணையிட்டிருந்தான். அரை நாழிகை என்றால் அறைக்குள் சென்றதுமே உடைகளை மாற்றத்தொடங்கிவிட வேண்டும். அரண்மனை முற்றம் வரைக்கும் செல்வதற்கே கால் நாழிகை நேரம் தேவைப்படும்.

அவன் தன் அறைக்கு முன்பாக செல்வதற்குள் இடைநாழியின் மறு எல்லையிலிருந்து விருஷாலி அவனை நோக்கி வந்து ஆடையை திருத்தி கூந்தலை ஒதுக்கிக்கொண்டு “தாங்கள் உடனே கிளம்பவேண்டுமென்று அரண்மனையிலிருந்து செய்தி வந்தது. தங்களுக்குரிய மாற்று ஆடைகளையும் நீராட்டறைக்கான ஒருக்கங்களையும் செய்துள்ளேன்” என்றாள். அவள் மூக்குநுனி வியர்த்திருந்தது. குறுநிரைகள் நெற்றியில் ஒட்டியிருந்தன.

கர்ணன் சினத்துடன் அவளை நோக்கி ”உன்னிடம் யார் இதையெல்லாம் செய்யச் சொன்னது? நான் பல முறை உன்னிடம் ஆணையிட்டிருக்கிறேன். இவற்றை செய்வதற்காக நீ இங்கு இல்லை என்று” என்றான். அவள் முகம் ஒளி அணைந்தது. உதடுகள் அழுந்த கண்களில் நீர்ப்படலம் மின்னியது. இமைகளை சரித்தபோது விழிப்பீலிகளில் நீர்ப்பிசிறுகள் சிதரொளித்தன. உதடுகள் குவிய மெல்லிய குரலில் “இவற்றைச் செய்ய எனக்கு பிடித்திருக்கிறது” என்றாள்.

அவன் அவள் கன்னங்களில் இருந்த சிறிய பருவை பார்த்தான். உள்ளம் தழைந்தது. தன் கையை அவள் தோளில் வைத்து “சத்யை, நீ அங்கத்தின் அரசி. இவற்றைச் செய்வதற்கு இங்கு சேடியர் பலர் உள்ளனர். இவற்றை நீ செய்யும்போது உன்னை நீ இறக்கிக் கொள்கிறாய்” என்றான். அவள் விழிதூக்கி “இங்கு எனக்கிருக்கும் ஒரே இன்பமென்பது இதுதான். இதையும் நான் செய்யலாகாது என்றால் இங்கு நான் எதற்காக?” என்றாள். “இங்கு அரசி என்றிரு. பார், நீ அணிந்திருக்கும் ஆடைதான் என்ன? அரசியர்க்குரிய ஆடைகளை அணிந்துகொள். அணிகலன்களை அணிந்து கொள். அஸ்தினபுரியில் எந்தப் பெண்ணும் விழையும் அணிக்கருவூலம் உனக்கென திறந்துள்ளது” என்றான் கர்ணன்.

அவள் உதடை அழுத்தி எச்சில் விழுங்கியபடி பார்வையை சாளரத்தை நோக்கி திருப்பினாள். அவன் அவள் தோளை வளைத்து அருகிழுத்து முகத்தை கைகளால் தூக்கி அவள் விழிகளை பார்த்தபடி “அணிகொள்வது உனக்கு பிடிக்கவில்லையா?” என்றான். “எனக்காக அணிசெய்துகொள்ளமாட்டாயா?” அவள் தலைமயிரை கோதி ஒதுக்கி கழுத்தை மெல்ல ஒசித்து “இப்போதே அணி செய்து கொண்டுதான் இருக்கிறேன். இந்த எளிய உடைகளும் நகைகளும் உங்கள் விழிகளுக்கு படுவதே இல்லை” என்றாள்.

“இல்லை. இத்தோற்றத்திலேயே நீ அழகாகத்தான் இருக்கிறாய். ஆனால் இத்தோற்றத்துடன் சேடிகள் நடுவே நின்றால் உன்னை தனித்தறிய முடியாது. நான் சொல்வதை புரிந்து கொள். ஆடையணிகள் அரசர்களை பிரித்துக் காட்டுவதற்காக மட்டுமே. அரசமுறைமைகள் வழியாகவே அரசர்கள் அமைகிறார்கள். மானுடர் அனைவரும் நிகரே. அரசநிலை என்பது ஒரு கூத்தில் நிகழும் நடிப்பு. எனவே இங்கு நாம் நடித்துதான் ஆகவேண்டும்” என்றான். “எனக்கு சலித்துவிட்டது” என்று அவள் சொன்னாள். “அந்த மின்னும் அணிகளை அணிந்து, தடித்த ஆடைகளை சுற்றிக்கொண்டு எப்போதாவது ஆடியில் என்னை நான் பார்த்தால் துணுக்குறுகிறேன். நீங்கள் சொன்னது போல இது ஒரு கூத்துமேடையின் மாற்றுரு என்றே எனக்குத் தோன்றுகிறது. இந்த அறைக்குள் மட்டுமேனும் நான் என் வடிவில் ஏன் இருந்து கொள்ளக்கூடாது?” என்றாள். மீண்டும் எழுந்த சினத்துடன் அவன் “நீ இந்த அறைகளுக்குள் மட்டும்தான் இருக்கிறாய். அறவே அரசவைக்கு வருவதில்லை. நீ ஏன் அரசவைக்கு வருவதில்லை என்று இன்று அரசர் கேட்டார்” என்றான்.

அவள் விழிகளைத் தூக்கி “அதற்கும் எனக்கு உரிமையில்லையா?” என்றாள். “உரிமையில்லை என்றல்ல. உன்னை தன் இளையவளாக எண்ணுபவர் அரசர். உனக்கென அங்கொரு அரியணை அமைக்கவேண்டும் என்றால் அதற்கும் சித்தமாக இருப்பவர். எதோ உளக்குறையால்தான் நீ வரவில்லை என்று அவர் எண்ணுகிறார்” என்றான். “நான் அவர் உள்ளத்தை அறிவேன். அவர் உனக்கென துயர்கொண்டிருக்கிறார்.”

“அத்துணை துயர்கொண்டவர் என்றால் அவர் சூதப்பெண்ணை உங்களுக்கு மணமுடிக்க ஒப்புக்கொண்டிருக்கலாகாது…” என்றாள் விருஷாலி. அவன் சொல்ல வாயெடுப்பதற்குள் உரக்க “நான் அங்கு வரமாட்டேன். ஒரு போதும் அஸ்தினபுரியின் அரசவையில் இனி என்னை எவரும் பார்க்கமுடியாது” என்றாள். கர்ணன் “விழவுகளுக்கு வருவதில்லை. களியாட்டுகளுக்கு செல்வதில்லை. நாளெலாம் இந்த அரண்மனையின் அறைகளுக்குள் இருக்கிறாய். இங்கு பணிப்பெண்களுக்கு நிகராக ஆடை அணிந்திருக்கிறாய்” என்றான்.

“இப்படித்தான் நான் இருப்பேன். சூதப்பெண் சூதப்பெண்ணாக இருந்தால்தான் மகிழ்வு ஏற்படும். மாற்றுருத் தோற்றங்களை நாளெலாம் சூடிக்கொண்டிருப்பது போல் துன்பம் பிறிதொன்றிலை” என்றாள் விருஷாலி. பெருமூச்சுடன் “நான் ஒன்றும் சொல்வதற்கில்லை” என்றபடி கர்ணன் அறைக்குள் சென்றான். அவள் பின்னால் வந்து “சினம் கொள்ளாதீர்கள். எப்போதாவதுதான் இங்கு வருகிறீர்கள். வரும்போதும் இப்படி சினந்தால் நான் என்ன செய்வது?” என்றாள்.

அவள் குரலின் துயர் கண்டு அவன் கனிந்து மீண்டும் திரும்பி அவள் புறங்கழுத்தில் கையை வைத்து இழுத்து தன்னுடன் அணைத்துக் கொண்டான். அவள் கன்னங்களிலும் கழுத்திலும் முத்தமிட்டு “சினம் கொள்ளவில்லை. உன்னிடம் சினம் கொள்வேனா?” என்றான். அவள் உடல் வியர்வையின் உப்புடன் இருந்தது. அவன் நாவால் உதடுகளை வருடிக்கொண்டான். “சினம் கொள்கிறீர்கள்” என்று அவள் சொன்னாள். அவன் மார்புக்குழி அளவுக்கே அவள் முகம் இருந்தது. அவனுடைய புயத்தின் திரள்தசையில் தலையை சாய்த்து விழிகளை ஏறிட்டு “எப்போதும் என்னைப் பார்க்கையில் முதலில் உங்கள் புருவங்களில் ஒரு முடிச்சு விழுகிறது. யார் இவள் என்று பார்ப்பது போல். ஒரு வினா உங்கள் விழிகளில் வந்து செல்கிறது” என்றாள்.

“நீ கற்பனை செய்து கொள்கிறாய்” என்று அவன் அவள் காதருகே பறந்த சுருள் நிரையை தன் கைகளில் சுருட்டி இழுத்தான். “ஆ…” என்று சற்று ஒலியெழுப்பி அவன் விரலைத் தட்டியபின் “இல்லை, எனக்குத்தெரியும்” என்றாள். “முதல் நோக்கில் முகம் மலர்வதே அன்பு.” கர்ணன் “அன்பில்லை என்று நினைக்கிறாயா?” என்றான். “இருக்கிறது. அது இயல்பாக எழும் அன்பல்ல. இரண்டாவது கணத்தில் அன்பாக இருக்கவேண்டும் என்று நீங்களே உங்களுக்கு ஆணையிட்டுக் கொள்ளும்போது எழுவது” என்றாள்.

“இப்படியெல்லாம் கீறி பகுக்கத் தொடங்கினால் ஒருபோதும் உன்னால் உறவுகளில் மகிழ்ந்திருக்க முடியாது. நூறு முறை உன் தலை தொட்டு ஆணையிட்டிருக்கிறேன். இந்தப் பிறவியில் நான் தொடும் முதல்பெண் நீ. என் நெஞ்சமர்ந்த தேவி. அந்த அரியணையிலிருந்து நீ ஒரு போதும் இறங்கப்போவதில்லை” என்றான். அவள் பெருமூச்சுவிட்டு “அதை அறிவேன்” என்றாள். “அதற்கப்பால் நான் என்ன செய்யவேண்டும் உனக்கு?” என்றான். “நீங்கள் ஒன்றும் செய்யவேண்டியதில்லை” என்றபின் அவள் அவன் கைகளை மெல்ல விலக்கி “உடனே நீங்கள் கிளம்ப வேண்டுமென்றார்கள்” என்றாள்.

அவன் எட்டி அவள் கையை பிடித்தபோது சங்குவளைகள் நொறுங்கி கீழே விழுந்தன. அரைவளையம் புழுவென துள்ளித் துடித்து சுழன்று விழ “ஐயோ” என்று அவள் குனிந்தாள். “விடு” என்று அவளை இழுத்து தன்னுடன் சேர்த்துக்கொண்டு “சொல், நான் என்ன செய்ய வேண்டும்?” என்றான். “நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. எனக்காக நீங்கள் எதைச் செய்யும்போதும் நான் மேலும் துயர் அடைகிறேன்” என்றாள் விருஷாலி. “என் உள்ளத்திற்கும் உடலுக்கும் நீங்கள் மிகப்பெரியவர். எனக்கென நீங்கள் கனியும்போதுகூட உங்களை கீழிறக்குகிறேன் என்ற குற்ற உணர்வு என்னை துயருறச் செய்கிறது. என் மேல் நீங்கள் அன்பை காட்டுகையில்கூட தகுதியற்று அவ்வன்பை பெற்றுக் கொள்கிறேன் என்பதால் மேலும் துயர் கொள்கிறேன்.”

“இவ்வுணர்வுகளை நீ வந்த உடனே அடைந்ததை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இத்தனை நாட்களுக்குப் பிறகும் என் உள்ளத்தை நீ அறியவில்லையென்றால் நான் எச்சொற்களால் அதை உன்னிடம் சொல்வேன்?” என்றான். “தாங்கள் சொல்ல வேண்டியதில்லை” என்றாள். “எனக்கென நீங்கள் எண்ணம் குவிக்கவேண்டியதில்லை. சொல்லடுக்கவும் வேண்டியதில்லை.” “நான் என்ன செய்யவேண்டும்?” என்று அவன் மீண்டும் கேட்டான். “என்னை முற்றிலும் மறந்துவிடுங்கள். எனக்கென எதையும் செய்யாதீர்கள். என்னை மணக்கவில்லையென்றே எண்ணிக் கொள்ளுங்கள்” என்றாள் விருஷாலி.

விழிகளைத் திருப்பி தரளிதமான குரலில் “காட்டில் மதவேழம் செல்வது போல என்று உங்கள் நடையை பார்க்கும்போது தோன்றுகிறது. நான் எறும்பு. என்னை உங்கள் பார்வையில் பொருட்படுத்தவே கூடாது” என்றாள். கர்ணன் சினத்துடன் “என்ன சொல்கிறாய் என்று உனக்கே தெரிகிறதா?” என்று அவள் தலையை தட்டினான். அவள் துயரத்துடன் புன்னகைத்து “தெரிகிறது. இந்த எண்ணமன்றி வேறெதுவும் எனக்கு வரவில்லை” என்றாள்.

“அப்படியென்றால் உன்னை நோக்கும்போது என் கண்களில் அன்பு வரவில்லை என்று ஏன் சொன்னாய்?” என்றான். “உனக்கு என் அன்பு தேவையில்லை என்றால் ஏன் தேடுகிறாய்?” விருஷாலி “அன்பு வரவில்லை என்று சொல்லவில்லை” என்று தலைகுனிந்தபடி சொன்னாள். “உங்கள் பெரிய உயரத்திலிருந்து கண்ணுக்குத் தெரியாத படிகளில் இறங்கி நீங்கள் என்னை நோக்கி வருவதை அந்த முதல் கணத்தில் காண்கிறேன். நெஞ்சு துணுக்குறுகிறது. நானாக அந்தப் படிகளில் ஏறி உங்களை அடையவே முடியாது என்று தோன்றுகிறது.”

“இந்த அணிச்சொற்களெல்லாம் எனக்கு எவ்வகையிலும் பொருள் அளிப்பதில்லை” என்று கர்ணன் சலிப்புடன் சென்று தன் மஞ்சத்தில் அமர்ந்தான். “சேடியை அழைத்து சற்று யவன மது கொண்டு வரச்சொல்” என்றான். “நீராடவில்லையா?” என்று அவள் கேட்டாள். “இல்லை. நீராடி உடை மாற்றிச் செல்ல நேரமில்லை. அரை நாழிகைக்குள் நான் அரண்மனைக்கு செல்லவேண்டும்” என்றான். “அரைநாழிகைக்குள்ளா?” என்று அவள் கேட்டாள். “ஆம், உடனே கலிங்கத்துக்குச் செல்கிறோம்” என்றான்.

அவள் கண்களில் வந்த மாறுதலைக் கண்டதுமே அவள் அத்தனை எளிய பெண்ணல்ல என்று அவன் புரிந்து கொண்டான். மறுசொல் சொல்லாமல் அவள் அசைவற்று நின்றதை கண்டபோது அவன் நினைத்ததை விடவும் ஆழமானவள் என்று தெரிந்தது. “கலிங்க இளவரசியர் இருவரையும் நானும் அரசரும் சென்று சிறையெடுத்து வரப்போகிறோம்” என்றான் கர்ணன். “இருவரையுமா?” என்று அவள் கேட்டாள். “ஆம். இளையவளை நான் மணக்கவேண்டுமென்றும் அவளையே பட்டத்தரசி ஆக்கவேண்டுமென்றும் அரசரும் அரசியும் விழைகிறார்கள்” என்றான். “நன்று” என்று அவள் சொன்னாள்.

அவன் அவள் கண்களை உற்று நோக்கி “உனக்கு அதில் துயரில்லையா?” என்று கேட்டான். “இல்லை. நான் அதைத்தானே மீண்டும் மீண்டும் உங்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன். அது உங்கள் கடமை. ஷத்ரிய அரசியின் கைபற்றி நீங்கள் அங்க நாட்டுக்குள் சென்றால் மட்டுமே அங்குள்ள மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுவீர்கள். அங்குள்ள ஷத்ரியர்களின் நன்மதிப்பையும் பெறுவீர்கள்” என்றாள். “ஆம். அது உண்மை” என்றான் கர்ணன். “ஆனால் நானிதை செய்யக்கூடாதென்றே என் உள்ளம் சொல்லிக் கொண்டிருக்கிறது.”

“எனக்காகவா?” என்று அவள் கேட்டாள். அவள் கண்களை நோக்கி திரும்பி “ஆம், உனக்காகத்தான்” என்று கர்ணன் சொன்னான். அவள் “இதைத்தான் நான் சொன்னேன். எனக்காக நீங்கள் எதையும் செய்யக்கூடாது. எனக்காக நீங்கள் இறங்கி எதை செய்ய முயன்றாலும் பிழை செய்கிறேன் என்ற உணர்வை நான் அடைகிறேன். இத்தகைய பெரிய இழப்பொன்றை நீங்கள் அடைந்தால் அத்துயரிலிருந்து என்னால் ஒருபோதும் மீளமுடியாது. நீங்கள் கலிங்க இளவரசியை மணந்தாக வேண்டும்” என்றாள்.

“நீ முடிசூட முடியாதென்று அறிவாயல்லவா?” என்றான். “முடிசூட வாய்ப்பிருந்தாலும் நான் முடிசூட விரும்பவில்லை” என்று விருஷாலி சொன்னாள். “அரசவையில் அரைநாழிகை நேரம் அமர்ந்திருக்கவே என் உடம்பு கூசுகிறது. மணிமுடி சூடி அரியணையில் அமர்ந்திருப்பதென்பது எண்ணிப்பார்க்கவும் முடியாத ஒன்று” என்றாள். “நீ என்னவாக இருக்க விரும்புகிறாய்?” என்று அவன் கேட்டான். “உங்கள் பாதங்களை சென்னிசூடும் எளிய அடியாளாக” என்றாள். “நீங்கள் அறை வரும்போது உங்கள் மேலாடையை வாங்கிக் கொள்ளவும் உங்கள் நீராட்டறை ஒருக்கங்களை செய்யவும் என் கையால் யவன மது கொண்டு தரவும் விரும்புகிறேன்.”

“பணிப்பெண்ணாக. அல்லவா?” என்றான். “ஆம், உங்களுக்குப் பணிவிடை செய்வதன்றி இன்பமெதையும் நான் காணவில்லை” என்றாள். “என் காதலில் கூடவா?” என்றான். அவள் பேசாமல் நின்றாள். “சொல்!” என்றான் கர்ணன். அவள் நிமிர்ந்து அவன் விழிகளை நோக்கி “ஆம். உங்கள் காதலில் கூடத்தான்” என்றாள். கர்ணன் உரக்க “என்ன சொல்கிறாய்?” என்றான். “அக்காதலுக்கு நான் தகுதியற்றவள்” என்றாள்.

“இது என்ன வகையான எண்ணமென்றே எனக்கு புரியவில்லை. நீ சூதன்மகள் என்பதாலா? அப்படியென்றால் நானும் சூதன் மகனே” என்றான். அவள் சினந்து திரும்பி நோக்கி “இல்லையென்று நீங்கள் அறிவீர்கள்” என்றாள். “என்ன சொல்கிறாய்?” என்று அவன் உரத்த குரலில் கேட்டபடி எழுந்தான். “உங்கள் தோற்றம்! அது சொல்கிறது நீங்கள் சூதன் மகன் அல்ல என்று. அதற்கப்பால்…” என்றபின் “நான் பார்த்தேன்” என்றாள். “எதை பார்த்தாய்?” என்று அவன் கேட்டான். “அன்றிரவு…” என்று அவள் சொன்னாள். “எந்த இரவு?” என்றான். அவள் பேசாமல் நின்றாள். “சொல்!” என்றான் கர்ணன். “அன்று மணநாளில்.” அவன் அவளை கூர்ந்து நோக்கி “என்ன கண்டாய்?” என்றான்.

“உங்கள் அருகே மணமேடையில் அமர்ந்திருக்கும்போதே என் உள்ளம் பதறிக்கொண்டேதான் இருந்தது” என்று அவள் தலைகுனிந்து மெல்லிய குரலில் சொன்னாள். “ஏன்?” என்றான். “நீங்கள் என் கைபிடிக்கவிருப்பதாக அறிந்த நாள்முதலே அந்த நடுக்கம் என்னுள் நுழைந்துவிட்டது. சூதர்களின் கதைகள் என்னுள் பெருகிக்கொண்டிருந்தன. பின்னர் உங்களை அவைமேடையில் கண்டேன். விண்ணில் முகில்களில் எழுந்த தேவன்போல. இவரா என்று என் தோழியரிடம் கேட்டேன். இவரேதான் சூரியன் மைந்தர் என்றார்கள்.”

அன்னையிடம் சென்று “அன்னையே, இவரை நான் மணக்கவிழையவில்லை” என்று சொல்லி அழுதேன். “வாயைமூடு, இந்த மணம் நம் குடிக்கே நற்கொடை. குடிமூத்தாரெல்லாம் பெருங்களிப்பில் இருக்கிறார்கள். மறுபேச்சு எழுந்தால் கொலைசெய்து புதைக்கவும் தயங்கமாட்டார்கள்” என்று அன்னை சினந்தாள். குதிரைக் கொட்டடிக்கு அப்பால் குடியிருக்கும் என் மூதன்னையிடம் சென்று அவள் கைகளைப்பற்றி நெற்றியில் வைத்துக்கொண்டு “நான் அஞ்சுகிறேன் அன்னையே” என்று கண்ணீர்விட்டேன்.

“அஞ்சாதே, வெய்யவனுக்கு நிகராக பெருங்கருணை கொண்டவன் என்று அவனை சொல்கிறார்கள். இப்புவியில் பிறிதின்நோய் தன்னோய் போல் நோக்கும் பெரியோன் அவன் ஒருவனே என்று பெரியோர் வாழ்த்துகிறார்கள். அணுகும்தோறும் தண்மைகொள்ளும் கதிரவன் என்று சூதர்கள் பாடுகிறார்கள். நீ அவன் தோளில் மரக்கிளையில் மயில் என இருப்பாய்” என்றாள் என் மூதன்னை. அவள் பழுத்த நகங்கள் கொண்ட கைகளை கன்னங்களில் அழுத்தியபடி “இனி ஏதும் செய்வதற்கில்லையா அன்னையே?” என ஏங்கினேன்.

தோழியர் கைபற்றி என்னை மணவறைக்கு அழைத்துச் சென்றபோது எங்குளேன் என்று அறியாதவளாக என் கட்டை விரலில் விழிநட்டு காலை காற்றில் துழாவி வைத்து நடந்து வந்தேன். நீங்கள் மணமேடையில் அமர்ந்திருப்பதை தொலைவிலேயே பார்த்துவிட்டேன். இடப்பக்கம் நின்ற தோழி என் விலாவைக் கிள்ளி “பாரடி, ஒரு நோக்கு பார்ப்பதனால் ஒன்றும் கற்பு குறைபடாது” என்றாள். நான் விழிதூக்கி உங்களைப் பார்த்து கண்களை சரித்துக் கொண்டபோது ஒரு அதிர்ச்சியை அடைந்தேன். உங்கள் காதுகளில் இரு ஒளிமணிக் குண்டலங்களை கண்டேன்

கர்ணன் நகைத்து “நன்று. சூதர் கதைகளால் சூழப்பட்டிருக்கிறாய்” என்றான். “இல்லை, நான் பார்த்தேன். மீண்டும் விழிதூக்கி பார்த்தபோது அது அங்கில்லை. அது விழிமயக்கு என்று சொல்லலாம். ஆனால் நான் பார்த்த கணத்தில் அது உண்மை. அக்குண்டலத்தின் ஒளிக்கதிரை மிகத் தெளிவாகவே நான் கண்டேன். என் உடல் நடுங்கிவிட்டது. முன்னங்கால் வியர்த்து தரை வழுக்கியது. உங்கள் அருகே நான் அமரலாகாது என்றும் தோழியர் கைகளை உதறிவிட்டு திரும்பி ஓடிச்சென்று விடவேண்டுமென்றும் விழைந்தேன். ஆனால் என் உடல் தளர்ந்து மேலும் மேலும் எடை கொண்டு அசைய முடியாதாயிற்று. எண்ணுவதொன்றும் உடலை சென்றடையவில்லை. அதை அவர்கள் ஒரு நனைந்த துணிப்பாவை என மணமேடையில் அமர்த்தினர்.”

தங்கள் அருகே அமர்ந்திருக்கையில் ஏனோ இளமையில் இருந்த அத்தனை இன்பங்களும் ஒன்றன்மேல் ஒன்றாக நினைவுக்கு வந்தன. அவையனைத்தும் எனக்குள் துயரை நிறைத்தன. மணப்பறையின் ஓசை என்னை கோலால் அடிப்பது போலிருந்தது. நீள்குழலிசை வாள் என என்னை கிழித்தது. மங்கலநாண் பூட்டி மாலை மாற்றி ஏழடி வைத்து இறைவிண்மீன் நோக்கியபின் என் அறைக்குள் திரும்பிச் சென்றதுமே தோழியரை உதறி ஓடிச்சென்று அறை மூலையில் அமர்ந்து முழங்கால் மேல் முகத்தை வைத்துக்கொண்டு குமுறி அழுதேன். அவர்கள் சூழ அமர்ந்து ஏன் ஏன் என்று என்னை கேட்டார்கள். ஒரு சொல்லும் என்னால் எடுக்கக் கூடவில்லை.

அன்றிரவு உங்கள் அறைக்கு வரும்போது என்னால் ஒரு அடிகூட இயல்பாக வைக்கமுடியவில்லை. அவர்கள் என்னை தூக்கிதான் கொண்டு வந்தனர். உடலெங்கும் நீர் விடாய் பழுத்து எரிவது போல. தலைக்கு மேல் கடுங்குளிர் கொண்ட முகில் ஒன்று அழுத்துவது போல. அந்நிலையை இப்போது எண்ணினாலும் என் உடல் நடுங்குகிறது. உங்கள் காதுகளில் தெரிந்த குண்டலங்களையே எண்ணிக் கொண்டிருந்தேன்.

உங்கள் அறைக்குள் வந்து நின்றபோது விழிதூக்கி உங்கள் குண்டலங்களைத்தான் தேடினேன். அவை என் விழிமயக்கு என்று தெரிந்தது. ஆயினும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நீங்கள் எளிய சூதர் அல்ல, கதிர் மைந்தன். நான் கண்டது ஒளியோன் உங்களுக்கு அளித்ததாக சூதர் கதைகளில் வரும் அந்தக் குண்டலங்களைத்தான். ஐயமே இல்லை என எண்ணினேன். உங்கள் கைகளால் என்னை தொடவந்தபோது நினைவழிந்து விழுவதாக உணர்ந்தேன். நெடுநேரம் என் நெஞ்சிடிப்பை அன்றி எதையும் நான் கேட்கவில்லை. பின்னர் மீண்டும் அக்குண்டலங்களை கண்டேன்.

“கவசத்தையும் பார்த்தாயா?” என்றான் கர்ணன் சிரித்தபடி. “ஆம், பார்த்தேன். அன்றிரவு நீங்கள் சாளரத்தருகே பீடத்தை இழுத்துப் போட்டு இருண்ட குறுங்காட்டை பார்த்தபடி அமர்ந்திருந்தீர்கள். என் அறைமூலையில் முழங்கால் மேல் முகம் அமர்த்தி அமர்ந்திருந்த நான் தலை தூக்கியபோது, உங்கள் காதுகளில் அந்த மணிக்குண்டலங்கள் ஒளி விடுவதையும் ஆடையற்ற விரிமார்பில் பொற்கவசம் அந்திச் சிவப்பு போல சுடர்வதையும் என் விழிகளால் கண்டேன்.”

“விழிமயக்கல்ல அது. நெடுநேரம் நான் பார்த்திருந்தேன். உண்மையா இல்லை கனவா என்று நூறு முறை எனக்குள் கேட்டுக் கொண்டேன். எழுந்து வந்து அவற்றை நான் தொட்டுவிடமுடியும் போல் அத்தனை தெளிவாக கண்டேன். உங்களுக்குத் தெரியும் நீங்கள் சூதன் மகன் அல்ல, சூரியனின் மைந்தன்” என்றாள். “உன் தாழ்வுணர்வால் துன்பத்தை உருவாக்கி பெருக்கிக் கொள்கிறாய்” என்றான் கர்ணன். “உண்மையில் நான் ஏமாற்றம் கொண்டிருக்கிறேன் விருஷாலி. நான் பிறிதொரு பெண்ணை மணக்கவிருக்கிறேன் என்று சொல்லும்போது சற்றேனும் நீ துயர் கொண்டிருந்தால் ஒரு சொல்லேனும் அதைத் தடுத்து நீ சொல்லியிருந்தால் என் மேல் நீ கொண்டிருக்கும் காதலின் அடையாளமாக அதை எண்ணியிருப்பேன்.”

விருஷாலி அவன் விழிகளை நோக்கி “இல்லை. உங்கள் மேல் என் உள்ளத்தில் காதலென்று எதுவும் இல்லை” என்றாள். அச்சொல் அவன் மேல் குளிர்நீர்த்துளி விழுந்ததுபோல் ஒரு மெல்லசைவை உருவாக்கியது. அவள் மேலும் சொல்வதற்காக விழிகளை விரித்து காத்திருந்தான். “காதலென்பது நிகரானவரிடமே எழ முடியும். உங்களுடன் ஒரு நாளேனும் சிரித்துக் களியாடமுடியும் என்றோ ஒரு மலர்த்தோட்டத்தில் உங்களுடன் இளையோளென்றாகி ஆடமுடியும் என்றோ நான் எண்ணவில்லை.”

சற்று நேரம் அவளை நோக்கி அமர்ந்திருந்த கர்ணன் புன்னகையுடன் “நன்று” என்றபடி எழுந்தான். அருகறைக்கு தன் அணிகளுக்காக சென்றான். விருஷாலி அவனுக்குப் பின்னால் “ஆனால் அந்த கலிங்க இளவரசியும் தங்களுடன் விளையாடமுடியும் என்று எண்ணக் கூடவில்லை” என்றாள். அவன் திரும்பி “ஏன்?” என்றான். “ஏனென்றால் ஷத்ரியப் பெண் என்றாலும் அவள் வெறும் பெண்.” அவன் அவளை நோக்கி நின்றான். அவள் “ஒரே ஒருத்தி மட்டுமே உங்களை தனக்கு இணையானவராக எண்ணியிருக்கிறாள். அவள் மட்டுமே உங்களிடம் காதல் கொண்டு களியாடியிருக்கக் கூடும்” என்றாள்.

“யார்?” என்று விழிகளைத் திருப்பியபடி கர்ணன் கேட்டான். விருஷாலி “இப்போது அவள் ஐவருக்கு மனைவி. எனவே அதை நான் சொல்லக்கூடாது” என்றாள். கர்ணன் சற்று நேரம் கழித்து “அதெல்லாம் சூதப்பெண்களின் அடுமனைப் பேச்சு” என்றான். “இல்லை. இங்கு வருவதற்கு முன்பே நான் அதை அறிந்திருந்தேன். அன்று முழுவடிவில் தங்களைப் பார்த்ததுமே அதைத்தான் உணர்ந்தேன். இங்கிருக்க வேண்டியவள் இந்திரப்பிரஸ்தத்தின் பேரரசியல்லவா என்று எண்ணியபோது என் நெஞ்சு அடைத்துக் கொண்டது. இழிமகளே இழிமகளே என்று என்னை நானே அழைத்துக் கொண்டேன்” என்றாள்.

கர்ணன் பற்களைக் கடித்து இறுகிய குரலில் “துயரத்தை பெருக்கிக் கொள்வதில் உனக்கொரு பயிற்சி இருக்கிறது” என்றான். “இல்லை. இங்கு வருவதற்கு முன் நான் அப்படி இருக்கவில்லை. என் நினைவறிந்த நாள் முதலேயே சிரிப்பும் விளையாட்டும் மட்டும் அறிந்த சிறுமியாகத்தான் இருந்தேன். உங்களுக்கு என்னை மணம் முடித்துக் கொடுக்கப்போவதாக என் தந்தை சொன்ன நாள் முதல் நான் பிறிதொருத்தி ஆனேன். என் இளமை இனி நான் மீளவே முடியாத கனவு போல என்னுள் எங்கோ புதைந்துவிட்டது” என்றாள்.

கர்ணன் அந்தப் பேச்சை அங்கே முடித்து மீள விரும்பினான். எங்கிருந்து தொடங்குவதென்று தெரியவில்லை. அவன் உடலசைவிலிருந்து அதை உய்த்துணர்ந்த விருஷாலி “நான் யவன மது கொண்டு வருகிறேன்” என்றாள். அவன் தலை அசைத்ததும் மெல்லிய பெருமூச்சுடன் திரும்பி வெளியே சென்றாள். இயல்பான கையசைவால் அவள் தன் ஆடையை திருத்துவதை கண்டான். அவ்வழகு அவனை வியக்கச்செய்தது. அவ்வண்ணமென்றால் அவளை அழகியல்ல என்று எண்ணுகிறேனா?

இல்லை என்றது சித்தம். ஆம் என்றது ஆழம். அவளை இயல்பாக எண்ணிக்கொள்ளும்போது ஒருபோதும் அழகி என்னும் எண்ணம் வந்ததில்லை. அவளைக் காணும் முதற்கணம் அவன் உளம் மலரவில்லை என்று அவள் சொன்னது உண்மை. ஆகவேதான் அவன் சினம் கொண்டான். ஏனென்றால் அவள் அழகியல்ல என்பதனால்தான். அவள் ஒரு பணிப்பெண்போலத்தான் இருந்தாள். ஆகவேதான் அவளை ஆடையணிகளின்றி காணும்போது எரிச்சல்கொண்டானா?

அவ்வெண்ணங்களை அள்ளி ஒதுக்கிவிட்டு அணியறைக்குள் சென்று பயண ஆடைகளை தானே அணிந்து கொண்டான். தோள்கச்சைகளை இறுக்கி அதில் வாளையும் குறுவாள்களையும் அணிவதற்கான கொக்கிகளை பொருத்தினான். கடலாமை ஓடாலான கவசத்தை அணிந்து அதன் மேல் பட்டுச் சால்வையை சுற்றிக் கொண்டான். ஆடியை நோக்கி திரும்பி மீசையை முறுக்கிக் கொண்டிருந்தபோது அவள் பொற்கிண்ணத்தில் யவன மதுவுடன் வந்து நின்றாள். ஆடியில் அவன் அவளை பார்த்தான். அவன் கண்களை அவள் சந்தித்தபோது நாணத்துடன் அவள் விலகிக் கொண்டான். அவன் திரும்பி அந்தக் கிண்ணத்தை வாங்கியபடி “காதலில்லை என்று சொன்னாயல்லவா? இப்போது உன் கண்களில் அதை பார்த்தேன்” என்று சொன்னான்.

அவள் கன்னங்கள் குழிய சிரித்தபடி “காதலில்லை என்று சொன்னதுமே நான் காதலைத்தான் உணர்ந்தேன்” என்றாள். “ஏன்?” என்று அவன் கேட்டான். “ஏனெனில் நான் உங்களுடன் இருந்திருக்கிறேன். உங்கள் மைந்தர்களை பெறப்போகிறேன்” என்றாள். அவள் கன்னங்கள் அனல்பட்டவைபோல சிவந்தன. பின்பு சற்று விலகி அறை வாயிலை நோக்கி அவள் நகர அவன் அவள் கைகளைப்பற்றி இழுத்தான். “மாட்டேன்” என்று சொன்னாள். “ஏன்?” என்றான். “ஆடிக்குள் வரமாட்டேன்” என்றாள். “ஏன்?” என்று அவன் மீண்டும் கேட்டான். “நான் ஆடியை நோக்குவதேயில்லை.” “அணி கொள்ளும்போது கூடவா?” என்று கர்ணன் கேட்டான்.

“ஆம்.” அவன் “ஏன்?” என்றான். “இளமையில் ஆடியை விட்டு நகரவே மாட்டேன். இப்போது ஆடியை நோக்கும்போதெல்லாம் இன்னும் சற்று அழகாக இருந்திருக்கக் கூடாதா என்ற எண்ணம் என்னை துன்புறுத்துகிறது” என்றாள். அவன் அவள் தலையை தட்டி “நீ ஒருபோதும் இந்த வீண்எண்ணங்களில் இருந்து விடுபடப்போவதில்லை” என்றான். அவள் “கிளம்புங்கள். இப்போதே அரை நாழிகை ஆகிவிட்டது” என்றாள். அவன் யவன மதுவை அருந்தி கோப்பையை அருகிருந்த மஞ்சத்தில் வைத்தான். பின்பு அவள் தோளில் கைவைத்து “சென்று வருகிறேன்” என்றான். “அரசியுடன் வாருங்கள்” என்றாள் விருஷாலி.

அவன் அவள் கண்களைப் பார்த்து “பொறாமையில்லையா?” என்றான். அவள் விழிகளை சாய்த்து “இருக்கிறது” என்றாள். “அதை எப்போது உணர்ந்தாய்?” என்றான். “இப்போது மது கொண்டு வரும்போது” என்றாள். உரக்க நகைத்து “நன்று. அது தேவை” என்று அவள் தோளை தட்டியபின் “கிளம்புகிறேன்” என்றான்.

மீண்டும் படிகளில் இறங்கும்போது தன் உடல் எடையற்றிருப்பது போன்று உணர்ந்தான். இரு தாவல்களில் இறங்கி கூடத்திற்கு வந்து திரும்பிப் பார்த்தபோது படிகளின் மேல் பிடியை பற்றியபடி புன்னகையுடன் விருஷாலி நின்றிருந்தாள். கர்ணன் கூடத்தில் தொழுது நின்றிருந்த சிவதரிடம் “நாங்கள் கலிங்கத்துக்குச் செல்கிறோம் சிவதரே” என்றான். அவர் “நான் அதை உய்த்துணர்ந்தேன்” என்றார். “எப்படி?” என்றான் கர்ணன். “நாளை அங்கு மணத்தன்னேற்பு விழா. அரை நாழிகையில் அரசர் கிளம்பவிருக்கிறார் என்று தேரோட்டி சொன்னபோது தாங்கள் செல்லவிருப்பதை உணர்ந்து கொண்டேன்.”

IMG-20160106-WA0002

“உங்களுக்கு கலிங்க நாடு நன்கு தெரியுமா?” என்றான் கர்ணன். “அங்கமும் கலிங்கமும் ஒரே நிலம்” என்றார் சிவதர். “கிளம்புங்கள் உங்கள் வழிகாட்டல் எங்களுக்கு தேவைப்படும்” என்றான் கர்ணன். “படைகள் உண்டா?” என்றார் சிவதர். “நாங்கள் இருவர் மட்டுமே செல்கிறோம்” என்றான் கர்ணன். “அரசருக்கு வழிகாட்டுவது என் நல்லூழ்” என்றார் சிவதர். “அரசர் வருவதாக உங்களிடம் யார் சொன்னது?” என்றான். “நாங்கள் இருவரும் என்று அரசரை அன்றி பிறரை சேர்த்துக் கொள்ள மாட்டீர்கள்” என்றார் சிவதர். கர்ணன் நகைத்தபடி “நீர் எப்போதும் என்னுடன் இருக்கப்போகிறீர். வருக!” என்றான்.

முந்தைய கட்டுரைஆ.மாதவனுக்குப் பாராட்டுக்கூட்டம்
அடுத்த கட்டுரைசங்கரர் உரை -கடிதங்கள் 2