கடிதங்கள்.

என்னை பாதித்த நெடுநாள் தொந்தரவு தந்த நாவல்களில் ஒன்று பின்தொடரும் நிழலின் குரல். கடைசியில் அரங்கேறும் அந்த நாடகம்… அதன் உக்கிரம், ஒரு படைப்பில் எல்லாம் சாத்தியம் என்பதையும், எப்போதும் நம்முள் பேசும் குரல்கள் பல குரல்கள் சில நேரங்களில் எப்படி நம்மை பைத்தியம் போல் ஆக்குகின்றன என்பதின் தத்ரூப வெளிப்பாடு. அந்த நாடகம் அரங்கேறும் பொது அந்த வசனங்களில் என்னை இழந்து எனக்கு காய்ச்சல் வரும்போல் இருந்தது. இப்படியான படைப்புகள் மிக அரிதாகவே பார்க்க முடிகிறது. ஜெயமோஹனுக்கு எனது ஆத்மார்த்தமான நன்றிகள்!

பாலா

அன்புள்ள ஜெ சார்,
என்னுடைய பெயர் நா. சதீஷ். என்னை உங்கள் இடத்தில அறிமுகம் செய்து கொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நான் சென்னை இல் ஒரு தனியார் கணிபொறி நிறுவனத்தில் பணிபுரிகிறேன். தங்களுடைய Blog ஐ நேரம் கிடைக்கும் போது படித்து வருகிறேன். தற்போது “விஷ்ணுபுரம்” புத்தகத்தை வாங்கி படித்து வருகிறேன். என்னுடைய நண்பன் Rajkumar எனக்கு இந்த புத்தகத்தை அறிமுகம் செய்து வைத்தான். அவனுக்கு இந்த நேரத்தில் நான் நன்றி கூறுகிறேன்.

இந்த புத்தகத்தை kavitha publications இல் வாங்கும் போது எதாவது தள்ளுபடி கொடுங்கள் என்று கேட்டேன். அவரும் கொடுத்தார். என்னுடை சந்தேகம் இதுதான். ஒரு தேடலுக்கான விதையாக உள்ள புத்தகத்தஐ வாங்கும் பொது ஒருவன் தள்ளுபடி யை எதிர்பார்ப்பது சரியா? இதற்கான விடையை ஒரு பதிப்பகத்தார் கண்நோட்டத்தோடும், ஒரு நூல் ஆசிரியராகவும் அதே நேரத்தில் ஒரு சாதாரண நூல் வாசிப்பவரகவும் கூறுங்கள்.

கடைசியாக, தங்களுடைய விஷ்ணுபுரம் புத்தகம் படிக்கும் பொது எனக்கு மிகுந்த ஆச்சர்யமும் ஆனந்தமும் ஏற்படுகிறது.

இப்படிக்கு,
நா சதீஷ்.

சதீஷ்.

புத்தகம் விற்கப்படும்போது அது ஒரு நுகர்பொருளே. அதை நுகர்பொருளாக அணுகுவதில் பிழை இல்லை. அதை ஒரு தானமாக நினைப்பதே பிழை
ஜெ

ஜெ,

நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் சிறுகதைத் தொகுப்பினை மீண்டும் படிக்கின்றேன். ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு வாசிப்பனுபவத்தினைத் தருகிறது. குறிப்பாக “தாண்டவம்” மற்றும் “விரல்” கதைகள்.

உங்களின் யானைக்கதைகள் எப்போதுமே யதார்த்த சித்தரிப்பினால் பிரமிப்பை அள்ளித் தருபவை ( மத்தகம், விஷ்ணுபுரம்). தாண்டவத்தில் அடித்தமர்த்தப்பட்ட யானையின் சினம் மெல்ல மெல்ல பொங்கி வரும் தருணம் நடுங்க வைத்தது. சேற்றிலமிழ்ந்த நாயரின் சித்திரம் இன்னும் மனதில்.

என் குழந்தையின் சித்திரத்தை “விரல்” கதையில் முழுமையாக கண்டேன். வெகு துல்லியமான அற்புதமான சித்தரிப்பு. சிறுகதை வடிவத்தின் அத்தனை சாத்தியக்கூறுகளையும் இத்தொகுப்பில் உள்ள கதைகள் கண்ணாடியாய் காட்டுகின்றன. எத்தனை முறை வாசித்தாலும் முதல் முறை கிடைத்த பரவசனுபவத்தையே தரும் வல்லமை படைத்த பல கதைகளை படைத்த, படைக்கும் உங்களுக்கு நன்றிகள் பல!

-ரா.சு.

நன்றி. சிறுகதைகளைப்பற்றி அபூர்வமாகவே கடிதங்கள் வருகின்றன. என் யானைக்கதைகள் மேல் எனக்கே மோகம் உண்டு. குறிப்பாக மண்
ஜெ

சார்,
உங்களுடைய “அனல் காற்று” படித்தேன். அதன் முக்கிய கதாபாத்திரங்களிடம் இருந்து இன்னும் வெளியே வர முடியவில்லை. எல்லா உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ள முடிந்த ஒரு நல்ல தோழி இருந்தால் தான் பெண்ணின் உணர்வை இந்த அளவு சரியாக வெளிப்படுத்த முடியும். இந்த வகையில் பால குமாரனுக்கு அடுத்து வேறு யாரும் அந்த இடத்தை பிடிக்கவில்லை. இப்பொழுது நீங்கள்.
இன்னும் ஒரு சந்தோஷம் நான் பணி புரியும் bsnl நிறுவனத்திலேயே நீங்களும் பணி புரிவதை அறிந்தது தான்.
வாழ்க !! வளர்க !!
அன்புடன்
rufina

நன்றி,

பாலகுமாரனுக்கு அடுத்து என்னை வாசிக்க ஆரம்பித்திருக்கிறீர்கள்…))

ஜெ

முந்தைய கட்டுரைஇசை கடிதங்கள்
அடுத்த கட்டுரைஓ.என்.வி.குறுப்புக்கு ஞானபீடம்