புதியவர்கள் கடிதங்கள் 2

5

பெருமதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,

நான் உங்கள் எல்லா எழுத்துகளையும் தொடர்ந்து படித்து வருகிறேன். புத்தாண்டில் உங்கள் சோர்வு பற்றிய பதிவுகள் மிகுந்த மனஉளைச்சலை தந்தது. என் போன்ற பலபேர் சோர்வை போக்கும் எழுத்து உங்களுடையது. உங்கள் ஒவ்வொரு வரியையும் இக்கணம் வரை தொடர்கிறேன். உங்களோடு வாழ்வதாகவே உணர்கிறேன். அதிகம் கடிதம்/பிற தொடர்பு இல்லாமல் உங்களை பல்லாயிரம் பேர் தொடர்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்களை பின் தொடரும் ஒரு புதிய தலைமுறையே உருவாகி வருகிறது. உங்கள் உடலும் மனமும் வலிமையாக இருக்க பிராத்திக்கிறேன். எதோ ஒரு திடீர் உந்துதலில் இக்கடிதம்.

கருணாகரன்.

 

அன்புள்ள கருணாகரன்,

அதைச் சோர்வு என்று சொல்ல முடியாது. ஊக்கம் என்பது ஒரு சிலகணங்களில் பின்னுக்கு வருவதுண்டு. அதற்கான காரணம் உண்மையைச் சொல்லப்போனால் வெண்முரசில் வந்த தீர்க்கதமஸ் என்னும் கதாபாத்திரம்தான் என நினைக்கிறேன். அது எனக்கு எப்படித்தெரிந்தது என்றால் இன்று சாயங்காலம் என் வீட்டுக்கு அருகே என்னைச்சந்தித்த ஒரு வெண்முரசு வாசகர் சொன்னபோதுதான்,

ஜெ]

 

==============================================
அன்பு ஜெமோ அண்ணா அவர்களுக்கு,
வெண்முரசு மூலம் உங்கள் எழுத்து பரிச்சயம் அதற்கு முன் உங்கள் பெயர் தெரியும், அவ்வளவே. ஒரு வார காலமாக தொடர்ந்து வீட்டிலும், அலுவலகத்திலும் ஜெயமோகன் தான். தாளவில்லை எழுதிவிட்டேன் கடிதம், கீதை உரை, நேற்று இரவு சங்கரர் உரை எத்தனை விஷயங்கள், புரிந்த மாதிரியும் புரியாத மாதிரியும் ஒரு குழப்பத்தில் இருக்கிறேன். உங்கள் வயது எனக்கு, இது வரை படித்ததெல்லாம் என்ன, தெரியவில்லை.

விஷ்ணுபுரம் படித்து, மீண்டும் படித்து, பயமாக இருக்கிறது, பல இடங்கள் புரியாமலே போய்விடுவோமா என்று. அறம் மீண்டும் மீண்டும் அழ வைக்கிறது. இந்திரநீலம் பல முறை அலுவலகத்திலேயே படித்து, தனியறை என்பதால் விசும்பி அழ முடிந்தது, பாதி கதை புரியாமலேயே. ஒரு நாள் புரியும் என்ற நம்பிக்கையில். இப்பொழுது ஒரு சோதனை முயற்சியாக வெண்முரசு, Richard Dawkins, இரண்டையும் ஒரு சேர மாற்றி மாற்றி படிக்கிறேன்.

வெய்யோன் – தீர்க்கதமஸ் முடிந்து இன்று அதன் தொடர்பு திருதஷ்டிரரோ என ஒரு சிறு எண்ணம் எழுந்து அடுத்த வரியில் துரியோதனன் தம்பிகள் அதை சொல்வதாக,அவர்கள் அறிவின் மாண்பு (வஞ்ச புகழ்ச்சியாக) புரிந்த பொது, அவர்களை விட மடையனாக உணர்ந்தேன்.

இறுதியில், செயல்கள் விளைவுகளுக்காக அல்ல என்ற உங்கள் கடித வரி, சட்டென்று எதோ உடைந்த உணர்வு.
அதே உணர்வுடன்,

ஜெ. ஆ. ஐங்கரன்,
மதுரை.
அன்புள்ள ஐங்கரன்

எந்தக் காலமானாலும் சிந்தனைக்குள் வந்துசேர்வது நல்ல தருணம்தான். உண்மையில் புரிந்தும் புரியாமலும் ஒரு விஷயம் நம்மை வந்தடைவதுதான் மிகமிக அற்புதமான காலகட்டம். அப்போதிருக்கும் பரவசமும் கனவும் பிறகு அமைவதில்லை.

வாழ்த்துக்கள்

ஜெ

 

===================================================================

இனிய ஆசிரியருக்கு,

விழா அனுபவங்களை பற்றி இத்தனை கடிதங்கள் வந்த பிறகும், நாம் என்ன புதிதாய் எழுதி விட போகிறோம் என்ற மன நிலையும், புத்தாண்டு விடுமுறை பயணங்களும், என்னைக் கடிதம் எழுத விடாமல் வைத்திருந்தது. எனினும் கமலக்கண்ணன் அவர்களுக்கு உங்கள் கடிதத்தில் புதியவர்களுக்கு நீங்கள் தரும் முக்கியத்துவத்தை குறிப்பிட்டதே என்னைக் கடிதம் எழுத தூண்டியது.

இதுவே நான் கலந்து கொள்ளும் முதல் விஷ்ணுபுரம் விழா. விருது விழாவில் அவசியம் இரண்டு நாட்களும் கலந்து கொள்ள வேண்டும் என முன்னரே முடிவு செய்து திட்டமிட்டிருந்தாலும், வைரஸ் காய்ச்சல் வந்து விட்டதால் இரண்டாம் நாள் மட்டுமே என்னால் கலந்து கொள்ள முடிந்தது. மேலும் திரும்புவதற்கு என் தம்பி தவறாக 8:00 மணி பேருந்திற்கே பதிவு செய்து விட்டதால், விழா நிறைவடைவதற்கு முன்பே யாரிடமும் சொல்லாமல் புறப்பட வேண்டியதாகிவிட்டது. இது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தாலும், அன்று ஒரு நாள் எனக்கு கிடைத்த அனுபவங்களும், விவாதங்களில் அறிந்து கொண்ட கருத்துகளும் அளித்த தூய அறிதலின் மகிழ்ச்சி, நிறைவான இன்பத்தையே தந்தது.

நான் 27 அன்று காலையில் கோவை வந்து முதலில் தவறாக கிக்கானி பள்ளிக்குச் சென்று விட்டேன். அங்கிருந்து ராஜஸ்தானி நிவாஸ்க்கு வழி விசாரித்து நடந்து வந்தேன். கோவையில் பலரும் நான் செல்ல வேண்டிய இடத்தை தெளிவாக கேட்டு மிகச் சரியாக வழி சொல்லினர். அருகிலேயே மற்றொரு ராஜஸ்தான் கல்யாண மண்டபம் இருந்தது. ஆயினும் நான் வழி கேட்ட அனைவரும் மிகச் சரியாக கேட்டு, ராஜஸ்தானி நிவாஸ்க்கு வழி சொன்னது தமிழகத்தின் பிற நகரங்களில் எனக்கு கிடைத்த அனுபவங்களுடன் ஒப்பிட்டு பார்க்க ஆச்சர்யத்தை அளித்தது.

ராஜஸ்தானி நிவாஸில் நுழைந்ததும் விஷ்ணுபுரம் சென்னை நண்பர்கள் இருந்தனர். அவர்களை சென்னை வெண்முரசு விவாதத்தில் ஒரு முறை சந்தித்து இருந்தேன். அவர்களுக்கு என்னை நினைவிருக்குமா எனத் தெரியவில்லை. நானும் தனியாக அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை. எனினும் உற்சாகமான உரையாடல்களும், கிண்டல்களும், கேலிகளும் என்னையும் இயல்பாக இணைய வைத்தது.

சிறிது நேரத்தில் தேவதச்சன் கவிதை விவாதம் ஆரம்பித்தது. ஏற்கெனவே நான் தேவதச்சன் கவிதைகள் சிலவற்றையும், தளத்தில் வந்திருந்த தேவதச்சன் கவிதைகள் குறித்த அணைத்து கட்டுரைகளையும் வாசித்திருந்ததால் என்னால் இயல்பாக உரையாடலில் ஒன்ற முடிந்தது. எனக்கு மிகவும் பிடித்த
தேவதச்சன் கவிதையான,

குருட்டு ஈ

ஆஸ்பத்திரியில்
வெண்தொட்டிலில்
சுற்றுகிறது
இறந்து கொண்டிருக்கின்ற குழந்தையின்
மூச்சொலி
பார்க்கப்
பயமாக இருக்கிறது
சுவரில்
தெரியும் பல்லி
சீக்கிரம் கவ்விக் கொண்டு
போய்விடாதா
என் இதயத்தில்
சுற்றும் குருட்டு ஈயை

இந்த கவிதை எனக்கு முதல் முறையாக மிதி வண்டியில் ஏறிக் கிழே விழுந்த போதும், சாலை விபத்தில் மரணம் அடைந்த ஒரு பிணத்தை கண்ட போதும், இன்னும் பல பயமும் வருத்தமும் கலந்த தருணங்களில் என் இதயத்தில் நான் உணர்ந்த ஒரு குறுகுறுப்பை, உணர்ச்சியை, ஒரு குருட்டு ஈயாய் என் கண் முன்னே நிறுத்தியது. இந்த கவிதையை நான் வாசிக்க ஆசைப் பட்டேன். எனினும் அது முதல் நாளே வாசிக்கப் பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தால் வாசிக்கவில்லை.

பின்னர் நடந்த, கவிதை வடிவங்கள் பற்றிய உரையாடலும், மிளிர்கல் ஆசிரியர் முருகவேளுடன் நடந்த உரையாடலும், வரலாற்று எழுத்து குறித்த விவாதமும், உணவு இடைவேளைக்கு பின்னர் நடந்த உரையாடலும் எனக்கு பல புதிய கருத்துக்களை அறிந்து கொள்ள கிடைத்த சிறந்த வாய்ப்பு.

உணவு இடைவேளையின் போது நான் சுநீல் மற்றும் சுரேஷுடன் அறிமுகப் படுத்திக் கொண்டேன். வல்லபியிடம் அவர்கள் கட்டிடம் முடியும் தருவாயில் இருப்பதை கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன். மாலை தேநீர் நடை மிகுந்த உற்சாகத்தை அளித்தது. தங்களுடன் கீதை உரை குறித்து பேச விரும்பினாலும் தருணம் கிடைக்கவில்லை. கீதை உரை மிகச் சிறப்பாக இருந்தது. குறிப்பாக மூன்றாம் பகுதியில், பாரதத்தில் பீஷ்மரும், சுதந்திர போராட்டத்தில் காந்தியும் கர்ம யோகிகளாகவும், அதே போல விதுரரும் அரவிந்தரும் ஞான யோகிகளாகவும் குறிப்பிட்டது பல நாட்கள் என் சிந்தனைக்கான கச்சாப் பொருளாக அமைந்தது. வெண்முரசின் சில பாகங்களை இதைக் கொண்டே மறு வாசிப்பு செய்யவும், அரவிந்தரின் வாழ்கை வரலாற்றை வாசிக்கவும் நினைத்திருக்கிறேன்.

தேநீருக்கு பின் நாஞ்சில் நாடன், சங்க இலக்கிய வாசிப்பு குறித்து பேசியதை கேட்டது என்றும் என் நினைவில் இருக்கும். விழா மிகச் சிறப்பாகவே நடை பெற்றது. நான் இரண்டாவது வரிசையிலேயே அமர்திருந்ததால் எனக்கு ஒலிக் குறைபாடுகள் பெரிதாகத் தெரியவில்லை.ஆவணப் படம் மிகச் சிறப்பாக இருந்தது.

கமலக்கண்ணன் கூறியது போல இது ஓர் இனிய தொடக்கமே. எதிர்காலத்தில் நான் கலந்து கொள்ள போகும் விஷ்ணுபுரம் விழாக்களும், ஊட்டி இலக்கிய முகாம்களும் என் கண்முன்னே விரிகிறது.

நன்றி.
லெட்சுமிபதி ராஜன்

அன்புள்ள லெட்சுமிபதிராஜன்

இந்தமுறை சந்தித்தபுதியவர்களை எண்ணும்போது மிகுந்த மனநெகிழ்ச்சி உருவாகிறது. இன்னும் நுட்பமாகவும் விரிவாகவும் இந்த சந்திப்புகளை உருவாக்கவேண்டும் என்னும் எழுச்சி இப்போது எஞ்சியிருக்கிறது

ஜெ

 

 

முந்தைய கட்டுரைசங்கரர் உரை -கடிதங்கள் 2
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 20