இசை கடிதங்கள்

ஆபிரகாம் பண்டிதர்

து.ஆ.தனபாண்டியன்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

1986-‘ இனி’ இதழுக்கு முன்பாகவே சற்று ஜனரஞ்சகமாக இருந்தாலும் கொஞ்சம் உருப்படியான சினிமா கட்டுரைகளை எம்.ஜி. வல்லபன் எழுதியிருக்கிறார். சில கட்டுரைகளை அறந்தை நாராயணனும் எழுதி படித்திருப்பதாக நினவு.

ச.மனோகர்

அன்புள்ள ஜெயமோகன்,
இசை ஒரு வாசனை போலிருக்கிறது பல நேரங்களில். திடீரென்று நம்மை உடைத்து விடுகிறது. உதாரணத்திற்கு சிறு வயதில், மதிய உணவு வேளையில் வீட்டிற்கு நடந்து வரும்போது ரேடியோவில் ஒரு பாட்டு வரும், இந்திய மொழிகள் எல்லாம் கலந்து…பால முரளி சார் கூட பாடுவாரே… “இசை…. நம் இசை….” அது என்னை எங்கெங்கோ கொண்டு செல்லும். இதை நான் சொல்ல மட்டும் தான் முடிகிறது ஆனால் இதை ஒருவேளை என் வயதை ஒத்த (33 ) பிறர் உணர்ந்திருக்க கூடும். இந்த ரீதியில், இளையராஜா இசை மீது எனக்கு அப்படி ஒரு காதல். ரஹ்மானின் சில பாடல்கள் பிடித்தாலும், இங்கே இவ்வளவு பெரிய ஒரு மேதை இருக்கும் போது… சரி விடுங்கள், மாறுதல் ஒன்றே விதி. சில நேரம் பயமாய் கூட இருக்கிறது. முன்பு பழைய MGR சிவாஜி பாடல் ஒலிக்கும்போது இளையராஜா பாடல் வைக்கச் சொல்லி சண்டை போடுவோம்… இப்போது இளையராஜா ஒலிக்கும்போது ரஹ்மான் இசை கேட்டு அடுத்த தலைமுறை சண்டை போடுகிறது. இது சம்பந்தமாய் விவாதிப்பதைக் கூட விட்டுவிட்டு பேசாமல் பார்த்துக் கொண்டிருக்கவே தோன்றுகிறது.

பாலா

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு!
வணக்கம். தங்களின் பரப்பிசை பற்றிய கட்டுரைகல் ஒரு புதிய பாதையை இசை விமர்சனத்தில் துவக்கியிருக்கின்றன என்றே சொல்லலாம். இவற்றினால் ஏற்படும் விவாதம் ஒரு நல்ல விளைவை இசைத்துறையில் ஏற்படுத்தும் என நம்புகிறேன்.
ஷாஜியின் இசை விமர்சனத்தைப்பற்றினத்தைப்பற்றி நான் எதுவும் குறைகாணவில்லை. ஆனால் இசையைதாண்டி தனிநபர் விமர்சனத்தில் அவர் இறங்குவதாக மற்றவர் நினைப்பதற்கு அவரே இடம்கொடுக்கிறார். இளையராஜா பற்றி அவர் கூறிய தகவல் தவறானது என நீங்கள் உட்பட பலர் கூறியிருந்த போதிலும் அவர் திருத்திக்கொள்ள விரும்பாதது அவர்மீதான நம்பகத்தன்மையை பெரிதாகவே குறைக்கும். ஒரு எழுத்தாளன் தன்மீதான விமர்சனத்திற்கு பதிலளிக்காமல் செல்லலாம். ஆனால் ஒரு விமர்சகன் தன விமர்சனத்தை நியாயப்படுத்தவோ திருத்திக்கொள்ளவோ முன்வராவிட்டால் எப்படி நாம் மேற்கொண்டு அவரை வாசிக்கமுடியும். சேதுபதியின் கட்டுரை மிகச்சரியானது என ஏற்ருக்கொள்ளவேண்டியதில்லை ஆனால் அவர் கேட்ட கேள்விகளுக்கு ஷாஜி பதிலளித்தால் அவர் விமர்சனங்கள் எனக்கு பயனாகும். இதனால் அவருக்கு ஒரு இழப்பில்லை என்றபோதிலும் எனக்கு ஒரு இழப்பே.
அன்புடன்
த. துரைவேல்

அன்புள்ள ஜெமோ,

தங்களின் பரப்பிசை குறித்த கட்டுரை கண்டேன். (பரப்பிசையை விமர்சித்தல் குறித்து… ). இதன் ஒரு பகுதி திரு. சேதுபதி அருணாச்சலத்தின் கட்டுரைக்கு எதிவினையாகவே இருந்தது.

ஒரு அடிப்படை கேள்வி. பரப்பிசையை ஆராய முடியுமா? (விமர்சித்தல் மாத்திரம் அல்ல.) எந்த ஒரு இலக்கணத்திற்குள்ளும் பொதுவாக அடங்காத, எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாத ஒரு விஷயத்தை எங்ஙனம் ஆராய்வது? அதற்கு எந்த மாதிரியான அளவுகோல்களை நிர்ணயிப்பது?

அதன் ஒரே அளவுகோல் அது மக்கள் மத்தியில் எவ்வளவு தூரம் சென்றடைகிறது மற்றும் அது எவ்வளவு தூரம் மக்களால் விரும்பபடுகிறது என்பது மட்டுமே. அதன் பிறகு மற்றவை எல்லாமே தனி நபர் (அதன் கர்த்தா) ஆராய்தலாகவே முடியும். அதுதான் ஷாஜின் கட்டுரைகளுக்கும் நிகழ்கிறது. (செவ்வியல் கலைகளுக்கு அந்த பிரச்சனை இல்லை.)

இந்த தளத்தில் தனி நபர் சார்பாகவும் அல்லது எதிராகவும் பேசபடுவது தவிர்க்கவே முடியாத ஒன்றாகிவிடும். ஏனென்றால் ஆராயபடுவது அந்த தனி நபரின் (கர்த்தாவின்) பண்புகளும், தன்மைகளும் மற்றும் ஆளுமைகளும் மட்டுமே.

பரப்பிசையின் விளைவுகளையும் அதன் தாக்கங்களையும் ஆராயலாம். பரப்பிசையை அல்ல. இந்த எல்லைக்குள் நின்று ஆராய்ந்தால் அது இசை விமர்சனமாகாது. அதன் விளைவுகள் குறித்த ஆராய்ச்சி மட்டுமே.

ஷாஜி செய்வது ஒரு குறிப்பிட்ட இசை குறித்த விமர்சனம் மட்டுமே என்றால் அது அந்த குறிப்பிட்ட இசை குறித்த அவரின் சொந்த கருத்தாக மட்டுமே இருக்க முடியும். (இந்த பாடல் நன்றாக உள்ளது அல்லது நன்றாக இல்லை மற்றும் அதற்க்கான காரணங்கள். ). அவர் அந்த எல்லைக்குள் மட்டுமே நின்று பேசுகிறாரா?

என்னுடைய இந்த கருத்தில் ஏதேனும் பிழை இருந்தால் சுட்டி காட்ட வேண்டுகிறேன்.

அன்புடன்,

சிற்றோடை.

அன்புள்ள சிற்றோடை, துரைவேல்

இந்த விஷயங்களைப்பற்றி நான் ஒன்றுமே சொல்வதற்கில்லை. விவாதத்தின் எல்லைக்குள் நின்றபடி இந்த விஷயங்களை விவாதிக்கலாம், நிராகரிக்கலாம், ஏற்கலாம். நான் சொல்வது அவற்றின் தத்துவ அடிப்படையை மட்டுமே

ஜெ

முந்தைய கட்டுரைதொ.ப,ஒரு விவாதம்
அடுத்த கட்டுரைகடிதங்கள்.