இவ்வருடத்திற்கான இயல் விருது தமிழ் விக்கிப்பீடியா பக்கத்தை உருவாக்கி ஒருங்கிணைக்கும் மயூரநாதன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அறிவு என்பதே உலகளாவிய ஒற்றைப்பேரியக்கம் என்ற அளவில் இணையத்தால் இன்று ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது. விக்கிப்பீடியா அதில் ஆற்றும் பங்கு மிகப்பெரியது. தமிழில் அதன் பங்களிப்பை முன்னெடுக்கும் மயூரநாதன் அவர்களின் பங்களிப்பு போற்றுதலுக்குரியது
திரு மயூரநாதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
இயல் அமைப்பின் செய்தி
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வருடா வருடம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது ( இயல் விருது ) இம்முறை தமிழ் விக்கிப்பீடியா என்னும் இணையதளக் கலைக்களஞ்சிய கூட்டாக்கத் திட்டத்தை தொடங்கி வெற்றிகரமாக இயக்கிவரும் திரு இ.மயூரநாதன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 17வது இயல் விருது ஆகும்.
இலங்கையில் வண்ணார்பண்ணை என்னுமிடத்தில் பிறந்த திரு மயூரநாதன் . கட்டடக்கலையில் முதுநிலை பட்டம் பெற்றபின்னர் கொழும்பில் 17 ஆண்டுகள் பணியாற்றினார். 1993-ல் துபாய்க்குப் புலம்பெயர்ந்தவர் தமிழ் அறிவியல் துறையில் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார். 2001ம் ஆண்டு ஆங்கிலத்தில் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டபோது, அதன் பின்னணியில் உள்ள தொழில்நுட்பம் கொடுக்கும் ஆற்றலையும், அறிவு உருவாக்கத்தில் அதன் மகத்தான பங்களிப்பையும் உணர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவை 2003ம் ஆண்டிலேயே தொடங்கினார்.. முதல் 12 மாதங்கள் தனியாளாக அதன் அடிப்படை வசதிகளைச் செய்து வலுவான தளமாக அமைப்பதற்கு உழைத்தார். பின்னர் சிறிது சிறிதாக இணையத்தளத்தை விரிவாக்கி திறமையான பங்களிப்பாளர்களை இணைத்து மிகச் சிறப்பாக இயங்கும் ஒரு கூட்டுக்குழுமமாக அதை நிறுவினார்.
தமிழ் விக்கிப்பீடியாவே முதன்முதலாக அனைத்துலக பங்களிப்பாளர்கள் கூட்டாக இயங்கி ‘’Web 2.0’’ என்னும் முறையில் உருவாக்கப்பட்ட மாபெரும் படைப்பு. இதில் ஓரளவிற்குக் கணிசமாகப் பங்களித்திருப்பவர்கள் ஏறத்தாழ 100 பேர்தான் எனினும், இன்று 88,000 பேருக்கும் அதிகமானவர்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளனர். கலைக்களஞ்சியத்தில் ஏற்றப்பட்ட கட்டுரைகளின் எண்ணிக்கை 83,000. இதில் 80 வீதம் கட்டுரைகளை ஒதுக்கிவிட்டாலும்கூட 16,600 தரமான கட்டுரைகள் என்பது 24 தொகுதிகள் அடங்கிய அச்சுக் கலைக்களஞ்சியத்திற்கு சமமானது. இம்மாபெரும் படைப்பில் மயூரநாதன் மட்டுமே முதல் கட்டுரையிலிருந்து இன்றுவரை 4200-க்கும் மேற்பட்ட தரமான கட்டுரைகளைத் தொடங்கி உருவாக்கியுள்ளார். இவற்றை அச்சிட்டால், குறைந்தது 500 பக்கங்கள் கொண்ட எட்டு நூல்களாக அமையும்.
இந்தத் திட்டத்தை இவ்வளவு நேர்த்தியாக முன்னெடுத்துச் சென்றதிலும், கூட்டுழைப்பையும் நல்லுறவையும் மேம்படுத்துவதிலும் இவருடைய இடையறாத உழைப்பும் நல்லறிவும் உதவியிருக்கிறது என்பது உண்மை. இன்று தமிழ் விக்கிப்பீடியா மாதந்தோறும் 3.5 மில்லியன் பார்வையாளர்களை எட்டும் பிரபல தளமாகவுள்ளது. உலகப் பன்மொழி திட்டத்தில் இன்று 291 மொழிகளில் விக்கிப்பீடியாக்கள் இயங்குகின்றன. இதில் தமிழ் மொழியின் இடம் 61. இந்திய மொழிகளில் உள்ள விக்கிப்பீடியாவை அலசியதில், எண்ணிக்கை அடிப்படையில் தமிழ் இரண்டாவதாக வந்தாலும், தரத்தின் அடிப்படையில் பல வகைளில் தமிழ் விக்கிப்பீடியா முதலாவதாக நிற்கின்றது ( சிச்சு ஆலெக்சு Shiju Alex 2010 இல் செய்த தர ஒப்பீடு ). இப்படிப்பட்ட தமிழ் விக்கிப்பீடியாவை தனியொருவராகத் தொடங்கி வளர்த்தெடுத்த மயூரநாதன் அவர்களின் பங்களிப்பு பெரும் பாராட்டுதலுக்குரியது.
மனித குலத்தின் அறிவு உருவாக்கத்தில் விக்கிப்பீடியாவின் தோற்றம் ஒரு பாய்ச்சல் எனலாம். தமிழ் மொழியை நவீன அறிவுத் தேவைகளுக்கு ஈடுகொடுக்கக்கூடிய ஒரு மொழியாக வளர்த்தெடுப்பதிலும், தமிழ் மூலமான அறிவு உருவாக்கம் பரவல் தொடர்பிலும் தமிழ் விக்கிப்பீடியாவின் முக்கியத்துவம் பல மட்டங்களிலும் உணரப்பட்டு வருகிறது. அண்மைக் காலங்களில், தமிழ்மொழி வளர்ச்சி தொடர்பான மாநாடுகளிலும், தமிழ் இணையத் தொழில்நுட்ப கருத்தரங்குகளிலும், அரசு சார்ந்த சில நிறுவனங்களின் தமிழ் வளர்ச்சிக்கான முன்னெடுப்புக்களிலும் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
இன்று, தமிழ் விக்கிப்பீடியா மூலமான பங்களிப்புகள் மரபுவழியான பிற இலக்கிய முயற்சிகளுக்கு ஈடான முக்கியத்துவம் கொண்டவையாக வளர்ந்துள்ளன. அத்துடன் இது எதிர்காலத் தமிழ் வளர்ச்சிக்கான நம்பிக்கையாகவும் விளங்குகிறது. அதன் வளர்ச்சியில் முனைப்புடன் ஈடுபட்ட குழுமத்தை பாராட்டுவதுடன் விக்கிப்பீடியா நிறுவுநரான திரு இ.மயூரநாதனுக்கு வாழ்நாள் சாதனயாளர் விருதை வழங்கி கௌரவிப்பதில் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் பெருமையடைகிறது. விருது வழங்கும் விழா ரொறொன்ரோவில் 2016 ஜூன் மாதம் நடைபெறவிருக்கிறது. அப்போது இயல் விருது கேடயமும் பரிசுத்தொகைப் பணம் 2500 டொலர்களும் வழங்கப்படும்.