பகுதி மூன்று : சிறைபெருந்தாழ் – 5

பரிசுகள் பெற்று சூதனும் கூட்டரும் அவை விட்டு வெளியேறும் வரை பானுமதி அப்பாடலில் இருந்து வெளிவரவில்லை என்று தோன்றியது. அணுக்கன் வந்து துரியோதனன் அருகே தலைவணங்கி மெல்லிய குரலில் “மாலை அவை கூட இன்னும் இரண்டு நாழிகையே பொழுதுள்ளது. தாங்கள் ஓய்வெடுக்கலாம்” என்றான். “ஆம். அதைத்தான் நானும் எண்ணினேன்” என்றபடி திரும்பி நோக்க அணுக்கன் சால்வையை எடுத்து அவன் தோளில் அணிவித்தான். கர்ணனை நோக்கி திரும்பிய துரியோதனன் “இக்குல வரலாறுகள் மீள மீள ஒன்றே போல் ஒன்று அமைவதென தோன்றுகிறது” என்றான்.

அவன் உள்ளம் எங்கு செல்கிறது என்று உணர்ந்து கொண்ட கர்ணன் “ஆம்” என்றான். துரியோதனன் மீசையை நீவியபடி திரும்பி சுபாகுவை நோக்க அவன் “நான் நமது தந்தையைத்தான் எண்ணிக் கொண்டிருந்தேன் மூத்தவரே” என்றான். அந்த நேரடியான குறிப்பு துரியோதனனை ஒரு கணம் அயரவைத்தது. உடனே முகம் மலர்ந்து உரக்க நகைத்தபடி கர்ணனிடம் “எவ்வளவு அறிவாளிகள் எனது தம்பியர் பார்த்தாயா? நுணுக்கமாக இங்கிதமாக சொல்லெடுக்கிறார்கள்” என்றான்.

சுபாகுவின் அருகிலிருந்த துச்சலன் “ஆம் மூத்தவரே, அவன் சொன்னது உண்மை. நானும் நமது தந்தையைத்தான் எண்ணிக் கொண்டிருந்தேன். விழியிழந்தவர் என்பதற்காக அல்ல” என்றான். கர்ணன் சற்றே பொறுமை இழந்து போதும் என்று கையசைக்க துரியோதனன் கர்ணனை நோக்கி திரும்பி “இரு கேட்போம்” என்றபின் “சொல்லு தம்பி, எதற்காக? விழியிழந்தவரே இருவரும் என்பதை கண்டுபிடித்துவிட்டாயா?” என்றான்.

சுபாகு மகிழ்ந்து “அது மட்டுமல்ல, இருவருமே கரிய உடல் உள்ளவர்கள்” என்றான். துச்சலன் அவனை இடைமறித்து “நான் அதற்கு மேலும் எண்ணினேன். இருவருமே மைந்தரால் பொலிந்தவர்கள்” என்றான். “பிறகு?” என்றான் துரியோதனன். கர்ணன் “போதும். இதற்கு மேல் பேசுவது அரசர்பழிப்பாகும்” என்றான். “இங்கு நாம் அறைக்குள் அல்லவா பேசிக் கொள்கிறோம்?” என்றபின் துரியோதனன் திரும்பி “சொல் தம்பி, என்ன?” என்றான். துச்சலன் “அவரைப்போலவே நமது தந்தையும் காமம் மிகுந்தவர் என்று எனக்குத்தோன்றியது” என்றான். பின்பு சுபாகுவை நோக்கி “தெரியவில்லை. நான் மிகையாகக் கூட எண்ணியிருக்கலாம்” என்றான்.

துரியோதனன் தொடையில் அறைந்து உரக்க நகைத்து திரும்பி “என் தம்பியர் சிந்திக்கும் வழக்கமில்லாதவர்கள் என்று ஓர் அவதூறு அஸ்தினபுரியில் சூதர்களால் கிளப்பப்படுகிறது. இப்படி அனேகமாக நாளொன்றுக்கு இரு முறையாவது தங்களை இவர்கள் நிறுவிக் கொண்டே இருக்கிறார்கள் என்பதை இச்சூதர்கள் அறிவதில்லை. நாமே இத்தருணங்களை கவிதையாக ஆக்கினால்தான் உண்டு” என்றான். பானுமதி சிரிப்பை அடக்கியபடி விழிகளை திருப்பி அறைக்கூரையை பார்த்தாள். “செல்வோம்” என்றபடி துரியோதனன் முன்னால் நடக்க பானுமதி சிரிப்பு ஒளிவிட்ட கண்களால் கர்ணனை நோக்கி மெல்லிய குரலில் “எப்படி இருக்கிறாள் விருஷாலி? இங்கு அழைத்து வருவதே இல்லையே?” என்றாள்.

கர்ணன் “அவள் உள்ளம் திரௌபதியிடம் இருக்கிறது” என்றான். “ஆம், எண்ணினேன்” என்றாள் அவள். “அவள் தந்தை முன்னரே பாண்டவருக்கு தேர் ஓட்டியவர். குந்தி அளித்த பொற்கங்கணம் ஒன்று அவர் இல்லத்தில் உள்ளது. எனவே தானும் தன் குடும்பமும் பாண்டவர்களுக்கு அணுக்கமானவர்கள் என்று எண்ணிக் கொள்கிறார்கள்” என்றான் கர்ணன். “அது நன்று. ஏதேனும் ஒரு பிடிப்புள்ளது அரசியலில் ஒரு ஆர்வத்தை உருவாக்கும்” என்றாள் பானுமதி. முன்னால் சென்ற துரியோதனன் திரும்பி “இங்கு அவைக்கு வருவதில் அவளுக்கென்ன தயக்கம்?” என்றான். கர்ணன் ஒன்றும் சொல்லவில்லை.

பானுமதி சினந்து “தாங்கள் அறிந்ததே. அங்க நாட்டு அரசனுக்கு முதல் துணைவியானவள் முடிசூடி அரியணை அமர முடியாதென்று வகுத்தது வேறெவருமல்ல, நமது அவை. இங்கு வந்து எப்படி அவள் அமர்வாள்?” என்றாள். கர்ணன் இடைமறித்து “அதுவல்ல” என்றான். “பின்பு…?” என்றாள் பானுமதி. கர்ணன் “இங்கு அவள் தன்மேல் மிகையாக பார்வைகள் விழுவதாக உணர்கிறாள்” என்றான். “அதைத்தான் நானும் சொன்னேன். இங்கு அவள் இருந்தால் அவளை சூதப்பெண்ணாக நடத்துவதா அரசியாக நடத்துவதா என்று நமது அவை குழம்புகிறது.”

“இது என்ன வினா? அங்க நாட்டு மன்னன் என் தோழன். அவனது துணைவி அவள். அவள் அரசவைக்கு வரட்டும். உனக்கு நிகரான அரியணை அமைத்து நான் இங்கு அமரவைக்கிறேன். எழுந்து ஒரு சொல் சொல்பவன் மறுசொல் எடுக்காது தலை கொய்ய ஆணையிடுகிறேன். பிறகென்ன?” என்றான் துரியோதனன் உரத்த குரலில்.

பானுமதி “நாம் எப்போதும் நமது பிதாமகர்களுடனும் ஆசிரியர்களுடனும் பொருதிக் கொண்டிருக்கிறோம் என்பதை மறக்கவேண்டாம்” என்றாள். “நான் பொருதிக் கொண்டிருப்பது என்னைச் சூழ்ந்துள்ள சிறுமையுடன்” என்றான் துரியோதனன். “மண்ணாள்பவன் வென்று செல்ல வேண்டிய தடை என்ன அறிவாயா? அவனுள் வாழும் மண்ணுக்கு உரியவனென தன்னை உணரும் ஓர் எளியவன்.” சிறிய தத்தளிப்புடன் கர்ணன் “இதைப்பற்றி நாம் பிறகு பேசுவோமே” என்றான்.

“விருஷாலி இங்கு வரலாம்” என்றாள் பானுமதி. “அவள் இளமையில் எவ்வண்ணம் உணர்ந்தாலும் சரி, இங்கு இப்போது அவள் மன்னர் திருதராஷ்டிரரின் குடியாகவே இருக்கிறாள். தங்கள் துணைவியாக இருக்கையில் ஒரு போதும் அவள் இந்திரப்பிரஸ்தத்துக்கு செல்லப்போவதில்லை. ஆகவே இந்த அவை அவளுக்குரியது. அதை அவளுக்கு உணர்த்துங்கள்.”

துரியோதனன் “ஆம் அதை அவளிடம் சொல்! இந்த அவை அவளுக்குரியது” என்றான். கர்ணன் “நான் அதை அவளிடம் சொல்லியிருக்க மாட்டேன் என்று நினைக்கிறீர்களா?” என்றான். பானுமதி அவன் விழிகளை நோக்கி “ஆம், சொல்லியிருக்கலாம். ஆனால் மீள மீளச் சொல்பவையே நிலை பெறுகின்றன” என்றாள்.

கர்ணன் சில கணங்கள் தலைகுனிந்து கைகளை பின்னுக்குக் கட்டி சீரான நீள் காலடிகளுடன் நடந்தபின் தனக்குத்தானே என “எல்லாவற்றையும் சொல்லிவிடலாம் என்பதுதான் எவ்வளவு பெரிய மாயை” என்றான். பானுமதி அவன் அருகே வர திரும்பி “சொல்லிவிட்டால் அனைத்தும் சீராகிவிடும் என்பதற்கு நிகரான மாயை அது” என்றான். அவள் துயர் கடந்து சென்ற விழிகளுடன் ஒளியின்றி புன்னகைத்தாள்.

“உனக்கு சொல்லமைக்கத் தெரியாது என்பதை என்னளவுக்குத் தெரிந்த பிறரில்லை” என்று சற்று முன்னால் சென்ற துரியோதனன் திரும்பி கைநீட்டி சொன்னான். “நீ அவளிடம் என்ன சொன்னாய்? அஸ்தினபுரியின் அரசன் அவள் தமையனுக்கு நிகரென சொன்னாயா? அவளுடைய தன்மதிப்புக்கும் உவகைக்கும் என எனது வாள் என்றுமிருக்கும் என்று சொன்னாயா? இதோ இப்பேரரசின் ஒவ்வொரு படையும் அவளுக்குரியது. அதை அவளிடம் சொல்” என்றான்.

கர்ணன் “சொற்கள் மகத்தானவை. அவற்றை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு அகம் விரியவேண்டுமல்லவா?” என்றான். “என்ன சொல்கிறாய்?” என்றான் துரியோதனன். “தாங்கள் சொல்பவற்றை புரிந்து கொள்ளும் அளவுக்கு அவள் உள்ளம் விரியவில்லை. அவள் வாழ்ந்த உலகு மிகச்சிறியது. ஒருபோதும் இன்றிருக்கும் இடத்தை விரும்பியவள் அல்ல. பிறிதொரு தேரோட்டிக்கு மணமகளாக சென்றிருந்தால் நெஞ்சு நிறைந்த உவகையுடன் கழுத்து நிறைக்கும் தாலியுடன் இப்போது வாழ்ந்திருப்பாள். இன்று ஒவ்வாத எங்கோ வந்து உகக்காத எதையோ செய்யும் துன்பத்தில் ஒவ்வொரு நாளையும் கழிக்கிறாள்” என்றான்.

துரியோதனன் முன்னால் செல்ல பானுமதி கர்ணன் அருகே நடந்தாள். மெல்லிய குரலில் “அதற்குதான் இங்கு வரச்சொன்னேன். அல்லது நான் அங்கு வருகிறேன். அவளிடம் பேசுகிறேன். ஒருநாளில் இருநாளில் சொல்லி முடிக்கக் கூடியதல்ல இது. மெல்ல மெல்ல அவள் உள்ளத்தை மாற்ற முடியும்” என்றாள். அவன் பெருமூச்சுவிட்டுக்கொண்டு மெல்ல காலடி எடுத்துவைத்தான். திருதராஷ்டிரரின் காலடிகள் பெருமுழக்கமிடுபவை என்பது அரண்மனை அறிந்தது. அக்காலடியோசைக்கு அடுத்து ஒலிப்பவை கர்ணனின் காலடிகள்.

உள்ளறைக்குச் சென்றதும் துரியோதனன் “நான் ஆடைமாற்றி வருகிறேன்” என்றபடி அணியறைக்குள் சென்றான். தம்பியர் அவனை தொடர்ந்தனர். துரியோதனனின் மஞ்சத்தில் பானுமதி அமர கர்ணன் வழக்கம் போல சாளரத்தருகே கிடந்த பீடத்தில் கைகளை கட்டிக்கொண்டு அமர்ந்தான். “அவளை அழைத்துவந்தால் என்ன மூத்தவரே?” என்றாள் பானுமதி.

“நான் முயலாமலில்லை” என்றான் கர்ணன். “ஆனால் பெண்கள் ஏதோ சிலவற்றில் முழுமையான உறுதியுடன் இருக்கிறார்கள். அதை மாற்ற தெய்வங்களாலும் இயலாது.” அவள் அவனை நோக்கிக்கொண்டிருந்தாள். “மேலும் விருஷாலியிடம் எதையுமே உரையாட இயலாது. நான் சொல்லும் சொற்களைவிட விரைவில் அவள் உள்ளம் மாறிக்கொண்டிருக்கிறது.”

“மணநிகழ்வு நாளில் அவள் முகத்தை பார்த்தேன். அது உவகையிலும் பெருமிதத்திலும் மலர்ந்திருக்கும் என்று எண்ணினேன். கூம்பிச் சிறுத்து விழிநீர் துளிர்த்து இருந்த அவள் முகத்தைக் கண்டு என்ன நிகழ்ந்ததென்றறியாமல் அதிர்ந்தேன். அவள் நோயுற்றிருக்கலாம் என்றோ அவளை எவரோ கண்டித்திருக்கலாம் என்றோதான் அப்போது எண்ணினேன். ஆனால் என் உள்ளத்தின் ஆழத்தில் அதுவன்று என்று அறிந்திருந்தேன். ஆகவேதான் என் உள்ளம் அதிலேயே படிந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு சடங்கிலும் அவள் உயிர்ப்பாவை போலிருந்தாள்.”

“முழுதணிக் கோலத்தில் என் மஞ்சத்தறைக்கு சேடியரால் அழைத்து வரப்படும்போது நோயுற்ற குதிரை போல் உடல் நடுங்கிக் கொண்டிருந்தாள். அது அவள் அறியாப்பெண் என்பதால் என்று எண்ணினேன்” என்றான் கர்ணன். “எழுந்து சென்று அவள் கைகளைப்பற்றி ’இன்று முதல் நீ விருஷாலி அல்லவா? அப்பெயர் உனக்கு பிடித்திருக்கிறதா?’ என்று கேட்டபோது கேவல் ஒலி ஒன்று எழுவதைக் கேட்டு அது எங்கிருந்து வருகிறது என்று அறியாமல் திரும்பிப் பார்த்தேன். சுவர் நோக்கித் திரும்பி முகத்தை புதைத்து அவள் குலுங்கி அழுவதைக் கண்டேன்.”

“என்ன ஆயிற்றென்று எனக்குப் புரியவில்லை. அவள் தோளை தொடப்போனேன். அவள் சீறித் திரும்பி தொடாதீர்கள் என்றபோது கையை எடுத்துக் கொண்டேன். இப்போதுதான் இதை சொல்கிறேன். அன்றிரவு முழுக்க அவ்வறையின் ஒரு மூலையில் உடல் குறுக்கி தலை சுருட்டி உடலிலிருந்து கழற்றி எறியப்பட்ட ஒரு ஆடை போல அவள் கிடந்தாள். அவளை நோக்கியபடி கைகளில் தலை தாங்கி நான் மஞ்சத்தில் அமர்ந்திருந்தேன். அன்றிரவில் நான் அறிந்த தனிமையை ஒருபோதும் உணர்ந்ததில்லை.”

“ஒவ்வொரு நாளும் அவ்வறையின் அந்த மூலையிலேயே உடல் சுருட்டி அவள் அமர்ந்திருந்தாள். ஒரு முறையேனும் விழிதூக்கி என்னை பார்த்ததில்லை. நான் எழுந்தால் என் காலடிகள் தரையில் பட்டு ஒலித்தால் அவள் பேர் சொல்லி நான் அழைத்தால் விரல் தொட்டு அதிரும் அட்டை போல் ஒரு அதிர்வும் சுருளிறுக்கமும் அவள் உடலில் எழுந்தன. உளநோய் கொண்டவள் என்று எண்ணினேன். அல்லது தீரா வலிப்பு நோய் கொண்டிருக்கலாமென்று எண்ணினேன். மருத்துவரை அழைத்து காட்டலாம் என்று தோன்றியது ஆனால் அதை பிறிதெவரும் அறியாமல் வைத்துக் கொள்ளவேண்டுமென்றே விடிந்தபின் முடிவெடுத்தேன்” என்றான்.

“ஏன்?” என்று பானுமதி அவன் முழங்கையை பற்றினாள். அவன் தாழ்ந்து சென்ற குரலில் “நான் அடையாத இழிவுகளில்லை. இவ்விரு இழிவையும் மேலும் சேர்த்துக் கொள்ளவேண்டுமா?” என்றான். “ஆனால் எங்களிடம் சொல்லியிருக்கலாமே?” என்றாள். “தாழ்வில்லை” என்று கர்ணன் தன் கையை அசைத்தான். “அவள் என்னிடம் சொல்லெடுத்துப் பேச ஒரு மாதம் ஆயிற்று. அவள் உள்ளத்தை சற்றேனும் நெருங்க என்னால் முடிந்தது.”

கருணை நிறைந்த கண்களால் அவள் அவன் கண்களை நோக்கிக்கொண்டிருந்தாள். “அடுத்த இருள்நிலவு நாளில் அவளுக்கு காய்ச்சல்நோய் கண்டது. அரண்மனை மருத்துவர் அவள் நோயுற்றிருப்பதாக சொன்னபோது அது அவள் சொல்லும் பொய் என்றே நான் எண்ணினேன். மறுநாளும் அதையே சொல்லவே உண்மையிலேயே காய்ச்சல் இருக்கிறதா என்று ஆதுரச்செவிலியிடம் கேட்டேன். உடல் எரிய ஆதுரசாலைக் கட்டிலில் மயங்கிக் கிடக்கிறாள் என்று கேட்டபோது அதுவரை துளித்துளியாக அவள் மேல் சேர்ந்திருந்த கசப்பு முழுக்க வழிந்தோடுவதை அறிந்தேன்” என்று கர்ணன் விழிகளை சாளரத்தை நோக்கித்திருப்பி தனக்கே என சொன்னான்.

ஆதுரசாலைக்குச் சென்று கைக்குழந்தையை எடுப்பது போல் உளங்கனிந்து அவளை அள்ளி நெஞ்சோடணைத்துக் கொள்ளவேண்டுமென்று தோன்றியது. எளிய பெண். என் அன்னை ராதை இளமையில் அவளைப்போல் இருந்திருப்பாள். இப்பிறவியில் எனக்கென அவளை அனுப்பிய தெய்வங்கள் தங்களுக்கென்று இலக்குகள் கொண்டிருக்குமல்லவா? என்னை அவளுடன் பிணைத்த ஊழை நான் அறியவே முடியாது. நான் அதன் சரடுப்பாவை என்பதுபோலத்தான் அவளும்.

அவளைப் பார்க்கச் சென்றேன். நெற்றியில் இட்ட வெண்பஞ்சில் தைலத்தை விட்டபடி அருகே அமர்ந்திருந்த மருத்துவச் சேடி என்னைக் கண்டதும் எழுந்தாள். அனலில் காட்டிய தளிர் போல அவள் முகம் இருந்தது. உலர்ந்த உதடுகள் மெல்ல அசைந்து எதையோ சொல்லிக் கொண்டிருந்தன. நான் அவளருகே நின்றேன். என் வரவை அவள் அறியவில்லை. சேடி ‘அரசி தன்னினைவழிந்துள்ளார்கள்’ என்றாள். அவள் உதடுகளைப் பார்த்தபின் ‘என்ன சொல்கிறாள்?’ என்றேன். ’தங்கள் பெயரைத்தான் அரசே’ என்றாள். சினம் கலந்த ஏளனத்துடன் ‘வெற்று முறைமைச் சொல்லெடுக்க வேண்டியதில்லை’ என்றேன். ‘இல்லை அரசே, தாங்களே குனிந்து அவர்களின் இதழ்களில் செவியூன்றினால் அதை கேட்கலாம்’ என்றாள்.

அதற்குள் நானே பார்த்துவிட்டேன் அவளது உதடுகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டி இழுபட்டு பிரிந்து மீண்டும் ஒட்டி ‘சூரிய!’ என்று சொல்லிக் கொண்டிருந்தன. செந்நிற உலர்சேற்றில் குமிழிகள் வெடிப்பது போல் என் பெயர் அவள் வாயிலிருந்து வந்து கொண்டிருப்பதை கண்டேன். தங்கையே, என் வாழ்நாளில் ஆண்மகன் என்று நான் வென்று நின்ற தருணங்களில் ஒன்று அது. இதோ ஒரு நெஞ்சில் முழுதமைந்துள்ளேன்! இதோ என் பெயர் சொல்லி ஓர் உயிர் தவம் கொள்வதை இறைவன் என அவள் மேல் எழுந்து நோக்கிக் கொண்டிருக்கிறேன்! அன்று நான் உணர்ந்த அக்கணத்தினாலேயே நான் என்றும் அவளுக்குரியவன் ஆகிவிட்டேன்.

அருகமர்ந்து அவள் கைகளைப்பற்றி முகத்தில் அமைத்துக் கொண்டேன் அதிலிருந்த வெம்மை என்னை வெம்மை கொள்ள வைத்தது. காய்ச்சலால் உலர்ந்து மலர்ச்சருகு போல் இருந்த அவள் உள்ளங்கையில் என் உதடுகளை பதித்தேன். அப்போது எழுந்த ஒர் உள்ளுணர்வில் விழிதூக்கியபோது அனல்படிந்த செவ்விழிகளால் அவள் என்னை நோக்கிக் கொண்டிருப்பதை கண்டேன். என் விழிகளை சந்தித்தபோது அவள் இரு விழிகளும் நிறைந்து பட்டுத் தலையணையில் வழிந்தன.

நான் அவள் கைகளை என் கைகளுக்குள் வைத்தபடி ‘இப்பிறவியில் உனக்கு துயர் வரும் எதையும் நான் இயற்றுவதில்லை. இது என் ஆணை’ என்றேன். இமைகள் மூட மயிர்நிரைகளை மீறி வழிந்த கண்ணீர் சொட்டுவதை நோக்கியபடி அமர்ந்திருந்தேன். காலம் முன்செல்வதை நாம் பதைபதைப்புடன் இழுத்திழுத்து நிறுத்த முயல்வோமல்லவா, அத்தகைய தருணங்களில் ஒன்று அது. அக்காய்ச்சலிலிருந்து அவள் எழ நான்கு நாட்கள் ஆயிற்று. ஒவ்வொரு நாளும் பெரும்பாலும் அவளுடன் இருந்தேன்.

பேசத்தொடங்கியபோது அவள் என் கைகளை பற்றிக் கொண்டிருக்க விரும்பினாள். ‘என்ன செய்கிறது உனக்கு?’ என்று கேட்டேன். ‘ஏன் என்னை அஞ்சுகிறாய்?’ என்றேன். ‘அஞ்சலாகாது என்று ஒவ்வொரு முறையும் எண்ணிக் கொள்கிறேன். ஆயினும் அஞ்சுகிறேன்’ என்று அவள் சொன்னாள். ‘ஏன்?’ என்றேன். ‘நீங்கள் சூரியன் மைந்தர். நான் எளிய சூதப்பெண். உங்கள் அரண்மனையில் சேடியாக இருக்கும் அளவுக்குக் கூட கல்வியும் அழகும் அற்றவள். தந்தை சொல்லுக்காக என்னை மணந்தீர்கள் என்று சேடியர் சொன்னார்கள். உங்கள் அன்பிற்கல்ல வெறுப்பிற்கும் தகுதியற்றவள் என்று என்னை எண்ணிக் கொண்டேன்’ என்றாள்.

‘இங்கு என் அருகே என் கைபற்றி நீங்கள் அமர்ந்திருக்கையில் இது என் கனவுதான் என்று உள்ளம் மயங்குகிறது’ என்று சொன்னபோது உடைந்து விசும்பியழத் தொடங்கினாள். ‘நான் ஆணவம் கொண்டவன் என்கிறார்கள். அகத்தனிமை நிறைந்தவன் என்கிறார்கள். ஆனால் அன்பைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் கொண்டவன் என்பதை நானறிவேன். ஐயமின்றி அதை எங்கும் சொல்வேன்’ என்றேன். ‘நான் உன் அன்புக்கு முற்றாக கடமைப்பட்டவன். நீ என் நெஞ்சிலுறையும் தெய்வமென என்றுமிருப்பாய்.’

என் கைகளை தன் நெற்றியில் சேர்த்து குமுறி அழுதாள். ‘சொல், உனக்கு என்ன வேண்டும்?’ என்றேன். ‘உன்னை என் நெஞ்சில் அரசியென அமரச்செய்துள்ளேன். அங்கத்துக்கு உன்னை அரசியாக்க இங்குள்ள குலமுறைகள் ஒப்பவில்லை. அதன்பொருட்டு என்னை நீ பொறுத்தருளவேண்டும்’ என்றேன். அவள் என் வாயைப்பொத்தி ‘எனக்கென நீங்கள் எத்துயரையும் அடையலாகாது’ என்றாள். ‘இல்லை, உன் பொருட்டு உவகையே அடைகிறேன்’ என்றேன்.

‘நீங்கள் ஷத்ரிய குலத்தைச் சேர்ந்த பெண்ணை மணந்து கொள்ளுங்கள். அவளே உங்கள் பட்டத்தரசியாக இடபாகத்தில் அமரட்டும். உங்கள் நெஞ்சில் ஓர் இடம் மட்டும் எனக்குப்போதும்’ என்றாள். ‘வா, அஸ்தினபுரியின் அவையில் அரசியின் அருகே உன்னை அமர்த்துவேன்’ என்றேன். ‘அங்கு வந்து அமர்ந்திருக்க என்னால் இயலாது. என் பிறப்பும் தோற்றமும் எனக்களிக்கும் எல்லைகளை என்னால் ஒருபோதும் மீற முடியாது. அவ்வண்ணம் மீறவேண்டுமென்றால் நான் பல்லாயிரம் முறை என் ஆணவத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும். மேலும் பல்லாயிரம் மூறை என் விழைவை பெருக்கிக் கொள்ளவேண்டும். அதன் பிறகு நான் விருஷாலியாக இருக்க மாட்டேன். ஒருவேளை உங்கள் அன்புக்குரியவளாகவும் இருக்க மாட்டேன்’ என்றாள்.

நான் சினத்துடன் ‘எந்நிலையிலும் நீ என் துணைவி’ என்றேன். ‘நீ அரசிக்கு நிகராக அவையில் வந்து இரு. இங்கு எவர் சொல்கிறார் பார்க்கிறேன்’  என்றேன். அவள் கண்ணீருடன் ‘அது போதும். எனது சிறிய அறையில் எளிய வாழ்க்கையில் என்னை இருக்க விடுங்கள்’ என்றாள். உண்மையில் அதன் பின்னரே நான் அவை எழுந்து விருஷாலியை அரசியாக்குவதில்லை என்ற முடிவை முற்றுறுதியாக சொன்னேன். அவையமர்வதிலிருந்தும் அவளை தவிர்த்தேன்.

பானுமதி “அரசியாக்க வேண்டியதில்லை. ஆனால் அவை அமர்வதற்கென்ன?” என்றாள். கர்ணன் “அத்தனைக்கும் அப்பால் ஒன்றுண்டு பானு. அரசகுலத்தில் பிறக்காதவர்களுக்கு அவையமர்வது போல துன்பமிழைப்பது எதுவுமில்லை. நீ கோரியதற்கேற்ப ஒரே ஒரு முறை அவளை அவைக்கு கொண்டு வந்தேன். அன்று பகல் முழுக்க அங்கு அவள் கழுவிலேற்றப்பட்டது போல் அமர்ந்திருந்ததாக சொன்னாள். அங்குள்ள ஒரு சொல்லும் அவளுக்கு புரியவில்லை. அங்குள்ள அத்தனை விழிகளும் அவளை வதைத்தன” என்றான்.

கசப்புடன் புன்னகைத்து “ஒரே ஒரு முறை கொற்றவை பூசனைக்கு அவளை கொண்டு வந்தேன். இனி அரச குடியினர் நடுவே என்னை நிற்கச்செய்யாதீர்கள் என்றாள். ஏன் என்ன அவமதிப்பு உனக்கு என்றேன். ஒரு விழியில் ஒரு சொல்லில் ஏதேனும் இருந்தால் சொல் என்று கேட்டேன். சொல்லிலும் நோக்கிலும் எதுவுமில்லை. ஆனால் உள்ளத்தில் உள்ளது. அதை நான் அறிவேன். சிறுமை கொண்டு அரச குழாமில் நின்றிருப்பதை விட உவகை கொண்டு என் குலத்தார் நடுவே நிற்பதே எனக்கு உவப்பானது என்றாள். அதன் பின்னர் அவளை அரச விழாக்களுக்கும் கொண்டுவருவதை தவிர்த்தேன்” என்றான் கர்ணன். “ஏனென்றால், அவள் சொல்லும் ஒவ்வொரு சொல்லையும் என் அகம் முன்னரே உணர்ந்திருந்தது.”

பானுமதி பெருமூச்சுடன் தன் கைநகங்களையே நோக்கிக்கொண்டிருந்தாள். அவன் சொல்லோட்டம் முடிந்து சாளரம் வழியாக நோக்கிக்கொண்டு தன்னில் ஆழ்ந்து அமர்ந்திருந்தான். அப்பால் குறுங்காட்டின் மரக்கிளைகள் காற்றில் உலையும் ஒலி மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. காலடிகள் கேட்டன. துரியோதனன் தம்பியரிடம் ஏதோ பேசிக்கொண்டு வந்தான். பானுமதி மெல்ல “மூத்தவரே, அரசர் விருஷாலி மேல் கொண்டிருக்கும் பேரன்பை அவள் சற்றேனும் அறிவாளா?” என்றாள்.

கர்ணன் சற்று தயங்கியபின் “இல்லை” என்றான். பானுமதி துயர்நிறைந்த புன்னகையுடன் “நினைத்தேன்” என்றாள். “அவள் இந்நாட்டின் பொதுமக்கள் அனைவரும் நம்பும் புராணங்களுக்கு அப்பால் உளம் வளராதவள். அரசரை அவள் கலியின் பிறப்பென்றே நம்புகிறாள். வெறுக்கிறாள்.” பானுமதி “இத்தனைக்கும் அப்பால் இதுதான் உண்மை மூத்தவரே. அவள் அரசரை வெறுக்கிறாள். ஆகவே அவையை தவிர்க்கிறாள்” என்றாள்.

“ஆம், உண்மை” என்றான் கர்ணன். “அந்த வெறுப்பு உங்கள்மேலும் படியும் ஒருநாள்” என்று பானுமதி சொன்னாள். கர்ணன் ஒன்றும் சொல்லவில்லை. பானுமதி துயரத்துடன் சிரித்து “ஆனால் தன் தங்கை அவையமரமுடியவில்லை என்னும் துயரத்தை எத்தனையோ இரவுகளில் அரசர் என்னிடம் சொல்லியிருக்கிறார். தானே நேரில் வந்து விருஷாலியை நோக்கி ஓரிரு சொற்கள் அழைத்தால் வந்துவிடுவாள் என நம்புகிறார்” என்றாள்.

கர்ணன்  துரியோதனனின் குரல்கேட்டு அமைதியாக இருந்தான். “ஆகவே தீர்க்கதமஸ் இசையை அறிந்தவர் என்கிறாய். நன்று” என்று சொல்லி சிரித்தபடி துரியோதனன் உள்ளே நுழைந்தான். தொடர்ந்து தம்பியர் வந்தனர்.