ஷாஜி,சேதுபதி,ஷர்மா…

அன்புள்ள ஜெயமோகன்,

பரப்பிசையைப்பற்றிய உங்கள் கட்டுரையை வாசித்தேன். என் வாசிப்பில் இந்த விஷயத்தைப்பற்றி ஆழ்ந்து நோக்கி எழுதப்பட்டுள்ள முக்கியமான கட்டுரை அது. மரபிசை – பரப்பிசை என்ற பிரிவினையை பற்றி சிந்தனை செய்தேன். இவ்வகையிலான ஒரு பிரிவினையை நிகழ்த்தாமல் மொத்தமாக இசை விமர்சனம் செய்வதே பலவகையான சிக்கல்களை உருவாக்குகிறது. இசை என்பது ஒன்றல்ல ஆகவே ஒரேவகையான அளவுகள் இருக்க முடியாது என்று நீங்கள் சொல்வதை நான் புரிந்துகொள்கிறேன். என்னுடைய கேள்விகள் சில உள்ளன.

நீங்கள் இட்லிவடை இணைய இதழிலே சேதுபதி அருணாச்சலம் எழுதிய கட்டுரையை வாசித்திருப்பீர்கள். அதேபோல ராமச்சந்திர ஷர்மா தமிழோவியத்தில் எழுதிய கட்டுரையையும் வாசித்திருப்பீர்கள். இந்தகட்டுரைகளைப்பற்றி நீங்கள் நேரடியாக எப்படி மதிப்பிடுகிறீர்கள் என்று அறிய விரும்புகிறேன். ஏனென்றால் அந்த இரு கட்டுரைகளுமே எனக்கு முதல் வாசிப்பிலே சரியான கட்டுரைகள் என்ற எண்ணம் அளித்தன. உங்கள் கட்டுரை வேறு ஒரு கோணத்தை திறந்தது. உங்கள் கட்டுரையில் நீங்கள் கொஞ்சம் பொதுவாக கோட்பாடுசார்ந்து பேச முயல்கிறீர்கள். நேரடியாக அக்கட்டுரைகளை நீங்கள் மதிப்பிட்டிருந்தால் இன்னமும் தெளிவு உருவாகும்.

சரவணன் ,சென்னை

அன்புள்ள சரவணன்,

உங்கள் கடிதம் கொஞ்சம் தர்ம சங்கடத்தை அளித்தது. ஏனென்றால் நான் அந்த விவாதத்தில் புகுவதை கவனமாகவே தவிர்க்கிறேன். ஏனென்றால் சேதுபதி அருணாச்சலம் , ராமச்சந்திர ஷர்மா இருவருமே முக்கியமான வாசகர்கள். மரபிசையில் ஆழ்ந்த பயிற்சி கொண்டவர்கள். ராமச்சந்திர ஷர்மா முறையாக மரபிசை கற்றவர். சேதுபதி எதிர்காலத்தில் தமிழின் முக்கியமான எழுத்தாளராக ஆகும் சாத்தியம் கொண்டவர். குறிப்பாக ராமச்சந்திர ஷர்மாவின் நடையை பார்க்கையில் அவரும் சிறப்பாக எழுத முடியும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. கோட்பாடு ரீதியாகப்பேசும்போதுகூட அவரது நடையில் உள்ள துல்லியம் ஆச்சரியம் அளிக்கிறது. ஆரம்பத்திலேயே இத்தகைய தெளிவு கைகூடுவது மிக அபூர்வம்..

எனக்கு இசை தெரியாது. ஆகவே இசை பற்றி கருத்து சொல்லக்கூடாது என்பதே என் எண்ணம். நான் சென்னை கூட்டத்தில் ஆற்றிய உரையில் இசை பற்றி அல்ல, பரப்புக்கலைகளைப் பற்றி பொதுவாகத்தான் பேசியிருக்கிறேன் என்பதை காணலாம். இந்த எல்லையை நான் வகுக்காமல் பேசினால் அது அதிகப்பிரசங்கமாக ஆகும்.

சேதுபதி கட்டுரை சரியான மனநிலையில் எழுதப்படவில்லை என்றே மீள்வாசிப்பிலும் எனக்குப் படுகிறது. அது ஒவ்வாத கருத்துக்களை கருத்துப்பூசலின் நடையில் எதிர்கொள்ளும் பழகிப்போன தமிழ்மரபை தானும் கடைப்பிடிக்கிறது. இது பரபரப்பான வாசிப்பை உருவாக்கும். ஒரு சாராரின் பாராட்டையும் பெற்றுத்தரும். ஆனால் நீண்ட கால அளவில் இதன் விளைவுகள் எதிர்மறையானவையாக இருக்கும். சம்பந்தப்பட்டவர்களின் மனக்கசப்பு ஒருபக்கம். அதைகூட பொருட்படுத்தாமலிருந்துவிடலாம். ஆனால் எந்த முனையில் விவாதம் கூர் கொள்ள வேண்டுமோ அதை தவிர்த்துவிட்டு சம்பந்தமில்லாத திசைகளுக்கு விவாதத்தைகொண்டு செல்லும் என்பது பெரிய சிக்கல்.

தமிழில் எதையுமே பூசலாக ஆக்கி ரசிக்கும் ஒரு வாசகர் வட்டம் உண்டு. வசைகளை விரும்பி வாசிப்பவர்கள். ஒரு விவாதத்தில் புகுந்து இரு தரப்பினரையும் ஒருவரே வசைபாடுவதை ஐபி எண்களைக் கொண்டு எளிதில் ஊகிக்கலாம். எங்கே எந்த எழுத்தாளன் வசைபாடப்பட்டாலும் தர்ம அடி கொடுக்க இந்தக்கும்பல் வந்துவிடுகிறது. இவர்களை உள்ளே கொண்டு வந்ததுமே விவாதம் அதன் அறிவார்ந்த தன்மையை முழுமையாக இழந்துவிடுகிறது. சந்தேகமிருந்தால் சேதுபதி கட்டுரைக்கு வந்த எதிர்வினைகளைப் பாருங்கள். இதுவா நாம் இசை பற்றி பேசவேண்டிய தளம்?

சேதுபதி கட்டுரையின் சிக்கல் என்ன? முதன்மையாக, அது வெறுப்பின் மனநிலையில் பேசுவதுதான். ஷாஜி விருப்புவெறுப்புகளின் அடிப்படையில் எழுதுகிறார் என்பதே சேதுபதியின் மையக்குற்றச்சாட்டு. ஆனால் அவர் எழுதியுள்ள இக்கட்டுரை மேலும் பல மடங்கு வெறுப்பின் மொழியில் பேசுகிறது. ஷாஜி அதே மொழியில் பதில் அளிக்க ஆரம்பித்திருந்தால் ஒரு சிறந்த குழாயடிச்சண்டை நிகழ்ந்திருக்கும். அதுதான் எப்போதுமே நிகழ்கிறது.

உதாரணமாக ஷாஜியின் கட்டுரைகள் சாரு நிவேதிதாவின் தரத்தைச் சேர்ந்தவை என்கிறார் சேதுபதி. சொல்லப்போனால் அதுதான் சேதுபதியின் ஒற்றை வரி. ஒரு குறைந்தபட்ச மனசாட்சியுடன் வாசிக்கும் எவரேனும் அப்படிச் சொல்ல முடியுமா என்ன? ஷாஜியின் கட்டுரைகளின் தரத்தில் சாரு நிவேதிதா எதையாவது எழுதியிருக்கிறாரா ? அவமானப்படுத்தும் நோக்குடன் மட்டுமே எழுதப்பட்ட வரி அது. சாருவின் எழுத்தின் மைய ஓட்டமான சுயதம்பட்டமோ ,ஆழமற்ற வரட்டுத்தனமோ, முதிர்ச்சியற்ற களியாட்டநிலையோ எந்த ஒரு ஷாஜி கட்டுரையிலேனும் உள்ளதா?

ஷாஜியின் கட்டுரைகளில் சமநிலையின்மை உள்ளது என்று குற்றம் சாட்டுபவர்கள்கூட, அவர் மிகையுணர்ச்சிகளை உருவாக்குகிறார் என்று நிராகரிப்பவர்கள்கூட அவரது எழுத்தின் அப்பட்டமான நேர்மையை ஐயப்படமுடியுமா? சாரு எழுத்தில் எப்போதுமே இருப்பது போலித்தனம், ஒரு கணம்கூட ஷாஜியிடம் அது வந்ததில்லை. அவரது தனியாளுமையிலும் அது இல்லை. அது சாதாரண வேறுபாடு இல்லை. ஷாஜியை தமிழில் இத்தனை சீக்கிரம் நிலைநாட்டிய அம்சம் அதுவே.

இசையை விடுங்கள், சுயசரிதைகள் அல்லது புனைகதைகள் என எடுத்துக்கொண்டால்கூட அந்தக் கட்டுரைகள் வழியாக நாம் அறிய நேரும் மனிதர்களும் உணர்ச்சிகளும் உயர்தர இலக்கிய அனுபவத்தை அளிப்பவை. ஷாஜியின் பெரும்பலம் அவரது துல்லியமான அந்தரங்கத்தன்மைமிக்க சித்தரிப்புகள். தகவல்களையும் குணச்சித்திரங்களையும் அவர் முனவைப்பதில் உள்ள வடிவநேர்த்தி. தேர்ந்த சிறுகதை எழுத்தாளனுக்கே உரிய முறையில் கச்சிதமான சொற்றொடர்களில் அமைபவை அவரது கட்டுரைகள். நுணுக்கமான மொழியனுபவங்கள் அவை. ஓர் இலக்கிய வாசகனாக அவற்றின் தரத்துக்கு குறைவான பக்கங்களே தமிழில் எழுதப்பட்டுள்ளன என்றே சொல்வேன்.

டி.எம்.எஸ் குறித்த கட்டுரையை நான் மொழியாக்கம் செய்தேன். அது எந்தவகையிலும் தமிழின் சிறந்த இலக்கிய ஆக்கமும்கூட. அதில் டி.எம்.எஸ்ஸை எடுத்துவிட்டு அது ஒரு கற்பனைக்கதாபாத்திரம் என்றே கொண்டாலும்கூட அது முக்கியமானது. ஒரு கலைஞன் தன் ஆக்கங்கள் மூலம் அளிக்கும் நிரந்தரமான உத்வேகம் , தன்னம்பிக்கை ஆகியவற்றுக்குச் சம்பந்தமே இல்லாமல் அவனுடைய தனியாளுமை இருப்பதை, ஒரு எளிய மனிதனாக அவன் விதியின் கைகளில் பொருளிழந்து கிடப்பதன் முரணைச் சொல்லும் கலைப்படைப்பு அது. கலை கலைஞனுக்கு மேலே வெகு உயரத்தில் ஒளிவிட்டு நிற்கிறது எனபதன் சித்திரம்.

நேர் எதிரான தளத்தைச் சேர்ந்தது க்ளூமி சண்டே என்ற கட்டுரை. அது துயரம் எபப்டி ஒரு தொற்றுநோய் போல மானுட மனதில் பரவுகிறது என்பதைக் காட்டுகிறது. அதேபோல எடித் பியாஃப் பற்றிய கட்டுரை. காமமும் சுயநலமும்கூட உயர்தர இசையனுபவமாக ஆகும் கலையின் மாயத்தைப்பற்றி பேசுகிறது. இக்கட்டுரைகளை ஷாஜி தொடங்கியிருக்கும் விதம், மெல்ல முதிரச்செய்து இறுதிப்புள்ளியில் நிறுத்தியிருக்கும் நுட்பமே அவரை முக்கியமானவராக ஆக்குகிறது. அவருக்கு ஏற்பட்ட பெரும் வாசக கவனம் அதில் இருந்து உருவானதே

இக்கட்டுரைகளில் உள்ள தகவல்கள்தான் இவை என ஒருவர் சொன்னாரெனால் ஒன்று அவருக்கு ரசனை இல்லை, அல்லது அது வெறுப்பில் விளைந்த உள்நோக்கம். ஷாஜி வெறுமே இணையக்கட்டுரைகளை நகலெடுக்கிறார் என்று தந்திரமாக சொல்லிச் செல்கிறார் சேதுபதி. தகவல்கள் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இவற்றில் உள்ள உணர்ச்சிவேகமும் நுண்ணிய சில அவதானிப்புகளுமே ஷாஜியின் பங்களிப்பு. ஆகவேதான் இக்கட்டுரைகளில் பல அம்மேலைநாட்டுப்பாடகர்களின் தனிப்பட்ட இணையதளங்களில்கூட எடுத்து அளிக்கப்பட்டிருக்கின்றன.

இப்படி ஒரு விவாதத்தை முன்னெடுத்து எதை நாம் சாதிக்கப்போகிறோம்? ஷாஜிக்கு இசை தெரியாது என்று நான் சொல்லவில்லை. இளையராஜா போன்ற ஒருவரின் இசையில் உள்ள எல்லா நுட்பங்களையும் அவரால் உனரமுடியாதென நான் நினைப்பதைச் சொல்லியிருதேன். அதாவது இளையராஜாவை பரப்பிசைக்குள் வைத்து மட்டுமே ஷாஜியால் மதிப்பிட முடியும், முழுமையாக அல்ல. ஷாஜியும் தனக்கு இசை தெரியாது எனச் சொல்வதில்லை. இசையே தெரியாமல் அத்துறையில் ஒருவர் இருபதுவருடம் தொழில்செய்ய முடியாது.

மாறாக, ஷாஜி தான் விற்பன்னர் அல்ல என்றும் தன் நோக்கு விற்பன்னருடையதல்ல என்றும்தான் சொல்கிறார். அதுவே பரப்பிசையை மதிப்பிடுவதற்கு சாத்தியமானது. பரவலாக அனைத்திலும் அறிமுகம் இருப்பதும் எதிலும் விற்பன்னராக இல்லாமல் இருப்பதும் முக்கியம். பரப்பிசை ஆப்ரிக்க இசைக்கோலத்தை கொண்டுவரக்கூடும். மொராக்கோ இசை அதில் கலக்கக்கூடும். ஜப்பானிய இசை கலக்கக்கூடும். உலகின் எல்லா இசை மரபுகளும் அதில் வரக்கூடும். அத்தனை இசை மரபுகளையும் ஐயம்திரிபறக் கற்ற ஒருவர்தான் பரப்பிசையை விமர்சனம் செய்ய முடியுமா என்ன?

ராமச்சந்திர ஷர்மாவின் கட்டுரை நிதானமான மொழியில் அமைந்திருக்கிறது. அதுவே ஒரு நல்ல விவாதத்தை தொடங்குவதற்கான வழி. ராமச்சந்திர ஷர்மாவும் ஷாஜியின் நூலை முழுமையாகவே நிராகரிக்கிறார். அதற்கு எவருக்கும் உரிமை உள்ளது. ராமச்சந்திர ஷர்மா அவருக்கான நியாயங்களைச் சொல்கிறார். அந்த வாதங்களை நாம் பரிசீலிக்கலாம். அதன் பெரும்பாலான கருத்துக்களை விவாதிக்கும் இசையறிவு எனக்கு இல்லை. பொதுவாக இரு கருத்துக்களை மட்டுமே சொல்கிறேன்.

ஒன்று, எந்தக்கலையும் செவ்வியலாக்கத்தை நோக்கியே செல்லும் என்ற அவரது கருத்து பல கோணங்களில் விவாதிக்கத்தக்கது. பொதுவான நோக்கில் அது சரிதான். ஒரு கலையின் வளர்ச்சி என்பது செவ்வியல் நோக்கிய நகர்வே. ஆனால் செவ்வியல் என்ற சொல்லை மிக விரிவாக வகுத்துக்கொள்ள வேண்டும். செவ்வியல் என்பது நான்கு தளங்களில் பொருள்கொள்ளப்படும் சொல். ஒரு மரபின் அடித்தளமாக அமையும் ஆக்கங்கள் செவ்வியல் எனப்படுகின்றன. உதாரணமாக சங்க இலக்கியம் தமிழின் செவ்வியல். இரண்டாவதாக ஒரு மரபின் ஆகச்சிறந்த ஆக்கங்கள் செவ்வியல் எனப்படுகின்றன. உதாரணமாக கம்பராமாயணம் தமிழின் செவ்வியல்.இரண்டும் வேறு வேறு அழகியல் கொண்டவை. ஒன்றை ஏற்பவர் இன்னொன்றை நிராகரிக்கக்கூடும்.

மூன்றாவதாக ,ஒரு குறிப்பிட்ட வகைமாதிரியின் சிறந்த வடிவம் அதன் செவ்வியல் எனப்படுகிறது. பரணிகளில் கலீங்கத்துப்பரணியும் பிள்ளைத்தமிழ்களில் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழும் செவ்வியல் எனப்படுகின்றன. நான்காவதாக செவ்வியல் பண்புகளென சொல்லப்படும் சில இயல்புகள் – அதாவது சமநிலை, நிதானம், முழுமை போன்றவை- கொண்ட ஆக்கங்களை செவ்வியல் என்கிறார்கள். ஒவ்வொன்றுக்கும் இலக்கணமே வேறு. அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச்சிந்து ஒரு செவ்வியல் ஆக்கம். அதை கம்பனுடன் ஒப்பிட்டு பார்க்கக்கூடாது.

ராமச்சந்திர ஷர்மா என்ன செய்கிறார் என்றால் செவ்வியல் தன்மை என ஒன்றை, ஒரு குண இயல்பை உருவகித்துக்கொள்கிறார். உலகம் முழுக்க உள்ள எல்லா செவ்வியல் கலைகளுக்கும் அவ்வியல்பே இருக்கும் என எண்ணிக்கொள்கிறார். அவரது கட்டுரையை வாசித்தால் அது ஒருவகை உன்னதமாக்கம் [sublimation] என அவர் எண்ணுவதாக தெரிகிறது. இசை என்பது அந்த இயல்பை நோக்கி நகரும் என உருவகித்து அப்படி நகரும் இயல்பில்லாத கலையை நிராகரிக்கிறார்.

ஒவ்வொரு ஆக்கமும் அதன் வகைமைக்குள் அதற்குரிய செவ்வியலை நோக்கி நகர்கின்றது என்றே கொள்ள முடியும். ஜாஸின் செவ்வியல் ஆக்கமும் சிம்பனியின் செவ்வியல் ஆக்கமும் ஒரே குணம் கொண்டவையாக இருக்க முடியுமா என்ன? எல்லா செவ்வியலாக்கமும் உன்னதமாக்கத்தை வழியாகக் கொண்டது அல்ல. அந்தக் கலையின் சிறப்பியல்பு எதுவோ அதை மேலும் உச்சமாக ஆக்குவதே அக்கலையின் செவ்வியலாக்கமாக இருக்க முடியும். களியாட்டத்தன்மையை மட்டுமே தன் சாரமாகக் கொண்ட ஒரு கலை உன்னதமாக்கத்தை இலக்காகக் கொள்ளாது, களியாட்டநிலையின் உச்சத்தையே அது நாடும்.

இலக்கியத்தில் கிளாசிக் என்ற சொல்லாட்சியின் பொருளே இன்று மாறிவிட்டிருக்கிறது. போரும் அமைதியும் ஒரு செவ்விலக்கியம். ஆனால் எல்லா கதைகளும் அதை இலக்காகக் கொண்டிருக்கவேண்டும் என்பதில்லை. ஓர் இலக்கிய வகைக்குள் அதற்கான செவ்விலக்கியங்கள் இருக்கலாம். துப்பறியும் நாவலில், பரபரப்பு நாவலில், ஏன் காமக்கிளர்ச்சி நாவலில்கூட அவற்றுக்கான செவ்விலக்கியம் இருக்கலாம். அந்த வகைமைக்குள் அந்த செவ்வியல் நோக்கியே பிற எழுத்துக்கள் நகர முற்படும். எல்லா வகை கலைகளையும் ஒரே செவ்வியல் இலக்கணம் கொண்டு மதிப்பிடக்கூடாது.

இந்த விவாதம் கேரளத்தில் எழுந்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த கர்நாடக இசை விற்பன்னர்கள் கேரளத்தின் செண்டைமேளக்கலையை ஒட்டுமொத்தமாக நிராகரித்தார்கள். அது காட்டுமிராண்டித்தனமானது [கிராதம்] என்று சொன்னார்கள். அதில் கலையம்சமே இல்லை என்றார்கள். அவர்களின் காதுகளில் செண்டை எந்த விதமான மோனநிலையையும் அளிக்கக்கூடிய கலையாக இருக்கவில்லை. கலைஞனின் தனிப்பட்ட மனோதர்மத்துக்கு அதில் இடமில்லை. அதில் சிக்கலான கணக்குகள் இல்லை. மிக எளிய ஒரு வாய்ப்பாட்டை எளிய வேறுபாடுகளுடன் திருப்பித்திருப்பிச் சொல்வது போன்றது செண்டைமேளம். அது ஒட்டுமொத்தமாக ஒரு மக்கள்திரளுக்கு ஒருவகை பித்துநிலையை உருவாக்குகிறது. அத்துடன் அதில் வெறும் தாளமும் அதனுடன் இணையும் ஒலிகளுமே உள்ளன, இசை இல்லை.

ஆனால் செண்டைமேளம் ஒரு நாட்டார்கலை அல்ல. மிகநுட்பமாக வளர்ந்த ஒரு செவ்வியல்கலைதான். அதில் பஞ்சவாத்தியம், பாண்டிமேளம், பஞ்சாரிமேளம் என பல வடிவங்கள் உண்டு. அதன் செவ்வியலாக்கம் என்பது கர்நாடக சங்கீதம் போல ஒரு கலைஞனின் அகவெளிப்பாட்டுக்காக அதை வளர்த்தெடுப்பதில் இல்லை. அது மேலும் மேலும் ஒத்திசைவையே தன் இலக்காகக் கொண்டிருக்கிறது. செண்டைமேளத்தின் வரலாற்றை எடுத்துப்பார்த்தால் அதில் நடந்த சோதனைகள் முழுக்க சம்பந்தமில்லாத ஒலிகளை எழுப்பும் வாத்தியங்களை அதில் இணைத்துக்கொள்வதில்தான் நிகழ்ந்துள்ளன என்று தெரியவரும். பஞ்சமேளத்தில் ஐந்து எளிய வாத்தியங்கள்தான். பஞ்சாரிமேளத்தில் பலநூறு வேறுபட்ட தாளவாத்தியங்கள் இருக்கும். ஒவ்வொன்றுக்கும் அவற்றுக்கான இடம் அளிக்கப்பட்டு ஓர் ஒத்திசைவு கண்டடையப்பட்டிருக்கும்.

அதாவது செண்டைமேளத்தில் செவ்வியலாக்கம் என்பது உன்னதமாக்கலை நோக்கிச் செல்லவில்லை. ஆன்ம வெளிப்பாட்டை, இன்னிசையை , தியானநிலையை, பரவசத்தை நோக்கிச் செல்லவில்லை. செண்டையை கேட்டு யாரும் கண்ணீர் மல்க முடியாது. துண்டை சுழற்றி வீசியபடி நடனமாடவே முடியும். அதன் செவ்வியல் என்பது மேலும் மேலும் ஒலிகளை தன்னுள் சேர்த்துக்கொண்டு மேலும் மேலும் கொண்டாட்டமாக, மேலும் பேரொலியாக ஆவதை நோக்கியே சென்றது. அதுவும் ஒரு செவ்வியலாக்கமே. கர்நாடக சங்கீதத்தின் அல்லது இந்துஸ்தானி இசையின் மனநிலையை அல்லது விதிகளை அப்படியே வைத்துக்கொண்டு செண்டைமேளத்தை நிராகரிப்பவர்களை அவர்கள் இசை மேதைகளாக இருந்தாலும் ‘போயி பணிநோக்கெடோ’ என்றுதான் மலையாளி சொல்வான்.

இரண்டாவதாக ராமச்சந்திர ஷர்மாவின் சிக்கல், அவருக்கு தமிழ்மரபிசை தெரியும், ஆனால் மேலையிசை மரபுகள் தெரியாது. தெரியாதென்பதை விட அவற்றின்மீது ஆர்வமோ சாதக மனநிலையோ இல்லை. அதை அவரே அக்கட்டுரைகளில் சொல்கிறார். நேரிலும் சொன்னார். மரபிசை தெரியாதவர் ஷாஜி என நிராகரிக்கும் ராமச்சந்திர ஷர்மா தனக்குத்தெரியாத மேலை இசைகளை நிராகரிக்கிறார். திரையிசை மரபிசை இலக்கணத்துக்குள் நிற்பதல்ல. மரபிசையை திரையிசைக்கு நிபந்தனையாகவும் அளவுகோலாகவும் ஆக்கினால் திரையிசையின் பெரும்பகுதிய அறியாமல் தூக்கி வீசநேரும் என எனக்குப் படுகிறது.

கடைசியாக, ராமச்சந்திர ஷர்மா எழுப்பும் கேள்வியின்மீதான என் சிந்தனைகள். மரபுக்கலைகளையும் நவீனக்கலைகளையும் போலல்லாமல் செவ்வியலாக்கம் என்பது நாட்டார் கலைகளிலும் பரப்புக்கலைகளிலும் வேறு வேறு வகையில் நிகழ்கிறது. மரபுக்கலை அல்லது நவீனக் கலையில் அக்கலைகள் காலப்போக்கில் மேலும் மேலும் நுண்மை கொள்கின்றன. இன்னும் இன்னும் நுட்பத்தை அடைவதென்பதே அந்தக்கலைஞர்களின் இலக்காக இருக்கிறது. நுண்மையாக்கம் என்பதும் செவ்வியலாக்கம் என்பதும் இக்கலைகளில் வேறுவேறல்ல.

நுட்பத்தை அடைவதற்காகவே மரபுக்கலைகள் இலக்கணத்தை அமைத்துக்கொள்கின்றன. கலையின் அடிப்படை உருவானதுமே இலக்கணம் உருவாகிவிடுகிறது. அதன்பின்னர் இலக்கணத்துக்குள் நின்று கொண்டு நுட்பத்தை நிகழ்த்திக்கொண்டே செல்கிறார்கள். அங்கே ரசிகனே தேவையில்லை. அதற்கு தன்னிச்சையான வளர்ச்சி சாத்தியம். நவீனக்கலையில் இலக்கண ஆசிரியனின் இடத்தை விமர்சகன் எடுத்துக்கொள்கிறான். உருவான கலை உச்சத்தை அடையாளம் கண்டு அதில் இருந்து மேலே செல்ல அவன் கோரிக்கொண்டே இருக்கிறான்

ஆனால் நாட்டார்கலைகளில் அந்த நுண்மையாக்கமே நிகழ்வதில்லை. நாட்டார்கலைகளின் சில கூறுகளை மரபுக்கலைகளோ அல்லது நவீனக் கலைகளோ எடுத்துக்கொண்டால் உடனே அவை நுண்மையானவையாக ஆக ஆரம்பிப்பதை காணலாம். நமது ராகங்கள் பல அவ்வாறு நாட்டாரிசையில் இருந்து வந்தவை. ந.முத்துசாமியின் நாடகத்தில் தெருக்கூத்து மறு ஆக்கம் பெறுகிறது. ஆனால் நாட்டார் கலை ஒரு சடங்குத்தன்மையுடன் மாற்றமில்லாமல் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

ஏனெனெறால் நாட்டார் கலைகளில் கலைஞனின் தன்னைமறந்த வெளிப்பாட்டுக்கு மட்டுமே இடம். இதை வெங்கட் சாமிநாதன் டிரான்ஸ் – பித்துநிலை என்கிறார். அவனுக்கு வடிவ உணர்ச்சி இல்லை. தன் கலையின் தொழில்நுட்பத்தை அவன் மேம்படுத்துவதில்லை. அவன் கலைக்கு தன்னை ஒப்புக்கொடுக்கிறான். அங்கே கலை என்பது சமூக ஆழ்மனத்தின் வெளிப்பாடாக உள்ளது. அந்தக் கலைவடிவம் அவ்வாறு சமூக ஆழ்மனம் வெளிப்படுவதற்கான ஒரு குறியீட்டுத்தொகுதி மட்டுமே. அந்த கலைஞன் அந்தக்குறியீடுகளை தன் மேல் நிகழ்த்தும் ஒரு ஊடகம்

உதாரணமாக கணியான் கூத்தில் கணியான் அக்கலையை நிகழ்த்துவதில்லை. அக்கலை அவனுக்கு கைப்பழக்கம் கால்பழக்கம் நாப்பழக்கம் மட்டுமே. அவனது கலையின் ஒருகட்டத்தில் அவனும் அவனது பார்வையாளர்களும் எல்லாம் ஒரே புராதன ஆவேசத்துக்கு ஆளாகிறார்கள். அது தலைமுறை தலைமுறையாக அப்படியே நிகழும். அங்கே கலைஞனால் கலை நிகழ்த்தப்படுவதில்லை, கலைஞன் கலையின் கைகளில் இருக்கிறான்.

அப்படியானால் நாட்டார் கலைகளில் எவ்விதம் செவ்வியலாக்கம் நிகழ்கிறது? நாட்டார் கலைகளில் கலைஞன் செவ்வியலாக்கத்தை நிகழ்த்துவதில்லை, அந்தச் சமூகமே அதை நிகழ்த்துகிறது. நாட்டார் கலைகளில் மாறுதல் என்பது மிகமிக மெல்லத்தான் நிகழும் என அ.கா.பெருமாள் கூறுவதுண்டு. மாற்றம் நிகழ்வதை யாருமே உணர முடியாது. அவ்வளவு இயல்பாக சமூக ஆழ்மனம் மாறுவதுடன் இணைந்து நாட்டார்கலையும் மாறும். அந்த மாற்றம் வழியாக மிக மெல்ல சில கலைகள் மறையும். சிலகலைகள் மையத்துக்கு வரும். அந்த மையக்கலைகளில் பலவகையான வளர்ச்சிகள் நிகழும். அவற்றையே நாட்டார் கலைகளில் செவ்வியல் கலை என்கிறோம். கணியானாட்டம் அதில் ஒன்று.

இந்தச்செவ்வியலாக்கம் முற்றிலும் வேறானது. இது நுண்மையாக்கம் அல்ல. கலைத்திறன்மிகுதலும் அல்ல. தனித்திறனுக்கே இடமில்லை இங்கே. கணியானாட்டத்தில் பெரிய கலைஞன் யார்? யாருக்கு முடியேறியதுமே தெய்வம் வந்து ஆவேசம் நிகழ்கிறதோ அவன்தான். சமூக ஆழ்மனத்துடன் நெருக்கமாக ஆகி அதை தெளிவாக பிரதிநிதித்துவம் செய்வதாக ஆவதே நாட்டார்கலைகளில் உள்ல செவ்வியலாக்கம். கர்நாடக சங்கீதத்தில் கலைஞனின் கலைப்பிரக்ஞையே அதை செவ்வியலாக ஆக்குகிறது. கணியானாட்டத்தில் கலைஞனின் பிரக்ஞையின்மையே அதை நிகழ்த்துகிறது

இந்தப்பின்னணியில் நாம் பரப்புக்கலைகளை ஆராயவேண்டும். இன்னும் கூட சரியாக வகுக்கப்படாத, அடிபப்டைகள் விளக்கப்படாத ஒரு சமகால நிகழ்வு இது. பரப்புக்கலையில் நாட்டார்கலை தவிர்க்கமுடியாத ஒரு கூறு. ஏனென்றால் அது பலகோடி மக்களை, ஒட்டுமொத்த சமூகத்தை உள்ளே கொண்டுவரவேண்டியிருக்கிறது. ஆகவே ஆரம்பகாலத்தில் பரப்புக்கலையை ஒருவகை நவீன நாட்டார்கலை என்று எடுத்துக்கொள்ளும் வழக்கம் அறிஞர் மத்தியில் நிலவியது. ஆனால் அவை இரண்டும் வேறு வேறு.

ஒரு தனி கட்டுரையாகவே அந்த வேறுபாட்டை நாம் விவாதிக்க முடியும். சுருக்கமாக சிலவற்றைச் சொல்லலாம். நாட்டார்கலை நிபுணர்களால் உருவாக்கப்படுவதில்லை, மக்களே அதை உருவாக்கிக் கொள்கிறாரக்ள். பரப்புக்கலை அதற்கான நிபுணர்களால் உருவாக்கப்படுகிறது. 2. நாட்டார் கலை மக்களால் உருவாக்கப்படுவதாகையால் அதில் வணிகநோக்கம் இல்லை. அது அம்மக்களின் இயல்பான வெளிப்பாடு. பரப்புக்கலை வணிகம், சுரண்டலும்கூட. 3. நாட்டார் கலையில் தொழில்நுட்பம் இல்லை. பரப்புக்கலை பெருந்தொழில்நுட்பத்துடன் பின்னிப்பிணைந்துள்ளது.

பரப்புக்கலை எப்போதுமே நகரும்தன்மை கொண்டது. அதற்கு நிலையான இலக்கணமே சாத்தியமில்லை. கண்முன் விரிந்திருக்கும் கோடானுகோடி மக்களுக்காக அது ஒவ்வொரு கணமும் நிகழ்த்தப்படுகிறது. ஆகவே அது மாறிக்கொண்டே இருக்கிரது. உலகம் முழுக்க இருந்து அது தன் ஊற்றுக்களை எடுத்துக்கொண்டே இருக்கிறது. அதன் அமைப்பு உள்ளடக்கம் அனைத்துமே அதன் நுகர்வோரால் தீர்மானிக்கப்படுகின்றன. அது ஒரு கலைஞனின் அக நிகழ்வல்ல, ஒரு சமூகநிகழ்வு. அது நிகழும் சமூகத்தின் ஒரு வெளிப்பாடு அது. அதை அச்சமூகம் , அக்காலகட்டத்தில் இருந்து பிரிக்க முடியாது.

பரப்புக்கலையிலும் செவ்வியலாக்கம் என்பது நுண்மையாக்கம் அல்ல என்பதை கவனிக்கலாம். காரணம் பல அடிப்படைகளில் நாட்டார்கலையும் பரப்புக்கலையும் ஒன்றுதான். இரண்டிலும் கலைக்கு நிலையான இலக்கணம் இல்லை. கலைஞன் அதன் வளர்ச்சியை தீர்மானிப்பதில்லை. அந்த சமூகத்தின் ஒட்டுமொத்தமான ரசனைமாற்றம் இயல்பாகவே அதை மாற்றியமைக்கிறது. அப்படியானால் பரப்பிசையில் எப்படி செவ்வியலாக்கம் நிகழ்கிறது?

பரப்பிசையில் ஒரு படைப்பு செவ்வியலாக்கமா என தீர்மானிப்பது அந்தச் சமூகம் அளிக்கும் எதிர்வினைதான். தமிழ் திரையிசையின் செவ்வியல் பாடல்களில் ஒன்று ‘கண்கள் இரண்டும் இன்று உன்னைக்கண்டு பேசுமோ’ . அது கலைஞனின் நுண்மையாக்கத் திறனால் அபப்டி செவ்வியலாக ஆகவில்லை. பரப்பிசைக் கலைஞன் தன் இசையை சமூகத்தை நோக்கி அள்ளி வீசிக்கொண்டே இருக்கிறான். பல பாடல்கள் எங்கும் படாமல் வீணாகின்றன. சில பாடல்கள் சமூக மனத்தில் பதிந்து அதிர்கின்றன. மிகச்சில பாடல்கள் அங்கே அழியாமல் பதிந்துவிடுகின்றன. அவையே செவ்வியல் ஆக்கங்கள். இங்கே செவ்வியல் ஆக்கம் என்பதை தீர்மானிப்பது அச்சமூகமும் காலமும்தான்.

’கண்கள் இரண்டும் இன்று’ எப்படி ஒரு செவ்வியலாக்கமாக ஆனது? அது பிரிவைச் சொல்கிறது. கூடவே இறந்தகால ஏக்கத்தை. பெரும்பாலும் தீர்மானிக்கப்பட்ட திருமணங்கள் கொண்ட தமிழ்ச்சமூகத்தில் நெஞ்சுக்குள் புதைக்கப்பட்ட இளமைக்காதல்கள் அதிகம். அப்பாடல் அந்த நுண்ணிய புண்ணை வருடுகிரது. அத்துடன் அது எம்.ஜி.ஆருடன் அடையாளம்காணப்படும் பாடல்..இன்னும் பல இருக்கலாம்.

ஆகவே கலை என்பது செவ்வியல்நோக்கிய நகர்வு என்ற பொதுப்படையான விதி மூலம் நாட்டார்கலைகளையும் பரப்புக்கலைகளையும் அளவிடுவது பிழையானது. இந்தப்போக்கு மரபுக்கலைகளின் இயல்பை நாட்டார்கலைகளும் கொண்டாகவேண்டும் என்று விதி உருவாக்குவதற்கு நிகர். மரபுக்கலைகளை கொண்டுவந்து நாட்டார் கலைகளையும் பரப்புக்கலைகளையும் கட்டுப்படுத்துவதற்கான குறுக்கு வழி. இது மிக தவறான விளைவுகளை உருவாக்கும். நாட்டார் கலைகளும் பரப்புக்கலைகளும் அவற்றுக்கான சொந்த செவ்வியலாக்கத்தை நோக்கிச் செல்வதே இயல்பானது.

பரப்பிசையை மதிப்பிட இன்று அளவுகோல்களே இல்லை. ஆகவே நாம் முதலில் அதைப்பற்றி பேச ஆரம்பிப்போம். பேசும்போது நமக்கு என்ன சிக்கல்கள் வருகின்றன என்று அவதானித்து அதில் இருந்து நமக்குரிய பொது அளவுகோல்களை நோக்கிச் செல்வோம். அந்தப்பேச்சை தொடங்கி வைத்தவர் ஷாஜி என்பதை எவரும் மறுக்க இயலாது. இங்கே பரப்பிசையின் வரலாறு மட்டுமே எழுதபப்ட்டது, அது மதிப்பிடபப்டவில்லை. ஷாஜி அதை ஆரம்பித்து வைத்தார். மதிப்பிடுகிறார் என்பதனாலேயே அவர் விமரிசிக்கவும் படுகிறார்

மீண்டும் மீண்டும் கர்நாடக சங்கீதத்தின் இறுக்கமான அளவுகோல்களை போட்டு ’இன்னபாட்டு கிட்டத்தட்ட இன்ன ராகம்’ என்று மட்டுமே பேசிக்கொண்டிருந்த ஒரு சூழல் பரப்பிசையை மூர்க்கமாக நெரித்துக்கொண்டிருந்தது, இருக்கிறது. பரப்பிசையை அப்படி அளக்கலாமா என்றால் ஆம், செய்யலாம், அது ஒரு வழி என்றே சொல்வேன். ஆனால் அதுவே வழி என்றால் என்ன நிகழும்? பரப்பிசையில் உள்ள மரபிசை மட்டுமே மதிப்பிடப்படும். பரப்பிசை என்பது அரைகுறையாக கையாளப்பட்ட மரபிசை என்ற உள்மனச்சித்திரத்துடன் இந்த அளவீடுகள் நிகழும்

உதாரணமாக ஒருவர் இளையராஜாவின் ஒரு பாடலை ஆபேரி என்று சொல்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்தப்பாடலுக்குள் இருப்பது ஆபேரியின் ஒரு சிறு துண்டுதான். ஆபேரியில் ஒருமணிநேரமெல்லாம் பாடப்படும் கீர்த்தனைகள் உள்ளன. பாடும் பாடகர்களும் உள்ளனர். அப்போது இளையராஜா அவர்களை விட குறைவான ஒரு இசையறிஞராகவும் அவரது பாடல் அந்த கீர்த்தனைகளின் ஒரு சாதாரண வடிவமாகவும் ஆகிறது. இந்த மேட்டிமைத்தனம் பரப்பிசையை மதிப்பிட உதவாது, மானசீகமாக மட்டம்தட்டவே உதவும்.

காரணம் அந்தப் பரப்பிசைப் பாடல் ஆபேரி மட்டுமாக இருக்காது. அதில் மேலும் என்னென்னவோ இருக்கும். அதன் பின்னணிக்கோர்ப்பில் ஒருவேளை ஒரு மேலைநாட்டு இசைக்கோலம் இருக்கும். ஆப்ரிக்க தாளம் அதற்கு இருக்கும். முற்றிலும் புதிய ஓர் உணர்ச்சிக்காக அது எடுத்தாளப்பட்டிருக்கும். கதையின் ஒரு தருணத்துடன் அது திறமையாக பொருத்தப்பட்டிருக்கும். ஆபேரி என்னும்போது நாம் அந்தப்பாடலை குறைக்கிறோம். ஆகவேதான் இளையராஜாவிடம் நீங்கள் பாடலின் ராகத்தைச் சொன்னால் அவர் கடும்கோபம் கொள்கிறார். ஓர் அவமதிப்பாக எடுத்துக்கொள்கிறார்.

இச்சூழலில் ஷாஜி பரப்பிசையை தன் அந்தரங்க அனுபவம், அவ்விசை நிகழ்ந்த சூழல், அதன் மீதான எதிர்வினைகள், அந்த கலைஞர்கள் ஆகிய அனைத்தையும் இணைத்துக்கொண்டு ஒரு முழுமையான நோக்கில் மதிப்பிட முயல்கிறார். அதுவே மிகச்சிறந்த முறை, சாத்தியமான ஒரே முறை. அதைப்பற்றி மேலே பேசப்பேச நமக்கு இன்னமும் தெளிவுகள் வரலாம். இன்னமும் துல்லியங்கள் கைகூடலாம். உதாரணமாக ஏம்.எம்.ராஜாவின் குரலை ஷாஜி ஸ்ரீதர் படங்களுடனும் ஜெமினியின் குரலுடனும் இணைத்துப்புரிந்துகொள்ள முயல்வதைப்போல. அந்த நோக்கில் இன்னும் செய்ய நிறைய ஆய்வுகள் உள்ளன.

பரப்புக்கலைகளின் ஏற்பு என்பது மிகப்பெரியசமூகப்புரிதலுடன், கற்பனை வீச்சுடன் நிகழ்த்தப்படவேண்டிய ஒன்று. உதாரணமாக ‘டாடி மம்மி வீட்டில் இல்லை’ என்ற பாட்டு எப்படி சமூக ஏற்பை பெறுகிறது என்ற வினாவை ஒரு பரப்பிசை ஆய்வாளர் கையில் எடுத்துக்கொண்டால் அவர் பேசவேண்டிய விஷயங்கள் விரிந்துகொண்டே செல்லும். அப்பாட்டுக்கு நம்முடைய தெம்மாங்கு மெட்டுகளுடன் உள்ள சமானத்தன்மையில் ஆரம்பித்து நம் சமூகநிலை சென்றுகொண்டே இருக்கும். ஷாஜி இந்த தளத்தில் பல ஆரம்பகட்ட அவதானிப்புகளை நிகழ்த்தியிருக்கிறார். சலீல் சௌதுரி அசாமிய மெட்டுகளில் இருந்து போட்ட ’கடலின்னக்கரே போணோரே’ போன்ற பாட்டுகளின் மெட்டுக்கள் இன்று கேரள பரதவர்களின் நாட்டாரிசையாக மாறி அவற்றை ஒட்டி பலநூறு நாட்டார்பாடல்கள் உருவாகியிருப்பதைப்பற்றிய அவரது அவதானிப்புகள் உதாரணம்.

ஒருவரின் அவதானிப்புகளை இன்னொருவர் மேலே கொண்டுசென்றும் , ஒருவரின் பிழைகளை ஒருவர் சரிசெய்தும் முன்னகரவேண்டிய தளம் இது. இத்தகைய ஒரு விவாதம் ஆரம்பத்திலேயே என்னுடைய ஆதர்ச பிம்பத்தை நீ எப்படிச் சொல்லலாம் என்று கோபம் கொண்டு ஆரம்பிக்கும் வசைகளாக ஆவதும் எதையுமே மலினமாக்கும் ஒருகும்பல் கூடச்சேர்ந்து கும்மாளமிடுவதும் மிகமிக துரதிருஷ்டவசமானது.நான் இந்த தலைமுறையில் மிகப்பெரும் எதிர்பார்ப்பு கொண்டிருப்பவர் சேதுபதி. இன்று இந்த தளத்தில் நாம் பேசவேண்டியவை மிக அதிகம். தமிழ்ச்சமூகத்தை மேலும் அறிந்தவர் என்றமுறையில் சேதுபதியிடமிருந்து ஷாஜியை விட மேலும் ஆழமான இன்னமும் விரிவான கட்டுரைகளையே நான் எதிர்பார்க்கிறேன்.

ஷாஜியிடம் தனிப்பட்ட விருப்புவெறுப்புகள் செயல்படுகின்றனவா ? அப்படி எனக்குப் பட்டபோது நான் சுட்டிக்காட்டியிருக்கிறன். இனிமேல் பட்டாலும் சுட்டிக்காட்டுவேன். ஒருவர் மீதான மனச்சாய்வை இன்னொருவர் மீதான விலகலாக ஆக்கிக்கொள்கிறாரா? இருக்கலாம். இசை மிக அந்தரங்கமானது. அருவமான அனுபவம் அது. அதனுடன் விருப்புவெறுப்புகள் கலப்பது மிக இயல்பானது. மேலும் தனியனுபவம் சார்ந்து இசையைப்பற்றி பேச ஆரம்பிக்கும்போது அந்த அபாயம் இன்னும் அதிகம். அது இசை பற்றிபேசும் சேதுபதிக்கும் ராமச்சந்திர ஷர்மாவுக்கும்கூட பொருந்துவதே.

அந்த வகையான ஒரு பிழை நிகழும்போது அதைச் சுட்டிக்காட்டலாம். ஆனால் அதை ஒரு சந்தர்ப்பமாகக் கொண்டு ஒட்டுமொத்தமாக ஷாஜியின் பங்களிப்பை நிராகரிப்பதென்பது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. நமக்கு நாம் இன்றுவரை பேசாத ஒரு புதிய தளத்தில் சில விஷயங்களை விவாதிப்பதற்கான ஒரு வழி திறந்து கிடைத்திருக்கிறது. அதைச் சற்றும் பயன்படுத்தாமல் அந்த ஒட்டுமொத்த விவாதத்தையே கீழே கொண்டுவர சேதுபதி முயன்றது ஆழ்ந்த வருத்ததை உருவாக்கியது.

சேதுபதியிடமும் ராமச்சந்திர ஷர்மாவிடமும் இன்னமும் நிறைய எதிர்பார்க்கிறேன்

ஜெ

.

முந்தைய கட்டுரைகீதை கடிதங்கள்
அடுத்த கட்டுரைதொ.ப,ஒரு விவாதம்