«

»


Print this Post

மலேசியா ஒரு கடிதம்


அன்புள்ள ஜெயமோகன்,

உங்களின் மலேசிய வருகை எனக்கு மிகுந்த உவப்பளித்தது. நீங்கள் கூறியிருப்பது போல இன்னும் பல ஆண்டுகளுக்குத்தேவையான இலக்கியப்படிப்பினையை மலேசிய தீவிர இலக்கியவாதிக்கு உவந்தளித்து விட்டுச்சென்றிருக்கிறீர்கள் என்ற உங்கள் குறிப்பை நான் ஆமோதிக்கிறேன்.. மலேசியத் தமிழ் இலக்கியத்தின் ஒரு கழுகுப்பார்வை உங்களுக்குக் கிட்டியிருக்கிறது என்பதை நான் அறிவேன். வல்லினம் அநங்கம் மௌனம் போன்ற தீவிர இலக்கியப் பதிவிலிருந்து மலேசிய இலக்கியப்போக்கை அறிந்திருப்பீர்கள். உங்கள் அபிப்பிராயத்தையும் சில கூட்டங்களில் கூறிவிட்டுச் சென்றிருக்கிறீர்கள். ஒரு சிலர் மட்டுமே அதனைக்கேட்டுவிட்டு கசந்துபோயிருக்கிறார்கள். அதன் நிஜத் தன்மையை உணர்ந்தவர்கள் நீங்கள் சொல்வதற்கு ஒத்துப்போகிறார்கள். நான் உட்பட. ஒத்துப்போகாதவர்கள் “விட்டேனா பார் இந்த ஜெயமோகனை, இங்கே எப்படிப்பட்ட இலக்கியமெல்லாம் நாங்கள் வளர்த்து வருகிறோம், பெரிய பெரிய இன்னாரெல்லாம் இங்கே இருக்கிறார்கள்! எப்படி இந்த ஜெயமோகன் இப்படி சொல்லப்போயிற்று ?”என்று புலம்பும் ஒரு பெண்ணின் குரல் இன்னும் இங்கே ஒலித்துக்கொண்டிருக்கிறது. விட்டால் படை திரட்டி வீச்சறிவாலோடு நாகர்கோயிலுக்கு வந்துவிடுவார் போலிருக்கிறது.

இங்கே படைப்பிலக்கியம் தேங்கிப்போனதற்குச் சில விஷயங்களை நான் சொல்ல வேண்டும். மலாயாப் பல்கலைக்கழகதுக்கு(-இங்கே மட்டும்தான் தமிழ் பல காலமாக ஒரு பாடமாக போதிக்கப்பட்டு வருகிறது- )தமிழகத்திலிருந்து தமிழ் இலக்கணம் இலக்கியம் போதிக்கத் தருவிக்கப்பட்டு வந்தார்கள். அவர்களில் மிக முக்கியமானவர் இரா.தண்டாயுதம். இவரின் குருவான மு.வரதராசனயும்., ஆதர்ஸ எழுத்தாளரான அகிலனையும், ந. பார்த்தசாரதியையும் இங்கே அறிமுகப்படுத்தினார். தற்கால இலக்கியத்தைப் போதிக்கும் பாடத்திட்டத்துக்கு இவர்களின் நூல்களை அறிமுகப்படுத்தினார்கள். பல்கலைக்கழகம் , இடைநிலைக்கல்வி பாடத்திட்டத்தில் இன்றைக்கும் இவர்கள் நூல்கள்தான் போதிக்கப்பட்டு வருகிறது. இதனை அடியொற்றி வந்தவர்கள் எப்படிப்பட்ட இலக்கியம் படைப்பார்கள் என்று யூகித்துக்கொள்ளுங்கள். மு.வா , ந.பா , அகிலன், நூல்கள் இன்னமும் இங்குள்ள புத்தகக்கடையில் கிடைக்கும். ஜெயமோகன், சுந்தர ராமசாமி, மௌனி, எஸ்.ராமகிருஷ்ணன், பிரபஞ்சன், மனுஷ்யபுத்திரன், சேரன் போன்றவர்களை இவர்கள் அறிந்திருக்கவில்லை. நான் உங்களிடம் உங்களை மலேசிய வாசகர்கள் பலர் அறிந்திருக்கவில்லை என்றும் கூறினேன். புரிந்துகொண்ட நீங்கள் ஒரு புன் சிரிப்பை உதிர்த்தீர்கள். இங்குள்ள பெண் வாசகர்கள் பலர் ரமணிச்சந்திரனை விடமாட்டார்கள் போலிருக்கிறது. எனவே இங்கேயும் ரமணிச்சந்திர பாணி எழுத்தாளர்கள் உருவாகி எழுதி வருகிறார்கள். இந்த வகை எழுத்து இங்கே செல்லுபடியாவதை தவிர்க்க வெகு காலமாகு. இரா.தண்டாயுதத்தின் இதே கொள்கையைத் தொடர்ந்து காப்பாற்றியவர் இன்னொரு தமிழகப்பேராசிரியர் நா.வி. ஜெயராமன். இவர்களின் போதனையால் இங்கே மு.வாவும், நா.பாவும், அகிலனும் நிரந்தர ‘குடியுரிமை’ பெற்றுவிட்டார்கள். மு.வா விலிருந்து move ஆகாத நிலை இங்கே உருவாகிவிட்டது. இவர்களுக்கு முன்னால் கு. அழகிரிசாமி தமிழ் நேசன் இல்க்கிய ஆசிரியராகப் பணியாற்றக்கொண்டு வரப்பட்டார். அவரின் சேவை நல்ல இலக்கியவாதிகளைப் பிறப்பித்தது. அவர்களில் பலர் இன்றில்லை.

இங்கே தமிழகத் தீவிர எழுத்தாளர்கள் நூல்கள் கிடைப்பது அரிது. நான் தமிழகம் வரும்போதெல்லாம் தேடித் தேடி நூல்கள் வாங்கி வருவேன். தமிழகத்துக்கு போக முடியாதவர்கள் இங்கே கிடைக்கும் நூல்களை நம்பியே இலக்கியம் படைக்கிறார்கள். அப்படிக்கிடைக்கும் நூல்களின் விலையோ தமிழ் நாட்டைவிட மும்மடங்கு அதிகம். நீங்களே சிந்தித்துப்பாருங்கள் அதிக விலை கொடுத்து நூல்களை வாங்குவதை விட அதே தரத்திலான சீரியல் நாடகத்தைப் பார்க்கலாமே என்று முடிவெடுக்கிறார்கள். சீரியலும் படப்பிலக்கியத்துக்கான சரக்கை தந்துதவுகிறது.

தீவிர இலக்கியத்தை முன்னெடுத்துச்செல்லும் இயக்கங்கள் இங்கே மிக மிகக்குறைவு என்று சொல்லிவிடலாம். நீங்கள் இங்கே வந்து பேசியபோது உங்களிடம் விடுக்கப்பட வினாக்களிலிருந்து இலக்கியப் பின்னடைவை நீங்கள் உணர்ந்திருக்கலாம். உங்கள் பதில்கள் அதிர்ச்சி வைத்தியமாகவே அர்த்தப் படுத்திக்கொண்டார்கள். வடக்கில் சுவாமி பிரம்மாந்தா ஆசிரமத்தில் நாங்கள் நடத்தும் நவீன இலக்கியச் சிந்தனைக் களமும், கோலாலம்பூரில் வல்லினம் குழு மட்டுமே தீவிர இலக்கிய வளர்ப்பில் ஈடுபடுகிறது. இந்தக் குழுமத்திலிருந்து வருபவர்கள் மிகச்சிறிய எண்ணிக்கையிலானவர்கள். ஆனால் நம்பிக்கை தரக்கூடியவர்கள். நீங்கள் சொல்வது போல சுயம்புவாக தீவிர வாசகத்தில் ஈடுபடுபவர்கள், இணையத்தில் நல்ல எழுத்தாளர்களைத் தேர்வு செய்து வாசிப்பவர்களும் இவர்கள்தான். இவர்களை நம்பலாம். உங்களை போன்றவர்களுடனான தொடர்பு புதிய வெளிச்சத்துக்குக் கொண்டு செல்லும். நன்றி.
( இக்கட்டுரையை உங்கள் தளத்தில் பிரசுரிப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை.)

கோ.புண்ணியவான்.
நவீன இலக்கியச் சிந்தனைக் களம்.

அன்புள்ள புண்ணியவான்

கூலிங்கில் உங்களை சந்தித்தது மிக நிறைவளிப்பதாக இருந்தது. பொதுவாக என் வழக்கத்தை வைத்துப் பார்த்தால் நான் கடுமையாக ஏதும் சொல்லவில்லை என்றே சொல்லவேண்டும். மிக மென்மையாக சில போதாமைகளை சுட்டிக்காட்டினேன். பொதுவாக நம் குறைகளை நம்மால் காணமுடிவதில்லை. ஆகவே ஒரு குறையை போதாமையை சாத்தியக்கூறுகளைச் சுட்டிக்காட்டுவதற்கு மிகுந்த முக்கியத்துவம் உள்ளது. அதற்கு பெயர்தான் இலக்கிய விமர்சனம். விமர்சனம் இல்லாமல் இலக்கியம் இல்லை அல்லவா?
ஜெ

ஜெ

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/8270/